Vizhiye Kadhai Solvayo-2

Advertisement

Ksmanya

Writers Team
Tamil Novel Writer
தனஞ்செயன்

சரியாக காலை பத்து மணிக்கு தனா எண்டர்பிரைசஸ் வாயிலில் வந்து நின்றது என் கார்.சிப்பந்திகள் அனைவரும் என்னை வரவேற்க தயாராக நின்றிருந்தனர்.அவர்கள் அளித்த மரியாதையை ஏற்றுக் கொண்டு பழைய எம்.டி ஞானசேகரன் அவரோடு பேசியபடி கான்பரன்ஸ் அறையை நோக்கி சென்றேன்.அங்கே நான், ஞானசேகரன்,ஜி.எம், மேனேஜர் நாங்கள் நால்வரும் மட்டும் இருந்தோம்.ஞானசேகரன் மீதமிருந்த தாஸ்தாவேஜுகளை என்னிடம் ஒப்படைத்தார்.அதை நான் சரிப் பார்த்தேன்.அப்போது அவர் சிறிது கண்கலங்கினார்.அவர்,

"மிஸ்டர் தனஞ்செயன்! இந்த கம்பெனி எனக்கு ஒரு மகன் போலத் தான்.எவ்வளவோ கஷ்டபட்டு இத இந்தளவு கொண்டு வந்தேன்.ஆனா என் மனைவியை காப்பாத்த நா அமெரிக்கா போயே ஆகனும்.என் மகனும் அங்கேயே செட்டில் ஆயிட்டான்.கம்பெனிய உங்கள போல திறமையானவர்கிட்ட கொடுத்ததுல நா நிம்மதியா அமெரிக்கா போவேன்"என்றார்.

"டோன்ட் வொர்ரி மிஸ்டர் ஞானசேகரன் உங்க வொய்ப் சீக்கிரம் சரியாய்டுவாங்க... இந்த கம்பெனிய நம்பர் ஒன் கம்பெனியா பண்றதுதான் என் வேலை...அத நிச்சயமா செய்வேன்..."என அவருக்கு நம்பிக்கை அளித்ததோடு என் மனதிற்கும் சொல்லிக் கொண்டேன்.

என் பதிலில் அவர் முகம் சிறிது பிரகாசமடைந்தது.

"அப்புறம் மிஸ்டர் ஞானசேகரன்!நாம அன்னிக்கு பேசினது போல இங்க இருக்கிற சில ஸ்டாஃப்ஸ எங்க ஹெட் ஆபிஸுக்கு மாத்தி இருக்கேன்.அவங்க லிஸ்ட் இது.இதுல உங்க சஜஷன் ஏதாவது இருந்தா சொல்லுங்க!"என்றவாறு அதை அவரிடம் கொடுத்தேன்.

அதை கவனமாக பார்த்த அவர்,

"இதுல ஒண்ணும் வித்யாசம் பண்ண தேவையில்லை.எல்லாருக்குமே சரியான பொசிஷன் தான் கொடுத்திருக்கீங்க!அதுலையும் ஸ்ரீவாணிங்கற இந்த பொண்ணு ஹைலி டேலண்ட்டட்..."என்றார்.

அவர் அப்படி சொன்னதை என் மனதின் ஒரு மூலைக்கு ஆக்கினேன்.மீதி விஷயங்களை பேசிய பின் அவர் என்னிடம் விடைபெற்று சென்றார்.மதிய உணவு நேரத்திற்கு வீட்டிற்கு புறப்பட்டேன்.கார் பார்கிங்கிற்கு சென்ற நான் அங்கு கண்ட காட்சியில் என்னை மறந்து அதைப் பார்க்கத் தொடங்கினேன்.

மத்திய வயதில் இருந்த அந்த தம்பதிகளில் மனைவி தன் எதிரே இருந்த ஒரு பெண்ணின் காலில் விழப் போனார்.அந்த பெண்ணின் முகம் தெரியவில்லை.அவளும் தன் முப்பதுகளில் இருக்கலாம்.தன் காலில் விழப் போனவரை தடுத்த அந்த பெண்,

"அக்கா.... என்ன இது?! நீங்க என்னை விட வயசுல பெரியவங்க.... என் கால்ல நீங்க விழறதா!தப்பு!நா அப்படி பெருசா என்ன செஞ்சுட்டேன்?!"என்றாள் அவள்.

"நல்லாருக்கு போ! என்ன செஞ்சேன்னு கேக்கிறியே!இவர குடி பழக்கத்துலேந்து மாத்தி எங்க குடும்பத்துக்கு மறுவாழ்வு குடுத்திருக்க!உன் கால்ல நூறு தடவை விழுந்தாலும் போதாது."என்றார் அந்த பெண்மணி.

"ஆமாம்மா! அந்த கெட்ட பழக்கத்தால குடும்பத்த கவனிக்காம என் ஆரோக்கியத்தையும் கெடுத்துகிட்டேன்...நீ மட்டும் அந்த மறுவாழ்வு மையத்தில சேக்கலேன்னா இன்னும் இன்னும் குடுச்சு செத்தே போயிருப்பேன்.ரொம்ப நன்றிம்மா!"என வருத்தத்தோடு சொன்னார் அவரின் கணவர்.

"அப்படியெல்லாம் இல்லண்ணா!திருந்தர மனசு உங்களுக்கும் இருந்தது.இல்லேன்னா எங்களாலையும் ஒண்ணும் செஞ்சுருக்க முடியாது.ஆனா தயவுசெஞ்சு இனிமே அந்த கருமத்தை மனசால கூட தொடாதீங்க!உங்க அந்த பழக்கத்தால மனசு நொந்து அக்கா வேலைல கவனமில்லாம அவங்க வேலையே போக இருந்தது.. இனிமேலாவது இரண்டு பேரும் சந்தோஷமா வாழுங்க!"என்றாள் அந்த முகம் தெரியாத அந்த பெண்.

"கண்டிப்பாம்மா!இனிமே சரியா இருப்பேன்...அப்ப நா வரட்டுமா! வேலைக்கு லேட் ஆயிடுச்சு"என்றபடி அந்த மனிதர் அங்கிருந்து கிளம்பினார்.அவர் போன பின் அந்த பெண்னை இறுக்கி அணைத்த அந்த பெண்மணி,

"ரொம்ப தேங்க்ஸ் ஸ்ரீ! இந்த ஹெல்ப்ப என்னிக்கும் நா மறக்க மாட்டேன்"என்றார்.

"அக்கா...!பத்திங்களா! மறுபடியும் தேங்க்ஸா? எனக்கு உங்க தேங்க்ஸ் வேண்டாம்... இனிமேலாவது நிம்மதியா உங்க வேலைல கவனமா இருங்க..சரியா!"

"சரிடாமா!அப்படியே செய்யறேன்...வா உள்ளே போலாம்!"என்றவாறு இருவரும் உள்ளே சென்றனர்.

இந்த சில நிமிட பேச்சு வார்த்தையில் அந்த முகம் தெரியாத பெண்ணின் மேல் மரியாதை உண்டானது.இப்போதைய பரபரப்பான வாழ்க்கையில் யாரும் வேறு ஒருவரைப் பற்றி சாதரணமாக நினைப்பதே இல்லை.அப்படி இருக்கையில் அந்த பெண் சக ஊழியரின் கஷ்டத்தில் அவருக்கு உதவியது எனக்கு பெரிதாகத் தெரிந்தது.அதைப் பற்றியே யோசித்தவாறு இ.சி.ஆர் ரோட்டில் இருந்த என் வீட்டை நோக்கி என் காரை செலுத்தினேன்.அரைமணியில் என் வீட்டை அடைந்தேன்.பரந்த தோட்டத்தின் நடுவே பிரம்மாண்டமாக நின்றிருந்து என் வீடு.எப்போதும் போல் வெளி உலகின் டென்ஷனை மறந்து நிம்மதி அடைந்தது என் மனம்.

என் காரை கண்டதும் வேகமாக உள்ளிருந்து வந்தாள் என் தங்கை உதயா.என் உயிர் நண்பன் விஷ்வாவை கைபிடித்து மூன்று வயது குழந்தைக்கு தாயாகிருந்தாள் அவள்.பெரிய வீட்டு மருமகள் ஆனாலும் இன்னும் என் கண்களுக்கு ரெட்டை பின்னலோடு பாவாடை அணிந்து என்னோடு ஓடி பிடித்து விளையாடிய என் குட்டி தங்கையாவே தெரிந்தாள்.என் அருகில் வந்த அவள்,

"அண்ணா! ஏன் இவ்ளோ லேட்?டயமுக்கு சரியா சாப்பிட்டு தூங்கறது இல்லேன்னு அம்மா சொன்னாங்க...அது சரியாத்தான் இருக்கு.."என்றாள்.

"அம்மா தானே! அவங்க அப்படிதான் சொல்வாங்க... அவங்களுக்கு நான் வீட்லயே இருந்தா ரொம்ப சந்தோஷம்...ஆனா அப்படி இருந்தா கோடிக்கணக்கான பணம் போட்டு நடத்தற கம்பெனிய இழுத்து மூடிற வேண்டியதுதான்."

அதை கேட்டு அங்கே ஹாலில் அமர்ந்திருந்த விஷ்வா சிரித்தான்.வேலை தொந்தரவால் சில நாட்களாக பார்க்காத என் நண்பனை இறுக்கி அணைத்தேன்.

"என்னடா தனா!புது கம்பெனி வேலை ஜாஸ்தியா?பாக்கவே முடியலே."என்றான் அவன்.

"ஆமா ஒரு மாசமா இழுத்து இன்னிக்கி தான் முடிஞ்சது..."என்று அதைப் பற்றி விளக்கமாக விவரித்தேன்.மேல்மாடியிலிருந்து இறங்கி வந்த என் தந்தை பிரபாகரும் அதில் சேர்ந்த கொண்டார்.

எங்கள் பேச்சை கேட்டு கடுப்பான உதயா,

"அண்ணா!வீட்லேயும் ஆபிஸ் பத்திதான் பேசனுமா?வீட்லே இருக்கும் போதாவது வீட்ட பத்தி நினைங்க! பேசுங்க!"

"அது சரி!வீட்டப் பத்தி நினைக்க அவங்களுக்கு எங்க இருக்கு நேரம்...இருபத்தி நாலு மணி நேரமும் ஆபிஸ் பிஸ்னஸ்...வீட்ட விட்டு அங்கேயே தங்குங்கன்னா சந்தோஷமா அங்கேயே இருந்திடுவாங்க!"என்றபடி வந்தார் என் அன்னை வேதவதி.

அவர்கள் கோபத்தை தாங்காத நான்,

"விஷ்வா!அப்பா! இன்னும் வீட்ல இருக்கிற வரைக்கும் ஆபிஸ பத்தி ஒரு பேச்சும் பேசக் கூடாது...ஓகே?!"என்றேன்.

என் பேச்சுக்கு "சரி சரி"என ஆமோதித்தனர் அவர்கள்.

அனைவரும் சாப்பிட்டானது மேல் உதயா,"அண்ணா! அடுத்த வாரம் அத்தை மாமாக்கு அறுபதாம் கல்யாணம்.பத்திரிக்க கொடுக்கத் தான் நாங்க வந்தோம்.நீங்க எல்லாம் முதல் நாளே வந்திடனும்.சரியா?!"என்றாள்.

"ஆமாம்டா! நீங்க எல்லாம் கண்டிப்பா வரனும்.அப்பா அம்மா நூறு வாட்டி சொல்லி அனுப்பினாங்க!"என்றான் விஷ்வா.

"அதுகென்னடா!வந்து ஜாமாய்சுடுவோம்.யூ டோன்ட் வொர்ரி"என்று அவனுக்கு உறுதி அளித்தேன்.

பின்னர் ஆபிஸ் புறப்படும் வரை அவர்களோடு சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தேன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top