Yazhvenba's Oodaluvagai 5

Yazhvenba

Well-Known Member
#1
வேலையில் சேர்வதற்கான கடிதம் மெயிலில் வந்துவிடும் என்றும், இன்னும் மூன்று வாரங்களுக்குள் சேர வேண்டும் என்றும் கூறி அனுப்பியிருந்ததால், அன்று இரவே திருச்சி செல்வதற்காக தோழியர்கள் இருவரும் முடிவெடுத்திருந்தனர்.

"ஏன் உமா நீ நேரா முசிறி போற பஸ் ல ஏறிடலாம் தானே! ஏன் டி திருச்சி வந்து சுத்திட்டு போற?" என்ற ரிதுவின் கேள்விக்கு உமா சற்று அதிர்ந்து விழித்தாள்.

"இ.. ல்லை... டி தனியா தானே போகணும். அதான்... உன்கூட திருச்சி வரை வந்துட்டு அங்க இருந்து ஒன் ஹவர் தானே, அப்படியே போய்க்கிறேன்" தடுமாற்றத்தை முயன்ற வரை மறுத்து சமாளிப்பாக கூறினாள்.

"ஆமாம் டி தனியாக போக போர் தான்" என்ற ரிதுவும் வேலை கிடைத்த வருத்தத்தில் உமாவின் தடுமாற்றத்தை கவனிக்கவில்லை.

உமாவும், ரிதன்யாவும் சென்னையிலிருந்து திருச்சி சென்று கொண்டிருந்த அந்த இரவு வேளையில், யுகனோ அவன் அன்னையையும், தோழனையும் படுத்தி எடுத்துக் கொண்டிருந்தான்.

"அம்மா! உண்மையை சொல்லுங்க. எனக்கு எதுவும் பொண்ணு பாத்திங்களா?" என பத்தாவது முறை அதே கேள்வியை தன் தாயிடம் கைப்பேசியில் யுகன் கேட்டுக் கொண்டிருந்தான்.

சிவாவோ, யுகன் செல்லும் இடம் எல்லாம் பார்வையால் பின்தொடர்ந்தபடி, தன் முன்னே வாடி வறண்டு ரொட்டியாக மாறிக்கொண்டிருக்கும் சப்பாத்தி இருக்கும் பார்சலைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தான்.

'இன்னுமா டா இதையவே கேக்கற, இதோட நூறு தடவை கேட்டுட்டான். இவனை எல்லாம் எங்க இருந்து பிடிச்சுட்டு வந்தாங்களோ? அம்மா வாச்சும் உண்மையை சொல்லிடலாம். இல்லாட்டி இவன் விடவும் மாட்டான்' என சிவா புலம்பிக் கொண்டிருந்தான்.

சிவாவின் புலம்பல்களுக்கு விடையாய், யுகன் தனது அம்மா கற்பகத்திடம் அனைத்து விவரங்களையும் பெற்றே விட்டான். "ஏன் மா நம்ம எப்போ இருந்து இவ்வளவு ராயல் ஆனோம்? நம்ம தாத்தா தண்ணி அடுச்சுட்டு பண்ணாத அட்டகாசமா? பொண்ணோட அப்பா தண்ணி அடிக்கிறாருன்னா... அதை முன்னாடியே விசாரிச்சு உங்களுக்கு ஒத்து வராட்டி வேணாம் சொல்ல வேண்டிது தானே! ஏதோ நம்ம அப்பா அந்த காலத்துல எப்படியோ நல்லா படிச்சு கவர்ன்மென்ட் வேலை வாங்கி பொறுப்பா இருக்க ஆரம்பிச்சுட்டாரு.

நம்ம இனத்துல தண்ணி அடிக்காம யாரு இருக்காங்க? உங்களுக்கு அதுல விருப்பம் இல்லைன்னா முன்னாடியே தெளிவா விசாரிச்சு இருக்கணும். இப்படியா, இவ்வளவு பேச்சு வார்த்தை முடிச்சிட்டு வேணாம் சொல்லிட்டு வருவீங்க" என ஆதங்கப் பட்டான். அவர்கள் செய்து வைத்திருந்த வேலை நியாயவாதியான யுகனுக்கு கோபத்தை வரவழைக்காவிட்டால் தான் ஆச்சர்யப் படவேண்டும்.

"உங்க அப்பா எங்கடா கேக்கிறாரு. நானும் எவ்வளவோ சொன்னேன். இதுல அந்த பொண்ணை வேலைக்கு சேர வேண்டாம்ன்னு வேற சொல்லிட்டேன் அதை நினச்சா தான் கஷ்டமா இருக்கு" என உண்மையான வருத்தத்துடன் கற்பகம் கூறினார்.

"சரி விடு. உன் வீட்டுக்காரர் ஆசைப்படி கவர்ன்மென்ட் வேலைக்கு போகலை அப்டிங்கறதால தான் பாவம் பாத்து, 'பொண்ணாச்சும் உங்களுக்கு பிடிச்ச மாதிரி பாருங்க'ன்னு சொன்னேன். இப்படி சொதப்புனீங்க அப்பறம் அந்த வேலையையும் நானே எடுத்துக்க வேண்டிதாய் இருக்கும் பாத்துக்கங்க..." என போலியாய் மிரட்ட, அவனது தாயார் சிரித்து விட்டார்.

"ஏன்டா உன் மூஞ்சிக்கு யாரு டா வருவா? அதுலயும் நீ கோவம் வந்து போடற சத்தத்துல, உன் இஷ்டத்துக்கு ஆடற ஆட்டத்துல மெட்ராஸ் பொண்ணுங்க எல்லாம் தெறிச்சுட்டு ஓடிடுங்க..." என்று சிரித்தபடி கூறினார் அவனின் தாயார்.
 

Yazhvenba

Well-Known Member
#2
"என்னமா நீ இப்படி சொல்லற? சிவா உன்கிட்ட சொன்னதை நீ நம்பலையா? நான் இப்போ எல்லாம் சிரிச்ச முகமா சுத்தற ஆளுமா" என இல்லாத காலரை தூக்கி விட்டபடி யுகன் கூறிக்கொண்டு இருக்க, சிவா தலையை முட்டிக்கொள்ள எதுவும் இடம் இருக்கிறதா என்று தேடத் தொடங்கினான்.

"டேய் என்னதான் பூசி மொழுகுனாலும் உன் குணம் மாறாது டா. நீ இன்னமும் யார் இஷ்டத்துக்கும் ஒரு சின்ன விஷயத்தை கூட செய்யாம உன் போக்குல தான் திரியறன்னு கூட தான் சிவா சொல்லறான். அதோட தம்பி உனக்கு லவ் பண்ண எல்லாம் வராது. இல்லாட்டி இவ்வளவு காலம் செஞ்சு இருக்க மாட்ட? உனக்கு பொண்ணை தேடிக்க தெரியாதுன்னு... உங்க அப்பாவை பாக்க சொல்லிட்டு, என்ன அழகா சமாளிக்கிற?" என்றார் சிரித்தபடி.

"போங்க மா... உங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்கேன். சரி உங்க வீட்டுக்காரர் வேற, விறைப்பா இருக்காரேன்னு பாத்தேன். ஆமா... அந்த பொண்ணு பேரு என்ன சொன்னீங்க?"

"நான் எப்போ சொன்னேன்... சொன்ன மாதிரி நியாபகம் இல்லையே?"

"சரி இப்போ சொல்லுங்க" என்றான் பல்லைக் கடித்தபடி.

மெலிதாக சிரித்தவர், "ரிதன்யா, உங்க சங்கீதா அண்ணியோட தங்கச்சி" என்றார் கூடுதல் தகவலோடு. "ஒஹ்..." என்றவன் அவள் பெயரை மனதிற்குள் சேமித்துக் கொண்டிருந்தான்.

"ஏன்மா இப்படி ஒரு வேலை பண்ணி வெச்சு இருக்கீங்க. பெரிப்பா வீட்ல என்ன நினைப்பாங்க? அண்ணி தப்பா எடுத்துக்க மாட்டாங்களா?"

"டேய்! அதெல்லாம் உங்க அப்பா வேற ஏதோ சொல்லி சமாளிச்சுட்டாங்க. நீ பிரீயா விடு. சரி சிவாகிட்ட குடு" என்றதும், கைப்பேசி சிவாவிடம் கை மாறியது.

போனை வாங்கியதும், "அம்மா! எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசுங்க... என் வயிறு பசியில இவ்வளவு நேரம் கிரைண்டர் மாதிரி சவுண்ட் கொடுத்துச்சு... இப்போ மிக்ஸி லெவல் ல சவுண்ட் கொடுக்க ஆரம்பிச்சுடுச்சு" என சிவா பாவமாய் கூறவும், கற்பகம் சிரித்தபடியே, "சரி சரி தம்பி உடம்பை பாத்துக்கோ. அம்மா வெச்சுடறேன்" என்று போனை வைத்தார்.
 

Yazhvenba

Well-Known Member
#3
***
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உமாவதியை முசிறி செல்லும் பேருந்தில் ஏற்றிவிட்டு, தங்கள் ஊருக்கு செல்ல வேண்டிய பேருந்து நிறுத்தத்திற்கு ரிதன்யா சென்றாள்.

உமா பரிதவிப்போடு ரிதன்யா செல்வதை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது கைப்பேசி வைப்ரேட் மோடில் இருப்பதால், ஓயாமல் அலறிக்கொண்டிருந்தது. குறுஞ்செய்திகளும், அழைப்புகளும் மாறி மாறி வந்த வண்ணம் இருப்பது அவளும் அறிந்ததுதான். அதனை நிராகரிப்பதால் வாங்கப் போகும் வசை மொழிகளும் அவளுக்கு பரிட்சயம் தான்.

ரிதன்யா கண் பார்வையிலிருந்து மறையும் வரை காத்திருந்தவள், அவள் மறைந்ததும் பேருந்திலிருந்து இறங்கினாள். ஓயாமல் அலறிக்கொண்டிருந்த கைப்பேசிக்கு செவி கொடுத்தவள், அதிகாலையிலேயே கண்கள் கலங்கும் அளவு வசை மொழிகளை பெறத் தொடங்கினாள்.

அவள் கெஞ்சியே பழகிவிட்டதாலோ, இல்லை மிஞ்சி பழக்கமில்லாததாலோ, பிரச்சனையை பெரிது செய்யாமல் தீர்க்க மட்டுமே முற்சிப்பதாலோ என்னவோ அவள் மனம் அதிகம் காயப்படும். விட்டுக்கொடுத்து செல்ல விரும்புபவர்களை அவர்களின் அமைதியின் எல்லை வரை சோதிப்பது விதியா? இல்லை சில வக்கிரமானவர்களின் குணமா? என்பதுதான் தெரியவில்லை.

பேருந்தை விட்டு இறங்கி சிறிது தூரம் நடந்து ஒரு கடையின் முன்பு அவள் சென்று நிற்கவும், அவள் அருகே உறுமியபடி ஒரு இரு சக்கர வாகனம் வரவும் சரியாக இருந்தது. இது போன்ற வெளிப்படையான செயல்களில் எல்லாம் அவளுக்கு துளியும் விருப்பம் இருந்ததில்லை. மற்றவர்களுக்கு காட்சி பொருளாகவும் அவளுக்கு விருப்பமில்லை. ஆனால், எதுவும் மறுத்து பேசும் நிலையில் அவள் இல்லையே!

இப்பொழுது ரஞ்சித்தின் பார்வையில் அவள் இதுவரை செய்ததெல்லாம் கொலை குற்றத்திற்கு ஈடானவை. ஆகவே, அவளின் குற்றங்களின் அளவுகளை அதிகரிக்காமல், எதுவும் மறுத்து பேசாமல் வண்டியில் ஏறினாள். அந்த அதிகாலை வேளையில் வண்டி சற்று அதிக வேகத்துடன் தான் பறந்தது. அதிலேயே அவனின் கோபத்தின் அளவு புரிந்தது உமாவிற்கு.

உமாவும், ரஞ்சித்தும் கல்லூரி தோழர்கள். நட்பாக தொடங்கிய பேச்சு தான். அதுவும் நேரடி பேச்சு வார்த்தைகள் என்றால் கூட, அளவோடு முடிந்திருக்குமோ என்னவோ, கைப்பேசியின் துணையில் நட்பு விரைவில் பலமானது. எப்பொழுதும் சேட், கால் என்றவாறு இருக்க ஆரம்பத்தில் அவளுக்கு துளியும் பிடித்தமில்லை.

அதைக்கூறியதும், சிறிதே வருத்தம் காட்டியவன், பிறகு அவள் விருப்பப்படி விட்டுவிட்டான். 'உனக்கு நேரம் இருக்கும்போது மெசேஜ் பண்ணு. ஆனால், எனக்கு உன்கிட்ட பேசணும், ஏதாவது சொல்லணும் தோணும் போது மெசேஜ் அனுப்பிடறேன். நீ உடனே ரிப்ளை பண்ண வேண்டாம். நேரம் இருக்கும் போது அனுப்பினா போதும்...' என்று கேட்கும் பொழுது, அவளால் ஏனோ மறுக்க முடிந்ததில்லை.

சில விஷயங்கள் பதின் வயதுகளில் ஆர்வத்தை கொடுக்கும். எதிர்பாலினத்தினரின் நட்பும் அதைப் போன்றே. தன்னை நட்பாக மதித்து, தன்னை மட்டுமே நட்பாக மதித்து என்கிற எண்ணமே உமாவிற்கு தித்திப்பாய் இருந்தது என்னவோ உண்மை. அதுதான் அவளுடைய முதல் சறுக்கல் போலும்.

ரஞ்சித் உடனான நட்பை அவளின் உயிர் தோழி ரிதன்யாவிடம் கூட பகிர்ந்து கொண்டதில்லை. அவளுக்கு இது போன்ற அநாவசிய பேச்சு வார்த்தைகள் எல்லாம் பிடிக்காது என்பதால், அவளிடம் உமா எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை.

நாள் முழுவதும் ரஞ்சித் அவள் பதில் அளிப்பது போல பாவித்து எதையேனும் அனுப்பி வைப்பான். இவள் கல்லூரிக்கு கைப்பேசி எடுத்து செல்வதில்லை. ஹாஸ்டல் வந்த பின்பும் படிப்பு தொடர்பான வேலைகளை முடித்துவிட்டு, உணவு உண்ட பின்னரே வீட்டிற்கு அழைப்பாள். அவர்களிடம் பேசி முடித்து விட்டு உறங்கிவிடுவது அவள் வழக்கம்.

ஆனால், மொபைலில் நிறைந்துள்ள மெசேஜ்களை பார்க்கையில் அவளுக்கு மனம் இளகிவிடும். பதில் கூட அனுப்பாவிட்டால் எப்படி என்று, ஒவ்வொன்றையும் படித்து பதில் அனுப்பத் தொடங்குவாள். அவளிடம் இருந்து பதில் செல்ல தொடங்கியதும், உற்சாகத்துடன் அவன் மீண்டும் மீண்டும் மெசேஜ் செய்வான். ஆனால், அனைத்தும் நட்பு ரீதியான பேச்சு வார்த்தைகளாகவே இருக்கும். என்ன, அது சற்று நெருங்கிய நட்பு ரீதியான பேச்சுகளாக இருக்கும். 'நீ தான் என் உயிர் தோழி. உன்னிடம் பகிராமால் எனக்கு எதுவும் இல்லை' என்பதாக இருக்கும். புதிதாய் அறிமுகமானவளிடம் இப்படி மெசேஜ்களை அனுப்புகிறானே என அவள் சுதாரித்து விலகி இருந்தால் நலமாக இருந்திருக்கும்.
 

Yazhvenba

Well-Known Member
#4
ஆனால், நம்மை மதிக்கும்பொழுது புறக்கணிப்பதா என்ற எண்ணம் மேலோங்க, அவனுக்கு பதில் அனுப்பியபடியே பாதியிலேயே உறங்கியும் போவாள். காலையில் எழுந்து பார்த்தால், இவள் உறங்கிய பிறகும் மெசேஜ்கள் நிறைந்திருக்கும். ஒரு 'சாரி' யுடன் தான் அவளது காலை தொடங்கும். இதுவே தொடர்கதையானது.

நாளாக நாளாக இவளும் சுவாரஸ்யமாக தன்னைப் பற்றி முழுவதும் பகிர்ந்து கொள்ள தொடங்கினாள். புதிதாய் வாங்கும் ஆடையின் நிறம் முதல் கொண்டு அவனிடம் சொல்லி மகிழ்வாள். 'நல்ல நண்பன்' என்னும் நிலையில் அவள் மனதில் ரஞ்சித் உறுதியாய் நின்றிருந்தான்.

மெதுவாய் தனது செல்ல சண்டைகளை தொடங்கி வைத்தான். 'நைட் மட்டும் தான் மெசேஜ் பண்ணற, கொஞ்சம் டைம் இருக்கும் போது பண்ணலாமில்ல', 'உங்கிட்ட பேசாம இருக்க முடில', 'ஊருக்கு போயிட்டா என்னைய கண்டுக்கவே மாட்டீங்கற, ஒரு போன் பண்ணலாம் தானே?' இதுபோன்றெல்லாம் அவன் கேட்டால், அவள் பெரும்பாலும் மறுத்து தான் விடுவாள்.

'இல்லை காலேஜ்க்கு போன் கொண்டு வர மாட்டேன். அப்போ நைட் தானே மெசேஜ் பண்ண முடியும்', 'ஊர்ல அம்மா, அப்பா கவனிச்சுட்டா தப்பா எடுத்துப்பாங்க. அவங்க கொஞ்சம் பழங்காலம். ஊர்ல இருக்கும் போது போன் பண்ண முடியாது. சாரி பா' என தன் நிலையை விளக்கி ஒத்தி வைப்பாள்.

மேலும் சில காலம் இப்படியே கழிய, அவன் விருப்பத்திற்கு ஆட வேண்டும் என்று கட்டுப்படுத்துவதில்லை. நம் விருப்பத்தையும் மதிக்கிறான் என்ற எண்ணத்தை அவளுள் விதைத்திருந்தான். இப்படி நாட்கள் சென்று கொண்டிருக்கும் பொழுது தான்... அவனுடைய காதலை அவளிடம் மெல்ல மெல்ல பதிவு செய்தான்.

அவளின் மனம் ரெக்கை இல்லாமல் பறந்த காலம் அது. எப்பொழுது காதலை கூறுவான் என அவளை ஏங்க வைத்தான் என்றே கூறலாம். அதுவும் நடந்தேற, அவள் பதில் கூறாமல் அவனிடம் சிறிது விளையாண்டு மகிழ்ந்தாள். அவனைப் போன்றே தவிக்க விட்டு தனது காதலை ஒப்புக் கொண்டாள். ரஞ்சித்தை சந்தித்த நாள் முதல் காதலை ஒப்புக்கொண்ட நாள் வரை எல்லாமே சுபம், சுபம், சுபம் தான். சரியாக கூற வேண்டும் என்றால், பல கன்னிப்பெண்கள், நடக்காதா என ஏங்கும் ஒரு கனவு.

அதன்பிறகே, அவள் வாழ்வில் சில கருப்பு பக்கங்கள் இடம்பெற தொடங்கியது. இத்தனை காலமும் அவளின் சூழலை சொன்ன பொழுது ஒப்புக் கொண்டவன், அதன்பிறகு கோபமுகம் காட்டத் தொடங்கினான். 'நான் பாட்டுக்கு லூசு மாற மெசேஜ் அனுப்பிட்டு இருக்கேன். நீ *** போச்சுன்னு தூங்கிடற', அவனிடமிருந்து வெளிப்பட்ட முதல் கேட்ட வார்த்தை, அவளுக்கு கண்கள் கசிந்தது. 'என்ன இப்படி பேசறான்?' என்ற எண்ணம், ஆனால் அதை அவனிடம் கேட்கும் தைரியம் இல்லை.

'எனக்கு நேரமாவே தூங்கி பழக்கம். அதுதான்... அது உனக்கும் தெரியும் தானே' என சமாதானம் செய்வாள். 'சொல்லிட்டு தூங்கு' என்பான். ஆனால், அவள் தூக்கம் வருது என்று அனுப்பினால், 'மணி என்ன, இங்க உங்கிட்ட பேச தானே முழுச்சுட்டு இருக்கேன். காலேஜ்க்கும் போன் எடுத்துட்டு வர மாட்ட, பகல்லயும் மெசேஜ் அனுப்ப மாட்ட. ஈவினிங் வந்தும் ஆற அமர தான் மேடம் ஆன்லைன் வருவீங்க. வந்ததும் தூக்கம் வேற வருதா?' என எரிந்து விழுவான்.

அவனிடம் கடும் சொற்களை கேட்கும் பொழுது எல்லாம் உமா அழத் தொடங்கி விடுவாள். அதை அவன் உணர்ந்தால் அழகாய் சமாதானமும் செய்வான். இவளுக்காகவே உருகுவதைப் போல அவன் பேசுவதைக் கேட்கையில் உமாவிற்கு என்ன செய்ய என்றே புரியாது. ஆனால், அவள் வாழ்வில் அவன் ஆதிக்கம் நிறையத் தொடங்கியதை உணர்வு பூர்வமாக உணர்ந்தாள்.

அவை அனைத்தும் நல்ல மாற்றங்களா என்றால், விடை தான் இல்லை. முன்பு எவ்வளவு நிம்மதியாய் உறங்கி, எவ்வளவு வெளிப்படையாய் சிரித்து, எவ்வளவு மகிழ்வாக வலம் வந்தாலோ, அவன் வாழ்வில் ஒரு அங்கமாக இருப்பதாக ஒப்புக்கொண்ட பிறகு அனைத்தும் தலைகீழ். அவள் சரியாக தூங்கி, மனம் விட்டு சிரித்து, தோழிகளிடம் பேசி, ஏன் நிம்மதியாய் படிப்பில் கவனம் செலுத்திக் கூட பல காலம் ஆகி இருந்தது. நடமாடும் சோக சித்திரமாய் மாறி, அதை யாருக்கும் தெரியாமல் மறைத்து வலம் வந்தாள்.

அவனின் கடும் சொற்கள் தாளாமல் 'முன்பு எல்லாம் நான் தூங்கினால், எழும் வரை காத்து இருப்பாயே!' என்று ஒருநாள் கேட்டே விட்டாள். அதற்கு அவனோ மிகவும் சாதாரணாமாக, 'அப்பொழுது நீ காதலை ஒப்புக்கொள்ள வில்லை. அப்பொழுதே இப்படி பேசினால் நீ எப்படி ஒப்புக்கொள்வாய்?' என கூறுவான். 'ஆக, அவன் நடிப்பில் ஏமாந்து இருந்திருக்கிறோம்!' என நொந்து போவாள் அவள். அவள் அவனை விரும்புவதாக கூறிவிட்டாள், இனி அதில் பின்வாங்குவது என்பது அவள் நினைவில் கூட எழாது. அவள் வளர்ந்த சூழல் அவ்வாறு. ஆனால், இந்த வேதனையை அவளால் தாங்க முடியவில்லை. ஆமாம்! முன்பு அவனிடம் பேசும் பொழுது பூரித்து மகிழ்ந்தவள், இன்று அவனிடம் பேசி முடிக்கும் பொழுது அழமலோ, வருந்தாமலோ இருந்ததில்லை.

பல நேரங்களில் அவளையும் மீறி கடவுளிடம் பிரார்த்திக்கும் பொழுது கண்ணீர் உற்பத்தியாகும். 'இந்த பந்தம் தொடராமல் காப்பாற்று முருகா!' என ஆழ் மனது வேண்டுதலை வெளியிடுவாள். பிறகு, அதை அவள் உணர்ந்ததும், 'ஐயோ! என்ன இப்படி வேண்டறேன். ஒரு முடிவு எடுத்துட்டு பின்வாங்கறதா? யாருக்கும் தெரிஞ்சா என்ன நினைப்பாங்க?' என மடத்தனமாக எண்ணுவாள்.

மொத்தத்தில் ஊருக்கும், உலகத்திற்கும், அவளுடைய மனசாட்சிக்கும், அவள் ஏமாந்து போய் கொடுத்துவிட்ட வாக்கிற்காகவும் தனது வாழ்க்கையை அடமானம் வைக்கத் தொடங்கிவிட்டாள்.

ஆரம்பத்திலேயே விலகி இருக்க வேண்டுமோ! அவன் ஒவ்வொரு முறை இவள் அழுது கரையும் பொழுதும், அவனைப் பற்றிய கடினமான சூழல் ஒன்றை கூறி, அவன் மேல் பரிதாபம் வரும்படி செய்து அவளை விலக விடாமலேயே பார்த்துக் கொண்டான். அவளும் கொடுத்த வாக்கிற்காக விலகாமல் இருந்தாள். இவ்வாறாக அவள் காதல் வாழ்க்கை செல்ல, வேலை கிடைக்காமலேயே கல்லூரி படிப்பை இருவரும் முடித்திருந்தனர். அதிலும் அவனோ சில அரியர்களோடு இருந்தான்.

இன்றைய அவனின் கோபம் சென்னை சென்றதில் இருந்து உமா அவனுக்கு அதிகமாக மெசேஜ் செய்யவோ, கால் செய்யவோ இல்லை. ரிதன்யா இருந்தால் முடியாது என்று முன்பே தெரிவித்து விட்டு தான் சென்றாள். 'அவளுக்கு ஏன் ரெஃபர் செஞ்ச', 'அவளுக்கும் வேலை கிடைச்சுடுச்சா. இனி என்கிட்ட பேசாம அப்படியே கழட்டி விட்டுடுவ', 'நான் டிகிரி முடிக்காதவன், நீ கை நிறைய சம்பாதிக்க போற, இனி நான் எல்லாம் உன் கண்ணுக்கு தெரிவனா?' என ஏகப்பட்ட குத்தல் பேச்சுக்கள் தான் கடந்த இரு தினங்களாக. இப்பொழுதும் முசிறி செல்லவிருந்தவளை 'என்னை பாக்கணும் கூட தோணாது அப்படித்தானே!' என்று அதட்டியதில் அவள் பயணம் தானாய் தடைப்பட்டது.

வாகனத்தை ஓர் இடத்தில் நிறுத்தினான் ரஞ்சித். பயத்துடனேயே உமாவும் இறங்கி நின்றாள். பார்க்க வேண்டும் என ஆசையாய் வரவழைத்தவன், அவளை போதும் போதும் என்ற அளவில் வசை பாடி முடித்தான். அவன் முன்னிலையில் அழவும் கூடாது. 'நடிக்காதே' என்பான் அல்லது 'போற வர்றவன் எல்லாம் பாக்கணுமா?' என கத்துவான். ஆக அழக்கூட முடியாமல் அனைத்தையும் கேட்டு மரத்து போய் நின்றிருந்தாள்.

அவன் அவளிடம் கூறவிருந்த விஷயங்களின் சாராம்சம் இதுதான். 'நான் சீக்கிரம் அரியர்ஸ் கிளியர் பண்ணிடுவேன். நீ ஜாப் ஜாயின் பண்ணும் பொழுது, நானும் சென்னைக்கு வேலை தேட வந்து பசங்களோட தங்கிக்கிறேன். என் செலவை நீ பாத்துக்கோ' என அலுங்காமல் ஒரு குண்டைப் போட, அவள் எவ்வளவோ போராடியும் அவன் மசியவில்லை.

'பெற்றவர்களுக்கு செய்த நம்பிக்கை துரோகத்திற்கு தணடனையாய் மேலும் மேலும் அவர்களுக்கே துரோகம் செய்ய நேரிடுகிறதே!' என கலங்கியபடி முசிறி சென்றாள். படிக்காத பெற்றோரை சம்பள விஷயத்திலும் ஏமாற்ற போகிறோம் என்ற கவலை அவளை வெகுவாக கலங்க செய்திருந்தது.
 

Yazhvenba

Well-Known Member
#5
வணக்கம் தோழமைகளே!

அடுத்த அத்தியாயத்துடன் வந்துவிட்டேன் நண்பர்களே. கதைக்கு விருப்பம் தெரிவித்து, ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி friends .

இந்த அத்தியாயத்தில் யுகன் வீட்டில் ரிதுவை மறுத்த காரணம் கூறி இருப்பேன். அதோடு, உமாவிற்கு முக்கியத்துவம் இருக்கும். இந்த கதையில் அவளுடைய முக்கியத்துவமும் நிறைந்திருக்கும் friends. எப்படி வந்திருக்கிறது என்று கூறுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.. நன்றி…


அன்புடன்,
யாழ்வெண்பா
 

Latest profile posts

அடுத்த பதிவு போட்டு விட்டேன் நட்பூக்களே , படித்து விட்டு கருத்துச் சொல்லுங்கள் ° நன்றி
Back with a short novel makkaleee...
காதலின் கனிவான கவனத்திற்கு...!!!
Read and enjoyy
அக்டோபர் மாதத்தில் அந்திமழை வானத்தில் வானவில்லை ரசித்திருந்தேன்

அந்த நேரத்தில் யாருமில்லை தூரத்தில் இவள் மட்டும் வானவில்லை ரசிக்க வந்தாள்

அன்று கண்கள் பார்த்துக் கொண்டோம் உயிர் காற்றை மாற்றிக் கொண்டோம் (2)

ரசனை என்னும் ஒரு புள்ளியில் இரு இதயம் இணையக் கண்டோம் (2)

நானும் அவளும் இணைகையில் நிலா அன்று பால்மழை பொழிந்தது
venba mam ud ilaya waiting mam....

Sponsored

Recent Updates