Advertisement

5

 

வத்சன் படிப்பில் மட்டுமல்ல, தொழிலிலும் கூட தந்தையை மிஞ்சிய தனையன் என்று சொல்லலாம்.

மேற்படிப்பு முடிந்த பின் தந்தையின் தொழிலில் விற்பனைப் பிரிவில் வேலைக்கு சேர்ந்தான். அவன் விற்பனையைப் பற்றி போதிய அளவு கற்றுக்கொண்டதும், அப்பிரிவின் மேலாளராக மாற்றப்பட்டான்.

பின்னர் தன் தந்தைக்கு உதவியாளராக ஆனான். அவனும் மனோரத்தினமும் தொழில் தொடர்பாக விவாதிக்கும் போது அவனது ஆழ்ந்த சிந்தனையையும் சற்றும் தயங்காத தீர்க்கமான முடிவுகளையும் கண்டு மனோவே அதிசயித்தது உண்டு. ஏன் சில சமயங்களில் அவன் அச்சமின்றி எடுத்து வைக்கும் அடி சறுக்கலில் முடியுமோ என்று யோசிக்கும்போதே, அது வெற்றியில் முடியும் என்பதை காரணத்தோடு விளக்குவான். வேறு என்ன வேண்டும், இதற்காகவே காத்திருந்தது போல மனோ அனைத்து பொறுப்புக்களையும் வத்சனிடம் ஒப்படைத்துவிட்டு முக்கிய முடிவுகளுக்கு மட்டும் ஆலோசனை கொடுத்தார்.

 

வத்சனின் வயதிற்கு அவன் ஆனவமின்றியும் பொறுமையாகவும் பணிவாகவும் நடந்துகொள்வான். அவன் அலுவலகத்தில் வேலை செய்வோரும் அவன் மீது அளவுகடந்த மரியாதை வைத்திருந்தனர்.

எடுத்த எடுப்பில் M.D. ஆக வேண்டாம் என்பது வத்சனின் யோசனை. அப்படி படிப்படியாக வந்ததன் மூலம் அனைத்து நிலைகளிலும் யார் யார் விஸ்வாசிகள், யார் யார் கலகம் செய்வோர் என்று இந்த 2 வருடங்களில் நன்கு அறிந்து கொண்டான். அதன் பின் அவன் தந்தையின் விருப்பத்திற்கேற்ப நிர்வாகப் பொறுப்பையும் ஏற்றாயிற்று.

 

வேலையாட்களிடம் கனிவாக இருந்தாலும், வேலை விஷயத்தில் கொஞ்சமேனும் சமரசம் என்பதே இல்லை. அதிலும் காலதாமதம், பொறுப்பின்மை, எல்லாவற்றிற்கும் மேலாக துரோகம் அறவே பிடிப்பதில்லை.

மற்ற தவறுகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் உண்டு. ஆனால் துரோகம், விதிமுறை மீரல் இவற்றில் எதுவாக இருந்தாலும் உடனே வேலை நீக்கம் தான்.

 

அப்படித்தான் அன்றும் ஒரு விதிமுறை மீரல் நிகழ்ந்தது.

 

வத்சனின் முகத்தில் கடுமை மட்டுமே இருந்தது. M.D. நாற்காலியில் அமர்ந்து அவனது கணிணியில் ஏதோ டைப் செய்து கொண்டிருந்தான். அவன் அருகில் அதே உணர்வுடன் 50 வயது மதிக்கத்தக்க வரதனும் நின்றிருந்தார்.

வத்சனின் எதிரில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் அமர்ந்திருந்தார். முகத்தில் பதட்டம், பயம் அப்பியிருந்தது. அந்த A.C.யிலும் வியர்த்திருந்தது. வத்சனின் முன் இருந்த நாற்காலியின் நுனியில் அமர்ந்து கெஞ்சுதலாக பேசினான்.

“சார், ஏதோ ஒரு வேகத்துல செஞ்சிட்டேன் சார். வீட்ல வேற கஷ்டம் சார். என்னோட சம்பளத்துலதான் என் குடும்பமே இருக்கு சார். ப்லீஸ் சார்.”

 

வத்சன் ஒரு பெருமூச்சை உதிர்த்து கணிணியிலிருந்து கவனத்தை திருப்பி தன் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து தீர்க்கமான நேர்ப்பார்வையில் தன் முன்னால் இருந்த மனிதனைப் பார்த்தான்.

தன்மையான குரலில் பேசினானே ஒழிய அவனது முடிவில் மாற்றம் இருப்பதாக சிறு அறிகுறி கூட இல்லை. “மிஸ்டர் சுந்தர், உங்க மேலயோ உங்க குடும்பத்து மேலயோ எனக்கு எந்த விரோதமும் இல்ல. உங்க தலையில நீங்களே மண்ண வாரி போட்டுக்கிட்டீங்க. நீங்க நம்ம கம்பெனியில் 7 வருஷமா வேலை செய்றீங்க. நம்ம கம்பெனி டிசைன அனுமதியின்றி வேறு கம்பெனிக்கு வெளியிடுவது பாலிசி வயலன்ஸ்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். அப்படியிருந்தும் அந்த வெஸ்டன் வேவ்ஸ் கம்பெனிக்கு குடுத்து அதுக்கு கமிஷன் வேற வாங்கிருக்கீங்க. இப்போ உங்கள மன்னிச்சு விட்டா உங்கள மாதிரி கமிஷனுக்காக வேற யாராவது இதே வேலைய செய்வாங்க. சோ நீங்க இத அக்ஸப்ட் பண்ணிதான் ஆகணும். உங்க சர்வீஸ் 7 வருஷம்கிறதால உங்களுக்கு நம்ம கம்பெனியில இருந்து வரவேண்டிய பெனிபிட்ஸ் எல்லாமே வரும். அதோட உங்களுக்கு 2 மாசத்துக்கான சம்பளமும் இப்போவே வரும். இன்னைக்கே இப்போவே வாங்கிட்டு கிளம்பலாம்.” என்று தயக்கமின்றி தெளிவாக பேசினான் வத்சன்.

“சார், இப்படி திடீர்னு வேலையிலிருந்து நிறுத்துனா நான் எங்க போய் வேலை தேடுவேன். கொஞ்ச நாள் டைம் கொடுங்க சார். பிலீஸ்.” என்றான் சுந்தர்.

“நம்ம சிஸ்டர் கன்சர்ன் ஒன்னு இருக்கு. நான் மிஸ்டர் வரதனிடம் சொல்றேன் டீடைல்ஸ் வாங்கிகோங்க. ட்ரை யுவர் பெஸ்ட்.” என்று சொல்லிவிட்டு சுந்தரை வேறு பேச அனுமதிக்காமல் தன் அறையைவிட்டு வெளியே செல்ல எழுந்து நடந்து கொண்டே சொன்னான் “நீங்க போகலாம் மிஸ்டர் சுந்தர்.”, என்று சொல்லிவிட்டு கம்பீரமாக நடந்து சென்றான்.

 

சுந்தர் வேறு வழியின்றி அமைதியானான்.

 

வத்சனை தொடர்ந்து வந்த வரதன், அவர்கள் அலுவலகத்தை விட்டு வெளியே வந்து லிஃப்டில் ஏறிய பின்னரே வாயைத்திறந்தார். “என்ன சார் நீங்க! அவனுக்குப் போய் 2 மாச சம்பளம், வேலை சிபாரிசு அப்படின்னு! அவன் தெரிஞ்சேதான் இதெல்லாம் பண்ணிருக்கான் சார். அவன் துரோகி சார். அவன் கொஞ்ச நாளாவே சரியில்ல சார். பணத்த தண்ணியா செலவு செய்றான்!” என்று தன் மனக்கசப்பை உமிழ்ந்தார் வரதன்.

 

வத்சன் சிறியதொரு புன்னகை மட்டுமே உதிர்த்துவிட்டு லிஃப்டிலிருந்து இறங்கி வாசலை நோக்கி நடந்தான்.

 

முதலாளி வருவதைக் கண்ட பாதுகாவலன், வேகமாக சென்று வத்சனின் காரை பார்க்கிங்கிலிருந்து ஓட்டி வந்தான்.

 

செக்யூரிட்டிக்கு பார்வையிலேயே ஒரு நன்றியைத் தெரிவித்துவிட்டு, கார் கதவைத் திறந்தவாறே பின்னால் திரும்பி வரதனைப் பார்த்து “மிஸ்டர் வரதன், ஏறுங்க, அந்த ஆஸ்திரேலியன் க்ளைண்ட்ட பாக்க போகலாம்.” என்று கூறினான்.

” யெஸ் சார்” என்று முன் சீட்டில் ஏறினார் வரதன்.

கார் சல்லென்று “தி பார்க்” என்ற ஹோட்டலை நோக்கி பாய்ந்தது.

 

“வரதன், சுந்தர் மேல இறக்கப்பட்டு 2 மாச சம்பளத்த தரல. அவனுக்கு காசுக்கு பஞ்சமில்ல. போன மாசம் கோவா டிரிப், லட்ச ரூபாய்ல திடீர்னு ஐ-ஃபோன்னு கொஞ்ச நாளா செழிப்பாத்தான் இருக்கான். பட், அவன் உடனே இங்க இருந்து போகணும். பிகாஸ், அவனுக்கு வேண்டிய தகவல் இன்னும் கிடைக்காததால எப்படியாவது இங்க 2 நாளாவது இருக்கணும்னு நெனப்பான். அத தடுக்கணும். அவனோட இயலாமையினால வேற யாரையாவது தூண்டிவிட்டு காரியத்தை முடிக்கணும்னு நெனப்பான். கை நீட்டி பணம் வாங்கிட்டானில்ல. அதான் உடனே அனுப்பிட்டேன். அவன்கிட்ட கோபமா பேசி போலீஸ்னு போயிருந்தா, அவன் ஏதாவது தப்பான முடிவெடுத்து, நாளை பிரபல கார்மெண்ட்டில் வேலை பார்க்கும் தொழிலாளி வேலை நீக்கம் காரணமாக தற்கொலைனு நியூஸ் வந்துச்சுனு வச்சிக்கோங்க, அப்பறம் நம்மெல்லாம் வீட்ல உக்கார வேண்டிதான். இந்த மாதிரி தப்பு செய்றவங்க எல்லாம் மனசு பலவீனமானவங்க.” என்று விளக்கிவிட்டு வரதனைத் திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் சாலையில் கவனத்தை விட்டான் வத்சன்.

வரதனின் வாய் “ஆ” என்று பிளந்திருந்தது.

“கார்ல ஈ இல்ல. இருந்தாலும் வாய மூடிக்கலாம் மிஸ்டர் வரதன்” என்று கூறிவிட்டு ஒரு குறும்புப் பார்வை பார்க்க, இருவருக்கும் சிரிப்பு வந்தது.

“எப்படி சார். நீங்க இவ்வளவு கவனிச்சிருக்கீங்க?” என்று ஆச்சர்யம் கலந்த குரலில் கேட்டார் வரதன்.

“அதெல்லாம் ஒரு தொழில் ரகசியம் ஐயாசாமி” என்று குறும்பாக சொல்லி சிரித்தானே தவிர, அந்த தொழில் ரகசியம் என்னவென்று சொல்லவில்லை.

என்னதான் சிரித்து பேசினாலும் வத்சனிடம் ஒரு விஷயத்தை கரப்பது என்பது மலையைப் புரட்டுவதற்கு சமம் என்று தெரிந்ததால் அதற்கு மேல் வரதன் வாயைத் திறக்காமல் வத்சனைப் பற்றிய ஆழ்ந்த சிந்தனைக்குச் சென்றார்.

ஆறடி உயரம், கம்பீரமான தேகம், ஃபார்மல் உடை என அனைத்தும் ஒரு சேர அமைந்து, பார்த்த மாத்திரத்தில் மரியாதையை வரவழைக்கும் தோற்றம் கொண்டவன். அவனிடம் வேலை செய்யும் பெண்கள் பேசுவது கூட வரதனின் காதிற்கு வருவதுண்டு.

“ஹேய் M.D.-ய எப்டி மடக்குறதுடி! மனுஷன் கண்டுக்கவே மாட்டேங்கிறார். அதுமட்டுமில்லாம அவர்கிட்ட பேச ஏதாவது சாக்கு சொன்னா இந்த வரதன் விட மாட்டேங்கிறான்.”

“ஹேய் ஜொள்ளு! அவர மடக்குறது அப்படி ஒன்னும் ஈசியான விஷயமில்ல. அவர் பொன்னுங்க கிட்ட பேசி பாத்துருக்கியா? ‘சொல்லுங்க’, ‘வரதனை கான்டாக்ட் பண்ணுங்க’ ‘நீங்க போகலாம்’ இப்படி 2 இல்ல 3 வார்த்தையில முடிப்பாராம். போன மாசம் தன் அண்ணனோட கல்யாண பத்திரிக்கையை கொடுக்கணும்னு அந்த ரம்யா 2 வாரம் பியூட்டி பார்லர்லயே தவங்கிடந்து போய் நின்னா, மனுஷன் லேப்டாப்ல இருந்து தலைய தூக்கவே இல்லையாம். ஹ்ம்ம்ம், யாருக்கு குடுத்து வச்சிருக்கோ! யாரு கண்டா!’

இன்னொருத்தி அதற்கும் மேல் ஒருபடி சென்று, ‘அடப் போங்கடி, M.D.-யை கல்யாணம் பண்ணிக்கிற பேராசையெல்லாம் இல்லடி. அட்லீஸ்ட் ஒரு நாளாவது அவரோட கேர்ள் ஃப்ரண்டா இருந்தா போதும்டி.’ என்று சொல்லி கனவுலகிற்கே சென்றுவிட்டாள்.

 

இவை அனைத்தையும் கேள்விப்பட்ட வரதன் ’இதுங்கள சிறு வயசுலயே அடிச்சு வளர்த்துருக்கணும்’ என மனதிற்குள் புலம்பிக் கொண்டார்.

 

 

***

 

வருங்கால வாடிக்கையாளருடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டு“தி பார்க்”-கிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தான் வத்சன். வரதன் அங்கிருந்து வீடு திரும்புவதால் அவருக்கு வாடகை கார் எற்பாடு செய்ய ஹோட்டல் மேலாளரிடம் சொல்லிவிட்டு வத்சன் மட்டும் திரும்பினான்.

 

அவனது கைப்பேசி அழைத்தது.

அவனது கார் புளூடூத்தில் இணைக்கப்பட்டு உள்ளதால் காரில் ஒரு பட்டனை மட்டும் அழுத்தினான். மறுமுனையில் அவன் தந்தை மனோ.

 

“ஹாய் பா.” ஆர்வம் கலந்த உற்சாகத்துடன் பேசினான் மகன்.

“என்னடா நேத்து ஆஃபீஸ் கெஸ்ட் ரூம்லயே தங்கீட்ட போல?”

“ஆமாம்பா! நேத்து டெலிவெரில கொஞ்சம் பிராப்ளம். சரி முடிச்சிட்டு போகலாம்னா ரொம்ப லேட் ஆகிடுச்சு அதான்ப்பா. அம்மாட்ட சொல்லிருந்தேனே.”

“சொன்னா சொன்னா! சரி. அதவிடு. நான் போன காரியம் சக்ஸஸ்!! திருப்திதானே?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார் மனோ.

 

“நைஸ் பா! ஆல் இஸ் இன் அவர் கண்ட்ரோல் ரைட்? அந்த மக்கு மது எதையும் கண்டுபிடிக்கலையே!” என்று உறுதி செய்தான் வத்சன்.

“நோ நோ! அதெல்லாம் இல்ல. ஏன்டா இன்னும் கொஞ்ச நாள்ல்ல அவ உனக்கு மனைவி ஆகப் போறா, இன்னும் மக்குனு சொல்லிட்டு இருந்தா எப்படிடா!” என்று வருத்தத்துடன் கேட்க, “அத விடுங்கப்பா. எல்லாம் பாத்துக்கலாம். சரிப்பா வீட்ல பேசிக்கலாம்! பை!” என்று தொடர்பைத் துண்டித்தான் வத்சன்.

 

’மக்கு மது! எப்படி இவ்வளவு அழகானாய்’ என்று மனதிற்குள் வியந்தான் வத்சன்.

அவன் உள்ளத்தில் வியாபித்து நின்றாள் மது யாழினி.

’உண்மை தெரிஞ்சா என்ன செய்வ மது? என்னை வெறுப்பியா?! இல்ல. இப்போ எதுக்கு கண்டதும் நினைச்சுகிட்டு. அப்போ பாத்துக்கலாம்’ என்று அவளது நினைவில் மூழ்கினான் வத்சன்.

 

“கனவோடு தானடி நீ தோன்றினாய்..
கண்களால் உன்னை படம் எடுத்தேன்…”

 

உதட்டில் பாடல் வரிகள் முணுமுணுக்க, மனதின் மயக்கம் முகத்தில் புன்னகையாய் வெளிவந்தன.

 

 

“இரவும் பகலும் ஒரு மயக்கம்..
நீங்காமலே நெஞ்சில் இருக்கும்..
உயிரின் உந்தன் நெருக்கம்….
இறந்தாலுமே என்றும் இருக்கும்..
நான் இறந்தாலுமே என்றும் இருக்கும்…”

 

***

 

 

Advertisement