மேனேஜர் சைலேஷின் அகண்ட நெற்றி முழுக்க முத்து முத்தாய் வியர்வை அரும்பி இருக்க, காதோரத்தில் இருந்து கோடாய் இறங்கி ஓடிக்கொண்டிருந்தது உவர் நீர். அத்தனை பதட்டத்தில் இருந்தார். அவர் படபடப்பு நிமிடத்திற்கு நிமிடம் ஏறியது. காலையில் எடுத்துக்கொண்ட ‘பிபி’ மாத்திரை கூட வேலைக்கு ஆகவில்லை.
கையில் இருக்கும் அந்த வார இதழின் நடுப்பக்கத்தை விட, அதன் அருகே அமைதியாய் இருக்கும் தன் அலைபேசி தான் அவரை நடுநடுங்க செய்தது. எப்போது வேண்டுமானாலும் அழைப்பு வரலாம். வரும் அழைப்புக்கு என்ன பதில் சொல்வது என்றுக்கூட தெரியாமல் தான் இத்தனை பயம், பதட்டம், படபடப்பு அவருக்கு.
சரிசமமாய் இருபக்கமும் விரிந்துக்கிடந்த பக்கங்களுக்கு நடுநாயகமாய் எழுத்துக்கள் பளிச்சென தெரிந்தன.
‘ஆன்லைன் இறைச்சிக்கடை மோசடி; காசு வாங்கிக்கொண்டு காவு வாங்கும் கறிக்கடைகள்’ என தலைப்பு இருக்க, இவர்கள் கடையின் பெயர்ப்பலகை அங்கே புகைப்படமாய் இருந்தது. என்னதான் எழுத்துக்கள் தெளிவாய் இல்லாமல் ‘ப்ளர்’ செய்யப்பட்டிருந்தாலும் பார்த்ததும் கண்டுக்கொள்ளும் வகையில் தான் இருந்தது.
கேட்பாரற்ற ஆசுரமத்துக்கு தானே என்று அசட்டையாக தான் செய்த வேலை, இத்தனை பெரிய வினையாக வந்து நிற்கும் என்று அவர் எண்ணவே இல்லை. அதோடு அவர் செய்யும் தில்லுமுல்லுகள் எல்லாம் என்னவோ அருகே இருந்து பார்த்ததை போலவே துல்லியமாய் எழுதியிருந்தனர்.
முதலில் ஆசிரம ஆட்களுக்கு உடல்நிலை கெட்டதை தெளிவாக எழுதி, பின்னே,
‘நல்ல விலைக்கு தரமாக வாங்கிய கறி, கூடுதல் விலைக்கு வெளியே விற்கப்பட, நாள்பட்ட, கெடும் நிலையில் உள்ள கறி இவர்கள் கடையில் பளபளக்கும் பேக்கிங்கில் மக்களிடம் சேர்க்கப்படுகிறது.
டிஜிட்டல் இந்தியாவின் நூதன மோசடியை மக்கள் இனம் காண வேண்டும்’ என்று போட்டிருக்க,
‘ஆஃப்ர்ல தராங்க, வீட்டுக்கே வந்து தராங்கன்னு பொருளோட தரம் கூட தெரியாம ஏமாறாதீங்க மக்களே!
ஆன்லைன்ல வாங்குறோமா? நேர்ல போய் வாங்குறோமாங்குறது முக்கியம் இல்ல, நம்ம வாங்குற பொருள் தரமானதா இருக்குதாங்குறது தான் முக்கியம்!
இந்த மோசடியை நம்ம வெளில கொண்டு வந்துருக்கோம். எந்த அளவு நடவடிக்கை எடுக்குறாங்கன்னு பொறுத்திருந்து பாக்கலாம்.
விழிப்போம்! தெளிவோம்!’
(தொகுப்பு: திவ்யா) என்று முடிந்திருந்தது அந்த பக்கம்.
அலைபேசி அமைதியாய் இருக்கும் ஒவ்வொரு நொடியும் அவருக்கு படபடப்பு கூடியது. அதன் அமைதி கூட தேவலாம் என்று எண்ணும்படி இப்போது அது எழுப்பும் ஒலி அவருள் சிறு பூகம்பத்தையே கொடுத்தது.
எடுக்காமலும் இருக்க முடியாதே!
‘ஹலோ மேடம்’ அவர் ஆரம்பிக்க, “என்ன பண்ணிட்டு இருக்கீங்க சைலேஷ்?” என்று காட்டமாய் ஆரம்பித்தாள் கௌசல்யா பாலகிருஷ்ணன்.
அவள் பேச்சில் இத்தனை நாள் இருந்த ‘மிஸ்டர்’ மிஸ் ஆகியிருந்தது.
“மேம்… அது”
“இனஃப்… உங்க பேச்சை இனியும் நான் கேட்பேன்னு நினைக்காதீங்க. எது நடக்கவே கூடாதுன்னு அன்னைக்கு சொல்லிருந்தேனோ அது நடந்தாச்சு! பேர் போடலன்னா? அது நம்ம தான்னு தெரியாதா என்ன!? நம்ம பண்றது தொழில் சைலேஷ்!
நம்பிக்கை போச்சுன்னா மொத்தமா போச்சு!” என்றாள் காட்டமாய்.
இடையே பேசக்கூட அவரை விடவில்லை.
“உங்க மேல தப்பு இருக்கா இல்லையான்னு நாளைக்கு தெரிஞ்சுடும். நம்ம ஆட்கள் நோண்ட ஆரம்பிச்சுட்டாங்க. உங்க மேல தப்பு இல்லன்னா நீங்க தப்பிச்சீங்க! வேலை மட்டும் போகும். ஒருவேளை தப்பு செஞ்சுருந்தா… யுவர் டஃப் லக்… என்கிட்ட இருந்து தப்பவே முடியாது. காலத்துக்கும் களி தான்!” என்றவள்,
“நான் அங்க தான் வந்துட்டு இருக்கேன்! மீதியை நேர்ல பேசிக்குறேன்” என்று வைத்துவிட்டாள்.
சைலேஷுக்கு சர்வமும் நடுங்கியது.
தவறு செய்யாதவன் என்றால் நடுங்க தேவையிருக்காது. ஆனால் இவர் செய்தது மோசடி அல்லவா! எங்கோ ஒரு மூலையில் இருந்து ஆட்டுவிப்பவளுக்கு இங்கே தான் சுருட்டும் சில லட்சங்கள் பற்றி என்ன தெரிய போகிறது என்ற மெத்தனப்போக்கு.
பல வருடங்களாய் இதே கம்பெனியில் வெவ்வேறு துறைகளில் பணியில் இருந்தவருக்கு அவர் பார்த்து வளர்ந்த கௌசல்யா ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. அதுதான் அவரை துணிந்து மோசடி செய்ய உந்தியது.
மோசடி என்பதை கூட அவர் உணர்ந்து செய்யவில்லை. உடை நாகரிகம் கூட பெரிதாய் வளராத இந்த ஊர் ஆட்களுக்கு இது போதும் என்ற கீழான எண்ணம்!
இப்போதும் அவர் நினைத்தது போல தான் நல்ல விதமாய் போய்க்கொண்டிருந்தது. சில மாதங்களிலேயே நல்ல லாபம் எடுத்துவிட்டார். குறுக்கே அந்த ‘அண்ணாமலை’ வந்து இத்தனை குடைச்சல் குடுக்கவில்லை என்றால் இன்னும் எவ்வளவோ சேர்த்திருக்கலாம் என்ற எண்ணம் தான் இப்போதும்.
கௌசல்யா இதை சும்மா விடமாட்டாள் என்றும் தோன்றியது. எத்தனை கெஞ்சினாலும் அவளிடம் துரோகத்திற்கு மன்னிப்பே இருக்காது. இதற்க்கெல்லாம் காரணமான அண்ணாமலை மீதும், அவன் மனைவி மீதும் இந்த நொடி எல்லையில்லா ஆத்திரம் பெருகியது அவருக்கு.
அத்தனையும் பாழாக்கி விட்டார்களே என்று!!!
விட்டால் கொன்றே விடுவார் எனும் அளவுக்கு எல்லை மீறிய கோவம்.
கதவை திறந்துக்கொண்டு வேகமாய் வந்தான் வீரப்பன்.
அவனிடம் பணிவோ மரியாதையோ ஒன்றும் இல்லை. முகத்தில் கோவம் இருக்க, கையில் அன்று அவர் கொடுத்த பணத்தை கத்தையாய் கட்டியிருந்தவன், அவர் டேபிள் மேலே வீசினான்.
“நாங்கூட அந்த அண்ணாமலை சும்மா தான் சலம்பிட்டு கடக்கான்னு நினைச்சேன்! இப்போதானே உண்மை என்னான்னு தெரியுது” என்றவன் கண்கள் அங்கே இருந்த வார இதழில் நிலைக்க, “பேப்பர்ல வரதெல்லாம் உண்மை இல்லை” என்றார் பல்லைக்கடித்து.
நேற்று வரை தன்னிடம் கையை கட்டிக்கொண்டு பணிவாய் பேசியவன் இன்று எதிர்த்து பேசுவதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.
“பேப்பர்ல வரது உண்மை இல்லன்னு சொல்றீங்களா? இங்க வேலை செய்யுற என்கிட்டயேவா?” என்று எள்ளலாய் கேட்டவன், “ஒருவாரமா எல்லாம் கவனிச்சுட்டு வந்து தான் இப்போ பேசுறேன் சார். நீ பண்ற தகுடுதித்தம் எல்லாம் தெரியும் எனக்கு” என்றிருந்தான்.
சைலேஷ் நிதானித்தார்.
“நான் இங்க வேலைக்கு சேர்ந்த காரணத்துனால தான் அண்ணாமலை குடைச்சல் குடுக்குறான்னு தப்பா நினைச்சு முறைச்சுட்டு இருந்தேன், நிம்மதி சொல்லுச்சு அன்னைக்கு.
தப்பு பண்ணாதவன் எதுக்கு காசு அள்ளி கொடுக்கணும், யோசின்னு! கண்ணை திறந்து பார்த்ததும் தான் எல்லாம் தெரியுது!” என்றான்.
‘நிம்மதி….’ மூடிய உதடுகளுக்குள் அவள் பெயர் கடித்து துப்பினார் அவர்.
“உன்மேல இவ்ளோ தப்பை வச்சுட்டு எங்க நிம்மதியை ஜெயிலுக்கு அனுப்ப பார்த்த பத்தியா? அத மட்டும் என்னால மன்னிக்கவே முடியாது” என்று விரல் நீட்டி பேச, தன்னுடைய இந்த நிலை சைலேஷிற்கு ரத்த நாளங்களை சூடேற்றியது.
“இப்ப என்ன பண்ணப்போற?” கோவத்தை அடக்கி கேட்டார் அவர்.
“உன் வண்டவாளத்தை தண்டவாளத்துல ஏத்தப்போறேன்…” அவன் சொல்ல, “வேலை போனா சோத்துக்கு என்னடா செய்வ?” என்றார் எழுந்து நின்று.
“ஹும்… இந்த வேலைக்கு வரதுக்கு முன்ன வரைக்கும் சோத்துக்கு பிச்சை எடுத்தேன்னா நினைச்ச?” வீரப்பனும் சளைக்காமல் பேசினான்.
“ஓஹோ!” அவர் ஒரு மார்க்கமாய் சொல்ல, அதை உணராதவன், “உன்னால ஒரு நல்லது, காரணமே இல்லாம முறைச்சுக்கிட்டு திரிஞ்ச நானு அண்ணாக்கூட நல்ல விதமா பேசப்போறேன்! மாட்டுக்கு விஷம் வைக்க பார்த்தவன் தான், மனுஷனுக்கு வைக்குற அளவு கொடூரன் இல்ல” என்றவன்,
“நீ குடுத்த காசு, பொறுக்கிக்கோ” என்றுவிட்டு அவன் திரும்ப, கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் பின்னந்தலையை எதுவோ ஒன்று பலமாய் தாக்கியது. அது தாக்கிய வேகத்தில் அவன் மொத்த உடலும் ஸ்தம்பித்தது. அதிர்ச்சியில் கத்தக்கூட வரவில்லை.
அவனை தாக்கிவிட்டு கீழே விழுந்த பேப்பர் வெயிட் குண்டை குனிந்து எடுத்த சைலேஷ், “நீ மனுஷனுக்கு விஷம் வைக்குற அளவு கொடூரமானவனா இல்லாம இருக்கலாம். ஆனா நானும் அப்படியே இருப்பேன்னு நினைக்காத” என்றவர், “நாளைக்கு சோத்துக்கு வக்கத்து அல்லாடுற நாய்ங்க, என்னை சீண்டி பாக்குறீங்களா? பெரிய இடத்துல கை வச்சா என்ன ஆகும்ன்னு காட்டுறேன்டா” என்றதோடு மீண்டும் அந்த பேப்பர் வெயிட்டை குறிப்பார்த்து அவன் முன் நெற்றியில் எறிய, சுயநினைவு இழந்து மயங்கி சரிந்தான் வீரப்பன்.
‘பெரிய நியாயவான்…’ கடுப்போடு சொல்லியவர், யாருக்கோ அழைத்தார்.
***
“இன்னும் ஒரு தேங்கா உரி, போதும்!” நிம்மதி சொல்ல, வாசலில் நின்று, தேங்காய் மட்டையை பிளக்கும் அந்த இரும்பு இயந்திரத்துடன் பிஸியாக இருந்தான் அண்ணாமலை.