Advertisement

3

தனக்கென்று ஒரு நிறுவனத்தை அமைத்து வெற்றி காண்பதே அவளின் கனவும் லட்சியமும். ஆனால்… தந்தையின் நிலைமை அவளது கனவுகளுக்கு எதிராக அல்லவா இருக்கிறது. அவளின் தாய் மறைந்த பின் தனது சுகத்தை கூட நினைக்காமல் மகளுக்காகவே மறுமணம் செய்யாமல் வாழும் மனிதரின் ஒரே கோரிக்கையை நிறைவேற்றாமல் இருந்துதான் என்ன பயன் என்று திருமணம் செய்யும் முடிவுக்கு வந்தாள் மது.

மகளின் முடிவில் மன நிறைவு பெற்ற தந்தை விரைவாகவே குணமாகி வந்தார். ஆனால் அவரால் ஒரு வாக்கரின் துணையுடன் மட்டுமே நடக்க முடிந்தது.

இந்த இரண்டு மாதங்களில் அந்த வீட்டின் பழக்க வழக்கங்கள் அனைத்துமே மாறிவிட்டன. மணிவாசகம் அவரது அறையிலேயே தங்கி விட்டார். மது அவள் வேலை பார்த்த நிறுவனத்தில் இருந்து நின்று விட்டாள். இரண்டு மாத நோட்டீசை கூட பணம் கட்டிச் சரி செய்து விட்டாள். அவள் வேலை செய்த புராஜக்ட் கூட முடியும் தருவாயில் இருந்ததால் அவளது நிறுவனம் அவளைக் கட்டாயப்படுத்தவில்லை.

மணிவாசகத்தின் நிறுவனத்தின் வேலைகளைக் கூட அவரின் மேனேஜரே மணிவாசகத்தின் முக்கிய ஆலோசனையின் படி செய்து வந்தார். மேனேஜர் மற்றும் கார்மென்ட்சை மேர்ப் பார்வை இடுவதே மதுவின் வேலையாக இருந்தது. மற்றபடி அவள் தன் தந்தையுடன் அதிக நேரத்தை நிம்மதியாகக் கழித்தாள். தான் பிறந்து வளர்ந்த வீட்டை விட்டுப் பிரியும் நிலை வரும் நாள் அதிக தொலைவில் இல்லை என்ற நினைப்பே அவளை தன் அத்தை மற்றும் தந்தையிடம் இருக்க வைத்தது.

 

***

அது ஒரு சிறுவர் பூங்கா! மது யாழினியின் வீட்டிற்கு அருகில் உள்ளது. அவளும் அவளது தோழி நந்தினியும் வாரம் ஒரு முறையாவது சந்தித்து அரட்டை அடிக்க அவர்கள் கண்டுபிடித்த திறந்த வெளி Two women club. அங்கே 7 மணிக்கு மேல் யாருக்கும் அனுமதி இல்லை. இவர்கள் இருவரைத் தவிர. ஏனென்றால் அந்தப் பூங்கா நந்தினியின் தந்தையினுடையது.

ஆளுக்கொரு ஊஞ்சலில் அமர்ந்து கொண்டு ஒரு டைரிமில்க்கை பங்கு போட்டு சாப்பிடுவது, நந்தினியின் அம்மா, மதுவிற்காகக் கொடுத்து அனுப்பிய நொருக்குத்தீனியை கொறிப்பது, ஊர்க் கதை உலகக் கதை என்று சகலமும் இங்கேதான். ஏன், அவர்கள் பரிட்சைக்குப் படிப்பது கூட இங்கேதான். சில நேரங்களில் இங்கே இருக்கும் கெஸ்ட் ஹவுசிலேயே கூடத் தங்கி விடுவார்கள். வீட்டைப் போலவே பூங்காவிற்கும் பாதுகாப்பிற்கு இரண்டு காவலர்கள் உண்டு. இவர்கள் இங்கே தங்கினால், பூங்காவின் வேலையாள் அம்பா அம்மாளும் அங்கேயே தங்கிவிடுவாள்.

மொத்தத்தில் அந்தப் பூங்கா அவர்களின் சாம்ராஜ்யம்.

அப்படி சந்தோஷத்தை மட்டுமே பார்த்த இடம் இப்போது அமைதியின் உச்சியில்!

“ஏண்டி, இப்போது என்ன, இந்தக் கல்யாணத்தை நிறுத்த உனக்கு ஒரு ஐடியா வேண்டும். அப்படித்தானே!”, நந்தினி முடிவாகக் கேட்டாள்.

“இல்லை! கல்யாணத்தை நிறுத்தினால் அப்பா வேதனைப் படுவார்!” – மது.

ஒரு பெருமூச்சை உதிர்த்தாள் நந்தின.

யோசித்தவள் “உனக்குக் கல்யாணமும் நடக்கவேண்டும், உன்னுடைய ஆசையும் நடக்கவேண்டும்!” யோசித்தவள், ஏதோ கண்டுபிடித்தவள் போல, ”ஐடியா!  இப்போதும் ஒரு வழி உள்ளதே!” என்று பரபரத்தாள் நந்தினி.

மதுவிற்குக் குதூகலமானது “என்ன ஐடியா டி! சொல்லு சொல்லு ப்லீஸ்!”.

“பேசாமல் அக்ரீமெண்ட் மேரேஜ் செய்துகொள்கிறாயா?!, ஏதோ பிரியமானவளே-னு ஒரு படத்தில் கூட வந்ததே!” என்று நந்தினி கண்களை அகல விரித்துக் கேட்க, மதுவின் முகத்தில் ஈ ஆடவில்லை. முறைத்தாள் மது.

தவறு செய்த குழந்தையைப் போல தலைகுனிந்து ஒத்துக் கொண்டாள் நந்தினி “சரி கோப படாதே! அதெல்லாம் சினிமாவில்தான் நடக்கும்! வேறு என்ன செய்யலாம்!”

“ஐடியா! ஒருவர் மனது வைத்தால் முடியும்.” – நந்தினி!

“யாரு யாரு!!!”

”கல்யாண மாப்பிள்ளை! பேசாமல் அவரை கன்வின்ஸ் பண்ணி கல்யாணத்தை நிருத்திடு”.

”நீ ஐஸ் கிரீம் சாப்பிடத்தான் சரி! பேசாமல் அதையே செய்!” விரக்தியுடன் முனுமுனுத்தாள் மது.

“சரி சரி மறுபடியும் சோக கீதம் பாடாதேயம்மா! இப்போதுதான் flowering season ஆரம்பித்திருக்கிறது. உன்னுடைய புலம்பலைக் கேட்டு பூவெல்லாம் எப்படி வாடுகிறது பார்”

”ஆமா! இப்போது அதான் முக்கியம்!”

”பின்ன என்ன டி! என்னமோ இப்போதே உன் அப்பா ஒரு photo-வை கொண்டு வந்து நீட்டின மாதிரி புலம்புக் கொண்டு இருக்கிறாய்! வரும்போது பாத்துக்கலாம்! விடுடி செல்லம்!” என்று அதட்டலாக ஆரம்பித்துக் கொஞ்சலில் முடித்தாள் நந்தினி.

அவளின் கொஞ்சும் புன்னகையில் அனைத்தும் மறந்து போனது இரு பெண்களுக்கும்.

ஆனால் அவர்கள் தொலைவில் இருக்கும் நாள் என்று நினைத்தது மறுநாள்தான் என்பது தெரியவில்லை அவர்களுக்கு.

 

***

கார்மென்ட்சில் வேலை அதிகம் இல்லாத நாட்களில் அவள் தன் மதிய உணவை தன் தந்தையுடன் உண்பது உண்டு. அப்படி ஒரு நாள் தன் தந்தைக்கு மதிய உணவு எடுத்துச் செல்லும் போது யாரோ ஒருவர் அவருடன் பேசிக் கொண்டு இருப்பதைக் கவனித்து வாசலிலேயே சற்று தயங்கி நின்றாள் மது.

அவளைக் கவனித்த மணிவாசகம்,” உள்ளே வா பேபி… இவர் யார் என்று தெரிகிறதா…?” என்றார்.

தந்தையின் எதிரில் அமர்ந்திருந்த அந்த பெரியவரைப் பார்த்தாள் மது. தந்தையின் வயதை ஒத்த மனிதர். புன்னகை பூத்த முகம். பார்வையிலேயே நலம் விசாரித்த அவரை ஞாபகம் வந்து விட்டது அவளுக்கு.

ஆமாம் இவர் என்னுடைய செல்ல மனோ அங்கிள் .

“ஹாய்ய்ய்ய்…. மனோ அங்கிள் … எப்படி இருக்கிறீர்கள் அங்கிள்? ஆண்டி எப்படி இருக்கிறார்கள்?” என்று துள்ளிக் குதித்து அவர் அருகில் சென்று அமர்ந்தாள் மது.

அவளின் தலையை தடவிக் கொடுத்து, “நான் நல்லா இருக்கேனம்மா. நீ எப்படியம்மா இருக்கிறாய்?”

“நல்லா இருக்கிறேன் அங்கிள்… அப்பாதான் கண்டதையும் நினைத்து உடம்பைக் கெடுத்துக் கொள்கிறார்.” என்று புலம்பினாள்.

“எல்லாம் சரியாகிவிடும்மா…” என்றார் அவர்.

வழக்கமான நலம் விசாரணைகள் முடிந்த பின் அந்தப் பெரியவரே விஷயத்தை உடைத்தார்.

“எனக்குத் தெரிந்த ஒரு ராஸ்கல் இருக்கிறான் மதும்மா. ஒரே வேலை வேலை என்று உடம்பைக் கெடுத்துக் கொள்கிறான். ஒரு நல்ல புத்திசாலிப் பெண்ணை கட்டி வைத்து டிரில் வாங்கலாம் என்று இருக்கிறேன். நீ என்னம்மா சொல்கிறாய்…?” என்றார்.

“போச்சுடா… அங்கேயும் அதே கதைதானா…. பாவம் அந்த ராஸ்கல்…. யார் அங்கிள் அது…?” என்று கேட்டாள்.

“இதோ இவன் தான்…” என்று அவரின் கைப் பேசியில் இருந்து ஒருவனின் புகைப் படத்தை கட்டினார்.

அந்த புகைப் படம், அதில் இருப்பவனுக்குச் சொல்லாமல் எடுக்கப் பட்டது

போலும். சோபாவில் அமர்ந்து வேலை செய்து கொண்டு இருந்தவன் மடிகணினியில் இருந்து தலையை உயர்த்திப் பார்த்திருந்தான்.

மா நிறம். நல்ல உடற்கட்டு அவனுக்கு. அவனது அரைக் கை டீ ஷர்ட்டை புடைத்துக்கொண்டு கைகள் வீராப்பாக இருந்தன. உபயம் ஜிம் போலும்.

ஆனால் அவனது முகத்தில் என்ன அது? கோபமா?

அவனது நேர் நாசியும் கூர்மையான கண்களும்… அதை மட்டும் பார்த்தால் அவனின் முகம் காட்டும் கடுமை கூட மறந்து போய் அவன் பேச்சை மெய் மறந்து கேட்பார்கள் போலும்.

அந்தக் கண்கள் இருக்கின்றனவே! அது என்ன இப்படி ஒரு வசீகரம் அந்தக் கண்களுக்கு. கண்கள் மட்டுமா! ஆளே அப்படித்தான் போலும்! இவன் பெயர் என்ன வசீகரனோ!

ஆ… இவனைப் பார்த்து நாம் ஏன் இப்படி யோசிக்கிறோம் என்று ஒரு எண்ணம் வர, அவளின் எண்ண ஓட்டத்தைப் பெரியவர்கள் இருவரும் அறியும் முன்னர் அவளே பேசி விட்டாள்.

“ஏன் அங்கள்… இப்படி முறைக்கிறார்… சரி… யார் இவர்…?” என்று அந்த மனோ அங்கிளிடம் கேட்டாள் கைப்பேசியை கட்டிலில் வைத்தவாறே.

“அந்த உம்மனாம் மூஞ்சியைப் பெற்றவன் நான்தானன்மா…” என்றார்.

“ஐயோ… அந்த உம்மனாம் மூஞ்சி இவ்வளவு பெரிய ஆள் ஆகி விட்டதா?” என்று வியந்தாள்.

“ஹ்ம் ஆமாம்மா… அதனால்தான் அவனுக்கு உன் புத்திசாலி பெண்ணைக் குடு என்று உன் அப்பாவிடம் கேட்டு வந்திருக்கிறேன். என்னம்மா அவனை அடக்க உன்னை விட்டால் வேறு யார் இருக்கிறார் சொல்… இந்த அங்கிள்-கு ஹெல்ப் பண்ணுவியாம்மா…?” என்று குழந்தையை போலக் கொஞ்சி கேட்ட அவரைப் பார்த்து சிரிப்பு வந்தாலும், திடீர் கேள்வியை சமாளிக்க முடியாமல், சிரிப்பும் நானமும், மேலும் தன்னிடம் இந்த அப்பா இதைப் பற்றி சொல்லவே இல்லையே என்ற வருத்தமுமாக, “என்னைக் கேட்டால் எப்படி அங்கிள்…? எனக்கு அந்த ஃபோடோவைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது. நான் மாட்டேன்…  என்னிடம் சொல்லாமல் மறைத்ததற்குத் தண்டனையாக என் அப்பாவே ஒரு நல்ல பெண்ணைப் பார்த்து கட்டி வைப்பார்.” என்று சொல்லிவிட்டு அறையின் வாசலை நோக்கிச் சென்றாள்.

“பேபீ…” என்ற அவள் தந்தையின் குரல், சிறு புன்னகையுடன் எழுந்து, முதுகைக் காட்டி வாசலை நோக்கிச் சென்றவளை சிலையென நிற்கச் செய்தது.

“என்னப்பா…” என்று திரும்பாமலே கேட்டாள் நானத்தோடு. ஏதோ ஒரு புது வித உணர்வில் முகத்தில் அசடு வழிவதை மறைக்க வேண்டும் அல்லவா!

“உன்னுடைய முடிவைச் சொல்லவே இல்லயேம்மா…”

“உங்களுக்குத் தெரிந்த ஒரே பெண் நான்தானே அப்பா. என்னைத்தான் மாட்டி விடுவீர்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும். ஹ்ம்ம்ம் என்ன செய்வது. உங்கள் இஷ்டம் போல் நடத்துங்கள்.” என்று ஏதோ சலிப்பு போல் சொல்லி விட்டு ஓடிச் சென்றுவிட்டாள்.

சில நிமிடங்கள் கழித்துத்தான் அவளுக்கே உறைத்தது தான் என்ன பேசிவிட்டு வந்தோம் என்று!

அவன்! அந்தக் கோபக்காரனின் பெயர் என்ன… ஆங்… வசு என்பார்களே.. ஞாபம் வந்தது… வத்சன்!

வத்சன்! – தனக்குள்ளேயே சொல்லிப் பார்த்துக் கொண்டாள்.

ஆனால்!

முட்டா பீஸாக இருந்தால் சமாளித்து விடலாம்! அது முரட்டு பீஸ் ஆச்சே! ஐயோ கடவுளே! நான் என்ன செய்வேன்!

குழப்பத்தினுடனே அவளது அறைக்குச் சென்று நந்தினியை தொலைபேசியில் அழைத்தாள். அடுத்த புலம்பலைத் தொடங்க வேண்டும் அல்லவா!

***

 

Advertisement