“மா, நீ போய் முதல்ல பூவையும் அவ புள்ளையையும் பாரு” என்று ரூமின் உள் அனுப்பியவன், அமைதியாக அமர்ந்து கொண்டான்.
பணம் மண்டை காய்ந்தது, எல்லாம் இவர்கள் இருவரிடமும் தானே கொடுதேன், தனக்கென்று சேமிப்பு வைத்துக் கொள்ளவில்லை. வைத்துக் கொள்ள தோன்றவில்லை.
ஒரு ஆயிரம் ரூபாய் கடன் நெஞ்சின் அடியாழம் வரை நின்றிருக்க, அதனை தீர்க்க முற்பட்டதொடு, சைந்தவி வாழ்க்கையில் செட்டில் ஆகட்டும் பின்பு தன் வாழ்க்கையை பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து பணம் என்ற ஒன்றை வைத்துக் கொள்ளவேயில்லை. ஒரு மாதிரி தண்டனை அவனுக்கு அவனே கொடுத்துக்கொண்டது.
இதோ இப்போது அவளிடம் சென்று விட்டான், பெரிதாக பணம் கிடையாது, கையில் சில ஆயிரங்கள் இருக்கும். ஆனால் ஹாஸ்பிடல் பில் கட்ட அது போதுமா தெரியவில்லையே.
யோசிக்கலாம் என்று நினைத்தவன், அமைதியாக அந்த ரூம் இருக்கும் வராண்டாவின் இருக்கையில் அமர்ந்து கொண்டான். பின்பு மகப்பேறு மருத்துவர், ட்யுட்டி என்று வந்த வண்ணம் இருக்க, குழந்தைகள் மருத்துவரிடம் குழந்தையை இவர்கள் எடுத்துப் போய் காண்பிக்கச் சொல்ல, மூர்த்தியோடு இவனும் சென்றான்.
அவர்கள் குழந்தை நன்றாக இருப்பதாக சொல்லி, நாளை டிஸ்சார்ஜ் செய்து கொள்ளலாம் என்று சொல்லி, குழந்தைக்கு தடுப்பூசி போடும் அட்டவனையை கொடுக்க, வாங்கி கவனமாகக் கேட்டுக் கொண்டான் மூர்த்தி.
பின் ரூமிற்கு வர, தான் கிளம்புவதாக விஜயன் சொல்லவும், “இங்க நீ மாமாவோட இரு” என்றாள் பூங்கோதை.
“மணி ஆறுக்கு மேல ஆகிடுச்சு, இப்போ நான் கிளம்பினாலே வீட்டுக்கு போக எத்தனை மனியாகும்னு தெரியலை, நாளைக்கு ஆஃபிஸ் இருக்கு, நான் ப்ரீயா இருக்கும் போது வர்றேன். இங்க என்ன உனக்கு ஆளா இல்லை, அம்மா அத்தை ரெண்டு பேர் இருக்காங்க, மூர்த்தி கூப்பிட்ட குரலுக்கு வர அத்தனை பேர் இருக்காங்க, நான் இருந்து என்ன பண்ண போறேன். அங்க வீட்ல அவ தனியா இருப்பா போகணும்” என்று சொல்லிவிட்டான்.
“அப்போ நீ என்னை இந்த நிலமையில கூட விட்டு போவியா, ஏன் அந்த புள்ள தனியா இருக்காதா, நீ போய் இருவது இருவத்தஞ்சி நாள் தானே இருக்கும். அதுக்கு முன்ன அந்த புள்ள தனியா தானே இருந்தது” என்று பேசினாள்.
“மூர்த்தி, புள்ள பெத்திருக்கா, உடம்பை பார்க்கச் சொல்லு, நான் ரொம்ப பொறுமையாத் தான் இருக்கேன். என்னை பேச வைக்க வேண்டாம், நான் கிளம்பறேன்” என்று சொல்லி நிற்காமல் கிளம்பியே விட்டான்.
அவன் சென்ற பிறகு பூங்கோதை, விஜயனை அத்தனை வசவு, பிள்ளை பெற்றவள் என்பதால் கடிந்து கொள்ள இயலாமல் மூர்த்தியின் அம்மாவும் மூர்த்தியும் இருந்தனர்.
அப்போதும் விஜயனின் அம்மா, “எல்லாம் தானே கண்ணு செய்யறான். செய்வான் கண்ணு இவ்வளவு பேசாதே” என்று சொல்லியேவிட்டார்.
“அப்போ என்னை விட அவன் உனக்கு முக்கியமா?” என்று ஆரம்பிக்க…
“இப்போ நம்ம புள்ளைய பார்க்கறதை விட அவன் தான் உனக்கு முக்கியம் போல” என்று மூர்த்தி அமைதியான ஆனால் அழுத்தமான குரலில் பேச அதன் பிறகே சற்று அடங்கினாள்.
பூங்கோதைக்கு விஜயன் திருமணதினான கோபம் இன்னும் அடங்கவே இல்லை. “எப்படி, நான் அப்பா அம்மா இவன் என்று உழைத்துக் கொட்ட கொஞ்சமும் பொறுப்பில்லாமல் ஒரு பெண்ணை திருமணம் செய்து வந்து நிற்பானா. அந்த பெண்ணிற்கும் சேர்த்து நான் சம்பாதிக்க வேண்டுமா?” என்ற கோபம். இன்னுமே அடங்கவே இல்லை.
நினைக்கும் போதெல்லாம் அவனின் பொறுப்பற்ற தனம் கோபத்தை பொங்க வைக்கும். “எப்படி இப்படி ஒருவனை நம்பி பெற்றவர்களை விட்டு வர முடியும். இத்தனை வருடம் அருமை பெருமையாய் வளர்த்த பெற்றோர் இவளுக்கு ஒன்றும் இல்லையா. அப்போது எப்படி இவனுடன் மட்டும் இருப்பாள்” என்று சைந்தவியை பற்றியும் நல்ல அப்பிராயம் கிடையாது. அதே போல சைந்தவி இவனை விட்டும் சென்று விட இன்னும் கீழான எண்ணம் தான் அவளைப் பற்றி.
ஆனால் தன்னுடைய பொறுப்பற்ற தனத்திற்கு தான் எந்த கேள்வியும் கேட்காமல் விஜயன் சம்பாதிக்கும் பணம் அத்தனையும் அம்மாவிடமும் அவளிடமும் கொடுத்தான் என்று பூங்கோதைக்கு புரியவில்லை.
வீடு வந்த விஜயன் காலையில் இருந்து ஹாஸ்பிடலில் இருந்தது, சோர்வடைய வைத்திருக்க, வந்ததுமே குளித்து படுக்கையில் படுத்துக்கொண்டான்.
“சாப்பிட என்ன வேணும்? நான் எதுவுமே செய்யலை, ஆர்டர் பண்ணிடலாமா?” என்று சைந்தவி கேட்க…
“சரி” என்று கண்களை மூடி கொண்டான்.
ஆர்டர் செய்து வந்தவள், “என்ன ஆச்சு, ஏன் டல்லா இருக்கீங்க?” என்று கேட்க…
“ஒண்ணுமில்லை டயர்டா இருக்கு”
“திரும்ப வலி எதுவும் இருக்கா” என்றாள் கவலையாக.
“இல்லையில்லை அந்த மாதிரி எதுவும் இல்லை”
ஆம்! நாளையிலிருந்து தான் அலுவலகம் செல்லப் போகிறான். இத்தனை நாட்கள் வீட்டில் இருந்து தான் வேலை செய்தான். உடல் தேறட்டும் என்று.
இந்த நாட்களாக உடலின் காயங்கள் மறைந்து பழையபடி மீண்டிருந்தான்.
கொஞ்சல்கள் குலாவல்கள் இருந்த போதும் அதனை மீறி வேறொன்றும் நடக்கவில்லை.
அவனுக்கு விரைவில் சரியாக வேண்டும் என்பதே சைந்தவியின் எண்ணமாக இருக்க, அவனுக்கும் அதே. இப்படி காயங்களோடு அலுவலகம் செல்ல முடியாதே.
மிஸ் கமாலி ஷா வேறு “ஏன் விஜயன் வொர்க் ஃப்ரம் ஹோம் கேட்டான், போலிஸ் எதுக்கு கூப்பிடாங்க” என்று வேறு மீண்டும் ஒரு முறை சைந்தவியிடம் கேட்டிருக்க…
“அதை நீங்க விஜயன் கிட்ட தான் கேட்கணும்” என்றிருந்தாள்.
அதையும் மீறி விஜயனும் சைந்தவியும் ஒருவரைப் பற்றி ஒருவர் அதிகம் தெரிந்து கொள்ள நினைத்தனர். உண்மையில் இவர்களின் காதல் என்ன வகையறா என்று வரையறுக்க முடியாது. இருவருக்கும் ஒருவரைப் பற்றி அதிகம் தெரியவே தெரியாது.
உணவை முடித்து சைந்தவி தளர்வாக படுக்கையில் சாய்ந்து அமர்ந்திருக்க, படுக்கையில் படுத்திருந்த விஜயன், உருண்டு அவளின் மடியில் தலைவைத்துக் கொண்டான்.
சைந்தவி நைட்டி அணிந்திருக்க, அவளின் உடலோடு உறவாட நினைத்தவனுக்கு, உடையோடு மட்டுமே முடிந்தது. மெதுவாக புரண்டு, அவளின் வயிற்றின் மேல் உடையிலே முத்தம் வைத்து முகத்தை புதைத்துக் கொண்டான்.
“யாரோ டயர்டா இருக்குன்னு சொன்னாங்க?”
“யாரும் சொல்லலை, நான் தான் நானே தான்”
அவனின் தலையில் கைகளை அலைந்தபடி, “இப்போ போச்சா?”
“போகலை இருக்கு” என்று சொல்லியபடி இன்னும் அழுத்தமாய் முகத்தை பதித்தவன், “ஆமா, இந்த புடவையெல்லாம் நீ ஏன் கட்டுறதில்லை?”
“ஏன் கட்டினா மட்டும் நீங்க என்ன செய்துடுவீங்கலாம்?” என்றாள் சிறு புன்னகையோடு.
“கட்டினா தானே தெரியும்”
“கல்யாணத்துக்கு ரெண்டு நாளும் அதுதானே கட்டியிருந்தேன்”
“அதுவா அது கல்யாணத்துக்கு, நான் உங்க அப்பாவும் அம்மாவும் வர்றதால டென்ஷனா இருந்தேன். சரியா பார்க்கவேயில்லை”
“என்ன பார்க்கலையா?” என்று செல்லமாய் அவனின் முதுகில் அடித்தாள்.
“எனக்காக எப்போ கட்டுவ”
“எப்போ நீங்க சொல்றீங்களோ அப்போ”
“ம்ம்ம், சீக்கிரமே சொல்றேன்” என்றவன் இன்னும் இறுக்கமாய் அவளை கட்டிக்கொண்டு உறங்க முற்பட்டான்.
“அடப்பாவி இதுக்கு தான் இந்த அலப்பறையா” என்று கிண்டல் செய்தவள்,
“எழுந்துருங்க என் மேல இருந்து” என்று அவனை எழ வைத்து…
அவன் நேராக படுத்ததும், அவன் மேல் படுத்துக் கொண்டு “இப்போ தூங்கலாம்” என்று சொல்ல… சிரித்தவாறே அவளை அணைத்துக்கொண்டான்.
“அடப்பாவிங்களா நீங்கல்லாம் வீட்டை விட்டு ஓடி வந்து கல்யாணம் கட்டிக்கிட்டீங்களா? அது எதுக்கு?” என்று காலம் அவர்களை கிண்டல் செய்தது.
எதையும் கவனத்தில் கொள்ளாமல் எம்பி அவனின் உதட்டில் ஒரு முத்தம் வைத்து, அவன் அதனை கிரகிக்கும் முன்னர், அவன் வெற்று மார்பில் ஒரு முத்தம் வைத்து, அவனை பதிலுக்கு அணைத்துக் கொண்டாள்.
“இவளுக்கு ஏன் என்னை இவ்வளவு பிடிக்கிறது” என்ற விடையில்லா கேள்வியை அவனுக்குள் கேட்டுக்கொண்டே விஜயன் உறங்கிப்போனான்.
காலைவரை இருவருக்கும் ஆடாமல் அசங்காமல் அப்படி ஒரு ஆழ்ந்த உறக்கம்.