10

ஏலம் ஆரம்பித்தபோது வீரப்பனுக்கு போட்டியாய் இன்னும் சிலரும் கேட்க ஆரம்பிக்க, விலை மூன்று லட்சத்தை நெருங்கியது.  மூன்றை தாண்டியபோது, ஏலம் கேட்கும் குரல்கள் ஒன்று இரண்டாக குறைந்துப்போனது. மூன்று, மூன்றரை லட்சத்தை தொட்டபோது வீரப்பனின் குரல் தான் ஓங்கி ஒலித்தது.

அத்தனை நேரமும் குனிந்த தலை நிமிராமல் எதையோ யோசித்தவனாகவே அமர்ந்திருந்தான் அண்ணாமலை.

“காசு வச்சுக்கிட்டு ஏன்டா ஏலம் கேக்க மாட்டேங்குற? நான் வேணுனா கேட்கவா?” என்று பரத் கேட்டதற்கு கூட பதில் சொல்லாமல் அவன் கையை தடுத்து பிடித்தான் அண்ணாமலை. கூட்டத்தோடு ஒரு ஆளாய் நின்றிருந்த நிம்மதிக்கு கண்கள் எல்லாம் கண்ணாளன் மீது தான்.

என்னவோ அவன் புதிதாக தெரிந்தான். எப்போதும் அவளை கண்டால் விரட்டுவதும் விலகிப்போவதுமாக அவன் இருக்கும்போதே அவன் மீது தீரா பித்து அவளுக்கு. இப்போது அவளை தேடி வருவதும், கட்டிக்கொள்வோம் என மறைமுகமாய் சொல்வதுமாய் இருப்பவனை பிடிக்காமல் போகுமா என்ன!? அதையும் விட, ஏலம் எடுப்பத்தில் அத்தனை முனைப்பு காட்டியவன், தான் சொல்லிய வார்த்தைக்காக மௌனித்து அமர்ந்திருந்த கோலம், அவளை அவன் பால் கட்டி இழுத்தது.

கலாச்சார காப்பாளர்கள் மட்டும் சற்று ஒதுங்கிப்போய்விட்டால், அப்போதே அக்கணமே கூட அவனை கட்டிப்பிடித்து கசக்கிவிடும் பேராவல் உண்டு அவளுக்கு.

“யப்பா, மூணு லட்சத்தி அம்பதாயிரம் சொல்லிருக்காங்க… மேற்கொண்டு கேக்குறவங்க இருக்கீங்களா?” என்றார் அதிகாரி.

“ஏய் என்னடா? கேக்குறாங்க பாரு” நந்தா நாலு அடி தள்ளி இருந்தவனிடம் கத்தினான்.

“அப்போ பாண்டியனுக்கே ஏலத்தை குடுக்கலாம்ன்னு முடிவு செஞ்சுடலாமா?” அவர் மீண்டும் கேட்க, “வாயை திறந்து பேசு அண்ணா” என்று கடுப்படித்தான் பரத். நிமிர்ந்த அண்ணாவின் கண்கள் நிம்மதியை தான் தேடியது. அவளை கண்டதும், அவன் அப்படியே பார்த்தபடி இருக்க, ‘இல்லை’ என்று மறுப்பாய் தலையசைத்தாள் அவள்.

வெகு நேரம் யோசனையில் சுருங்கிக்கிடந்த அவன் புருவங்கள் தெளிந்தது.

“இல்லடா, நம்ம ஏலம் எடுக்கல” என்று அண்ணா சொன்னதும், நால்வருக்குமே நிம்மதியானாலும், இத்தனை தூரம் வந்துவிட்டு அமைதியாய் திரும்பிவிட்டால், இனி அந்த வீரப்பனின் ஆட்டம் அளவுகடந்து போய்விடுமே என்ற பதைப்பு ஒரு பக்கம் இருந்தது.

“இதுக்கு தான் பத்து நாளா பைத்தியம் மாறி திரிஞ்சியா டா?” என்ற ஐயப்பன், “நா போய் மாட்டுக்கு தண்ணி வைக்குறேன்” என சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.

“இருடா, நானும் வாரேன், வேலை கடக்கு” என்ற சேகரும் அவனோடு தொத்திக்கொள்ள, இருவருமாய் அங்கிருந்து வீட்டை நோக்கி சென்றுவிட்டனர்.

அண்ணாவின் புரியாத நடவடிக்கைகளை சலிப்புடன் பார்த்துக்கொண்டு அவனுக்கு இருபக்கமும் நின்றனர் நந்தாவும் பரத்தும்.

ஏலம் பாண்டியனுக்கு என முடிவானது.  மூனறை லட்ச ரூபாயும் கமுக்கமாய் கைமாறப்பட்டது.

வீரப்பனின் ஆட்டம் சற்று அதிகம் தான். வேண்டுமென்றே அண்ணாவை சீண்டுவதை போலவே அவனை நெருங்கிவந்து நின்றே குத்தாட்டம் போட்டுக்கொண்டு கும்பலாய் பத்திரத்தில் கையெழுத்திட போக, அதிகாரிகள் முன்னிலையில் அடுத்த இரண்டு வருட குளம் குத்தகை பாண்டியனுக்கு என முடிவானபோது, அங்கே புழுதியை கிளப்பிக்கொண்டு வந்து நின்றது போலிஸ் வண்டி.

அதன் பின்னோடே இன்னொரு வண்டியும் வர அதில் இருந்து இறங்கினார் சப் கலெக்டர், அவரை பார்த்ததும் அதிகாரிகளுக்கு உதறல் எடுத்தது.

போலிஸ் சூழ வந்தவரோ, “என்ன நடக்குது இங்க?” என்று கண்டிப்புடன் வினவ, ஊர்க்காரார்கள்  எதார்த்தமாய் ஏலம் நடப்பதை சொன்னதும், அந்த அதிகாரிகளை தீப்போல முறைத்தார் அவர்.

“ஏரி குளங்களை தனிப்பட்ட நபருக்கு, தனிப்பட்ட முறையில அரசு அனுமதி இல்லாம ஏலம் விடுறது தவறானதுன்னு தெரியுமா? தெரியாதா?” என்றார் அந்த அதிகாரிகளிடம். அவர்களோ ‘தெரியும்’ என்று தலையாட்ட, இன்னமும் கடிய ஆரம்பித்தார் அவர்.

“அரசு அதிகாரிகள் நீங்களே இப்டி நடந்துக்கிட்டா சாதாரண மக்கள் எப்படி நடந்துப்பாங்க? எவன் வந்து கேட்கப்போறான்னு நினைச்சுட்டீங்களோ?” அவர் காரமாய் கேட்க,

“இல்ல சார்… ரொம்ப வருஷமா சும்மா கடக்கு! அதான் இப்படி யாருக்காவது குடுத்தா அவங்க நல்லா பராமரிப்பாங்களேன்னு ஒரு நல்ல எண்ணத்துல…” அதிகாரி ஒருவர் தலையை சொரிந்துக்கொண்டு இழுக்க, சப் கலெக்டரின் கோபம் சற்று தணிந்ததை போல தெரிந்தது.

“வாட்எவர்!” என்றவர், “இங்க பாருங்க மக்களே… இங்க நடந்த ஏலம் செல்லாது… அரசுக்கு சொந்தமான நீர் நிலைகளை சொந்தம் கொண்டாடுறது தவறு!” என்று சொன்னபோது,    “அது எப்டிங்க? நாங்க காசு குடுத்து குளத்தை வாங்கிட்டோம்! இப்ப வந்து செல்லாதுன்னா எப்படி? வேணுன்னா அடுத்த ஏலத்துல வந்து முன்னாடியே நிறுத்தப்பாருங்க” என்றான் வீரப்பன் சுற்றிலும் ஆட்கள் இருக்கும் தெனாவட்டில்.

“நீங்க குடுத்த சில ஆயிரத்துக்காக எல்லாம் அரசு போட்ட சட்டத்தை மாத்திக்காது” என்றார் சப் கலெக்டர்.

“ஏதே… ஆயிரமா? லட்சம் சார்… ஒன்னு இல்ல ரெண்டு இல்ல, மூன்றை லட்சம்” என்று வீரப்பன் மிதப்பாய் காலரை தூக்கிவிட்டுக்கொள்ள, கேட்ட சப் இன்ஸ்பெக்டர் வாயடைத்துப்போனார். அதை கேட்ட அந்த அதிகாரிகள் கூட நடுநடுங்கி நின்றனர்.

எல்லோரும் தன் பேச்சில் தான் அதிர்ந்து நிற்பதாய் எண்ணி, தன்னை தானே ஒரு நாயகன் போல எண்ணிக்கொண்டு அண்ணாமலையை அவன் துச்சமென ஒரு பார்வை பார்த்தபோது, “இன்ஸ்பெக்டர்” என்ற சப் கலெக்டரின் குரல்!

“எஸ் சார்!”

“முப்பதாயிரம் மதிப்புள்ள குளத்தை மூனரை லட்சத்துக்கு ஏலம் குடுத்த குற்றத்துக்காக, அதிகாரிகள் மூணு பேரையும் கைது பண்ணுங்க” என்றார். எதிர்ப்பார்த்த துயரம் நிகழ்ந்துவிட்டதே என்ற படபடப்பில் செய்ததரியாது அவர்கள் கெஞ்ச ஆரம்பிக்க, “மேலும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த குற்றத்துக்காக, இதோ இவனை கைது செய்ங்க” என்று வீரப்பனை கை காட்டினார் அவர்.

‘கைது’ என்றதும் வெடவெடத்துப்போனவன், “அய்யய… இது ஒன்னும் என் காசு இல்ல.. இவனுது” என்றான் பாண்டியனை காட்டி.

பதறிய பாண்டியனோ, “எனக்கு எதுவும் தெரியாது சார்… இவன் தான் எல்லாத்துக்கும் மூல காரணம்… கைது எல்லாம் வேணாம் சார், இந்த மாசம் வெளிநாடு போறேன்” என்று கெஞ்ச, அதை காதில் கூட வாங்காத சப் கலெக்டர், “எல்லாரையும் ஜீப்’ல ஏத்துங்க” என்றுவிட்டு போய்விட, ‘மாட்டேன் மாட்டேன்’ என்றவர்களை கூட தரதரவென இழுத்துக்கொண்டு வண்டியில் ஏற்றினர் போலீசார். அவர்கள் போனபின்பு அந்த இடமே மயான அமைதியில் இருந்தது.

அண்ணாவின் செவியருகே போன நந்தா, “ஜஸ்ட்டு மிஸ்ஸு” என்று சொல்ல, அவன் கண்கள் தன்னையறியாமல் நிம்மதியை தான் சந்தித்தது.  அவள் அவன் பார்வையை எதிர்கொள்ளவில்லை. வேண்டுமென்றே தவிர்த்ததாக தான் அவனுக்கு தோன்றியது.

கூட்டம் அப்படியே தங்களுக்குள் கிசுகிசுத்தபடி களைய, “எல்லாரும் ஒரு நிமிஷம் நில்லுங்க” என்று கத்தினார் தாஸ். எல்லோரும் அப்படியே நிற்க, ‘எதுக்கு இப்ப கத்துது அப்பா?’ என்று முழித்தாள் நிம்மதி.

“என்ன தாஸு, என்ன சேதி?” ஒருவர் கேட்க, “நல்லா கேட்டுக்கோங்க எல்லாரும்… என் பொண்ணு மதி, இதோ இங்க இருக்கானே… அண்ணாமலை! அவனை விரும்புதுன்னு உங்க எல்லாருக்கும் தெரியும் தானே?” என்றார்.

“ம்கும்! ஒண்ணாம்ப்பு படிக்குற என் புள்ளைக்கே தெரியும்” ஒருத்தி நொடிக்க, ‘கொல்’ என சிரிப்பலை அங்கே!

“ஊருக்கே தெரிஞ்சும், இன்னமும் என் பொண்ணு ஒத்தைல தான் நிக்குறா! அதுக்கு யார் காரணம்… இந்த அண்ணாமலை தான்” என்று அவர் கை நீட்ட, அவன் திகைத்துப்பார்க்க, நிம்மதியோ, ‘யப்பா!’ என்று கடிந்தாள்.

ஆனால் எதையும் கண்டுக்கொள்ளாதவர், “ஐஞ்சு லட்சம் காசு குடு, கல்யாணம் கட்டிக்குறேன்னு சொன்னதை நம்பி, என் பொண்ணும் காசை குடுத்துட்டா! இப்போ நீங்க எல்லாரும் இருக்கீங்க… இப்போவே என்ன தேதில கல்யாணத்தை வச்சுக்கலாம்ன்னு சொல்ல சொல்லுங்க அவரை!” என்றுவிட்டார்,

‘காசு குடுத்துட்டு கல்யாணமா?’

‘காசு வாங்கிட்டு கட்டிக்குறானா?’

‘இந்த காசுக்கா இத்தனை நாளு விறைப்பா திரிஞ்சான்?’

ஆளாளுக்கு பேச, நிம்மதி தன் தந்தையின் பேச்சில் வாயடைத்து நிற்க, அண்ணாமலைக்கு அடுத்தடுத்த நிகழ்வுகளில் மூளை சூடாகி மரத்தே போனதை போன்றானது.

பத்து நாட்களாய் காசுக்கு அலைச்சல், காலையில் இருந்து அய்யாக்கண்ணுக்கு அழைத்தே வெறுப்பு, திடீர் திருமண முடிவு, ஏலம் எடுக்க வந்துவிட்டு வேண்டாம் என மன மாற்றம், லஞ்சம் கொடுத்ததாக சொல்லி போலிஸ் கைது செய்தது, கொஞ்சம் விட்டிருந்தால், வீரப்பனுக்கு பதில் தான் அகப்பட்டிருப்போம் என்ற திகைப்பே முடியாத போது, ‘காசு வாங்கிட்டான், கல்யாணம் பண்ண சொல்லுங்க’ என அமுக்குணி தாஸின் திடீர் வீர பேச்சு!

சமைந்து தான் நின்றிருந்தான் அண்ணாமலை.

தந்தையை நெருங்கியவள், “லூசாப்பா நீ? என்ன பேசிட்டு இருக்க?” என்று கடிய, முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டே மகளிடம், “நீ தானே ம்மா சொன்ன? ஏலம் எடுக்க காசு வாங்குனா, கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொன்னான்னு… இப்போ ஏலம் எடுக்கலன்னு காசை திருப்பிகொடுத்துட்டு கல்யாணமும் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டா? அதான்… நீ சும்மா இரு, அப்பா பாத்துக்குறேன்” என்றார் மெல்லிய குரலில்.

நிம்மதிக்குமே கூட அந்நேரம் தோன்றியது. ஒருவேளை அப்படி செய்வானோ இவன்? என்று! அந்த சந்தேகம் தோன்றியதுமே அமைதியாக தந்தையின் அருகே நின்றுவிட்டாள்.

நிம்மதி மறுத்து பேசுவாள் என எதிர்ப்பார்த்திருப்பான் போல அண்ணாமலை. அவளது அமைதியை கண்டதும் அவனுக்கு திகுதிகுவென கோவம் கிளர்ந்தது.

“அதான் காசு குடுத்துடுச்சுல்ல? கட்டிக்க வேண்டியது தானே அண்ணா?” என்று அவனிடம் நேரிடையாகவே கேட்டார் ஒரு தாத்தா. அவரை ஒத்து இன்னும் சிலரும் கேள்வி கேட்க, அவனுக்காக நிம்மதி தான் பேசவில்லை என்றால் பரத்தும் நந்தாவும் கூட பேசாது நின்றது அவனுக்கு இன்னமும் கோவத்தை அதிகம் தான் ஆக்கியது.