இதோ ஜீவன் ஸ்னேஹாவின் திருமணம் நாளை காலை, முதல் நாள் மாலை ரிசப்ஷன், இதுவரை ஸ்னேஹா அவளின் அக்கா, அவளின் அப்பா அம்மா யாரிடமும் சைந்தவியை பற்றி சொல்லவில்லை.
அவளுக்கு ஜீவனுடன் திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும். அவளுக்கு ஜீவனை அவ்வளவு பிடித்தம். வீட்டில் பார்த்து வைத்த திருமணம் தான். ஆனால் ஜீவனோடான திருமணத்தில் பிரச்சனைகள் எழுவதை விரும்பவில்லை.
நிச்சயம் காஞ்சனாவிற்கு தெரிந்தால் சினிமாவில் வரும் காஞ்சனா போல மாற வாய்ப்புகள் அதிகம் என்று தெரியும். அதனால் அவரவர் பிரச்சனைகள் அவரவர் பார்த்து கொள்ளட்டும் என்று நினைத்து இவள் வாய் திறக்கவில்லை.
ப்ரித்வி மாமாவே சொல்லாத போது எனக்கென்ன என்று இருந்துவிட்டாள்.
ரிசப்ஷன் மிக விமரிசையாக நடந்து கொண்டிருக்க, அப்போது தான் விஜயனும் சைந்தவியும் உள் நுழைந்தனர்.
ப்ரித்வி எடுத்துக் கொடுத்த புடவை மற்றும் ஒரு மெல்லிய வைர நகை செட்டில் ஜொலித்தாள் சைந்தவி.
“உடை நகை வெச்சி மனுஷங்களை எடை போடக்கூடாதுன்றது வேற, ஆனா உறவுகளுக்கு மத்தியில என்னோட தங்கை வரும் போது யாருக்கும் குறைவா தெரியக்கூடாது. நிச்சயமா நான் குடுக்கற நகை புடவையில தான் அவ வரணும், நீ தடுக்க கூடாது” என்று விஜயனிடம் சண்டையிட்டிருந்தான்.
“நான் ஒன்னுமே சொல்லலையே இவன் ஏன்டா என்கூட சண்டை போட்டுட்டு இருக்கான்” என்று விஜயன் பாவமாய் அமர்ந்திருக்க…
“டேய் அண்ணா, அவனை ஏன் தொந்தரவு பண்ற” என்றாள் சைந்தவி.
“அவனை தொந்தரவு பண்ணினா தானே. நீ நான் சொல்றதை கேட்ப அதான்” என்று ப்ரித்வி சொல்ல…
விஜயன் முகத்தில் ஒரு விரிந்த புன்னகை.
“அவனை விடு, நீ செய்யறது அப்பாவும் அம்மாவும் விரும்பமாட்டாங்க”
“அவங்க பணத்துல ஒன்னும் நான் செய்யலை, இது என் பணம் அப்புறம் வாடகை பணம் எல்லாம் என் அக்கௌன்ட்ல தூங்குது, அதெல்லாம் பரம்பரை சொத்து உனக்கும் பங்கு இருக்கு… அப்புறம் நான் கேட்டா ஏன் எதுக்குன்னு கேட்காம அப்பா பணம் கொடுப்பாங்க” என்று ப்ரித்வி டென்ஷனாக பேசினான்.
“புரிஞ்சிக்கோ ப்ரித்வி காஞ்சனா பிரச்சனை பண்ணுவா”
“இதோ பாரு இவ்வளவு நாள் நீ விஜயனோட இல்லை. அதனால அவ பேசறதுக்கு எல்லாம் அமைதியா இருந்தேன். இனியும் பேசினா, கிளம்பு என் வாழ்க்கையில இருந்து, தேவையேயில்லை நீன்னு சொல்லிடுவேன்” என்று இன்னும் கோபமாகப் பேச…
“சரி நீ என்ன சொன்னாலும் நான் கேட்கறேன். டென்ஷன் ஆகாதே” என்று ப்ரித்வியை வெகுவாக சமாதானம் செய்தாள்.
விலை அதிகம், குறைவு என்றில்லாமல் அவளுக்கு பிடித்ததை தான் தேர்வு செய்தாள். சிலது விலை அதிகம் சிலது குறைவு.
ப்ரித்வி அவளுக்குப் பார்த்துப் பார்த்து செய்ய, ப்ரித்வி விஜயனுக்கு எடுக்க இருந்ததை மறுத்து, “நான் பார்த்துக்குவேன்” என்று சொல்லி அவனுக்கு வேண்டிய உடைகள் அவள் தான் தேர்வு செய்தால், பணமும் கொடுத்தாள்.
“இவ்வளவு நகை வாங்குகிறோமே” என்று விஜயனுக்கும் சங்கிலி மோதிரம் கை காப்பு என்று ப்ரித்வி எடுக்க முற்பட…
“உன்கிட்ட வாங்கிக்க கூடாதுன்னு எண்ணமில்லை ப்ரித்வி, எனக்கு நகை போட பிடிக்காது” என்று ஸ்திரமாய் விஜயன் மறுத்துவிட்டான்.
“எஸ் அண்ணா, எனக்கும் பசங்க நகை போட்டா பிடிக்காது” என்று சைந்தவியும் ஒத்து ஊத,
“ஏதோ இதுவரை சரி என்றார்களே” என்று ப்ரித்வியும் விட்டுவிட்டான்.
வீடுமே அப்படித்தான், மாற்ற வைத்து, பொருட்கள் வாங்கி, என எல்லாம் செய்தான். “புது வீடு வாங்கலாமா?” என்று வேறு சைந்தவியிடம் கேள்வி வேறு.
“இப்போ வேண்டாம், கொஞ்சம் நாள் போகட்டும்” என்று மறுத்துவிட்டாள். ப்ரித்விக்கு புதிதாக நிறைய கோபம் வருகிறது என்று உணர்ந்திருந்தாள். தன்னுடைய மறுப்பு வானுக்கும் பூமிக்கும் அவனை குத்திக்க வைக்கும் வாய்ப்பு இருப்பதால் இந்த பதிலை சொல்லி வைத்தாள்.
“சரி, கொஞ்சம் நாள் தான்” என்று சொல்லி வைத்திருந்தான்.
“இதோ அவர்கள் உள் நுழைய… கேமரா அவர்கள் நுழைவதை ஃபோகஸ் செய்ய. அழகான ஜோடி அனைவரின் கண்ணையும் கவர்ந்தனர். அவர்கள் உள் நுழைவதை பார்த்ததுமே அவர்களையே சில நிமிடங்களுக்கு ஃபோகஸ் செய்ய ஜீவனின் அப்பா தான் சொன்னார்.
அங்கிருந்த டீ வீ யில் ப்ரித்வி அவர்களைப் பார்த்ததும், அருகில் செல்ல, அவனின் கையில் இருந்த ரித்திக்கா நொடி நேரமும் தாமதிக்காமல் விஜயனிடம் தாவியது.
இது எல்லாம் டீ வீ யில் தெரிய, ஸ்கந்தநாதனுக்கும் மேகலாவிற்கும் அதிர்ச்சி, பார்த்தது பார்த்தபடி இருந்தனர். மகளை அங்கே எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கு சைந்தவியை தெரிந்தது. அழகான யுவதியாய் பரிமளித்தாளும் அவளின் முகத்தில் பெரிய மாற்றமில்லை. விஜயனை அவர்களுக்கு தெரியவேயில்லை.
அதுவும் ரித்திகா அவனிடம் தாவியது…
துரதிர்ஷ்டவசமாக காஞ்சனாவின் கண்ணிலும் மாட்டி விட்டது.
ப்ரித்வி அவர்களை அழைத்துக் கொண்டு சென்று முன்னிருக்கையில் அமர்த்தினான்.
ஜீவன் அவர்களை பார்த்ததும் உற்சாகமாய் மேடையில் இருந்து கை காண்பிக்க… “என்ன நடக்கிறது இங்கே” என்று காஞ்சனா தடுமாறினாள்.
வேகமாக மாமனாரிடம் விரைந்தவள் “அவ, அவ வந்திருக்கா?” என்றாள் பதட்டமாக.
“வந்துட்டு போறா, அமைதியா இரு” என்றார்.
“அத்தை நம்ம வீட்டு கல்யாணத்துல அவ எப்படி?” என்றாள் பதட்டமாக.
“மாப்பிள்ளை கை ஆட்டினார். பார்த்தல்ல அவங்களுக்கு தெரிஞ்சவங்க போல அமைதியா இரு, அவங்க யாரோ நாம யாரோ”
“ஆனா என் பொண்ணை தூக்கி இருக்கான். இவர் ஏன் அங்கே போய் பேசறார்” என்று ப்ரித்வியை பேசியபடி போகப் போக…
“அமைதியா உட்காரு” என்று அவளின் கை பிடித்து அருகமர்த்திய மேகலா, “ப்ரித்வி அவளோட பேசறது உனக்குத் தெரியாதா என்ன?” என்று வினவினார்.
“ஆனா அது ரகசியமா தானே பண்ணுவார்”
“இப்போ நீ போனா எல்லோருக்கும் அவ நம்ம பொண்ணுன்னு தெரிய வரும் அமைதியா இரு” என்று அவர் சொல்லி முடிக்கவில்லை.
ப்ரித்வி அவர்களின் நெருங்கிய உறவு ஒருவரிடம், “நம்ம சைந்தவி மாமா, இது அவ வீட்டுக்காரர்” என்று அறிமுகம் செய்தான்.
பத்தே நிமிடம் உறவுகள் ஆங்காங்கே அவர்களைப் பார்த்தோ, இல்லை “எப்படி இருக்க சைந்து?” என்றோ பேச ஆரம்பித்தனர்.
ரித்திக்காவோ பாந்தமாய் விஜயன் தோள் மீது சாய்த்து எல்லோரையும் பார்த்து இருந்தாள்.
அவர்கள் அதிர்ச்சியாய் பார்த்தனர். அவர்கள் பார்த்த பொழுது ஜீவனின் அப்பா விஜயனை கட்டியணைத்து வரவேற்றுக் கொண்டிருந்தார்.
பின்னே விஜயனைப் பார்த்த பிறகு தான் அவரின் ஜீவனின் சிரிப்பில் ஜீவன் மீண்டிருந்தது.
சைந்தவி திருமணதிற்கு கேட்ட போது விஜயன் ஒத்துக் கொள்ளவேயில்லை. அவளின் பிடிவாதம் ஒரு புறம்மென்றால், ஜீவனும் பார்த்துக் கொள்ளலாம் என்று வற்புறுத்தித் திருமணம் நடக்க உதவியாயிருந்தான்.
அவர்கள் பிரிந்தபோது, விஜயன் தான் திருமணதிற்கு ஒத்துக் கொள்ளவேயில்லையே, தன்னால் தானோ என்ற குற்ற உணர்ச்சி மனதின் ஒரு ஓரத்தில் அரித்துக் கொண்டேயிருக்க, உயிர் நண்பனை தள்ளி வைத்தான்.
இப்போது அவர்கள் சேரவும் ஜீவனிடம் உற்சாகம் கரை புரண்டு ஓடியது.
அவனின் அப்பாவிற்கு அதெல்லாம் தெரியாது, நண்பனோடு பிரச்சனை இப்போது சேர்ந்தவுடன் இவன் உற்சாகமாக இருப்பதாக எண்ணம்.
அதனை கொண்டு விஜயனுக்கு ஸ்பெஷல் கவனிப்பு.
இப்போது ரித்திகா அதிசயமான அதிசயமாக அவளின் அத்தையின் கைகளில் இருந்தாள். கும்பலை காணவும் தெரிந்த முகமான அத்தையிடம் தாவியிருந்தாள்.
விஜயன் ஜீவனின் நண்பர்கள் குழாம் வர,
இருவரையும் சேர்த்து பார்த்ததும் உற்சாகம் இன்னுமே கரை புரண்டோடியது.
சைந்தவி எதிலும் கலந்து கொள்ளாமல் அமைதியாய் ஒரு பக்கம் ரித்திகாவோடு அமர்ந்திருக்க, அவளோடு ப்ரித்வி. தங்கையை தனியே விடவேயில்லை.
எல்லோரும் வந்து மரியாதை நிமித்தம் ஓரிரு வார்த்தைகள் அவளோடு பேசித்தான் சென்றனர். உடன் அமர்ந்திருந்தது ப்ரித்வி அல்லவா.
ஸ்கந்தனாதன் மற்றும் மேகலாவின் பார்வை மகள் மீது தான். தங்களை அந்தக் கண்கள் தேடுகிறதா என்று பார்க்க, தேடவேயில்லை. ஒரு அமைதியான அமர்த்தலான பார்வை, பாவனை.
ப்ரித்வி அவளோடு தொடர்பில் இருக்கிறான் என்று தெரியும். ஆனால் அவளின் விவரங்கள் பேசியதில்லை. இவர்கள் கேட்டிருந்தால் சொல்லியிருப்பான் ஆனால் இவர்களும் கேட்டதேயில்லை.
வெகு சில நேரங்களில் ஸ்கந்தனாதனுக்கு மகள் வந்த போது நிறுத்திக் கொண்டிருக்கலாமோ என்ற எண்ணம் வரும், அது வரும் போதே எவ்வளவு அருமை பெருமையாய் வளர்த்தேன். ஆனால் என்னை விட்டு செல்ல எப்படி அவளுக்கு மனம் வந்தது என்ற எண்ணம் வந்து அமர்ந்து கொள்ளும்.
ப்ரித்வியையும் தடை செய்வார், ஆனால் அவருக்கு தெரியாமல் அவன்தான் அவளைப் பார்த்துக் கொள்கிறான் என்று தெரியும். கணவனோடு இருப்பது தெரியாது.
மேகலாவின் பிறந்த வீடு, அதாகப்பட்டது காஞ்சனா, அவளின் அம்மா அப்பா எல்லோரும் “உங்களை நினைக்காம போனா அவளை ஏன் நினைக்கணும்” என்ற துர் போதனை மேகலாவை ஏகத்துக்கும் ஆட்டி வைத்து இருந்தது.
ஆயினும் இந்த துர் போதனைகள் மட்டுமே காரணமல்ல, ஆழ் மனதின் ஏமாற்றங்கள். இன்னுமே மகள் செய்ததை அந்த பெற்றவர்களால் தாள முடியவில்லை. கல்லூரியின் இரண்டாமாண்டில் என்ன தெரியும். தங்களுக்கு சற்றும் சமமில்லாத தங்கள் ஆட்கள் அல்லாத என்பது கூட பெரிய விஷயம் கிடையாது, அவர் வேண்டாம் என்று சென்றது இன்னும் அழிக்க முடியாத வடு அவரிடம்.
ஸ்கந்தநாதன் செய்த தவறு அவருக்கு புரியவில்லை, அவர் சைந்தவிக்கு திருமணதிற்கு பார்க்காவிட்டால் விஜயன் சைந்தவி திருமணம் நடந்திருக்காது.
ஸ்கந்தனாதனின் அதே எண்ணம் தான், எப்படி அருமை பெருமையாய் வளர்த்தோம் அவளை, இப்படி செய்து விட்டாலே அவருக்கும் மனதே ஆறவில்லை. இன்னும் அவளின் அறை, அவளின் உடைகள், அவளின் நகைகள் எல்லாம் அப்படியே தான் இருக்கிறது.
அவ்வளவு செல்லம்!
“நாங்கள் வேண்டாம் என்று சென்று விட்டாள் அல்லவா இனி அவள் எங்களுக்கும் வேண்டாம்” என்பது தான் அவர்களின் முடிவு.