“ஐயோ அரசி! என்னவாயிற்று தங்களுக்கு? யாரங்கே? ராஜா வைத்தியரை உடனே அழைத்து வாருங்கள். அரசி திடிரென்று மயங்கிவிட்டார். அரசி! அரசி! எழுந்திருங்கள்… ” என்று கூக்குரலிட்டு கொண்டு மலரிதழின் தலையை மெதுவே நகர்த்தி தன் மடிமீது வைத்து கொண்டாள் பணிப்பெண்.
மெல்ல கண்விழித்த மலரிதழின் விழிகள் மட்டும் ஆர்வமாய் தன்னவனை தேடியது.
“அவர் இன்னும் வரவில்லையா?” என்றாள் ஏமாற்றம் நிறைந்த கண்ணீர் விழிகளோடு.
“இல்லை அரசி” என்று தலைகுனிந்தாள் பணிப்பெண்.
“தூதுவனை அனுப்பிருக்கிறோம் அரசி. தின்னமாக இச்சுபசெய்தியை அறிந்தவுடன் வந்துவிடுவார். நீங்கள் கவலை கொள்ளவேண்டாம்.” என்று வைத்தியர் புன்னகைத்தார்.
“என்ன சுபசெய்தி?” என்று ஒன்றும் புரியாமல் கேட்டாள் மலரிதழ்.
“தாங்களும் மன்னரும் ஆவலாக எதிர்பார்த்திருந்த செய்தி தான். கூடிய விரையில் சின்னச்சிறு மலர் மலரப்போகிறது உங்களின் கருவில். இளவரசனோ இளவரசியோ வந்து இந்த அரண்மனையில் தவழப்போகிறார்கள்.” என்று புன்னகைத்தார்.
மலரிதழின் விழிகள் மின்னி பளிச்சிட, மறுநொடி கருமை படர்ந்தது.
“வருந்தாதீர்கள் அரசி. மன்னர் நிச்சயமாக வந்துவிடுவார்.” என்றார் வைத்தியர்.
வேகமாக பதற்றத்துடன் உள்ளே வந்த காவலாளி, “அரசி!” என்று நிற்க.
“என்னவாயிற்று?” என்று கலங்கிய உள்ளத்துடன் எழுந்து நின்றாள் மலரிதழ்.
“ஒரு துற்செய்தி. நம் வனப்பகுதியில் பெரிய காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.” என்றான் மெதுவாக.
“நம் ஆட்களை கூட்டிச்சென்று அமைச்சர் மேற்பார்வையில் என் செய்வது என்று பாருங்கள்” என்றாள் உடனே அரசியாக.
“அதுமட்டுமில்லை..” என்று இழுக்க.
“வேறென்ன செய்தி? ஏன் இப்படி தயங்குகிறீர்?” என்றாள் மலரிதழ்.
“அக்காட்டுத்தீ பரவிய பகுதியில் தான் நம்.. அரசர்… சிக்கி..” என்று வார்த்தைகளை மென்று விழுங்க.
“சிக்கி?” என்றாள் கனக்கும் பதறிய இதயத்துடன்.
“சிக்கி மாண்டுவிட்டதாக கூறப்படுகிறது. அங்கே மன்னரின் ஆபரணங்கள் சிறிது தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.” என்றான் சோகமான முகத்துடன்.
“என்ன…?? இல்லை… இப்படி நடக்க முடியாது.. ” என்றாள் மலரிதழ் தரையில் அமர்ந்தபடி.
“அரசி..” அவளிடம் விரைந்து குனிந்த பணிப்பெண்ணிடம் சைகையில் நிற்கும்படி கைகாட்டியவள்.
“நான் சிறிதுநேரம் தனித்து இருக்கவேண்டும்.” என்று விழிகள் மூடி கூற ஆடவர் இருவரும் வெளியேறினர். பணிப்பெண் தயங்கியபடி அங்கேயே நிற்க, திரும்பிப்பார்க்காமல் “நீயும் செல். எனக்கு தனிமை தேவை” என்றாள் மலரிதழ்.
அவளும் வெளியேறியபின், கரங்களை முகத்தில் மூடி வெகுநேரம் அழுத்தவள் பின் எழுந்து, “இல்லை.. எத்தனை பேர் கூறினாலும் என்னவர் என்னை இந்நிலையில் ஒருபோதும் விட்டு செல்லமாட்டார். என் இதயம் சொல்கிறது தாங்கள் எங்கோ இருக்கிறீர்.” என்று தனக்குள் பேசிக்கொண்டிருக்க,
தங்கள் இருவருக்கு மட்டும் தூதுப்புறாவாக இருக்கும் தங்களின் காதல் புறாவை கொண்டு தன் கணவனுக்கு தூது அனுப்பினாள் மலரிதழ்.
இந்த பாரில் எங்கிருந்தாலும் கவிந்தமிழனை கண்டுகொள்ளும் திறமை கொண்ட புறா அது. ஆனால் அவளுக்கு ஏமாற்றம் தரும் வகையில் எந்த பதிலும் வராமல் தவித்தாள்.
நாட்கள் அதன் போக்கில் கரைந்து ஒரு திங்கள் கடந்தது.
ஆபரணங்கள் மற்றும் கவிந்தமிழனின் உடல்வாகை ஒத்த ஒரு எறிந்த தேகம் என்று இறந்தது கவின்தமிழன் தான் என்று உறுதியானது.
இருந்தாலும் மலரிதழ் ஏற்றுக்கொள்ள மறுத்தாள்.
‘என் வயிற்றில் நம் காதலின் சின்னம் சிசுவாக வளர நம் இளந்தளிரை தங்களின் கரங்களில் ஏந்தாமல் எப்படி என்னை விட்டு உங்களால் செல்ல முடியும் அன்பே? இல்லை யார் என்ன கதைகளை கூறினாலும் என்னால் ஏற்று கொள்ளமுடியாது. என்னை தேடி ஒரு நாள் நீர் வரத்தான் போகிறீர்.’ என்று தனக்குள் கூறிக்கொண்டிருந்தாள்.
மன்னர் மாண்டுவிட்டார் என்று துக்கமிருந்தாலும் அரசியாக துக்கத்தில் கரைந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த மலரிதழ், கவிந்தமிழனின் இடத்தை நிரப்பி நாட்டை அவனைப்போல ஆளத்தொடங்கினாள்.
அங்கே தான் சோதனையும் வரத்தொடங்கியது கனியழகனின் ரூபத்தில்.
“அன்பே” என்று குரல் கேட்க வானத்தை நோக்கி எதையோ யசோதித்தபடி இருந்த மலரிதழின் காதுகளில் விழுந்த வார்த்தைகளின் குரல் எரிமலையை உருவாக்கியது உள்ளத்தில்.
வெடுக்கென திரும்பியவள்.
“என்ன வேண்டும் உனக்கு?” என்றாள் குரலில் மிகுந்த கடினம் காட்டி.
“உனை காண எத்துணை ஆவலோடு வந்துள்ளேன். நீயோ இப்படி கேட்கிறாயே அன்பே?” என்றான் புன்னகையுடன் கனியழகன்.
“இனியொரு முறை அப்படி கூப்பிட்டால் உன் நாவை துண்டிக்க யோசிக்கமாட்டேன். நான் உனது அண்ணனின் மனைவி என்பது கவனத்தில் இருக்கட்டும்.” என்றாள் மலரிதழ் கோபத்தில் விழிகள் பிதுங்க.
“இனி எப்பொழுதும் உன்னை அப்படி கூப்பிடவே எண்ணுகிறேன் அன்பே. அண்ணனின் மனைவியாக எப்பொழுதுமே உன்னை நான் கண்டதில்லை. ஹ்ம்ம்… இந்த நாளுக்காக எத்துனை வருடங்கள் காத்திருந்தேன் தெரியுமா?” என்றான் குரலில் ஏக்கம் காட்டி கனியழகன்.
“முதலில் இங்கிருந்து வெளியே செல்” என்றாள் மிகுந்த ஆங்காரத்துடன்.
“நான் ஏன் செல்ல வேண்டும்? நானும் இந்நாட்டின் இளவரசன் தானே? அதோடு உன் கணவன் மன்னிக்கவும் என் அண்ணனுக்கு பிறகு அரியணை ஏறவேண்டியவன் தானே? எனக்கென்ன குறை? தோற்றத்தில் அவனை போல தானே இருக்கிறேன் பின் என்ன வேண்டும் உனக்கு? பரவாயில்லை நீயே ஆட்சி செய்கிறாய் நானும் உன்னோடு கலந்துகொள்கிறேன் உன் கணவனாக” என்று அவளை பார்க்க.
வேகமாக வெறிகொண்டு வந்தவள் அவனின் கன்னத்தில் பதம் பார்க்க இறக்கிய கரத்தை லாவகமாக தடுத்து பற்றினான் கனியழகன்.
“இது தவறல்லவோ? எதிர்கால கணவனை கரம் நீட்டி அடிக்க வரலாமோ அன்பே?” என்றான் எள்ளி நகையாடியபடி.
“முதலில் என் கரத்தை விடு. உன் தொடுதல் எனக்கு நெருப்பாய் எரிகிறது” என்று அவனிடம் இருந்து தன் கரத்தை விடுவிக்க போராடினாள்.
“ஹ்ம்ம்.. நான் விட்டுவிட்டாலும் அடுத்து எதிரி நாட்டு அரசன் வருகிறான் உன்னிடம்” என்றான் கனியழகன்.
“என்ன?” அதிர்ச்சியாய் மலரிதழ்.
“ஆம்… ஏற்பட்ட காட்டுத்தீயை உருவாக்கியது கவிந்தமிழன் தான் என்ற உறுதியான செய்தி கிட்டியுள்ளதாம். அதனால் நம் நாட்டின் மீது போர் தொடுக்க கிளம்பியுள்ளனர்.” என்றான் கனியழகன்.
மலரிதழ் அதிர்ச்சியோடு அவனை பார்த்துக்கொண்டிருக்க, “நீ சரி என்று ஒரு வார்த்தை சொல். எல்லாவற்றையும் மாற்றி காட்டுகிறேன். இல்லையென்றால் இந்த நாட்டு மக்களோடு சேர்ந்து நீயும் மாண்டுவிடுவாய்.” என்றான் கனியழகன்.
“சீ… இத்துணை தீய எண்ணங்களை கொண்டவனா நீ? ஏதோ என் மேல் மையலில் இருக்கிறாய். உன் அண்ணனை திருமணம் செய்தபின் மாறுவாய் என்று இருந்தேன். ஆனால் என் எண்ணம் தவறு. நீ அந்த பாம்பைவிட கொடிய நஞ்சை உடையவன். ஒருநாளும் உன் எண்ணம் நிறைவேறாது. அந்த எதிரிநாட்டு மன்னனிடம் போரிட்டு மண்ணுக்குள் மாண்டுபோனாலும் போவேனே தவிர, உன் ஆசைக்கு இணங்கமாட்டேன். மதிகெட்டவனே” என்று கூக்குரலிட்டாள் மலரிதழ்.
“நீ என்ன தான் கூக்குரலிட்டாலும் உனக்கென்று இப்பொழுது யாருமில்லை உன் அண்ணனும் என் தோழன் தான். ஆகையால் சம்மதித்தால் உனக்கு நல்லது. அதோடு அந்த கருவை கலைத்துவிட்டு என்னுடன் வா” என்றான் கனியழகன்.
அவள் பேசும்முன், கணீரென்ற குரல் அவனின் அஸ்திவாரத்தை ஆட்டிவைத்தது.