சிகிச்சை அறையின் வெளியே பித்துப்பிடித்தது போல அமர்ந்திருந்தான் அண்ணாமலை. தேன்மொழியும் தாஸும் அழுதே கரைந்தனர். பரதனும் நந்தாவும் தான் சற்று தெளிவாக மருத்துவர்கள் கேட்பதை எல்லாம் வாங்கி வந்து கொடுத்துக்கொண்டிருக்க, ஐயப்பனும் சேகரும் அவசரமாய் வந்தனர்.

“அவனுங்கள போலீஸ்ல ஒப்படைச்சாச்சு… கொஞ்ச நேரத்துல போலீஸ் வரும் இங்க விசாரிக்க!” என்றனர். இது எதுவுமே அண்ணாவை சென்று சேரவில்லை.

“என்னடா சொல்றாங்க? ஒன்னும் இல்ல தானே!?” சேகர் பரிதவிப்புடன் கேட்க, “ஒண்ணுமே சொல்லலடா இன்னும்!” என்ற பரதன், “எவ்வளோ ரத்தம் தெரியுமா? இங்க பாரு” என்று காட்ட, அவன் சட்டை வேட்டி எல்லாம் அவளது ரத்தம் தான். நந்தாவும் பரதனும் தான் அவளை வண்டியில் தூக்கி வைத்திருக்க, அதற்குள்ளாகவே இருவர் உடையிலும் அத்தனை உதிரம்.

“இவன் என்னடா பித்துப்பிடிச்ச மாறி கடக்கான்?” ஐயப்பன் தான் அண்ணாவை பார்த்துவிட்டு திடுக்கிட்டான். அதன்பின்னேயே மற்றவர்கள் அவனை கவனம் கொண்டு பார்க்க, எங்கோ இலக்கின்றி வெறித்தபடி இருந்தவனை போட்டு உலுக்கினான் சேகர்.

“ஏன்டா இப்படி இருக்க? மதிக்கு ஒன்னும் ஆவாது…” நந்தா சொல்ல, “ஆமா டா, அவ கண்ணு முழிக்குறதுக்குள்ள ஆள் அனுப்புனவன் இதே ஆஸ்பத்திரில பேச்சு மூச்சில்லாம கிடக்கணும், வா!” கையை பிடித்து இழுத்தான் பரதன்.

அவன் பிடியில் இருந்து கையை உருவிக்கொண்டு அவன் மறுப்பாய் தலையசைக்க, “என்னடா?” என்றான் பரதன் கோவமாய்.

“தி..திட்டுவா டா… அவசரப்பட்டு எதா செஞ்சா… தி..திட்..திட்டுவா!” திக்கி திக்கி சொன்னவன் சொல்லி முடிக்கையில் குலுங்கினான் அழுகையில்.

நொடிக்கு நொடி அழுகையின் வேகம் கூடியது அவனிடம். அண்ணாமலை அழுது இன்று தான் பார்க்கின்றனர் நால்வரும்.

கோவம் என்ற ஒரு உணர்ச்சியை தவிர அவன் வேறு எதையுமே வெளிப்படையாய் காட்டியதே இல்லை இத்தனை வருடத்தில். முதன்முதலாய் அவன் கலக்கம், கண்ணீர் எல்லாம் என்னவோ செய்தது அவர்களை.

என்ன சொல்லி சமாதானம் செய்ய என்று கூட புரியாமல், “டேய்” என ஆதரவாய் அவன் தோளில் ஐயப்பன் கரம் வைக்க, முதுகு குலுங்க தரையில் சரிந்தான் அவன்.

“ஏய் என்னடா!” பதறி தூக்கினர் அவனை. தொய்ந்துப்போய் கிடந்தான் அண்ணாமலை.

“ப…ப…பயமா… பயமா இருக்கு டா!” சிறுபிள்ளை போல சொல்லிவிட்டு அவன் அழுக, ஆறுதல் சொல்லக்கூட வார்த்தை வரவில்லை அவர்களுக்கு. அவன் காட்டும் இந்த பரிமாணம் அவர்களை பரிதவிக்க செய்தது.

தரையில் அமர்ந்து மௌனமாய் கரைந்துக்கொண்டிருந்த தாஸ், கண்ணை துடைத்துக்கொண்டு எழுந்து அவனிடம் வந்தார்.

“யப்பா… தம்பி… இங்க பாருய்யா! உன் பொண்டாட்டிக்கு ஒன்னும் ஆவாது” என்று சொல்ல, தவிப்புடன் தாவி சென்று அவர் கரங்களை கெட்டியாய் பற்றிக்கொண்டான் அண்ணா.

“ஒன்னும் ஆவாதுல மாமா?” அவன் கண்ணில் தான் எத்தனை தவிப்பு!

“வுட்டேன் மாமா… அவளை வுட்டுட்டேன்… அவளை பார்க்கனும்ன்னு எனக்கு உரைக்கல பாருங்க! என்னால தான், என்னால தான்!” தலையிலேயே தாறுமாறாய் அடித்துக்கொண்டு அழுதவனை அடக்கி பிடிக்கவே சிரமமாய் போனது.

இத்தனை நாளும் இந்த முரடனுக்கா தவிமிருந்தாள் தன் மகள்!? என்று மனதின் ஓரம் அரித்துக்கொண்டிருந்த சிறு சுணக்கம் கூட கலங்கியே பார்த்திராத அவன் கண்கள் சிந்திய கண்ணீரில் பறந்துப்போனது தாஸுக்கு.

“அவளை காவந்து பண்ணதானேய்யா நீ அவனுங்களோட போராடுனவன்!?” என்ற தாஸ்,  “நான் சொல்றேன்ல? என் மவ தெம்பாகி வருவா பாரு!” என்றார் ஆரூடம் போல.

சரியாய் அந்நேரம் பெண் மருத்துவர் அறையில் இருந்து வெளியே வர, நொடியில் அவரை நெருங்கிய அண்ணாமலை, “நல்லா இருக்கா தானே அவ! ஒன்னும் இல்ல ல?” என்றான், நீ அதை தான் சொல்ல வேண்டும்! என்பதை போல.

‘ஆம்!’ என அவர் சொல்லப்போகும் பதிலுக்காக எல்லோரும் அவர் முகம் பார்க்க, எதையோ சொல்ல தயங்கி சில நொடிகள் அவர் தாமதித்ததே அண்ணாவின் உயிரில் பாதியை உருவியது.

அவன் முகம் வெளிருவதையும் அவன் காட்டும் கலக்கத்தையும் கண்ட மருத்துவர், “டென்ஷன் ஆகாதீங்க! அவங்களுக்கு ஒன்னும் இல்ல!” என்றார்.

“அப்ப பாக்கவா?” என்று கேட்டவன், கேட்டுகும்போதே சாற்றியிருந்த அறை வாசலை  அடைந்திருக்க, “ஹலோ ஹலோ… நில்லுங்க, இப்போ முடியாது” என்றார் அவர்.

“ஏன்? அதான் ஒன்னும் இல்லல? அப்புறம் ஏன் விட மாட்றீங்க?” என்றான் எகிறும் குரலில்.

அவன் சமநிலையில் இல்லை என்பதை புரிந்துக்கொண்ட மருத்துவர், சுற்றி நின்ற மற்றவரிடம், “அவங்களுக்கு நிறைய ப்ளட் லாஸ்… இம்மீடியட்டா ரத்தம் ஏத்தணும். பேங்க்’ல இருந்து நாங்க வாங்கிக்குறோம். நீங்க யாராது லேப்’ல போய் டெஸ்ட் பண்ணிட்டு ரத்தம் குடுக்கணும்!” என்றதும், நந்தா, சேகர், ஐயப்பன் மூவரும் யோசிக்காமல் அங்கிருந்து சென்றனர்.

மீதமிருந்தவர்களில் பரதன் மட்டுமே திடமாய் நிற்க, “சார், கொஞ்சம் முக்கியமா பேசணும்! என் கேபின் வாங்க” என்றுவிட்டு சென்றார் மருத்துவர்.

“ஏய் பாக்க விட சொல்றா அந்த அம்மாவ! அது பாட்டுக்கு போகுது” இடம் பொருள் ஏவல் இன்றி கத்தினான் அண்ணாமலை.

“நீ இரு இங்க, நான் பேசிட்டு வரேன்!” பரதன் சொல்ல, தானும் வருவதாய் பிடிவாதம் பிடித்து நின்றான் அண்ணாமலை.

“சார், சும்மா கத்தாதீங்க, இது ஹாஸ்பிட்டல்” அவனை மீறி கத்தினாள் தாதி ஒருத்தி.

“எவ அவ?” குரல் உயர அவன் திரும்பிய வேகத்தில் கப்பென வாயை மூடிக்கொண்டாள் அவள்.

“உன் புருஷனை வழிச்சுட்டு வந்து உள்ள போட்டு,  பொத்தின்னு இருன்னு சொல்றேன். இருப்பியா?” என்று கேட்க, தாதியின் கண்களுக்கு பெரும் சண்டைக்காரன் போல தெரிந்தான் அண்ணாமலை.

அவள் வெளிறி போய் நிற்க, “அண்ணா, டாக்டரை பார்க்கணும், நீ இப்படி கத்தினே இருந்தா ஒன்னும் பண்ண முடியாது. சும்மா இரு” என்று அடக்கினான் பரதன்.

“நானும் வரேன்” கிளம்பினான் அண்ணா.

“வேணாம், நீ அங்க வந்து சத்தம் போடுவ!” பரதன் தடுக்க, “கத்த மாட்டேன் டா… கத்த மாட்டேன்… போதுமா?” என்று அண்ணா கத்திய கத்தில் செவிலி கையில் இருந்த ட்ரே நடுங்கி கீழே விழுந்தது. அந்த இரண்டாம் ஜாம வேளையில் இவன் சத்தம் மட்டும் அங்கே அகாலமாய் கேட்க, நிம்மதி வாய் திறந்து பேசும்வரை இவனை அடக்குவதெல்லாம் ஆகாத காரியம் என புரிந்துப்போனது பரதனுக்கு.

டாக்டர் அறையில் அவர் முகத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தனர் பரதனும், அண்ணாமலையும்.

“அவளை எப்போ பாக்க விடுவீங்க!?” என்று கேட்ட அண்ணாமலையை சலிப்பாக பார்த்த அந்த டாக்டர், “கொஞ்சம் நான் பேசுறதை பொறுமையா கேளுங்க” என்றார்.

“கேக்குறேன், ஆனா அவளை பாக்கணும்” பிடிவாதமாய் சொன்னான்.

“இப்ப பாக்க முடியாது சார்” டாக்டரும் பொறுமையாய் சொல்ல, “ஏன்? அதான் ஒன்னும் இல்லன்னு சொன்னீங்கள்ள? பொய் சொன்னீங்களா?” விட்டால் அடித்துவிடுபவன் போல கேட்டுக்கொண்டிருந்தான் அண்ணாமலை.

அது வீட்டோடு ஒன்றாக அமைந்த பெரிய மருத்துவமனை என்பதால், நள்ளிரவில் எமெர்ஜென்சி என்றதும் பாதி தூக்கத்தில் ஓடி வந்திருந்தார் மருத்துவர்.  நிலைமை சற்று மோசம் என்பதில் உண்டான பதட்டமும், அதை பற்றி பேசக்கூட விடாமல் செய்யும் அண்ணாவின் நிதானமற்ற அணுகுமுறையும் அவரை எரிச்சலாக்கி இருந்தது.

“இங்க பாருங்க சார். பேஷன்ட் பத்தி முக்கியமா பேசணும், எவ்ளோ சீக்கிரம் ட்ரீட் பண்றோமோ, அவ்ளோ நல்லது. நீங்க என்னை பேசவே விடலன்னா ஒண்ணுமே பண்ண முடியாது… புரிஞ்சுக்கோங்க… இல்லனா கூட்டிட்டு வேற ஹாஸ்பிடல் கிளம்புங்க” டாக்டர் போட்ட சத்தத்தில் தான் அவன் சற்று அடங்கினான்.

அவன் அமைதியை அனுமதியாய் எடுத்துக்கொண்ட டாக்டர், “பேஷன்ட்க்கு லெப்ட்சைட் அப்டமன்ல கொஞ்சம் ஆழமாவே காயமாகியிருக்கு.  ஓவரி வரைக்கும் டேமேஜ் ஆகிருக்குன்னு நினைக்குறேன். அடிபட்டதுல நிறைய ரத்தம் போயிருக்கு. அதுமில்லாம, அவங்களை காயப்படுத்துன பொருள்ள துரு இருந்துருக்கு, விச் வில் காஸ் சீரியஸ் இன்பெக்க்ஷன். இதுக்குமேல நமக்கு டைம் இல்ல, உடனே ஆப்பரேட் பண்ணியாகணும்” என்று சொல்ல,

அவர் சொல்வது விளங்கவில்லை என்றாலும், “சரி பண்ணுங்க சீக்கிரம்!” என்று பறந்தான் அண்ணா. அவனுக்கு எதுவும் புரியவில்லை என்று புரிந்தது அவருக்கு. செய்யப்போவதை முழுமையாய் எடுத்து சொல்லி புரியவைத்து பின் ஒப்புதல் பெற்று தானே மருத்துவம் செய்யமுடியும்!? எல்லாம் முடிந்த பின் வந்து இதை விட மோசமாய் இவன் சண்டையிட்டால்!?

பெருமூச்சு விட்ட மருத்துவர், பரதனை பார்த்து, “பேஷன்ட்டுக்கு நீங்க யாரு?” என்றார், அண்ணாவிடம் பேசி  பிரயோஜனம் இல்லை என்று நினைத்து.

“தம்பி மாறி” அவன் சொல்ல, “லேடீஸ் யாரும் இல்லையா? அம்மா, தங்கச்சி…” அவர் கேட்க, “ஏன் சீர் செய்ய போறீங்களா?” என்று கத்தியவன், “என் பொண்டாட்டியை பாக்க விடுங்கன்னு சொல்லிட்டு இருக்கேன், கூப்பிட்டு வச்சு ஓட்டு லிஸ்ட் வாங்கிட்டு இருக்கீங்க” என்றான் அண்ணா எழுந்து நின்று.