பெரிய ஹாஸ்பிடல் தான், ஆனாலும் இவர்கள் ஏரியா கூட்டம் சற்று இருந்தது, கவுன்சிலரின் மனைவி அல்லவா.
“டேய், இன்னாங்கடா பண்றீங்க, கிளம்புங்க கிளம்புங்க” என்று அவர்களை இவன் சென்றதும் விரட்டினான்.
“எதா இருந்தாலும் ஊட்டாண்ட கண்டுக்கோ, இப்போ கிளம்பிகினே இரு, ஆசுபத்திரில சவுண்டு உட்டுகினு போங்கடா” என்று விரட்டினான்.
இவன் அணிந்திருந்த ஆடைக்கும் இவனின் தோற்றத்திற்கும் இவன் பேசும் மொழிக்கும் சற்றும் சம்மந்தம் இல்லை. ஆனாலும் கூட்டம் இவன் பேச்சிற்கு கட்டுப்பட்டு அமைதியானது.
பின்னே இத்தனை நேரம் ஹாஸ்பிடல் நிர்வாகம் திணறிக் கொண்டிருந்தது.
வேகமாக வந்த ரிசப்ஷனில் இருந்த பெண், “உள்ளேயும் நாலஞ்சு லேடீஸ் ரொம்ப சத்தம், அவங்களையும் அனுப்பிவிடுங்க சர்” என்றாள் பரிதாபமாக.
“நான் பார்த்துக்கறேன்” என்றபடி அவன் அங்கே சென்றான்.
பிரசவ அறைக்குள் பூங்கோதை இருக்க, வெளியில் மூர்த்தி, அவனின் அம்மா, இவனின் அம்மா, மற்றும் அவனின் ஏரியா பெண்கள் ஒரு பத்து பேருக்கு மேல் இருப்பர்.
மூர்த்தி டென்ஷனாக நின்றிருந்தான்.
“இன்னாத்துக்கு இம்புட்டு டென்ஷனு, நீ, எங்கம்மா, உங்கம்மா, உன்னோட அல்லக்கைன்னு ரெண்டு பேர் இருப்பானுங்கலே அவனுங்க மட்டும் இருக்கீங்க, பாக்கி எல்லாரையும் கிளப்பற நீ இப்போ, ஆசுபத்திரி யா இன்னா இது, வேற பேஷன்ட் இல்லை?” என்றான் காட்டமாக.
“நான் சொன்னேன் கேட்கலை” என்றான் மூர்த்தி தயங்கி தயங்கி. மூர்த்தியின் பேச்சுக்கள் எப்போதும் விஜயனிடம் மிகவும் பவ்யமாய் தான் இருக்கும்.
மூர்த்தியின் அம்மா “வீட்டுக்கு வந்ததும் சொல்றோம், எல்லோரும் இப்போ கிளம்புங்க” என்று சொல்ல, எல்லோரும் முனகிக் கொண்டே சென்றனர். “அப்படியே வெளில இருக்குற எல்லோரையும் கூட்டிட்டு கிளம்புங்க” என்றான் சத்தமாக.
மூர்த்தி அமைதியாக அமர்ந்திருக்க… “நல்லபடியா பொறக்கும், டென்ஷன் ஆகாத” என்று அமைதியாக உடன் அமர்ந்து கொண்டான்.
சில நிமிடம் கழித்து, “உனக்கு எதுவும் குடிக்க வாங்கிட்டு வரட்டுமா?” என்று கேட்க…
“இல்லை, வேண்டாம்”
“அட, அவ நல்லா குழந்தையை பெத்தெடுப்பா” என்று மீண்டும் தைரியம் சொன்னான்.
பிரசவ அறைக்குள் உள்ளே யாரையும் ஹாஸ்பிடலில் விடவில்லை. இவர்கள் கும்பலாக செல்லவும், அவளின் அம்மா, அத்தையை கூட விடவில்லை.
இவனாக அங்கிருந்த சிஸ்டரை அழைத்து “எப்படி இருக்காங்க?” என்று கேட்டான்.
“பிரசவ வலி தான் சார், எப்போன்னாலும் குழந்தை பிறக்கும்”
சொல்லி சில நிமிடங்களில் குழந்தை பிறந்து விட்டது. நார்மல் டெலிவரி தாயும் சேயும் நலம், பெண் குழந்தை, மிகுந்த சந்தோசம் மூர்த்திக்கு.
மூர்த்தி எல்லோருக்கும் கைபேசியில் தகவல் சொல்ல, “யாரும் ஹாஸ்பிடல் வரக் கூடாது, ஒன்னு ரெண்டு நாள்ல வீட்டுக்கு அனுப்பிடுவாங்க, அங்கே வந்து பார்த்துக்கச் சொல்லு” என்று விஜயன் சொல்லிக் கொண்டிருந்தான்.
அவன் வார்த்தைக்கு மறுபேச்சு ஏது மூர்த்தியிடம்.
சைந்தவியை அழைத்த விஜயன், அவனின் அக்காவிற்கு குழந்தை பிறந்திருப்பதை சொல்ல…
இருவரும் நலமாக இருப்பதை அறிந்து கொண்டவள், “நான் வரட்டுமா?” என்று கேட்க, அதுவே அவனின் முகத்தில் புன்னகையை வரவழைத்தது.
“அப்புறமா வருவியாம், இங்க பார்த்துட்டு நானே வந்து கூட்டிட்டு வர்றேன், நான் வர எவ்வளவு நேரம் ஆகும்னு தெரியலை பார்த்துக்கோ” என்று அவன் சொல்லி வைத்தான்.
அவனின் அம்மா அருகில் வந்தவர் “விஜி இதெல்லாம் நாம குழந்தைக்கு செய்யணும்” என்று ஒரு பேப்பரைக் கொடுத்தார்.
குழந்தைக்கு தேவையான பொருட்கள், பின் குழந்தைக்கு நகைகள் என்று லிஸ்ட் நீண்டது. நகைகள் எல்லாம் சேர்த்தால் சில லட்சம் வரும்.
பார்த்ததும் பட்டென்று கோபம் வந்தது, ஆனாலும் கட்டுப்படுத்தியவன், “எப்போ செய்யணும்?”
“எப்படியும் ஒரு மாசத்துக்குள்ள”
“சரி, நான் உங்கக்கிட்ட இத்தனை வருஷம் குடுத்த பணம் எங்கே வச்சிருக்கீங்க?”
“அதுவா, அதை ஏன் கேட்கற? செலவாகிடிச்சு!” என்றார் அவசரமாக.
“என்கிட்டே பணம் கிடையாதும்மா?”
“கடன் வாங்கிக்கோ, அப்புறம் கட்டிடு”
ஏதோ சொல்லிக் குடுத்து பேசுவது போலத் தோன்ற “யார் கிட்ட வாங்கட்டும்?”
“நம்ம மூர்த்தி மாப்பிள்ளைக்கிட்டயே வாங்கிக்கோ. அப்புறம் திருப்பி குடுத்துடு கொஞ்சம் கொஞ்சமா”
“இது நீங்க பேசறீங்களா இல்லை பிரசவத்துக்கு முன்னமே பிரசவம் முடிஞ்ச பிறகு என்கிட்டே இப்படி பேசணும்ன்னு பூவு சொல்லிக் குடுத்துச்சா?”
“ஆங்! எப்படி கரிக்டா சொல்ற?” என்று அசந்தவர், உடனேயே “இல்லையே இல்லையே” என்றார்.
“மா, உங்களையும் தெரியும், உங்க பொண்ணையும் தெரியும்,, இப்போ என்கிட்டே காசு இல்லை, இதெல்லாம் செய்ய முடியாது. இதுவரை சம்பாரிச்சதை எல்லாம் உங்க ரெண்டு பேர் கிட்ட தானே குடுத்தேன்” என்று நல்லவிதமாகவே பேசினான்.
“அதெல்லாம் முடியாது, செய்யணும்” என்று அவர் வற்புறுத்தி பேசினார்.
பூவிடம் மூர்த்தி பேசிக் கொண்டிருக்க… மூர்த்தியின் அம்மாவின் கையில் இருந்த குழந்தையை பார்த்தான்.
அப்படியே அவளின் அம்மாவை கொண்டு இருக்க… “என்ன பூவு அப்படியே பொண்ணு உன்னை மாதிரியே இருக்கா?”
பூவின் முகமும் புன்னகையில் மலர்ந்தது.
பின்பு அவர்கள் பேசட்டும் என்று வெளியில் செல்ல இருந்தவன், “எதுவும் குடிக்க சாப்பிட வாங்கிட்டு வரட்டுமாம்மா” என்றான் மூர்த்தியின் அம்மாவையும் அவனின் அம்மாவையும் பார்த்து.
“டீ கிடைக்குமா கண்ணு” என்றார் அவர்.
“இருங்க வாங்கிட்டு வர்றேன்” என்று அவன் சென்று விட… மூர்த்தியும் அவனின் அம்மாவின் கையில் இருந்த மகளை பார்க்க பூவை விட்டு நகர்ந்தான்.
அம்மாவை அருகில் அழைத்தவள் “அவன் கிட்ட சொல்லிட்டியா?” என்றாள்.
“அப்படி எல்லாம் சொல்லவிடாதே, வேணும்னா பணத்தை அவர்கிட்ட வாங்கிக்க சொல்லு, எனக்கு நிறைவா செய்யணும்” என்றாள்.
“நீ உன் உடம்பை பாரு, அதுக்கு நாள் இருக்கில்லை, பேசிக்கலாம்” என்று முடித்து விட்டார் அவர்.
டீ வாங்கி வந்து எல்லோருக்கும் குடுத்த விஜயன், பின்னும் வெளியில் சென்று அமர்ந்து கொண்டான்.
வீட்டிற்கு செல்ல எல்லாம் அவசரம் காண்பிக்கவில்லை. பெரிதாய் அவனின் தேவை கிடையாது. ஆனாலும் ஒரு வேளை தேவை இருந்தால் என்பதற்காக இருந்தான்.
மதியம் மூன்று மணியாகிவிட, மதிய உணவையும் எல்லோருக்கும் வாங்கிக் கொடுத்தான்.
அவனின் அம்மா, “ஆசுபத்திரிக்கு நாம தான் செலவு பண்ணனும் விஜி, முத பிரசவம்”
“நாம தான் பண்ணனும் சரி, உங்ககிட்ட குடுத்த பணம் எங்கே?” என்றான் மீண்டும்.
“செலவாகிடிச்சு” என்றார் திரும்ப.
“மா, நீங்க பத்திரமா வெச்சிருப்பீங்க, இந்த மாதிரி செலவுக்கு பணம் வேணும்னு தானே உங்ககிட்ட குடுத்து வெச்சேன், இப்போ செல்வாகிடுச்சுன்னு சொன்னா என்ன அர்த்தம்?” என்று கடிந்தான்.
உடனே கண்களில் பொல பொல வென்று கண்ணீர் விட்டவர், “நீ என்னை திட்டுற, எல்லோரும் செய்யறதை தானே நானும் சொன்னேன்” என்று அவர் சொல்ல.
“மா, சும்மா அழுது என் கடுப்பை கிளப்பாதே. அமைதியா இரு., ஒன்னு நான் கொடுத்ததை கொஞ்சமாவது வெச்சிருக்கணும். இல்லை, உன் புருஷன் சம்பாத்தியத்துல என்ன செய்யணுமோ செஞ்சிக்கோ?”
“என்ன அவரு எதுவும் குடுக்கறதில்லைன்னு தெரிஞ்சும் இப்படி பேசற?” என்று அதற்கும் கண்ணீர் விட்டார்.
“இப்போ நான் இருக்கவா? போகவா?”
“பார்த்தியா எங்களை அம்போன்னு விட்டுட்டுப் போறேன்னு சொல்ற?” என்று அதற்கும் அழுது புலம்பினார்.