24

போலிஷ் ஸ்டேஷன் மரபெஞ்சில் மௌனமாய் அமர்ந்திருந்தாள் நிம்மதி. அழைத்து வந்ததில் இருந்து அவள் எதுவுமே பேசவில்லை.  குறைந்தபட்சமாய், ‘நான் எந்த தப்பும் செய்யல, என்னை தயவுசெஞ்சு விடுங்க’ என்று அவள் இறைஞ்சுவாள் என எதிர்பார்த்த காவலர்களுக்கு அவளது இந்த மௌனமும் நிர்மலமான முகமும் பெருத்த ஏமாற்றத்தை தான் கொடுத்தது.

‘ஒரு கிராமத்து பிள்ளைக்கு போலிஸ் ஸ்டேஷன் வந்துக்கூடவா பயம் வரல?’ என்று ஆச்சர்யமாய் தான் அவளை பார்த்தனர் சிலர். அவளும் அதற்கேற்றார் போல தான் கொஞ்சமும் கலங்காமல் அமர்ந்திருந்தாள். அழைத்து வந்து ஒரு மணி நேரம் தாண்டிவிட்டது.

இன்ஸ்பெக்டருக்கு அழைப்பு வர, நிம்மதியை பார்த்துக்கொண்டே பேசினார் அவர்.

“கல்லு மாறி இருக்கா…”

“ம்ஹும்… பயந்த மாறி ஒன்னும் தெரில”

“பொம்பளையை புடிச்சா பயம் காட்டலாம்ன்னு தப்பா நினைச்சுட்டீங்க சார் நீங்க…”

இன்ஸ்பெக்டர் பேசியது மட்டும் தான் கேட்டது என்றாலும், அவர் யாரிடம் எதைப்பற்றி பேசுகிறார் என தெளிவாகவே அவளால் யூகிக்க முடிந்தது.

“என்ன சார் பேசுறீங்க? ஏதோ நீங்க கேட்டீங்கன்னு தான் இதே செஞ்சேன். மேல கை வைக்குறதெல்லாம் என்கிட்ட ஆகாது, எனக்கும் ரெண்டு பொம்பளை புள்ள இருக்கு பார்த்துக்கோங்க” சற்றே கோவமாக பேசினார் இப்போது.

நிம்மதிக்கு உடல் விரைத்தது. மறுமுனையில் என்ன செய்ய சொல்லியிருப்பார்கள் என புரிய, உள்ளங்கால் ரத்தம் உச்சிக்கு ஏறியது. ஆனாலும் அவளிடம் மாற்றமில்லை.

அப்போது அடித்துப்பிடித்து உள்ளே நுழைந்தார்கள் அண்ணாவும் மற்றவரும்.  உள்ளே வந்த அண்ணா, அங்கே அமர்த்தி வைக்கப்பட்டிருந்த நிம்மதியை பார்த்து செயலற்று நின்றான். தாஸ் தான் தாவி சென்று மகள் காலடியில் விழுந்தார்.

“தாயி…” அவர் தழுதழுக்க, “விடுப்பா!” என்றாள் அவள் மெதுவாய்.

ஒரு பெண் பிள்ளையை இப்படி கைது செய்து அழைத்துவந்து வைத்திருப்பதெல்லாம் மிக மிக பெரிய மானக்கேடு அவர்களுக்கு. தாஸ் துடிதுடித்துப்போயிருந்தார். மகளை கண்க்கொண்டு காணும் வரை அவருக்கு உயிரே இல்லை.

அவள் திடமாய் தெளிவாய் இருந்தது தான் அவருக்கு ஒரே ஆறுதல். ஒருவேளை அவள் வெளிறி கலங்கி ஒதுங்கி இருந்திருந்தால் உயிரையே கூட விட்டிருப்பார். தாஸ் மட்டும் அல்ல, அண்ணாவும் தான்!

பரதன் தாங்கள் அழைத்து வந்த வக்கீல் சிவப்ரகாசத்தை அனுப்ப, அவர் இன்ஸ்பெக்டரிடம் பேசினார்.

“எந்த ஒரு ஆதாரமும் இல்லாம எப்டி சார் ஒரு பொண்ணை அரெஸ்ட் பண்ணிட்டு வருவீங்க நீங்க?” வக்கீல் கேட்க, “ஆதாரம் எல்லாம் தேவையே இல்ல, நாங்க கண்ணாலேயே பாத்தோம். குழந்தைங்க வேலை செஞ்சதை” இன்ஸ்பெக்டர் அமர்த்தலாய் பதில் சொன்னார்.

“அந்த குழந்தைங்க எல்லாம் அங்க வேலை செய்யுறவங்களோட பிள்ளைங்க.  லீவ் நாளுன்னு கூட கூட்டிட்டு வந்தாங்க. அதைக்கூட விசாரிக்காம எப்டி சார் அரெஸ்ட் பண்ணுவீங்க” வக்கீல் கேட்டதும்,

“ப்ச், பண்ணிட்டோம்… என்ன பண்ண சொல்றீங்க?” என்றார் இன்ஸ்பெக்டர்.

“அலட்சியமா பேசாதீங்க சார், ஒரு பொண்ணை இப்படி ஸ்டேஷனுக்கு அலைக்கழிச்சதுக்கு உங்க மேல எங்களால கேஸ் போட முடியும்” இன்ஸ்பெக்டரின் பேச்சில் வக்கீலுக்கே எரிச்சல் வர கத்திவிட்டார்.

காதை குடைந்த இன்ஸ்பெக்டர், “ஜாமீன் வாங்கிட்டீங்க தானே? குடுத்துட்டு கூட்டிட்டு போங்க” என்று இன்னும் அசட்டையாய் சொல்ல, “யூ வில் பேஸ் த கான்சீக்குவின்சஸ்” என்று காரமாய் சொன்ன வக்கீல் தன் வேலையை பார்த்தார்.

தாஸ் இன்னமும் அவள் கால்மாட்டிலேயே அமர்ந்திருக்க, அண்ணா நின்ற இடம் விட்டு அசையவில்லை. அவன் கண்கள் இமைக்காமல் நிம்மதியை தான் வெறித்தது.

“மதியை கூப்பிடு அண்ணா, கிளம்பலாம்” பரதன் தான் அண்ணாவை கலைத்தான். அதோடு தாஸையும் எழுப்பி வெளியே அழைத்து செல்ல, அண்ணாவின் அருகே அவளாகவே வந்தாள் நிம்மதி. அவன் இன்னமும் பார்த்துக்கொண்டே தான் நின்றான்.

அவன் கரத்தை கோர்த்தவள், “போலாம், வா!” என்று அழைத்து செல்ல, பேச்சே இல்லாமல் அவளுடன் சென்றான் அண்ணா.

வெளியே, அண்ணா முன்பதிவு செய்து  இருநாட்கள் முன்பு தான் கைக்கு வந்திருந்த ‘டாட்டா ஏசிஇ’ வண்டி நின்றிருந்தது. பின்னே தாஸ் ஏறி அமர்ந்துவிட்டார். பரதன் வண்டியை இயக்க, முன்னிருக்கையில் அண்ணாவும் அவன் அருகே நிம்மதியும் அமர வண்டி கிளம்பியது.

வக்கீல் அவர் வண்டியில் முன்பே சென்றிருந்தார்.

வண்டி கிளம்பி சில நிமிடங்களுக்கு எந்த பேச்சுமே இல்லை.  பரதன் தான், “வக்கீலு உருப்படியா பேசுனாரு” என்றான். ஆமோதிப்பான தலையாட்டல் தான்டி வேறெதுவும் இல்லை.

நிம்மதியின் வலது கரத்தை கிடுக்குப்பிடி போட்டு அத்தனை அழுத்தமாய் பிடித்திருந்தான் அண்ணாமலை. அவளுக்கு வலித்தாலும் அமைதியாகவே இருந்தாள். திரும்பி அவள் முகம் பார்ப்பதும், அவள் பார்க்கும்போது திரும்பிக்கொள்வதும் என ஏதோ அவஸ்தையாய் தான் இருந்தான் அண்ணாமலை. அவன் பிடி வேறு நொடிக்கு நொடி இறுகிக்கொண்டே போனது.

ஒரு கட்டத்தில் வலி பொறுக்க முடியாதவள், “யோவ்…” என மெல்லமாய் அலற, “சரி, சரி” என்றவன் இப்போது ஒவ்வொரு விரலாய் நீவ ஆரம்பித்தான். நிம்மதிக்கு அவனை பார்க்க சற்று சிரிப்பாக வேறு இருந்தது. ஜன்னல் பக்கமாய் திரும்பிக்கொண்டாள்.

“மதி… நல்லா இருக்க தானே!?” வண்டி ஓட்டிக்கொண்டே சற்று தயக்கமாய் கேட்டான் பரதன்.

“ஏன்டா?” அவள் சாதரணமாய் கேட்க, “இல்ல, ஒண்ணுமே பேசலையே நீ!?” என்றிட, “நான் என்ன போருக்காடா போயிட்டு வந்தேன்? பக்கம் பக்கமா அனுபவம் பேச?” கிண்டலடித்தவளை இருநொடி வியப்பு மேலிட பார்த்தான் பரதன்.

அவனறியாமல் அவன் கண்முன்னே தேன்மொழி வந்துப்போனாள். நிம்மதியை போலீஸ் அழைத்து சென்றுவிட்டது என்று சொல்வதற்க்குள்ளாகவே அத்தனை கதறினாள் அவள். அவளிடம் இருந்து விஷயத்தை வாங்கவே பெரும்பாடானது அவர்களுக்கு. அப்படி இருக்கையில் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று வந்தவள் ஏதோ பிக்னிக் போய் வந்ததை போல இயல்பாக திடமாக இருக்க, நிம்மதி மீதான எண்ணம் இன்னுமே உயர்ந்தது அவனுக்கு.

அவள் திடமாக இருப்பதாக தான் வெளியே தோன்றியது. உள்ளுக்குள் அவளது கோவமும் ஆத்திரமும் அவள் மட்டுமே அறிந்தது.

“எதாவது வேணும்ன்னா சொல்லு… இன்னும் சாப்டல தானே நீ!?” பரதனே தான் கேட்டான். தேன்மொழி தான் சொல்லி சொல்லி அழுதாளே, ‘டீயை கூட குடிச்சு முடிக்கல, அதுக்குள்ள இழுத்துட்டு போய்ட்டாங்க’ என்று!

“எனக்கு நாகூர் இறால் வடை சாப்பிடனும் போல இருக்கு பரதா!” உண்மையாகவே ஆசையுடன் கேட்டவளை முறைப்புடன் பார்த்தான் பரதன்.

“இங்கிருந்து ஒரு வடைக்காண்டி ஒருமணி நேரம் போவ சொல்றியா? லூசு” பரதன் திட்ட, முகம் சுருக்கினாள் மதி. அதுவரை அமைதியாய் பார்த்துக்கொண்டிருந்த அண்ணாமலை, “டேய், அதான் கேக்குறாள்ள? எங்களை வீட்ல விட்டுட்டு நீ போய் வெரசா வாங்கி வா” என்றவனை வாயை பிளந்து பார்த்தான் பரதன்.

“என்ன, விளாடுறியா?” என்ற பரதனுக்கு,  ஒரு வடைக்காக அத்தனை தூரம் எல்லாம் சற்றே அதிகப்படியாக தான் தோன்றியது.

“வேற என்ன வேலை இருக்கு உனக்கு? சொன்னதை செய்” அண்ணாமலை விளையாடவில்லை என்று பார்த்தாலே தெரிந்தது.

“டேய், ஆனாலும்…”சலிப்பாக பரதன் இழுக்க, “இவ மீன் திங்க ஆசைப்பட்டான்னு குளத்தையே குத்தகை எடுக்க அலைஞ்சவன் டா நானு! இப்ப ஒரு வடை தானே கேக்குறா” சர்வசாதரணமாய் அண்ணா சொல்ல, பரதன் போட்ட சடன் ப்ரேக்கில் வண்டி குலுங்கி நின்றது.

‘என்னடா?’ என திட்ட வந்த அண்ணா, வண்டி தங்கள் வீட்டின் முன்னே நிற்பதை கண்டு நிம்மதியுடன் இறங்கிக்கொண்டான்.

பரதன் தான், ‘அடப்பாவி’ என அதிர்ந்து போய் உறைந்திருந்தது.  அந்த குளத்தை குத்தகை எடுக்க எத்தனை சிரமம், அலைச்சல், தவிப்பு என கூடவே இருந்து பார்த்தவனுக்கு, அதெல்லாம் இவள் ஒருத்தி மீன் திங்க ஆசைப்பட்டதுக்கா? என்று தெரிய, ‘டேய், அநியாயம் பண்றீங்கடா’ என்று தான் சொல்ல தோன்றியது.

நிம்மதிக்கு எதையோ சாதித்ததை போல முகமெல்லாம் விகாசித்தது.

‘எனக்காக தானா? தெரியும் டா அப்பவே…’ மனதுக்குள் கொஞ்சிக்கொண்டே அவள் நிற்க, தேன்மொழி, “அக்கா” என அழுதுக்கொண்டே ஓடி வந்து கட்டிக்கொண்டாள் அவளை.

ஏதேதோ சொல்லி அவள் அழுக, “அடியே, கூட்டிட்டு போனது என்னை, நீ ஏன் இப்படி குலுங்கி குலுங்கி அழுற?” என்ற நிம்மதிக்கு கொஞ்சமே கொஞ்சம் எரிச்சல் கூட ஆனது அவளது விடாத அழுகையில்.

வேலை செய்யும் விஜயா அக்கா தான் ஆரத்தி கொண்டு வந்து சுற்றினார்.

‘புடிச்ச பீடையெல்லாம் ஒழியட்டும், துப்பு மா!’ அவர் சென்றுவிட, பிடித்துக்கொண்டனர் மற்ற பெண்கள். அத்தனை பேரும் அவர்கள் வருத்தத்தை ஆதங்கத்தை கோவத்தை விதவிதமாய் கொட்ட, அலுத்துப்போய் நின்றிருந்தாள் நிம்மதி.

“அவளை விடுங்களேன், சித்த படுத்து எழும்பட்டும்” அண்ணாமலை குரல் உயர்த்தியதும் தான் அவளை விட்டனர்.

தங்கள் வீட்டிற்குள் வந்து கதவை அடைத்ததும் தான் நிம்மதிக்கு மூச்சு விட முடிந்தது.

‘குளிக்கணும்’ சொல்லிக்கொண்டே மாற்றுடை எடுத்துக்கொண்டு அவள் நகர, சட்டென அவளை இறுக்கமாய் அணைத்துக்கொண்டான் அண்ணாமலை.

‘அடுத்து இவனா?’ என்று தோன்றினாலும், சின்ன சிரிப்போடு அவன் முதுகை வருடிக்கொடுத்தாள் நிம்மதி. ஒன்றுமே பேசவில்லை அவன். ஆனால், அவன் இறுக்கமான அணைப்பு ஆயிரம் சொன்னது அவளுக்கு. அவனே சில நிமிடங்களில் மனம் வந்து அவளை பிரித்தான்.

கலங்காத அவள் கண்கள் அவனுக்கு அத்தனை தெம்பூட்டியது.

அவன் பார்த்துக்கொண்டே இருக்க, “என்னைய்யா?” என்றாள் அவள் செல்ல சலிப்பில்.

“இந்த அழுகுறது, கதருறது, துடிக்கிறது… இதெல்லாம் வரவே செய்யாதா உனக்கு?” அவன் கேள்வி சந்தேகம் போல இருந்தாலும், அவன் கேட்ட த்வனி அவளை பெருமையாக தான் உணர்த்தியது.

“அழ சொல்றியா?” என்றாள் அவள்.

“உடைஞ்சுருப்பேன்… ஒரு சொட்டு தண்ணி கண்டுருந்தாலும்…” அவன் குரலே கரகரத்தது. அவன் அடக்கும் உணர்வுகளால் அவன் முக தசைகள் எல்லாம் இறுகி கீழ் உதடு துடித்து என பார்க்கவே என்னவோ போல இருந்தான்.

“அவ்ளோ பிடிக்குமா என்னை!?” அவன் காட்டும் உணர்வுகளில் சிக்கி ஆசையாய் கேட்டது பெண்.

கண நேரத்தில் முகம் மாற, தலை கோதியவன், “போடி!” என்றான் வாசலை காட்டி.

அவள் கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை. அப்பட்டமான ஏமாற்றத்தில் முகம் இருள, “யோவ்வ்வ்….” என்றாள் கோவத்துடன்.

சிரிப்பை அடக்கினான்  அந்த வீம்பன்.

அவள் முறைத்துக்கொண்டே நிற்க, “யம்மா, ஜான்சி ராணி… நீங்க ரெஸ்ட் எடுங்க… எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, போயிட்டு வரேன்” என்று நகர்ந்தவனை பிடித்தவள், “எங்க போற?” என்றாள்.

“வந்து சொல்றேன் விடு” அவன் நகர, அழுத்தமாய் பிடித்தவள், “எங்க போறன்னு தெரியும். போகாத” என்றாள்.

நொடியில் அவன் முகம் கோவச்சாயல் பூசியது.

“அந்த மேனேஜர் பரதேசி வேல தான் இது, தெரிஞ்சே விட சொல்றியா?” கொதிப்புடன் அவன் கேட்க, “விட சொல்லல… விட்டு புடிக்க சொல்றேன்” என்றவளை அவன் புரியாமல் பார்க்க,

“எனக்கு கோவமே இல்லன்னு நினைக்குரியா? அத்தனை கொதிப்பையும் அடக்கி வச்சுட்டு நிக்குறேன். பெருசா பண்ணனும் அவனுக்கு” என்றவளை இப்போது வியப்பும் கேள்வியுமாய் பார்த்தான் அண்ணாமலை.

ஒன்றும் சொல்லாமல் தன் போனை எடுத்தவள் யாருக்கோ அழைத்தாள்.

“ஹலோ திவ்யா?” இவள் பேச ஆரம்பிக்க, அவள் சொன்ன செய்தியில், அவள் திட்டத்தில் அண்ணாமலையின் வியப்பு இன்னும் தான் பல்கியது.

***