Uyirin ularal - episode 3

Advertisement

vishwapoomi

Writers Team
Tamil Novel Writer
உயிரின் உளறல் - அத்தியாயம் 3

வாழ்க்கை யாருக்கும் ஒரே சீராக போவதில்லை, அதிலும் அபிநேஹாவுக்கு ஒருபோதும் இல்லை. ஐந்து பிள்ளைகள் வளரும் அந்த வீட்டில் ஐந்தாவதாக வளரும் பிள்ளைக்கு அன்புக்கு பஞ்சம் ஏது. அதுவும் இத்தனை வயது வித்தியாசத்தில்.

ஒரு பிறந்தநாள் என்றால் (.அவள் அந்த வீடு வந்து சேர்ந்த நாள் ) ஒவ்வொருவரும் தனித்தனியே பரிசு கொடுத்து மகிழ்தனர். அதிலும் பாட்டி தங்கமும், வைரமும் தான் பரிசாக கொடுப்பது. படிப்பு, பேச்சு, நடனம், ஓவியம் என்று சகலத்திலும் கெட்டி அபிநேஹா.

அவள் வந்த பிறகுதான் தொழிலில் பல முன்னேற்றம் என்பது ராஜேந்திரனின் எண்ணம். எங்கு திரும்பினாலும் ஆண் பிள்ளைகளின் நடமாட்டத்தை பார்த்த கற்பகம்மாளுக்கு வீட்டில் ஒரு பெண் பிள்ளை, அதுவும் சதா துரு துருவென்று ஓடிக்கொண்டிருக்கும் ஒரு பெண் பிள்ளையை பார்த்த கண்களுக்கு ஒரு குளிர்ச்சி. விதவிதமான உடை எடுத்து, நகை சேர்த்து என்று கலர்புல்லாக இருந்தது கற்பகம்மாளுக்கு. ஆவுடையம்மாளுக்கோ சொல்லவே வேண்டாம், வேண்டாத பெண்ணாக வந்த குழந்தை அந்த பாட்டியைவிட்டு ஒரு நொடி கூட பிரியாமல் கழுத்தை கட்டிக்கொண்டு தொங்கியது. மற்ற அனைவருக்கும் அவள் செல்லம்தான் வீட்டில் இருக்கும் போது தோளில் தூக்கிக்கொண்டே சுற்றுவார்கள் மூவரும், ஆனால் ரிஷினந்தனோ எல்லாவற்றுக்கும் மேலாக இருந்தான். அவள் சிரிப்பின், அழுகையின் ஒவ்வொரு அர்த்தத்தையும் அவனிடம் கேட்டால்தான் தெரியும். அவனும் சிறுவன் என்றாலும் தன் மார்பிலே போட்டு வளர்த்தான். அவள் வளர வளர ஆவுடையம்மாள் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கு நடுவிலான நெருக்கத்தை குறைத்தார்.

" ஏண்டா சின்னவனே எப்போ பார்த்தாலும் அவளை கூட்டி கொண்டே திரியுறியே, உனக்கு அறிவு இருக்கா ? அவள் எந்நாளும் சின்ன பெண் இல்லை, அவளை தனியே விட்டுத்தானிறேன் " என்றால்

" ஆங் அவ என் அம்மு குட்டி " என்பான் அவன்.

மூத்தவர்கள் இருவரும் வளர்ந்து சம்பாதிக்க தொடங்க, அடுத்தவன் படிப்பின் முடிவில், இளையவன் பள்ளி படிப்பில் இறுதியில் இருந்த வரையில் அபிநேஹாவை ஆளாளுக்கு தாங்கினார்கள்.

அப்புறம் தான் வந்தது வினை. அந்த வீட்டை பொறுத்தமட்டிலும் பள்ளி படிப்பு அருகில் இருந்த பள்ளியில்தான், ஆனால் கல்லூரி கண்டிப்பாக வெளியூரில் ஹாஸ்டலில் தங்கித்தான் படித்தாகவேண்டும். ரிஷிநந்தனையோ அதையும் தாண்டி வெளிநாட்டில் தான் படிக்கவேண்டும் என்று அவன் அப்பா பிடிவாதமாய் நின்றார். மற்ற மூவரும் மாறி மாறி வெளியூரில் படிக்க போன போது எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை ஆனால் ரிஷினந்தன் கிளம்பியபோது அபிநேஹாவை யாராலும் அணை கட்ட முடியவில்லை.

" சின்னத்தான் போகாதே, போகாதே, டேய் ரிஷி எருமை போகாதே, நீ போனால் நான் சாப்பிடமாட்டேன், படிக்கமாட்டேன், உன்னிடம் பேச மாட்டேன் என்று ஆயிரம் மாட்டேனை அடுக்கினாள். அவளை பிடித்து நிறுத்துவதற்கும் வீட்டில் இருந்த அனைவருக்கும் முழி பிதுங்கிவிட்டது. ரிஷினந்தனுக்கோ கேட்கவே வேண்டாம், அழுதுகொண்டேதான் ஹாஸ்டலுக்கே சென்றான். இதுதான் அபிநேஹாவுக்கு ஏற்பட்ட முதல் பாதிப்பு. அழுது அழுதே இரண்டுநாள் சாப்பிடாமல் இருந்து யாரிடமும் பேசாமல் இருந்து தன்னை தனிமைபடுத்தினாள்.

அதன் பிறகு ஒருவருடத்திலே அவள் பூப்படையவும் அவளுக்கு ஆவுடையம்மாள் பல கட்டுப்பாடுகளை விதித்தார். ரிஷினந்தன் படிக்கத்தான் போயிருக்கிறான் என்பதை புரியத்தொடங்கி அதை அவள் ஏற்றுக்கொள்ள தொடங்கவும் திடீரெண்டு நன்றாக இருந்த ஆவுடையம்மாள் காலமானார்.

"பாட்டி பாட்டி " என்று கண்ணீரில் கரைந்தாள் அபிநேஹா. வீடே துக்கமயமானது. கலகலப்பாக இருந்த குடும்பம் இப்படி ஆகிவிட்டதே என்று எண்ணிய ராஜேந்திரன் மூத்த மகனுக்கு திருமணம் செய்துவைக்க முடிவுசெய்தார்.

அதிக அதிக இடைவெளியில் இந்த காலத்தில் நான்கு பிள்ளை என்பதால் ராஜேந்திரனின் குடும்பம் எல்லோரும் அறிந்த குடும்பம். அந்த குடும்பத்தில் திடீரெண்டு முளைத்த ஒரு பெண், அது யாராக இருக்கும் ? என்று ஊரெல்லாம் ஏற்கனவே ஒரு பெரிய ஆராட்சி முடிந்திருக்க, அந்த குடும்பத்தின் மூத்த மகனுக்கு பெண் தேடும் போது பழையபடி இந்த பிரச்சனையை தலைதூக்கியது.

பெண்விட்டார் அபிநேஹா இவர்களின் வளர்ப்பு பெண் என்று பின்னடைய, இல்லை அவள் அந்த வீட்டில் மகளாக வளர்க்கப்படவில்லை என்று அறிந்து அம்பிகாவின் குடும்பம் ராஜேந்திரனின் குடும்பத்துடன் திருமணம் முடிவானது.

கார்த்திகேயன், அம்பிகா திருமணம் நடந்தேறியது. அம்பிகா அந்த வீட்டின் உள்ளே வரும் போதே அபிநேஹாவை சீக்கிரம் இங்கிருந்து அனுப்பவேண்டும் என்றே நுழைந்தாள்.

அக்கா, அக்கா என்று பின்னே சுற்றிய பெண்ணை வார்த்தையாலும், செயலாலும் தினம் தினம் நோகடித்தாள். தன் கணவனிடம் பேசவே கூடாது என்று உத்தரவு வேறு போட்டாள். " என்னம்மா இதெல்லாம், அவ இந்த வீட்டு பெண் " என்ற மாமியாரிடம் " நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்துவிட்டு அது தெய்வம் என்று வேறு சொல்வீர்களா ?" என்று அம்பிகா எகிற அதிர்ந்தும் பேசாத கற்பகம்மாள் செய்வதறியாது நின்றார்.

அம்பிகாவின் செயல் எல்லைமீறவும் " சொத்தை பிரித்து தருகிறேன், தனி குடித்தனம் சென்றுவிடு " என்றார் ராஜேந்திரன் மூத்த மகனிடம்.

கார்த்திகேயன் பதில் ஏதும் கூறாமல் ஒத்துக்கொண்டான். ராஜேந்திரன் மகனிடம் வேறெதுவும் பேசவில்லை.

கார்த்திகேயன் வீட்டைவிட்டு போகும் போது ஒருமூச்சு அழுதாள் அபிநேஹா. அவளுக்கு அவன் எதற்காக செல்கிறான் என்று காரணம் தெரியாது. அப்புறம் இரண்டாவது மகன் கண்ணன் திருமணத்தை வித்யா என்ற பெண்ணுடன் முடிவு செய்யும் போதே ' தனிக்குடித்தனம் ' என்று சொல்லியே முடித்தார் ராஜேந்திரன்.
தேவையில்லாமல் இன்னொரு பெண்ணின் கையில் அபிநேஹாவை கொடுக்கவிரும்பவில்லை அவர்.

இரண்டு திருமணம் செய்து முடித்த களைப்போ ? வாழ்க்கையில் ஓட்டத்தில் ஏற்பட்ட களைப்போ ராஜேந்திரன் படுத்தவர் எழும்பவே இல்லை.

இந்த முறை அபிநேஹா அழுத்தமாகவே இருந்தாள். ஓய்ந்துபோன கற்பகம்மாளுக்கு 15 வயது அபிநேஹா தாயாக நின்றாள். அவள் அழவே இல்லை. குடும்ப தலைவர் மரணம் என்பதால் யாரும் அதை கவனிக்கவே இல்லை.

தெரியாதா பிசாசுக்கு தெரிந்த பேயே பரவாயில்லை என்பது போல மூத்த மருமகளே பரவாயில்லை என்பதுபோல வந்து சேர்ந்தாள் மூன்றாவது மருமகள் பானு. ஏற்கனவே இரண்டு மகன்கள் தனியே இருப்பதால் மூன்றாவது மகனாவது தன்னுடன் இருக்கட்டுமே என்று கற்பகம்மாள் நினைத்தது சீக்கிரமே மூன்றாவது மகனுக்கு திருமணம் முடித்துவைத்து அவர் வளர்த்த பெண்ணின் வாழ்க்கையே கூறு போட செய்தது.

பானு தன் பெண்ணிடம் பாசம் காட்டி அவளை ஏதோ செய்கிறாள் என்று கற்பகம்மாள் கண்டுகொள்ளும் போது பள்ளி இறுதிவகுப்பில் தோல்வியடையும் நிலையில் இருந்தாள் அபிநேஹா.

பானு அபிநேஹாவிடம் மிகவும் பாசமாக நடந்துகொண்டாள். ஆனால் அபிநேஹாதான் எல்லாவற்றிலும் தலைகீழாக மாறிக்கொண்டிருந்தாள். படிப்பு பலநேரம் தோல்வியை தழுவியது, உடுத்தும் உடை மோசமாக மாறியது. சற்றும் பொருந்தாத கலர், அளவு என்று.
கண்ணில் திடீரெண்டு பெரிய சைஸ் கண்ணாடி, கொண்டை என்று பெண் சிரிக்க மறந்து போனாள். சதா பானு அக்கா பானு அக்கா என்று அவளுக்கு பிறந்த குழந்தைக்கு ஆயாவாக மாறிய போதுதான், கணவனின் பிரிவில் ஓய்ந்து நடமாட்டத்தை குறைத்திருந்த கற்பகம்மாள் விழித்துகொண்டார்.

" அம்மு உனக்கு இன்னைக்கு பொது தேர்வு தானே ? நீ பரீட்சைக்கு போகாமல் இங்கே என்ன செய்கிறாய் ? " என்று குழந்தையும் கையுமாக இருந்த அபிநேஹாவை கற்பகம் கேட்க

" அத்தை குழந்தைக்கு காய்ச்சல் " என்றாள் அவள்.

" அதற்கு உனக்கு என்ன ? இவனை பெற்ற தாய் எங்கே ? நீ குழந்தையை அன்னமாவிடம் கொடுத்துவிட்டு கிளம்பு, மறுத்து எதுவும் பேசினால் வெளிநாட்டில் படிக்கும் உன் சின்னத்தானிடம் நான் இதுவரைக்கும் சொல்லாததை எல்லாம் சொல்ல வேண்டியிருக்கும் ? " என்றார் மிரட்டலாக.

ஒருவழியாக விளிம்பில் தேர்ச்சி பெற்றாள் அபிநேஹா. அப்புறம் படிப்பு வேண்டாம் என்று பானு முடிவெடுத்தாள். முடிவு எடுப்பது பானுவானாலும் அதை நின்று சாதிப்பது அபிநேஹாதான். பானு நன்றாகவே மூளை சலவை செய்யும் வித்தையை கற்றிருந்தாள்.

பானு எண்ணத்தில் மண்ணை போடும் வகையில் வந்து சேர்ந்தான் ரிஷிநந்தன்.

"எங்கள் அம்மு, எங்கள் அம்மு என்று உருகிய என் கணவரையே மறந்தும் அவள் பக்கம் திரும்பாமல் செய்துவிட்டேன், வருபவன் ஒரு பொடியன், அவனை என்னால் சமாளிக்க முடியாதா என்ன ? எங்கே தேடினாலும் கிடைப்பாளா இப்படி ஒரு வேலைகாரி அதுவும் சம்பளம் எதுவும் கொடுக்காமல். இப்படியே இன்னும் ஒரு ஆறேழு வருடத்தை ஓட்டிவிட்டு அப்புறம் எவனாவது ஒரு நாடோடியை பார்த்து கட்டிவைத்துவிடவேண்டியதுதான் " என்று பானு பக்காவாக பிளான் போட்டுவைத்திருந்தாள்.

ஆனால் ரிஷினந்தன் போகும் போது இல்லாத அளவுக்கு ஆளே மாறி போயிருந்தான். ஏற்கனவே நெடியவனானவன் இப்போது அதற்கு ஏற்ப உடலமைப்போடு ஆளே மாறிப்போயிருந்தான். ஏதோ ஒரு சில புகைப்படத்தில் அவனை பார்த்திருந்த பானு இப்போது பார்ப்போரை பத்து நேரமாவது திரும்பிப்பார்க்க வைக்கும் அளவுக்கு ஆண்மையோடு இருந்தவனை பார்த்து அவள் மனம் வேறு கணக்கு போட்டது.

" வாங்க கொழுந்தனாரே, நான் தான் உங்கள் மூன்றாவது அண்ணி, போனில் பேசியிருக்கிறோம், நேரில் இப்போதான் பார்க்க முடிந்தது. இன்னைக்கு என் கையாள உங்களுக்கு சமைத்துபோட்டு விருந்து கொடுத்து அசத்த போகிறேன், ரெடியா இருங்க " என்றவளை பார்த்து

" என் வீட்டில் எனக்கே விருந்துசாப்பாடா ? சாப்பாடு எங்கே போய்விடும் அண்ணி அதை இன்னொருநாள் பார்த்துக்கொள்வோம். ஆமாம் நான் வந்து அரைமணி நேரம் ஆகியும் அம்முவை எங்கே காணவில்லை அம்மா ? என்று கேட்டான்.

அவன் "என் வீடு " என்று சொன்னதில் இறுகி நின்றிருந்த பானு பதில் சொல்ல வாயை திறக்கும் முன் கற்பகம்மாள் பேசினார்.

"பானு இங்கே இருக்கிறாள் அல்லவா, அதனால் அம்மு குழந்தையை கவனித்து கொண்டு இவள் அறையில் ஏதாவது வேலை செய்துக்கொண்டிருப்பாள் " என்றார் அவர் அமைதியாக.

" ஏன் பாப்பாவை பார்க்க வேறு ஆள் வைத்தால் என்ன ? சின்ன பெண் இவளுக்கு என்ன தெரியும் ? " என்று ரிஷிநந்தன் கேட்க

" யாரு சின்ன பெண் அவளா? ஒரு பத்து கை குழந்தையை அவளிடம் கொடுத்துப்பாரு யாருடைய உதவியும் இல்லாமல் அதுகளை வளர்த்து ஆளாக்கிவிடுவாள். அந்த அளவுக்கு உன் அண்ணி அவளுக்கு பயிற்சி கொடுத்து வைத்தித்திருக்கிறாள் " என்றார் கற்பகம்மாள் விளையாட்டாக பேசுவதுபோல்.

" கிழவிக்கு குசும்பை பாரு, எதையும் சொல்லிட்டுப்போகட்டும் இவன் என்ன செய்துவிடுவான் " என்று எண்ணி நின்றிருந்தாள் பானு.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஒரு வெடி வெடித்தான் ரிஷிநந்தன்.
" அம்மூ " என்று.

அவன் போட்ட சத்தத்தில் உள்ளே தூங்கிக்கொண்டிருந்த குழந்தை வீறிட்டு அழுதது. பதறிய அபிநேஹா கையில் குழந்தையுடன் வெளியே வந்தாள்.

" சின்னத்தான் வந்துட்டியா ? எப்போ வந்த ? ஆளே மாறிட்ட ? ஆமா ஏன் இப்படி சத்தம் போடுற ? குழந்தை பயந்துட்டு பார் " என்றாள் அவனை பார்த்த சந்தோஷத்தில்.

கண்ணில் வேதனையுடனும், ஆத்திரத்துடனும் அவள் இருந்த கோலத்தையும் பார்த்தவன். " வாயை மூடு " என்றான் அவன் ஆத்திரம் கொப்பளிக்க,

பயத்தில் உடல் நடுங்க நின்ற அபிநேஹாவை பார்த்து " பானு குழந்தையை வாங்கம்மா அவள் கீழே போட்டுவிடப்போகிறாள் " என்றார் கற்பகம்மாள்.

" என்னத்தை அவர்தான் கத்துகிறார் என்றால் நீங்களும் புரியாமல் பேசுகிறீர்கள், ஒரு வயதுவந்த பெண்ணை எப்படி அவர் திட்டலாம், அபி நீ குழந்தையை உள்ளே கொண்டுபோய் தூங்கவை போம்மா " என்றாள் பானு.

அப்புறம் உன் தலையெழுத்து என்று அமைதியானார் கற்பகம்மாள்.

" அம்மூ " என்று மறுபடி உறுமினான் இவன். அபி கையில் இருந்த குழந்தையை பானுவிடம் கொடுத்துவிட்டு தன் அறையை நோக்கி ஓடினாள்.

" ஏம்மா நான் திரும்பி வரவே மாட்டேன் என்றா அவளை இந்த கோலத்தில் வைத்திருக்கிறிங்க ? அண்ணா நீ வீட்டிலேயே இல்லையா ?" என்றவன் தன் அறையை நோக்கி சென்றான்.

பானு வெடுக்கென்று குழந்தையுடன் தன் அறைக்கு சென்றவள் பின்தொடர்ந்து போன கணவனிடம் பேயாட்டம் போட்டாள்.

" நீ என்னிடம் ஆடி பயனில்லை, நான் ஆரம்பத்திலே சொன்னேன். அவளை உன் இஷ்டத்திற்கு வளைக்காதே என்று, நீ என்னிடம் சமாளித்தது போல அவனிடம் எதுவும் செய்யமுடியாது. அவளுக்கு ஏதாவது என்றாள் அப்புறம் அவன் மனுஷனாக இருக்க மாட்டான்." என்றான் அவள் கணவன்.

" என்ன? என்ன ? என்னிடமேவா நான் யாருன்னு இந்த வீட்டில் உள்ள எல்லோருமே பார்க்கத்தான் போறீங்க, குறிப்பா உங்கள் தம்பி. ஆனாலும் உங்க அம்மாவுக்கு இவ்வளவு ஆகாது, உங்கள் தம்பி குணம் தெரிந்தே என்னமா போட்டுக்கொடுத்தார்கள், இருக்கட்டும் அவர்களுக்கும் சேர்த்து செய்கிறேன் " என்று கருவினாள் பானு.

அங்கு ரிஷிநந்தன் வெறிபிடித்த வேங்கை போல அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருந்தான். " எப்படி இருந்த பெண்ணை என்ன செய்து வைத்திருக்கிறார்கள் " என்று தனக்குள் பேசியபடி நடந்துகொண்டிருந்தவன் நின்ற இடத்தில் அப்படியே நின்றான், உடனே அவள் அறையை நோக்கி சென்றான்.

கதவை பெயருக்கு தட்டியவன் உள்ளே சென்றான் " அம்மு உன் 12th மார்க் ஷீட்டை எடு " என்றான். படுத்திருந்தவள் சட்டென்று எழுந்தாள்.

" அது வந்து, அது வந்து சின்னத்தான் நீ என்னை திட்ட மாட்டேன்னு சொல்லு, அப்போதான் காட்டுவேன் " என்றாள்.

" அப்படின்னா நான் உன்னிடம் மார்க் என்னன்னு கேட்டபோது நீ உண்மையை சொல்லல அப்படித்தானே " என்றான்.

" வந்து எனக்கு உன்னிடம் சொல்ல பயமாக இருந்தது, என்ன செய்ய என்று புலம்பினேனா பானு அக்காதான் அப்படி சொல்ல சொன்னார்கள் " என்றாள் திணறியபடி.

" பொய் " என்றான் முகத்தில் கசப்பு தெரிந்தது.

" இல்லத்தான், நான் பயந்துபோய் அப்படி சொல்லிட்டேன், என்னை மன்னிச்சிடு அத்தான் " என்றாள் அழுதபடி.

" மார்க்கை காட்டு " என்றான் அவன் இறுகிய குரலில்.

நடுங்கியபடி மார்க் ஷீட்டை எடுத்து காட்டினாள். இன்னைக்கு அடி நிச்சயம் என்று நினைத்தபடி.

அதில் இருந்த மார்க்கை பார்த்தவன் அதிர்ச்சியில் உறைந்து நின்றான். எப்போதும் வகுப்பில் முதல் இடத்தை பிடிக்கும் பெண்ணின் மார்க்கா இது. அவள் 11th தில் மூன்றாவது குரூப்தான் எடுப்பேன் என்று சொன்னபோது இவனுக்கு பிடிக்காவிட்டாலும் அவன் மறுக்கவில்லை. காரணம் அப்பாவுடனே இருந்து இருந்து அவளுக்கு ஆர்வம் கூடி போன பங்குச்சந்தையை பற்றிய அறிவுதான். ஆனால் அவள் இன்று எடுத்துவைத்திருக்கும் மார்க் ஒரு சாதாரண கல்லூரியில் கூட இடம் கிடைக்காத மார்க்.

" அம்மு என்னடா இது ? இந்த மார்க்கிற்கு எந்த காலேஜில் உனக்கு இடம் கிடைக்கும் ?" என்றான் வருத்தத்தில்.

" நான் தான் மேலே படிக்கவே போவதில்லையே ? அப்புறம் என்ன ? " என்றாள் அவன்.

இவனுக்கு உள்ளே அதிர்ந்த போதும் " படிக்காம காலமெல்லாம் ஆயாவாக போறியா?" என்றான் கோபத்தை இழுத்து பிடித்தபடி.

" நான் படித்து என்ன பண்ண போறேன். ஏற்கனவே எல்லோரும் என்னை விட்டு போயிட்டாங்க, நான் படிக்க போறேன் என்று உள்ளவர்களையும் தொலைக்க வேண்டுமா ?" என்றாள் அவள் பிடிவாதமாக.

அவளின் பிடிவாதம் அவனை அதிர செய்தது. இது என்ன பேச்சு ? வித்தியாசமாக சிந்திக்கிறாளே ? இவளுக்கு என்ன ஆச்சு ? என்று நினைத்தவன் " இப்படி உன் பானு அக்கா சொன்னார்களா ? பார் அம்மு நீ நான் சொல்வதை போல மேலே படிக்கல உண்மையிலேயே உன் சின்ன அத்தானை நிரந்தரமா தொலைச்சிடுவ, உன் பிடிவாதம் எனக்கு தெரியும் ஆனால் இந்த விஷயத்தில் அது செல்லுபடி ஆகாது, புரியுதா ? " என்றான் அமைதியாக.

" எனக்கு காலேஜில் சீட் கிடைக்காதுன்னு சொன்ன " என்றாள்.

அதை அவளின் சம்மதமாக எடுத்துக்கொண்டவன் " உனக்கு சீட் கிடைக்காது என்றால் விட்டுவிடுவேன்னா ?" என்றவன் அவள் அருகில் சென்று அவளின் நெற்றியில் முத்தமிட்டான். அவனிடம் இருந்து ஆயிரம் முத்தம் வாங்கியிருப்பாள், ஆனால் அவள் பெரிய பெண்ணான பிறகு இது அவன் அவளுக்கு கொடுக்கும் முதல் முத்தம்.

" இது என்ன கோலம் அம்மு, எனக்கு தெரிந்து உன் கண்ணில் எந்த பிரச்சனையும் இல்லை, அப்புறம் உன் வயசுக்கு பொருந்தாத கொண்டையும், தொழ தொழ உடையும் " என்று கேட்டான்.

" அதுவந்து அத்தான் மாமாவிற்கு பிறகு அத்தை ரொம்பவே கலங்கி போனார்கள், அப்புறம் என்னை பார்க்க யாரும் இல்லை, வீட்டில் நிறைய ஆண் வேலையாட்கள் வேறு இருக்கிறார்கள் அதனால் இப்படி ட்ரெஸ் பண்ணினா சேப் என்று அக்காதான் " என்று பேசிக்கொண்டே வந்தவள் தான் உண்மையை உளறிக்கொண்டிருக்கிறோம் என்று நிறுத்தினாள்.

ரிஷிநந்தனின் ஆத்திரத்தை சொல்ல வார்த்தையே இல்லை, ஆனாலும் அமைதியாக " சரி நான் வந்துவிட்டேன் அல்லவா, இனி உன் வேஷத்தை கலைக்கலாம் இல்லையா ?" என்று கேட்டான்.

அவள் மறுப்பாக தலையை ஆட்டினாள் " ஏன் " என்று கேட்டான்.

" கோபப்படாதே நீயும் ஆண்தானே " என்றாள்.

கண்டிப்பாக இவளுக்கு ஏதோ பிரச்சனையை இருக்கு என்று நினைத்தவன்
" இதையும் உன் அக்காதான் சொன்னார்களா ?" என்றான் சிரித்துக்கொண்டே.

அவன் சிரிக்கிறான் என்று அவளும் " ஆமாம் " என்றாள்.

ஆக எரிகிறதை பிடிங்கினால்தான் கொதித்துக்கொண்டிருக்கும் இவள் அமருவாள் என்று நினைத்து திரும்பியவன்
மறுபடியும் அவள் புறம் திரும்பி
" ஸாரி அம்மு சற்று நேரத்திற்கு முன்பு நீ பெரிய பொண்ணு, நான் ஒரு ஆண் என்பதையெல்லாம் மறந்து, என் அம்முதானே என்று நினைத்து முத்தம் தந்துவிட்டேன். நீ என்னையும் வேலைக்காரர்களை ஒரே தராசில் வைத்திருப்பது எனக்கு தெரியாது அல்லவா ? ஸாரிம்மா " என்று கூறிவிட்டு சென்றுவிட்டான்.

அப்போதுதான் அபிநேஹா தான் தவறான பாதையில் வழிநடத்தபட்டிருக்கிறோம் என்பதை லேசாக உணர்ந்தாள்.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஷ்வபூமி டியர்
 
Last edited:

Saroja

Well-Known Member
அடிப்பாவி பானு
குரங்காட்டம் பிள்ளய
மாத்திட்டாளே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top