Episode 26

“அண்ணா! அதை கொடுங்க” என்று வினோத்தை பார்த்து கேட்க, அவளின் மொபைலை கொடுத்தான் வினோத்.

“மேடம்! இதுல இருக்க விடியோவை பாருங்க. அப்ப யாரு சொல்றது உண்மை? யாரு சொல்றது பொய்ன்னு உங்களுக்கே தெரியும்.” என்று தன் மொபைலை கொடுத்தாள்.

அந்த மன்றத்தில் வைக்கபட்டிருந்த டி.வியில் கண்நெக்ட் செய்து அந்த விடியோ பரப்பபட்டது. அதில் அன்று தான் எதற்காக பழிவாங்கினேன் என்று சுதன் ஆதி முதல் அந்தம் வரை கூறின அனைத்துமே பதிவாகி இருந்தது.. முழுவதையும் பார்த்தபின்னர் எல்லோரின் பார்வையும் சுதனின் புறம் திரும்பியது.

“இவ்ளோ பெரிய கேவலமான கேடி வேலைய செஞ்சிட்டு அப்புறம் மீரா பொய் சொல்றதா சொல்லிருக்கிங்க சுதன்” என்று நீதிபதி கோபமாக கேட்க சுதன் நடுங்கிபோனான்.

“நானும் கொஞ்சம் பேசலாமா யுவர் ஹானர்.” என்று குரல் வாசலில் இருந்து வர எல்லோரின் பார்வையும் அங்கே திரும்பியது.

அங்கே சுதனின் எமனாய் சந்திரா கையில் குழந்தையுடன் நின்று கொண்டிருந்தாள். . 

“நீ யாரும்மா எதுவா இருந்தாலும் இங்க கூண்டுல வந்து நின்னு சொல்லுங்க” என்றார் நீதிபதி.

“சரிங்க மேடம்” என்று கூண்டில் ஏறி சத்யம் செய்த பின் “இவ்ளோ நேரம் மீரா சொல்லிக்கிட்டு இருந்த அந்த பொண்ணு நான் தான். இவர கல்லுரியில் படிக்கும் போதே விரும்பினது என்னவோ உண்மை தான். அப்போ மீராவோட அப்பா என் அப்பாகிட்ட “என் பையன் தான் காதல் கல்யாணம் பண்ணி சந்தோஷம் இல்லாம இருக்கான். ஆனா உன் பொண்ணு விரும்புன பையன் நல்ல பையனான்னு விசாரிச்சு திருப்தியா இருந்தா அவங்க வீட்ல வந்து பேச சொல்லி கல்யாணத்தை பண்ணிடுப்பா” அப்டின்னு தான் சொன்னார்.

ஆனா  எங்க அப்பாக்கு அது சுத்தமா பிடிக்கலை இவருக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க கூடாதுன்னு ஊற விட்டே எங்களை கூட்டிட்டு போய்ட்டார்.” என்று சுதனை பார்க்க தான் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் என்று அப்பொழுதுதான் அவனுக்கு புரிந்தது.

“இவர் அப்பவே நல்லா விசாரிச்சு இருந்தா இவ்ளோ செஞ்சிட்ருக்க மாட்டார். என் மேல இருந்த விருப்பத்துலன்னாலும் என்னையும் இவர் ஏமாத்திருக்கார். ஆமா உன் நியாபகத்துலையே இப்ப வரைக்கும் கல்யாணமே பண்ணிகலைன்னு பொய் சொல்லி தான் என்னை கல்யாணம் பண்ணிகிட்டார். என்கிட்டே ஒரு வார்த்தை கே‌ட்டிருந்தாலோ இல்லை மீரா அப்பாகிட்ட போய் நேரடியா சண்டை போட்டிருந்தாகூட இவ்வளவு பிரச்சனை வந்துருக்காது. அதை விட்டுட்டு பழிவாங்கறேன்னு எங்க ரெண்டு பேரோட வாழ்க்கையும் அழிச்சிட்டார்.” என்று சந்திரா கண்கலங்கினாள்.

நீதிபதி சுதனை பார்த்து, “என்ன ஏதுன்னே தெரியாம ரெண்டு பொண்ணுங்களோட வாழ்க்கைய அழிக்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. தப்பெல்லாம் நீங்க பண்ணிட்டு மீரா மேல போடறிங்க… வெக்கமா இல்ல உங்களுக்கு?” என்று குற்றம் சாட்டியவர்.

“காரணமே இல்லாம ரெண்டு அப்பாவி பொண்ணுங்களோட வாழ்க்கைய  நாசமாகின இந்த சுதனுக்கு அதிகபச்ச தண்டனையா இரண்டு ஆயுள் தண்டனை வழங்குகிறது. அதோடு பெண்கள் ஒன்றும் கடைகளில் விற்கபடும் களிமண் பொம்மையல்ல இது நல்லா இல்லன்னா அது என்று மாத்தி வாங்குறதுக்கு. இனி இதுபோல் குற்றம் நடக்காமல் இருக்கவே இந்த தண்டனை. நன்னடத்தை மற்றும் வேறு எந்த சிறப்பு காரணத்திற்காகவும் வெளிவரமுடியாத தண்டனையாகும் இது.” என்றார் நீதிபதி.

க்ருஷ்வந்த் தான் பித்துபிடித்தவன் போல் இருந்தான். அவளை காதலிக்கிறேன் என்பதையும் தாண்டி அவளுக்கு நேர்ந்த கொடுமையால் சுதனின் மேல் கொலைவெறியில் இருந்தான். இந்த தண்டனை அவனுக்கு போதாது என்று அவனாகவே சுதனுக்கு ஒரு தண்டனை வழங்க ஏற்பாடு செய்ய திட்டம் போட்டிருந்தான்.

கடைசியாக குழந்தைக்கு முத்தமிட்டு அந்த தம்பதிக்கு தரப்பட்டது. “எங்களை மன்னிச்சிரும்மா இதெல்லாம் எதுவும் தெரியாம உன்னை அன்னைக்கு ரொம்பா தப்பா பேசிட்டேன்” என்றார் அந்த மனிதர்.

“இருக்கட்டும் விடுங்க. குழந்தைய நல்லா பார்த்துகோங்க” என்றவள் கண்கள் கலங்க தன்னை கட்டுபடுத்தி திரும்பி கொண்டாள். அவர்கள் செல்வதை பார்த்து கொண்டிருந்தவள் அசையாமல் அப்படியே அமர்ந்திருக்கும் க்ருஷ்வந்திடம் வந்தவள். “குழந்தைய கொடுத்தாச்சு. என் மனசுல இருந்த பாரமெல்லாம் இறங்கியாச்சு. என்னை பத்தி இப்போ முழுசா தெரிஞ்சிகிட்டிங்க. இப்பவும் என்னை விரும்பறிங்களா? என்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைபட்றிங்களா?” என்று சிரித்தபடி குறும்புடன் கேட்டாள் ஸ்ருஷ்டிமீரா.

அவள் முன் மண்டியிட்டு “இப்போ தான் முன்ன விட அதிகமா உன்னை விரும்புறேன். எப்டிடா உன்னால இவ்ளோ பெரிய துரோகத்த தாங்கிட்டு தைரியாம நடமாட முடிஞ்சுது. யு ஆர் ரியலி கிரேட். மூணு வருஷம் கல்யாணம் ஆகி உன்னோட உணர்வுகளோட விளையாடின இவனை என்னால சும்மா விடமுடியாது” என்று ரௌத்திரம் பொங்க சுதனை பார்க்க சுதனுக்கு அடிவயிற்றில் கிலி பரவியது.

“வரேண்டா. உன்னை ..” என்று கோபமாக அவனிடம் செல்ல.

“வேண்டாம் விடுங்க க்ரிஷி. அதான் அவனுக்கு தண்டனை கொடுத்திட்டாங்கல்ல. அப்புறம் நீங்க எதுக்கு டென்ஷன் ஆகறிங்க?” என்றாள் சமாதனப்படுத்தும் குரலில் ஸ்ருஷ்டிமீரா.

“நீ கொஞ்சம் அமைதியா இருக்கியா? நீ பேச வேண்டியத எல்லாத்தையும் பேசி முடிச்சிட்ட இது என்னோட முறை நீ அமைதியா வேடிக்கை மட்டும் தான் பார்க்கணும். எதுவும் பேச கூடாது” என்றவன்.

“இவனை வண்டில ஏத்துங்க” என்று காவலர்களிடம் கூறியவன் வினோத்திடம் திரும்பி “மீராவ பார்த்துக்கோங்க இதோ வந்திடறேன்.” என்று வெளியே சென்று தனியாக போனில் தன் தோழன் ஏ.சி.பி அருணுக்கு போன் செய்தான்.

(அதாங்க நம்ம ஆஷிக் தம்பியோட சில்லென தீண்டும் மாயவிழில வர அருண் தாங்க)

“அருண்! எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்” என்றான்.

“எதுக்கு ஹெல்ப்புன்னுலாம் பேசிட்டு.. என்ன பண்ணனும்னு சொல்லுடா?” என்றான் அருண்.

“அந்த கௌஷிக் பயல முடிச்ச மாதிரி ஒரு பூஜையை போடணும்டா. அதுவும் இப்பவே” என்றான் கோபமாக.

“ஏன்டா இவ்ளோ கோபமா இருக்க. சரி. நீ சொன்னா போற்றுலாம்டா. நான் எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டு இன்னும் அரைமணி நேரத்துல கூப்பிட்றேன்” என்றான் அருண்.

இப்போ ஞாபகம் வந்துருச்சா அந்த கௌஷிகோடா நிலைமை தான் சுதனுக்கும். நல்லபடியா அவனை டி குடிக்க கிழே இறக்கி ரோடை கிராஸ் பண்ண வச்சி லாரியை விட்டு அவன் கதைய முடிச்சிட்டாங்க. (நன்றி ஆஷிக் சகோ)       

எல்லாவற்றையும் கேள்விபட்ட சுந்தரி இனி மீராவுக்கு தான் தாயாக இருக்கபோவதாக க்ருஸ்வந்திடம் கூறினார்.

மீராவை இரண்டு நாள் தங்கள் மருத்துவமனையிலேயே வைத்து பார்த்துகொண்டாள் சுந்தரி.

க்ருஷ்வந்திடம் “மீராக்கு சரி ஆகர வரைக்கும் நீ அவ பக்கமே வரகூடாது” என்றார்.

“அதெல்லாம் முடியாது. நீங்க வேணா என் பொண்டாட்டிய டிஸ்சார்ச்சு பண்ணிடுங்க. நான் வேற ஹாஸ்பிடல் பார்த்துக்குறேன்” என்றான் க்ருஷ்வந்த்.

“அடபாவி சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா அதுகுள்ள என்ன பேச்சு பேசுறான் பார்த்தியா?” என்று தலையில் ஒரு குட்டு குட்டினார்.

சந்தோஷ் மருத்துவமனையில் மீராவை பார்க்க வரும்பொழுது ஒரு ஸ்வீட் பாக்சை மீராவிடம் நீட்டியவன்.

“என் வாழ்த்துக்கள் எல்லா தடங்கல்லர்ந்தும் வெளிய வந்துட்ட இனி அந்த கடவுள் உனக்கு சந்தோஷத்தை மட்டுமே கொடுக்கணும்.” என்றான்.

இன்னொன்றை கையிலேயே வைத்திருக்க “என்னண்ணா அதுமட்டும் நீங்க வச்சிருக்கிங்க அது யாருக்கு?” என்றாள் மீரா.

“ஓஹ அதுவா? அது நம்ம க்ருஷ்வந்துக்கு தான்“ என்றான் விஷமபுன்னகையுடன்.

“என்னது எனாக்கா? நானும் அதுலயே எடுத்துகுறேன்டா” என்றவனை.

“இல்லடா இது தான் உனக்கு ரொம்ப பிடிக்கும் பிரிச்சி பாரேன்” என்று அந்த பெட்டியை நீட்ட ஆவலாய் அதை வாங்கி பார்த்தவனுக்கு முகமெல்லாம் ஈ ஆடவில்லை.

“என்னது அது? அப்படி பாற்க்கறிங்க?” என்று மீரா கேட்க.

“அது ஒண்ணுமில்லை மீரா. அவனுக்கு ஒன்னும் முடியலை அதான் என்னை வச்சு விளையாட்றான் இல்லடா” என்றான் மெதுவாக.

“என்னனு காட்டுங்க?” என்று மீரா விடாமல் கேட்க பெட்டியை அவளிடம் திருப்பினான். அதை பார்த்தவள் விழுந்து விழுந்து சிரித்தாள்.

அந்த பாக்ஸ் முழுவதும் அவனுக்கு பிடித்த ஸ்பைசி பச்சைமிளகாய் இருந்தது….

“என்ன அண்ணா இது அவருக்கு பச்சைமிளகாய் கொடுத்துருக்கிங்க?” என்று சந்தோஷிடம் கேட்டாள் மீரா.

“அதுவாம்மா! க்ருஷ்வந்த்துக்கு சுவீட்ட விட காரம் தான் பிடிக்கும் அதுவும் கொஞ்ச நாளா பச்சைமிளகாய் பைத்தியம் பிடிச்சு அலையறான்னு கேள்வி பட்டேன் அதான் நண்பனுக்காக வாங்கிட்டு வந்துட்டேன்.” என்று க்ருஷந்த்தை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்தான்.

‘ஐயையோ இந்த பக்கி இன்னைக்கு இதை மீராகிட்ட போட்டு கொடுத்துருவான் போல இருக்கே. இப்போ தான் அவளே பேசறா. இது தெரிஞ்சுது அப்புறம் மை ஸ்வீட் கிரீன் சில்லி. உண்மையாவே என்னை எரிச்சிருவா. கடவுளே காப்பாத்து.’ என்று மனதுக்குள் வேண்டினான்.

“அப்படியா க்ரிஷி உங்களுக்கு பச்சைமிளகாய் தான் பிடிக்குமா?” என்றாள் சிரித்துகொண்டு.

‘நீ தாண்டி அது. பச்சைமிளகாய்’ என்று சிரித்தவன் மழுபலாக “ஆமா மீரா போலிஸ் ட்ரைனிங் அப்போ பச்சைமிளகாய் நிறைய சாப்பிட கொடுத்து அதே பிடிச்சு போச்சு” என்றான்.

“இது எப்போடா நடந்தது சொல்லவே இல்ல” என்றான் சந்தோஷ் வாரும்விதமாக.

“ஹப்பா சாமி. உனக்கு ஒரு கும்புடு. மரியாதையா இடத்தை காலி பண்ணு” என்று துரத்தாத குறையாக அவனை துரத்தினான்.

“சரி டா நான் போறேன். மறக்காம அந்த எல்லா பச்சை மிளகாயையும் சாப்பிட்று” என்று கிளம்பினான்.

‘மகனே இரு தனியா வச்சிருக்கேன் கச்சேரி” என்றது நினைக்க அடுத்து வினோத் வந்தான். அவன் கையிலும் ரெண்டு டப்பாக்கள் இருக்க க்ருஷ்வந்தின் பாடு திண்டாட்டம் ஆனது.

‘இவனுங்க ரெண்டு பேரும் ப்ளான் பண்ணிட்டாங்க போல. இன்னைக்கு என்ன ஒரு வழி ஆக்காம விட மாட்டாங்க போல இருக்கே? டேய் உங்கள… அப்புறம் பேசிக்குறேன்’ என்று உள்ளுக்குள் பொறுமை.

“மச்சான் உங்களுக்கு காரம் தான் பிடிக்கும் அதுவும் ஸ்பெஷலா பச்சைமிளகா தான் பிடிக்கும்னு நம்ம சந்தோஷ் சொன்னான். அதான் உனக்கு பிடிக்குமேன்னு வாங்கிட்டு வந்தேன்” என்று ஒரு பாக்ஸில் இருந்த பச்சைமிளகாய் அவனிடம் நீட்ட இந்த முறை மீரா வாய் விட்டு நீண்ட நேரம் சிரித்து கொண்டிருந்தாள்.

“அப்படியா உனக்கும் சொல்லிட்டானா நான் உருப்பட்ட மாதிரி தான். உன் தங்கச்சிய பார்த்துட்டு உன் திருவாய ஒழுங்கா வச்சிட்டு கிளம்பிறியா?” என்றான் க்ருஸ்வந்த் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்.

“என்னடா இப்போ தான் வந்தேன் அதுக்குள்ள கிளம்ப சொல்ற” என்றான் ஒன்றும் தெரியாதவன் போல.

“ஆமாடா மீரா ரெஸ்ட் எடுக்கனும்ல அதுக்கு தான்” என்று அவனை தள்ளி கொண்டு “மீரா நீ நல்லா ரெஸ்ட் எடு நாங்க வெளில பேசிகிட்டு இருக்கோம்” என்று அவனை வெளியே தள்ளிகொண்டு வர வெளியே சிரித்தபடி நின்றிருந்தான் சந்தோஷ்.

“உங்க ரெண்டு பேரையும் இன்னிக்கு என்ன பண்றேன் பாருங்கடா“ என்று அந்த மருதுவமனை முழுவதும் துரத்தினான்.