* ‘காமுகன்’ என்ற சொல்லுக்கு ‘மன்மதன்’, ‘காதலன்’ என்ற அர்த்தமும் உண்டு.
*வைரமுத்து அவர்கள் எழுதிய, ‘வான் வருவான்’ பாடலில் இருந்து பெறப்பெற்ற வரி தான், ‘என் கள்ள காமுகனே’
1
‘’இப்பழி தப்புனை ஏன் நினைப்பித்தாய்
இனியார் விடுவார் அருணாச்சலா!
அருணாச்சல சிவ, அருணாச்சல சிவ,
அருணாச்சல சிவ, அருணாச்சலா!” பத்தடிக்கு ஒன்றாக கட்டியிருந்த ஸ்பீக்கரில் இருந்து வெளிப்பட்ட அருணாச்சல அக்ஷரமாலையின் சப்தத்தை காட்டிலும், அந்த உச்சிப்பொழுது வேளையில் ஊரின் அத்தனை தெருக்களிலும் புகுந்து ஓடிக்கொண்டிருந்த இளவட்டங்களின் சத்தம் தான் ஊரையே கூட்டியது.
ஓடிக்கொண்டிருப்பவர்களின் குறுக்கே எவன் வந்தாலும் மிதித்து சாணியாக்கிவிட்டு, அவனை திரும்பிக்கூட பார்க்காத அளவு வேகமும் ஆவேசமும் அவர்களிடம்! கண்மண் தெரியாமல் தலை தெறிக்க ஓடுவது என்று சொல்வார்களே…!? அப்படி ஒரு ஓட்டம்!!!
“டேய், புடிங்கடா அவனை!” கத்திக்கொண்டே ஒருவனை துரத்திக்கொண்டு ஓடினர். கிட்டத்தட்ட அறுவர் துரத்த, அத்தனை பேருக்கும் டிமிக்கிக்கொடுத்து சிக்காமல் ஓடுவது கூட திறமை தானே! அப்படியென்றால் ஓடிக்கொண்டிருப்பவன் கூட திறமைசாலி தான்!!!
இருக்கும் சந்துபொந்தெல்லாம் புகுந்து புகுந்து ஓடினாலும் பாதை நீண்டுக்கொண்டே போக அதென்ன மெட்ரோ சிட்டி’யா!? சாதாரண கிராமம்! திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த கீழ்வேளூர் கிராமம்! அங்கு பிரசித்தி பெற்ற கேடிலியப்பர் கோவில் திருவிழாவுக்காக தான் அந்த ஸ்பீக்கர் செட்டும், அதன் வழி கொட்டும் பக்தியிசை அமுதும்!
எத்தனை முறை சுற்றினாலும் அதே நான்கு தெருக்கள் தான் என்பதால், ஓடிக்கொண்டிருந்தவன் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சிக்கிவிடலாம் என்ற தருணத்தில், ஓடுவதை நிறுத்தியவன், ஊரின் நடுவே இருந்த அரசு பள்ளியின் சுவரை ஏறி குதித்தான்.
சுவருக்கு மறுபக்கம் சென்று சத்தமில்லாமல் இளைப்பாறியவன், அருகே கேட்ட காலடி சத்தங்களில் சுதாரித்தான். சுவருக்கு மறுப்பக்கம், “அந்த பக்கம் இல்லடா!” என்றொவருவன் மூச்சுவாங்கியபடி சொல்ல, “இப்படி தானே டா வந்தான்!? வேற எங்க போயிருப்பான்!?” என்றான் இன்னொருவன் யோசனையாய்.
அந்த அறுவரிலும் சினம் சற்று தூக்கலாக தெரிந்தது பரத்’திற்கு! “ஆறுமாசமா கண்ணுல சிக்காம ஒளிஞ்சுக்கடந்துட்டு இப்போ என்னவோ வீரன் கணக்கா நெஞ்ச நிமுத்திக்கிட்டு வரான் ஊருக்குள்ள… பேடிப்பய!” சொல்லிவிட்டு பரத், எச்சில் கூட்டி கீழே துப்ப, கேட்டுக்கொண்டிருந்த வீரப்பனுக்கு, அதாவது அவர்கள் சொன்ன ‘வீரனுக்கு’ அவமானம் வெறி ஏற்றியது.
“டேய், அவன் நம்ம அண்ணா ஊருல இல்லன்னு தெரிஞ்சு தான் வந்துருக்கான், பிக்காளி! அண்ணா இருந்தா இங்க வந்து நிக்க தகுரியம் வருமா அந்த நாய்க்கு” கேட்ட சேகர், “தெப்பக்குளத்தை தாண்டக்குள்ளையே மடக்கிப்புடிக்க என்னடா உனக்கு!?” என்று எகிறினான், ஐயப்பனிடம்!
“ஏய் நான் என்னவோ கையை கட்டிக்கிட்டு வேடிக்கை பார்த்தாப்புல பேசுற? கல்லு தடுக்கி விட்டுட்டு டா! இல்லன்னா புடிச்சுருப்பேன்!” என்று குரல் இறங்க சொன்னான் ஐயப்பன்.
நந்தா, ஐயப்பன், சேகர், பரத் நால்வருமே அந்த ஊரில் இருக்கும் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தவர்கள்! சிறு வயது முதலே ஒருவருக்கொருவர் அதிக நெருக்கம்!
“விடுங்கடா! தொடநடுங்கி கம்முனாட்டி! எங்கயாது நமக்கு பயந்து ஒளிஞ்சுட்டு இருப்பான்!” என்ற பரத், வேறொரு மோசமான வார்த்தையை பிரயோகிக்க, அதில் வெகுண்ட வீரப்பன், “டேய்!!!!” என்ற அலறலோடு மதில் சுவரை ஒரே தாவாக தாவி குதித்தான்.
அதன்பின் என்ன!? வீரப்பனின் ஆதரவாளர்கள் வந்து சேர, அங்கே பெரும் கைகலப்பு ஆனது. கண்மூடித்தனமாக தாக்கிக்கொண்டனர். மொத்த ஊரும் திரண்டுவிட்டது இவர்களிடம்! ஊர் பெரியவர்கள் ஒருசிலர் இவர்களை விலக்கிவிட முயற்சித்தும் பலனே இல்லை! குறுக்கே புகுந்தால், நான்கில் இரண்டடி நமக்கு விழுமோ என்றஞ்சியே ஒருவரும் அருகே செல்லவில்லை. ஆனாலும், யாரோ போலீஸுக்கு அழைத்து சொல்லியிருந்தனர்.
ஒருக்கட்டதில் வீரப்பனின் கை ஓங்க, அவனின் ஆட்கள் கொடுக்கும் அடிகளை தடுக்க வியலாது எதிர்த்தரப்பு திண்டாட, அந்நேரம், ஒரு பெரிய கல்லை எடுத்த வீரப்பன், கண்ணில் மண் பட்டு தடுமாறி கீழ விழுந்திருந்த பரத்திடம், “யாரை பார்த்துடா பேடின்னு சொன்ன? நான் கொடுக்குற அடில இனி நீ காலம் பூரா நொண்டியா தான் திரியப்போற! போய் சொல்லு, உன் ‘அண்ணா’க்கிட்ட! அவனுக்கும் என் கையாள தான் சாவுன்னு!” என்றவன், முழு வேகம் கொண்டு அந்த கல்லை வீச, பார்த்துக்கொண்டிருந்தவர்கள், ‘ஐயோ!’ என்று அலற, வெற்றிமிதப்பில் ஜொலித்த வீரப்பனின் முகம், நொடிப்பொழுதில் வெளுத்தது.
பரத்தின் காலை பதம் பார்க்க வேண்டிய ‘கல்’ பாதி தூரத்திலேயே நின்றுப்போனது. அந்த கனமான கல்லை அதைவிட கனமான இரு கரங்கள் தாங்கிப்பிடித்திருந்தது.
சுருள் சுருளான ரோமங்களுடன், நரம்புகள் புடைக்க, காப்பிக்கொட்டை நிறத்தில் நீண்டிருந்த கரங்களே சொன்னது, அதன் சொந்தக்காரன் யாரென்று!
அவன் முகத்தை பார்க்கக்கூட வீரப்பனுக்கு தெம்பில்லை. அப்பட்டமான பயம்! மாட்டிக்கொண்டோமே என்ற அச்சம்! வியர்வை அருவியாய் கொட்ட, எச்சில் விழுங்கியவன் நொடியில் ஓடப்பார்க்க, சேகரும் நந்தாவும் அவன் எண்ணம் புரிந்து, சுதாரித்து அமுக்கிப்பிடித்தனர்.
வந்தவனை கண்டதுமே, வீரப்பனின் ஆதரவாளர்கள் எல்லாம் ஓட்டம் எடுத்துவிட்டிருந்தனர்.
கையில் இருந்த கல்லை ஓரமாய் போட்டவன், வீரப்பனின் எதிரே வந்து நின்றான். குனிந்திருந்த வீரப்பனுக்கு, அவனின் வலுவான கால்களும், மடக்கி கட்டியிருந்த லுங்கியுமே தெரிய, உள்ளுக்குள் ஈரக்குலை நடுங்கிக்கொண்டிருந்தது.
“நீ இல்லைன்னு தெரிஞ்சு தெனாவட்டா வந்தான் அண்ணா! நீ மட்டும் வரல… இந்நேரம் பரத்து காலை பதம் பார்த்துருப்பான்!” என்று நந்தா சொல்ல,
மெல்ல ஈரடி எடுத்துவைத்து அவனை நெருங்கினான் அண்ணா!
அண்ணா… அண்ணாமலை!!!
ஊருக்குள் சிறுசு முதல் பெருசு வரை எல்லோருக்குமே ‘அண்ணா’ தான்!
இன்னும் பலருக்கு ‘நம்ம கறிக்கடை அண்ணா!’
அந்த சின்ன ஊருக்குள் இருக்கும் ஒரே கறிக்கடை அவனது தான்! ஆடு, கோழி, காடை என்று எல்லாம் எந்நாளும் கிட்டும்!
தனிக்காட்டுராஜா! இருந்த ஒரே பாட்டியும் கொரோனாவில் காலாவதி ஆனதும், தன் நண்பர்கள் நால்வருடன், ஐவராய் ஒரே வீட்டில் தான் வாசம்! அவனின் அத்தனை வேலைகளுக்கும் உடன் இருந்து கவனிப்பது தான் அந்த நால்வருக்கும் வேலை!
கவனிப்பது என்றால் எளிது ஒன்றும் இல்லை! காலையில் நான்கு மணிக்கு ஆரம்பிக்கும் இவர்கள் பொழுது, இரவு மணி ஒன்பது நெருங்கையில் தான் முடிவுக்கு வரும்!
வீட்டோடு இரண்டு மாடுகள் வேறு உண்டு என்பதால், காலையில் எழுந்ததுமே, அவர்களின் பத்து செண்டு இடத்தில் இரண்டு செண்டு வீடு போக, மீதமிருக்கும் இடத்தை சுத்தமாக கூட்டுவது, மாட்டை சுத்தப்படுத்தி, தண்ணீர் காட்டி பால் கறப்பது, கறந்த பாலை சொசைட்டிக்கு ஊற்றுவது! அதற்கிடையில் இரண்டிலக்கத்தில் இருக்கும் ஆடுகளுக்கு தண்ணீர் காட்டி மேய்ச்சலுக்கு கட்டுவது, மந்தையை சுத்தம் செய்வது, அதேபோல கோழிகளுக்கும் காடைகளுகும் தீனி வைப்பது, எல்லாம் முடிந்ததும், ஆடு, மாடுகளுக்கு தீவனத்திற்காக, புல் அறுப்பது, கடைகளுக்கு சென்று ஆகாத காய்கறிகளை கொண்டு வருவது, உச்சிபொழுதில் மேய்ச்சலுக்கு விட்டவைகளை பிடித்து வந்து கொட்டிலில் கட்டுவது, தீவனம் காட்டுவது, பிறகு மீண்டும் மாலையில் பால் கறந்து சொசைட்டிக்கு கொடுப்பது, இன்னும் பல பல பல….வேலைகள்!!!
இதையெல்லாம் தாண்டி ‘கடை’ என்று ஒன்றுள்ளதே!!! அதன் வேலைகள் எல்லாம் பெண்டு நிமிரும்! ஆடுவெட்டி, ஈரல் தனியாக, எலும்பு தனியாக, கொழுப்பு தனியாக பிரித்து, இரத்தம் பிடித்து ஓரமாய் வைத்துவிட்டு, குடலை போட்டு மாங்குமாங்கென சுத்தம் செய்து, கால்களையும், தலையையும் நெருப்பில் வாட்டி தொங்கவிட்டு, அதுப்போக, கோழிகளை சுத்தம் செய்து, வியாபாரம் ஆரம்பிக்க ஏழு மணியை நெருங்கிவிடும்! அக்கம் பக்கத்து ஊர்களில் இருந்துக்கூட இவன் கடையை தேடி வருவார்கள்.
அதன்பின்னே சோறு தின்னவும் நேரம் இருக்காது! மதியம் வரை நீடிக்கும் வியாபாரம், அதற்குமேல் மந்தமாகும் நேரம் தான் ‘அண்ணா’ அசருவான்! அதன்பின், கோழிகளை சுத்தம் செய்து மசாலா போட்டு எடுத்து வைத்தால், மாலை ஆறு மணிக்கு மேல் ‘சில்லி சிக்கன்’ வியாபாரம் பட்டையை கிளப்பும்!
இத்தனை உழைத்தாலும் அவர்களிடம் ‘சேமிப்பு’ என்ற ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ளும்படி இருக்காது! வரும் பணத்தை எல்லாம், தன் நண்பர்கள் வளர்ந்த ஆசிரமத்துக்கு நன்கொடையாக கொடுத்து, அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்துக்கொடுப்பான். தேவைகளுக்கு முடிவுகள் இருக்குமா என்ன?!
கேட்பாரற்று இருந்த அந்த ‘இல்லம்’ இப்போது நலமாக இருக்க, தேடிக்கொண்டு வந்து அதில் சேர்த்துவிட்டு செல்கின்றனர் தங்கள் பெற்றோர்களை!!! அதுபோக, யாரேனும் உதவி என்று வந்தால், ஐவருமே ‘தாராள பிரபுக்கள்’ தான்!
இவர்கள் தங்களுக்கென சமைப்பது எல்லாம் இரவில் தான்! அதுவும் கண்டிப்பாக இறைச்சியாக தான் இருக்கும்! மறுநாளுக்கும் சேர்த்தே குழம்பு ஆகிவிடும்! இது என் வேலை, அது உன் வேலை என அடித்துக்கொள்ளாமல் ஐவருமே கணக்கு பார்க்காது வேலை செய்வர்!!!
இப்படியாக இந்த ஐவருக்கும் வேலை இருந்துக்கொண்டே தான் இருக்கும் நாள்முழுதும்! கடை வேலை மட்டும் செவ்வாய், வெள்ளி தினங்களில் மந்தமானாலும் சேர்த்து வைத்து ஞாயிறுக்கு வெளுத்து வாங்கும்! இப்போது கோவில் திருவிழா என்பதால் காப்பு கட்டியதில் இருந்து கடை திறக்கவில்லை அவன்! வங்கிக்கணக்கு ஒன்று ஆரம்பிக்க நாகப்பட்டினம் வரை சென்றிருந்தான்.
அதைத்தெரிந்துக்கொண்டு தெனாவட்டாய் வந்த வீரப்பன் தான் இப்போது மாட்டிக்கொண்டு நிற்கிறான், அவன் எதிர்ப்பாரா வருகையில்!!!
“அவனை விடுங்கடா!” அண்ணா சொன்னதும் தங்கள் பிடியை விட்டனர், நந்தாவும் சேகரும்!
குனிந்து நின்றவனிடம், “என்னைப்பார்!” என்றான் அண்ணா! அவன் குரலில் மெல்ல நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவனை, செவுள் தெறிக்க, ஓங்கி அறைந்திருந்தான் அண்ணாமலை!!!
அடிவாங்கியவனுக்கு காது போடும் ஓலம் ஒருபுறம் என்றால், கண்கள் இருட்டிக்கொண்டு வந்ததில் கால்கள் தள்ளாடின.
ஒருவாறாய் சமாளித்து அவன் நிற்க, மீண்டும் அருகே சென்ற அண்ணா, “என்னைப்பாரு!” என்றான். தொங்கிய தலையை சிரமமப்பட்டு அவன் உயர்த்த, இப்போது மறுபக்க செவுள் ‘க்கொயிங்’ என்றது. கன்னம் பழுக்கும் அறை!
ஆட்டை அறுப்பவன் அறைந்தால், கன்னம் பிழைக்குமா என்ன!? சரியான வலி அவனுக்கு! காது இரண்டையும் கன்னத்தோடு பொத்திக்கொண்டு அவன் தடுமாற, வந்து சேர்ந்தது காவல் துறை!!!
“நான் இல்லண்ணே! இவன் தான் ஆரம்பிச்சான்!” என்ற அண்ணாவின் பார்வை வீரப்பனை விட்டு விலகவில்லை.
“அந்த காவாலி கூட உனக்கென்ன கணக்கு? விட்டுத்தொல!” அவர் சமாதானம் சொல்ல, “எப்படி விட? ஆடு மாடு குடிக்குற தண்ணில மருந்தை கலந்துருக்கான்! கொஞ்சம் கவனிக்காம விட்டுருந்தா என்ன ஆகிருக்கும்!? அப்படி என்ன இந்த நாய்க்கு வன்மம்?” என்றவன் ஆத்திரமாய் அவனை மீண்டும் அறைந்தான்.
தடுமாறி அவன் தரையில் விழ, இது நடந்து ஆறு மாதம் இருக்கும் என்பதால் ஊரில் இருக்கும் அத்தனை பேருக்குமே தெரியும்! அதென்னவோ சின்னதில் இருந்தே வீரப்பனுக்கும் அண்ணாமலைக்கும் ஆகாது! சின்னசின்னதாய் ஆரம்பித்த சண்டை இவர்கள் வளர வளர பெரிதாகிக்கொண்டு தான் போனது. அதிலும் அண்ணாமலை தொழில் செய்து வளர்வது ஊதாரியான வீரப்பனுக்கு விருப்பமில்லாது போக, ஆடுமாடு இருந்தால் தானே தொழில் செய்வாய்? என்று அவனுக்கு நட்டம் கொடுக்க எண்ணி கழனி நீரில் பூச்சி மருந்தை கலக்க, விடியலில் எழுந்து வந்து பார்த்தபோது, கழனி தொட்டியருகே காகம் ஒன்று இறந்து கிடந்தது. அதைத்தொட்டு அவன் சுதாரித்து தன் மாக்களை பாதுகாத்தான்.
செய்தது ‘இவன்’ தான் என்று தெரிந்தாலும் நிரூபிக்க ஆதாரம் வேண்டுமே!!!
தலைமறைவானவனை வெளுக்கத்தான் இத்தனை நாளும் அவன் தன் ஆத்திரத்தை அடக்கி வைத்தது. இப்போது கொஞ்சம் விட்டிருந்தால், பரத்தின் காலை சிதைத்திருப்பான்! இதற்குமேலும் விடவா முடியும் அவனை!!!
ஒருக்கட்டத்தில் இது முடியாது என்று புரிய, வேறு வழியின்றி, “டேய், எவனாது அந்தப்புள்ளையை கூட்டிட்டு தான் வாங்களேன்டா!” என்று கத்தினார் போலிஸ்!
வாயை பிளந்து பார்த்துக்கொண்டிருந்ததில் சில பொடுசுகள் போட்டிபோட்டுக்கொண்டு அங்கிருந்து ஓடியது!
அத்தனை கால்களும் சென்று நின்றது, ‘மதி பிஸ்கட்ஸ்!’ என்ற இடத்தின் முன் தான்!
முழங்கை வரை நீண்டிருந்த க்ளவுஸ் அணிந்த கரங்களோடு, மாவை பிசைந்துக்கொண்டிருந்த பெண்ணொருத்தி, பொடுசுகள் ஓடி வந்து நின்ற வேகத்திலும் சத்தத்திலும் நிமிர, அவர்கள் வந்து மூச்சுவாங்க நிற்பது கண்டு,
“என்னங்கடா?” என்றாள், நெற்றியில் இருந்து தடம் புரண்டு விழுந்த கற்றை முடியை ஊதித்தள்ளியபடி…!
“நீ இங்க மாவை பொரட்டிட்டு இரு, அங்க உன் ஆளு ஊருக்கு முன்ன வீரப்பனை போட்டு பொரட்டி எடுத்துட்டு இருக்கான்!” என்றான் அவர்களில் சற்று பெரிதாய் இருந்த ஒருவன்.
“ஏன் உனக்கு தெரியாதா?” என்று கேட்டது இன்னொரு சிறுசு!
முறைத்தவளோ, “எனக்கு வேலை இருக்கு, போய் சேருங்க ஒழுங்கா!” என்றாள்.
“அட, போலீசே உன்னத்தான் கூட்டியார சொன்னாங்க, ஒழுங்கா பிகு பண்ணிக்காம வா!” என்றவர்கள், அவள் மறுக்க மறுக்க கையை பிடித்து இழுத்துக்கொண்டு சென்றனர்.
அங்கே இன்னமும் வீரப்பனை போட்டு அடித்துக்கொண்டிருந்தான் அண்ணாமலை. ஆனால் இடைவெளிவிட்டு! அத்தனை அடிகளையும் வாங்கிக்கொண்டும், சின்ன சத்தம் கூட இல்லாமல், வன்மத்துடன் இறுக்கமாய் இருந்தான் அவன். அதுவே அண்ணாமலையை இன்னமும் தூண்டியது.
இவளை கண்டதும், “மதி பாப்பா, யார் சொன்னாலும் நிறுத்தாம அடிச்சுட்டே இருக்கான் அண்ணா! உன்னால மட்டும் தான் அவனை நிறுத்த முடியும்! எப்படியாவது என் பேரனை காவந்து பண்ணிடுமா!” என்று இறைஞ்சினார் வீரப்பனின் தாத்தா.
இந்த வீரப்பனுக்கெல்லாம் இந்த அடி பத்தாது, இன்னும் கொடுக்க வேண்டும்’ என்று மனதுக்குள் தோன்றினாலும், அந்த பெரியவருக்காக தன் கழுத்தோடு தொங்கிக்கொண்டிருக்கும் அலைபேசியில் இருந்து ஒரு பாடலை ஒலிக்க விட்டாள்.
சுற்றிலும் கூட்டம், சத்தம், போதாததற்கு மைக் செட் வேறு!!! ஆனாலும், அண்ணாவின் செவிகளை நொடியில் சென்று சேர்ந்தது அந்த பாட்டு! நொடிக்கூட தாமதிக்காது அவன் கண்கள் சத்தம் வந்த பக்கம் வெடுக்கென திரும்ப, அங்கே ‘அவள்’ இல்லை!
நம்பாமல் அவன் கண்கள் அலைப்பாய, ஒரு பெண்ணின் முதுகின் பின்னே ஒளிந்திருந்தவள் நமட்டு சிரிப்புடன் மெல்ல மெல்ல எட்டிப்பார்த்தாள்.
அவளை கண்டுக்கொண்டதுமே அவன் கோபம் இருந்த இடம் தெரியாமல் ஓடிப்போனது. ஒருமாதிரியான பார்வையோடு அவன் அப்படியே நிற்க, “டேய் அண்ணா, அடி டா!” என்றான் சேகர்.
அப்போதும் அவன் அப்படியே நிற்க, “ம்கும்! இனி எங்க அடிக்க!? அதான் பவர் கட் ஆகிடுச்சே!” என்று பரத் ஜாடை காட்டி சலிக்கவும் தான், மூவருமே அந்த பக்கம் பார்த்தனர்.
இன்னமும் மாறாத சிரிப்போடு அவள் அவனை பார்த்துக்கொண்டிருக்க, “அப்பறம் என்னப்பா!? சண்டை முடிஞ்சுது, எல்லாரும் போய் திருவிழா வேலையை பாருங்க, போங்க போங்க!” என்று தோளில் கிடந்த துண்டை சுழற்றி மக்களை அப்புறப்படுத்தினான் ஐயப்பன்!
வீரப்பன் வெறியேறிய வன்மத்தோடு அண்ணாவையும், மதியையும் பார்த்து, கடந்து சென்றதை ஒருவரும் கவனிக்கவில்லை.
“நல்ல காலம் வந்த மதி! இல்லனா இவன் மேல கேஸ் போட்டு நான் இழுத்துட்டு தான் போயிருக்கனும்!” என்ற ஏட்டு வேலை முடிந்தது என்ற நிம்மதியில் கிளம்பினார்.
எல்லோரும் களைய, மெல்ல அவனருகே நடந்து வந்த மதி, “அண்ணாமல…அண்ணாமல… ஆசை வச்சேன் எண்ணாமலே!
அன்னம் தண்ணி உண்ணாமலே, எண்ணி ஏங்…குறேன்….!!!” மொபைலில் ஓட விட்ட பாடலையே இப்போது கிறக்கமான மெல்லிய குரலில் அவனிடம் பாடிவிட்டு, அதே சிரிப்போடு அவனை கடந்துப்போக, இப்போதும் அப்படியே தான் நின்றிருந்தான் அண்ணாமலை.
போனவள் திரும்பி அவனைப்பார்த்து கண்ணடிக்க, அவனுக்குள் கீழிருந்து மேலாய் என்னவோ ஒன்று சுர்ரென்று கிளம்பி தன் உதடுகளை அழுந்த கடிக்க வைத்தது…!