UUU - 45

Rudraprarthana

Well-Known Member
10392

அன்று ஊட்டியில் எழில் குறுக்கே வந்து தன் லட்சியத்தை அடைய விடாமல் தடுத்ததாக ப்ரீத்தி கூறிய குற்றசாட்டை சற்றும் எதிர்பாராது திகைத்த எழிலன் அன்று தான் எதார்த்தமாக செய்த செயல் இத்தகைய விளைவையா ஏற்படுத்தியது என்று அதிர்ச்சியில் அசைவற்று நிற்க...,

அவன் முன் கையை அசைத்து சொடுக்கிட்ட ப்ரீத்தி,"என்ன மாமா ஷாக் ஆகிட்டீங்களா..??" என்று ஒற்றை புருவம் ஏற்றி குறும்புடன் கேட்க,

அவள் குரலில் இருந்த குறும்பில் எழில் ஆசுவாசம் கொண்டான் என்றால் இதை கண்ட அலருக்கு தான் பற்றி கொண்டு வந்தது. பின்னே எத்துனை தீவிரமாக அவளின் வாய்மொழி ஒப்புதலுக்காக அவள் காத்திருக்க நேரம் காலம் இல்லாமல் விளையாடுபவளை கண்டு சீற்றத்துடன் அவளை நோக்கி அலர் நகர அதற்குள் எழில் அவள் கரத்தை இழுத்து பிடித்திருந்தான்.

அதை கண்டவளோ 'விடு மாமா, உனக்காக பொறுமையா இருந்தா இவ..' என்று ப்ரீத்தியை முறைத்து அவளை செல்ல முனைய,

எழிலோ இன்னும் அழுத்தமாக அவளை நகர விடாமல் பிடித்து நிறுத்த ,

"டேய் இவ இப்படியே பேசிட்டு இருந்தா என்கிட்டே அடி வாங்க போறது உறுதி" என்றவள் ப்ரீத்தியின் புறம் திரும்பி, "இதோ பார் உன்னோட நக்கல் நையாண்டிக்கு எல்லாம் எங்களுக்கு நேரமில்லை.., ஒழுங்க நடந்ததை சொல்றதா இருந்தா சொல்லு இல்லை இப்படியே ஏகத்தாளமா தான் பேசுவேன்னு சொன்னா உன்னை எங்க எப்படி வச்சி விசாரிக்கணும்ன்னு எனக்கு தெரியும்" என்று எச்சரித்தவாறே அவளை நோக்கி முன்னேற,

அலரை இழுத்து தன் புறம் நிறுத்தியவன், "ப்ரீத்தி இது விளையாடறதுக்கான நேரம் இல்லை எங்க பொறுமையை சோதிக்காம விஷயத்தை சொல்லு" என்றான் எழிலும் எரிச்சலான குரலில்.

"சரி சரி மாமா டென்ஷன் ஆகாதீங்க சொல்றேன்..."

"நிஜமா சொல்லனும்ன்னா அன்னைக்கு ஊட்டியில எங்க திட்டத்துல குறுக்க வந்து நீங்க எனக்கு உதவி தான் பண்ணி இருக்கீங்க" என்றிட,

மூவரின் பார்வையும் 'எப்படி' என்பதாக அவள் மீது படிய,

"ஆமா மாமா அன்னைக்கு நீங்க குறுக்க வந்தது கூட நல்லதுக்கு தான், இல்லைன்னா ஒருவேளை அன்னைக்கு நான் கீர்த்தியா அங்க போயிருந்தா அவன் கிட்ட மாட்டி இருக்கவும் வாய்ப்பு இருந்திருக்கும்" என்றிட இப்போது மூவரின் பார்வையும் புரியாமல் அவள் மீது...

"அது தான் நிஜம்..!! எனக்கு அவன் மேல இருக்க வெறுப்பை பத்தியும் கீர்த்திக்கு அவன் மேல இருக்க பாசத்தை பத்தியும் உங்களுக்கே தெரியும்.., அன்னைக்கு நிலைமைக்கு கீர்த்திக்கும் அவனுக்குமான உறவு ரொம்ப சுமூகமா இருந்தது ஆனா நான் கீர்த்தியா அங்க போனப்போ அப்படி இல்லை" என்றவள் தான் கீர்த்தியாக மாறிய நாளை விவரிக்க தொடங்கினாள்.

பிரகாசத்திர்க்காக சரணை தன் வாழ்வில் இருந்து கீர்த்தி தூக்கி எறிந்த நாளில் இருந்து மேலும் இரண்டரை மாதங்கள் கழிந்திருந்த நேரம் அது..!!

ஆழிப்பேரலையாய் அன்றைய தினம் தன் வாழ்வை சுருட்டி செல்லும் அவள் கனவிலும் எண்ணி இரா விளைவுகளை ஏற்படுத்தி சின்னாபின்னமாக்கி இருப்பதை கண்டு முழுதாக உடைந்து போயிருந்தாள் கீர்த்தி, ஆனால் காலம் கடந்த ஞானோதயம் அது..!! ஆம் தந்தைக்காக உயிரானவனை துச்சமாக தூக்கி எறிந்தவளுக்கு அவனை இழந்த பின்னரே அருமை புரிந்தது. முதலில் தன் காதலுக்காக எந்த எல்லைக்கும் செல்ல கூடிய தெய்வத்திற்கு நிகராக அவள் பூஜிக்கும் தந்தையை புரிந்து கொள்ளாமல் பணத்தை முன்னிறுத்தி தரைக்குறைவான வார்த்தைகளால் பேசியதில் அவரை குற்றுயிர் ஆக்கியதில் முற்று முழுதாக அவனை துவேஷித்திருந்தாலும் கோபம் தணிந்த பின் எங்கு தவறு நடந்தது என்று யோசித்து பார்க்காமல் இருக்க அவள் ஒன்றும் முட்டாள் இல்லையே..!!

அதிலும் சில வாரங்கள் பிரகாசத்தை மருத்துவமனையில் அனுமதித்திருந்ததில் சரண் மீது ஆவேசம் குறையாமல் இருந்தவள் நாட்கள் செல்ல செல்ல அன்றைய தினத்தை தொடர்ந்து மனதினுள் அசை போட தொடங்கி இருந்தாள் அதற்கும் காரணம் சரணே..!! ஆம் இதுநாள் வரை தன்னிடம் அதிர்ந்து கூட பேசி இராத கனிவே வடிவான சரணின் அன்றிய ஆவேச முகம் அவளுக்கு அதிர்ச்சி தான் என்றாலும் அது அவனது இயல்பு இல்லையே அவனை அவ்வாறு நடக்க தூண்டியது எது என்று யோசிக்க தொடங்கி இருந்தாள்.

சுயஅலசலில் ஈடுபட்ட போது தான் அவன் மட்டுமல்ல அன்று தானுமே மதிகெட்டு போய் அவனை எத்தகைய கடுமையான வார்த்தைகளால் பேசினோம் என்பது புரிபட தொடங்கியது.

அதிலும் அவன் தந்தையை கொல்ல முயலும் அளவிற்கு என்ன நடந்திருக்ககூடும் என்று அவளால் யூகிக்க முடியவில்லையே தவிர அன்று பேச்சினூடே அவன் உபயோகித்த சில வார்த்தைகளுக்கு அர்த்தம் பிடிபடாமல் போனாலும் அவன் கூறியதை வைத்து இருவருக்குமிடையில் எதோ ஒரு புரிதலின்மை இருப்பதை உணர்ந்தவளுக்கு எங்கே எவ்வாறு தவறு நடந்தது என்று புரிபடவில்லை.

நிச்சயம் இதில் தந்தையை சந்தேகிக்க முடியாது ஏனெனில் தங்களின் திருமணத்தை எவ்வாறெல்லாம் முன் எடுத்திருந்தார் என்பதை அறிந்தவள் அல்லவா..!! அப்போது வேறு யார் தங்கள் இருவருக்கிடையில் இடைவெளியை தோற்றுவித்தது என்று பல மணி நேரம் யோசித்தவளுக்கு அவனுடனான நொடிகள் நெஞ்சில் எழுந்து மனதை அழுத்த இனியும் தாமதித்தால் சரணை இழந்துவிட கூடிய எண்ணமே அவளை அரித்து கொன்றுவிட கூடும் என்று பரிதவித்து போனவளுக்கு அப்போதே அந்நொடியே இருவரின் மனஸ்தாபங்களை நீக்கி அவனை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்ற பேராவல் எழ அவனை தொடர்பு கொண்டாள்.

அன்று சென்னையில் இருந்து அழைத்து வந்த போது அவளுக்கே தெரியாமல் அவள் கைபேசியை எடுத்திருந்த பிரகாசம் கீர்த்தியின் கைபேசி எண்ணையும் அவளுக்கே தெரியாமல் மாற்றி திரும்ப அவளரையில் வைத்திருக்க அதை எடுத்து நாள் முழுக்க அவனுக்கு கீர்த்தி முயற்சிக்க மறுபுறம் அவளது ஒற்றை அழைப்பு கூட ஏற்கப்படவில்லை.

அதற்கும் காரணம் பிரகாசம் தான்..!!அன்று ஆவேசத்தில் வந்த சரண் அவனது கைபேசியை தவறவிட்டிருக்க பிரகாசம் அந்நேரத்திலும் அதை மறக்காமல் எடுத்து வைத்து கொண்டார். இப்போது சரணின் கைபேசியும் கீர்த்தியின் பழைய சிம்மும் அவர் வசம். கீர்த்திக்கு முன்னமே இருவரின் உணர்வுகளுடன் விளையாடி அவர்களை பிரித்தது பிரகாசம் தான் என்பதை அறிந்த சரண் கீர்த்திக்கு அழைக்க அந்த எண்ணின் அழைப்பை ஏற்றது என்னவோ பிரகாசம் தான்..!!

இதை அறியாத கீர்த்தி பல முறை தொடர்பு கொண்டு அவன் எடுக்காததால் தன் மீது அவன் கொண்டிருக்கும் கோபத்தை நன்கு உணர்ந்தவள் உடனே அவனை தேடி செல்வது என்று முடிவெடுத்து தந்தையிடம் தான் சென்று நின்றாள். சரண் வீட்டை விட்டு சென்ற பின்பும் தன் நடிப்பை மகளிடம் தொடர்ந்து கொண்டு தான் இருந்தார் பிரகாசம் ஆனால் கடந்த சில நாட்களாகவே பல நேர உணவை மறுத்து உயிர்ப்பற்று இருக்கும் மகளை கண்டவருக்கு அவள் எங்கு வந்து நிற்ப்பாள் என்பது புரிபட அதன் பின் அமைதியாகி போனார். ஆனால் அதற்குள் சரனை ஊரை விட்டு மட்டுமல்ல நாட்டை விட்டே சத்தமே இன்றி வெளியேற்றி இருந்தார்.

உடல் இளைத்து ஒட்டிய கன்னங்களுடன் அழுது வீங்கிய விழிகளில் பெரும் களைப்புடன் பிரகாசத்தின் மடியில் தலை வைத்து படுத்த கீர்த்தி தழுதழுத்த குரலில், "அப்... அப்பா, மன்னிச்சிடுங்கப்பா நீங்க எவ்ளோ கனவோட இருந்தீங்க ஆனா மாமா அப்படி நடந்துப்பாங்கன்னு நான் எதிர்பார்க்கலை, அவர் அப்படி நடந்துக்க கூடியவர் இல்லை" என்றவள் தயங்கியவாறே, "எனக்கு உங்களை எவ்ளோ தெரியுமோ அதே அளவு மாமாவையும் தெரியும், ஏதோ தப்பு நடந்திருக்குப்பா அவர் கிட்ட பேசினா மட்டும் தான் தெளிவு கிடைக்கும்" என்றவளின் கண்ணீர் அவரை நனைத்தது.

மகளின் தலையை ஆதூரமாக வருடிய பிரகாசம் அவளை பேசவிட்டு கேட்டுகொண்டிருக்க தொடர்ந்த கீர்த்தி, "நான் இப்படி சொல்றேன்னு நீங்க கோவப்படாதிங்க..! என்று பிரகாசத்தின் முகத்தை கண்டவளுக்கு அன்று அமைச்சர் முன்னிலையில் தந்தையை அடித்து, உதைத்து அவமானபடுத்தியவனுக்காக எவ்வாறு பேசுவது என்ற தயக்கத்துடன் தொடர்ந்தவள், "எனக்கு.. என.. எனக்கு மாமா இல்லாம வாழ்க்கை இல்லப்பா அன்னைக்கு கோபப்பட்டு பேசிட்டேனே தவிர நான் ஏதோ தப்பு பண்ணிட்ட மாதிரியே தோணுது நிச்சயமா மாமா... என்றவளின் நெஞ்சம் கனத்து போக, ப்ளீஸ்பா என்னால அவரை மறக்க முடியலை..., ஒரே ஒரு சான்ஸ் கொடுங்க அவர் கிட்ட பேசி புரியவைக்கிறேன், ப்ளீஸ்பா உங்களை அடிச்சதுக்கு..." என்ற மகளை இடையிட்டவர்,

"என்னடா பேசுற யார் யார்கிட்ட மன்னிப்பு கேட்கிறது என்று துளிர்த்த கண்ணீரை துடைக்காமல் மகளை பார்த்தவர் நான் எதுவும் நினைக்கலை குட்டிம்மா, இப்பவாவது உனக்கு மாப்பிள்ளை நினைப்பு வந்ததேன்னு எனக்கு சந்தோசம் தான். பணமெல்லாம் கொண்டு வந்து குடுத்து யார் பேச்சையோ கேட்டுட்டு அவங்க அப்பா தவறின சோகத்துல எதையோ மாப்பிள்ளை தப்பா புரிஞ்சி இருக்காருன்னு எனக்கும் தெரியும். அதான் இத்தனை நாள் நீயே கோபத்துல இருந்தாலும் நான் எப்படி விடமுடியும்ன்னு கிட்டத்தட்ட நாலு முறை மாப்பிள்ளையை பார்க்க வேண்டி சென்னைக்கு போயி வந்தேன் ஆனா அவர் என்னை பார்க்கவே முடியாதுன்னு திருப்பி அனுப்பிடாரு..., என்று கூறும்போதே கீர்த்தியின் பார்வை வியப்புடன் அவர் மீது படிய,

"உன் கோபம் குறையட்டும்ன்னு தான் காத்திருந்தேன் குட்டிமா இப்போ உன்னை பார்த்தாவது அவர் மனசு இறங்குறாரான்னு பார்க்கலாம்" என்று கூற கீர்த்தியின் விழிகள் ஆனந்தத்தில் நிறைந்து போக அடுத்த சில நிமிடங்களில் அவளுடன் சரனை தேடி புறப்பட்டு இருந்தார்.

ஆனால் அவர்கள் புறப்பட்ட அடுத்த அரை மணி நேரத்தில் அவசர அழைப்பு வர அதை தவிர்க்க முடியாதவர் சரண் வெளிநாட்டிற்கு பறந்து விட்டிருக்கும் நிலையில் ஆளில்லாத வீட்டை பார்த்து வரப்போகும் மகளோடு தான் செல்வதும் செல்லாமல் இருப்பதும் ஒன்று தான் என்பதால் அங்கேயே இறங்கி கொண்டவர் சரவணனுடன் கீர்த்தியை தனியாக சென்னைக்கு அனுப்பி வைத்திருந்தார்.

*

சௌமியும் ப்ரீத்தியும் தங்கள் பேராசிரியரை பார்த்து விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த போது தான் ப்ரீத்திக்கு சரவணின் அவசர அழைப்பு வந்திருந்தது. பிரகாசம் இன்றி கீர்த்தி தனித்து வருவதை கூறியவர் இதை விட நல்ல சந்தர்ப்பம் அமையாது என்பதையும் கீர்த்தியின் மனமாற்றத்தையும் காரில் வரும்போதான தந்தை மகளின் சம்பாஷனையையும் சுருக்கமாக விளக்கிட கேட்டுகொண்டிருந்த ப்ரீத்தியின் முகம் பிரகாசத்தை வஞ்சம் தீர்க்க போவதை எண்ணி மகிழ்ச்சியில் விகிசித்து போனது.

அதே மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு சென்றவள் இதுநாள் வரை வசுமதியிடம் எதையும் பகிராதிருந்தாலும் இப்போது அவரை அழைத்து தன் திட்டத்தை விளக்க பதறி போனார் வசுமதி. மகளின் கரங்களை பிடித்து கொண்டு, "வேண்டாம்மா, அவன் கிட்ட போறேன்னு சொல்றதும் நெருப்புல இறங்குறதும் ஒன்னு நம்மளை எரிச்சிடும்ன்னு தெரிஞ்சும் தயவு செஞ்சி இந்த விஷபரிட்சை வேண்டாம் ப்ரீத்தி, இதுக்கா நான் கஷ்டபட்டேன் என்று மேலும் பலவாறாக அவள் முடிவை மாற்றும் விதத்தில் மகளிடம் கெஞ்சி கதறியவரை சிறு கை அசைவில் தள்ளி நிறுத்தியவள் எதற்கும் செவி சாய்த்தாள் இல்லை. அவரிடம் தான் இல்லாத போது எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ன செய்யவேண்டும் என்பதை விலக்கியவள் அடுத்து சில பொருட்களை பையில் எடுத்து வைத்து கொண்டிருந்தாள் சரவணன் மூலமாக அங்கு எடுத்து செல்வதற்கு.

பின் கதவடைத்து கொண்டு தன் அறையில் அமர்ந்தவள் அடுத்து நிகழ்த்த வேண்டியவைகளை தூரிதமாக திட்டமிட தொடங்கினாள். பின் அது குறித்த செய்தியை சரவணனுக்கு அனுப்பி வைத்து விட்டு கீர்த்தியை கடத்த வேண்டிய இடத்தில் சௌமியாவுடன் காத்திருக்க தொடங்கினாள்.

அது சென்னை புறநகர் பகுதியில் அமைந்து இருக்க கூடிய காபிடேரியா..!! வழிநெடுக கீர்த்தியிடம் அவ்வப்போது பேச்சு கொடுத்து கொண்டு வந்த சரவணன் வாகனத்தை நிறுத்துவதை கண்டு "எதுக்கு அங்கிள் இங்க நிறுத்துனீங்க" என்று அழுது சிவந்த விழிகளுடன் காணப்பட்ட கீர்த்தி கேட்கவும் ,

"பாப்பா கிளம்பினதுல இருந்து நீ அழுத்துட்டே வர வீட்டுலயும் ஒன்னும் சாப்பிடலைன்னு ஐயா சொல்லிட்டு வந்ததை கேட்டேன் அதான் உனக்கு குடிக்க ஏதாவது வாங்கிட்டு வரலாம்ன்னு நிறுத்தினேன்" என்று கூற,

"அதெல்லாம் வேண்டாம் அங்கிள் எனக்கு மாமாவை பார்க்கணும் முடிஞ்சவரை அவர்கிட்ட என்னை சீக்கிரம் கூட்டிட்டு போங்க ப்ளீஸ்" என்று அழுகையினூடே கூற,

"ஏன்ம்மா அங்க தம்பியை பார்த்து பேச கூட உனக்கு தெம்பு வேண்டாமா..?? பச்ச தண்ணி பல்லுல படாம அவர்கிட்ட போன வேளை மயங்கி விழுந்து அவரை பயமுறுத்த போறியா..??? என்று கேட்க அவர் கூறுவதும் சரி என பட.., "சரி கொஞ்சம் சீக்கிரம் வாங்கிட்டு வாங்க" என்றதும் உள்ளே சென்ற சரவணன் அங்கு ஏற்கனவே மயக்க மருந்தை கலந்து வைத்திருந்த பானத்தை ப்ரீத்தியிடம் இருந்து பெற்று கொண்டு வந்தவர் கீர்த்தியிடம் கொடுக்க மனம் முழுக்க சரனை சந்தித்து அவனிடம் மன்னிப்பு கேட்டு சேர்வதிலேயே உழன்று கொண்டிருந்தவள் அவர் கொடுத்ததை என்னவென்று கூட ஆராயாமல் அருந்தி இருந்தாள்.

அடுத்த பதினைந்து நிமிடங்களில் அவள் மயங்கவும் கதவை திறந்து கொண்டு ப்ரீத்தி, சௌமியுடன் ஏறி அமர அடுத்த நொடி வாகனம் சீறி பறந்தது.

அதை கேட்டு கொண்டிருந்த அலர், "எல்லாம் ஓகே நீ சொன்னதை வச்சி பார்க்கிறப்போ நிச்சயம் கீர்த்தி சரவணன் பாதுகாப்புல பத்திரமா இருந்திருக்கனும்ன்னு புரியுது, ஆனா உங்க அம்மாவை மிரட்டி சம்மதிக்க வச்ச நீ என்று நெற்றியை நீவியவள் இதுக்கு டாக்டர் பார்வதி எப்படி ஒத்துக்கிட்டாங்க" என்றிட,

மெல்லிய முறுவலுடன் அலரை பார்த்தவள், நான் கிளம்ப வேண்டிய நேரம் வந்ததுமே எங்க அம்மாகிட்ட தகவல் சொல்லிட்டு அடுத்து நான் போய் பார்த்தது அவங்களை தான்.., பாரும்மாவை சந்தித்து நடந்ததை எல்லாம் கூறி என்னோட திட்டத்தை விளக்கினேன் முதலில் கீர்த்தியை கடத்துவதில் அவங்களுக்கு உடன்பாடு இல்லை ஆனால் அதன் பின் சரவணன் சித்தப்பா மூலமா வார்த்தைகளாலேயே சிதம்பரத்தின் உயிரை கொன்று குடித்ததை பற்றி கூறவும் ஏற்கனவே அவனை பத்தி அவங்களுக்கு நல்லா தெரியும் இப்போ இந்த நிலையில அவங்களுக்கும் என் நிலைப்பாடு சரி என்று தோன்றிட வேற எந்த கேள்வியும் கேட்காம என்னை அனுமதித்திருந்தார்.

"எப்படி உன்னோட அதே பாரும்மா தான் முறை இல்லாம மாமா கூட தனியா இருக்கவும் ஒத்துகிட்டாங்களா..??" என்று நக்கலாக அலர் கேட்க,

அவள் கேள்வியில் பொதிந்துள்ள எள்ளலை கண்டுகொண்டாலும் ஏனோ ப்ரீத்திக்கு அதற்க்கு அவளை கோவிக்க முடியாது போக தன்மையுடனே பதிலளித்தாள். "இல்லை அலர் அன்னைக்கு கீர்த்தியை கடத்திட்டு அவளோட இடத்துக்கு மாறினப்போ சரண் வீட்டுக்கு போற எண்ணம் எனக்கு சுத்தமா இல்லை, அவன் கூடவே இருந்து கொஞ்சம் கொஞ்சமா அவனோட உயிரை குடிச்ச அப்புறம் சரனை கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு தான் இருந்தேன்"

"ஒஹ் அப்படியா..?? அப்புறம் எப்படிம்மா உன்னோட எண்ணம் மாறுச்சி..??"

"நானா மாத்திக்கலை இப்படி ஒரு வழி இருக்கிறதையும் இதனால அவனை துடிக்க வச்சி அணு அணுவா உயிரோட கொல்ல முடியும்ன்னு எனக்கு காட்டி கொடுத்ததும் அவன் தான்" என்றவளை இடைநிறுத்திய அலர்,

"ஆனா அன்னைக்கு நீ கீர்த்தியா வீடு திரும்பினதுல அவருக்கு சந்தேகம் வரலையா..?? முதல் முறை பிரகாசமை சந்திச்சப்ப உனக்கு கோபம் வரலையா...?? அன்னைக்கு என்ன ஆச்சு..?? என்று கேட்க,

இப்போது அவளை எள்ளலாக பார்த்தவள், "என்ன செல்லம் உன்னை ரொம்ப புத்திசாலின்னு நெனச்சேன் ஆனா.." என்று நிறுத்த,

"ப்ரீத்திஈஈஈ" என்று எழில் தான் சீறி இருந்தான்.

"ஓகே ஓகே மாமா உங்க பொண்டாட்டியை ஒன்னும் சொல்லல போதுமா..??" என்று இருகரங்களையும் சரணடைவது போல தூக்கியவள் அலரிடம்,

"ஏன் அலர் அவனுக்கு மட்டும் தான் இருக்கிறதை இல்லைன்னும் இல்லாததை இருக்குன்னும் கதை கட்ட தெரியுமா..???நடந்ததை நடக்கவே இல்லைன்னும் நடக்காததை நடந்ததாகவும் சொல்லி நடிச்சி ஏமாத்த முடியுமா...??? என்னால முடியாதுன்னு நினைக்கிறியா..???" என்று தீர்க்கமான பார்வையோடு திடமான குரலில் கேட்க,

'முடியும்' என்பதாக அலர் தலை அன்னிச்சையாக அசையவும் அதை கண்டவள் அலரின் கன்னத்தை தட்டி "அதே தான் செல்லம் கீர்த்தி சரணை பிரிச்சி அவன் எனக்கு பண்ணின நல்லது என்னன்னு இப்போ புரியுதா..??? என்று கேட்க,

அதுநேரம் வரை யோசனையுடன் இருந்தவள் ப்ரீத்தியிடம், "அதாவது மாமாவை தேடி கீர்த்தி தனியா சென்னைக்கு வந்ததால அங்க என்ன நடந்ததுன்னு அவருக்கு தெரிஞ்சு இருக்காது அப்படியே தெரிஞ்சிக்கணும் என்றாலும் அதுக்கு அவருக்கு இருக்க ஒரே சோர்ஸ் மிஸ்டர் சரவணன்.. அவரும் உன்னோட ஆள் என்பதால் நீ சொன்ன மாதிரி சொல்லி இருப்பாரு ரைட்..??" என்று கேட்க,

அதே அதே..!! அன்னைக்கு கீர்த்தி ஊட்டியில இருந்து கிளம்பினப்போ ரொம்ப சந்தோஷமா இருந்தா அவளோட வாழ்க்கை தெளிந்த நீரோடையா இருந்தது அப்போ கீர்த்தியா மாறி இருந்தா அவனை அப்பான்னு நடிப்புக்கு கூட கூப்பிட முடியாதவ ரொம்ப நாள் அங்க தாக்கு பிடிச்சி இருக்க முடியாது எனக்கு அவன் மேல இருக்க வெறுப்பு எங்கயாவது ஒரு இடத்துல என்னை காட்டி கொடுத்திருக்கும்.

அது மட்டும் இல்லை அப்போ கீர்த்தி வேலை செஞ்சிட்டு இருந்தா என்னோட குறிக்கோள் நிறைவேற நான் அவன் பக்கத்துல இருந்து ஆகணும். முக்கியமா அவனை அவனோட பணம், பதவி, பேர், சொத்து, புகழ் எல்லாத்தையும் அழிக்க நான் அவன் கூட இருக்கிறது ரொம்ப அவசியம் என்றவள் எழிலை பார்த்தவாறு ஊட்டியில இருந்து வந்த அப்புறம் எப்படியும் வேலைக்கு போக வேண்டி இருந்திருக்கும் மாமா ஆனா இரும்படிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலை இருந்திட போகுது" என்று அலட்சியமாக கூற,

"ஏன் அப்படி சொல்ற..?? நீதான் மாமாவை ரொம்ப விரும்புனியே அங்க போயிருந்தா மாமா கூட இன்னும் நேரம் ஸ்பென்ட் பண்ணி இருக்கலாமே..??" என்று அவளை அளவிட்டவாறே அலர் கேட்க,

"அலர் நான் டாக்டர் அவளுக்கு ஐ.டி ல வேலை கீர்த்தியோட உருவ ஒற்றுமை , பிஹேவியர், மேனரிசம் எல்லாம் கொண்டு வந்தாலும் நான் எப்படி அங்க வேலை பார்க்க..?? அதிக நாள் அங்க தாக்கு பிடிச்சி இருக்க முடியாது ஒன்னு அவ பிரெண்ட் இல்லை இவர் கிட்ட ஏதாவது ஒரு வகையில திணறி என்னை சந்தேகப்பட நானே வாய்ப்பு கொடுத்து இருப்பேன் அதோட அவனை பழி தீர்க்கிற என்னோட வெறி கானல் நீரா போயிருக்கும். ஆனா நான் பிறக்க காரணமானவன் இப்படி எனக்கு எந்த கஷ்டமும் கொடுக்காம இவங்களை பிரிச்சி நான் உள்ளே வருவதற்கான வழியை ஏற்படுத்தி அவனுக்கான குழியை அவனே தோண்டிக்கிட்டான்" என்றவள் அவனை சந்தித்த அன்றைய நாளை நினைவு கூர்ந்தாள்.


கட்சி அலுவலகத்திற்கு சென்றிருந்த பிரகாசம் வேலை முடிந்து வழியில் சரவணனுக்கு அழைத்து பேச அவரும் பிரகாசம் நம்பும் விதமாக ப்ரீத்தி சொல்லி கொடுத்தபடி பேசி இருந்தார். சென்னை சென்றிருக்கும் மகளை வெற்று வீடே வரவேற்று இருக்கும் என்பதை நன்கு அறிந்த பிரகாசம் ஏமாற்றத்துடன் வரும் மகளை எவ்வாறு வரவேற்ப்பது என்று மதியத்தில் இருந்தே காத்திருக்க இரவு கவிழ்ந்த பின்பும் வராமல் போக அவளுக்கு அழைக்க வேண்டி கைபேசியை அவர் எடுத்த அதே நேரம் புயலாக வீட்டினுள் நுழைந்திருந்தாள் கீர்த்தியாக மாறி இருந்த ப்ரீத்தி.

காலையில் அழுது சிவந்து சென்றவள் திரும்பியபோது முகம் முழுக்க ஆவேசத்துடன் வந்தவள் பிரகாசத்தை திரும்பியும் பாராமல் வேகமாக தன் அறைக்கு சென்று கதவடைக்க திகைத்து போனார் பிரகாசம்.

காலை அழுகையில் கரைந்திருந்த மகளின் இம்மாற்றம் எதனால் என்று புரியாதவர் அவளை பின் தொடர்ந்து அறை கதவை தட்ட, உள்ளே பொருட்கள் உடையும் சத்தம். ஆவேசத்துடன் அறையில் இருந்த தொலைக்காட்சி முதற்கொண்டு மேஜையில் இருந்த அனைத்தையும் நொறுக்கி கொண்டிருந்த ப்ரீத்தி அதே நேரம் வெளியில் இருந்து குட்டிமா, பாப்பா என்ற பிரகாசத்தின் அழைப்பை காதில் வாங்கினாள் இல்லை.

இப்போது பிரகாசத்துடன் இணைந்து தீபிகாவின் குரலும் கேட்க பெரும் சீற்றத்துடன் கதவை திறந்தவளின் ஆவேசக்கோலம் கண்டு பெற்றோர் திகைத்து போயினர். திறந்தவளோ மறுநொடியே கையில் இருந்த உடைந்த கண்ணாடி துண்டை எடுத்து தன் கழுத்தில் வைக்க,

முகத்தில் வியர்வை அரும்புகள் முளைக்க, "அம்மாடி" என்று துடித்து போன பிரகாசம் என்னடா இதெல்லாம் முதல்ல அதை தூக்கி ஏறி என்ன ஆச்சு உனக்கு..?? ஏன் இந்த மாதிரி நடந்துக்குற..??? மாப்பிள்ளை எங்க..??" என்றவாறே மகளின் கரத்தை பற்ற முனைய அதே நேரம் கையை கீழே இறக்கியவள் மறுநொடியே தன் இடது கரத்தின் புறங்கையில் வெட்டி இருந்தாள். மருத்துவர் என்பதால் அத்தனை ஆவேசத்திலும் லாவகமாக கண்ணாடி துண்டை கையாண்டு ஆழமாக அல்லாமல் தோளை கிழித்து குருதியை வெளியேற்றி இருந்தாள்.

ஆனால் அது பெற்றோருக்கு தெரியாதே..!! வெட்டிய நொடியே குருதி வேகமாக வெளியேற மகளின் ஆவேசமே புரிபடாத நிலையில் அவளது குருதி அவரை நிலை குலைய செய்ய, எங்கே தான் மேலும் முன்னேறினால் மகள் தன்னை காயப்படுத்தி கொள்வாளோ என்ற அச்சத்தில் தன்னையும் அறியாமல் ஈரடி பின்னே நகர்ந்திருந்தார் பிரகாசம்.

ஹாய் செல்லகுட்டீஸ்..,

இதோ 'உயிரில் உறைந்த உறவே !!' அத்தியாயம் 45 பதித்துவிட்டேன். படித்து மறக்காமல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்க. இது இரு பாகம் கொண்ட கதை இன்னும் சில அத்தியாயங்களில் முடிய போகிறது, முடிந்த கதைகளை படிக்க விரும்புவோர் இப்போதிருந்தே படிக்க தொடங்கலாம்.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement