சரியாகிவிடும் என்று சொல்லிக் கொண்டு கண்கள் மூடிக் கொண்டாலும் உறக்கம் கிஞ்சித்தும் இருவரையும் அணுகவில்லை.
திருமணமாகி சேர்ந்திருந்த அந்த ஆறு மாத கால வாழ்வில் இப்படி எல்லாம் அணைத்து படுத்ததேயில்லை! அணைத்ததேயில்லை இல்லை என்பதும் வேறு.
இந்த மாதிரியான ஒரு சூழலில் ஒரு அணைப்பு எதிர்பாராதது. ஆனால் உண்மையில் இப்போது தானே தேவை. கண்மூடி அந்த கணமான க்ஷனங்களை இருவருமே க்ரகித்தனர்.
அந்த அமைதியை கிழித்து மெதுவாக சைந்தவி, “இந்த மாதிரி நடந்திருக்க வேண்டாம், ஆனா நடந்திடுச்சு, இதையே நினைச்சு இருக்காதே விஜய் மறந்துடு, ஃபீல் பண்ணாதே” என்றாள்.
சாதரணமாய் இதனை விஜய் கடந்து விடுவான் என்று சைந்தவிக்கு தோன்றவில்லை.
“ம்ம்” என்ற சப்தம் கூட அவனிடமில்லை.
மெதுவாக நிமிர்ந்து அவன் முகம் பார்க்க, கண்கள் மூடி தான் இருந்தது. ஆனாலும் உறங்கியிருப்பான் என்று தோன்றவில்லை.
“மறக்கணும் விஜய், இதை நினைக்க வேண்டாம்”
“இந்த வலி கூட இன்னும் குறையலை, எப்படி அதுக்குள்ள மறக்க முடியும்” என்றான் கண்திறவாமல்.
என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சைந்தவி அமைதியாகிவிட, அவளின் அமைதி மனதை அசைத்தது. கண் திறந்தான். அவனையே பார்த்துக் கொண்டிருக்கும் சைந்தவி தெரிய, “சரியாகிடும்” என்றான் அவள் சற்று முன்பு உரைத்தது போல்.
அந்த நேரம் வாசலில் அழைப்பு மணி அடித்தது.
இந்த நேரத்தில் யார் என சைந்தவியின் மனது திக்கென்று அடித்துக் கொண்டது. அவளை தேடும் ஒரே ஜீவன் ப்ரித்வி, இப்போது தான் வந்து சென்றான். இதோ தேடியிராவிட்டாலும் தேடும் வாய்ப்பிருக்கும் இன்னொருவன் இங்கே இருக்கின்றான்.
என்னவோ மனது படபடவென்று அடித்துக் கொள்ள கலவரமாக எழுந்து அமர்ந்தாள். நேரம் பதினொன்றை நெருங்கி இருந்தது. அவளின் முகத்தை பார்த்தவனுக்கு மனதை எதோ பிசைந்தது. தனியாக எப்படி இருந்திருப்பாள் என்று அனுமானிக்க முடியவில்லை.
“எப்படி தனியா இருந்த?”
“இவ்வளவு நாளா ஹாஸ்டல், இப்போ இங்கே வந்து ஒரு மாசம் தான் ஆகுது” என்றாள்.
சற்று அவன் தேரிய போது, மீண்டும் அழைப்பு மணி ஒலிக்க, எழுந்தவனின் கைகளை சற்று பயத்தோடு பிடித்தாள். “எப்போ இருந்து இவ்வளவு பயப்பட ஆரம்பிச்ச நீ” என சொல்லிக் கொண்டே விஜய் எழுந்தான். உதடை அதிகம் அசைக்காமல் பேச ஆரம்பித்து இருந்தான். இம்முறையில் பேசும் பொழுது வலி சற்று தாங்கும் அளவு இருந்தது.
உண்மையில் அவனை அப்படி போலிஸ் ஸ்டேஷனில் பார்த்ததில் இருந்து தான் ஒரு பயம் அவளின் மனதினில். ஆனால் அதனை சொல்லிக் கொள்ளவில்லை.
அமைதியாக அவனுடன் எழுந்து நிற்க, விஜய் நடக்க, அவனோடு நடந்தாள். அதற்குள் திரும்ப அழைப்பு மணி அடிக்க “எவன்டா அவன்?” என முணுமுணுத்துக்கொண்டே விஜய் கதவை திறந்தான். சங்கலி மாட்டி இருக்கிறதா என்று விரைவாக பார்வையை ஓட்டினாள் சைந்தவி.
“ஹேய் சவீ, என்ன இது?” என்று அவளை அதட்டியபடி அவன் கதவை திறக்க, அங்கே தடியாய் இரண்டு ஆண்கள் நின்று கொண்டிருந்தனர்.
விஜய் யார் என்று கேட்காமல் ஒரு பார்வை மட்டும் பார்த்து நின்றான். மனதிற்கு அவனிற்கும் சரியாகப் படவில்லை.
“உள்ள போ” என்று மீண்டும் அதட்டலாக சொல்லவும், உள்ளே சென்று வெளியே நிற்பவர்களின் பார்வை வட்டதிற்குள் வராதவாறு நின்று கொண்டாள். அவள் நிற்பதை பார்த்தவன் சோஃபாவில் அமருமாறு சைகை காட்டி அவர்களிடம் திரும்பினான்.
“யாருடா நீங்க?” என்றான் கைகளை கட்டி தோரணையாக.
“கீழ வா, அக்கா உன்னை பார்க்கணுமாம்”
“எந்த அக்கா?” என்றான் பொறுமையாகவே.
“எம் எல் ஏ அக்கா” என்று எம் எல் ஏ வின் மனைவியை சொன்னர்.
“எதுக்கு?”
“எல்லாம் சொல்ல முடியாது, வாடா” என அவர்கள் சொல்ல,
“அடி தடி ல இறங்க வேண்டாம்னு பார்க்கிறேன். ஒழுங்கா பேச முடிஞ்சா பேசு, இல்லை கிளம்பிட்டே இரு, எந்த அக்காவையும் பார்க்க முடியாது, போங்கடா ஆனதை பாருங்கடா” என்றான் வாய் திறந்து வலி அதிகமான போதும் அதனை முகத்தினில் சிறிதும் காட்டாமல்.
“இவ்வளவு அடி வாங்கியும் நீ அடங்கலையே” என்றான் அதில் ஒருவன்.
மெதுவாக சிரித்தவன் “இவ்வளவு அடிவாங்கியும் ஸ்டெடியா நிக்கறேன்னா என்னை பத்தி தெரியவேண்டாமா, இப்படி நிக்கறவனுக்கு அடிக்க எவ்வளவு நேரம் ஆகும்? முட்டாள் ரௌடியாவே இருக்காதீங்கடா!” என்றான் புன்னகையோடு.
“எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாண்டா இவன்னு வடிவேல் மாதிரி நினைக்காதீங்கடா, உங்களுக்கு அவ்வளவு தான் தெரியும். நீங்க என் ஏரியா இல்லை போல, அதான் என்னைத் தெரியலை” என்றும் சொல்ல,
“என்னடா இவனை எதில் சேர்ப்பது” என்று பார்த்து இருந்தனர்.
“டைம் வேஸ்ட் பண்ணாத, எனக்கு தூக்கம் வருது” என்றான் அசால்டாக.
கைபேசியில் அழைத்தவர்கள் “அக்கா வரமாட்டேங்கறான், என்ன விஷயம்னு சொன்னா தான் வருவானாம்” என்றனர்.
பதிலை கேட்டவர்கள் “அதை உன் கிட்ட தான் சொல்ல முடியுமாம்” என விஜயிடம் சொல்ல,
“அப்போ இங்கே வரச் சொல்லு” என்றான்.
“ஏய், என்ன எங்க அக்காவை உன் இடத்துக்கு வரச் சொல்வியா” என ஒருவன் பேசும் போதே பட்டென்று அவனின் கன்னத்தில் அறைந்தான்.
அறை என்றாலும் அப்படி ஒரு அறை! அடிப்பான் என்று எதிர்பாராமல் அறை வாங்கிய வேகத்துக்கு கீழே விழ, இன்னொருவன் ஆங் என வாய் திறந்து பார்த்தான்.
விஜய் அறைந்ததை கதவின் மறைவு மறைத்திருந்தாலும் யாரோ கீழே விழுந்த சத்தம் கேட்டு சைந்தவி சோபாவில் இருந்து எழ,
அதை உணர்ந்தவன் அவளின் புறம் பாராமலேயே “உட்கார்” என சைகை செய்தான்.
ஒரே நாளுக்குள் எத்தனை நிகழ்வுகள் சைந்தவி மிகவும் சோர்ந்து போனாள்.
வாழ்க்கை என்ன வைத்திருக்கிறது என்று பயமாக இருந்தது. விஜயின் இந்த பயமின்மை தான் அவளை முதல் முதலாக அவனின் புறம் மிகவும் ஈர்த்தது. ஆனால் இப்போது அதுதான் மிகவும் பயத்தைக் கொடுத்தது.
முகத்தை கைகளில் புதைத்து அமர்ந்து கொண்டாள்.
அவர்கள் இருவரும் கீழே இறங்கிச் செல்ல, திரும்பி விஜய் இவளை பார்த்தான். இவள் அமர்திருந்த விதம் எதோ செய்ய, “நிறைய பிரச்சனைங்க வருது, நான் போயிடட்டுமா” என்றான்.
கைகளில் முகம் புதைத்து இருந்தவள் சரேலென முகம் நிமிர்த்தி இவனை பார்த்தாள்.
“எல்லோரையும் விட்டுட்டு வந்தேன்! ஏன்? உன்னையும் விட்டுட்டு வந்தேன்! அதுக்காக என்னை விட்டுட்டு போயிடுவியா நீ” பார்வையில் அப்படி ஒரு தீவிரத்தோடு கேட்டாள்.
அவளின் பார்வை அவனை குற்றம் சாட்டியது. “இல்லை.. அது..” என விஜய் அவசரமாக மறுக்க,
“பேசாதே” என்பது போல அவனை நோக்கி கை நீட்டியவள்,
“போயேன், போ! யார் உன்னை கேட்பா? அதுதானே இவ்வளவு நாளா நீ என்னை தேடக் கூட இல்லை, போ! ஆனா போயிட்டு கொஞ்சம் நேரத்துல கண்டிப்பா என்னை தேடு! ஏன்னா நான் உயிரோட இல்லாதது உனக்கு தெரியணும் தானே!” என கண்களில் நீர் பெருக கோபமாகப் பேசினாள்.
“சவீ ஏன் இப்படி எல்லாம் பேசற?” என்று பதறி அருகில் வர,
“கிட்ட வராத, வந்தா அடிப்பேன், போ, போ!” என்றவள் ரூமின் உள் சென்று கதவை மூடிக் கொள்ள, பின் செல்ல முடியாமல் வாயில் அழைப்புமணி ஒலித்தது.
சென்றால், அங்கே ஒரு பெண்மணி இருந்தார். அவனிருந்த மனநிலையில் விஜய் “என்ன?” என்று கேட்காமல் பார்த்து மட்டும் நின்றான்.
“எனக்கு உங்க கிட்ட ஒரு உதவி வேணும்?” என்றார்.
“உதவியா?” என்று யோசனையாகப் பார்த்தவன், “உங்களுக்கு உதவி செய்ய எனக்கு முடியுமா தெரியலை! முடிஞ்சாலும் செய்ய விருப்பமில்லை!” என்றான் பளிச்சென்று.
“என் வீட்டுக்காரர் செஞ்சது தப்பு தான் தம்பி, உங்களை இழுத்து விட்டிருக்கக் கூடாது. அப்போவாவது மூர்த்தி ஏதாவது சொல்லுமான்னு தான் செஞ்சாரு. ஆனா..” என்றவருக்கு அதற்கு மேல் பேச இயலவில்லை. கண்களில் நீர் பெருக அவருக்கு தொண்டை அடைத்துக் கொண்டது.
“சின்ன புள்ள தம்பி, அவன் எங்க கூட்டிட்டு போயிருப்பான்னு மூர்த்திக்கு தெரியும்னு எல்லோரும் சொல்றாங்க, ரெண்டு நாளைக்கு முன்ன தான் வட்டிக்கு மூர்த்தி கிட்ட ஒரு லட்சம் வாங்கியிருக்கான், அப்படி பணம் வாங்கறவங்க என்ன செய்யறாங்கன்னு ஒரு கண்ணு எப்பவும் மூர்த்தி வெச்சிருக்குமாமே” என்றார்.
அதற்கு மேல் பேச முடியாமல் அப்படி ஒரு அழுகை.
“நீங்க மட்டும் உள்ள வாங்க” என்று விஜய் அழைக்க,
அவர் உள்ளே வரவும் “அதெப்படி தனியா அனுப்ப” என்று அந்த அடியாளில் ஒருவன் முணுமுணுக்க,
“நீங்க இருங்க” என்று அந்த பெண்மணி சொல்லி உள்ளே வந்தார்.
“உட்காருங்க” என்றவன், ரூமின் உள் செல்ல, அங்கே சைந்தவி தலையணையில் முகம் பதித்து படுத்து இருந்தாள்.
“சவீ எம் எல் ஏ வைஃப் இங்கே வந்திருக்காங்க. வா. நான் மட்டும் பேச முடியாது!”
அவளிடம் அசைவில்லை, “வா சவீ” என அவளின் முகம் நிமிர்த்த முற்பட, “நீ போ, நான் வர்றேன்” என்றாள்.
“சீக்கிரம் வா” எனச் சொல்லி அவன் வெளியே போகப் போக,
“டேய்! ஷர்ட் போட்டுட்டு போடா” என அவள் சத்தம் கொடுக்க, அப்போதுதான் இவ்வளவு நேரமாக வெற்றுடம்பில் இருப்பதை உணர்ந்தவன் உடையை எடுத்து மாட்டினான்.
பின் “வா” என, எழுந்து உடன் வந்தாள், அங்கே பரிதாபமாக ஒரு பெண்மணி அமர்ந்திருப்பதை பார்த்து, “என்ன?” என விஜயின் புறம் திரும்ப, “ஹெல்ப் வேணுமாம்” என்றான்.
“என்ன ஹெல்ப்?” என்று புரியாமல் பார்த்தாள்.
எம் எல் ஏ வைஃப் முன் சென்று அமர்ந்தவன், “பாருங்க எனக்கும் மூர்த்திக்கும் எந்த சம்மந்தமுமில்லை, அவனோட விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாது. அதுவுமில்லாம வட்டிக்கு குடுத்து வாங்குவான், கட்ட பஞ்சாயத்து பண்ணுவான். அதுக்காக இந்த மாதிரி பொண்ணுங்க விஷயத்துல எல்லாம் உதவி பண்ண மாட்டான், தலையிட மாட்டான்!” என்றான் ஸ்திரமாக.
“அவர் பண்ணினாருன்னு சொல்லலை தம்பி, அவர் நினைச்சா கண்டுபிடிக்க முடியுமாமே”
“அதை அவர் கிட்ட போய் கேளுங்க, என்கிட்டே கேட்டா?”
எல்லாம் அமைதியாக பார்த்து நின்றாள் சைந்தவி.
“அவர் பொண்டாட்டி சொன்னா மட்டும் தான் கேட்பாராம். அந்த பொண்ணை சாயந்தரம் போய் பார்த்தேன். என் தம்பி மேல கைவெச்சவங்களுக்கு எல்லாம் எந்த உதவியும் பண்ண மாட்டேன்னு சொல்லிடுச்சு” என்று அழுகையில் வாய் மூடி தேம்பினார்.
“அதுதானே நிஜம், உங்க பொண்ணு போனதுக்கு என்னை இந்த மாதிரி பண்ணியிருக்க வேண்டாம் இல்லையா, அப்போ யார் உங்களுக்கு உதவுவா?” என்றான் அமைதியாக.
“என்னை அடிச்சது கூட பிரச்சனையில்லைங்க. இவளை கூப்பிட்டு விட்டாங்க, இவளுக்கு அங்கே ஏதாவது விரும்பத்தகாதது நடந்திருந்தா, இந்நேரம் நீங்க இங்க உட்கார்ந்து கூட பேசியிருக்க மாட்டீங்க. உங்க வீட்டுக்காரன் பொணமா இருந்திருப்பானோ என்னவோ”
“இப்போ, இப்போ கூட எப்படி வந்து பேசினாங்க தெரியுமா உங்க ஆளுங்க? அதெல்லாம் இப்போ பேச வேண்டாம்! விட்டுடலாம்! என்னால இதுல எதுவும் செய்ய முடியாது!”
“என் வீட்டு பொண்ணுக்கு பாதுகாப்பு இல்லாத போது, அடுத்த வீட்டு பொண்ணுக்கு உதவற அளவுக்கு ரொம்ப நல்லவன் எல்லாம் நான் கிடையாதுங்க, நீங்க கிளம்புங்க!”
“உங்களுக்கு தெரியாது எந்த பிரச்சனையும் என்னால வேண்டாம்ன்னு காலையில இருந்து வர்றவன் போறவன் அடிச்ச அடி எல்லாம் நான் தாங்கிட்டு இருந்தா இவ வந்து நிக்கறா அங்க!”
“எப்படி இருந்தது தெரியுமா எனக்கு, இப்போ எனக்கு யோசிச்சா கூட நெஞ்செல்லாம் பதறுது. அதெல்லாம் சொல்ல முடியாது, நீங்க கிளம்புங்க!” என்றான் சிறிதும் தாட்சண்யமின்றி.
“நடந்தது தப்பு தான் தம்பி, நான் உங்க கால்ல கூட விழுந்து மன்னிப்பு கேட்கறேன்” என்று அவர் சட்டென்று எழுந்து அவனின் கால்களில் விழுந்து அதனை பிடிக்கப் போக,
“ஐயோ என்ன பண்றீங்க?” என்று கத்தினான்.
அந்த பெண்மணியின் செய்கையை மலைத்து பார்த்து நின்றாள் சைந்தவி.
“எனக்கு இப்போதைக்கு உங்களை விட்டா வேற வழியில்லை தம்பி, அவன் பொண்ணுங்களை கூட்டிட்டு போய் வித்துடுவானாமே, ஏதேதோ சொல்றாங்க, ஒருவேளை நிஜமாவே காதல்ன்னா கூட என் பொண்ணுனால அவனோட எல்லாம் இருக்க முடியாது தம்பி. அவ கஷ்டப் படுவா, ஆறு மாசம் கூட இருக்க மாட்டா. பத்தாவது இப்போ தான் முடிச்சா தம்பி. அவளுக்கு உலக விவரம் கூட பத்தாது” எனக் கண்களில் நீரோடு கெஞ்சினார்.
“என்னோட ஒரே பொண்ணு தம்பி” என்று அவர் கெஞ்ச, பார்ப்பதற்கே பாவமாக இருந்தது.
“இவர் இதுல என்ன பண்ண முடியும்?” என்று சைந்தவி அப்போதுதான் வாய் திறந்து கேட்டாள். “ஆறு மாதம் கூட இருக்க முடியாது” என்ற சொல் அவளை அசைத்து இருந்தது. எதோ ஒரு வகையில் தன்னை அந்த இடத்தில் நிறுத்தி பார்த்தாள்.
“என் அம்மா இப்படி என்னை தேடவில்லையே” என்ற எண்ணம் வெகுவாக ஓங்கியது.
“மூர்த்தி நினைச்சா அவங்க எங்க போயிருக்காங்க கண்டு பிடிக்கலாம். அவனால முடியும். அதை தெரிஞ்சு சொன்னா போதும். எப்படியாவது என் பொண்ணை கூட்டிட்டு வந்துடுவேன்”
“மூர்த்தி கவுன்சிலர், உங்க வீட்டுக்காரர் எம் எல் ஏ, அவருக்கு இன்னும் பவர் அதிகம்” என்றவனிடம்.
“அப்படி தான் தம்பி சொல்லிக்கறாரு, ஆனா இதுவரை ஒரு சின்ன விஷயம் கூடத் தெரியலை, கமிஷனரை கூட சாயந்தரம் போய் பார்த்துட்டு வந்தாரு”
“எல்லா ஊர் பக்கமும் பேசறாரு, ஆள் அனுப்பறாரு, ஆனா எதுவும் தெரியலை” என்றார் பாவமாக.
“சின்ன பொண்ணு, பேசி பாருங்களேன் உங்க மாமாகிட்ட” என சைந்தவி சொல்ல,
“இதுக்கு உள்ள நுழைஞ்சா வெளில வர்றது அவ்வளவு சுலபமில்லை சவீ” என்றான்.
“பரவாயில்லை” என்றாள் சைந்தவி.
“புரியாம பேசற நீ” என விஜய் சொல்ல,
என்னவோ அந்த தாயின் அழுகை, “அவர் சொல்வது போல அந்த பெண்ணை விற்று விட்டால் அல்லது உண்மையில் காதல் என்றாலும் அந்த பெண்ணினால் இருக்க முடியாவிட்டால், நான் கடந்து வந்தேனே அந்த சூழலை. என்னுடைய அம்மா எனக்காக இப்படி எதுவும் அழவில்லையே!” பல மாதிரி மன குழப்பங்கள். அதுவும் அந்த பெண்ணின் வயது , அறியாப் பருவம் தானே!
“ஒரு முயற்சி பண்ணுங்க” என்றாள் ஸ்திரமாக.
“பிரச்சனை நம்மை நோக்கி திரும்பவும் வாய்ப்பிருக்கு” என்றவனிடம்,
“எந்த பிரச்னையும் இல்லாம போய் அடி வாங்கிட்டு வந்திருக்கோம். ஒரு நல்லதுக்காக ஒரு ரிஸ்க் எடுக்கலாமே” என்றாள்.