“விடுடா, அவ யோசிக்கட்டும்” என்று விஜயன் எடுத்துக் கொடுக்க…

“என்னடா யோசிப்பா? என்ன யோசிப்பா? உங்களால நீங்க மட்டும் பாதிக்கப்படலை, உங்களை விட அதிகமா பாதிக்கப்பட்டது நான்”

“நீங்களாவது பிடிச்சிருந்தது கல்யாணம் பண்ணுனீங்க, நான் எதுக்குடா பண்ணனும், காஞ்சனாவை எனக்குப் பிடிக்காது, ஆனா எங்கப்பா கல்யாணம் செஞ்சு வெச்சிட்டார். யாரால? உங்களால! அந்தக் கல்யாணம் நிலைக்கறதுக்காக நான் எவ்வளவு முயற்சி எடுக்கறேன். ஆனா பிடிச்சு கல்யாணம் பண்ணின நீங்க என்னடா பண்றீங்க?”

“என்ன? கேட்க ஆளில்லைன்னா உன் இஷ்டத்துக்கு ஆடுவியா நீ? தொலைச்சிடுவேன். ரெண்டு நிமிஷம் டைம், ஒன்னு இவனோட, இல்லை இவனை டைவர்ஸ் பண்ணி வேற கல்யாணம் பண்ணிக்கிற! அதை விட்டு வேற ஏதாவது உளறிட்டு இருந்த, என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது”

“எனக்கு நீ வேற ரித்தி வேற கிடையாது, அப்பா அம்மா உன்னை விட்டு இருக்கலாம் ஆனா நான் உன்னை விட விடமாட்டேன்” என்று ஆக்ரோஷமாக கத்தினான்.

ரித்திகா சிணுங்கும் சத்தம் கேட்க… வேகமாக உள்ளே விரைந்தான் விஜயன். அவன் குழந்தையை தட்டிக் கொடுக்க, அவள் உறக்கத்தை தொடர்ந்தாள்.

இங்கே சைந்தவி திகைத்து அமர்ந்திருந்தாள் ப்ரித்வியின் கோபத்தில்.

“ரெண்டு நிமிஷம் முடிய இன்னும் ஒரு நிமிஷம் இருக்கு, உன்னோட முடிவை சொல்லு” என்றான் கறாரான குரலில்.

அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் விஜயனைப் பார்க்க…

ரூமின் உள் இருந்து வெளியில் வந்தவன், அவளின் அருகில் அமர்ந்து, “ஒரு சேன்ஸ் எடுக்கலாமே ப்ளீஸ்” என்றான்.

“எனக்கு ஒரு கில்டி கான்ஷியஸ் இருக்கு, எனக்கு இவரோட பேரன்ட்ஸ் கூட இருக்க முடியுமான்னு தெரியலை, இப்போ இவர் என்னோட வரும் போது இவங்களை அவங்க கிட்ட இருந்து பிரிக்கிறேன் தானே, தப்பு தானே” என்றாள்.

“லுக், எல்லா நேரமும் நாம நல்லவங்களா இருக்கணும்னு அவசியமில்லை. கொஞ்சம் சுயநலமா இருக்கலாம் தப்பில்லை. உன்னை அவன் பின்ன சுத்த வெச்சது இவன். உன்னை கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்ல வெச்சது இவன். இப்போ அவன் பேரன்ட்ஸ் என்ன பண்ணலாம்னு அவன் முடிவு பண்ணட்டும்”

“நீ இப்போதைக்கு யோசிக்க வேண்டிய. அவசியமில்லை. இவன் வேணும் வேணாம் அது மட்டும் தான். இவன் வேணாம்னா நான் உனக்கு கண்டிப்பா வேற மாப்பிள்ளை பார்ப்பேன். அப்படியே உன்னை விட மாட்டேன்” என்று ப்ரித்வி பேச்சை முடித்து விட்டான்.

என்ன செய்வது என்று தெரியாமல் திரும்பவும் விஜயனை பார்க்க….

“லிவ் திஸ் மொமென்ட், ரொம்ப குழப்பாதே… ஒரு சேன்ஸ் எடுத்துப் பார்க்கலாம், இல்லை முடியாதுன்னு தோணினா இப்போவே இந்த நிமிஷமே எல்லாம் முடிச்சிக்கலாம்” என்றான் அவனும் ஸ்திரமாக.

“இவங்களோட வாழ முடியாதுன்னு சொல்றதால நான் ரொம்ப கெட்ட பொண்ணா ப்ரித்வி” என்றாள் சோர்வாக.

“நோ, ஹஸ்பன்ட் கூட வாழ்ந்தா நல்ல பொண்ணு இல்லை கெட்ட பொண்ணு எல்லாம் கிடையாது. குழந்தைங்க இல்லை அப்போ இப்போதைக்கு அவங்களுக்குரிய ரெஸ்பான்சிபிலிட்டி இல்லை, உனக்கு பிடிக்கலையா விலகு… ஆனா அடுத்து என்ன? அவ்வளவு தான் எனக்கு வேணும்”

“எனக்கு ரெண்டு நாள் டைம் கொடுக்கறியா?” என்று ப்ரித்வியிடம் கேட்டாள்.

“எடுத்துக்கோ அதுக்கு மேல முடியாது” என்று சொல்லிவிட்டான்.

அமைதியாக எழுந்து சென்று ரித்தியுடன் படுத்துக் கொண்டாள்.

அவள் உள்ளே சென்றதும் விஜயனை நோக்கிய ப்ரித்வி… “நீ என்ன செய்வியோ தெரியாது, ரெண்டு நாள் கழிச்சு உன்னை விட்டு போகமாட்டேன்னு அவ சொல்லணும் அவ்வளவு தான்” என்று முடித்து விட…

“இல்லை, நான் ஃபோர்ஸ் பண்ண மாட்டேன், ரெண்டு நாள் அவ யோசிக்கட்டும் விடலாம்” என்று சொல்ல…

“உன்னை” என்று அவன் மேல் பாய்ந்தான் ப்ரித்வி.

சில தள்ளு முள்ளு, அதற்குள் காலிங் பெல் சத்தம் கேட்டது.

“யாருடா நம்ம வீட்டுக்கு?” என்று விஜயன் கேட்கவும்…

“போ, போய்த் திற! அடுத்த பஞ்சாயத்து உனக்கு வெயிட்டிங்!” என்று ப்ரித்வி சொல்ல…

“என்னடா ஆளாளுக்கு பஞ்சாயத்து… எவன்டா அவன்?” என்று சொல்லிக் கொண்டே விஜயன் கதவை திறக்க… நிச்சயமாய் அங்கிருந்தவனை எதிர்பார்க்கவில்லை.

ஜீவன்…

விஜயனின் உயிர் நண்பன்…. விஜயன் சைந்தவியின் திருமணம் நடக்க காரணமானவன். விஜயனும் சைந்தவியும் பிரிந்த போது விஜயனை விட்டு சென்று விட்டான். எந்த தொடர்பிலும் இல்லை. அவனால் அவர்களின் பிரிவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. விஜயன் அவனை தொடர்பு கொள்ள பல மாதிரி முயன்ற போதும் சற்றும் இடம் கொடுக்கவில்லை.

“ஜீவன்” என்று பரவசமாய் விஜயன் அழைக்க… அவனை கண்டு கொள்ளாமல் அவனை ஒற்றைக் கையில் தள்ளிக் கொண்டு வந்து சோபாவில் அமர்ந்தான்.

ப்ரித்வி தரையில் படுத்தபடி இதனைப் பார்த்திருக்க…

உள்ளே வந்த விஜயன் “சோ, நான் இப்போ சவி யோட இருக்கவும், என்னைப் பார்க்க வந்திருக்க நீ இல்லையா?” என்றபடி அமர்ந்தான்.

“உன்னை யாரு பார்க்க வந்தா? நான் சைந்தவியை பார்க்க வந்தேன். அப்படியே என் கல்யாணத்துக்கு கூப்பிட வந்தேன்”

“ப்ரித்வி, உனக்கு இவனோட எப்படி தொடர்பு?” என்று விஜயன் கேட்க…

“என்னோட சகலை ஆகப் போறான்டா, காஞ்சனாவோட தங்கையை தான் கல்யாணம் பண்ணப் போறான். நாங்க ஒரே ஆளுங்க, ஜாதகம் பார்த்து பெரியவங்க முடிவு செஞ்ச கல்யாணம்”

“என்ன இவன் தான் உங்க கல்யாணம் நடக்கக் காரணம்ன்னு யாருக்கும் தெரியாது, நானும் சொல்லலை, அது தேவையில்லை”

பேச்சுக் குரல் கேட்டு சைந்தவி வந்தவள், ஜீவனைப் பார்த்து அதிசயித்து, “அண்ணா எப்படி இருக்கீங்க? அடையாளமே தெரியலை, மாறிப் போய்ட்டீங்க” என்று பேசியபடி வந்தாள்.

அவளின் சோர்ந்த முகம் என்னவோ செய்ய, விஜயனை முறைத்து பார்த்தான்.

அப்போது தான் விஜயனின் முகக் காயங்களையும் பார்த்தவன், “இன்னும் உன்னோட வீர தீர சாகசத்தை விடலை நீ” என்று நக்கல் பேச…

சாதாரண நாட்கள் என்றால் விஜயன் கொடுக்கும் பதில் வேறு ஆனால் இன்று ஒன்றும் சொல்லவில்லை… ஜீவன் அவன் படிக்கும் காலங்களில் அவன் பின்னோடு சுற்றியவன். அவனுக்காக எதுவும் செய்வான்.

அப்படி ஒரு நட்பு! ஆனால் விஜயன் சைந்தவியை விட்ட போது அவனையும் விட்டுவிட்டான்.

இப்போது இந்த திருமணத்தின் மூலம் ப்ரிவியிடம் பேச, ப்ரித்வி இவர்கள் ஒரே வீட்டில் இருப்பதை சொல்ல… அவர்களைப் பார்க்க வந்து விட்டான்.

விஜயன் மேல் ஒரு மாதிரியான ஹீரோ வொர்க்ஷிப் அவனது, யாருக்கு தெரியாவிட்டாலும் விஜயனுக்கு தெரியுமே. விஜயன் தான் சைந்தவியை அவனின் பின் சுத்த வைத்துக் கொண்டான், ஆனால் திருமணம் சைந்தவி கேட்டது, செய்து கொண்டான் தானே, பின் எப்படி அவளை விடலாம்.

விஜயனும் அவளாய் தான் சென்று விட்டாள் என்று சொல்லியும் அவனால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இதோ தெரிந்ததுமே பார்க்க வந்துவிட்டான்!

“ப்ச், விடுங்கண்ணா, ரொம்ப வலி அவங்களுக்கு, இந்த முறை அவங்க எதுவுமே செய்யலை”

“பாருடா சைந்து வளர்ந்துட்டாப் போல, விஜயை மரியாதையா பேசறா”

சைந்தவி முகத்தில் ஒரு மென்முறுவல்…

சைந்து உனக்கு நான் இன்னும் சொல்லவேயில்லை, காஞ்சனா தங்கை ஸ்னேஹாவை ஜீவன்க்கு தான் பேசியிருக்காங்க. பத்து நாள் தான் இருக்கும். நம்ம காலேஜ்ன்னு என்கிட்ட தான் விசாரிச்சாங்க. நான் தான் ரொம்ப நல்ல பையன்னு சொன்னேன்.

“பொய் சொல்லிருக்கான்” என்று விஜயனின் வாய் முணுமுணுக்க…

அவ்வளவு தான் ஜீவன் அவன் மீது பாய்ந்து விட்டான், “என்னடா பொய்? என்னடா பொய்? நீதான் பொய்! எதுக்குடா சைந்துவ விட்ட, அவ போறேன்னு சொன்னாலும் நீ எப்படி விடலாம்” என்று சரமாரியாக அவனின் தோளில் அடித்தவன், அவனின் நெடுநாளைய ஆதங்கத்தை வார்த்தையால் விட, அமைதியாக வாங்கிக் கொண்டிருந்தான் விஜயன்.

சைந்தவி தடுக்க முற்பட, ப்ரித்வி அவளை இழுத்துக் கொண்டான், “அவங்களுக்கு நடுவுல போகாத” என்றபடி.

“போகலை, ஆனா அவனுக்கு ஏற்கனவே அடி” என்றவள்,

“ஜீவன்ணா விடுங்க, அவருக்கு ஏற்கனவே அடி, வலிக்கும் விடுங்க” என்று கத்த…

அவள் கத்திய கத்தலில் விட்டு விட்டான் ஜீவன்.

“உனக்குப் போய் இப்படி ஒரு பொண்ணு” என்று ஜீவன் அவன் மீதிருந்து எழுந்தான்.

விஜயன் அதற்கு எதுவுமே எதிர்வினையாற்றவில்லை.

சைந்தவியின் முகத்தில் இருந்த பதட்டத்தை தான் பார்த்திருந்தான்.