(இந்த கதைல சொல்ற எல்லாமே என்னோட கற்பனைகள் தான். எதுவும் நிஜமில்லை) 
“என்ன ஆச்சு?” என்றாள் ஷன்மதி  துடிக்கும் இதயத்தோடு.
“என்னை அப்படியே குண்டுகட்டா தூக்கி எங்கோ கொண்டு செல்ல. நான் இருந்த இடத்துல என்னுடைய அடையாளங்களோட ஒரு உயிரியில்லா உடல் வைக்கப்பட்டு காரோடு சேர்த்து நசுக்கபட்டது.”
“எவ்ளோ முயன்றும் என்னால தப்பிக்க முடியலை. உன்னையும் காப்பாத்த முடியலை. என்னையும் மயக்கத்துக்கு கொண்டு போய்ட்டாங்க” என்றான் ஷ்ரவன்.
“அடக்கடவுளே.. ஷ்ரவன் அப்போ உனக்கு ஒண்ணுமே ஆகலையா? அப்புறம்… அப்புறம்… நீ ஏன் இப்படி இருக்க? எப்படி..?” என்றாள் ஷன்மதி வார்த்தைகள் வர தடைபடுவது போல்.
அவளின் முதுகினை வாஞ்சையாய் நீவி விட்டவன். “மதி மதி இங்க பாரு. ஜஸ்ட் ரிலாக்ஸ். எனக்கு ஒண்ணுமில்ல” என்றவுடன் அவனை முறைத்து “என்னது ஒண்ணுமில்லை ஷரவ்? ஆமா இப்போ நீ ஒண்ணுமில்லை தான்… உன்னை இதுமாதிரி ஆக்கினவங்க யாரு?” என்றாள் கோபம் கொப்பளிக்க.
“ஹ்ம்ம்.. சொல்றேன்… எனக்கு இது மாதிரி ஏதோ நடக்க போகுதுன்னு முன்னமே எனக்கு தோணிட்டே இருந்தது ஷன்.. நான் தான்  உன்னை எதுக்கு பயமுறுத்தணும்னு உன்கிட்ட சொல்லாம அமைதியா இருந்துட்டேன். சொல்லிருந்தா இந்நேரத்திற்கு நீ இவ்ளோ கஷ்டப்பட்டிருக்கமாட்ட” என்றான் ஷ்ரவன் வேதனையாய்.
“உன் உளறலை நிறுத்திட்டு என்ன நடந்தது சொல்லு?” என்றாள் மதி.
“அது… நம்ம கல்யாணத்துக்கு ஆறு மாசத்துக்கு முந்தி, என் கம்பெனி ஸ்டாப்ஸ் எல்லோரையும் அவுட்டிங் கூட்டிட்டு போனேன் ஞாபகமிருக்கா?” என்றான் ஷ்ரவன் ஷன்மதியை பார்த்து.
சிறிது யோசித்தவள். “ஹ்ம்ம் இருக்கு ஷ்ரவன். என்னை கூட கூப்பிட?” என்றாள் ஷன்மதியோசனையாய்.
“ஆமா உன்னையும் கூப்பிட்டேன். நீ அப்பா அம்மா கூட ஊர்ல திருவிழா இருக்கு வரமுடியாதுன்னு சொல்லிட்ட” என்றான் ஷ்ரவன்.
“ஆமா! இப்போ அதுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?” என்றாள் ஷன்மதி.
“இருக்கு மதிம்மா.  அப்போ நாங்க பத்து நாள் டூர் போயிட்டு கடைசியா  கொல்லிமலை கிட்ட வரும்போது பசங்க ரொம்ப தொந்தரவு பண்ணாங்க. சார் நாம் இன்னும் ரெண்டு நாள் லீவ் இருக்கு வீட்டுக்கு போய் நாம சும்மா தான இருக்கபோறோம்.  இங்க கொல்லிமலைல நிறைய பால்ஸ் இருக்கு. அப்படியே பார்த்துட்டு போயிடலாம்னு” என்று நிறுத்தியவன்.
“ரொம்ப கம்பெல் பண்ணதால சரின்னு சொல்லி கொல்லிமலை போனோம். அதுதான் நான் பண்ண முதல் தப்பு.” என்று விழிகளை  ஆசுவாசப்படுத்திக்கொண்டான் ஷ்ரவன்.
“ஏன் ஷ்ரவன்?” என்றாள் மதி.
“ஆமா மதி.  அங்க கொல்லிமலை போய் இறங்கினப்புறம் நந்தீஷ்வரம் என்ற இடத்துக்கு பக்கத்துல இருந்த குகைல தான் நாங்க  தங்கினோம். பசங்க எல்லோரும் தண்ணி அடிச்சிட்டு பிளாட் ஆகிட்டாங்க. பொண்ணுங்க அவர்களுக்குள்ளே பேசிட்டு இருந்தாங்க. எனக்கு அதெல்லாம் பழக்கமில்லை. சோ எனக்கு ரொம்ப போர் அடிச்சுது. என்ன பண்றதுனு தெரியலை. அதனால அப்படியே பக்கத்துல நடந்துட்டு வரலாம்னு நடக்க ஆரம்பிச்சேன். அதுதான் நான் பண்ண ரெண்டாவது தப்பு.” என்று நிறுத்தி ஷன்மதியை பார்த்தான்.
“கொஞ்ச தூரம் போன உடனே,  எனக்கு முன்னாடி சாந்தமான முகம் கொண்டு நெற்றியில் நீர் இட்டு இடுப்புல வேஷ்டி மட்டும் கட்டிக்கிட்டு, கழுத்துல ருத்ராட்ச்சம் மாலை போட்டுக்கிட்டு  ஒரு பெரியவர் முனிவர் போல தெரிஞ்சார். எனக்கு ஒன்னும் புரியல.. நாம ஒருவேளை  கனவு காணுறோமான்னு எனக்கு சந்தேகம் வந்து கண்ணை துடைச்சிகிட்டு திரும்பி பார்த்தா என் எதிர்லயே நின்னுட்டு இருந்தார்.” என்றவன் சற்று நிறுத்திவிட்டு மீண்டும் தொடர்ந்தான்.
“அன்னைக்கு அவர் சொன்னதை கேட்ருந்தா இவ்ளோ தூரம் வந்துருக்காது. ” என்றான் வருத்தமாய்.
“என்ன சொன்னார் அவர்?” என்றாள் ஷன்மதி.
“ஹ்ம்ம்… உன் முன்ஜென்ம வினை உன்னை இங்க கூட்டிட்டு வந்துருக்கு. என்னுடைய வார்த்தைகளை எச்சரிக்கையா எடுத்துக்கிட்டு உடனே இந்த மண்ல இருந்து போய்டு. இதுக்கப்புறம் இங்க இருந்தன்னா பார்க்கக்கூடாததை எல்லாம் நீ பார்க்க வேண்டியாதா யிஇருக்கும்ன்னு” சொல்லிட்டு மறைஞ்சிட்டார்” என்றான் ஷ்ரவன்.
“அப்போ நீ திரும்பி வரலையா?’ என்றாள் மதி குரலில் கடினம் காட்டி.
“எதுவும் நடக்கிறதுக்கு முன்னாடி திரும்பிடலாம்னு தான் இருந்தேன். விதி யாரை விட்டது?” என்று வெற்றாய் சிரித்தான் ஷ்ரவன்.               
“அப்புறம் என்ன ஆச்சு ?” என்றாள் ஷன்மதி ஆர்வம் பொங்க.
“என்ன நடந்துதோ எனக்கு தெரியாது. எல்லாமே என் முன்னாடி அழகாய் தெரிஞ்சுது. பச்சைப்பசேல் அழகுல ரொம்பதூரம் நடந்து வந்துட்டேன். அங்க ஒரு பாழடைஞ்ச மண்டபம் மாதிரி இருந்தது. எதுவோ என்னை தள்ளியது. என்ன நடந்தது. எதுவும் தெரியாது. ‘அங்க போ’  எனக்குள்ள இருந்து ஒரு குரல் மட்டும் திரும்பி திரும்பி கேட்டுது. எனக்கு என்ன நடக்குதுன்னே புரியலை என்னையும் மீறி நான் அந்த மண்டபத்துக்குள்ள போனேன். அது நான் பண்ண மூணாவது தப்பு. அங்க நான் பார்த்தது..” என்று ஷன்மதியை மிரண்ட விழிகளுடன் பார்க்க.
“அங்க என்ன இருந்தது ஷ்ரவன்?” என்றாள் ஷன்மதி நடுங்கும் குரலில் .
“அங்க நான் பார்த்தது என் கண்ணாலையே நம்ப முடியலை. அங்க நீ இருந்த?” என்றான் ஷ்ரவன் ஷன்மதியை நேருக்கு நேர் பார்த்து.
“என்ன என்னை பார்த்தியா? என்ன உளர்ற?” என்றாள் ஷன்மதிநம்பாமல்.
“உண்மையை தான் சொல்றேன் மதி. அங்க உன்னோட விதவிதமான ஓவியங்கள் இருந்தது.” என்றான் ஷன்மதியை ஓரவிழியால் பார்த்து. 
“இல்ல… இது எப்படி நடக்க முடியும் ஷ்ரவன்? நான் அங்க போனது இல்ல.  நீ ஒழுங்கா பார்த்திருக்க மாட்ட. வேற யாருடைய ஓவியங்களா இருந்திருக்கும் ” என்றாள் ஷன்மதி சந்தேகமாய்.
“இங்க பாரு நீ எனக்குள்ள இருக்கவ. அப்படி இருக்கும்போது உன்னோட படம் எனக்கு எதுன்னு சொல்ல தெரியாதா?” என்றான் ஷ்ரவன் கடுப்பாய்.
மதி எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்க, அதில் கரைந்தவன்.
“சாரி மதி. ஏதோ கோபத்துல பேசிட்டேன். எனக்கு கண்டிப்பா உன்னோட ஓவியங்கள் தான் தெரிஞ்சுது.” என்றான் ஷ்ரவன் மெதுவாய்.
“ஹ்ம்ம்” என்றாள் மெதுவாய் ஷன்மதி.
“எனக்கு ரொம்ப அதிர்ச்சியாய் இருந்தது. இங்க நாம வந்துருக்க இடத்துக்கும் நம்ம மதிக்கும் என்ன சமபந்தம்னு ? ஆனா அடுத்த கொஞ்ச நேரத்துல அதுவும் புரிஞ்சிடுச்சு. ஆமா… அங்க என் முன்னாடி இருந்தது…  உன்னுடைய ஓவியங்கள் மட்டும் இல்ல… நம்மளுடைய ஓவியங்கள் தான் இருந்தது. நீயும் நானும் சேர்ந்திருந்த ஓவியங்கள். என்ன வித்யாசம் நாம போட்ருந்த ட்ரெஸ் அந்த காலத்து ராஜா காலத்து ட்ரெஸ் மாதிரி இருந்தது.” என்றான் ஷ்ரவன்.
“டேய்! எங்க கிட்ட சொல்லாம ஏதாவது நைட் ஷோ பேய் படத்துக்கு ஏதாவது போயிட்டு வந்தியா டா? இப்படி கதையளக்குற?” என்றான் நந்து நக்கலாய்.
“டேய் யாருடா இவன்? நான் எவ்ளோ டென்க்ஷனா பேசிட்டு இருக்கேன். எரும.. பக்கி. அங்க நான் பார்த்தது எல்லாம் நிஜம் தான்.. ஏன்னா நீயும் தான் இருந்த அதுல.” என்றான் ஷ்ரவன்.
“என்னது நானா?” என்று வாயை பிளந்தான் நந்து.
“ஆமா.” என்றான் ஷ்ரவன்.
“டேய் டேய் என்னையும் அங்க கூட்டிட்டு போடா. அந்த ராஜா காலத்து ட்ரெஸ்ல நான் எப்படி இருக்கேன்னு பார்க்கணும்னு ஆசையா இருக்குடா” என்றான் நந்து.
அவனை ஏற இறங்க பார்த்த ஷ்ரவன், “உனக்குல்லாம் கடவுள் மூளைன்றதை கொஞ்சம்கூட வைக்க மறந்துட்டான் போல? டேய் நான் இங்க எவ்ளோ சீரியசா பேசிட்டு இருக்கேன். இந்த காட்டெருமை பார் என்ன கேக்குதுன்னு? எனக்கு வர கோவத்துக்கு ஏதாவது சொல்லிடுவேன்” என்றான் ஷ்ரவன்.
“சரி சரி.. கோபிச்சிக்காத. நீங்க ரெண்டு பேரும் என்னை விட்டுட்டு உள்ள போவிங்கள்ல? அப்போ நான் என்ன பண்ண போறேன். சும்மா தான இருப்பேன். அப்போ நான் அந்த இடத்தை சுத்தி பார்த்துக்கறேன்.” என்றான் நந்து.
“இவனை எல்லாம் கூட கூட்டிட்டு வந்தேன் பாரு? நாம என்ன பிக்னிக்கா போறோம் சுத்தி பாக்குறதுக்கு ” என்று தலையில் அடித்துக்கொண்டான் ஷ்ரவன்.
“சரி.. நீ அப்புறம் சொல்லு ஷ்ரவன்?” என்றாள் ஷன்மதி.
“எல்லாத்தையும் பார்த்துட்டு இருந்த என்னால அங்க நிக்க முடியலை. உடலெல்லாம் சில்லுனு ஆகிருச்சு. ஏதோ என் பக்கத்துல இருக்க மாதிரி ஒரு எண்ணம். தலையை சுத்தி முத்தி பார்த்தேன். அங்க…” என்றான் ஷ்ரவன்.