Advertisement

7

அன்றிலிருந்து 2 மாதங்களுக்கு பிறகு ஒரு நல்ல முகூர்த்தம் குறிக்கப் பட்டது. அனைத்து திருமண வேலைகளும் வெகு வேகமாக நடந்தன.

மதுவின் மனதில் வத்சனின் குணம் பற்றிய பயமும் குறைந்திருந்தது. அவனிடம் குறை என்று சொல்ல ஒன்றுமே இல்லாத நேரத்தில், அவளுக்கு அவனது தோற்றம், பேச்சு, அவள் மீது கொண்ட அக்கறை என்று எல்லாமே அவளுக்கு அவனிடம் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தின. அவளுக்கே தெரியாமல் அவளின் மனம் அவன் பால் மெல்ல மெல்ல செல்வதை அவளால் உணர முடிந்தது.

‘ஆனால் அவனிடம் இருந்து ஒரு ஃபோன் கால் கூட வரலையே. என் நம்பர் அவன்கிட்ட இல்லனுல்லாம் சொல்ல முடியாது. பாரிஜாதம் அத்தைகிட்ட இருக்குதே. அவனுக்கு கேட்க கூச்சமா இருந்தாலும் பிரவீன்கிட்டஇருக்குதே. ஆமா ஆமா! அப்டியே கால் பண்ணிட்டாலும்! என்னதான் இருந்தாலும் அவன் உம்மணாமூஞ்சி தானே.’, என்று சொல்லி தன்னையே சமாதானம் செய்துகொண்டாள்.

 

வத்சனிடமிருந்து எந்த அழைப்பும் வராமலிருந்தது மதுவிற்கு சற்று ஏமாற்றமே என்றாலும் அவளது எண்ணம் வத்சனைப் பற்றியே இருந்தது.

‘ஒரு வேளை இப்படி சதா அவன நினைச்சுட்டே இருக்கணும்ன்னு தான் சத்தமில்லாம இருக்கானோ? இருக்கும்! சரியான கல்லுளிமங்கன்! இருந்தாலும், அவன் பாத்தாலே என்னமோ குரு குருன்னு பாக்குற மாதிரியே இருக்கே! அது ஒன்னுதான் கடுப்பா இருக்கு. ஆனால் அவன் போகும் போது யாருக்கும் தெரியாம கண்ணாலயே சிக்னல்லாம் காட்டுனானே. அடேயப்பா! இத்தன வருஷத்துல நல்ல மாற்றம்தான்! மறுபடியும் எப்ப பாக்க முடியுமோ! அட… என்ன இது? ஒரு 3 மணி நேரத்தில அவ்வளவு அன்பு வந்துடுமா? இது என்ன சினிமாவா? கண்டதும் காதல் அப்டி இப்டின்னு. ரொம்ப யோசிக்காத மது. கொஞ்ச நஞ்ச மூளையும் கிறங்கிடப் போகுது” என்று தன் என்ன ஓட்டத்திற்கு தற்காலிகமாக தடைவிதித்தாள்.

 

ஆக மொத்தத்தில் அவளுக்கு இந்த திருமணத்தில் பெரிதாக பற்று இல்லை என்றாலும் வெறுப்பும் இல்லை.

 

ஒரு நாள் பார்த்து முகூர்த்தப் பட்டு மற்றும் இதர ஆடைகள் எடுப்பது என்று முடிவு செய்தனர். இவர்களுக்கே நகரம் முழுவதும் 4 பட்டாடை கடைகள் இருப்பதால், அன்று மதுவின் வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு பிரிவில் அனைத்து வகைப் பட்டுகளும் குவிக்க ஏற்பாடுகள் நடந்தன.

பட்டெடுக்க செல்கிறோம் என்றதும் மது நந்தினியை உடன் அழைத்துச் செல்ல வேண்டுமென்று தகவல் சொல்ல கைப்பேசியில் அழைத்தாள். சேலை எடுக்க வேண்டும் என்றால் நந்துவின் வழக்கமான வசனம் இதுதான், “அட எனக்கென்ன தெரியும் சேல பத்தியெல்லாம்! என் அம்மாவ இல்ல உன் அத்தைய கூட்டிட்டு போ! எனக்கு வேற வேலயிருக்குமா ஆளவிடு!” என்று தப்பிப்பாள் நந்து.

ஆனால் இன்றோ!, மது சேலை எடுக்க வேண்டும் என்றுதான் சொன்னாள். “எப்படி போறோம்? நீயே என்ன பிக்கப் பண்றியா? இல்ல, நானே அங்க வந்துடுறேன். என்ன டைம்?” என்று வரிசையாக திட்டமிட்டவளைப் பார்த்த மது. “என் மேல உனக்கு எவ்வளவு பாசம்டி. என் செல்லம்” என்று ஆனந்தப் பட மறுமுனையில் நந்துவின் முகம் அசடு வழிந்தது.

’இவகிட்ட உண்மைய சொல்லிடலாமா? அவன் இப்போ வேண்டாம்னு சொன்னானே. சரி இருக்கட்டும் இன்னொரு நாள் சொல்லிக்கலாம்.’ என்று முடிவு செய்து, “உன் மேல இல்லாம இருக்குமா! நீ என் பெஸ்ட் ஃபிரண்ட் ஆச்சே!” என்றாள்.

மது ஒரு புன்னகையுடன் “சரி. நாளைக்கு காலையில 9 மணிக்கு வீட்டுக்கு வந்துடு. சரியா?” என்றாள் மது.

 

“ஏண்டி, அந்த சி..”, சிடுமூஞ்சி என்று சொல்ல வந்தவள் வினாடியில் சுதாரித்துக் கொண்டு ”அதாவது உன்னோட அவரு… கால் ஏதாவது பண்ணுனாரா?” என்று கேட்டாள் நந்தினி.

 

”காலுமில்ல கையுமில்ல! அதெல்லாம் விவேகானந்தரா ஆக வேண்டிய கேஸ். என் தலையில கட்டி வைக்கப் பாக்குறாங்க.” என்று அலுத்துக் கொள்ள, “சரி அத விடு. நாளைக்கு ஷாப்-காவது வருவாராமா?”

“அது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். ஓ.கேடி, அத்தை வரச் சொன்னாங்க உனக்கு அப்புறம் கால் பண்றேன்” என்று இணைப்பைத் துண்டித்தவளின் மனம் பழைய நினைவுகளில் மூழ்கியது.

 

நந்தினிக்கு வசு என்றாலே அந்த அனல் தெறிக்கும் இளமையான முகம் தான் நினைவுக்கு வரும்.

 

ஆனால் மதுவிற்கு வேறு தோன்றியது. வத்சன் அவன் நண்பர்களிடம் பேசும் போது, அவனது குடும்பத்தினரிடம் விளையாடும் போது என்று மற்ற நேரங்களில் அவன் முகமே வேறு.

கண்களின் ஒளி! அவன் மந்தகாச புன்னகை! ஸ்டைலாக நடக்கும் நடை, நேர்த்தியான உடை! என்று இன்னும் பல! இவை அனைத்தும் மது மற்றும் நந்தினியின் மற்ற தோழிகளே சொல்லிக் கேட்டிருக்கின்றனர் மதுவும், நந்தினியும்.

“ம்க்கும்… அவனப் பத்தி தெரியாம உலராதீங்கடி. சிரிச்சு பேசுற மாதிரிதான் தெரியும், பட் அதுக்குள்ள 2 maths, 4 chemistry சார் இருக்குறது உங்களுக்கு தெரியாது. அது குடுக்குற குறைந்த பட்ச தண்டனை என்ன தெரியுமா? நீல்ஸ் டவுன்!. அதிக பட்ச தண்டனை சொல்றதுக்கில்ல!” என்று மதுவின் முகம் போகும் போக்கை மற்ற யாரும் கண்டு கொள்வதே இல்லை.

 

வீடு செல்லும் வழியில் மெல்லிய புலம்பலுடன் மதுவின் உள்ளம் படும் பாட்டை நந்து மட்டுமே அறிவாள், ’ஹீரோ மாதிரி இருக்கானாம், அட்ரக்டிவ் ஸ்மைலாம், ஹும், இவளுங்க பாக்குறதப் பாரு… அப்டியே அவன முழுங்குற மாதிரி’.

உடனே கிளுக்கென்று வந்த சிரிப்பை மதுவிற்கு தெரியாமல் மறைக்க முயன்றாலும் “என்னடி, உனக்கும் அவன பிடிச்சிருக்கா?” என்று கோபம் பொங்க மது கேட்க, “சீச்சீ, நான் உனக்கு போட்டியா வருவேனா!” என்று பாவமாக கூற, “அடிங்க!” என்று மது நந்தினியை துரத்துவாள்.

 

மது மற்றும் பிரவீனிடம் மட்டும் கண்டிப்பு ஏன்!. ”இல்லையென்றால் பாடம் சொல்லித்தரும் போது என்னை ஒரு வழி செய்து விடுவார்கள் இந்த வானரங்கள்” என்று அவனே அவன் அம்மாவிடம் சொல்லி அந்த வானரங்களே கேட்டும் விட்டன. அதன் பின்னாலும் என்னதான் புன்னகை செய்தாலும் அவன் வில்லனாகத்தான் தெரிந்தான் மதுவிற்கு. ஆனாலும் அவனைப் பார்த்தால் ஏதோ ஒரு குளுமை நெஞ்சில் பரவத்தான் செய்தது மது யாழினிக்கு.

 

’நாளை அவனும் வருவானோ!’ மதுவின் மனம் வத்சனை சுற்றிச் சுற்றி வந்தது. அவனும் இப்படி நினைப்பானா! என்ற சந்தேகம் வேறு.

ஆனால் அவளது சந்தேகத்திற்கு விடை அன்று மாலையே மதுவிற்கு கிடைத்தது.

 

இப்போதெல்லாம் இரவு தூங்கப் போகும் முன் கைப்பேசியை ஏக்கமாகப் பார்த்து ‘ஒரு மெசேஜ் அனுப்புனாத்தான் என்னவாம்!’ என்று புலம்பிகொண்டு கைப்பேசியை அவளது கட்டிலின் அருகில் உள்ள மேஜையில் வைத்துவிட்டு தூங்கிவிடுவாள். சில சமயங்களில் தானே ஒரு ஹலோ சொன்னால் என்ன, ஆனால் இதை மனதில் வைத்துக் கொண்டு திருமணமான உடன் அனைத்தும் எதிர் பார்த்தால் என்ன செய்வது! வேண்டாம் அவனே அழைக்கட்டும் இல்லை எப்படியோ போகட்டும்! எனக்கென்ன! யாரும் இங்கே ஏங்கவில்லை! என்று தனக்குள்ளேயே விவாதம் நடத்திவிட்டு ஹலோ சொல்லும் யோசனையை அத்தோடு விட்டுவிடுவாள்.

 

இப்படித்தான் அன்றும் மேஜை மேல் வைத்துவிட்டு தூங்கப் போக, “டிங்…” என்ற சத்தம் வர, ‘மெசேஜ்! இந்த நேரத்தில்! ஒருவேளை வத்சனோ!? பார்த்து டிஸ்ஸபாய்ண்ட் ஆகவா! வேண்டாம்” என்று படுத்தவள் மீண்டும் “டிங்…” என்ற சத்தம் அவள் மூளை யோசிக்கும் முன்பாக மனம் “எடுத்துப் பார்! ஒரு வேளை அவன் தானோ என்னவோ!” என்று சொல்ல, கைப்பேசியை எடுத்தாள்.

அவன்தான்! அவனது டி.பி.யில் வெளிர் ஆரஞ்சு நிற டி-சார்ட் அணிந்திருந்தான். ’இந்த சிரிப்புக்கு ஒன்னும் குறைச்சலில்ல’ என்று செல்லம்மாக திட்டிவிட்டு மெசேஜைப் பார்த்தாள்.

“ஹலோ!”

”தூங்கிவிட்டாயா?”

மதுவின் அதரங்கள் அனிச்சையாக புன்னகைக்க, பதில் அனுப்பினாள்.

“ஹாய்”

“இல்லை. இனிமேல்தான்”.

சில நிமிடங்கள் எதுவும் பதில் இல்லை.

அதன்பின் அவன் ஏதோ டைப் செய்கிறான் என்றது வாட்ஸ்அப்.

’அப்படி என்னதான் டைப் செய்றான் இவ்வளவு நேரமா! மெசேஜ் அனுப்பி பழக்கமே இல்லையோ!’

”டிங்…”

“நாளைக்கு முகூர்த்தப் பட்டு எடுக்கப் போறியா?” – வத்சன்

”யெஸ்.” – மது.

“எப்போ போறீங்க?” – வத்சன்

“எதுக்கு? டிராபிக்க ஃப்ரீஸ் பண்ண போறீங்களா? 10 மணிக்கு இங்க இருந்து கிளம்புறதா பிளான்.”

“ஹா ஹா ஹா. நீங்க உத்தரவு போட்டா அதுவும் நடக்கும்.”

மதுவிற்கு உதட்டின் புன்னகை மேலும் அகலமாக, “ம்ஹ்ம்ம்….”

“ம்ம்ம்!”

ரொம்ப வழியாதடி மது! குட் நைட் சொல்லிட்டு தூங்கு என்று யோசித்தவள் “குட் நைட்!” என்று அனுப்பினாள்.

அதற்கு ”குட் நைட்” என்று பதில் வந்தது.

 

வத்சனின் டி.பி.யில் அவனை சில நிமிடங்கள் பார்த்துவிட்டு முகத்தின் புன்னகை மாறாமல் தூங்கச் சென்றாள் மது.

 

Advertisement