15

பிஸ்கட்டுகளுக்கு புது வடிவம் ஒன்றை யோசித்துக்கொண்டிருந்தாள் நிம்மதி. சுற்றி எல்லோரும் வேலை செய்துக்கொண்டிருக்க, “அம்மாடி, இந்தா காசு. இந்த மாச ஸ்கூல் கணக்கு  முடிஞ்சுது” என்று நீட்டினார் தாஸ். ஒருமுறை பார்த்தவள், “சரியா கணக்கு பார்த்து வாங்கிட்டீங்களா ப்பா?” என்றாள்.

“ஆச்சும்மா! நீ ஒருக்க பாக்குறப்போ சரிபாத்துடு” என்று அவர் சொல்ல, “சரிப்பா… வீட்ல வச்சுடுங்க” என்றாள் பேப்பரில் வடிவத்தை வரைந்து பார்த்துக்கொண்டே.

தாஸ் பின்வாசல் வழியே இறங்கி அந்த சின்ன வீட்டிற்கு போக, அங்கோ தரையில் அமர்ந்து உண்டுக்கொண்டிருந்தான் அண்ணாமலை. மாமனாரும் மருமகனும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டனர். இத்தனை நாளில் இவனை கண்டாலே யார் பின்னேனும் ஒளிந்தோ ஓடியோ நாளை ஓட்டியவர் இன்று எதிர்ப்பாராமல் மாட்டிக்கொண்டார்.

அவன் விழியகற்றாமல் அவரையே பார்த்துக்கொண்டிருக்க, அப்படியே திருப்பிப்போவது முறையாகாது என்பதால், “மாப்பிள்ள? சாப்பிடுறீங்களா?” என்றார் சிரித்துக்கொண்டு.

கொஞ்சமும் இளகாத பார்வையுடன், “இல்ல, பால் பீச்சிட்டு இருக்கேன்” என்றான் அவன்.  விளக்கெண்ணெய் விழுங்கியதை போல முகம் அஷ்டகோணலாக,  “ஹிஹி, தம்பி… அது… இந்த காசை பீரோல வைக்கணும்” என்றவர் சொல்ல, “என்கிட்ட குடுங்க” என்றான். அவரும் உடனே நீட்டிவிட, இடக்கையால் வாங்கியவன் தன் அருகே வைத்துவிட்டு உணவை தொடர்ந்தான்.

ஏனோ அவன் அலட்சியமாக வாங்கியதை போல தோன்ற, “மாப்பிள்ளை தம்பி, அதுல லட்சம் பக்கம் இருக்கு” என்றார் தாஸ் இழுவையாக.

“இருந்துட்டு போட்டும்! என்ன இப்ப?” அவன் கேட்க, அவருக்கு ஏனோ ‘அவனிடம் ஒப்படைத்துவிட்டோம் இனி கவலையில்லை’ என்ற எண்ணம் வரவே இல்லை. அவன் தோரணையும் பேச்சும் அப்படி இருந்ததோ என்னவோ!?

“அதில்ல அண்ணா தம்பி…” அவர் மீண்டும் தொடங்க, “ப்ச், மாப்பிள்ளை, தம்பி, அண்ணா தம்பி… என்ன பிரச்சனை உங்களுக்கு?” என்றான் வேகமாய்.

பட்டென வார்த்தை சிக்க, பேந்த பேந்த முழித்தவரிடம், “எதாவது ஒன்னு சொல்லி கூப்பிடுங்க, இல்லையா பேரை சொல்லி கூப்பிடுங்க” என்று சொல்லிவிட்டு தட்டோடு எழுந்துக்கொள்ள, தரையில் பணப்பை அனாதையாய் கிடந்தது.

நாமே எடுத்து பத்திரமாய் வைத்துவிடுவோமா என்று அவர் எண்ணும்போது கையை லுங்கியில் துடைத்துக்கொண்டே வந்தவன், “என்ன?” என்றான்.

“இல்ல, காச நானே…” அவர் ஆரம்பிக்க, “காசுக்காக தானே உங்க பொண்ணை கட்டுனேன்!? அப்ப வர காசு எல்லாம் என்கிட்டே தானே இருக்கணும்? ம்ம்?” என்றான். பேச்சு மூச்சில்லை தாஸிடம். அப்படியே அவர் நிற்க, “என்னப்பா? போய் வேலையை பாருங்க” என்று வந்தாள் நிம்மதி.

“ம்ம்ம்? ம்ம்ம்…” என்றவர் திருதிருவென விழித்துக்கொண்டே போக, “என்ன சொன்ன அப்பாவை? ஒருமாறி போறாரு?” என்றாள் மதி.

“ஒன்னும் இல்ல, இந்தா… பணத்தை புடி” என்றான் பையை நீட்டி.

சலிப்பாக இருபுறமும் தலையாட்டியவள், பணத்தை வாங்கிக்கொண்டு அங்கேயே அமர்ந்து எண்ண ஆரம்பித்தாள். பின்னே எத்தனை ஐநூறு, நூறு இருநூறு நோட்டுகள் என வேகமாய் கணக்கெடுத்தவள், ஒரு தாளில் அதை குறித்துக்கொண்டு தன் கைப்பையில் சீட்டையும் பணத்தையும் பத்திரப்படுத்த, “லாக்கர்ல வையுந்த!” என்றான் அவன்.

“இல்லய்யா… பேன்க்’ல போடணும்” அவள் சொன்னதும், ‘ஓ’ என்றவன், அலமாரி ஓரத்தில் இருந்த பையை எடுத்து, ஒரு கத்தை பணத்தை அவளிடம் நீட்டினான்.

“பாஞ்சாயிரம் இருக்கும்! என் கணக்குல போட்டுடு” என்றவன் பாஸ்புக்கையும் கொடுக்க, “நீயே போட்டுடு அப்போ… எனக்கும் இங்க வேலை கடக்கு” என்று சொல்ல, “ஐய்யய்ய… இந்த பேன்க் சமாச்சாரம் எல்லாம் எனக்கு ஆவாது, நீயே பண்ணு” என்றான் கும்பிடு போடாத குறையாய்.

இடுப்பில் கைவைத்து முறைத்தவள், “எந்த காலத்துல இருக்க? ஸ்கூல் புள்ள கூட முட்டாய் வாங்கிட்டு போன்’ல காசு அனுப்பிட்டு வருது! நீ என்னன்னா பேன்க்’ன்னாலே நடுங்குற!” என்று திட்ட,

“அதென்னவோ, படிச்ச கூட்டத்தை ஒருமுட்டா பாத்தாலே பேச்சு வர மாட்டுது, இதுல அவனுவோ வேற, சீட்டை நீட்டி இத எழுது அத எழுதுன்னு… சரியான ரப்ச்சரு!” என்றவனோ, “ஒன்னும் தெரியாம கடன் வாங்க போய் வேற அசிங்கப்பட்டு வந்தேன், போதும்டா சாமி” என்றான் அயர்வாய்.

“ஏன் உனக்கு எழுத படிக்க வராதா? பத்தாம்ப்பு முட்டும் படிச்சீல்ல? ” அவள் கேட்க, “ப்ச், வேண்டான்னா விடுவேன்! ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொன்னு பயம். எனக்கு படிச்சவன்னா…” என்று இழுக்க, “பயமா?” என்றாள் அவள் நக்கலாய்.

“ச்ச…ச்ச… அலர்ஜி… ஆவாது, அவ்ளோதான்” என்றான் அவன்.

சொல்லிவிட்டு அவன் கடைக்கு கிளம்ப, செல்பவனை பார்த்துக்கொண்டு வீட்டுக்குள் திரும்பியவளுக்கு, கருப்பு அங்கியில் சிரித்தபடி தான் பட்டம் வாங்கியபோது எடுத்த புகைப்படம் கண்ணில் பட்டது.

“படிச்சவன்னா அலர்ஜி… ஆவாது” அவன் வார்த்தைகள் காதுக்குள் ஒலித்தது.

அவள் சிந்தனை ‘இருக்குமோ?’ என்ற ரீதியில், அவன் தன்னை எப்போதிருந்து தவிர்த்து ஒதுங்க ஆரம்பித்தான் என்று மெல்ல அசைப்போட ஆரம்பித்தது.

***

“சார், இங்க தேர்முட்டி வீதிக்கு எப்படி போகணும்?” முதுகில் பெரிய பையும் பச்சை நிற டீஷர்ட்டுமாய் வியர்த்து வழிய கடை முன்னே வந்து நின்றவனை புருவம் சுருக்கி பார்த்தான் அண்ணாமலை.

“இங்கிருந்து ரெண்டு வளைவு திரும்பனும். ஆனா பைக்கு போவாது… குழி வெட்டி போட்டுருக்கானுவ” என்றதும், அந்த பச்சை சட்டைக்காரனின் முகம் பெரும் அயர்வை காட்டியது.

“ரொம்ப தொலவு இல்ல, எட்டிப்புடிச்ச தூரம் தான். நாலெட்டுல போய்டலாம்” என்று அண்ணா சொல்ல, தன் பெரிய கருப்பு பையில் இருந்து ஒரு சின்ன பேப்பர் பையை மட்டும் எடுத்துக்கொண்டவன்,  “சார், நான் வேகமா போயிட்டு வந்துடுறேன், அதுவரை இந்த பைக்கும், பையும் இங்கேயே நிக்கட்டும், பாத்துக்குறீங்களா?” இறைஞ்சலாய் கேட்டான் அவன்.

“சரி அவுதியில்லாம வாங்க, பாத்துக்குறேன்” என்று சொல்லவும், அவன் முகத்தில் பெருத்த நன்றிப்பெருக்குடன் அங்கிருந்து வேகமாய் அண்ணா காட்டிய திக்கில், மொபைலில் யாரையோ அழைத்துக்கொண்டே வேகவேகமாய் ஓடியவனை பார்த்தபடி நின்ற அண்ணாவை இடித்துக்கொண்டு வந்து அருகே நின்றாள் நிம்மதி.

“ப்ச்…” என திரும்பியவன், “நீயா?” என்றான் அவளைப்பார்த்து.

“ஏன் வேற எவளை எதிர்ப்பார்த்த நீ!?” அவள் கேள்விக்கு அவனிடம் பதிலே இல்லை. அவள் கையில் இருந்த கூடையை கண்டே தனக்கு உணவை தூக்கிக்கொண்டு வந்திருக்கிறாள் என உணர்ந்தவன், கையை சுத்தமாய் கழுவ ஆரம்பித்தான்.

கூடையை கடைக்குள் வைத்தவள், “ஆமா யார் வண்டி இது? கடை முன்ன நிக்குது?” என்றிட, “வழி கேட்டு வந்தான் ஒருத்தன், தேர்முட்டி வீதி போயிருக்கான்” என்றதும், “ஓ” என்ற மதி, “இத்தாம்பெரிய பையா இருக்கு? என்னவா இருக்கும்?” என்றாள்.

“தெரியலையே… கொரியரா இருக்கலாம்”

“ம்ம்… இருக்கும் இருக்கும்” என்றவள் அவனுக்கு உணவு பரிமாற வர, “சீக்கிரம் போடு” என்றான் அவன்.

“கடைல ஈ காக்கா கூட இல்ல, சித்த சாத்திட்டு வந்து நேரமே தின்னுட்டு போனா என்ன உனக்கு? எங்க போனானுங்க அந்த தடியனுங்க எல்லாம்?” கேட்டுக்கொண்டே தான் பரிமாறினாள்.

“நாலு பேரும் ராத்திரி கடை வேலைல இருக்கானுவ… கூட நிக்குறேன்னு சொன்ன சேகரை நான் தான் பத்திவிட்டேன்!” என்றவன், ஒரு கவளம் அள்ளி வாயில் அடைத்துக்கொண்டே,  “கோழி லோடு வரும் இப்ப, அதான் அங்கன இங்கன நவுராம உட்காந்துருக்கேன்” என்றான்.

“சரி சரி, பேசிட்டே தின்னாத, பொறை ஏறிக்கும்… பொறியல வச்சு தின்னு! இந்தா” என அள்ளி வைத்தாள். வாரம் முழுக்க மீந்த கறியும், எஞ்சிய எலும்பையும் வைத்தே சோறாக்கி உண்டவன் நாக்கு, இந்த இரு மாதமாய் காய்கறி சுவையில் துள்ளி குதித்துக்கொண்டிருந்தது. சாம்பாரெல்லாம் தேவாமிர்தமாய் இருக்க,  ரசம் கூட அமுதரசமாய் தான் ருசித்தது அவனுக்கு. சமீபமாய் அவன் சட்டை நடுபட்டன் புடைத்துக்கொண்டதில் தான், தான் சற்று சதை வைத்திருப்பதே உணர்ந்தது அவனுக்கு.

“சார், ரொம்ப தேங்க்ஸ்!” வெளியே சத்தமாய் சொன்னவன் குரலில் இருவரும் எட்டிப்பார்க்க, அந்த பைக்காரன் பையை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு பைக்கின் கிக்கரை உதைத்தான்.

“பாக்க புதுசா இருக்கீங்களே? எந்த கொரியர் நீங்க?” உள்ளிருந்தே எட்டி சத்தமிட்டாள் நிம்மதி.

“கொரியர் இல்ல க்கா! ஆன்லைன் மீட் டெலிவரி!” என்றவன் சர்ரென கிளம்ப, வேகமாய் வந்து அவன் போன வழி எட்டிப்பார்த்தவளின் கண்களில் அவன் பையின் பின்புறம் எழுதியிருந்த ‘டேஸ்ட் பட்ஸ்’ எனும் எழுத்துக்கள் பளிச்சென தெரிந்தது.

“என்ன சொல்லிட்டு போறான் அவன்?” அண்ணா கேட்டதும், “டெலிவரி குடுக்குறவனாம்” என்றாள் யோசனையாய்.

“கொரியரா?”

“இல்லைய்யா… டேஸ்ட் பட்ஸ்’ன்னு ஒரு ஆப் இருக்கு, அது மூலமா நம்ம கறி வாங்குனா வீட்டுக்கே வந்து குடுத்துட்டு போவாங்க. இவன் அதுல இருந்து தான் வரான்!” என்றதும், மும்மரமாய் உண்டுக்கொண்டிருந்தவன் அப்படியே நிமிர்ந்தான்.

“கறியா?”

“ஆமா, ஆடு, கோழி,  மீனு இன்னும் என்ன என்ன இருக்கோ, எல்லாம் அதுல விலை குறைச்சலா இருக்கு. சுத்தம் செஞ்சு நீட்டா பேக் பண்ணி வீட்டுக்கே குடுத்துடுறாங்க” என்றதும் அவனிடம் பேச்சில்லை.

“இது மாறி நிறைய சிட்டில இருக்கு தான். அன்னைக்கு திருவாரூர் போனப்போ நோட்டிஸ் கூட குடுத்தாங்க!  ஆனா நம்மூருக்கு எல்லாம் இவ்ளோ சீக்கிரத்துல வரும்ன்னு நான் நினைக்கல!” என்றவள், “சோறு வைக்கவா கொஞ்சம்?” என்றாள்.

“அதெப்படி நம்மாளுங்க கண்ணுல பாக்காம வாங்கும்? நான் கண் எதுக்க வெட்டும்போதே எலும்பு போடாத, கொழுப்பை போடாதன்னு ஆயிரத்தெட்டு கண்டிஷன் போடுங்களேன்” என்றவன் ஆச்சர்யமாய் கேட்டிட,

“ஏய், இதுல எலும்பு தனியா, கொழுப்பு தனியா, ஈரல், மூளை சுவரொட்டி… இன்னும் ஏன்? மீனு தலை தனியா கூட விக்குறாங்க! நம்ம என்ன வேணுன்னு சொன்னா மட்டும் போதும்!” என்றவள், “அட சாப்புடு, பாதி சாப்பாட்டுல உலட்டிட்டு இருக்க?” என்று கடிய, “எனக்கு போதும்” என்று எழுந்துக்கொண்டான் அண்ணாமலை.

“இந்த நாலு வாய் தின்ன தான் சீக்கிரம் போடு’ன்னு விரட்டுனியா என்னை?” முறைத்துக்கொண்டே கேட்டவள், அத்தனையும் எடுத்து வைத்தாள். அண்ணாமலை எதற்கும் பதில் சொல்லாமல் யோசனையோடு அமர்ந்திருக்க, “லோடு வந்ததும் இறக்கிட்டு வீடு வந்து சேரு… சுய்யம் செஞ்சு வைக்குறேன்” என்றவள் கூடையை தூக்கிக்கொண்டு கிளம்பப்போக, “ஏந்த?” என்று அழைத்தான் அண்ணா.

அவள் நிற்கவும், “இப்படி வீட்டுக்கே வந்து குடுத்துட்டு போறதுன்னா காசு நிறைய கேப்பானுவ தானே?” என்றான்.

“அப்படி எல்லாம் இல்லய்யா… பத்து இருபது கூட குறைச்சு வரும். அதுமில்லாம, அவனுங்க நிறைய ஆஃபர் எல்லாம் தருவானுங்க!” என்று சொல்ல, “ஓ!” என்றவனிடம், ஏதோ சொன்னவள் கிளம்பிவிட, அவன் யோசனை மாறாமலேயே அமர்ந்திருந்தான்.