ஆம்! இருவரையும் பிடித்து இருப்பது ஒரு மாய வலை தான். பின்னே நிறைய வாழ்க்கை முறை வித்தியாசங்கள், எதிர் மறை குணங்கள், ஆனாலும் எல்லாம் எதிர்த்து திருமணம் என இவன் பின்னே ஏன் வரவேண்டும்? வந்தாள்! ஏன் அவளும் அறியாள்!
“போகலாமா” என விஜய் எழுந்து வர , “பில்” என்ற படி செர்வ் செய்த பையன் பின் வர,
“இந்த மேடம் கொடுப்பாங்க” என்று சைந்தவியை கை காட்டினான்.
“நான் ஏன் கொடுப்பேன், நீ கொடு!” என்று பேசியவாறே அவளின் பர்சினை விஜயிடம் நீட்டினாள்.
“இந்த பர்ஸ் ஜிப் கூட ஓபன் பண்ண முடியாத அளவுக்கு கட்டியிருக்கேன், நீ கொடு!” என்றான்.
“ம்கூம், என்னால பசில இதை திறக்க முடியலை. நீ கொடு” என வார்தையாடினாள். ஆம்! விஜயின் பார்வையின் வசியம் அப்படி சைந்தவியினிடத்தில்.
இப்படியாக இவர்கள் பேசிக் கொண்டிருக்க, ப்ரித்வி பில் கொடுத்து முடித்து, “அவங்களை அனுப்பிவிடு!” என்று அந்த பையனிடம் சொல்லி வெளியே காரில் சென்று அமர்ந்து விட்டான்.
அவனுக்கு மனது என்னவோ இதமாக இருந்தது, இத்தனை நாட்களாக சைந்தவியை குறித்த கவலை மனதின் ஓரத்தில் எப்போதும் இருக்கும், இன்று ஏனோ அது இல்லை!
“ண்ணா கூப்பிடறாங்கண்ணா” என்று அந்த சிறுவன் வந்து சொன்ன பிறகு தான் இருவரும் வார்த்தைகளை விட்டு பார்த்தனர்.
“பில்” என்று சைந்தவி இழுக்க..
“அதெல்லாம் குடுத்துட்டாங்க” என்று அவன் சொல்ல பின்னே வாயிலை நோக்கி நடந்தனர்.
சைந்தவியும் பசியோடு இருக்க, அவளை விட்டு விட்டு சாப்பிடுகிறான். முகத்தினில் சிறு சுணக்கமும் இன்றி சைந்தவி அதனை ரசித்து பார்த்திருக்கிறாள். அதையே மனதிற்குள் அதிசயமாய் உணர்ந்தான் ப்ரித்வி.
அவனுக்கு முன்பாக காஞ்சனா உண்டு விடுவாள். இவனுக்கு காத்திருப்பது எல்லாம் கிடையாது.
காஞ்சனா ப்ரித்வியின் அத்தை மகள், சைந்தவி இப்படி செய்யவுமே தந்தை அவனை கட்டாயப் படுத்தி தங்கையின் மகளை திருமணம் செய்து விட்டார்.
முக லட்சணம் இருந்தாலும், குண லட்சணம் சிறிது குறைவு! அதனையும் விட சற்று பெரிய உருவம். ஆம்! குண்டாக இருப்பாள். எப்போதும் சிக்கென அழகாக இருக்கும் சைந்தவி, அவளுக்கு உறுத்தலே! அதன் பொருட்டே எப்போதும் சைந்தவியை இழுத்து பேசுவாள், ஒரு வார்த்தை ப்ரித்வி சைந்தவிக்காக பேசிவிட்டாலும், வீடு அன்று போர்க்களம் தான்!
அமைதி விரும்பியான ப்ரித்வி, அதனால் அமைதியாகிவிடுவான். இல்லை, இன்னும் சைந்தவியை பேசுவார்கள். இவர்களுக்காகவாவது சைந்தவி நன்றாக வாழ வேண்டும் என்பது ப்ரித்வியின் தணியாத ஆசை என்று கூட சொல்லலாம்!
சொல்லப் போனால் சிறு வயதில் இருந்து கொஞ்சிக் கொள்ளும் அண்ணன் தங்கை அல்ல இருவரும். இந்த பிடித்தம் சைந்தவியின் திருமணதிற்கு பிறகு, அதுவும் வீட்டினர் அவளை விட்ட பிறகே.
எப்போதும் சைந்தவியைப் பற்றிய வேண்டாத தூபம் வீட்டினில் அப்பாவிடமும், அம்மாவிடமும், காஞ்சனாவின் மூலமாகவோ இல்லை காஞ்சனாவின் அப்பா அம்மாவிடம் இருந்தோ இருக்கும். காரணம், சொத்திற்கு ஏக போக உரிமை வேண்டும் அல்லவா!
நினைவுகள் சூழ்ந்த போது விஜயும் சைந்தவியும் வந்து விட்டனர்.
சைந்தவி முன் ஏறிக்கொள்ள, விஜய் பின் ஏறினான், சற்று தெம்பாக. உணவு உள்ளே செல்லவும் ஒரு புது உத்வேகம் அவனிடம்.
“ம்ம்ம், முடியாது, கண்டிப்பா சொல்வேன். எனக்கு எப்போ எப்போ தோணுதோ, அப்போ அப்போ எல்லாம் சொல்வேன்” என்றான் ராகமாக விஜய்.
“அண்ணா டேய், பசிக்குது, கார் எடு. அவன் நல்லா மொக்கி இருக்கான். சோ, மொக்கை போடுவான். எனக்கு ஏதாவது வாங்கி கொடுத்து வீட்ல விடு!” என்று சைந்தவி அதட்டினாள்.
“இல்லை, அவன் வீட்டுக்கு போகட்டும், நேத்தும் நம்மோட நிறைய நேரம் இருந்தான், இப்போ போகட்டும்!” என சைந்தவி சொன்னாள்.
“இல்லை இருக்கிறேன்” என்று எந்த பசப்பு வார்த்தையும் இல்லை. “அந்த பிசாசை யார் சமாளிப்பது” என்று காஞ்சனாவை பற்றிய எண்ணம் ஓட, அவள் சொன்னதை செய்து அவர்களை வீட்டினில் விட்டு கிளம்பி விட்டான்.
வீட்டின் உள் வந்ததுமே, அப்படியே ஹாலிலேயே வெறும் தரையிலேயே விஜய் கால் நீட்டி படுத்துக் கொண்டான் அயர்ச்சியில். என்ன தான் ஒன்றும் நடவாதது போல வாயடித்தாலும் காட்டிக் கொண்டாலும் காய்ச்சலும் இருந்தது, உடல் வலியும் இருந்தது.
“போய் பெட்ல படு விஜய்” என்றாள் சைந்தவி.
“அங்கே போனா நீ தெரிய மாட்ட, இங்கேயே இருக்கேன். நீ தூங்கப் போகும் போது வர்றேன்” என்றான்.
மிகுந்த பசியில் இருந்த அவளும் உணவுண்ண அமர்ந்து கொண்டாள். உண்டு நிமிர்ந்த போது, விஜய் உறங்கியிருந்தான்.
“அச்சோ, மாத்திரை சாப்பிடாம தூங்கிட்டானே!” என்று மாத்திரையையும் தண்ணீரையும் வைத்துக் கொண்டு அவனை எழுப்ப, உடல் அனலாக கொதித்தது.
“எழுந்துரு” என எழுப்பி மாத்திரை கொடுத்து அவனை போய் படுக்கை அறையில் உறங்க வைத்தாள். அவனின் காய்ச்சல் பார்த்து சற்று கவலையாக கூட இருந்தது.
உடலின் அயர்ச்சியோ, மனதின் அயர்ச்சியோ அவளும் உறங்கிவிட. அடுத்த நாள் பத்து மணியாகியும் இருவரும் எழவில்லை. அதன் பின் ஒரு அரை மணிநேரம் கழித்து முதலில் விழித்தவன் விஜய்.
இருவரும் அருகருகே படுத்திருந்தாலும் அவரவர் இடத்தினில் அவரவர். அப்படி ஒன்றும் பெரிய படுக்கை இல்லையென்றாலும் சிறியதும் இல்லை. ஆனாலும் ஒட்டி உரசவேயில்லை.
நேரம் பார்த்தவன், ஷப்பா, பன்னிரண்டு மணிநேரத்திற்கும் மேலாக உறங்கியிருப்பது புரிய, சைந்தவி இன்னும் உறக்கத்தில்.
உறங்கும் அவளை அவள் எழும்வரை கிட்ட தட்ட திரும்ப ஒரு மணிநேரம் பார்த்திருந்தான். தொடவில்லை! அணைக்கவில்லை! முத்தமிட மனம் விழையவில்லை!
அந்த அழகு முகத்தை, முதல் முறை பார்ப்பது போல இமைக்காமல் பார்த்திருந்தான். முகத்தை விட்டு வேறு எந்த பாகத்திலும் பார்வையை திருப்ப வில்லை.
கை நழுவிப் போன சொர்க்கம், மீண்டும் அருகில்!
“இனி நீ என்ன செய்ய போகிறாய்? வாழ்க்கை எப்படி இருக்கும்?” அன்று அவளை திருமணம் செய்த நாட்கள் நினைவில் வந்தது. இன்னும் கூட பக்குவமாய் கையாண்டு இருக்கலாம்.
காதல் கூட சரியான வயதில் வரவேண்டும்! எனக்கு வந்தது காதலா? காதல் என்றால் என்ன? யோசனைகள் ஓடியது. எதுவாகினும் அவளை அப்போது தான் முதல் முறை பார்ப்பது போல தோன்றியது! பார்த்ததும் காதல் போல தோன்றியது! இவள் என் பின்னோடு வந்தாள் நான் என்ன செய்தேன் என்ற யோசனைகளும் மனதின் ஒரு ஓரத்தில்.
பிடித்திருந்தது! அவள் தான் முதலில் காதல் சொன்னாள்! பின் தான் அவன் சொன்னான்! இவர்கள் காதல் தெரிந்த ப்ரித்வி அதனை வீட்டில் சொல்ல, அவளின் அப்பா திருமணம் நிச்சயம் செய்ய, அதனை கொண்டு “என்னை திருமணம் செய்து கொள்” எனும் சைந்தவியின் கட்டாயத்தின் பேரில் விஜய் திருமணம் செய்தான்.
அதன் பிறகு இவனின் வீட்டிற்கு வர,
இப்படியாக எதுவுமே இவன் செய்யவில்லை, வந்ததும் அவளே! சென்றதும் அவளே!
இப்போது திரும்ப அவனை அழைத்துக் கொண்டதும் அவளே!
இந்த திருமணத்தால் என் வாழ்க்கை முறை எள்ளளவும் மாறவில்லை. ஆனால் அவள் எல்லாம் இழந்து நிற்கிறாள். அதுவும் உறவுகளை இழந்து யாருமில்லா தனிமையில் இருந்திருகின்றால் என்பது அப்படி ஒரு வேதனையை விஜயனிற்கு கொடுத்தது.
சைந்தவியின் கண் திறக்கும் அசைவு உணர்ந்தவுடனேயே, இவன் கண்களை மூடிக் கொண்டான் உறங்குவது போல.
அவளை பார்க்க மனதில் ஒரு குற்றவுணர்ச்சி, தனிமை என்பது பெரிய கொடுமை அல்லவா!
கண் திறந்தவள் விஜய் இன்னும் உறங்குவதை பார்த்த உடனே, இன்னும் அவனுக்கு ஜுரமா இரவில் எழுந்து பார்க்காமல் போனேனே என்று தோன்ற,அவனின் நெற்றியை தொட்டுப் பார்த்தாள். அதற்கு மேல் விஜயால் கண்களை மூடி இருக்க முடியவில்லை.
கண்களை திறந்தவன் “காய்ச்சல் போயிடுச்சு” என்றான்.
“இல்லை, இன்னும் இருக்கு லேசா! ஜில்லுன்னு இல்லை, கொஞ்சம் சூடா தான் இருக்கீங்க!” என்றாள்.
“உன் கை ஜில்லுன்னு இருக்கு!”
“இப்போ தான் தூங்கி எழரேன், எப்படி ஜில்லுன்னு இருக்கும்!” என்று பேசியபடி எழுந்து சென்று பாத்ரூம் கதவினை அடைத்துக்கொள்ள,
ஏனென்று தெரியாமல் மனதினில் ஒரு சோர்வு!
நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் இவளை! இவளின் வாழ்வு சந்தோஷமாக அமைய வேண்டும்! இனி வாழ்க்கையை எப்படி கொண்டு போவது? இவளின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும்? எப்படியும் என் வாழ்க்கை முறை வேறல்லவா! இப்படியாக என்ன என்னவோ எண்ணங்கள்!
சைந்தவி முகம் துடைத்தபடி வெளியில் வந்தவள், “நேத்து குளிச்சீங்களா?” என்றாள்.
“இல்லை” என்பது போல விஜய் தலையாட்ட,
“சுடு தண்ணீர் வைக்கட்டுமா?”
“இல்லை, பச்சை தண்ணீர்ல தான் குளிப்பேன்!”
“ஓகே, அப்போ குளிச்சிடுங்க. இன்னும் ஒரு செட் ட்ரெஸ் தான் இருக்கு, ஆஃபிஸ் வேர் எதுவும் இல்லை. பர்சேஸ் பண்ணனுமா?”
“யோசிக்கலாம்” என்று சொல்லியபடி எழுந்து அவன் குளியலறை சென்றான்.
“என்ன இதுல யோசிக்க இருக்கு?” என்று யோசித்தவாறே சைந்தவி சமையலறை சென்றாள்.
பால் காய்ச்சிக் கொண்டே, சப்பாத்திக்கு மாவு பிசைந்தாள். பின்பு பாலை இறக்கி, வெங்காயம் நறுக்கி தக்காளியை வதக்க ஆரம்பித்தாள்.
என்னவோ அர்த்தம் இல்லாத வாழ்க்கையில் அர்த்தம் வந்தது போல ஒரு உணர்வு. மனது உற்சாகமாக இருந்தது.
அது முகத்திற்கு இன்னும் ஒரு பொலிவைக் கொடுத்தது.
விஜயன் குளித்து வந்தாலும் வேறு உடை இல்லாததால் அதனையே அணிந்து வந்தான்.
அவனின் உடை பார்த்ததுமே “போய் டிரஸ் எடுத்துட்டு வந்துடலாமா” என்றாள்.
“வேண்டாம், வீண் செலவு, வீட்ல இருக்குற என் டிரஸ் எல்லாம் எடுத்துட்டு வர சொல்றேன். என் லேப் டாப் கூட அங்க தான் இருக்கு, அதுவும் வேணும், ரெண்டு நாளா மெயில் செக் பண்ணலை. நேத்து நைட் இருந்து போனும் சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டேன்” என்று சொல்லிக் கொண்டே கைபேசியை எடுத்து உயிர்பித்தான்.
அம்மாவின் கைபேசியில் இருந்து அத்தனை அழைப்புகள், அவனே திரும்ப அழைத்தான்.
“இன்னாமா?” என்றான் என்னவோ பிரச்சனை என நினைத்து.
“உடம்பு எப்படி இருக்கு விசி, எனக்கு உன்னை பார்க்கணும் போல் இருக்கு” என்று தேம்பினார்.
அம்மாவின் அழுகை என்னவோ செய்ய “இன்னாம்மா” என்றான் கனிவாக.
“இனிமே எங்களை நீ பார்த்துக்க மாட்டியாமே, ஊட்டாண்ட வரமாட்டியாமே, உட்டுடுவியாமே” என அழுத படியே சொல்ல,
“யாரும்மே சொன்னா” என்றான் அசங்கலாக,
பேசும் அவனின் முகத்தை என்னவோ ஏதோவென்று பார்த்திருந்தாள்.
சைந்தவி கவலையாக பார்ப்பதை பார்த்திருந்தவன், “ஒன்றுமில்லை அம்மா” என்று அவளுக்கு புரியுமாறு வாயசைத்து, ஃபோனுடன் சென்று அமர்ந்தான்.
பின்பு அவன் அம்மாவை வெகுவாக சமாதானம் செய்வதை பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் கைகள் பாட்டிற்கு அதன் வேலையை செய்ய, சப்பாத்தி சுட்டு முடித்திருந்தாள். அப்போதுதான் அவனும் கைபேசியை வைக்க, “என்ன?” என்று எதுவும் கேட்காமல் உணவினை வைத்து அவனிடம் கொடுத்தாள்.
அவனும் சொல்லாமல் எதோ யோசனையோடே உணவினை வேகமாக உள்ளே தள்ளினான். அவனுக்கு கொடுத்து சைந்தவியும் உண்டாள்.
பேசும்போது வாயினை அதிகம் அசைக்கவில்லை. நேற்று மருந்தின் தாக்கத்தில் ஒன்றும் தெரியவில்லை!
ஆனால் உண்ணும் போது இன்று உதடுகள் வலித்தது!
முகம் அதனை காண்பிக்க “வலிக்குதா?” என்றாள் கரிசனமாக.
ஆம்! என்பது போல் தலையசைத்தாலும் உணவு உண்பதை நிறுத்தவில்லை.
உண்டு முடித்தவன், “நான் போய் என்னோட டிரஸ், லேப் எடுத்துட்டு வந்துடட்டுமா? எங்கம்மா வேற என்னை பார்க்கணும்னு ஒரே அழுகை” என்றான் தயங்கி தயங்கி. அப்படி அம்மா அழும்போது அவனுக்கு பார்க்காமல் இருக்க முடியவில்லை.
“உனக்கு போகணும்னா போ, போய் பார்த்துட்டு வா” என்றாள்.
சட்டென்று அங்கே சூழல் கணமாகி விட்டது. மனங்களும் தூரமாகி விட்டது!
“போய்விட்டு வந்துவிடுவாயா?” என்று சைந்தவியும் கேட்கவில்லை! “போய்விட்டு வந்துவிடுகிறேன்” என்று அவனும் சொலவில்லை!
“நீ உடன் வருகிறாயா” என்று விஜயனும் கேட்கவில்லை. “நான் உன்னுடன் வருகிறேன்” என்று அவளும் சொல்லவில்லை.
மாயவலை எப்படி அவர்களை பின்னியதோ, ஒரு மாயத்திரை அவர்களை மறைக்கவும் செய்தது.