ஷன்மதி பயந்துகொண்டிருக்க அவளை தாங்கிப்பிடித்து கொண்டிந்தான் யார் விழிகளுக்கும் தெரியாத ஷ்ரவன்.

“மதிம்மா.. நான் சொல்றதை நல்லா கேளு. நடக்கிற எல்லாமே நல்லதுக்குதான். இங்க என்ன நடந்தாலும் நான் இருக்கேன் உனக்கு என்னைக்கும். புரியுதாடா” என்று அவளின் நெற்றியில் இதழ் பதிக்க, அந்நேரம் பார்த்து அவளின் நெற்றியில் இருந்த குங்குமத்தை அழித்து தலையில் இருந்த பூவையும் கழற்றி பால் இருந்த சட்டியில் போட்டனர்.

வலியை தவிர வேறு எதுவும் இல்லாத நெஞ்சை கல்லாக்கி கொண்டு அமர்ந்திருந்தாள் ஷன்மதி.

ஆன்மாவாய் இருந்தாலும் உயிர் உருக காதலித்தவளுக்கு தன்னால் ஏற்பட்ட நிலைமையை கண் கொண்டு காணமுடியாமல் தவித்தான் ஷ்ரவன்.

“மதி” அவன் குரலும் தேய்ந்து குழற..அவனை திரும்பி பார்த்த மது அவன் விழிகளுக்குள்ளேயே தன் விழிகளை கரைத்தாள்.

பெண்கள் இன்னும் சத்தமாய் அழுதுக்கொண்டு அவள் கழுத்தில் இருந்த ஈரம் காயாத மஞ்சள் கயிறை அறுக்க முற்பட, தன் நிலைக்கு வந்தவள் அதனை விடாமல் கெட்டியாக பிடித்துக்கொண்டாள்.

கணவன் இழந்த சோகத்தில் இந்த பெண் இப்படி செய்கிறாள் என்று இரு பெண்கள் மதியின் கரங்களை பிடித்துக்கொள்ள இன்னொரு பெண் கயிறை அறுத்து பாலில் போட்டார்.

“ஐயோ! என்று அலறியவள் தன் கரங்களை கொண்டு முகத்தில் வேகமாக அடித்துக்கொண்டாள் மதி.

அவளின் மேல் வெள்ளை புடவையை போர்த்தி அந்த புடவையை மாற்றி கொள்ளுமாறு கூறி அறைக்குள் அனுப்பினர்.

ஷ்ரவனின் நிலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

தன் கண்முன்னே தான் காதல்மனைவிக்கு ஆசையாய் பலகனவுகளோடு கட்டிய தாலியை கழற்றுவது என்பது யாராலும் உணரமுடியாத, உணர விரும்பாத உணரக்கூடாத உயிரை அறுத்தெடுக்கும் வலி.

ஷ்ரவன் உயிரோடு இல்லை என்றாலும் அந்த வலியை உணர்ந்தான்.

அறைக்குள் சென்ற ஷன்மதி அப்படியே தரையில் சரிந்து அமர்ந்து அழத்தொடங்கினாள்.

“மதிம்மா” என்று உடைந்தகுரலில் ஷ்ரவன் அழைக்க.

“ஷ்ரவன்… இதுக்கு தான் ஆசைபட்டியா நீ? உன் கண்ணு முன்னாடியே என் நிலைமை இப்படி இருக்க உன்னால ஒண்ணுமே செய்யமுடியலை.. ஏன் நீ என்னையும் சேர்த்து உன்கூட கூட்டிட்டு போகல? உன்னோடயே நானும் இறந்திருந்தா எனக்கு இதுமாதிரி கொடுமையான நிலைமைல்லாம் வந்துருக்காது இல்ல.” என்று கதறியபடி தன் கைகளை ஓங்கி தரையில் குத்திக்கொண்டாள்.

“வேண்டாம் மதிம்மா. உடைஞ்சு போகாத. உனக்கான வாழ்க்கை இது இல்ல. நீ இதை கடந்து வெளிய வரணும். எனக்காக..” என்றான் அதே குரலில்.

அவனின் விழிகளை பார்த்துக்கொண்டே இருந்தவள் ஒரு தெளிவு பெற்றவளாய்.

“எனக்கு இந்த வெள்ளை புடவைய கட்றதில எந்த கஷ்டமும் இல்ல. என் மனசுல நீ மட்டும் தான் இருக்க. உயிரோட இல்லைனாலும் என் எதிர்லயே இருக்க. எப்பவுமே இதே மாதிரி என் கூடவே இருக்கன்னு சொல்லு தினமும் இந்த புடவையை கட்டிக்கிறேன்” என்றாள் தீர்க்கமாய்.

“இல்ல மதிகுட்டி கொஞ்ச நேரத்துக்கு மட்டும் தான். அதுக்கப்புறம் என்னைக்கும் நீ வண்ணமயமா இருக்கனும். அது எப்படின்னு நான் சொல்றேன்.” என்றான் ஷ்ரவன்.

அவன் சொன்னதை போல் புடவையை கட்டிக்கொண்டு வெளியே சென்றாள்.

நேரம் கடந்ததும் வந்திருந்தவர்கள் ஒவ்வொருவரும் சென்றுவிட, மதியின் பெற்றோர் மட்டும் இருந்தனர்.

அவளின் அறையை விட்டு வெளியே வந்து அமருமாறு பெற்றோரோ வற்புறுத்தியும் முடியாதென்று மறுத்துவிட்டாள்.

அவள் அறையில் இருந்தால் ஷ்ரவனுடன் இருக்கலாம் என்பதால் அறையை  விட்டு வரமறுத்தாள்.

இதே போல் நாட்கள் நகர, பத்து நாட்கள் அவளுடன் இருந்த அவளின் பெற்றோர் தங்களுடன் வந்துவிடுமாறு அவளை கட்டாயபடுதினர்.

“இல்லப்பா. இந்த வீடு அவர் எனக்காக ஆசையா பார்த்து பார்த்து வாங்கியிருக்கார். என் ஆயுள் முழுக்க இங்க தான் இருக்க போறேன்” என்று மறுத்துவிட்டாள்.

ஷன்மதியின் பெற்றோரும் சென்றுவிட இப்பொழுது அவளும் ஷ்ரவனும் மட்டுமே இருந்தனர்.

இரண்டு மாதங்கள் கழிந்தது.

மெத்தையில் உறங்கி கொண்டிருந்தவளை அருகில் அமர்ந்திருந்த ஷ்ரவனின் குரல் கலைத்தது.

“மதி குட்டி” என்றான் அவள் தலையை கோதியபடி.

“ஹ்ம்ம்” என்றாள் விழிகளை திறவாமல். அவனை நினைத்து கட்டிபிடித்திருந்த தலையணையை இன்னும் இறுக்கியபடி.

அவளின் செய்கையில் தன்னை மறந்து சிரித்தவன். “ஐயோ நான் அந்த இடத்துல இருந்தா அவ்ளோதான்.” என்றவுடன் தலையை தூக்கி அவனை முறைத்தாள்.

“சும்மா சொன்னேன் டா. சரி எழுந்துரு. இன்னைக்கு நீ ஆபீஸ் போகனுமில்ல. இன்னையோட உன் லீவ் முடிஞ்சிடுச்சு.” என்றான் ஷ்ரவன்.

“ஆபிஸ்கா.. உன்னை விட்டுட்டா. நான் போகமாட்டேன் போ.” என்றாள் சிறுகுழந்தையாய் சுருண்டு படுத்தபடி.

கலகலவென சிரித்தவன். “டேய் மதி. என்னடா இது? சின்ன குழந்தையாட்டம் அடம் பிடிக்கிற? இந்த வேலை உன்னோட லட்சியம் மறந்துட்டியா? இந்த வேலை கிடைக்க நீ எவ்ளோ ட்ரை பண்ண எல்லாத்தையும் மறந்துட்டியா? “ என்றான் ஷ்ரவன்.

“நோ. நான் எதையும் மறக்கலை. பட் உன்னை பார்க்காம என்னால முழு நாளும் அங்க வேலை செய்யமுடியாது” என்றாள் ஷன்மதி.

“ஏன் என்னை பார்க்க முடியாது” என்றான்.

“ஏன்னா நீ உன்னோட…” என்றவள் ஒருநொடி அவனை நிமிர்ந்து பார்த்து “நீ என்கூட வருவியா?” என்றாள் ஏதோ புரிந்தவளாக.

விழியாலே சம்மதம் சொன்னான் ஷ்ரவன்.

மத்தாப்பாய் முகம் மலர “அப்போ சரி இப்பயே ரெடி ஆகிடறேன்” என்று தயாராக ஓடினாள் மதி.

அவளின் வாழ்க்கை பயணம் மாற அவளை ஒரு ஒளிமையாமான  பாதையில் அழைத்து சென்று கொண்டிருந்தான் ஷ்ரவன்.

 .

  ”