“உங்களோட சேர்த்து வைக்க நான் ராப்பகலா அல்லாடுறேன், நீ என்னையே குத்தம் சொல்ற?” மதி விடாப்பிடியாய் சண்டைக்கு இறங்க, “அட விடுந்த… சும்மா சொல்றதெல்லாம் ரோஷமாக்கிகிட்டு” என்று மத்யஸ்தம் செய்தான் நந்தா.

“பின்ன சொல்றான் பாரு என்னைய. அந்த மனுஷனை பாரு, எவ்ளோ ஆசை இருந்தா வந்ததுல இருந்த ஒவ்வொரு ஆடா தொட்டு பார்த்து மனசுக்குள்ள கொஞ்சிக்கிட்டு இருக்கும்?” என அவள் சிலாகிக்கும்போதே, வெளியே  நின்ற ஓட்டுனனை சத்தம் போட்டு உள்ளே அழைத்தான் அண்ணாமலை.

“சொல்லுண்ணே…” அவன் வந்து நிற்க, அண்ணாவின் முன்னே அணிவகுத்து நின்ற ஆடுகளில் சிலதை கைகாட்டி, “இதெல்லாம் வண்டில ஏத்து” என்றான்.

“ஏண்ணே?”

“சொல்றதை செய்” என்று அண்ணா சொன்னபோது அவனால் மீற முடியவில்லை. அவன் ஒரு ஆட்டை பிடித்து இழுத்துக்கொண்டு போகும் வரையிலும் மதி அந்த மூவருடனும் வாய் தர்கத்தில் தான் இருந்தாள்.

சேகர் தான், ‘ஏய் அங்க பாரு’ என திசை திருப்பியிருக்க, இப்போது அடுத்த ஆட்டை இழுத்து சென்றான் ஓட்டுனன்.

‘என்ன ஆனது?’ என்று கேட்க நால்வருக்குமே நா பரபரத்தது.

“யோவ்… என்னையா பண்ற?” மதி வேகமாய் அருகே வர, சட்டென அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தான். அவன் பார்வையில் தன்னால், “என்ன மாமா பண்றீங்க?” என்று மாறினாள் பெண்.

சிறு சிரிப்போடு, அடுத்த ஆட்டை இழுத்து வண்டி ஏற்ற அனுப்பியவன், “பாத்தா தெரியல, ஆட்டை கொண்டு போறேன்” என்றான்.

“எதுக்கு?” அவள் கேட்க, “ஆட்டை வளர்க்கிறது அழகு பார்க்கவா?” என்றவனோ, வேறொரு ஆட்டை தொட்டு தடவி பார்த்து, “இது இன்னும் ஒரு மாசம் தாங்கும். ரெண்டு மாசம் செண்டு அனுப்பிக்கலாம்” என தன்னை போல சொல்லிக்கொண்டான்.

அதை கண்டவளுக்கு தான் ‘அடப்பாவி, நீ ஆட்டை தொட்டு தொட்டு பார்த்ததை பாசம்ன்னு நினைச்சேனே டா, பாயா போடன்னு இப்போதானே தெரியுது’ என்று நினைத்தவள், “நீ கடை திறந்து ரொம்ப நாள் ஆச்சா, அதான் நீ கறிக்கடைக்காரன்னே மறந்து போச்சு எனக்கு” என்றாள்.

அவன் அமைதியாய் மற்ற ஆடுகளை ஏற்ற, “பக்கத்து தெரு தானே, அதுக்கே வண்டியா?” என்றாள் அவன் கடையை மனதில் வைத்து.

அவனோ, “திருவாரூர் வர போனும்ல, அதான்” என்று சொல்ல, “இல்ல… புரியல” என்றாள் மதி. அதே தான் மற்றவருக்கும்.

“வளர்ந்த ஆடுங்களை சும்மா வச்சு என்ன பண்ண? அதான் கொண்டு போய் வித்துட்டு வர போறேன்” என்றவன் சொன்னதும், தூக்கி வாரி போட்டது கேட்டவர்களுக்கு. மற்றவருக்கு விற்பதை விட, தானே வெட்டி விற்றால் எத்தனை லாபம் வரும் என்று அவர்களுக்கு நன்றாக தெரியும்.

அதையும் விட, ‘கடை திறக்கும் எண்ணமே இல்லையோ அவனுக்கு? முற்றாக முடிந்ததோ?’ என்ற பேரைய்யம் வேறு.

“யோவ் லூசா நீ? என்ன செய்றோம்ன்னு யோசிச்சு தான் பண்றியா? புரியல எனக்கு?” என்றாள் மதி.

“ஏன்? ஆட்டை விக்கிறது யாரும் பண்ணாததா? நம்ம சோமு கூட அதானே செய்றான்.  இத்தன ஆட்டையும் கூறு போட்டு கால் கடுக்க நின்னு வித்து எடுக்குற லாபமும், சுளுவா கொண்டு போய் வித்துட்டு வாங்குற பணமும் முன்னபின்ன சரியா தான் போகும்” என்றான் அண்ணாமலை.

அது என்னவோ!? லாபமோ நட்டமோ! தொழில் செய்பவன் என்ன தேவைக்கு விற்க வேண்டும் முதலில்!? இது தான் மதியை கடுப்பேற்றியது.

“இங்கப்பாரு, ஒழுங்கா கடையை திறந்து வியாவாரம் பாரு” அவள் பேச, “தேவையில்ல, இப்போவே ஊருல பாதி பக்கத்து ஊருக்கும், இன்னும் பாதி ஆன்லைன்’ல ஆர்டர் போட்டு வாங்கி பழகிருச்சு, என்னால இதுக்கு நடுல ஒத்தையாளா நின்னு போட்டி போட முடியாது, அதுக்கு அவசியமும் இல்ல” என்றான் அவன்.

“என்ன அவசியமில்லங்குற? நான், நீ, நாளைக்கு நமக்குன்னு வர குழந்தைங்க… இதெல்லாம் உன் பொறுப்பு இல்லையா? அவங்களுக்குன்னு நீ சம்பாத்தியம் செய்ய வேண்டாமா?” என்று அவள் கேட்க, “அதுக்கு தான் நீ இருக்கியே” என்றான் அவன்.

“நான் இருந்தா… எனக்கு புரில, நீ என்ன தான் செய்யலாம்ன்னு இருக்க?” அவள் கேட்க, “உனக்கு உதவி பண்ணிக்கிட்டு ஒத்தாசையா இருக்கலாம்ன்னு இருக்கேன்” என்றான் அவன் உடனே.

“என்கிட்ட இருந்து ஒரு பைசா வாங்குற ஆளா நீ? இத்தனை நாளா வீட்டுல இருந்தியே, வெளிய தெருவ லோட் இறக்க போனியே, என் சம்பாத்தியத்துல இருந்து ஒரு டீ’க்கு காசு எடுத்துருப்பியா நீ?” அவள் மனதில் இருந்ததை கேட்டு விட்டாள்.

“எடுக்காத ஆளு தான், ரோஷம் வீம்பு பாக்குற சாதாரண ஆம்பளை தான். ஆனா, அப்படியே இருக்கணும்னு அவசியம் இல்லல? பழகிக்குறேன்” என்றவன், “நான் வாங்குனாலும் வாங்கலைன்னாலும் இந்த ஊரு முழுக்க நான் உன்னை காசுக்காக கட்டுனேன்னு தானே நினைக்குது” என்றான் வருத்த முகமாய்.

“யப்பா சாமி, உங்க குலத்துக்கே ஒரு கும்பிடு, ஏதோ தெரியாம சொல்லி தொலைச்சுட்டாரு என் அப்பா. இன்னும் எத்தனை கிழமைக்கு இதையே சொல்லி சாவடிக்க போற நீ!?” என்றவளுக்கு சத்தியமாய் எல்லையில்லா ஆயாசம்.

“நான் சொல்றதை கேட்கவே உனக்கு அலுக்குதே, இந்த ஊருல ஒவ்வொருத்தனும் என்னை அப்படி தான் பாக்குறானுவ, அப்ப எனக்கு எப்படி இருக்கும்?!” என்றவனை என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

நிம்மதி என்ன இன்று நேற்றா தொழில் செய்கிறாள்? இல்லையே! சிறுதொழிலாய் தன் இரு கையை நம்பி மட்டுமே தொடங்கி சிறுது சிறிதாய் அவள் அதை பெருக்கி இப்போது ‘வளர்ந்து வரும் பெண் தொழிலதிபர்’ என மற்றோர் தேடி வந்து பேட்டி எடுக்கும் நிலைக்கு, அவள் ஒன்றும் அத்தனை எளிதாய் வந்துவிடவில்லை. அவளது அத்தனை நிலையையும் தன் கண் கொண்டு பார்த்தவன் இந்த ‘அண்ணாமலை’.

வாயிட்டு பேசவில்லை என்றாலும், அவன் கண்களில் அவள் வளர்ச்சிக்கான பெருமிதத்தை ஒவ்வொரு நிலையிலும் கண்டிருக்கிறாளே இவள். உரிமையில்லாதவளாய் இருந்தபோது பெருமை பட்டவனுக்கு, உரிமைபட்டவளாய் அவள் நெருங்கிய பின்பு அந்த பெருமை எங்கே போனது  என்று தான் விளங்கவில்லை.

ஆனால், அவளுக்கு புரியாத அந்த ஒன்று தான் அவனது பிரச்சனையே! சாதாரண ஆண்மகனின் மனநிலை.  தன் மனைவி வளர வேண்டும், ஆனால், தன்னை விட வளர்ந்து விட கூடாது என்கிற சாதாரண எண்ணம்.

“இப்ப என்ன தான் செய்யணும்ன்னு சொல்ற நீ!?” அவள் கேட்டிட, “நீ ஒன்னும் செய்ய வேணாம், செய்யுற என்னை தடுக்காம இரு போதும்” என்றவன் மற்றொரு ஆட்டை தள்ளிக்கொண்டு போக, அவன் சொன்னது போலவே நின்றுவிட்டாள் நிம்மதி.

“டேய் பரதா, பேசு டா” என்று ஓரமாய் ஒதுங்கி அமைதியாய் நின்றவனை தள்ளினான் சேகர். அண்ணாமலையின் கையை பிடித்து நிறுத்த பரதனுக்கு தோன்றினாலும், தேன்மொழியின் முகத்தை ஒரு கணம் பார்த்தவன் அசையவில்லை.

அண்ணாமலை அடுத்த ஆட்டையும் வெளியே இழுத்துக்கொண்டு போக,  அதற்குமேல் தயங்காமல் தைரியமாய் அவனிடம் சென்றுவிட்டான் நந்தா.

“அண்ணா, நிறுத்து… இப்போ உனக்கு என்ன கோவம் எங்க மேல? நாங்களும் உன்னையே தானே சுத்தி சுத்தி வரோம்? நீ ஏன் விலகி விலகி போற?!” என்று கேட்டுவிட்டான்.

உள்ளே வந்த ஓட்டுனனிடம் ஆட்டை ஒப்படைத்தவன், “நீங்க யாரு? நான் ஏன் உங்கமேல கோவப்படனும்?” என்றான் நிதானமாய்.

நந்தாவோ, “அண்ணா, பரதனை விடு, அவன் சொல்லாம கட்டிட்டான். எங்களை பாரு, நாங்க மூணு பேரும் என்ன செஞ்சோம்?” என்று கேட்க, ஐயப்பனும் சேகரும் நந்தாவின் அருகே வந்து நின்றனர்.

மூவரையும் பார்த்த அண்ணாமலை, “இதை கேட்க உங்களுக்கு ரெண்டு மாசம் எடுத்துச்சா?” என்றான்.

“எங்களுக்கு தெரியும் அண்ணா, நாங்க நிம்மதிக்கு உடந்தையா இருந்துருக்கக்கூடாது” என்று நந்தா சொல்ல,

“அவளுக்கு உடந்தையா இருந்தது பிரச்சனை இல்ல, என்னை ஏமாத்துனது தான் என் பிரச்சனை” என்ற அண்ணா, “நான் உங்களை பார்த்த அளவு நீங்க என்னை பார்க்கல, இல்லன்னா நான் காசுக்காக கண்டவன் கிட்ட கையேந்த போனப்போ  அதை இவளுக்கு தகவல் சொல்லிருக்க மாட்டீங்க” என்றவனோ,

“எவ்ளோ பொலம்புனேன், காசுக்கு என்ன செய்ய தெரில, எவன்கிட்ட கேட்கன்னு தெரிலன்னு… அப்போக்கூட எனக்காக பார்க்கனும்ன்னு தோனல தானே உங்களுக்கு?” அண்ணாமலை நேரிடையாய் மனதில் இருந்ததை கேட்டுவிட்டான்.

“அப்டி இல்ல அண்ணா, நீ கல்யாணம் குடும்பம்ன்னு இருந்தா நல்லா இருக்கும்னு…” என்று சேகர் இழுக்க, அண்ணாமலை பார்த்த பார்வையில் பேச்சை நிறுத்திவிட்டான்.

“சரி, அப்படி நாங்க செஞ்சதுல தான் என்ன மோசம் போச்சு? இப்போ நிம்மதி கூட நிம்மதியா தானே இருக்க?!” என்று கேட்ட நந்தா, “செய்ய சொன்னவ கூடவே தானே இருக்க, அவமேல கோவப்பட மாட்ட, எங்கமேல மட்டும் கோவப்படுவியா?” என்று கேட்டுவிட,

“நான் கோவப்படலன்னு தெரியுமா உனக்கு? அது எங்க ரெண்டு பேருக்குள்ள நடக்குற போர்” அண்ணாமலை இதை சொல்லும்போதே அவனை மீறி சிரிப்பும் வெட்கமும் அவன் மீசையை துடிக்க வைக்க, ஆட்டை இழுத்து செல்வதை போல முகத்தை மறைத்துக்கொண்டான்.

நிம்மதியோ வாய்க்குள், ‘ஆமா, வெளிச்சத்துல முறுக்கிக்குறதும், இருட்டுல இறுக்கிக்குறதும் தான் இவன் போர்’ என சடைத்துக்கொண்டாலும், அவளுக்கும் அவள் மீது அவன் காட்டும் கோவம் சற்று வெட்கத்தை தான் கொடுத்தது.

இந்த இலகு நிலை கூட சில நிமிடங்கள் தான். மொத்தமாய் ஆடுகளை வண்டியில் ஏற்றிவிட்டு மீண்டும் உள்ளே வந்த அண்ணாமலை, “நம்ம கடையோட லீஸ் வர மாசத்தோட முடியுது, நீட்டிக்குற எண்ணம் எனக்கு இல்ல. உங்களுக்கு தேவப்ப்படும்ன்னா செஞ்சுக்கோங்க, மீதி ஆடுங்களை நான் தேவைப்படுறப்போ எடுத்துக்குறேன். மாடு, கோழி, காடை, இந்த இடம், வீடு எல்லாமே உங்க பொறுப்பு” என்றவன் வெளியேற எத்தனித்தான்.

வேகமாய் அவன் கரம் பற்றிய ஐயப்பன், “சண்டை வந்து போறதெல்லாம் நமக்குள்ள சகஜம் டா, இப்படி ஒரேடியா ஒதுக்கி பேசாத, கஷ்டமா இருக்கு” என்றான்.

அவன் கரத்தை தன்னில் இருந்து எடுத்துவிட்டவன், “எனக்குன்னு ஒருத்தி வந்தா உங்ககிட்ட இருந்து தூரமா போய்டுவேனோன்னு நினைச்சு தான் கல்யாணமே வேண்டாம்ன்னு இருந்தேன்! இப்போ வந்தவளால நீங்க தூரமாகல…   தூரமாவே இருந்த உங்களை தான், நான் பக்கமா நினைச்சுட்டு இருந்துருக்கேன்… விடுடா” என்றுவிட்டான்.

மூவருக்கும் அவனிடம் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. திரும்பி பரதனை பார்க்க அவன் அழுத்தமாய் நின்றிருந்தான்.

நிம்மதியிடம் உளவு சொன்னதற்கு கோவம் என்றாலும் அவன் திருமணத்திற்கு பிறகு வர, போக இருந்தானே! சுத்தமாக அவன் ஒதுங்கியது பரதனின் திருமணத்திற்கு பிறகு தானே! அப்போது அண்ணாவின் மொத்த கோவமும் பரதனின் மீது தான் என்பது புரிந்தது நண்பர்களுக்கு. அவர்களும் எத்தனையோ முறை கேட்டும் பரத் துளிக்கூட வாய் திறக்கவே இல்லை. இனியும் சொல்வான் என்று தோன்றவில்லை. அந்த பெண்ணும் பரதனின் பேச்சை கேட்டு வாய் திறக்காமல் இருக்க, சரி என விட்டுவிட்டனர்.

இப்போது யாருக்காக யாரிடம் பேசுவது என்று புரியாது மூவரும் முழிக்க, “எனக்கு வேலை இருக்கு, நான் கிளம்புறேன்” என்றான் அண்ணாமலை. அவனை அனுப்ப மனமே இல்லை அவர்களுக்கு.

வண்டியில் ஏறிக்கொண்டவன் அவனை முறைத்துக்கொண்டு நிற்கும் மனைவியை ரகசியமாய் ரசித்தபடி கிளம்பினான்.

“ஏண்டா, அவன் எவ்ளோ நொந்து பேசுறான். திருச்சி போனப்போ என்ன நடந்து தொலைச்சுதுன்னு சொன்னா தான் என்ன உனக்கு?” என்று முதல் ஆளாய் பரதனிடம் சண்டைக்கு சென்றான் நந்தா.

“எப்படியோ போயிருக்க வேண்டியவங்க நாம… நம்மளை கூட பொறந்த பொறப்பாட்டம் இப்போவரை வச்சுருக்கவனை கஷ்டப்படுத்தக்கூடாது டா” சேகரும் சொல்ல,

“நீ அவனுக்கு சொல்லாம கல்யாணமே செஞ்சுட்டேங்குறத அவனால தாங்கிக்கவே முடியல, என்னவோ நீ அவனை ஒதுக்கிட்ட மாறி நினைக்குறான். அவன்கிட்ட நீ நடந்ததை சொல்லி பேசுன்னாலே போதும், சமாதானம் ஆகிடுவான்னு தோணுதுடா” என்று ஐயப்பன் பேச, தலை குனிந்து நின்ற பரதன் ஒன்றுமே சொல்லாமல் வெளியேறிவிட்டான்.

அவன் போனதும், “விடுங்க, நடக்கிறது நடக்கட்டும்” என்ற நிம்மதியும், “வீட்டு வேலைக்கு ஆள் வந்தா இன்னைக்கு நீங்களே பாத்துக்கோங்க, நான் கிளம்புறேன்” என்று சென்றுவிட்டாள்.

நடந்ததை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த தேன்மொழிக்கு கண்ணீர் கன்னம் நிறைத்தது. ஒரு முடிவுக்கு வந்தவளாய் நிம்மதியின் பேக்ட்டரிக்கு கிளம்பினாள்.