“உன் வீட்டை இடிச்சுட்டு தான் கட்டிட்டு இருக்கேன்” அவளாக சொல்ல, “சரி” என்றவன் திரும்பக்கூட இல்லை.

“என்ன பிளானு? என்ன அளவுல வேலை நிக்குது? இப்படி ஒன்னுக்கூட கேட்க தோணாதா?” அவள் கேட்டதும், “தோணலையே” என்றான் அவன்.

“யோவ் உனக்கு என்னைய்யா அப்படி ஒரு வெட்டி வீம்பு? என்னவோ என்னை கட்டிக்கிட்டு கஷ்டப்படுற மாதிரி அந்த நாலு பேர்ட்டயும் முறுக்கிட்டு திரிஞ்ச, சரி போக போக சரியாகுவன்னு பார்த்தா ரொம்ப தான் எகிறிட்டு போற?” அவள் நியாயம் பேச, டிவியை அணைத்தவன், பாயை எடுத்து போட்டு படுக்க ஆயத்தமானான். அது இன்னும் தான் அவளை சீண்டியது.

“எவ்ளோ திமுரு உனக்கு?” அவள் எழுந்து நின்று முறைக்க, ஒருபக்கமாய் திரும்பி தலைக்கு கையை கொடுத்து படுத்திருந்தவன், “லைட்டை நிறுத்திட்டு வாடி” என்றான்.

“எதுக்கு?” என்றாள் கடுகடுவென.

“வேறெதுக்கு படுக்க தான்” அவன் சொல்ல, “ச்சீ…” என்றாள் அவள்.

“ஏய், படுத்து தூங்க கூப்ட்டேன் டி” என்றவனோ, “என்னைவிட நீதான் டி ஒரு மார்கமாவே இருக்க… எது பேசுனாலும் உனக்கு வேற மாறியே புரியுது” என்றுவிட்டு மல்லாந்து படுத்தான்.

‘ஹும்’ என நொடித்தவள் அப்படியே நிற்க, “மச், அட வாஆஆடி…” என்றான் கெஞ்சல் போல.

“அதுக்கு வேற ஆளை பாரு” என்றவள் வேண்டுமென்றே நிற்க, “ஆமான்டி, உரச ஒருத்தி, உறங்க ஒருத்தின்னு ஆள் பாப்பாங்க! சும்மா வீம்பு புடிக்காம வந்து படு” என்றான்.

“யாரு நான் வீம்பு புடிக்குறேனா?” என்றவள், “நீ மட்டும் குடும்பஸ்தன் ஆகிட்டீல்ல? மத்தவனுங்களுக்கும் கூடக்குறைய உன் வயசு தானே? அதுல ஒருத்தன் கல்யாணம் கட்டுனா தான் என்ன இப்போ? எதுக்கு அதை ஒரு விஷயமா புடிச்சுகிட்டு வீட்டுப்பக்கம் போக மாட்டேன், கடை திறக்க மாட்டேன், அவனுங்களையும் பாக்க மாட்டேன்னு காரணமே இல்லாம கிறுக்குத்தனமா பண்ணிட்டு இருக்க?” என்றாள் குரல் உயர்த்தாமல்.

அவன் வாய் திறக்கவில்லை.

“இங்க பாரு, எனக்கு பதிலை சொல்லு. நீ என்ன நினைக்குற? எதுக்கு கோவப்படுற? ஒண்ணுமே விளங்கலை எனக்கு” என்றாள் அவன் அருகே அமர்ந்துக்கொண்டு.

“அவனுங்களுக்கு தெரியாம தான் நான் உன்னை கட்டுனேனா?” என்று விட்டத்தை பார்த்துக்கொண்டு கேட்டான் அண்ணாமலை.

“ப்பூ… இதானா?” என்றவள், “ஏன்டா சொல்லாம கட்டிக்கிட்டன்னு பரதன் சட்டையை புடிச்சு கேட்குறதை விட்டுட்டு அப்டியே ஒதுங்குனா ஆச்சா?” என்றாள்.

அவளை பார்த்தவன், “நீ கேட்டியே! சொன்னானா?” என்றான்.

ஆம். பரத்தை அன்று தேன்மொழியை அழைத்து வந்து இதுதான் தன் மனைவி என்று சொன்னபோது அதிர்ச்சியிலும் அண்ணாமலையின் வெளிநடப்பிலும் நிம்மதி அவனுடனே வந்துவிட்டாலும், மறுபொழுதில் நேரே சென்று அவனிடம் கேட்டபோது, “கட்டிக்கிட்டேன், இவ தான் என் பொண்டாட்டி. அதுக்கு மேல கேட்காத” என்றுவிட்டான்.  என்ன முயன்றும் அவனிடம் இருந்து ஒரு எழுத்து கூட வரவில்லை. அவளிடம் மட்டுமல்ல, மற்ற யார் கேட்டுமே அவன் சொல்லவில்லை என்ன நடந்ததென.

தேன்மொழி இங்கே வர போக ஆரம்பித்தபின் லேசாக நிம்மதி அவளிடம் கேட்டுப்பார்த்தபோது கூட, ‘யார் கேட்டாலும் சொல்லக்கூடாதுன்னு அவர் சொல்லிருக்காரு க்கா’ என்றாள் தயக்கமாய்.  அழுத்தி கேட்டிருந்தால், அவள் சொல்லியிருக்கக்கூடும். ஆனால், நிம்மதி கேட்கவில்லை. ‘எப்படியோ நல்லா இருக்கட்டும்’ என்று விட்டுவிட்டாள்.

இப்போது கணவன் கேட்டபோது அதையெல்லாம் புறம்தள்ளி, “நானும் நீயும் ஒண்ணா? நான் கேட்டு சொல்லலன்னா என்ன? நீ கேட்டுருந்தா கண்டிப்பா சொல்லிருப்பான்” என்றாள்.

“கேட்டா சொல்லிருப்பான்” என்ற அண்ணா, மீண்டும் பார்வையை விட்டத்தில் பதித்து, “கேட்டா தான் சொல்லுவான்” என்றான்.

நிம்மதிக்கு ஏதோ புரிவது போல தோன்றியது.

“அவனே உன்கிட்ட வந்து சொல்லனும்ன்னு நினைக்குரியா?” என்றாள்.

“அந்த எண்ணம் இருக்கவனுக்கு ஒரு மாசம் தேவைப்படாது மதி” என்றான் அவன்.

இப்போது அவளுக்கு புரிந்தது. அண்ணாமலை எதிர்ப்பார்ப்பது ‘உரிமை’யை!

அவள் பேச வரும் முன், “நான் வீட்டுக்கு வராம இருந்தும், கடை திறக்காம இருந்தும், சுத்தமா பாக்குறதை  நிறுத்தியும் கூட, என்கிட்ட அவனுக்கு பேச தோனலல?” என்றவன், கீழுத்தட்டை கடித்தபடி, சுருங்கிய புருவங்களோடு ஓடும் மின்விசிறியை பார்த்திருந்தான்.

“சொல்லாம பண்ணது தப்புன்னு அவனுக்கே தெரியுதுய்யா, அதனால தான் பேச தயங்கிட்டு இருக்கான் அவன்!” என்றவளை, ‘அவன் சொன்னானா?’ என்பது போல பார்த்தான் இவன்.

“அவனே சொன்னான்!” என்றவள், “அவன் வந்து நீ பேசாம உதறிட்டா அவனால தாங்கிக்க முடியாதாம். அதையும் விட, உன்னை நேருக்கு நேர் பாக்கவே அவனுக்கு தைரியம் இல்ல இப்ப” என்றாள்.

அவன் ஒன்றும் பேசவில்லை. அமைதியாய் இருக்கவே, எழுந்து விளக்கை நிறுத்திவிட்டு அவன் அருகே படுத்துக்கொண்டாள் நிம்மதி.

இரு கைகளையும் மடக்கி தலைக்கு கொடுத்து படுத்திருந்தான். மெல்ல நகர்ந்து அவன் தோள்பட்டையில் தலை வைத்து படுத்தாள் மதி. அவன் அசையவே இல்லை.

“யோவ்…” மெல்ல அவள் அழைக்க, அவன் பார்வை அவளிடம் போனது. தன்னை லேசாக எக்கி பார்த்தபடி தன் மூக்குரசும் தூரத்தில் பெண் இருக்க, அவன் இறுக்கம் எல்லாம் குழம்பில் போட்ட உப்பென உருக ஆரம்பித்தது.

“விட்டுடுய்யா… இறங்கி போறதால ஒன்னும் கெட்டுட மாட்டோம். இத்தனை வருஷம் ஒடம்பொறப்பு மாறி பழகிட்டு, இப்படி பட்டுன்னு விட்டு விலகுனா நல்லாவா இருக்கும்? உன்னை மாறியே அவனுங்களும் இருந்தா, நினைச்சு பாரு… ஒரு அண்ணாமலையே ஊரு தாங்காது, இதுல நாலஞ்சுன்னா….!” என்றவள் முடிக்காமல் நமட்டு சிரிப்பு சிரிக்க,

“என்னடி… கொழுப்பா?” என்றவன் கரங்கள் அவளை நெருக்கி பிடித்தது.

தானும் கட்டிக்கொண்டவள், “அண்ணாமலை…. கொஞ்…சம் மலை இறங்கு” என்றாள் அவனை உசுப்பிவிடும் மாதிரியான குரலில்.  அவள் எதிர்ப்பார்த்தது போல அவன் புலன்கள் புத்துணர்ச்சி பெற்றன.  ஒரு உருட்டலில் அவளை கீழே தள்ளி அவன் மேலே வந்தான்.

“இப்போ எல்லாம் நீ பாடுறதே இல்ல டி” என்றவன் அவள் கழுத்தடியில் வாசம் பிடிக்க சென்றான்.

“பாட்டா? என்ன பாட்டு?” அவள் கேட்டதும், வெடுக்கென நிமிர்ந்தவன், ஒன்றும் சொல்லாமல் அவளை முறைத்துக்கொண்டே இருக்க, சில நொடிகளில் அவள் நினைவுக்கு எட்டிவிட்டது.

“ஓ…!” என்றவள், “அண்ணாமலை… அண்ணாமலை…. ஆசை வச்சேன் எண்ணாமலே…”  என்று சிரித்துக்கொண்டே பாட, “பாடி பாடி மனுஷனை உசுப்பிட்டு, சிரிப்பு வருதுல உனக்கு?” என்றான் அவள் மேல் தன் பாரம் மொத்தத்தையும் கவிழ்த்துக்கொண்டு.

“யோவ்…” என்றவள் அவன் பாரம் தாங்காமலும், அவன் பேச்சு உண்டாக்கிய சிறு கூச்சத்திலும் சிரிக்க ஆரம்பித்தாள்.

“அது அப்போ… இப்போதான் எல்லாம் ஆச்சே!” ஒருவாறு முயன்று அவனை பக்கத்தில் சாய்த்து தானும் அவனோடு ஒட்டிக்கொண்டாள்.

“என்ன ஆச்சு?” கேட்டவன் அவள் கன்னத்தை வலிக்க கடிக்க, “ஆஆ…. எல்லாம் தான் ஆச்சு” என்றாள் அவனை தள்ளிவிட்டு.

அவன் அதற்குமேல் பேச்சை வளர்க்காமல் அவளோடு அழுத்தமாய் உதடு கொண்டு உரச ஆரம்பிக்க, அவனுக்கு அசைந்துக்கொடுத்தபடி,  “யோவ்… சொன்னா கேளுய்யா… கொஞ்சம் மலை இறங்கி தான் வாயேன்!” என்றாள்.

அவன் கழுத்தில் இருந்து அப்படியே வழுக்கிக்கொண்டு கீழேப்போக, “ஏய், இறங்கி போக சொன்னது இதுல இல்லய்யா!” என்றாள் அவனை வயிறோடு இறுக்கமாய் பிடித்துக்கொண்டு.

வெடுக்கென நிமிர்ந்தவன், “என்னடி உன் பிரச்சனை?” என்றான் எரிச்சலாய். அவனுக்கு இந்த நேரத்தில் தடை போட்டால், கோவம் சுர்ரென கிளம்பும் என அறிந்தவள், அப்படியே வாகாக அணைத்துக்கொண்டு, “வீட்டுக்கு போய்யா” என்றாள்.

“நீ என்னை ‘மாமா’ன்னு கூப்பிடு, போறேன்” அவன் சொல்லிவிட, அவள் உண்மையில் அதிர்ந்து தான் போனாள்.

“மாமா சொல்லனுமா?” அவள் அதிர்வை ஆசையாய் உள்வாங்கிக்கொண்டே, “ஆமா, இப்போ மட்டும் இல்ல. இனி எப்பவும் ‘மாமா’ தவிர, ஏய், ஒய், யோவ் இதெல்லாம் உன் வாய்ல வரவே கூடாது” என்றான் கண்டிப்பாக.

“உனக்கு தான் பிடிக்காதே!?” அவள் கேட்க, “பிடிக்குதே…!” என்றான் அவன்.

“என்னை’யா?” என்று தன்னைக்காட்டி கேட்டவள் கண்களில் அத்தனை ஆவல்.

“உன்னை இல்ல… நீ சொல்ற ‘மாமா’வ” அவன் திருத்த, “என்னை பிடிக்காது, நான் சொல்ற மாமா மட்டும் பிடிக்குதோ?” என்றாள் முறைப்பாய்.

“அது அப்டி தான். சரி சீக்கிரம் சொல்லு, அப்புறம் மனசு மாறிடுவேன்” என்றான் தோரணையாய்.

அவளுக்கும் வேறு வழி இல்லை. எப்படியோ மலை இறங்கினால் சரி என்று, “மாமா, வீட்டுக்கு போங்க மாமா” என்றாள்.

“ம்ம்… அது!!!” என்றவனுக்கு சிரிப்பை அடக்க வேண்டியதாய் இருந்தது.

அவன் சிரிப்பை கண்டு அவள் முகம் திருப்ப, தாடையை அழுந்த பற்றி அவள் பிளந்த இதழ்களில் தன் இதழ் கொண்டு வன்மையாய் நிரப்ப ஆரம்பித்தான். முதலில் கொஞ்சமாய் முரண்டு பிடித்தாலும், சில வினாடிகளிலேயே கண்கள் சொருக, அவன் போடும் தாளத்திற்கு ஆட ஆரம்பித்தாள் அவள்.

திடீரென அவள் அலைபேசி சத்தமித்தது.

அப்பட்டமான எரிச்சலுடன் அவளில் இருந்து நிமிர்ந்தவன், எட்டி அலைபேசியை எடுத்து, “யாரு?” என்றான் உறுமலாய்.

மறுபக்கம் இஞ்சினியர் தான் அவள் கேட்ட தகவலை திரட்டிவிட்டு அதை சொல்ல அழைத்திருந்தார்.

“நைட்டு பத்தரைக்கு தான் வீடு கட்டுற பேச்செல்லாம் பேசணுமா? காலைல நான் வரேன், என்கிட்ட சொல்லுங்க” என்றவன் வைத்துவிட, “நிஜமாவா?” என்று கண்ணை விரித்தாள் பெண்.

“என்ன நிஜமாவா?” என்றவன் விட்டதை தொடர, “நிஜமா வீட்டுக்கு போவியா நாளைக்கு?” என்றாள்.

“ம்ம்ம்…!” என்றவன் அவள் கையடியில் பற்கள் பதிக்க, “நான் சொன்னதுக்காகவா?” என்றாள் வெகுவான எதிர்ப்பார்ப்புடன்.

நிமிர்ந்தவன், “இல்லன்னு தோணுதா?” என்ற சொல்லோடு பல் பட்டே சிவந்திருந்த அவள் உதடுகளின் ரத்தம் குடிக்க வேட்கை கொண்டான்.

தான் சொன்னதற்காக வீட்டுப்பக்கம் போகப்போகிறான் என்ற சந்தோசத்தில் மிதந்தவளுக்கு, மறுநாள் அவன் போனபின்பு, ‘இதுக்கு தானாடா போன?’ என்று அவன்மீது ஆத்திரம் தான் அளவின்றி வந்தது.