அவன் கோபம் யாருக்கு புரிந்ததோ இல்லையோ நிம்மதிக்கு நன்றாகவே புரிந்தது.
‘இன்னைக்கு தான் இறங்கி வந்தான், திரும்ப மலையேறிடுவானோ?’ என்ற பதைப்பில் அவள் இருக்க, “இப்ப நான் என்ன செய்யணும்?” என்றான் அவன் அடக்கி வைத்த ஆத்திரத்துடன்.
“என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கணும்” என்று தாஸ் சொல்ல, அவரை சில நொடிகள் அசையாமல் பார்த்தவன், “பண்ணிக்குறேன்!” என்றுவிட்டான்.
அவனிடம் நிறைய போராட வேண்டும் என்று நினைத்தவருக்கு அவன் இப்படி உடனே சம்மதித்தது ஆச்சர்யம் கொடுக்க, அடுத்த என்ன பேச என்று தெரியாமல் அவர் தடுமாறி நிற்க, “அப்புறம் என்னப்பா? பையன் தான் சரினுட்டானே? உடனே ஆக வேண்டிய வேலையை பாக்க வேண்டியது தானே…!?” என்று ஊரார் கேட்டிட, அதற்குமேல் அண்ணாமலை அங்கே நிற்கவில்லை.
உர்ரென்று முகத்துடன் அங்கிருந்து சென்றவன், அடுத்த பத்து நாட்களில் கேடிலியப்பர் கோவில் மண்டபத்தில் நிம்மதியின் அருகே மணமகனாய் அமர்ந்தபோதும் கூட தன் முகத்தை மாற்றிக்கொள்ளவில்லை.
போட்டோக்ராபர் கூட, “கொஞ்சம் சிரிச்ச மாறி இருங்க சார்!” என்று சொல்ல, அதற்கும் அவன் அசையாது அப்படியே இருக்க, “அந்தாளு மூஞ்சே அப்படிதான், நீங்க எடுங்க” என்றுவிட்டு தன்னருகே ‘ஈஈ’ என அத்தனை பற்களையும் காட்டிக்கொண்டு சிரிப்பவளை பார்த்து இன்னமும் தான் அவன் முகம் உர்றென்றாகி போனது.
இந்த பத்து நாட்களில் அவன் கோபத்தை குறையாமல் பார்த்துக்கொண்ட புண்ணியம் ஆழியூர் அய்யாக்கண்ணுவை தான் சேரும். அவனை ஒரு முறை எதேச்சையாய் அண்ணாமலை பார்த்துவிட, “எல்லாம் மதி’ப்புள்ள சொன்ன மாறியே நடந்துச்சு போல அண்ணா” என்றான் அவன் சிரித்துக்கொண்டு.
இவன் புரியாமல முழிக்க, “அதான்… நீ காசு கேட்டா குடுக்க வேண்டாம், நானே குடுத்துக்குறேன்… நீ கடைசி வர தாக்கல் மட்டும் சொல்லுன்னு பாப்பா சொல்லுச்சு… ஏன்னு கேட்டதுக்கு எங்களுக்கு கல்யாணம் ஆகணும்ன்னா நீ காசு குடுக்காத, அவ்ளோதாங்கவும் சரின்னு நானும் அது சொன்னதை செஞ்சேன்!” என்றவன்,
“பரவாலையே… சொன்னமாறியே உன்னை கட்டிக்கப்போகுதே!” என்று பெருமையாய் சொன்னதோடு, “அவளை மாறி புள்ள கிடைக்குமா உனக்கு? இந்த வயசுக்கே என்னமா தொழில் பாக்குது? இந்த பாரு, பத்திரிக்கைல பேட்டி எல்லாம் கூட வந்துருக்கு” என்று வார இதழை நீட்டினான் அவன்.
புத்தகத்தின் நடுப்பக்கத்தில் ‘சாதிக்கும் பெண்கள்’ என்ற தலைப்பில் கம்பீரமாய் சிரித்துக்கொண்டிருந்தாள் நிம்மதி.
“நல்ல பசையான இடம்… அம்சமான பொண்ணு… நீ உருண்டு பொறண்டாலும் கிடைக்காது தெரியும்ல?” என்றவன், என்னவோ இவன் ஒரு பெரும் அதிர்ஷடக்காரன் என்பதை போல சொல்லிவிட்டு தோளில் தட்டிவிட்டு சென்றான்.
‘இவள் தன்னை திட்டமிட்டே வீழ்த்தியிருக்கிறாள்!’ என்ற எண்ணம் அவன் மனதில் ஆழ விழுந்துப்போனது.
அதை மேலும் ஊதி பெரிதாக்கவவே, அவனை பார்ப்பவர்கள் எல்லாம், ‘நீ புண்ணியம் செய்தவன், நிம்மதி போன்ற பெண்ணை அடைய’ என்று புகழ்ந்துவிட்டு போக, ‘நான் என்ன அவ்ளோ மோசமாடா? அவ புண்ணியம் பண்ணவ இல்லையா அப்போ?’ என்று கடுப்பு ஏகத்துக்கும் ஏறியது.
அதன் விளைவாய் தாலி கட்டும்போது கூட சிரிப்பு சென்டிமீட்டர் அளவு கூட எட்டிப்பார்க்கவில்லை.
அவனை நெருங்கவே அஞ்சி சற்று ஒதுங்கி தான் நின்றிருந்தனர் அவன் சகாக்கள் நால்வரும். இடைப்பட்ட இத்தனை நாட்களில் அவர்களிடம் கூட அவன் எந்த பேச்சும் வைத்துக்கொள்ளவில்லை. எதைக்கேட்டாலும் முறைப்பு தான்!
திருமணம் முடிந்ததும் நேராக அண்ணாமலையின் வீட்டிற்கு வந்து விளக்கேற்றினாள் நிம்மதி. சற்று நேரம் அவர்கள் இளைப்பாற, அண்ணா ஒரு பெட்டியுடன் வந்தான்.
வந்தவன், “இனி நான் மதி வீட்டுல தங்கிக்குறேன்! இங்க அவ இருக்கிறது சரிப்படாது!” என்றவன், “யோவ் மாமா… நீர் இங்க இடம் மாறிக்கும்” என்றான் தாஸிடம்.
யாரும் எதுவும் பேசவில்லை. இது இப்படி தான் என்று முன்னவே நினைத்தது தான். மதி வீட்டிற்கும் இவன் வீட்டிற்கும் பெரிய தொலைவு இல்லை என்பதால் இந்த இடமாற்றம் ஒன்றும் அத்தனை பாதிப்பை ஏற்ப்படுத்தவில்லை. ஆனால், அவனது பாராமுகத்தோடு கூடிய இடமாற்றம் தான் அந்த நால்வரையும் வாட்டியது.
அவனுக்காக சபையில் பேசாததற்கு தான் கோவம் என்றாலும், அவன் ஐயப்பன், சேகரை தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லையே! அவர்கள் தான் அப்போது வீட்டிற்கு சென்றிருந்தனரே! என்ன காரணம் என்றும் தெரியாமல் எப்படி மன்னிப்பு கேட்பது என்றும் புரியாமல் வளர்ந்த குழந்தைகளாய் தவித்து நின்றவர்களை திரும்பியும் பாராது வாசலுக்கு போய்விட்டான் அண்ணாமலை.
‘நான் பாத்துக்குறேன்’ என்று கண்களால் சொன்ன மதியும் அவனோடு அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.
அதன்பிறகு ஊருக்கே கல்யாண சாப்பாடு! குழந்தைகளுக்கு ‘கல்யாண ஸ்பெஷல் பிஸ்கட்ஸ்’ என அமர்களப்பட்டது. ‘மாப்பிள்ளை’ ‘புதுப்பெண்’ என்ற பாகுபாடின்றி அத்தனை வேலைகளையும் இறங்கி செய்தனர் மற்றவரோடு!
நேரம் போக போக, மதிக்கு ஒரு பதட்டம். தனிமையில் கேள்வி கேட்பானோ? அடிப்பானோ? முதல் நாளே சண்டை வருமோ? என்று அச்சம் எழுந்தது. ஊர் பெண்கள் வழிக்காட்டலில் குளித்து புது புடவை அணிந்து சாமியை வணங்கியவள், பாலை காய்ச்சிக்கொண்டு சிந்தனையோடு நின்றாள்.
வெளியே காத்து பலமாக வீச, ஜன்னலை இழுத்து அடைத்து தாழிட்டாள். சற்று நேரத்தில் இடியும் இடிக்க, ‘மழை வருமோ?’ என்று அவள் நினைத்தபோதே மின்சாரம் தடைப்பட்டது.
‘இது வேற நேரம் காலம் தெரியாம?’ சலித்துக்கொண்டு விரித்திருந்த கல்யாணம் பாயை பார்த்துக்கொண்டு ஒரு ஓரமாய் அமர்ந்தாள். நல்ல கனமான பாயில் ‘ஆல் தி பெஸ்ட்’ என எழுதியிருந்தது.
‘எதுக்காம்?’ என்று தோன்றும்போதே சிரிப்பும் வந்தது.
முன்னே இருந்த பேக்டரி வீட்டை பூட்டிவிட்டு, பின்னே இருக்கும் சின்ன வீட்டில் தான் இருந்தாள். இருவர் மட்டுமே புழங்கக்கூடிய தனியறை கூட இல்லாத ஒரு விராந்தையுடன் கூட தடுப்பு வைத்த அடுக்களை அமைப்பு! அவ்வளவு தான் வீடே!
வெகு விசாலமாய் வசதியாய் இருக்கும் பெரிய வீட்டை தான் பேக்டரி ஆக்கிவிட்டார்களே! அதன் மேலே ஒரு மாடி எழுப்பி வசதியாக குடிப்போகவேண்டும் இனி’ என்று எண்ணிக்கொண்டாள்.
குழந்தைகள் வந்துவிட்டால் இந்த புறாகூண்டில் எல்லாம் வைத்து பராமரிக்க முடியாது என்று தோன்ற, முதல் இரவே இங்கு கேள்விக்குறி எனும்போது, ‘உனக்கு ஆசைய பாரு’ என அவள் மனமே அவளை குமட்டில் குத்தியது.
சிரித்துக்கொண்டே மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அவள் அமர்ந்திருக்க, வெளியே மழை தூர ஆரம்பித்ததை அந்த ஓட்டு வீட்டில் நன்றாகவே உணர முடிந்தது. ஓடுகளுக்கு நடுவே இருந்த கண்ணாடி வழி வானை அவள் பார்க்க, படக்கென கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தான் அண்ணாமலை. பதறிக்கொண்டு எழுந்து நின்றாள் நிம்மதி.
என்னதான் வீரமாய் பேசினாலும், தெரிந்தவனே, மனதுக்கு பிடித்தவனே ஆயினும், இந்த நேரத்தில், இருட்டில், தனிமையில் ஒரு ஆண்மகனை எதிர்க்கொள்ளும்போது தன்னையறியாமல் நடுங்க தான் செய்தது அவளுக்கு.
மழைக்கு பயந்து வேகவேகமாய் ஓடிவந்தவன், தன்னை கண்டதும் எழுந்து நின்றவளை பார்த்தான். மஞ்சள் நிற புடவையில் தலை நிறைய மல்லிப்பூ வைத்து, புத்தம் புது தாலி மின்ன நின்றவளை பார்த்தபோது, வெளியே இருந்த குளிருக்கு மாறாய் உடல் உஷ்ணம் ஏறத்தான் செய்தது.
எல்லாம் சில நொடிகள் தான்! சட்டென பார்வையை மாற்றிக்கொண்டவன், “துண்டு குடு” என்றான், கையால் தலையை சிலுப்பிவிட்டபடி.
வேகமாய் கொடியில் கிடந்த துண்டையே எடுத்து அவனிடம் நீட்ட, வாங்கி நன்றாக துவட்டியவன், லேசாக நனைந்திருந்த சட்டையை கழட்டி உதறிவிட்டு,அதை எங்கே போடுவதென பார்க்க, ‘குடு’ என்று கை நீட்டினாள் மதி.
அவளிடம் கொடுத்தவன், பனியன் வேட்டி சகிதம் சுவரோரமாய் அமர்ந்துவிட, காய்ச்சிய பாலை இளஞ்சூட்டில் கொண்டு வந்து நீட்டினாள் மதி.
நிமிர்ந்து பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் வாங்கிக்கொண்டான். அவன் வாய் எப்போது திறக்குமோ என்ற பதைப்பில் தான் நின்றிருந்தாள் பெண். ஒரு வார்த்தை பேசாமல் பாலை குடித்து முடித்தவன், அவளிடம் குவளையை நீட்ட, வாங்கிக்கொண்டு உள்ளே போக திரும்பியவளை,
“சாதிச்சுட்டீள்ள?” என்ற அவன் வார்த்தை நிறுத்தியது.
‘ஆரம்பிச்சுட்டான்’ என்று நினைத்தவள், அப்படியே நிற்க, “ஊருக்கு முன்ன நிறுத்தி வச்சு, காசு வாங்கிட்டான்னு உங்கப்பன் சொல்றான்… நீயும் வாயை திறக்காம அப்படியே நிக்குற” அவன் அவளை தீர்க்கமாய் பார்த்துக்கொண்டு கேட்க, டம்ளரை வைத்துவிட்டு வந்து அவன் எதிரே அமர்ந்தவள், “நான் வேணுன்னு பண்ணலைய்யா” என்று ஆரம்பிக்கும்போதே,
“அய்யாக்கண்ணு சொன்னான்!” என்று ஒற்றை வரியில் அவள் பேச்சை அப்படியே நிறுத்திவிட்டான் அண்ணாமலை.
‘அதை அவள் வேண்டுமென்றே தானே செய்தாள்… எப்படி இதை சமாளிக்க முடியும்’ என்று தோன்ற, ‘அடேய் அரைவேக்காடு அய்யாக்கண்ணு, உனக்கு இருக்குடா சாவுகிராக்கி’ என்று பல்லிடுக்கில் அவள் திட்டும்போதே, “காசுக்காக தான் உன்னை கட்டிக்கிட்டேன்னு ஊரு முழுக்க சொல்லாம சொல்லிட்டீல்ல!” என்றவன் பேச்சில் கோவத்தை விட வருத்தம் தான் இருப்பதை போல தெரிந்தது அவளுக்கு.
அவன் முகத்தையே பார்த்துக்கொண்டு அவள் வார்த்தையின்றி இருக்க, அவனுமே அவளைத்தான் பார்த்திருந்தான்.
ஒரு காலை நீட்டி, மறு காலை மடக்கி அதன் மீது கை வைத்திருந்தவனின் அருகே நெருங்கியவள், மெள்ள, “கோவிச்சுக்காதய்யா!” என்று கரம் தொட, அலுப்பாய் தன் கையை உருவிக்கொண்டவன், முகத்தை திருப்பினான்.
“கோவத்தை உள்ளயே வச்சுக்காதய்யா… அதான் கல்யாணம் ஆகிடுச்சுல்ல… என்மேல கோவப்பட்டுட்டே கூட இரு, கொஞ்ச நாள்ல எல்லாம் சரியா போகும்” அவள் ஆறுதலாய் சொல்ல, முறைத்தவன், “பின்ன, உன்னோட சிரிச்சு சந்தோசமா இருக்கத்தான் தாலி கட்டுனேன்னு நினைச்சியா?” என்றான்.
அதில் ஒரு நொடி முகம் இருண்டாலும், சமாளித்து, “வில்லன் பேச்செல்லாம் பேசாத, உனக்கு அது வராது” என்று சிரித்தாள்.
“இத்தனை நாள் நான் தள்ளி நின்னதுக்கும், இனிமே நான் கூட இருக்குறதும் எந்த வித்தியாசமும் இருக்க போறதில்ல” அவன் சொல்ல, “அப்படின்னா?” என்றாள் கேள்வியாய்.
எழுந்து நின்றவன், “அப்டின்னா… அப்டி தான்” என்றுவிட்டு கதவை திறக்க, வெளியே மழை கொட்டியது.
அப்படியே திண்ணையில் அமர்ந்தவன், “நீ படு… நான் இங்கேயே சாஞ்சுக்குறேன்” என்றுவிட்டு படுக்க, இவள் ‘என்னடா இது?’ என்ற ரீதியில் அமர்ந்திருந்தாள்.
‘தவறு செய்துவிட்டோமோ? பேசியிருக்க வேண்டுமோ? இனி நெருங்கவே மாட்டானோ?’ இப்படி பலதும் தோன்ற சஞ்சலத்துடன் சிறுது நேரம் இருந்தவள், பெரிதாக இடித்த இடி சத்தத்தில் திடுக்கிட்டு வெளியே சென்றாள்.
அவன் கையை கண்ணுக்கு மறைவாய் வைத்து படுத்திருந்தான். பாதி திண்ணையை மழை சாரல் ஆக்கிரமித்திருந்தது. எப்படியும் அவன் மேனியை குளிர்காற்றும் சாரலும் தீண்டாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் அசையாது கிடந்தான்.
“எந்திரி இங்கிருந்து…” அவள் சொன்னதற்கு அவனிடம் பதில் இல்லை.
“இப்படியே கடந்தின்னா, காலைல ஜன்னி வந்து தான் போவ! அப்பறம் எங்கிருந்து என்னோட சண்டை புடிக்க?” என்று கேட்டதும், கையை விலக்கி முறைத்தவன், அமைதியாய் எழுந்து உள்ளே வந்து ஒரு ஓரமாய் படுத்துவிட்டான். இவளும் மறு ஓரத்தில் அவனை பார்த்தபடி படுத்துவிட, இருவருக்கும் நடுவே ‘கல்யாண பாய்’ கவனிப்பாரன்றி கிடந்தது.