UUU 3 - 9

Priyaasai

Member
உறவு - 9.2


"அவளையாவது நிம்மதியா இருக்க சொல்லுங்க" என்ற சரணின் வார்த்தைகளே அவளின்றி அவன் நிம்மதி இல்லை என்பதை உரக்க சொல்லி இருக்க, குழப்பத்திலும் குற்ற உணர்ச்சியிலும் இருந்தவள் எங்கே அதை சரியாக உள்வாங்கி அர்த்தம் உணர்ந்தாள்.

அவன் அவமானப்பட்டது குறித்த பேச்சுக்களே அவள் சிந்தையையும் செவியையும் நிறைத்திருக்க அதையே அசைபோட்டவளின் மனமோ இதுதானே இதற்க்கு அஞ்சி தானே அவள் திருமணத்தை மறுத்தது என்று எண்ணி விம்மி வெடித்து கொண்டிருந்தது.

தங்கள் குடும்பத்தால் அவன் கொண்ட காயங்களும் வலியும் அதிகம் எங்கே தான் அருகே இருந்தால் அது மேலும் கிளறப்பட்டு அவன் நிம்மதியை களவாடி செல்லுமோ என்பதற்காக தானே மனம் முழுக்க நிறைந்திருப்பவனை மறுத்து கொண்டிருக்கிறாள்.

அருகே இருந்து காயத்தை அதிகபடுத்துவதை விட விலகி மருந்திட நினைப்பவளுக்கு இன்னுமே புரியவில்லை அவனுக்கான மருந்தே அவள் தான் என்பது ..???

அதீத அதிர்ச்சியும் குற்ற உணர்வும் ஆட்டி படைக்கும் நிலையில் அவளும் எங்கனம் சரியாக யோசிக்க..!!

சரண் வெளியேறிய பல நிமிடங்களுக்கு அறையினுள் ஆழ்ந்த மௌனம், அவன் சென்ற திசையையே கண்ணீருடன் பார்த்து கொண்டிருந்தாள் கீர்த்தி.

சரணின் வார்த்தைகள் வளர்மதியையும் அதிர்ச்சி அடைய செய்திருந்தாலும் மெல்ல தன்னை மீட்டு எடுத்தவர் கீர்த்தியை நெருங்கி அவள் தோள்களை பற்றி உலுக்கி, "கல்யாணம் ஆன பிறகும் அவனை வேற பொண்ணை" என்றவருக்கு அதை சொல்லவே நாகூசியது.., ஏய் உனக்கு என்ன மூளை கெட்டுபோச்சாடி...?? என்ன நெனச்சி இப்படி பண்ணிட்டு இருக்க..?? " என்றார் அடக்க முடியாத கோபத்தோடு

கண்களில் வெறுமையுடன் அவரை பார்த்தாளே அன்றி பேச்சும் மறந்து போன நிலை தான்.

"படிச்ச பொண்ணு கெட்டிக்காரியா இருப்பேன்னு நெனச்சேன், ஆனா இவ்ளோ கோழையா, முட்டாளா இருக்க எந்த பொண்ணும் இப்படி ஒரு காரியத்தை செய்ய துணிய மாட்டா" என்றிட,

அப்போது தான் வாய் திறந்து பெரிம்மா என்றாள்.

"நிறுத்து கீர்த்தி இனி ஒரு வார்த்தை பேசாத, அவனை நீ உண்மையா காதலிச்சி இருந்தா இந்த மாதிரி வார்த்தைகள் எல்லாம் வரலாமா...?? ஏதோ அவன் நல்லதுக்காகன்னு தியாகி மாதிரி நீ பேசுறதே அவனுக்கு எவ்ளோ கஷ்டம் கொடுக்கும்ன்னு புரியலையா உனக்கு...??? தாலியை கட்டின பிறகு இதே வார்த்தையை அவன் உனக்கு சொல்லி இருந்தா தாங்குவியா..??? பேச தெரியும்ன்னு இஷ்டத்துக்கு பேசுற.., இதை கேட்கவா அவன் நாங்க எவ்ளோ வற்புறுத்தியும் கல்யாணமே பண்ணிக்காம இத்தனை வருஷம் காத்திருந்தான், இதான் அவன் மனசை புரிஞ்சி வச்சிருக்க அழகா...??

"உன் அப்பா பண்ணினதை வேற பொண்ணை கட்டி வைக்கிறதால மாத்திட முடியும்ன்னு நெனைக்கிறியா...??? நடந்து முடிஞ்சதை மாத்த முடியாது கீர்த்தி அதுக்காக அதை வச்சி எதிர்காலத்தை அமைக்க நினைக்கிற உன் முட்டாள் தனத்தை என்ன சொல்ல..??" என்று ஆற்றாமையில் கொட்டி தீர்த்தவ இறுதியாக,

"உன்னால எப்படி அவனை இன்னொருத்திக்கு விட்டு கொடுக்க முடியுது ..?? நீ நிஜமாவே அவனை காதலிக்கிறியான்னு எனக்கு புரியல ஒருவேளை காதலிக்கும் போது பெருசா தெரியாத விஷயம் வாழ்க்கைன்னு வரும்போது உங்க அளவுக்கு வசதி இல்லாதவன் கட்டிகிட்டு..." என்றவரை முடிக்க விடியாமல் பாய்ந்து கட்டிகொண்டவள்,

"ப்ளீஸ் பெரிம்மா அப்படி சொல்லாதிங்க மாமா இல்லாம எனக்கும் வாழ்க்கை இல்லை அவருக்கு நான் வேண்டாம்ன்னு சொல்றதே அவரோட நல்லதுக்கு தான் ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க" என்று நெஞ்சம் விம்ம கதறியவள்,

"என்னால அவரை இப்படி பார்க்க முடியலை ரொம்ப பயமா இருக்கு..., நான் பார்த்த மாமா இப்படி இல்லை அவர்... அவருக்கு கோபப்படவே தெரியாது எந்த கஷ்டமான நேரமா இருந்தாலும் அதை எல்லாமே ரொம்ப ஈசியா கடந்து போவாரு" என்று நாசி விடைக்க அவரை பார்த்தவள்,

"அப்பவே இது சரிவராதுன்னு அவர் சொன்னப்போ நான் விலகி போயிருக்கனும் ஆனா நான் போகலை என்று தலையை பிடித்து கொண்டவள், அவரோட சுயமே போயிடுச்சி.., அவர் முகத்துல இந்த நிமிஷம் வரை நான் சிரிப்பை பார்க்கலை பெரிம்மா.., நமக்கு பிடிச்சவங்களோட சிரிப்பு தொலைய நாமலே காரணமா இருக்கிறது எவ்ளோ பெரிய கொடுமை தெரியுமா..??" என்று உதட்டை கடித்து பொங்கிய அழுகையை அடக்கி நா தழுதழுக்க தொடர்ந்தவள்,

"மாமா சந்தோசம், சிரிப்பு எல்லாமே போயிடுச்சி பெரிம்மா அதுவும் என்னால" என்றவளுக்கு தன் மீதே எல்லை இல்லா வெறுப்பு

"என்னை காதலிச்சதே பாவமா நினைக்கிறாரு, இந்த கல்யாணம் அவருக்கான தண்டனையாம் பெரிம்மா, இதுக்கெல்லாம் நான் தானே காரணம்.., என் மாமாவை தெரிஞ்சே நான் எப்படி தண்டனை அனுபவிக்க விடுவேன் என்னால முடியாது" என்றபோதே மீண்டும் ஒரு கேவல் வெடித்து கிளம்ப வளர்மதியின் மடியில் முகம் பொத்தி அழ தொடங்கியவள் சில நிமிடம் கழித்து,

"அவர இந்த நிலைக்கு நாங்க கொண்டு வந்து நிறுத்திட்டோம், காலம் ரொம்பவே கடந்துடுச்சி பெரிம்மா எனக்கு என் மாமாவை திரும்ப பழைய மாதிரி மாத்த முடியும்ன்னு நம்பிக்கை இல்லை எல்லாத்துக்கும் மேல எங்க அப்பா பண்ணின பாவம் என்னைக்கு இருந்தாலும் எங்களுக்கு தானே என்னை காதலிச்ச, கல்யாணம் பண்ணின பாவத்துக்கு அவருக்கு அது வேண்டாம் பெரிம்மா.., ப்ளீஸ் மாமாக்கு புரிய வச்சி அவரை சந்தோஷமா வாழ வைங்க அது போதும் எனக்கு, இப்போ இதை சொல்லும் போது கூட ரொம்ப வலிக்குது பெரிம்மா என்று நெஞ்சை பிடித்து கொண்டவளின் அழுகை மேலும் அதிகரிக்க அதை கண்டு தாள முடியாத வளர்மதி அவளை தன்னோடு அணைத்து கொண்டு,

"இல்லைடா அப்படி எல்லாம் இல்லை, வேண்டாம் கீர்த்தி நல்ல நாள் அதுவுமா அழாதமா"என்று அவளை தடுக்க முயல,

"மாமா நினைக்கிற மாதிரி எனக்கு அவரை விட்டுகொடுக்குறது ஈசி எல்லாம் இல்லை பெரிம்மா அவர் இல்லாத வாழ்க்கையை வாழறது உயிரோட நரகத்துல இருக்கிறதுக்கு சமம். நான் இருந்தா தானே மாமாக்கு இந்த கஷ்டம் ஆனா அவர் சந்தோஷத்துக்காக என்னோட உயிரை விடவும் தயாரா இருக்கே..." என்றவளின் வாய் மீது பட்டென்று ஒன்று வைத்த வளர்மதி,

இப்படியே பேசின நானே உன்னை அடிச்சிடுவேன் கீர்த்தி என்று கண்ணீருடன் அவளை அணைத்து கொண்டவர் அவள் தலை கோதி ஆசுவாசபடுத்தி அமர்த்தியவர் மேஜையில் இருந்த தண்ணீரை எடுத்து புகட்ட அதன் பின்பே கீர்த்தியின் கேவல் சற்று மட்டுப்பட்டது.

"போதும் ரொம்ப பேசிட்ட இப்போ கொஞ்சம் நான் சொல்றதை கேட்குறியா..??"

குற்ற உணர்வில் தவித்து கொண்டிருப்பவளுக்கு இப்போது சரணின் நலன் மட்டுமே பிரதானமாகி இருக்க, " நீங்க மாமாவை சந்தோஷமா வாழ வைப்பேன்னு சொல்லுங்க நீங்க சொல்றதை கேட்குறேன்" என்று கூற,

அதை கேட்ட வளர்மதியின் முகத்தில் புன்னகை அரும்பியது, "நான் சொல்றதை நீ கேட்டா கண்டிப்பா என் தம்பி சந்தோஷமா இருப்பான் ஆனா நீ அதை கேட்கணுமே..?" என்று சந்தேகமாக அவளை பார்க்க,

இப்போது கண்களை அழுந்த துடைத்து கொண்டவள் , " கேட்பேன் " என்றிட,

"சரி முதல்ல இப்படி அவனை வேற ஒரு பொண்ணுக்கு தாரை வார்க்கிறதை பத்தி பேசுறதை முதல்ல நிறுத்தனும்" என்று கூற,

'இல்லை' என்று பலமாக தலை அசைத்தவாறே அவள் வாய் திறக்கும் முன்னமே,

"இப்போதானே சொல் பேச்சு கேட்பேன்னு சொன்ன" என்று அவர் கேட்கவும், இயலாமையுடன் அவரை பார்த்தவள்,

"நான் கூட இருந்தா மாமாவோட வேதனை அதிகமாகும் பெரிம்மா"

இப்போது 'இல்லை' என்று பலமாக தலை ஆட்டுவது வளர்மதியின் முறை ஆனது, புரியாமல் அவரை பார்த்தவளிடம்,

"உன்னோட விலகல் தான் அவனோட வேதனையை அதிகமாக்கும் முதல்ல அதை புரிஞ்சிக்க கீர்த்தி என்றவர், முந்தா நேத்து உங்க அப்பாவோட சுயரூபம் , ப்ரீத்தி செஞ்சது , எங்க அப்பா என்று கண் மூடி திறந்தவர் எல்லா உண்மையையும் ஜீரணிக்கவே எங்களுக்கு முழுசா ஒரு நாள் ஆச்சு ஆனா சம்பந்தபட்ட உனக்கு எவ்ளோ நாள் ஆகும்னு எனக்கு புரியுது", என்று அவள் கரத்தை தட்டி கொடுத்தவர்,

"அதிர்ச்சிலயும், குழப்பத்துலயும் எடுக்கிற எந்த முடிவு எப்பவும் தப்பா தான் இருக்கும், முதல்ல எல்லாமே உன்னாலன்னு நினைக்கிறதை நிறுத்து, அந்த குற்ற உணர்ச்சியில இருந்து வெளியே வா, அதுக்கு முன்ன என் தம்பியோட சந்தோஷம் என்னைக்குமே நீ மட்டும் தான் அதை புரிஞ்சிக்க அதனால தான் இத்தனை வருஷம் உனக்காகவே காத்திருந்து நீ முடியாதுன்னு சொன்னப்பவும் கிட்ட தட்ட கை காலை கட்டாத குறையா உன்ன மண்டபத்துக்கு வர வச்சி இருக்கான்" என்று அவளை பார்த்தவர்,

"இப்போ நீ விலகினா மட்டும் நீ சொல்ற மாதிரி இன்னொரு பொண்ண கல்யாணம் பண்றதுக்கு எல்லாம் வாய்ப்பே இல்லை வாழ்க்கையில ஒரு முறை தான் கல்யாணம் அதனால நாங்களும் இனி அவன் கல்யாண பேச்சை எடுக்க மாட்டோம், என்று இடை நிறுத்தி இது வேணும்ன்னா நடக்கும் கீர்த்தியை பார்த்தவர்,

என்ன பெரிம்மா..?? என்று எதிர்பார்போடு அவரை பார்க்க,

"அது ஒண்ணுமில்லைம்மா நீ அவன் கூட வாழாம போனா அவன் கடைசி வரை கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியா இருக்க போறான் அவனோடவே எங்களோட வம்சம் முடிஞ்சிடும். என் தம்பி சந்தோஷமா வாழுவான்னு நம்பிக்கையோட இருந்த எங்க அம்மாக்கு இதையெல்லாம் பார்க்கும் போது வாழும் ஆசையே போயிடும் கொஞ்சம் நஞ்சம் ஓட்டிட்டு இருக்க அவன் உயிர் எந்த நிமிஷமும் பிரிஞ்சிடும், நாங்க நாலு பெரும் பட்டமரமா போயிட்ட தம்பி வாழ்க்கைக்காக தினமும் அழறதை தவிர வேற வழி இல்லை"

சிவந்த நாசியோடு காதை பொத்தி கொண்டு அவரை பார்த்தவள், " ப்ளீஸ் பெரிம்மா இப்படி எல்லாம் பேசாதிங்க என்னால தாங்க முடியலை, இன்னும் என்னோட பாவ சுமையை அதிகம் ஆக்குறீங்க..?? என்று கிட்டத்தட்ட அலறி இருந்தாள்.

"இந்த நிமிஷம் நீ அவன் வாழ்க்கையில இருந்து விலகினா அதுக்கு அப்புறம் நடக்க போறதை தான்மா சொல்றேன்" என்றிட பரிதவிப்புடன் கீர்த்தி அவரை பார்த்திருந்தாள்.

"வாழ்க்கை நீ நினைக்கிற மாதிரி பூதாகரமானது இல்லை கீர்த்தி ரொம்ப எளிமையானது ஆனா நீ அதை ரொம்ப சிக்கல் ஆக்கிக்க பார்க்கிற.., நீ சொல்ற மாதிரி என் தம்பி முகத்துல சிரிப்பை பார்த்து பல வருஷம் ஆகிடுச்சி நான் இல்லைன்னு சொல்ல மாட்டேன் ஆனா அதை உன்னால திரும்பி கொண்டு வர முடியாதா..??" என்று கேட்க நம்பிக்கை இல்லாத பார்வையை அவர் மீது செலுத்தினாள் கீர்த்தி.

அதை கண்டவர், " பெண்ணால முடியாதது எதுவும் இல்லை கீர்த்தி அதுக்கு கொஞ்சமாவது பொறுமை இருக்கணும், பயத்தை விடனும், நம்மால முடியும்ன்னு நினைக்கணும் எல்லாத்தையும் விட இந்த நொடியும் கடந்து போகும் அடுத்த நொடி நல்லதா அமையும் என்ற நம்பிக்கை இருக்கணும்" என்று கூற

"என்னால முடியுமா பெரிம்மா..???"

அவள் கேள்வியில் அவர் முகம் தானாக மலர, "மனைவியால அதுவும் காதல் மனைவியால முடியாதது எதுவும் இல்லை கீர்த்தி " என்றவர் அதன் பின் பேச தொடங்க கீர்த்தியின் முகம் மெல்ல மெல்ல தெளிவு பெற்றது,

வளர்மதி பேசி முடிக்கவும் அவர் கூறியது அனைத்தும் சாத்தியமாகுமா..?? என்று தெரியாவிட்டாலும் நிச்சயம் பழைய சரனை மீட்டு எடுக்க முடியும் என்ற நம்பிக்கை கீர்த்திக்கு பிறந்தது.

அழுது சிவந்து இருந்த முகத்தில் இப்போது சிறு நம்பிக்கை கீற்று தென்படுவதை கண்டவர், "சரி முதல்ல போய் முகம் கழுவிட்டு வா பார்க்கலாம்" என்று கூற அவர் கூறியபடியே முகம் கழுவி வந்தவளை அமரவைத்து தலை அலங்காரத்தை பிரித்து தலையை தளர பின்னி மல்லிகை சரத்தை சூட்டியவர் அவளிடம் வேறு புடவையை அளித்து,

"இவ்ளோ நேரம் நீ பண்ணின அக்கபோருல புடவை எல்லாம் கசங்கி போயிருச்சி எப்பவும் முகூர்த்த புடவையோட தான் புகுந்த வீட்டுக்கு போகணும் ஆனா இப்படியே போக வேண்டாம் இதை மாத்திக்கோ நான் சீக்கிரமே இதை அயர்ன் பண்ண கொண்டு வர சொல்றேன் கிளம்பும் போது மாத்திப்ப என்று கூட அவர் சொல்படியே மாற்றி வந்தவள் கண்ணாடி முன் அமர்ந்து முகத்திற்கும் ஒப்பனை செய்திருந்தாள்.

அப்போது உள்ளே நுழைந்த வளர்மதி, 'கீர்த்தி சரண் வெளியே இருக்கான் நீ போய் சாப்பிட கூப்பிடு' என்றார்.

'நானா..??'

'பின்னே நானா..??'

"ப்ளீஸ் நான் கூப்பிட்டு வராம போயிட்டா அதனால நீங்களே கூட்டிட்டு வாங்க நான் சாப்பாடு பரிமாருறேன்" என்றிட.

அவள் காதை பிடித்து செல்லமாக திருகியவர், "விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு சீதை ராமன் சித்தப்பான்னு சொன்னா எப்படி..??" என்றவர்

"நீ தான் செல்லம் போகணும், பொண்டாட்டி கூப்பிட்டு வரமாட்டேன்னு சொல்ல மாட்டான் போ போய் அவனை கூட்டிட்டு வந்து சாப்பிடு, சாப்பிடாம நீங்க இங்க இருந்து நீங்க கிளம்ப முடியாது" என்றார் கராராக.

ஆழ்ந்த மூச்சை எடுத்துவிட்டவள் சேலையை சரிபடுத்தி கொண்டே அறையை விட்டு வெளியேறி சரணை தேடி சென்றாள்.


ஹாய் செல்லகுட்டீஸ்

லேட்டா வரதுக்கு முதல்ல பெரிய சாரி தவிர்க்க முடியாத சூழல்ல மாட்டிகிட்டதால இப்போதான் லேப் எடுக்க முடிஞ்சது. இதோ 'உயிரில் உறைந்த உறவே !!'அடுத்த அத்தியாயம் போட்டுட்டேன் படிச்சிட்டு மறக்காம உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

நன்றிகள்


ருத்ரபிரார்த்தனா
Super
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement