“என்ன சமைக்கலாம்? நான் இந்த வாரம் ஆஃபிஸ் வரலை, அடுத்த வாரம் வர்றேன், வொர்க் ஃப்ரம் ஹோம் கேட்கறேன், மிஸ் கமாலிக்குக்கு மெயில் பண்ணிடறேன்”
“ரொம்ப ஏதாவது பண்ணினா சொல்லு, பொறுத்துப் போகணும்னு எல்லாம் இல்லை” என்று சைந்தவியிடம் சொல்ல…
சிறு புன்னகை மட்டுமே அவளிடம்.
“எனக்குத் தெரியும் நீ மேனேஜ் பண்ணிக்குவன்னு, இருந்தாலும் என் திருப்திக்காக” என்று சொல்ல…
“பார்த்துக்கறேன், இப்போ போய் குளிச்சிட்டு வர்றேன்” என்றபடி நகர்ந்தாள்.
“என்ன சாப்பிட?”
“நான் பால்ல கேலாக்ஸ் போட்டுக்கறேன், உங்களுக்கு?”
“நான் முட்டை வேக வெச்சிக்கறேன் கூட கொஞ்சம் காய்கறியும். நீ சாப்பிடுவேன்னா காய்கறி சேர்த்து போடறேன்”
“இல்லை, எனக்கு வேக வெச்சு வேண்டாம், காரட் மட்டும் அப்படியே” என்று சொல்லி குளிக்க சென்றாள்.
ரம்மியமாய் தான் இருந்தது, அந்த காலைப் பொழுது.
பின் அவள் அலுவலகம் கிளம்பி விட…
இவன் சிஸ்டம் முன் அமர்ந்தான்…
பதினோரு மணி போல… ஜீவன் அழைத்தவன்… “சாயந்தரம் எத்தனை மணிக்கு சைந்தவி வருவா, அம்மாவும் அப்பாவும் என் கல்யாணத்துக்கு கூப்பிட வரணும்” என்று கேட்க…
“டேய், நீ பண்ணினா போதாதா? கொஞ்சம் நாள் தான் இருக்கு அவங்களை ஏன் தொந்தரவு பண்ற, நமக்குள்ள என்ன ஃபார்மாலிடீஸ்” என்றான்.
“அதெல்லாம் முடியாது, அவங்க தான் வருவாங்க” என்று முடித்து விட்டான்.
“ஏழு மணிக்கு மேல எப்போனாலும் ஓகே” என்றவன் மீண்டும் வேலையில் ஆழ்ந்து விட்டான்.
சைந்தவி மாலை வந்ததும் அவளிடம் விஷயத்தை சொல்ல… ”பால் இருக்கா இல்லைன்னா வாங்கிட்டு வந்துடுங்க, அப்படியே ஏதாவது ஸ்வீட் அண்ட் காரம்” என்று சொல்லியபடியே வீட்டை சுத்தப்படுத்த ஆரம்பித்தாள்.
சில பரபரப்பான நிமிடங்கள், எல்லாம் சுத்தம் செய்து அவளுமே வேறு உடை மாற்றி, அதற்குள் அவள் சொன்னதை எல்லாம் விஜயன் வாங்கி வந்திருந்தான்.
அவள் பால் காய்ச்சி கொண்டிருக்கும் போதே அவர்கள் வந்துவிட்டனர்.
“வாங்க ஆண்ட்டி, வாங்க அங்கிள்” என விஜயன் வரவேற்க,
“எங்கடா தொலஞ்சு போன?” என்று பட்டென்று அவன் தோளில் ஒரு அடி வைத்தார் ஜீவனின் அப்பா.
“நான் எங்க போனேன்” என்று விஜயன் பதில் கொடுக்கும் போதே,
“ஹாய்” என்றபடி ஜீவன் வந்து விட்டான், நண்பனோடு தொடர்ப்பை முறித்துக் கொண்டாலும் அவனை எங்கேயும் விட்டுக் கொடுத்தது இல்லை.
அதனால் பிரச்சனைகள் ஜீவனின் அப்பாவிற்கு தெரியாது.
“பா, கூப்பிட வந்துட்டு என்ன பேசிட்டு இருக்கீங்க?”
“நீ வர்றேன்னு சொல்லவேயில்லை”
“ஒரு கெஸ்ட் கூட்டிட்டு வந்திருக்கேன்” என்றவன், “உள்ள வா” என்று குரல் கொடுக்க, வந்ததோ காஞ்சனாவின் தங்கை, ஸ்னேஹா!
“என்னடா, பொண்ணை எதுக்கு கூட்டிட்டு வந்திருக்க” என்று அவனின் அம்மா கேட்க,
“விஜயனோட மனைவியை அறிமுகப்படுத்த மா” என்றான்.
அதுவரை இவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு ஓரமாய் தான் நின்றிருந்தாள் சைந்தவி.
அவளுக்கு “வாங்க” என்று சொல்லக் கூட சந்தர்ப்பம் கொடுக்காமல் அவர்கள் பேசிக் கொண்டிருக்க, இப்போது அனைவரின் பார்வையும் அவளின் புறம் திரும்பியது.
“கல்யாணத்துக்கு வரும் போது பார்த்துக்க வேண்டியது தானேடா. இந்த நேரத்துக்கு கூட்டிட்டு வந்திருக்க” என்று அவர் சொல்லிக் கொண்டே சைந்தவியின் புறம் பார்வையை திருப்பினார்.
ஸ்னேஹாவிற்கு சைந்தவியை பார்த்ததும் அதிர்ச்சி, சைந்தவி தானா என்ற சந்தேகம் கூட… அவள் விழித்து நின்றாள்.
“வாங்க ஆண்ட்டி, அங்கிள்” என்று அவளும் சொன்னவள் “வாங்க அண்ணா” என்று ஜீவனை அழைத்து, பின் “வா ஸ்னோ” என்று வீட்டில் அழைக்கும் அவளின் பேரைச் சொல்ல,
ஸ்னேஹாவிற்கு அவள் தான் உர்ஜிதம் ஆகியது.
அவளின் நினைவிற்கு சைந்தவி என்பவள் தங்களுக்கு சமமில்லாத குப்பத்தில் வசிக்கும் எவனோடே ஓடிவிட்டாள். அப்படி தான் அவளுக்கு சொல்லப் பட்டது.
அதை மறக்க விடாமல் காஞ்சனா அப்படி தான் அடிக்கடி பேசுவாள்.
அவள் பார்த்து பார்த்தபடி நின்றாள். அழகிய யுவதியாய் பாந்தமாய் மிக மரியாதையான தோற்றத்தில் இருந்தாள். பணமிருக்கிறது இல்லை என்ற சொல்லே அவளிடம் அவளின் தோற்றத்தைக் கொண்டு ஒப்பீடு செய்யத் தோன்றாது.
“என் ஃபிரண்டோட மனைவி மட்டுமில்லை, எனக்குத் தங்கையும் கூட, இவங்க கல்யாணத்தையே நான் தான் நடத்தி வெச்சேன்” என்று ஜீவன் சைந்தவியை அறிமுகப்படுத்த…
என்ன மாதிரி அதற்கு எதிர்வினையாற்றுவது என்று ஸ்னேஹாவிற்கு தெரியவில்லை.
தெரிந்த மாதிரி காண்பிப்பதா இல்லை தெரியாத மாதிரியா?
அவளுக்குச் சற்றும் அனுமானமில்லை சைந்தவியை பற்றி ஜீவனுக்குத் தெரியுமென்று.
சரியாக அந்த நேரம் ப்ரித்வி வந்துவிட்டான்.
“ப்ரித்வி, வா, வா உனக்கும் விஜயன் ஃபிரண்டா?” என்று ஜீவனின் அப்பா கேட்டார்.
ஜீவனும் அவனும் ஒரே கல்லூரி என்று அவருக்குத் தெரியும். ஆனால் சைந்தவியைப் பற்றி தெரியாது.
அவனை பார்த்ததும் ஸ்னேஹா இன்னும் விழித்து நின்றாள்.
“விஜயன் எனக்கு ஃபிரண்டில்லை மாமா, அவன் என்னோட மச்சான்” என்று சொல்லிக் கொண்டே சைந்தவியின் அருகில் சென்றவன் அவளை தோளோடு அனைத்து “என்னோட தங்கை சைந்தவி” என்று சொல்ல…
அவர் புரியாமல் நின்றார்.
ஜீவனின் அம்மா “உங்களுக்கு சொந்தமா” என வினவினார்.
“என்னோட சொந்த தங்கை” என்று அறிமுகம் செய்ய அவர்களுக்கு ஆச்சர்யம்.
“லவ் மேரேஜ் பண்ணிகிட்டா, அப்பாக்கு இஷ்டமில்லை. தள்ளி வெச்சிட்டார். ஆனா நான் வைக்கலை, என்னோட தங்கை, அப்பா தள்ளி வெச்சதால என்னோட பெரிய பொண்ணுன்னு சொல்லலாம்” என்றான்
“ப்ரித்வி, என்னோட கண்ணை வேர்க்க வைக்க தான் உன் ப்ளான்னா” என்று புன்னகைக்க…
அழகான சைந்தவி இன்னும் எல்லோர் கண்ணுக்கும் அதி அழகாக தெரிந்தாள்.
“அக்காக்கு தெரியுமா?” என்றாள் ஸ்னேஹா இதனைப் பார்த்தவாறு.
“அவளுக்கு எதுக்கு தெரியணும்” என்றான் அலட்சியமாக, மிக மிக அலட்சியமாக.
இந்த ப்ரித்வி ஸ்னேஹாவிற்கு மிக மிக புதியவன், பார்க்கும் போது மரியாதையாக இரண்டொரு வார்த்தை பேசி விலகி செல்பவன், அமைதியானவன், இப்படி தான் ப்ரித்வியை அவளுக்கு தெரியும். அக்கா கணவன் என்பதையும் விட அத்தை மகன் தானே சிறு வயதில் இருந்தே பரிட்சயம்.
“இல்ல அது” என்று ஸ்னேஹா ஆரம்பிக்க…
“நீ உன்னோட சொந்தக்காரங்க வீட்டுக்கு வரலை, என் ஃபிரண்டோட வீட்டுக்கு வந்திருக்க, அதை மட்டும் மனசுல வை” என்றான் ஜீவன் ஸ்திரமான குரலில்.
“நீங்க ஏன் என்கிட்டே முன்னமே சொல்லலை”
“ஏன்னா எனக்கு முன்னமே தெரியாது, நேத்து தான் தெரியும். சில வருஷம் கழிச்சு மீட் பண்ணினேன். என்னோட க்ளோஸ் ஃபிரண்ட்” என்று விஜயன் தோளில் கை போட்டுக் கொண்டான்.