தான் சொல்வதை எதையும் காதில் கூட வாங்கிக் கொள்ளாமல் கிளம்பிப் போய்க்கொண்டிருந்த தேவாவை பார்த்து கொண்டே வசந்தா தான் புலம்பிக் கொண்டிருந்தார்.
போலிஸ் ஜீப்பின் பக்கம் போய் நின்ற தேவாவின் மனது அவள் தாய் ரிசப்ஷன் என்று சொன்னதில்லையே இன்னும் நின்றுக் கொண்டிருந்தது.
“ரிசப்ஷன் ரிசப்ஷன்” என்று மனசுக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டாள். பழைய ஞாபகங்கள் மூளையில் இருந்து கிளறி எழ ஆரம்பித்து இருந்தது.
இந்த வார்த்தை அவளது சிறு வயதில் அவள் தோழி சிறுவயது தோழி அவளுக்குச் சொல்லிக் கொடுத்தது. ரிசப்ஷன் என்றால் என்னவென்றே தெரியாது இந்த கிராமத்து குழந்தைக்கு!
சிறிது நேரத்தில் மனதை சமன்படுத்தி கொண்டு வீட்டினுள் வந்தவள் தாய் இன்னும் புலம்பிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு “அம்மா நான் சீக்கிரமே வரேன் வீட்டுக்கு… வந்து கிளம்பி வரேன் ரிசப்ஷனுக்கு”
இவற்றைக் கேட்ட வசந்தா திடீர் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார்.
“என் செல்லம்… சரி சரி போயிட்டு சீக்கிரமா வந்துடு” என்று சிரிச்சுக்கிட்டே சொன்னவரைப் பார்த்தவள் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டிக் கொள்ளாமல் கிளம்பிவிட்டாள்.
“மதி நீ இன்னைக்கு தாவணி கட்டிட்டு வா” என்று வசந்தா மதிவதனாவிடம் சொல்ல அவள் சிணுங்கிக் கொண்டே
“போம்மா” என்றாள் முகத்தை சுழித்துக் கொண்டு
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ராஜநாதன் “அவங்கவங்க எப்படி விருப்பப்படுகிறார்களோ அப்படியே இருக்கட்டும்.. பிள்ளைகளை கட்டாயப் படுத்தாத வசு” என்று முடித்துவிட்டார்.
வீட்டிலிருந்து டிசிபி ஆபிசிற்கு செல்லும் வழியில் காலை நேரம் என்பதால் ட்ராபிக்கில் மாட்டிக் கொண்டது தேவசேனாவின் ஜீப். இவளுக்கென நியமித்து இருந்த ஓட்டுனரை வர வேண்டாம் என்று சொல்லிவிட்டு இவளே ஜீப்பை ஒட்டி வந்திருந்தாள்.
அப்பொழுது இவளது ஜீப்பை கிட்டத்தட்ட உரசிக் கொண்டு வந்து நின்றது ஒரு ராயல் என்பீல்ட் . அதில் இருந்தவன் ஹெல்மெட் அணிந்து இருந்ததால் முகம் சரியாக தெரியவில்லை என்றாலும் ஆறடிக்கு மேல் இருப்பான் போல் என்று அவனது நீளக்கால்கள் காட்டிக் கொடுத்தன. விசிலடித்த்தபடி நாலாபக்கமும் தலையை மெதுவாக சுற்றிப் பார்த்தவன் காலை பனியில் வெள்ளையாய் மாறி இருந்த தேவாவின் ஜீப்பின் கதவு கண்ணாடியில் தனது ஆள் காட்டி விரலைக் கொண்டு ஒரு ஹார்ட்டின் வரைந்து அம்பு விட்டுக் கொண்டிருந்தான்.
முதலில் என்ன செய்கிறான் என்று புரியாமல் குழம்பி இருந்தவளுக்கு ஹார்ட்டினைப் பார்த்ததும் கோபம் தலை உச்சிக்கு ஏறியது. பல்லைக் கடித்துக் கொண்டே கார் கண்ணாடியை இறக்கியவள் “யூ இடியட், எவளோ தைரியம் இருந்தா போலிஸ் ஜீப்ன்னு தெரிஞ்சும் ஹார்ட்டின் போட்டு அம்பு விடுவ” என்று அவள் அடிக்குரலில் கர்ஜிக்க, அவனுக்கோ தேவாவின் வார்த்தைகள் எதுவுமே காதுகளில் விழவில்லை… ஜீப்பின் கண்ணாடி இறங்க இறங்க அவளது நெற்றி, அடுத்து கண்கள், மூக்கு, என சாயம் பூசாமலையே சிவந்து இருந்த அவளது இதழ்களில் வந்து நின்றது அவனது பார்வை.
ஹார்ட்டின் வரைந்ததொடு நிறுத்தாமல் இப்படி ஒவ்வொரு அங்குலமாக ரசித்துப் பார்ப்பவனைப் பார்த்தவளினுள் அனல் பொங்க “யூ ப்ளடி ராஸ்கல்!!!!” என்றபடி ஜீப்பின் கதவை திறக்க முயற்சி செய்தவளுக்கு அது மட்டும் சாத்தியப்படவில்லை. கதவை திறக்க முடியாத அளவிற்கு அவனது வண்டி ஒட்டி நின்றுக் கொண்டிருந்தது.
இதைப் பார்த்தவன் ஹெல்மெட்டின் கண்ணாடியை மேலே உயர்த்திவிட்டவனின் அதரங்கள் குறும்பு சிரிப்பால் துடித்துக் கொண்டிருந்தது. அவனது கண்களிலும் சுவாரசியமும்,விளையாட்டுத்தனமும், ரசிப்பும் இருக்க இவளைப் பார்த்துக் கண்ணடித்துவிட்டு, பப்ளிக் பிளேஸ் என்றும் பாராமல் உதட்டைக் குவித்து ஒரு பறக்கும் முத்தத்தை அளித்துவிட்டு அவள் அதற்கு எதிர்வினை புரியும் முன்பே பைக்கில் பறந்து இருந்தான்.
நிமிட நேரங்களில் நடந்துவிட்ட நிகழ்வுகளை எதிர்பார்த்து இருக்காத அவளது மனது அதிர்ந்து உறைந்து போய் இருக்கும் நேரம், ட்ராபிக் கிளியர் ஆகிவிட பின்னால் இருந்து கேட்கும் ஹாரன் சத்தங்களில் திடுக்கிட்டு விழித்து பரபரவென்று ஜீப்பை இயக்கியவள் வந்து நிறுத்தியது என்னவோ டிசிபி ஆபிசில் தான்.
இன்னமுமே உடலெல்லாம் விதிர்த்துப் போய் இருந்தது… காரணம் தெரியவில்லை.
இன்ஸ்பெக்டராக இருந்த காலத்தில் அதே ரோட்டில் வைத்து “ஈவ் டீசிங்கிற்காக” வெளுத்து வாங்கி இருக்கிறாள். ஆனால் இன்று எந்த எதிர்வினையும் புரியாது மூளை மறத்து போய் இருந்ததன் காரணம் மட்டும் அவளுக்கு புரிபடவே இல்லை.
மீண்டும் அந்த பைக்குகாரன் நியாபகம் மின்னல் போல் மூளையில் வந்து வந்து போனது.
உடனே பற்கள் நெறிபட ஆரம்பிக்க “என்ன திமிர் அவனுக்கு?” வாய்த் தானாக முணுமுணுக்க ஹெல்மெட் கண்ணாடி தூக்கி இருக்கும் பொழுது தனியாக தெரிந்த கண்களின் புகைப்படம் மட்டும் நினைவு அடுக்குகளில் இருந்து வெளிவந்தன. எத்தனை ஈர்ப்பு விசைப் பொருந்திய கண்கள்???? மிகவும் வசீகர்மானவையாக இருந்தன தானே தேவா? என்று மனது கேள்விக் கேட்க திடுக்கிட்டு விழித்தாள்… “என் மனதிற்குள்ளா இப்படி ஒரு சிந்தனை?” ஆச்சரிய அதிர்ச்சியாக இருந்தது அவளுக்கு.
தலையை உலுக்கி தன்னை சமன்படுத்தியவள் ஆபீசிற்குள் நுழைந்தவளுக்கு ஒரு பெண் கத்தி அழுதுக் கொண்டிருப்பது தெரிய நடையை வேகப்படுத்தினாள்.
“உனக்கும் ஒரு புள்ள இருக்கும் தான? அந்தக் குழந்தைக்கு இப்டி எல்லாம் நடந்துருந்தா நீ சும்மா இருந்துருப்பியா?” என்று அந்த நடுத்தர வயதுடைய பெண் அங்கு இருந்த போலிஸ் ஒருத்தரைப் பார்த்துக் கத்திக் கொண்டிருப்பதும் அந்த பெண்ணின் கணவன் அந்த பெண்ணை அடக்க முயல்வதும் கண்ணில் பட
“என்ன நடக்குது இங்க?” என்ற தேவசேனாவின் கணீர் குரல் அந்த அறையை ஊடுருவிய நேரம் எல்லாம் நிசம்பதமாகி அறையே இவளைத் திரும்பி பார்த்தது.
இவ்வளவு நேரம் அந்த பெண் பேசிய பேச்சையெல்லாம் ஒரு வகை அலட்சியத்தோடுக் கேட்டுக் கொண்டிருந்த அந்த போலிஸ் அதிகாரி தேவசேனாவின் குரலில் திகைத்து பயந்து நடுங்கும் உடலோடு எழுந்து நின்றார்.
அழுத்தமான அடிகளோடு உள்ளே வந்தவள் “இங்க இருக்குற யாருக்கும் காது கேட்காதா? என்ன நடக்குது இங்கன்னு கேட்டேன்” என்று சொன்னவளின் வார்த்தைகள் கத்தி முனையை விட கூர்மையாக வந்து விழுந்தன.
“நா சொல்றே மேடம்.. என்னோட…” என்று அந்த பெண் ஆரம்பிக்கும் போதே
“சும்மா இரும்மா நீ.. மேடம் விசயம் ரொம்ப சிம்பிள் தான்.. அது என்னன்னா…” என்று அந்த போலிஸ் ஆபிசர் ஆரம்பிக்க
அவர் பேச ஆரம்பிக்கும் போதே புருவத்தை உயர்த்திய தேவசேனா “ஏ அந்த அம்மா பேச ஆரம்பிக்கும் வரையும் உங்க வாய்ல கொலுக்கட்ட இருந்துச்சா?” நறுக்கெனக் கேட்டாள். அதில் மீண்டும் வாயை மூடிக் கொண்டார் அந்த போலிஸ் ஆபிசர்.
“அது!” என்பது போல் அவரைப் பார்த்துவிட்டு அந்த பெண்மணியிடம் திரும்பியவள் ‘சொல்லுங்க’ என்பது போல் கண்ணசைக்க
“மேடம்.. என் குழந்த.. என் குழந்த” அந்த பெண்மணியால் பேச முடியவில்லை.. மூச்சு திணறியது.. அதிக நேரமாக அழுதுக் கொண்டிருப்பார் போலும். மிகவும் களைத்து வேறு தெரிந்தாள்.
“உட்காருங்க முதல்ல..” என்று சொன்னபடி அந்த பெண்மணிக்கு கை காட்டிய தேவசேனா பக்கத்தில் இருந்த கேனில் இருந்து தண்ணீர் பிடித்துக் கொடுத்தாள்.
அந்த பெண்மணியின் முதுகை ஆதரவோடு நீவிவிட்டுக் கொண்டிருந்தான் அவளது கணவன். தேவசேனா அந்த பெண்மணிக்கு தண்ணீர் கொடுத்தவுடன் “மேடம் என் பேரு கிஷோர் குமார், இவ என் வொய்ப் மந்திரா.. மூணு நாளைக்கு முன்னாடி தான் எங்களுக்கு குழந்ததை பிறந்துச்சு… பிறந்து கொஞ்ச நேரத்துல குழந்த செத்துப் போச்சுன்னு நர்ஸ் அம்மா வந்து சொல்லிட்டாங்க.. ஆனா மந்திரா… செத்து போன குழந்தையப் பாத்து… இல்ல இது என் குழந்தை இல்லன்னு அழ ஆரம்பிச்சுட்டா..”என்று அவன் வேதனையை அடக்கிக் கொண்டு சொல்ல அந்த பெண் மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்து இருந்தாள்.
“ஆறேழு வருஷமா குழந்தையே இல்லாம பெத்த குழந்த மேடம்.. நல்லா இருந்த குழந்த எப்டி மேடம் செத்துப் போகும்” என்று அந்த பெண் மீண்டும் அழ ஆரம்பிக்க தேவசேனாவின் புருவங்கள் சுருங்கின.
பல வருடங்கள் குழந்தை இல்லாமல் இப்பொழுது பிறந்த குழந்தையும் இறந்து போன வேதனையில் தான் தன் முன் இருக்கும் பெண் பிதற்றுகிறாள் என்று நினைத்தவள் பக்கத்தில் இருந்த சேரை இழுத்துப் போட்டு அந்த பெண்ணின் முன் அமர்ந்து “பாருங்க மந்திரா… இது எல்லாம் இயற்கையான ஒரு விசயம் தான்.. நீங்க எதார்த்தத்த ஏத்துக்கப் பழகிக்கணும்” என்று அறிவுரைக் கூற
“இல்ல மேடம்.. இல்ல.. செத்துப் போனது என் குழந்தையா இருந்துருந்தா நா இத்தன ஆர்பாட்டம் எல்லாம் பண்ணி இருக்க மாட்டே.. என்னால நிதர்சனத்தைப் புரிஞ்சுக்க முடியும்.. ஆனா இறந்துப் போனது என் குழந்தை இல்ல.. நிச்சயமா இல்ல” தெளிவாகவும் அழுத்தம் திருத்தமாகவும் வந்து விழுந்தன அப்பெண்ணின் வார்த்தைகள்.
அந்த பெண்ணின் முகத்தில் இருந்த தெளிவைக் கவனித்த தேவசேனாவின் புருவங்கள் மீண்டும் சுருங்கின.
“மேடம்… எனக்கு சுகப்பிரசவம்ன்னு அனஸ்தீசியா குடுக்கவே இல்ல.. குழந்தைய டாக்டர் வெளிய எடுக்கும் பொழுது நா குழந்தையோட முகத்த பாத்துட்டு தான் கண்ண மூடுனே.. ஒரு பக்கம் தான் குழந்தையோட முகம் தெரிஞ்சது.. அப்போ என் குழந்தையோட கன்னத்துல கிஷோர் கன்னத்துல இருக்க மாதிரியே வட்ட கருப்பு மச்சம் இருந்துச்சு..” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்க
தேவசேனாவின் பார்வை கிஷோரின் கன்னத்தில் இருக்கும் ஐம்பது பைசா அளவிலான வட்ட கரிய மச்சத்தின் மீது பட்டுத் திரும்பியது.
“நா அத பாத்துட்டு தான் மேடம் மயக்கம் ஆனேன்… ஆனா அவுங்க இறந்து போச்சுன்னு கொண்டு வந்து குடுத்த குழந்தையோட கன்னத்துல அந்த மச்சம் இல்ல மேடம்.. அது கண்டிப்பா என் குழந்த இல்ல மேடம்.. நடுவால ஏதோ நடந்துருக்கு.. “ என்று அவள் தேம்பி அழ
“இவ சொன்னத நாங்க டாக்டர்கிட்ட போய் விசாரிச்சப்ப ‘குழந்த இறந்து போனதுல உங்க வொய்ப்க்கு பயித்தியம் பிடிச்சுருக்கும்… மச்சத்த காணமாம்.. அதனால அவுங்க குழந்தை இல்லையாம்… ஏதோ கெணத்த காணோம்ன்னு வடிவேல் காமடி மாதிரி பேசிட்டு இருக்கீங்க? உங்களுக்கே இது முட்டாள் தனமா இல்லையா?’ன்னு சொல்லி உடனே எங்கள ஹாஸ்பிட்டல விட்டு துரத்தி அடிக்காத குறையா பத்தி விட்டுடாங்க மேடம்” என்று கிஷோர் முடிக்க
தனது முழு உயரத்திற்கு நிமிர்ந்து நின்ற தேவசேனா “எந்த ஹாஸ்பிட்டல் அது?” என்றுக் கேட்டாள் சுருங்கிய புருவங்களோடு
“ஆத்ரேயா மேடம்” என்று அவன் சொல்ல கேட்ட தேவசேனாவின் கண்கள் அதிர்ந்தன.