Advertisement

 

4

அன்று மனோ செல்லும் வரை அவளின் அறையை விட்டு வெளியே வரவே இல்லை மது.

பழைய நினைவுகளில் மூழ்கியே விட்டாள்.

மனோரத்தினம் மணிவாசகத்தின் உற்ற தோழன். தொடக்கத்தில் இருவரும் ஒரே கார்மெண்ட்க்கு பங்குதாரர்களாக தொழில் செய்தனர். பின்னர் ஒரு நல்ல நிலைமைக்கு வந்தவுடன் தனித்தனியாக தொழில் செய்தனர். மனோரத்தினம் வெளிநாடு சென்று, அவர்களின் தொழில் தொடர்பான புதிய தொழில்நுட்பங்கள் பலவும் கற்று, அங்கேயும் தன் தொழிற்சாலை ஒன்றை நிறுவினார்.

இருவர் குடும்பமும் சேர்ந்து தொழில் செய்த கால கட்டத்தில், வாரத்திற்கு ஒரு முறை இரு குடும்பமும் பிக்னிக், சினிமா, ஒரே வீட்டில் மதிய உணவு என்று பொழுதைக் கழிப்பது உண்டு.

மனோரத்தினத்திற்க்கு இரண்டு மகன்கள். பெரியவன் “வத்சன்”. சிறியவன் “பிரவீன்”. பிரவீனும் மதுவும் ஒத்த வயதினர். வத்சன் அவர்கள் இருவருக்கும் 4 வயது மூத்தவன். மதுவின் 10 வயதில், அவள் தாய் லக்‌ஷ்மிக்கு உடல்நலமின்றி மறைந்தார். அதன் பின்பு மணிவாசகத்தின் தங்கை வசந்தியம்மாளின் அன்போடு மனோரத்தினத்தின் மனைவி பாரிஜாதத்தின் அன்பும் சேர்ந்து தான் அவளை அவள் தாயின் பிரிவிலிருந்து கா‌த்தது.

பாரிஜாதம் ஏதாவது விசேஷமாக சமைத்தால் மதுவையும் வீட்டிற்க்கு அழைத்து தன் பிள்ளைகளோடு சேர்ந்து உண்ண வைப்பாள். அப்பொழுது வத்சன், “அம்மா அரிசி மூட்டை வந்துடுச்சு, இனி எனக்கும் பிரவீனுக்கும் தனியா எடுத்து வச்சுடு. இல்ல நாங்க ரெண்டு பேரும் பட்டினி தான் கிடக்கணும்” என்று கேலி செய்ய…

“பாருங்க ஆன்ட்டி.. இந்த தடியன் என்ன பேச்சு பேசுறான். நான் என்ன அவ்வளவா சாப்பிடுறேன்…?” என்று அழும்தொனியில் கொஞ்ச, “டேய் வசு.. அவ குழந்தைடா..… என் கண்ணு…. தேவத.. நீ கண்ணு போடுறியே…” என்று மதுவிற்கு சொடுக்கு போட்டு திருஷ்டி கழிப்பார் பாரிஜாதம்.

“இவளாம்மா குழந்தை..? விட்டா ஒரு முழு கோழியையே விழுங்கும். சாப்பிடுறதப் பாருங்க….” என்று கிண்டல் செய்ய,

“போங்க ஆன்ட்டி… எனக்கு ஒன்னும் வேண்டாம்” என்று சொல்லிவிட்டு எழ முயற்சிக்கும் போதே பாரிஜாதம் பெரியவன் வத்சனை விரட்டுவாள்.

“பாவம் அண்ணா மது… அவள ஏண்ணா விரட்டுற?”என்று அவளுக்கு பரிந்து பேசுவான் பிரவீன்.

அதனாலோ என்னவோ மது பிரவீனிடம் பழகுவதைப் போல வத்சனிடம் பழகியது இல்லை தான். ஆனால் அவளின் பத்தாம் வகுப்பு கணக்குப்பாடத்தில் சந்தேகம் தீர்க்கும் ஆசானாக இருந்தவனும், என்னென்ன புத்தகங்களை வாசக சாலையில் இருந்து எடுத்து படிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பதுடன் அதை எடுத்து வந்து கொடுத்து மறைமுகமாக ஒரு நண்பனாக இருந்தவனும் அவன்தானே. என்ன, எப்போதும் முகத்தில் மட்டும் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். எப்போதும் மதுவுடனேயே சுற்றும் நந்தினி மற்றும் மாலாவும் கூட, அவனிடம் ஏதேனும் குறிப்பு வாங்கச் செல்ல வேண்டும் என்றால் மட்டும் தலைதெரிக்க ஓடிவிடுவார்கள். அவனைப் பார்த்தாள் அவ்வளவு பயம். ஆனால் மதுயாழினிக்கு என்னவோ பயம் இல்லை என்றாலும் அவனிடம் சற்று இடைவெளிவிட்டே பழகுவாள். கேட்ட கேள்விக்கு பதில். அவ்வளவுதான்.

 

இது என்ன பிரமாதம்! இதைவிட இன்னுமொரு ஸ்பெஷல் ஐடம் உள்ளது!

 

பிரவீனும் மதுவும் ஒரே வயது மற்றும் ஒரே வகுப்பு என்பதால், இருவருக்கும் வீட்டில் தனியாக டியூசன் என்ற பெயரில் பெரிய விருந்தே நடக்கும். சரியாக எழுதிக்காட்டும் வரை திரும்பத் திரும்ப எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். தூக்கம் போல ஏதேனும் முகத்தில் தெரிந்தாலோ, இல்லை கொட்டாவி விட்டாலோ அவ்வளவுதான்.

அன்று முழுவதும் முட்டி போட்டுக் கொண்டுதான் படிக்க வேண்டும்.

அவன் வந்துவிட்டாலே இருவர் முகமும் கவிழ்ந்துவிடும்.

 

வத்சனுக்கு இவர்கள் படிக்கும் போது வீட்டில் யாரும் இவர்களை தொல்லை செய்யக்கூடாதாம். ஆனால் அவனது அம்மா அப்போது தான் வடை, பஜ்ஜி, போண்டா, பிஸ்கட், கேக் என்று எதையாவது எடுத்து வருவார்கள். இவர்கள் அடித்த அலப்பரைகளுக்கெல்லாம் பழி தீர்ப்பது போல் இவர்களைப் பார்க்க வைத்துக் கொண்டே வத்சன் மட்டும் அனைத்தையும் ருசிப்பான்.

 

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பாரிஜாதம், ஒருநாள் வத்சன் வருவதற்கு முன்பே பலகாரங்களை வைத்து விட்டார். மதுவும் பிரவீனும் வேட்டையை தொடங்கி விட்டார்கள். திடீரென்று வத்சன் மாடியிலிருந்து இரங்கும் சத்தம் கேட்க, பிரவீன் தன் தட்டை ஒதுக்கி வைத்துவிட்டு சட்டையில் வாயை துடைத்துக் கொண்டான். ஆனால் மதுவோ, அப்போது தான் ஒரு போண்டாவின் பாதியை உள்ளே தள்ளியிருந்தாள்.

‘ஹேய் மது! பஜ்ஜிய அமுக்குனது போதும், அந்த maths பிசாசு வருது பாரு..’ என்று எச்சரிக்கை செய்ய, “டேய், பாதி போண்டா சாப்பிட்டு மீதியை எப்படிடா விடுறது?” என்று மீதியையும் வாயில் போட்டுக் கொண்டாள். அவள் விழுங்குவதற்குள்ளாக வத்சன் அவள் எதிரில்! வாய் முழுவதும் போண்டாவுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள் மது. அவ்வளவுதான்.

“அம்மா இங்கே பாத்தீங்களா! ஒரு போண்டாவே போண்டா சாப்பிடுகிறதே! அடடே! ஆச்சிரியக்குறி” என்று கிண்டல் செய்துவிட்டு,

“எப்ப பாத்தாலும் அறச்சுக்கிட்டே இரு. எப்படி படிப்பு வரும்? குண்டுகத்திரிக்கா! குண்டுகத்திரிக்கா!” என்று பொறிந்து தள்ள, மதுவிற்கு கோபம் தலைக்கேரியது. ஆனால் பயன் என்ன? அனைவரும் இவனுக்கு தான் ஜால்ரா அடிப்பார்கள். இவன் படிப்பில் புலியாம். அது மட்டும் இல்லாமல் வேறு யாரிடமும் டியூசன் அனுப்ப மணிவாசகத்திற்கு மனமில்லை. அதனால் போண்டாவோடு சேர்த்து கோபத்தையும் விழுங்கி விட்டாள்.

அதற்குப் பழி வாங்கும் விதமாக மறுநாள் வைத்த கிரீம்பிஸ்கட்டில் கிரீம் இல்லை. வத்சன் ஒரு கடி கடித்துவிட்டு பிஸ்கட்டை திறந்து பார்த்தால் உள்ளே சுத்தம்.

“என்ன இது? உங்க வேலையா?” மிரட்டலாக வந்தது கேள்வி.

”எங்கள கேட்டா? பிஸ்கட் கம்பெனிக்காரன கேளுங்க” என்று முனுமுனுத்தாள் மது.

“என்ன? சத்தமா சொல்லு. நீதானே?”

“இல்ல. எனக்குத் தெரியாதுன்னு சொன்னேன்.” என்று பயந்தவள் போல சொன்னவளுக்கு உள்ளுக்குள் லேசாக உதறல் தான். இருந்தாலும் பழி வாங்கிய சந்தோஷம் வேறு. மது பதில் சொல்லி முடிக்க, பிரவீன் ஒரு பெரிய பொய்யான ஏப்பம் ஒன்றை விட்டான்.

“என்னடா, நக்கலா?”

“இல்லண்ணா. பசி ஏப்பம்” என்று தலை குனிந்தபடியே பதில் கொடுத்தான், சிரிப்பை அடக்கிக் கொண்டே.

வத்சன் ஒன்றும் பேச முடியாமல், “குரங்குங்க. இதுகளுக்கு பாடம் சொல்லித் தரணுமாம். எல்லாம் என் தலை எழுத்து.” என்று முணுமுணுத்துக் கொண்டான்.

 

இவையெல்லாம் பல காலம் கழித்து இப்போது நினைவிற்கு வர, இப்போதும் மதுவிற்கு சிரிப்பு நிற்கவில்லை.

 

அதன்பின் சில வருடங்களில் வேலை விஷயமாகவும் மேல் படிப்பு விஷயமாகவும் அவன் வெளிநாடு சென்று விட்டான். அப்பொழுது அறியா வயதில் யார் புத்தகம் குடுப்பார்கள்? யார் கணக்குப் பாடம் கற்றுத் தருவார்கள்? என்ற வருத்தம் மட்டும் தோன்ற இத்தனை வருடங்களில் அந்த வருத்தமும் தோன்றிய இடம் தெரியாமல் மறைந்தே போய் விட்டது எனலாம்.

இந்த பழைய நினைவுகளில் மூழ்கியவள், இவனை திருமணம் செய்து கொள்ளச் சொன்னார்கள் என்ற எண்ணம் தோன்ற, ’கடுவன் பூனையிடம் எப்படி சிரித்து பேசி இருப்பது! அதுவும் ஒரே வீட்டிலா?’ என்ற எண்ணம் மேலிட்ட போதும் கூட, அந்த புகைப்படத்தில் அவள் பார்த்த அவனது பிம்பம் அப்படியே அவள் கண் முன்னால் நிழலாடியது.

’என்ன ஒழி வீசும் கண்கள்?  அவன் கண்ணின் கூர்மைக்கும் அவனது முக பாவத்திற்க்கும் தான் எத்தனை முரண்பாடு? அவனது மோவாய் விரைத்திருந்தாலும்  கண்கள் மட்டும் எப்படி கோபத்தைக் கட்டாமல் இருந்தது? அது மட்டும் அல்லாமல், அவனது விழிகளில் இருந்து எனது விழிகளை அகற்றவே மனம்  வரவில்லையே!! சேச்சே!! என்ன இது? பார்த்து முழுதாக அரை நாள் கூட ஆக வில்லை. அதுவும் அவனது புகைப்படத்தை. அதற்க்குள் அவனின் கண்களைப் பற்றி என்ன அவ்வளவு  யோசனை!’ என்று பலவாறாக மனதிற்குள்ளேயே பேசியவள் அன்றிரவின் தூக்கத்‌தில் இருந்து வெகுவாக கடன் வாங்கி வத்சனின் நினைவுகளுக்கே கொடுத்தாள்.

 

***

மனோரத்தினம் தன் மகனுக்கும் தனது தொழிலைக் கற்றுக் கொடுத்து அமெரிக்கப் பிரிவை அவனிடமே ஒப்படைத்திருந்தார்.

இப்பொழுது வத்சனும் தன் திறமையை நிரூபித்து அமெரிக்கப் பிரிவை வெற்றிகரமாக நடத்தி வருகிறான். ஆனால் அவன் தன் தாய் தந்தையின் ஆசைகளில் ஒன்றை மட்டும் மறுத்து வந்தான். அது அவனது திருமணம் தான். அவர் அமேரிக்காவில் அவரது தொழிலை கவனித்துக் கொண்டிருந்த தன் மகனிடமே தமிழ் நாட்டில் இருந்த திருப்பூர் மற்றும் கோவை தொழிற்சாலையையும் ஒப்படைத்துவிட்டு தன் நண்பனுடன் ஓய்வாக தன் மீதி வாழ்நாட்களை கழிக்க முடிவு செய்திருந்தார்.

 

மறுநாள்  மது எழுந்து வந்து தந்தையின் அறைக்குச் சென்றாள்.

“வா பேபீ…. சாப்பிட்டுயா? வா வந்து உட்கார்.” என்று அழைத்த தந்தையின் அருகில் சென்று கட்டிலில் அமர்ந்தாள்.

“உன்கிட்ட ஒன்னு கேட்கணும். நேத்து மனோ சொன்னதக் கேட்டு, உன் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கணும்மா. நேத்து வத்சனோட ஃபோட்டோவ பாத்தல்ல, உனக்கு பிடுச்சுருக்கா?”

“அது.. வந்துப்பா…” என்று அவள் இழுத்து நாணத்துடன் போராடிக் கொண்டு இருக்கையில் அவளின் அத்தையும் அவரது அண்ணனுக்கு காலைச் சிற்றுண்டி எடுத்து வந்தார். “அவள இப்படி நேரடியா கேட்டா சங்கடமா இருக்காதா அண்ணா? என்னதான் சொல்லு. எவ்வளவு படிச்சு என்ன தைரியமா இருந்தாலும் இந்த கல்யாண விஷயத்துல மட்டும் நாணம் வராம போகுமா என்ன? அதற்கு நம் மதுக்குட்டி மட்டும் என்ன விதி விலக்கா..?” என்றார்.

“போங்க அத்தை நாணம்லாம் ஒன்னும் இல்ல. நான் அப்பாவப் பத்தி தான் யோசிச்சேன். நீங்க ரெண்டு பேரும் எப்படி தனியா இங்க இருப்பீங்க?” என்று வருந்தினாள்.

 

“அம்மா மது, ஒருத்தர் மட்டும் இருந்தா தான் அதுக்கு பேர் தனிமை. ரெண்டு பேர் இருந்தா அது தனிமை இல்ல.” என்று அவள் அத்தை கூறி நகைக்க மூவரின் சிரிப்பும் சேர்ந்து ஒழித்தது.

 

***

 

Advertisement