நிம்மதியின் முகத்தில் இருந்த கடுகடுப்பு குறையவே இல்லை. நீடாமங்கலம் அருகே இருந்த அவனது குலதெய்வ கோவிலுக்கு அவனோடு சென்றபோதும் சரி, இதோ இப்போது ஊருக்கே கிடாவிருந்து போட்டுக்கொண்டிருக்கும்போதும் சரி, புது பெண்ணுக்குரிய அந்த வெட்கசிரிப்பு சுத்தமாக இல்லாமல் இறுகி போயிருந்தது.
ஆனால் அதற்கு எதிர்பதமாய் வழமையை விட இருமடங்கு சிரிப்புடன் வந்தவர்களை பார்த்து பார்த்து கவனித்துக்கொண்டிருந்தான் அண்ணாமலை. அவனுக்கு நிம்மதியை பார்க்க பார்க்க தன்னையறியாமல் உள்ளுக்குள் ஒரு குதூகலம். அவள் முகம் சுருங்க சுருங்க இவன் முகம் விரிந்தது.
“யப்பா… ஊருக்கே கறி சோறு போட எவ்வளவு ஆகிருக்கும்?” கையை கழுவிக்கொண்டே ஒருவர் ஆச்சர்யமாய் கேட்டதும், ‘அதனால என்ன இப்போ?’ என சந்தோசமாய் அவருக்கு பதில் சொல்ல அண்ணா வரும்போது, “அவனுக்கென்ன? அதான் மதி இருக்கே, காசுக்கா இனி கஷ்டம் வரபோவுது?” என்று அசட்டையாய் சொல்லிக்கொண்டே போனார் ஒருவர்.
அண்ணாவின் புன்னகை அங்கே குன்ற ஆரம்பித்தது. அதேபோலவே இன்னும் சில பேச்சுகள். அண்ணாவை குறைவாய் இறக்கி வைத்து பேசவில்லை என்றாலும், பெண்ணை சார்ந்து அவன் இருக்கிறான் என்பது போலவும், அவள் இருக்கையில் இனி அவனுக்கென்ன? என்பது போன்ற அவளை உயர்த்தும் பேச்சுகளும் அவனுக்கு ஒவ்வாமையை தான் கொடுத்தது.
பெண் முன்னேற கூடாது என்பது அல்ல அவன் எண்ணம்! அவளை வைத்து தான் அவன் என்றால், அவன் இத்தனை காலம் உழைத்ததெல்லாம் ஒன்றுமே இல்லாமல் போகிறதோ என்ற எண்ணம்!
அதே எண்ணம் நீடிக்க, ஆதரவற்றோர் இல்லத்துக்கு உணவை அனுப்பப்போவதாக வந்து நின்றான் பரத். நால்வரிடமும் சுத்தமாக பேசாமல் இருந்தவன், இப்போது ஏன் என்றால் என்ன? எனும் அளவுக்கு வந்திருந்தான்.
“நீயும் வரியா அண்ணா? இல்ல நானே போய் குடுத்துட்டு வரவா?” அவன் கேட்க, “என் கல்யாண சாப்பாடு. நீ மட்டும் போனா நல்லா இருக்காது” என்றவன், அங்கே கடைசி பந்தியில் இருக்கும் சிலரை ஐயப்பனையும் சேகரையும் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு நிம்மதியை அழைத்துக்கொண்டு சென்றான்.
இருவரையும் ஜோடியாய் பார்த்த பெரியவர்களுக்கு அத்தனை நிறைவு. அங்கிருக்கும் சிறு பிள்ளைகளுக்கு நிம்மதி தங்கள் தயாரிப்புகளை கணக்கின்றி வழங்கியிருக்க, பிள்ளைகள் எல்லாம் அவளை சுற்றிக்கொண்டது. எப்போதும் மாதம் ஒருமுறை இப்படி கொடுப்பாள் தான் என்றாலும், இது அவர்களுக்கு ‘போனஸ்’ அல்லவா?! அவள் தயாரிக்கும் பிஸ்கட்களுக்கு அத்தனை ரசிகர் பட்டாளம் அந்த சுற்றுவட்டாரத்தில்.
இப்படியே அடுத்து வந்த நாட்களும் ஓடியது. அவனுக்கு தன் மேல் பிடித்தமே இல்லையோ, கோபம் தான் இருக்கிறதோ என்றெல்லாம் பகல் முழுக்க அவன் நடத்தையில் அவள் குழம்பினால், அதற்கு அப்படியே நேர்மாறாய் இரவெல்லாம் அவளை கொஞ்சித்தீர்த்தான் அவன்.
உடல் தேவை, மோகம், ஆசை என்றெல்லாம் கூட எண்ண முடியாத அளவுக்கு அவன் கண்களில் காதல் கொட்டிக்கிடந்தது. அவனிடம் அதை கேட்டால், பதிலே இல்லாமல் அணைத்துக்கொள்வான் அவளை. இரவில் நல்ல விதமாய் இருப்பவனுக்கு பகலில் மட்டும் காத்து கருப்பு அன்டிவிடுமோ என்னவோ அருகே கூட வர மாட்டான். எந்நேரமும் கடை, அதைவிட்டால் அவன் வீடு, இரவுநேர கடை! மூன்று வேளை உணவு மட்டும் இவளிடம் தான். அவனே வந்து போட்டு உண்டுவிட்டு சென்றுவிடுவான்.
நிம்மதியின் பேக்டரியும் வழக்கத்திற்கு மீண்டுவிட்டது. புது பெண் என அவளை ஜாடை பேசி கிண்டலடித்துக்கொண்டே வேலை நடக்க, இவள் தான் அதை முழுதாய் அனுபவிக்க முடியாமல் திணறிக்கொண்டிருப்பாள்.
கோபமெல்லாம் தன்னால் மாறும், மாற்றுவோம் என அவளும் ஒவ்வொருநாளும் நினைக்க, அவன் என்னவோ கொஞ்சமும் மாறாமல், ‘போர்… ஆமாம் போர்’ என பகல் எல்லாம் முறுக்கிக்கொண்டே தான் திரிந்தான். அதோ இதோ என ஒரு மாதமும் நெருங்கிவிட்டது திருமணமாகி.
பிஸ்கட் பேக்கிங்கில் இருந்த நிம்மதிக்கு நினைவெல்லாம் கட்டியவனிடம் தான். திணை பிஸ்கட் டப்பாவில் கோதுமை பிஸ்கட்டை அடுக்கியவளை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டிருந்தனர் பெண்கள்.
‘ஐயோ அக்கா… டப்பா மாத்தி அடுக்குற நீ!” ஒரு குட்டிப்பெண் அவளை தட்ட, நிகழ்வுக்கு மீண்டவள், செய்த வேலையை பார்த்து, ‘ப்ச்’ என சலித்தபடி தள்ளி போய் சுவரில் சாய்ந்து அமர்ந்தாள்.
“என்ன மதி? ரொம்ப தான் அலுத்துக்குறியே!” ஒருத்தி கேட்க, அவள் ஒன்றுமே சொல்லவில்லை.
“விடு டி மாலா, அசதி இருக்கும்ல புள்ளைக்கு” அக்கறை போல சொன்னாலும் அதிலும் நக்கல் இருந்தது.
“அம்மாடி, ஒரு மாசமே ஆகியும் அசதியா?” கேட்டவளிடமும் நக்கலுக்கு பஞ்சமில்லை.
அப்போது வீட்டின் பின்னே சத்தம் கேட்க, குட்டிப்பெண் ஓடி சென்று பார்த்துவிட்டு, “அக்கா, அண்ணா மாமா வந்துருக்கு” என்றாள். கேட்டவள் எழுந்துக்கொள்ளாமல் அப்படியே அமர்ந்திருக்க, “அதான் அண்ணா வந்துருக்குன்னு பாப்பா சொல்லுதே! பாய்ஞ்சு ஓடுனா நாங்க கிண்டலடிப்போம்ன்னு பயந்துக்கிட்டு இருக்கியோ?” என்று மாலா சிரிக்க,
“விரைசா ஓடு, நாங்க கண்ணை மூடிக்குறோம்!” என்று நக்கலடித்தாள் சீதா.
பெண்கள் எல்லாம் சிரித்துக்கொண்டிருக்க, நிம்மதி அப்படியே இருந்தாள். வருத்தமா? கோவமா? அயர்வா? ஆதங்கமா? என அவள் உணர்வுக்கு பெயரே வைக்க இயலாத நிலையில் இருந்தாள்.
அவன் அவளை கஷ்டப்படுத்தவில்லை, கொடுமை செய்யவில்லை. ஆனால், ஏதோ செய்கிறான்! முன்புமே இப்படி தானே? கண்டுக்கொள்ளவே மாட்டான், பேசினாலும் பதில் இருக்காது, அவள் இருக்கும் இடத்தில் கூட நிற்க மாட்டான். அப்போதெல்லாம் வாடாத அவள் மனது இப்போது எதையோ எதிர்பார்த்து அது கிடைக்காததில் ஏமாறுகிறது. அத்தனையும் மனதில் வைத்துக்கொண்டு இருந்தாலும், இரவு அவன் தன்னை ஆசையாய் தொடும்போது அத்தனையும் மறந்துபோகிறது அவளுக்கு.
சூடு சுரணை எல்லாம் இல்லாமலே போய்விட்டதா? என்று கூட சந்தேகம் இப்போதெல்லாம்!
“அடியே, என்ன கனா காணுறியா? புருஷன் வந்துட்டானாம்… போய் கவனி” சற்று வயதில் மூத்த விஜயா சொல்ல, “ப்ச், அவரே சாப்பிட்டுப்பாரு க்கா” என்றாள் மதி. அப்படி சொன்னவளை பெண்கள் நால்வரும் திகைத்துப்பார்த்தனர்.
“குறைஞ்சது ஆறுமாசத்துக்காது புருஷன்க்கிட்ட சலிப்பு வரக்கூடாதுடி… நீ என்னன்னா ஒரு மாசம் முடியக்குள்ளையே இந்த சலி சலிச்சுக்குற?” மாலா கேட்க, “சலிப்பெல்லாம் இல்ல… அவருக்கு வேணுங்குறது அவரே போட்டு சாப்பிட்டுப்பாரு! நான் போனாலும் சுவத்தை தான் வெறிச்சுக்கிட்டு இருக்கணும்” அவள் சொல்ல, இப்போது விஜயா, “நீங்க சரியா தானே இருக்கீங்க?” என்றார்.
அவர் ‘எதை’ கேட்கிறார் என புரியாதா அவளுக்கு?!
“அதுக்கெல்லாம் ஒரு குறையும் இல்ல க்கா!” அவள் இப்படி சொன்னதும் தான் பெண்களுக்கு இயல்பு நிலையே மீண்டது.
“அப்புறம் என்னவான்டி உனக்கு? சும்மா அவன்கிட்ட முறைச்சுக்கிட்டே நிக்காத முன்ன மாறி. புது பொண்டாட்டியா லட்சணமா கொஞ்சம் பதமா நடந்துக்க” சீதா சொல்ல, “நான் முறைக்குறேன். நீ பார்த்த!? கம்முன்னு இரு, கடுப்ப கிளப்பிக்கிட்டு!” சலித்தாள் மதி.
“இங்க பாரு மதி. புருஷன் வீட்டுக்கு வந்ததும், பொண்டாட்டியை பார்த்து சிரிக்குறதெல்லாம் கல்யாணம் ஆன புதுசுல மட்டும் தான்! அதுக்கு பிறகு எல்லாம், வாசல்ல செருப்ப கழட்டும்போதே வாச கூட்டலையா? குப்ப கொட்டலையா? துணி மடிக்கலையா? பாத்திரம் விளக்கலையா?ன்னு கேள்வி மட்டும் தான் அந்த பக்கம் இருந்து வரும்.
காலைல இருந்து பாக்காத மனுஷன் வீட்டுக்கு வரப்போ நம்மளை அறியாம வர சிரிப்பு கூட அந்தாளு கேட்குற கேள்வில ‘நீ எல்லாம் வீட்டுக்கு வரலன்னு எவடா அழுதது?’ ன்னு கடுப்பா மாறிடும். இப்போ நம்ம செய்யலன்னா என்ன? அவங்களா செய்ய போறாங்க? டீ குடிச்சுட்டு வச்ச டம்ளர் கூட நாலு நாள் ஆனாலும் நம்ம தான் எடுத்துப்போட்டு கழுவனும். ஆனா கேள்வி மட்டும் வக்கனையா வரும். என்னவோ அவர் பெரிய கலெக்டரு மாறியும், நம்ம அவருக்கு கீழ ஊழியம் பாக்குற மாறியும்!” என்று விஜயா சொல்ல, கண் கொட்டாமல் கேட்டுக்கொண்டிருந்தாள் நிம்மதி.
“புருஷன் எப்போடா வீட்டுக்கு வருவான்?’ங்குறதுல ஆரம்பிச்சு, ‘எதுக்குடா வரான்?’ங்குறதுல முடிஞ்சுடுது பொண்ணோட கல்யாண வாழ்க்கை!” மாலா சொல்ல, ‘ச்ச ச்ச! எல்லாரும் அப்படி இல்ல, நான் என் புருஷனை அப்டி எல்லாம் நினைக்க மாட்டேன்’ என்று எண்ணிக்கொண்டாள் மதி.
“புருஷன் சிரிப்பெல்லாம் கிடைக்குற நேரம் வாங்கி கண்ணை ரொப்பிக்க! வீம்பு பிடிச்சு இப்போ உட்காந்துட்டு பின்னாடி நினைச்சு பார்க்க ஒன்னும் இல்லாம பொலம்புவ” சீதா சொல்ல, ‘கொஞ்சம் ஓவரா தான் சொல்றாங்க!’ என்று நினைத்தபடி எழுந்துக்கொண்டாள்.
இத்தனை பேச்சையும் மீறி அவள் அங்கேயே இருந்தால், இன்னமும் பேசுவதோடு உடன் வேறு சிலரும் சேர்ந்து அவள் காதை ஓட்டை போடுவார்கள் என்று புரிந்து எழுந்தாள்.
இவர்கள் தொல்லைக்கு அண்ணாவே தேவலாம் என்ற எண்ணம் அவளை வீட்டிற்குள் நுழைய வைத்தது. அங்கே தரையில் சம்மணமிட்டு அமர்ந்து உண்டுக்கொண்டிருந்தான் அண்ணாமலை.
இவள் வந்ததும் கீழ்க்கண்ணால் அவள் பாதத்தை பார்த்தவன், நிமிராமல் உணவை தொடர்ந்தான். அவனுக்கு எதிரே போய் ஒன்றும் பேசாமல் அமர்ந்துக்கொண்டாள். நாலு வாய் உண்டவனுக்கு அவள் அமைதி உறுத்தியது. எதையாவது வேண்டுமென்றே கேட்டு அவன் வாயை பிடுங்க பார்ப்பவள் அமைதி அவனை நெருட, “ரசம் இருந்தா ஊத்து” என்றான் தட்டை பார்த்தபடி.
‘தன்னிடமா பேசினான்?’ என வியப்பாய் பார்த்தவள், அவன் பார்வை தட்டிலேயே இருப்பது கண்டு எரிச்சல் வர, “நான் இல்லன்னா என்ன பண்ணிருப்ப?” என்றாள். இப்போது அவளை நேராய் முறைத்தான்.
‘முறைப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல’ என்று முனகியவள் வெடுக்கென எழுந்து சென்று கடுகடுவென முகத்தை வைத்துக்கொண்டே ரசத்தை ஊற்ற, “மூஞ்ச இப்படி வச்சுக்கிட்டு ஊத்துனா ரசம் கூட விசம் மாறி இருக்கும்” என்றவனை இன்னும் தான் முறைத்தாள்.
அவள் முறைப்பை தொட்டுக்கொண்டு ரசத்தை உண்டு முடித்து நிம்மதியாய் சுவரில் சாய்ந்து கால் நீட்டினான் அண்ணாமலை.
பாத்திரங்களை எடுத்து வைத்தவள், வீட்டை விட்டு வெளியே செல்லப்போக, “வேலை கடக்கா என்ன?” என்றான். அவன் பேச்சில் நின்றவள், “நான் போய் தான் கட்டி நிமுத்தனும்ன்னு ஒன்னும் இல்ல” என்றாள் எங்கோ பார்த்து.
“அப்ப என் பக்கத்துல சித்த உக்காருறது!” சலுகையாய் தரையை தட்டிக்காட்டினான் அண்ணா. முறைப்புடனே வந்து அமர்ந்தவள் முகத்தை தூக்கி வைத்திருந்தாள்.
“கதவை சாத்தி வைக்கவும் வீடே ராத்திரி மாறி இருக்குல?” அவன் கேட்க, “ம்ம்” என்று சொன்னவளுக்கு, பிறகு தான் பொறி தட்ட, “இப்ப என்ன அதுக்கு?” என்றாள் அவன் புறம் எகிறிக்கொண்டு.
“சும்ம்ம்மா… சொன்னேன்” அவன் நாவை கன்னத்தில் அதக்கி, சிரிப்பை மறைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.
“ப்பா… கறி வெட்டி வெட்டி இந்த கையே வலி…” என்றவன், மெல்ல கையை உயர்த்தி அவள் தோள் மீது போட, வெடுக்கென திரும்பி முறைத்தாள் அவள்.
“என்ன? என்ன பார்வை? இப்ப கையை எடுக்கணுமா நானு?” அவன் மிடுக்காய் கேட்க, அவள் முறைப்பை தொடர, “ஆசைக்கு இல்லம்மா, அசதிக்கு!” என்றவன் இன்னும் வசதியாய் கையை வைத்துக்கொண்டான்.
அவளாலும் தன் வீராப்பை இழுத்துப்பிடிக்க முடியவில்லை. ஆனாலும் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு அமர்ந்திருக்க, “திருவாரூர் வரைக்கும் போற வேலை இருக்கு, துணைக்கு வரியா?” என்றான்.
“என்னத்துக்காம்?”
“ஆறு மணி ஆட்டம் பார்த்துட்டு அப்டியே கொத்து பரோட்டா தின்னுட்டு வீட்டுக்கு வந்துடலாம்!” அவன் சொல்ல, “நீ என்ன வேலையா போறன்னு கேட்டேன் நானு!” என்றாள் அவள்.
“ஒரு பிச்சைக்காரிக்கு சோறு வாங்கி தரேன்னு வேண்டிக்கிட்டேன், அதான் உன்னை கூப்பிடுறேன்! வரதுன்னா வா, இல்லனா நான் வேற பிச்சைக்காரி தேடிக்குறேன்” அவன் சொன்ன மாத்திரத்தில், அவனை சரமாரியாய் அடிக்க ஆரம்பித்தாள் நிம்மதி.
“நான் உனக்கு பிச்சைக்காரியா? சொல்லுடா! பொண்டாட்டியை ஆசையா எல்லாம் கூப்புட முடியாதுல உனக்கு?” கேட்டுக்கொண்டே அவள் அடிக்க, அவன் சிரித்துக்கொண்டே வாங்க, முகத்தை தூக்கிவைத்துக்கொண்டு என்றாலும், மாலையில் கொள்ளை எதிர்ப்பார்ப்புடன் கிளம்பி நின்றாள் நிம்மதி. அவளை அழைத்துக்கொண்டு சென்றவனும் அவளை சற்றும் ஏமாற்றாமல் அவள் மனம் நிறைய சந்தோசத்தை மட்டுமே கொடுத்து அழைத்து வந்தான்.
அந்த வாரத்தில் அரசு அதிகாரிகள் ‘மீன் பிடி திருவிழாவுக்கு’ நாள் கொடுத்தனர். ஊராட்கள் வலை, மூங்கில் கூடை என எடுத்துகொண்டு ஆர்வத்துடன் குளத்தை அடைந்தனர். ஆண் பெண் பேதமின்றி அத்தனை பேரும் குளத்தில் இறங்கி மீன் பிடிக்க, மீன் சிக்கியதோ இல்லையோ அங்கே ஆரவாரமும் ஆர்ப்பாட்டமும் மட்டும் அளவில்லாமல் இருந்தது.
வீரப்பன் தன் இரு அல்லக்கைகளோடு ஒரு பக்கம் மீன்பிடித்தான். பாண்டியன் அவனை கழட்டிவிட்டதில் ஆள்பலம் குறைந்ததும், அவன் சத்தமும் குறைந்து தான் இருந்தது.
இங்கே வேட்டியை சுருட்டிக்கட்டி தண்ணீரும் சேரும் சேர மீன்பிடித்துக்கொண்டிருந்த அண்ணாவை விழிகள் நிறக்க பார்த்துக்கொண்டிருந்தாள் நிம்மதி. ஒன்னரை மாதங்களை நெருங்கியிருக்க, அவன் இயல்போடு இப்போது பொருந்திப்போயிருந்தாள். அவன் முறைப்பெல்லாம் இப்போது அவளுக்கு தூசு போல இருந்தது. எவ்வளவு முறைத்தாலும், தன்னிடம் ஒட்டாமல் எட்டியிருந்தாலும், இருவருக்குமான தனிமையில் அவன் காட்டும் முகம் வார்த்தையின்றி அவன் காதலை சொன்னது அவளுக்கு. அதை வாய்வழி ஒப்புக்கொள்ள தான் அவன் வீம்பு அவனை விடவில்லை.
ஆனாலும், ‘உன் வாயால் சொல்ல வைத்தே தீருவேன்’ என்ற பிடிவாதம் அவளுள் சத்தமின்றி முளைத்திருந்தது.
எல்லோருக்கும் சேர்ந்து குளத்தை குடைய, மீன்கள் எல்லாம் ஓடி ஒளிய, அதை பிடிப்பதே பெரும்பாடாக இருக்க, சட்டென ஒரு கூச்சல்.
“ஏய்….ஈஈஈஈ” என்ற ஆர்ப்பாட்டமான ஆர்ப்பரிப்பு.
மண்ணில் அமர்ந்திருந்த மதி வேகமாய் எழுந்து சற்று அருகே சென்று கூட்டத்தை பார்க்க, நல்ல கனமான பெரிய மீன் ஒன்றை ஒரு கரம் உயர்த்தி பிடித்திருந்தது. அதற்கு தான் அந்த ஆர்ப்பாட்டம் என்று புரிய, சுற்றி இருந்த கூட்டம் சற்று விலகியதில் அந்த கரம் தன்னவனுடையது என்று விளங்க, நிம்மதி முகத்தில் மத்தாப்பு ஒளி.
அவனோ அயர்வை மீறிய புன்னகையுடன் அந்த மீனை தூக்கிக்கொண்டு அவளிடம் தான் வந்தான். அவள் பார்க்கவே, அவளிடம் நீட்டியவன், “மீன் சாப்பிட ஆசைப்பட்டல்ல… புடி!” என்றான்.
அவள் எப்போது ஆசைப்பட்டாள் என்று அவளுக்கே மறந்திருக்க, அவன் இப்படி சொல்லி நீட்டியதில் விண்ணில் தான் பறந்தாள் அவள்.