Advertisement

 

6   

 

நந்தினி:

 

அன்று மது நந்தினியை கைப்பேசியில் அழைத்து மனோ வந்த விஷயத்தை சொன்னதிலிருந்தே நந்தினியின் கால்கள் தரையில்இல்லை.

“நந்து, உனக்கு மனோ அங்கிள் ஞாபகம் இருக்கா?” ஆர்வமாக கேட்டாள் மது.

சில வினாடிகள் யோசித்தாள் நந்தினி ’அவரத்தான் கேக்குறாளா?’

“ஹேய்!!! லைன்லதான் இருக்கியாடி?” மதுவின் குரல் காதில் கொய்ய்ய் என்று அலர, “ஆஆங் இருக்கேன் இருக்கேன் சொல்லு, யாரைப் பத்தி கேக்குற? அந்த பிரவீனோட அப்பாவையா?” என்று கேள்வியில் முடித்தாள் நந்தினி.

 

”அவர் இன்னக்கி வீட்டுக்கு வந்திருந்தார். அவரோட மகன கட்டிக்கணுமாம்.” மதுவின் குரலில் ஸ்ருதி குறைந்தது.

ஆனால் பதட்டத்தோடு அலரினாள் நந்து. “யாரை யாரை? பிரவீனையா?”

“இல்லடி, அவனோட அண்ணன் சிடுமூஞ்சி இல்ல? அவனைத்தான்.”

“ஹப்பா…” என்று பெருமூச்சை விட்டாள் நந்தினி.

“என்ன? ஹப்பாவா? ஏண்டி? என்ன பேக் பண்ணி அனுப்புறதுல நீயுமா ஆர்வமா இருக்க?”

“இல்ல இல்ல… அதுவந்து… ”, ‘ஐயையோ!! என்ன சொல்லுவேன், மைண்ட் வாய்ஸ்னு நெனச்சு சத்தமா சொல்லிட்டேன் போல… ஆங்’ நந்தினி வார்த்தைகளைத் தேடி ஒருவழியாய் சமாளித்தாள்.

“ஹய்ய்யோனு சொன்னது டங்கு ஸ்லிப்பாகி ஹப்பானு வந்துருச்சுடி… ஏண்டி சின்ன வயசுல சிடுமூஞ்சினா இப்பவும் அப்டியேவா?”

”அப்படியில்ல…” என்று இழுத்தாள் மது.

“என்ன நொப்படியில்ல… எல்லாம் நேர்ல பாத்து பேசுனா சரியாகிடும். விடு பாத்துக்கலாம்.” என்று அலட்சியமாக சொன்னாள் நந்தினி.

”ம்க்கும்” சலித்துக் கொண்டாள் மது.

“சரி ஏதாவது போட்டோல்லாம் குடுத்தாங்களா? ஃபேமிலி போட்டோவா?” என்று அசடு வழிய கேட்டாள் நந்தினி.

“அவன் போட்டோ மட்டும் தான். சரி நாளை பார்க்கில் பார்க்கலாம். அட் ஷார்ப் 6. ஓ.கே?” என்று உறுதி செய்தாள் மது.

“டபுள் ஓ.கே!”என்று சம்மதம் தெரிவித்தாள் நந்தினி.

அந்த நிமிடம் முதல் இப்படி காற்றில்தான் மிதக்கிறாள் நந்தினி.

மறுநாள் மாலை 5 மணிக்கே பூங்காவிற்கு வந்துவிட்டாள் நந்தினி.

மது வரும்போது ஸ்லோமோஷனில் ஊஞ்சலில் ஆடிக்கொண்டு வானத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். முகத்தில் அசடு வழிய புன்னகை வேறு.

இவளைப் பார்த்த மது ‘அப்டி வானத்துல என்னத்த பாத்துட்டு இருக்கா? ம்ம்ம்…’ என்று யோசித்தவாரே நந்தினி பார்த்த திசைநோக்கி அவளும் பார்த்தாள். ‘அப்படி ஒன்னும் புதுசா இல்லையே!’

பொறுமை இழந்தவளாய், “அடியேய்… அங்க என்னடி பாத்துட்டு இருக்க? ஆள் வந்து நிக்கிறது கூட தெரியாம?” எரிந்து விழுந்தவாறே அவளும் மற்றொரு ஊஞ்சலில் அமர்ந்தாள்.

சுயநினைவிற்கு வந்தவள் போல நந்தினி “ஹேய் எப்படி வந்த?”

“நீங்க வானத்த வெறிக்கும் போதே வந்தாச்சு.” என்றாள் மது.

 

”வாடி…. புதுப்பொண்ணு! என்ன சொல்றார் உங்க அவர்?” நந்தினி கிண்டலாக கேட்க.

“ஹலோ! யாரும் ஒன்னும் சொல்லலை” ஒரு முறைப்புடன் சொன்னாள் மது.
“என்கிட்டயேவா? ஒழுங்காசொல்லு. பேசினியா அவர்ட்ட?” ஆர்வமாக ஊஞ்சலை நிறுத்தி மதுவின் பக்கம் திரும்பினாள் நந்தினி.

 

”அதெல்லாம் இல்ல. சீக்கிரமே நேர்லயே வராங்களாம்” சொல்லிவிட்டு கீழே குனிந்து கொண்டாள் மது. அவளது அலைபாயும் கூந்தல் அவளது முகத்தை  நந்தினிக்கு காட்ட மறுக்க நந்தினியே எழுந்து வந்து குனிந்து மதுவின் முகத்தைப் பார்க்க, அங்கே வெட்கம் தாண்டவமாடியது.

“அடேங்கப்பா… மதுக்குட்டிக்கு வெக்கமெல்லாம் வருமா… இரு இரு ஒரு ஃபோட்டோ எடுத்துக்கிறேன்.” என்று நந்தினி கிண்டல் செய்ய,

“ச்சீ போடி” என்று வேறு புறம் முகத்தை திருப்பிக் கொண்டாள் மது.

“போச்சுடா… இவ போற போக்கப் பாத்தா இன்னும் அடுத்த 5, 6 எபிசோடுக்கு வெக்கப்படுவா போல இருக்கே!” என்று கவலையாக கன்னத்தில் கை வைக்க, “இங்க என்ன சீரியலா எடுக்குறாங்க, எபிசோட் எபிசோடா வெட்கப்பட…” என்று சகஜமான பேச்சிற்கு வந்தனர் இருவரும்.

அடுத்து என்ன இருபெண்களும் ஒன்றும் இல்லாத விஷயத்திற்கே மணிக்கணக்கில் அரட்டை அடிப்பார்கள், இப்போது கேட்கவா வேண்டும்.

ஏழு மணியளவில் மதுவின் அத்தை அவளை கைப்பேசியில் அழைத்து வீட்டிற்கு வரச்சொன்ன பிறகே அவர்களுக்கு நேரமானதே தெரிந்தது. மதுவிற்கு திருமணம் பேசும் இச்சமயத்தில் பொழுது புலர்ந்த வேளையில் அங்கே இங்கே என்று சுற்றக்கூடாதாம்.

“சரிடி அத்தை சீக்கிரம் வரச் சொன்னாங்க. வா போகலாம் போகும்போது உன்னையும் டிராப் பண்றேன்.” என்று மது கூற “சரி வா போகலாம்.” என்று இருவரும் புறப்பட்டனர்.

 

***

 

இரு வீடுகளிலும் திருமண ஏற்பாடுகள் தொடங்கின.

அதன் முதல் கட்டமாக, ஒரு நன்னாளில் மனோவின் குடும்பம் மதுவைப் பெண் பார்க்க வந்தது.

 

மெல்லிய ரோஜா வண்ணத்தில் தங்க பூக்கள் ஜரிகை கொண்ட சேலை ஒன்றை எடுத்து கொடுத்தார் அத்தை வசந்தி. மலர்களின் ராணியாகவே தெரிந்த மதுவைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் விட்டார் வசந்தியம்மாள். “உன் அம்மாவ கல்யாண கோலத்துல பார்த்த மாதிரி இருக்கு…அவங்களோட ஆசிர்வாதம் உனக்கு எப்பவுமே உண்டு. போ.. போய் உங்க அம்மாவைத் தொட்டு கும்புட்டு வா.” என்று சொன்னார்கள்.

 

மது அவளது அம்மாவின் புகைப்படத்தின் முன் நின்று அவளது அம்மாவைப் பார்த்தாள்.

“அம்மா… அப்பாவுக்காக நான் இந்த கல்யாணத்திற்கு ஒத்துக்கொண்டேன். எனக்கு சற்றே பயமாக உள்ளது… நீங்கள் தான் அனைத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும்…” என்று மனதிற்குள் நினைத்து தன் தாயின் புகைப்படத்தைத் தொட்டு வணங்க, கண்களில் சொறிந்த கண்ணீரை அத்தைக்குத் தெரியாமல் துடைத்தாள்.

இரு பெண்களும் பேசிக்கொண்டு இருக்கும் போதே, சொன்ன நேரத்தில் வாசலில் கார் சத்தம் கேட்க, அத்தையம்மாள் சென்று அனைவரையும் வரவேற்றாள். மணிவாசகமும் வாக்கரை ஊன்றிக் கொண்டு சென்றார்.

“வாங்க… வாங்க…” என்று பரஸ்பரம் வரவேற்றுக்கொண்டு அனைவரும் அமர்ந்தனர்.

வத்சனையும் பிரவீனையும் பார்த்த வசந்தியம்மாள் , “குழந்தைங்க நல்லா வளந்துட்டாங்க.” என்று சந்தோஷப்பட்டாள்.

“ஹ்ம்ம்ம் மதுக் குட்டி எங்கே…? அவளுக்கு என்ன வெட்கம்? நாங்க என்ன அந்நியர்களா? நானே சென்று அழைத்து வருகிறேன்…” என்று செல்லமாக கோபித்துக் கொண்டு அவளின் அறைக்கு சென்றார் பாரிஜாதம்.

“மது குட்டி…” என்று அவர் உள்ளே செல்ல, தோழியுடன் கைப்பேசியில் பேசிக் கொண்டு இருந்தவள், “ஒரு நிமிடம்… திரும்பி நானே உன்னை அழைக்கிறேன்… பை” என்று சொல்லி விட்டு… “ஆன்ட்டி…” என்று ஓடிவந்து கட்டிக்கொண்டாள்.

“என் கண்ணு எப்‌படிடா இருக்க…? பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு…?தேவத மாதிரி இருக்கடா. என் கண்ணே பட்டுடும் போல இருக்கு…”என்று ஆசையாக சொடுக்கு போட்டு திருஷ்டி கழித்தார். மது ஆசையாக அவரைக் கட்டிக்கொண்டாள்.

“ஹ்ம்ம்ம்… நீங்க மட்டும் என்ன… யாராவது புதுசா பாத்தா ‘பசங்க என்ன பண்றாங்க..பசங்களுக்கு கல்யாணம் பண்ணிட்டீங்களான்னு’ கேட்க மாட்டாங்க. ‘எத்தனை குழந்தைங்க’ ன்னு தான் கேட்பாங்க” என்று கண்களை உருட்டி சொல்ல, “ஹ்ம்ம்ம்… என்னை இந்த பசங்க தான் கிண்டல் பண்றாங்க, நீயாவது சப்போர்ட்டா இருப்பியேன்னு நெனச்சா, நீயும் என்னை கிண்டல் செய்றியே…” என்று சொல்லி போலியாக வருத்தப்பட…

“சும்மா அத்தை… என் செல்ல அத்தைய… நான் கிண்டல் செய்வேனா…” என்று அத்தையின் நாடியைப் பிடித்து உதடுகளைக் குவித்துப் கொஞ்சிப் பேச,“என்னடா சொன்ன… ‘அத்தை…’ என் செல்லம்… அப்டியே கூப்பிடும்மா… இப்பவே நீ என் மருமகள் ஆன மாதிரி இருக்குடா…”என்று சந்தோஷப்பட்டார்.

 

”சரி வா… கீழ போகலாம். உன்னோட “அவர்” காத்துக்கிட்டு இருக்கார்…” என்று கேலி செய்து சிரிக்க, “போங்க அத்தை…” என்று வெட்கினாள் மது.

“இருவரும் மாடியில் இருந்து கீழிறங்கி வர, “வத்சனின் பார்வை அம்புகள் மாடிப்படிகள் நோக்கி பாய்வதைப் பார்த்து அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.

வத்சனின் பார்வை தன் மீது படிவதை உணர்ந்து நாணத்தில் அவளது கன்னம் குங்குமப்பூ சூட மேலும் அழகானாள் மது.

கீழிறங்கி வந்ததும் கூடத்தில் அமர்ந்திருந்த அனைவருக்கும் ஒரு வணக்கத்‌தை சொல்லிவிட்டு, தன் தந்தையின் அருகில் சென்று அமர்ந்தாள்.

சில நொடிகள் அங்கே அமைதி நிலவியது. அதைப் பிரவீன் தான் கலைத்தான்.

“ஹேய்… மது… என்ன இது… என்னமா வெட்கப்படுரப்பா? கிலோ எவ்வளவுக்குன்னு வாங்குன? ஏன்னா கல்யாணத்துக்கு மொத்தமா வாங்குனா மலிவா இருக்கும் பாரு…” என்று கிண்டல் செய்ய யாரேனும் ஒருவர் பேசினால் வாயைத் திறக்கலாம் என்று காத்திருந்த அனைவரின் சிரிப்பொலியும் அங்கே ஒலித்தன.

’ஏன் பிரவீண், இன்னுமா நீ 20 வருஷம் பழைய மொக்க ஜோக் சொல்லிட்டு இருக்க, இரு உன்ன அப்பறம் கவனிக்கிறேன். உனக்கு ஒரு பாயாசத்த போட்டுட வேண்டியதுதான்!’ என்று பிரவீனை பார்த்தபடி மனதிற்குள் திட்டம் போட்டாள் மது.

’ஐயையோ தப்பான டைமிங்கோ! போச்சிடா, இவ கண்ணாலயே எரிச்சிருவா போலருக்கே! ஏதாவது ஜால்ரா போட்டு இவ கட்சிக்கு மாறிட வேண்டியது தான், அம்மாவும் அப்பாவும் இந்த குட்டகத்திரிக்கா கிட்ட காட்ற பாசத்த பாத்தா இனி கண்ட்ரோல் ஃபுல்லா அவகிட்ட தான் போல. என்ன பண்ணலாம். பேசாம இவங்களுக்கு ஹெல்ப் பண்ணி பொழச்சுக்கலாம்.’ என்று பலத்த யோசனயில் இருந்தவனுக்கு அவன் அம்மாவே வழி சொன்னாள்.

 

“வசந்தியக்கா… வாங்களேன் நாம போய் இவங்களுக்கு ஏதாவது பலகாரம் செய்யலாம்” என்று யாருடைய சம்மதமும் பெறாமலேயே சென்று விட்டனர். பாரிஜாதம் போகும் போது பிரவீனிற்கு சிமிக்ஞை செய்யவும் தவறவில்லை.

 

அதை உணர்ந்த பிரவீனும், “அங்கிள், வாங்களேன் நாம தோட்டத்தைப் போய் பாக்கலாம். நான் அக்ரி தான் படிச்சிருக்கேன். உங்களுக்கும் வாக்கிங் போன மாதிரி இருக்குமே.” என்று ஒரு கண் அசைவில் ஏதோ சொல்ல பெரியவர்களும் புரிந்து கொண்டு உடனே எழுந்து தோட்டத்தை நோக்கி சென்றனர். ஏதோ வத்சன் மற்றும் மது அங்கிருப்பது தெரியாதது போல.

 

அந்த கூடத்தில் எதிர் எதிர் சோஃபாக்களில் இருவரும் அமர்ந்திருக்க சில நிமிடங்கள் அமைதி நிலவியது.

‘இவன் என்ன கேட்கப் போறான்? இல்ல நாமளே முதலில் பேசிடலாமா? ம்ஹும். அது நடக்குற காரியம் இல்ல. நாம ஏதையாவது கேட்டு அவன் பல்பு குடுத்துட்டா? வேண்டாம். அவனே பேசட்டும்.’ என்று அவள் முடிவெடுக்கும் தருணம் வத்சனே, “என்ன படிச்சிருக்க?” என்று கேட்டு மதுவை தலை நிமிர வைத்தான்.

நிமிர்ந்தவளின் பார்வையில் அவனது கண்கள் பட சில நிமிடங்கள் மெய் மறந்திருந்தாள் மது.

வத்சன் “ஹலோ…” என்று சொல்லி அவளது முகத்தின் முன் கை அசைத்துக் காட்டிய பின்னரே அவள் இயல்பு நிலைக்கு வந்தாள்.

‘அடச்சே… என்ன இது… பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்த மாதிரி பாத்துட்டேனே! அவன் என்ன நெனப்பான்? மது உனக்கு வர வர புத்தி மட்டுப்பட்டுக்கிட்டே வருதுடி…’ என்று தனக்கு ரகசியமாக ஒரு குட்டு வைத்துக் கொண்டாள் மது.

‘இவன் என்ன கேட்டான்னு தெரியலையே… எப்படி மறுபடியும் கேட்பது? அதுக்கு வேற நக்கலா பாப்பானோ?’ என்று யோசிக்கையில் வத்சனே மீண்டும் பேசினான்.

“என்ன படிச்சிருக்கனு கேட்டேன்” என்று சொல்லி ஒரு குறும்புப் பார்வை பார்த்தான்.

“B.E C.S முடிச்சிட்டு ஒரு ஐ.டி கம்பெனில வேலை செஞ்சிட்டு இருந்தேன். சொந்தமா ஒரு கம்பெனி தொடங்கணும்னு இருக்கேன்…” என்றாள்.

சொல்லிவிட்டு ‘இவன் என்ன மனதைப் படிக்க படித்திருக்கிறானா? கண்டுபிடித்துவிட்டானே!’ என்று மனதிற்குள் யோசித்தாள்.

“ஓ… அதுக்கு டெக்னிக்கல் நாலேஜ் இருந்தா மட்டும் போதாது. மேனேஜ்மெண்ட் ஸ்கில்ஸ் கூட முக்கியம். இல்லன்னா கொஞ்சம் கஷ்டம்.” என்று சொன்னான்.

“ஆமாம் M.B.A… படிச்சிருக்கேன்.”

“ஹ்ம்… நல்ல விஷயம் தான். என் நண்பன் கூட ஐ.டி நிறுவனம் வச்சுருக்கான். உனக்கு விருப்பம் இருந்தால சொல்லு. அங்கு மேனேஜிங் சம்பந்தமா நீ நிறைய கத்துக்கலாம். பிறகு ஒரு தனி நிறுவனம் ஆரம்பிக்கும் அளவிற்கு உனக்கு தைரியம் வந்துட்ட பிறகு நாமே ஒரு நிறுவனம் தொடங்கலாம்.” என்று அவன் பேசி முடிக்க மதுவிற்கு கண்களில் கண்ணீர் துளிகள் ‘வந்து விடவா?’ என்று தயாராக இருந்தது.

இனிமேல் தன் கனவுகள் பலிக்கப் போவது இல்லை என்று முடிவு செய்து இருந்த போது யாரால் அந்த கனவுக் கோட்டை தகர்க்கப்படும் என்று இருந்தாளோ அவனே வந்து அந்த கோட்டையை புதுப்பிக்கும் போது பின்னே எப்படி இருக்கும் அவளுக்கு?

அவனைக் கண் கொட்டாமல் மீண்டும் பார்த்தே விட்டாள். 

“ஹேய்… என்ன ஆச்சு..” என்று அவன் அவளின் கண் முன்னே சொடுக்கு போட, “ஒன்றும் இல்லை…” என்று சொல்லி முடித்தாள்.

“உனக்கு இந்த திருமணத்தில் சம்மதமா…?” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.

“எனக்கு… எப்படி சொல்றதுன்னு தெரியல… அது வந்து…” என்று அவள் திணற, “சம்மதமா இல்லையா?” என்று அவன் மீண்டும் கேட்டான்.

“ஆங்… அப்டியில்ல… சம்மதம் தான்… ஆனா மேரேஜ்க்கு அப்பறம் எனக்கு கொஞ்சம் டைம் வேணும்…” என்றாள்.

வத்சன் புரிந்து கொண்டான். ஒரு சின்ன புன்னகையில் தன் சம்மதத்தை தெரிவித்தான்.

அவளது தயக்கத்தைப் போக்க, “சரி அது ஒன்னும் ப்ராப்ளம் இல்ல. டேக் யுவர் ஓன் டைம்!” என்று அவன் தோள்களைக குலுக்கி தயக்கமின்றி சொன்ன விதத்தில் அவளுக்கு திருப்தியே!

“தேங்க்ஸ்…” என்று ஒற்றை வார்த்தையில் சிறிய புன்னகையுடன் முடித்தாள் மது.

மீண்டும் அமைதி.

 

வத்சன் அமைதியைக் கலைத்தான். “இப்பவும் புக்ஸ்லாம் படிக்கிறியா?”

“ம்… கொஞ்சம் அப்பப்போ!” என்றுசொல்லி விட்டு, ‘ஐயையோ, இந்த வயசுலயும் கிளாஸ் எடுப்பான் போலருக்கே! அடேய் பிரவீன், நீ எதுக்கு தனியா விட்டுட்டு போன! இந்த சிடுமூஞ்சி என்ன கேக்குது பாரு! கொடுமைடா சாமி!’ என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டாள்.

 

“வாயேன் நீ என்னன்ன புக்ஸ் வச்சிருக்கன்னு பாக்கலாம்….” என்று அவன் எழ, அவள் வீட்டின் சின்ன நூலகத்திற்கு அழைத்துச் சென்றாள்.

 

“இதில் பாதிக்கும் மேலான புக்ஸ் அப்பாவுடையது. இதோ இந்த அலமாரி முழுவதும் நான் சேர்த்தது…” என்று காட்டினாள்.

“ஓ… பரவாயில்லயே…” என்று அந்த புத்தகங்களைப் பார்வையிட்டான்.

 

கல்கி, சுஜாதா மற்றும் ஜெயகாந்தனின் நாவல்கள்,

ஷேக்ஸ்பியரின் புத்தகங்கள், ஹேரிபாட்டர் புத்தகங்கள், மைக்கேல் கிரிக்டன் புத்தகங்கள், வேம்பையர் சீரீஸ், இப்படி கற்பனை, மாயாஜாலக் கதைகள், சில அவளின் படிப்பு சம்பந்தமானது என்று வைத்திருந்தாள்.

 

ஆனால் ஷேக்ஸ்பியரின் புத்தகங்கள் அதன் மேல் உறை பிரிக்கப்படாமலேயே இருந்தன.

“இந்த புத்தகங்களப் படிக்கவே இல்லையா…? இதையும் படி அப்போதான் வயசுக்கு உண்டான ஃபீலிங்க்ஸ் கொஞ்சமாவது  வரும்…” என்று குறும்பாக சொல்லி ஒரு பெசுமூச்சை விட, நாணத்தில் தலை குனிந்தாள் அவள், “எல்லாம் வரும்போது வரும்…” என்று முணுமுணுத்தபடி சொல்லி எங்கோ பார்ப்பது போல் பாவனை செய்தாள்.

“சீக்கிரம் வந்தால் நல்லது…” என்று அவன் தன் தலைகோதிய படியே சொன்னதைக் கேட்டு, அவளது கன்னம் சூடானதை அவள் உணராமல் இல்லை.

“வந்து… அத்தை ஸ்நேக்ஸ் செய்திருப்பாங்க… நான் போய் வாங்கி வரேனே!.” என்று சமாளித்தபடி எதையும்  புரிந்து கொள்ளாதது போலவே அங்கிருந்து நழுவப் பார்த்தாள்.

“நானும் வரேன். இல்லன்னா அந்த பிரவீன் கிண்டல்ங்கிற பேர்ல மொக்க ஜோக் சொல்லியே காதுல ரத்தம் வர வச்சிடுவான்.” என்று சொல்லி சிரிக்க அவளும் சேர்ந்து சிரித்தாள்.

அவன் முன்னே செல்ல அவனைப் பின் தொடர்ந்தாள் அவள். இவனுடன் இப்படி இழகுவாக பழக முடியும் என்று அவள் ஒரு போதும் நினைத்தது இல்லை. அவர்கள் இருவரும் இறங்கி வரும் காட்சியைக் கண்ட பெரியவர்கள் பூரித்துப் போயினர்.

“ஜோடிப் பொருத்தம் எவ்வளவு நல்லா இருக்கு பாருங்களேன்…”என்று பாரிஜாதம் ஆனந்தப்பட, “இவர்களுக்கு சீக்கிரமே முகூர்த்தம் குறிக்க வேண்டும்.” என்று முடிவெடுத்தனர்.

***

 

Advertisement