Thendralai Thoothuvittu - Ep 2

Advertisement

Kalaarathi

Well-Known Member
அத்தியாயம் 2

கோவிலிலிருந்து திரும்பி வந்து வீட்டையடைந்தவள் கண்ட காட்சி அவளை அதிர்ச்சியில் உறையச் செய்தது.

‘வெளியெ செல்லும் முன்பு சாவி போட்டு தான் அடைத்துவிட்டுச் சென்றிருந்த வீடு திறந்திருப்பது ஏன்?’ என்றெண்ணியவாறே வந்தவள் அப்போதுதான் ஹாலை அடுத்திருந்த சாமி அறைக்குள் சென்று கொண்டிருந்த திருடனைக் கண்டதும் என்ன செய்வது என்றறியாமல் மலைத்து நின்றாள்.

அவள் அப்படி நின்றதும் வெகு குறைவான நேரமே.

கைகளால் காற்றில் துழாவியவாறே “யாரது...? யாரது வீட்டிற்குள் வந்திருப்பது...?” என்று கேட்டு நடந்து கொண்டிருந்த பார்வையற்ற தனது தாயாரைக் கண்டதும் அவரைத் திருடன் ஏதேனும் செய்துவிடாமல் அவனிடமிருந்து காப்பாற்ற தான்தான் ஏதாவது செய்தாக வேண்டும் என்பதை உணர்ந்து யோசிக்கலானாள்.

அப்போதும் தாயார் நடந்து கொண்டிருந்த இடத்தைக் கண்டவள் பயந்துவிட்டாள்.

அவரது கால்கள் சற்று தடுமாறினாலோ... வேறு எதிலும் அவர் இடித்துக் கொண்டாலோ கீழே விழுந்து பலமான அடிபடக்கூடும். சத்தம் போட்டு தாயாரை எச்சரிக்கைப்படுத்தலாம் என்றாலோ திருடன் உஷாராகிவிடக்கூடும் என்றெண்ணியவள் மெதுவாகக் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்றாள்.

தாயாரை நோக்கி அவள் இரண்டடி வைப்பதற்குள் கதவு தள்ளப்படும் சத்தத்தைக் கேட்டு அடுத்த அறையிலிருந்து வெளிவந்த திருடன் மாட்டிக் கொண்ட உணர்வுடன் நின்றான்.

தன்னை விட தாயாருக்கு வெகு அருகாமையில் இருந்த அவன் தாயாரை ஏதும் செய்துவிடுவானோ என்றெண்ணி அவள் “அம்மா...!” என்றழைக்கவும், “சத்யா... வந்துவிட்டாயாம்மா...¸ நம்ம வீட்டுக்குள்ளே யாரோ வந்தது போலயிருக்...” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவரை நெருங்கிய திருடன்...

அவரது கையைப் பிடித்துக் கொண்டு சத்யாவைப் பார்த்து “சத்தம் போட்டு யாரையாவது கூப்பிட்டே... உன் அம்மா கழுத்தை அறுத்துருவேன்...” என்றபடி கத்தியை அவர் கழுத்துக்கருகில் வைத்தான்.

“இல்லை... இல்லை... நான் கூப்பிடமாட்டேன். நீ அம்மாவை எதுவும் செய்துவிடாதே... ப்ளீஸ்...” என்று கெஞ்சினாள்.

திருடனது குரலையும் மகளது கெஞ்சல் குரலையும் கேட்ட தாயார் “சத்யாம்மா... நம்ம வீட்டில் தான் எதுவும் கிடையாதே! இவன் ஏன் நம்ம வீட்டுக்கு வந்திருக்கான்¸” என்று பயத்துடனே கேட்க,
“ஏய்... சும்மா இருக்க மாட்டே...” என்று திருடன் அவரை அதட்ட “ப்ளீஸ்... அம்மாவை கஷ்டப்படுத்தாதே...” என்று கெஞ்சியவள் “அம்மா சொல்வதுபோல நிஜமாகவே எங்கள் வீட்டில் எதுவும் கிடையாது...” என்றாள்.

“எதுவுமே இல்லாமலிருக்குறதுக்கு நீங்க சாக வேண்டியது தானே..?” என்று கத்தியவன் “ரெண்டு மணி நேரமா வீட்டையே புரட்டியிருக்கேன் ஒரு மண்ணும் கிடைக்கல. நான் இதுக்கு முன்னால எத்தனையோ வீடு புகுந்து இறங்கியிருக்கேன்... ஒரு வீட்லயிருந்துகூட நான் சும்மா திரும்பினதில்ல தெரியுமா?” என்று தற்பெருமை பேசியவன் “உன் கழுத்தில் காதில் இருக்குறதையெல்லாம் கழட்டிக் குடு... சீக்கிரம்...” என்று அவளை அவசரப்படுத்தினான்.

“இதெல்லாம் வெறும் பேன்ஸி அயிட்டம்தான்... உனக்கு பிரயோஜனப்படாது” என்றவள் தாயார் அவன் பிடியிலிருந்து விடுபட முயற்சிப்பதைக் கண்டு “அம்மாவை விடு... அவர்களுக்கு கை வலிக்கும்” என்றாள்.

நேரம் செல்லச் செல்ல தான் தப்பிக்கும் வாய்ப்பு குறைவதாக உணர்ந்தவனது முகத்தில் வியர்வை முத்துக்கள் தோன்றலாயின.

அவனது பதற்றத்தைக் கண்டவள் அவனறியாமல் தன் செல்போனிலிருந்து தந்தையின் நண்பருக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்.

கவனத்துடனேயிருந்தும் அவள் போனை உபயோகிப்பதைக் கண்டு கொண்டவன் “ஏய்.. போன்ல என்ன பண்ணிட்டு இருக்கே? போனைத் தூரப் போடு... இல்லை உன் அம்மாவை குத்திருவேன்...” என்று அவரைக் குத்துவதுபோல் கத்தியை ஓங்கினான்.

“வேண்டாம்... வேண்டாம்... நான் போனைப் போட்டுவிட்டேன்...” என்று போனை அருகிலிருந்த டேபிள் மீது போட்டவள் “உன்னைக் கையெடுத்துக் கும்பிடுறேன் அம்மாவை விட்டுவிடு...” என்று மன்றாடலாகக் கேட்டவாறே முன்னோக்கி சென்றாள்.

அவள் தன்னை நோக்கி நகர்வதைக் கண்டவன் “அங்கேயே நில்லு! கிட்டே வந்தாய் என்றால் கத்தி நிச்சயம் உன் அம்மாவின் மேல் பாயும்...” என்று கத்தியை அவளை நோக்கிக் காட்டிப் பேசியவனது கவனம் மீனாட்சியிடம் செல்லவும் இது தான் சரியான சமயம் என்று அவளது போனை எடுத்து குறிபார்த்து வீசினாள்.

அவளது இலக்கான நெற்றியை விட்டுத் தவறி அது சரியாக அவனது கண்ணைப் பதம் பார்த்தது. கண்களில் அடிபட்டதும் மீனாட்சியின் கைகளை தள்ளிவிடுபவன் போல விடுவித்தவன் கண்களைத் தேய்த்துக் கொண்டிருந்தான்.

ஓடிவந்து தாயார் கீழே விழுந்துவிடாமல் தாங்கிக் கொண்டவள் தாயாரை சற்று தொலைவிற்கு அழைத்துச் சென்றவாறே “திருடன்..! திருடன்..! யாராவது வாங்களேன்..!” என்று கத்த ஆரம்பித்தாள்.

வாயிற்கதவு திறந்தே இருந்தாலும் தீபாவளியின் காரணமாக வெளியே கேட்டுக் கொண்டிருந்த வெடிச் சத்தத்தில் அவளது குரல் அக்கம் பக்கத்தினரை எட்டவில்லை. அதைத் தானும் ஓரளவு யோசித்திருந்தவள் யாருக்கேனும் கேட்டுவிடாதா என்ற எண்ணத்தில் தொடர்ந்து கத்தலானாள்.

சற்று நேரம் கண்ணில் ஏற்பட்ட காயத்தால் அவதியுற்ற திருடன்... ஒரு கையை அந்தக் கண்ணில் வைத்துக் கொண்டு மறுகையால் கத்தியை பிடித்தவாறே “என்னையே அடிக்கிறாயா..? உன்னை...” என்று அவளைக் குத்துவதற்காகக் கையை ஓங்கியபோது “இந்த வீடுதான் சார்... அதோ திருடன்...” என்று போலீசாரிடம் உரத்த குரலில் சொல்லிக் கொண்டிருந்தார் சத்யாவின் தந்தை சிதம்பரத்தின் தோழர்.

கண்ணாடி முன் நின்று சத்யாவை வாழவிடமாட்டேன் என்று சூளுரைத்தவனின் கண்களில் அப்படி ஒரு வெறி இருந்தது.

அந்த சத்யா மட்டும் அவன் கண்ணில் தென்பட்டாள் என்றால் அன்றுமுதல் அவளுக்குப் பிரச்சினைதான். அதன் காரணம் அவன் மட்டுமே அறிந்த ஒன்று.

கதவைத் தட்டி “தம்பி..!” என்று அழைத்த வேலையாளின் குரலில் இயல்புக்குத் திரும்பியவன் கதவைத் திறக்காமலே “என்ன?” என்று கேட்டான்.

“தம்பி உங்களை பெரியய்யா கீழே வரச் சொன்னாங்க...” என்றார் வேலையாள் கணபதி.

“ஐந்து நிமிடத்தில் வருகிறேன்னு சொல்லுங்க...” என்று பதிலளித்துவிட்டு அவன் தலைதுவட்டி உடைமாற்றி முடித்தபோது அவனது செல்பொன் ஒலித்தது.

எடுத்துப் பார்த்தவன் முகத்தை சுழித்தபடியே அட்டென்ட் செய்து “என்ன...? சொல்லு?” என்றான்.
மறுமுனையில் பேசியது கல்பனா- சஞ்ஜீவனின் அத்தை மகள்.

தீபாவளி வாழ்த்து கூறியவள் “அத்தான் நான் உங்க வீட்டுக்கு வந்தால் என்னை ஷாப்பிங் கூட்டிப் போவீர்களா?” என்று கேட்டாள்.

“எனக்கு வெளிவேலை நிறைய இருக்கிறது, வைக்கிறேன்” என்று அழைப்பை துண்டித்துவிட்டு தந்தையை பார்க்கச் சென்றான்.

அவன் கீழே சென்றபோது சங்கரன் சாப்பிட்டுக் கொண்டிருக்க, தாயார் “வா ஜீவன்... உட்கார்ந்து சாப்பிடு...” என்று அவனை சாப்பிட அழைத்தார்.

“அப்பா என்ன விஷயம்? எதற்காக கூப்பிட்டு அனுப்பினீர்கள்?” என்று கேட்டவாறே அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான் சஞ்ஜீவன்.

“ஜீவா நம்ம சோப் கம்பெனிப் பொறுப்பை நீ எப்போ எடுத்துக்கப் போறேன்னு கேட்கத்தான் அப்பா கூப்பிட்டாங்க...” என்று விஷயத்தைக் கூறினார் பார்வதி.

“அப்பா நான் என்னோட கன்ஸ்ட்ரக்ஷனையும் பார்க்க வேண்டியிருப்பது உங்களுக்குத் தெரியும்...” என்று தந்தைக்குத் தன் தொழிலை நினைவுபடுத்தினான்.

“ஆமா ஜீவா... ஆனால் என்னால் முன்போல எல்லா வேலைகளையும் பொறுப்பாக பார்த்துக் கொள்ள முடிவதில்லை. அதனால்தான் சொல்கிறேன்... நீ பொறுப்பை ஏற்றுக் கொண்டால் நான் சற்று நிம்மதியாக ஓய்வெடுப்பேன்...” என்று தான் பேச நினைத்ததைப் பேசி முடித்தார் சங்கரன்.

“அப்போ... என்னோட தொழிலை விடச் சொல்றீங்களாப்பா..?” என்று கேட்டான் மகன்.

“அப்படியில்லைப்பா...” என்று அவசரமாக மறுத்தவர், “உன்னால் ரெண்டையும் பார்த்துக்க முடியாதா?” என்று கேட்டார் தொய்ந்துவிட்ட குரலில்.

“இல்லைப்பா... அது முடியாது. இப்போது என் கன்ஸ்ட்ரக்ஷன் நல்ல நிலையிலிருக்கிறது. இந்த நேரத்தில் என் கவனம் சற்று குறைந்தாலும் எனக்குப் பின்னாலிருப்பவன் என்னை முந்திச் சென்றுவிடுவான்... என்னால் அந்த அளவிற்கு விட முடியாது” என்று தன் நிலையைக் கூறினான் அவன்.

“ஜீவா நீ இதை ஆரம்பித்து ஆறு வருடங்கள்தான் ஆகிறது... அதன் மீதான உன் கவனம் குறைவதையே நீ விரும்பவில்லை. ஆனால் நான் நமது தொழிற்சாலையை ஆரம்பித்து முப்பது வருடங்களாகிறது. என்னால் அதை எப்படி விட முடியும் சொல்லு?” என்று கேட்டவர் அவனது பதிலை எதிர்பார்க்காமல் தானே பேசினார்.

“நீ முடியாது என்று சொன்னதும், சரி உனக்கு விருப்பமில்லை வேறு பிள்ளை பார்த்துக் கொள்ளட்டும் என்று சொல்ல நாங்கள் வேறு பிள்ளையா பெற்று வைத்திருக்கிறோம்....? ஜீவா, எதுவாக இருந்தாலும் நாங்கள் உன்னிடம் தானே சொல்ல முடியும். நான் ஓடி ஓடி உழைத்ததெல்லாம் யாருக்காக? எங்களுக்காகவா...? உனக்கு, உன் குழந்தைகளுக்கு என்றுதானே நாங்கள் சேர்த்து வைத்திருப்பதெல்லாம்... ஆனால் நீ இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் யாரோ என்னவோ சொன்னார்கள் என்று தனியாகத் தொழில் தொடங்கினாய்... ‘நம் மகன் தன் காலில் நிமிர்ந்து நிற்கிறான்’ என்று அதுவும் எங்களுக்குப் பெருமைதான்.... ஆனால் அதையெல்லாம்விட நம் குடும்பம் செழிப்பாக இருக்கக் காரணமாக இருந்தது நம் சோப் தயாரிக்கும் தொழில். அதன் முன்னேற்றத்திற்குப் பாடுபட்ட தொழிலாளர்கள்... அவர்களை... அவர்களிடம் நான் இனிமேல் தொழில் நடத்தவில்லை... தொழிற்சாலையை மூடப்போகிறேன் என்று எப்படி சொல்வது..?” என்று ஆதங்கத்துடன் பேசிக் கொண்டிருந்தவரது தோளில் கைவைத்து அவரை அமைதிப்படுத்தினார் பார்வதி.

தந்தை பேசியவற்றை அமைதியுடன் கேட்டுக் கொண்டிருந்தவன் “அப்பா நீங்க சொன்ன அதே காரணத்தை நானும் சொல்லலாம் இல்லையா?” என்று கேட்டான்.

இயலாமையுடன் தலையசைத்தவர் மனைவியைப் பார்த்தார்.

கணவனுக்கும் மகனுக்குமிடையே கருத்து வேறுபாடு எதுவும் ஏற்பட்டு பிரச்சினையாகிவிடக் கூடாதே என்ற கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்த பார்வதி “நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா?” என்று கேட்டார்.

என்னதான் தந்தையிடம் மறுத்துக் கொண்டிருந்தாலும் தன் தந்தை ஆரம்பித்தத் தொழில் அழிவதை விரும்பாத சஞ்ஜீவனும் அவன் தந்தையும் ஆவலாக பார்வதியின் முகத்தைப் பார்த்தனர்.
 

bavi1308

Well-Known Member
அருமையான பதிவு....கொஞ்சம் பெரிய பதிவாக கொடுங்கள்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top