அதுவும் அவர்கள் இந்த நிகழ்வை மறக்க, சில நாட்கள் வடநாடு யாத்திரை சென்று வர, அங்கே வீட்டில் மகளை பார்க்கவும் வெடித்து விட்டனர்.
“வெளியே போ” என்று…
அது சைந்தவிக்குமே மறக்க முடியாத நிகழ்வு. அவளை “வெளியே போ” என்று சொன்னது.
ப்ரித்வி இல்லாவிட்டால் என்னவாகியிருப்பால் என்று அனுமானிக்க முடியாது.
ப்ரித்வியும் சைந்தவியும் அமர்ந்திருக்க… காஞ்சனா வேகமாக வந்தாள், அவளால் தாள முடியவில்லை.
“ஏய், எதுக்கு என் குழந்தையை வெச்சிருக்க குடுடி” என்று அடிக்குரலில் சீறினாள்.
சைந்தவியிடம் எந்த மாறுதலும் இல்லை, ரித்திகாவை இன்னும் வாகாக பிடித்துக் கொண்டாள்.
“எதுக்கு இங்க கத்தி சீன போடற, அவ உன் குழந்தை மட்டுமில்லை, எனக்கும் தான் குழந்தை. என் குழந்தையை என் தங்கை வெச்சிருக்கா, ஒழுங்கா கத்தமா போயிடு” என்று அதையும் விட அடிக்குரலில் சீறினான் ப்ரித்வி.
“இவர், இவர் என்கிட்டே இப்படியெல்லாம் பேச மாட்டார். நீ தான் சொல்லிக்கொடுக்கிற” என்று திரும்பவும் சைந்தவியிடம் பேச…
சில உறவுகள் இவர்கள் மேல் சுவாரசியமாய் பார்வையை பதித்தனர்.
ப்ரித்வி அருகில் இருந்தாலும் சைந்தவி மேல் ஒரு கண்ணை வைத்திருந்த விஜயன் அருகில் வர முற்பட,
காஞ்சனா அருகில் வந்ததும் விஜயன் எங்கே என்று பார்வை பார்த்தவளுக்கு அவன் அருகில் வர முயல்வது தெரிந்தது.
“வராதே” என்ற தலையசைவை கொடுத்து விட்டாள்.
விஜயன் நண்பனின் திருமணம் என்று வந்து விட்டான் தான், ஆனாலும் பயம். அவளின் சொந்தங்கள் சைந்தவியை எதுவும் பேசுவார்களோ என்று. அதனால் அவள் மீது எப்போதும் ஒரு பார்வை.
ஸ்கந்தநாதனும் மேகலாவும் கூட காஞ்சனா அங்கே செல்வதை பார்த்தனர், அச்சோ என்ன செய்கிறாள் இவள் என்பது போல. ஆனால் எழுந்து வரவில்லை. சொல்லியும் கேளாமல் அங்கே சென்று காஞ்சனா பேசுவது ஒரு வித ஒவ்வாமையை கொடுக்க, அண்ணனை அழைத்த மேகலா அவளை சென்று அழைத்து வாருங்கள் என்று சொன்னார்
“அவளுக்குக் கோபம்” என்று அவளின் அப்பாவும் ஒத்து ஊத,
“இங்க கல்யாணம் உங்க இன்னொரு பொண்ணுக்கு, புத்தியோட இருங்க, சொந்த பந்தம் எல்லாம் காஞ்சனாவைத் தான் தப்பா நினைக்கும். கல்யாணத்துக்கு ஆயிரம் பேர் வர்றாங்க, அந்த மாதிரி யாரோ வந்திருக்காங்க நமக்கு என்ன?”
“ப்ரித்வி, ப்ரித்வி எதுக்கு அங்கே போகணும்” என்று அவரும் அதிலேயே நின்றார்.
“அதுக்கு உங்களுக்கு என்ன போச்சு, ப்ரித்வி உங்க மாப்பிள்ளை, அவ்வளவு தான். நீங்க சொல்றதை தான் செய்யணும்னு எதிர்பார்க்காதீங்க” என்று சீற்றமாய் பேசிவிட்டார்.
காஞ்சனாவின் அப்பா வேகமாக அங்கே சென்றவர், “நீ வா காஞ்சனா” என்று மகளை இழுத்து வந்தார்.
“அத்தை, அத்தை, அவர் அவளோட இருக்கிறார்” என்று திரும்ப மேகலாவிடம் பேச…
“இங்க எல்லார் முன்னமும் சீன் க்ரியேட் பண்ணாத அமைதியா இரு. எதுன்னாலும் நம்ம வீட்ல தான் பேசணும், நாலு பேருக்கு முன்ன பேசவேண்டாம்” என்று அவளையும் அதட்டினார்.
ஸ்கந்தநாதன் வாயே திறக்கவில்லை.
ப்ரித்வி பேசியது, இப்போது அத்தையும் பேசுவது, மாமா எதுவும் பேசாமல் இருப்பது எல்லாம் அவளை உச்சபட்ச கொதிநிலைக்கு கொண்டு சென்றது.
சற்று நேரம் அமர்ந்திருந்தவள், மேடையில் இருந்த தங்கையிடம் சென்றாள், “அவங்களை அனுப்பு, அவங்க இருந்தா கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்லு” என்று சொல்ல…
பக்கத்தில் இருந்த ஜீவனின் காதில் நன்கு விழுந்தது.
சட்டென்று அவனைத் திரும்பி பார்த்த ஸ்னேஹா “நான் பார்த்துக்குறேன்” என்று அவனிடம் சமாதானம் மெல்லிய குரலில் சமாதானம் சொன்னாள்.
பின் அக்காவின் புறம் திரும்பியவள் “இப்படி நான் சொன்னா நீ கிளம்பு முதல்ல, நான் வேற பொண்ணு பார்த்துக்கறேன்னு சொல்லிடுவார். லூசு மாதிரி நடந்துக்காத, போ காஞ்சு” என்று தெளிவாய் சொல்ல, காஞ்சனாவால் தாளவே முடியவில்லை.
“உனக்கு என்னை விட இவர் தான் முக்கியமா?” என்று கேட்க,
“காஞ்சு இப்படி பேசக் கூடாது, தப்பு” என்று பொறுமையாய் பேசியவள், அம்மாவை அருகில் அழைத்து “இவளைக் கூட்டுட்டு போங்க” என்று சொல்லிவிட்டாள்.
வேகமாய் ப்ரித்வியிடம் சென்றவள் “என் குழந்தையைக் குடுங்க, நான் போறேன்”
வேகமாய் மேகலாவிடம் சென்ற ப்ரித்வி “மா, அவளை உங்களோட வெச்சிக்கங்க, என் உயிரை எடுக்கறா. எனக்கு இதுக்கு மேல பொறுமை கிடையாது. யாரோ பண்ணின வேலைக்கு எங்கப்பா குடுத்த தண்டனை இவ எனக்கு, என் காலேஜ் ஃபிரண்ட்ஸ் எல்லாம் இருக்காங்க” என்று அம்மாவிடம் சண்டையிட்டான்.
அதற்குள் சற்று தூரமாய் இருந்து கையசைத்து அவனை அழைத்த சைந்தவி “ப்ரித்வி ப்ளீஸ், நாங்க கிளம்பறோம், அவளை உன்னால ஹேண்டில் பண்ண முடியாது”
“நீ கிளம்பிடுவ, இதனால் நீ கிளம்பினேன்னு தெரிஞ்சா, அங்கே ஒருத்தன் கல்யாணத்தை நிறுத்திடுவான், இல்லை காஞ்சனாவை, அவங்க அப்பா, அம்மாவை எல்லாம் பொண்ணை மட்டும் விட்டுட்டு போங்கடான்னு சொல்லிடுவான்”
‘ப்ரித்வி வீட்லன்னா வேற, இங்க எல்லோரும் பார்ப்பாங்க”
“பார்த்துக்கலாம் சைந்து”
“சரி ரித்தியை பிடி, அதனால தான் அவ டென்ஷன் ஆகறா”
“ஒழுங்கா அவளை வெச்சிரு” என்று அவளிடம் மிரட்டலாய் பேசியவன், இடத்தை விட்டு அகல ஆரம்பித்தான்.
சைந்தவி மலங்க விழித்து நிற்க, அப்பாவின் கோபத்தில் ரித்திகா சிணுங்க, விஜயன் அவர்களின் அருகில் வந்து விட்டான்.
அவனை பார்த்ததும் ரித்தி அவனிடம் தாவ… அவளை அணைவாய் பிடித்துக் கொண்டவன், “ப்ரித்வி” என
“என்னடா?”
“பேபிக்கு பசிக்கும் என்ன சாப்பிட கொடுக்க?”
“உன் பேபியாயிருந்தா என்ன கொடுப்ப? அதையே கொடு!” என்று அவன் எரிச்சலில் பேசினான்.
பேசாமல் அவன் குழந்தையை தூக்கிக் கொண்டு டைனிங் ஹால் செல்ல, அவன் பின்னோடு சைந்தவியும் நகர்ந்தாள்.
“ப்ரித்வி, அவ நம்ம பேபி டா, தூக்கிட்டு வா, நான் சாப்பிடக் கொடுக்கிறேன்” என்று மேகலா சொல்ல…
“மா, அவ என்னோட சின்ன பேபி, நான் கொடுத்து விட்டது என்னோட பெரிய பேபிக்கிட்ட. அவ பார்த்துக்குவா. உங்களுக்கு பொண்ணு இல்லை போகுது, ஆனா அவ எனக்கு முதல் பொண்ணு புரியுதா! அவ கிட்ட என் இன்னொரு பொண்ணு இருக்கா”
“இதுல இவளுக்கு உடன்பாடு இல்லைன்னா இவ அப்பாவோட இப்படியே போயிட சொல்லு… நம்ம வீட்டுக்கு வரவேண்டாம்” என்று சொன்னவன் நண்பர்களை தேடி போய்விட்டான்.
இப்படி பேசுபவன் அல்ல ப்ரித்வி, இப்படி அவனைப் பேச வைப்பதால் மிகுந்த மனஉளைச்சல் அவனுக்கு.
“அவனைத் தொந்தரவு பண்ணாத மேகலா” என்று மனைவியிடம் சொன்னவர்,
“அவன் எப்படி சொல்றானோ செய் காஞ்சனா, இல்லை அவன் சொன்ன மாதிரி அவளை அனுப்பிடுங்கன்னு சொன்னா எங்களால எதுவும் பண்ண முடியாது. கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணலாம் கட்டாயப்படுத்தி வாழ வைக்க முடியாது. அவன் என்னோட ஒரே பையன், அவனோட சந்தோசம் எங்களுக்கு முக்கியம்” என்று அவர் பேசிக் கொண்டிருக்க…
ஒரு சின்ன பெண் வந்தவள், “அந்த அக்கா குழந்தையோட பேக் கேட்கறாங்க” என்று சொல்ல…
எல்லோரும் திரும்பிப் பார்க்க, வேறெங்கோ பார்த்தபடி சைந்தவி நின்று கொண்டிருந்தாள்.
மேகலா குழந்தையின் பொருட்கள் இருந்த பையை கொடுக்க… அதை வாங்கி அந்த சின்ன பெண் சைந்தவியிடம் கொடுக்கவும் அவள் மீண்டும் டைனிங் ஹால் சென்றுவிட்டாள்.
“உனக்கு என்ன பேசணும்னாலும் வீட்டுக்கு போய்ப் பேசணும், எங்க மானத்தை வாங்கக்கூடாது. எதுவும் கலாட்டா பண்ணின ப்ரித்வி அனுப்பறானோ இல்லை நாங்க அனுப்பிடுவோம்” என்று மிரட்டலாய் பேசினார்.
இத்தனை நாள் கையில் வைத்து தாங்கிய மாமியார் மாமனாரின் பேச்சுக்கள் அப்படி ஒரு அதிர்ச்சியை கொடுத்தது.
ப்ரித்வி என்றுமே விட்டுக் கொடுத்து போய்விடுவான், அதனால் ப்ரித்விக்கு அவளை பிடித்தமில்லை என்பதே பெற்றோருக்குத் தெரியவில்லை.
இருவரும் இணக்கமாய் இருக்கிறார்கள் என்று தான் அவளைத் தலையில் தூக்கி வைத்து ஆடியது.
இன்று என் தண்டனை அவள் என்று மகன் சொல்ல, ஸ்கந்தநாதனுக்கு என்ன சொல்வது என்று கூடத் தெரியவில்லை.
மகளை இழந்து விட்டார், மகனை இழக்க முடியாது.
“போ, போய் ஸ்னேஹாவோட இரு, கல்யாண வேலையை பாரு, ப்ரித்வியையும், ரித்தியையும் நாங்க பார்த்துக்கறோம்” என்று விட்டார் மருமகளிடம்.