Thaamirabarani--3

Advertisement

Saroja

Well-Known Member
சூப்பர்
அழகான குடும்ப
பேச்சு காட்சி
 

n.palaniappan

Well-Known Member
அத்தியாயம் –3

ஆண்டவப்பெருமாள் அன்று ஏதோ அதிசயமாக முன்னிரவிலேயே வீடு திரும்பி விட்டார்..ஆகவே சமயலறைக்குள் புகுந்தாள் செல்லக்கிளி...இரவு எப்போதும் இட்லிதான் வேண்டும் ஆண்டவனுக்கு,,,சைட் டிஷ் மாறலாம்,,,இட்லிப் பொடியும்,செக்கு நல்லெண்ணெயும் கட்டாயம் இருக்க வேண்டும்...இன்று இட்லிக்கு தொட்டுக்கொள்ள கத்தரிக்காய் கிச்சடி..

..மல்லிகா தண்ணீர் தட்டு இனிப்பு பழங்கள் சகிதம் சாப்பாட்டு மேசையை தயார் செய்தாள்..இரண்டு தட்டு இட்லிகளை எடுத்து கணவனை சாப்பிட அழைக்கப் போனாள் செல்லக்கிளி.....அங்கே ஆண்டவனின் ஜூனியர்ஸ் இரண்டு பேர் வந்திருக்க,மூவரும் பேசிக்கொண்டிருந்தனர்..

..செல்லக்கிளி அழைக்க,
‘’செல்லம்,மூணு பேருக்கும் வையி’’


இது புதிதில்லைதான்....வீட்டிற்க்குள் கால் வைப்பவர்களை, கை நனைக்காமல் வெளியில் விட மனசு வராது ஆண்டவனுக்கு....இத்தனை வருட காலத்தில்,செல்லக்கிளிக்கும்,அது பழகிப் போன ஒன்றாகி விட்டது....சாப்பாட்டு வேளை தவறி வருவோர்க்கு,குறைந்த பட்சம்,காபி யாவது கட்டாயம் உண்டு—அது எந்த நேரமானாலும் சரி.

...இரவு பனிரெண்டு மணி போல,நடு சாமத்தில் வருவோர்க்கும் பால் இல்லாத கடுங்காப்பியாவது கிடைக்கும்...ஒரு முறை செல்லக்கிளியின் கை மணம் பார்த்தவர்கள் மறுமுறை, வேண்டாமென மறுக்க மாட்டார்கள்....மூன்று தட்டுகள் ஆறு தட்டுகள் ஆனது....இரண்டாவது அடுப்பில் தோசைக் கல்லைப் போட்டாள்....இட்லி,தோசை,கிச்சடி,அல்வா,மிக்சர்,சுக்கு காபி சகிதம்,இரவு சாப்பாடு முடிந்தது

...இரவு சமையலறை சுத்தம் செய்யும் வேலையை மல்லிகாதான் செய்வாள்...பகலில்,வீட்டு வேலை களில்,அவ்வளவு ஆர்வம் காட்டாமல்,கண்டும் காணாமல் இருக்கும் மல்லிகா,இரவு மட்டும் புகுந்து புறப்பட்டு வேலை செய்யும் ரகசியம் அக்கறையா,கடமை உணர்வா,அல்லது,தம்பி வீட்டில் இருக்கும் நேரம்,தனது ஈடுபாட்டையும்,இருப்பையும்,உணர்த்துகிறாளா...என்று புரிய வில்லை செல்லக்கிளிக்கு.

..எதற்கு இதில் போய் ஆராய்ச்சி செய்வானேன்...எப்படியோ.நமக்கு சிறிது நேரம் ஓய்வு கிடைக்கிறதே என்று பேசாமலிருந்து விட்டாள் செல்லக்கிளி..பேசவும் முடியாது...அது அக்கா தம்பியிடம் எடுபடவும் செய்யாது...அது வேற விஷயம்

...ஜூனியர்சை அனுப்பி விட்டு உள்ளே வந்தார் ஆண்டவன்..
‘’ஏல பச்சை...காலேஜ் எப்பிடியிருக்கு...ஒண்ணுமே சொல்ல மாட்டக்க ,,,’’ என்றபடி சாப்பாட்டு மேசை நாற்காலியில் அமர்ந்தார்...எதிரில் வந்து நின்றான் பச்சை...
‘’உக்காருல ‘’
‘’இருக்கட்டும்பா ‘’
‘’சொல்லு...காலேஜ் பிடிச்சிருக்கா’’
‘’பிடிச்சிருக்கு’’
‘’இப்பிடி மொட்டையா சொன்னா எப்டி? பாடம் எதுல நடத்தாறாக?’’
‘’என்னதுப்பா,,வெலங்கள ‘’
‘’இல்லல..பாடம் தமிழ்லயா இங்லீஸ்லயா’’
‘’இங்லீஸ்லப்பா’
‘’ நீ தமிழ் மீடியத்துல படிச்சியே..புரியுதா?
‘’புரியாததை பக்கத்துல கேட்டுக்கிடுவேன்’’
‘’ரொம்ப சங்கடமா இருந்தா சொல்லு..யாரையாவது பாடஞ்ச் சொல்லிக்குடுக்க, ஏற்பாடு செய்தேன்’’
‘’வேண்டாம்,,,நான் பாத்துகிடுதேன்’’
‘’ச்சரி....பயலுக எல்லாம் நல்லபடியா பேசுதானுவலா ‘
’பேசுதானுவ’’
‘’எல்லாம் இந்த ஊர்க்காரனுக தானா?
‘’இல்ல திருநெவேலி,தூத்துக்குடி,சங்கரன்கோயில்,சேர்மாதேவி,அப்பிடின்னு,பக்கத்து ஊர்லர்ந்தும் வாரானுக’’
‘’அங்கேயெல்லாம் காலேஜ் இல்லாமயா இங்க வந்து படிக்காக’’ என்று உரையாடலில் கலந்தாள் செல்லக்கிளி..
‘’அப்டி இல்லட்டி..சீட் கெடைக்காம இருக்கும்...இல்ல இந்த காலேஜ் பிடிச்சிருக்கும்,,,’’----ஆண்டவன்.
‘’சில பயலுக தென்காசி ஊருக்காகவே வந்தோம்னு சொல்றாங்கப்பா’’ என்றான் பச்சை ஆச்சரியத்துடன்,,,,
‘’ம்‌....இந்தா பாரு...நம்ம ஊர் அருவியே எல்லாரையும் இழூத்துரும்,,...சரி,,,நல்ல காலேஜாப் பாத்து சேத்து விட்டாச்சு...நல்லா கவனமா படிச்சுப் பாஸ் பண்ணு...பயலுக கூட அளவாப் பேசிக்கோ...கிளாசைக் கட் அடிச்சிட்டு வால...அங்க போவோம் இங்க போவோம்பானுக...நீ பிடி குடுத்துராத...எங்க அப்பா சத்தம் போடுவாங்கன்னு சொல்லீரு...சரியா ...ஏன்னா ,இந்த வயசு அப்டி...புரியுதால...’’
தலையாட்டினான் பச்சை...


‘’நான்தான் சல்லிப்பயலுகளை கட்டிக்கிட்டு மாரடிக்கேன்....நீயாவது நல்லாப்படிச்சு பிடுங்கல் இல்லாத வேலையாப் பாத்து உக்காரூ ‘’ என்று சொன்னபடி எழுந்து போனார் ஆண்டவன்,,

,,உண்மையில் பிக்கல் பிடுங்கல் பிரச்சினைகள் இல்லாத வேலை என்று எதுவுமில்லை என்பது வக்கீல் ஆண்டவப் பெருமாளுக்குத் தெரியும்...ஆனால் அப்பா ஆண்டவப் பெருமாளுக்கு அதை ஏற்க மனமில்லை.
..முட்கள் இல்லாத வெல்வெட் படுக்கை கொண்ட ஒரு பாதுகாப்பான உலகத்தில். தன் பிள்ளையை அமர்த்தி விடத் துடிக்கும் சராசரி தகப்பனின் மனநிலை அது


...அப்பா எழுந்து போனதும் அம்மாவின் அருகில் வந்த பச்சை,’’ஏம்மா.....எனக்கு பச்சைன்னு பேர் வச்சே?’’ என்றான்..
‘’எங்களுக்கு கல்யாணமாகி அஞ்சு வருஷம் கழிச்சுத்தான் நீ பொறந்த...அதனால இந்தப் பேரதான் விடணும்னு உங்க அத்தை சொல்லிட்டாங்க...’’
‘’நீ வேற பேர் யோசிக்கலயா?’’
‘’ஏன் இல்ல...செந்தில்.சண்முகம்.குமரன்,இப்டி நெறைய பேரு யோசிச்சு வச்சேன்...’’ என்று செல்லக்கிளி இழுக்க,…
‘’ஹூம் ...இதுக்கு பச்சையே பரவால்ல...’’ என்று மகன் முக வாட்டத்துடன் திரும்புவதை காண சகியாமல்,
’’ ஏன் கண்ணு...எதுக்கு கேக்கற ?’’
‘’இல்லம்மா...காலேஜ்ல..பயலுக..பச்சைக் கலரு ஜிங்கி ஜான் செவப்பு கலரு ஜிங்கிஜான்னு பாடி கிண்டல் பண்ணுதானுக’’
செல்லக்கிளி மகனுக்கு ஆறுதல் சொல்ல வாய் திறப்பதற்குள், கையை துடைத்தபடி வந்த மல்லிகா,


‘’கெடக்கானுவ பொச கெட்ட பயலுக...இவனுக ரசிக்கணும்னு பஜ்ஜி பக்கடான்னு பேர் வைக்க முடியுமா?,,..பச்சை மாமலைங்கறது எங்க தாத்தாவோட பேரு...வழி வழியா நம்ம குடும்பத்துல,சொக்காரு , சொந்தக்காரவுக குடும்பத்துல.வீட்டுக்கு ஒருத்தருக்காவது,பச்சைன்னு வைக்கறது வழக்கம்...நம்ம குடும்பத்துல, நான்தான் பட்ட மரமாப் போனேன....என் தம்பிக்கும்,கருவேப்பிலை கொத்து கணக்கா ஒத்த புள்ள....என் தங்கம் நீ வந்து பொறந்தே...அதான் உனக்கு அந்தப் பேரை விட்டாச்சு....’’

‘’சர்தான் அத்த....கூப்டவாவது வேற பேரு வச்சிருக்கலாம்லா’’ என்றான் பச்சை பாவம் போல..

‘’ஆங்...அதான ஆகாது..பட்டப் பேரு வைக்கப்புடாதுல்லா...பட்டப் பேரு வச்சா வச்ச பேரு அழிஞ்சுரும்பாக,,,,என்னப் பெத்த ராசா ஒனக்கு ஒரு கொறையும் வராதுப்பா...போய்ப் படு...காலையில காலேஜ் போனும்லா’’ என்று மருமகனை அவன் கன்னம் வழித்து தான் நெற்றியில் வைத்து நெட்டி முறித்தாள் மல்லிகா.

..அதற்கு மேல் பேசத் தெரியாதவனாய்,பேசி பயனில்லை என்றுணர்ந்தவனாய் படுக்கைக்கு சென்றான் பச்சை.. இப்படியான ஆதிக்க குணம் வாய்ந்த பெண்கள்,மற்றவர்கள் சிந்திக்க அனுமதிப்பதுமில்லை...அதற்கு வாய்ப்பு தருவதுமில்லை.

..மல்லிகா காட்சிக்குள் வரவுமே,செல்லக்கிளி,இனி தனக்கு வேலையில்லை என நகர்ந்து விட்டாள்....பால் சூடு செய்து,மல்லிகா ,பச்சைக்கு கொடுத்து விட்டு,தங்களிருவருக்கும் எடுத்துக் கொண்டு படுக்கை அறைக்குப் போனாள்...

அங்கே ஆண்டவன் ஏதோ ஒரு புத்தகத்திலிருந்து குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்தான்....சிறிது நேரம் காத்திருந்தாள் செல்லக்கிளி...குறிப்பெடுத்த தாள்களை,மறு நாள் கொண்டு போக வேண்டிய கோப்பில் வைத்து விட்டு வந்தார் ஆண்டவன்....பால் அருந்தினார்கள்...

''அக்காவும்,பச்சையும் தூங்கப் போயாச்சா செல்லம்?'

'ஆண்களுக்கு படுக்கைறைக்கு என்று தனி குரல்,தனி மொழி இருக்கிறது போலும்...

''ஆமா,,,பச்சை படிச்சிக்கிட்டு இருக்கான்...மதினி படுத்தாச்சு..''
''ஒழுங்கா படிச்சு வரணும்,,,அவனை நெனச்சா கவலையா இருக்கு..''


''வீணா மனசைப் போட்டு குழப்பிக்கிடுதீக .....ஸ்கூல்ல நல்லாத்தான படிச்சான்,,,நமக்கு அவன் படிப்பு,பரீச்சைனு ஏதாவது தெரியுமா? கட்டு செட்டா படிச்சு வரல?'' என்று தாய்மைக்கே உரிய கோபத்துடன் மகனுக்குப் பரிந்து வர,

''புரியாமப் பேசாத செல்லம்...காலேஜுக்குள்ள காலெ டுத்து வச்சுபுட்டா பிள்ளைக மனசே மாறிபோயிரும்.
றெக்க மொளைச்சிரும்....பறக்கத் துடிக்கற வயசு..அதுவும் போக இன்னிக்கு காலம் அப்டி இருக்கு...தெனமும் எத்தன கேசு பாக்கோம்..பள்ளிக்கூடம் வரைக்கும்,அவனுவள்ட்ட,ஒரு கட்டுபாடு இருக்கும்,,,காலேஜ் வந்துட்டா,அவுத்து விட்ட கழுதைக மாதிரி ஆயிருதானுவோ .....’’


‘’அதிலயும்,கருத்தாப் படிச்சு,கதையா முன்னுக்கு வர்ற பிள்ளைகளும் உண்டு,,,’’

‘’உண்டும்மா...நான் இல்லேங்கல....நம்ம புள்ள,அதுல ஒருத்தனா இருக்கணும்லா’’
‘’இருப்பான்...உங்களுக்கு எப்பவும்,இந்த வேண்டாத மனக்குழப்பந்தான்....உலகாம்னா நாலும் இருக்கும்...விட்டு தள்ளுங்க....சாமி மேல பாரத்தை போடுங்க..நம்ம கெட்டிக்காரதானத்திலயா எல்லாம் நடக்கு? நூலு அவன் கையிலல்லா இருக்கு....நாம பொம்மாதான....’’ என்றாள் செல்லக்கிளி....
‘’அதுவுஞ்சரிதான்...என் அப்பன் முருகன் துணையிருப்பான்’’ என்று பேரு மூச்சு விட்டார் ஆண்டவனை நினைத்த அந்த ஆண்டவப்பெருமான்....வெளியில்,தினமும்.பல பஞ்சாயத்துகளை சந்திப்பவன்‌தான்..இருந்தாலும்.அவனது, மன சஞ்சலத்துக்கு,மருந்து,மனைவியிடம் தான் இருக்கிறது...
‘’ஏங்க,முருகன்னு சொன்னீங்கல்லா...அந்தால எனக்கு கார்த்தீயல் வருதுல்லா அது நெனைவு வந்திட்டு....கார்த்தீயலுக்கு உடுத்த,புதுசேலை எடுக்கணும்லா... நாளைக்கு,லெட்சுமி அக்கா கூடப் போயி எடுத்துட்டு வாரேன்’’ என்று.அனுமதி கேட்கும் தொனியில் தொடங்கி,தகவல் சொல்லும் வகையில் சொல்ல,
‘’ச்சரி,,,,காலையில பணம் தாரேன்...எடுத்துக்க...அப்பிடியே,அக்காவுக்கும், ஒரு சேலை எடுத்திரு’’
‘’என்ன புதுசாச் சொல்லுதீக...இந்த வீடு நடைமுறை அதான...’’ என்று சற்று சூடானாள் செல்லக்கிளி...
‘’எப்பவும்,அக்காவுக்கும் சேர்த்துதான் துணியோ,மணியோ, நீ எடுப்ப....இல்லேங்கல...மறந்துரக் கூடாதுல்லா....அதான் சொன்னேன்....’’


‘’மறக்கறதுக்கு, இன்னிக்கு நேத்தா நடக்கு....இந்தப் பய பொறந்த வீட்டுக்குள்ள,நம்ம வீட்டோட வந்து சேர்ந்தாக,உங்க அக்கா...வருஷம், ஓடிப்போச்சு.அந்தப்பய காலேஜுக்கும் போயிட்டான்....இன்னிக்கி வரைக்கும்,நான் அவுகள,தள்ளி நில்லுன்னு,ஒரு வார்த்தை சொல்லியிருப்பனா?நீங்க என்னடான்னா,ஒண்ணுஞ்செய்யாதவ,மாதிரியில்லாப் பேசுதீக’’ என்று காட்டமாய் பதில் சொன்னாள் செல்லக்கிளி..

..ஏதடா நாம் வாய் திறந்த நேரம் சரியில்லை போல என்று எண்ணினார் ஆண்டவப்பெருமாள்

..அவர் மௌனத்தை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு,மேலும் தொடர்ந்தாள் செல்லக்கிளி..’’ இன்னிக்கு மதியம், பாருங்க...நம்ம கணபதி அக்கா,செலவுக்கு இல்லேன்னு எறநூறு ரூவா கேட்டாக....பாவமேன்னு குடுத்தேன்...அதுக்கு.என் தம்பி பாடு பட்டு சம்பாதிச்சி கொண்டாந்து போடுதான்...நீ வாறவ போறவளுக்கெல்லாம் வாரி வழங்குன்னு ஒரே சத்தம்...நான் காதிலயே வாங்கல...செய்யிறவனுக்கு செய்யனும்,,,செத்தவனுக்கு அழனும்,,,அப்பிடின்னு சொல்லுவாக எங்கப்பா...அந்த அக்காவும், பாத்தும் பாராம நாம சொல்லுத வேலைய தட்டாம செய்யுதுல்லா....அப்ப,நாம மட்டும்,கணக்கு பார்த்துகிட்டு,வெறப்பா நிக்க முடியுமா?’’ என்று தனது தரப்பு வாதத்தை வைத்தாள் செல்லக்கிளி..

பிரச்சினை சேலையில் இல்லை என்று புரிந்தது ஆண்டவனுக்கு....பல விஷயங்களிலும் பகலில் சேர்ந்த மன அழுத்தம்,இரவில் கணவனின் அருகாமையில்,வெடிக்கிறது...என்று புரிந்தது

...இப்பொழுது மனைவியின் மீது பரிதாபம் பிறந்தது ஆண்டவனுக்கு ....அவளது கால்களை பரிவுடன் பிடித்து விட்டார்....

‘’செல்லம் ...எனக்கு உன்னைத்தெரியாதா? இல்ல அவளை தெரியாதா?வெளியில போயிருததனால எனக்கு வீட்டு நிலவரம் எதுவும் தெரியாதுன்னு பாக்கியா....கண்ணைப் பாத்தே கண்டு பிடிச்சுரு வேன்...என் தொழிலே அது தான....நீயாக் கண்டுதான் இந்த குடும்பத்தை கொண்டு செலுத்திக்கிட்டுருக்கே...அது புரியாம இல்லம்மா...’’என்ற கணவன் சொல்லில் கொதிக்கின்ற பாலில் நீர் தெளித்தது போல,அப்படியே அமுங்கிப் போனாள் செல்லக்கிளி

...பெண்கள் கணவனிடம் எதிர் பார்ப்பது ஆறுதலையும் அன்பையும்தான்...பிரச்சினைகளுக்கான தீர்வை அல்ல...எத்தனை இடர்களையும் துரத்தி விடவும் தூக்கிப் போடவும் அவளுக்குத் தெரியும்...விட வேண்டிய இடத்தில் விட்டு,பிடிக்க வேண்டிய இடத்தில் பிடிப்பாள்...இந்த உளவியலை நன்கு புரிந்து வைத்திருப்பவர் ஆண்டவன்..

‘’அது செல்லம், சின்னப் பிள்ளையிலயே அக்கா கொஞ்சம் மொரண்டுதான்...நெனச்சத முடிக்கணும்பா...பொம்பளப் பிள்ளையாச்சேன்னு எங்க அம்மா அப்பாவும் பொத்தி பொத்தி வளர்த்துட்டாக....மாப்ள வீட்டுல போயும் அதே பிடிவாதம்...கோவம்‌..எரிச்சல்....எல்லாரையும் எடுத்தெறிஞ்சு பேசுறது....புத்தி சொல்லிப் பாத்தாக...கேட்கல...’’

‘’ஒரு பிள்ளை இருந்தாக் கூட அது முகத்தைப் பார்த்து, கொஞ்சம் மாறியிருப்பாக....அதுக்கும் வழி யில்லாமப் போச்சு ‘’----செல்லக்கிளி..

‘’எல்லாம் ஒண்ணு சேர்ந்துது....கடைசியில.அவ வாழ்க்கை மண்ணாப் போனதுதான் மிச்சம்...கோர்ட்டுல, விவாகரத்து கேட்டு வாங்கிட்டு பிரிஞ்சி போவாகள்ல,புருஷன் பொஞ்சாதி,..அவங்களைப் பாக்கறச்சே எனக்கு வேதனையா இருக்கும் செல்லம்,,,ஒரு குடும்பம் பிரிஞ்சா .அவுகளைச் சுத்தியுள்ள எத்தன குடும்பம் பாதிக்கும்னு நமக்குள்ல தெரியும்”’

‘’ஆமா...மதினிய நாம தாங்கிப் பிடிச்சிக்கிட்டோம். ...இல்லன்னா...அவுக கதி என்னாகும்?’’

‘’ஊரு ஓலகத்துல ஒவ்வொருத்தரு,அநாதை இல்லங்கள் வச்சி யாரோ,முகம் தெரியாதவங்களையே பரமரிக்கிறாக...நம்ம ஊர்லயே ராமக்ரிஷ்ணன் நடத்துராறே...நாம,நம்ம கூடப் பிறந்தவளை வச்சுப் பார்க்கறதுல.என்ன குறைஞ்சு போயிரப் போறோம்?’’
தலையாட்டி ஆமோதித்தாள் செல்லக்கிளி...அன்னியோன்னியமான தம்பதிகள்,பகல் வாழ்க்கைக்கான சக்தியை இரவில்தானே பெற்றுக் கொள்கிறார்கள்...


‘’என்ன செல்லம் மல்லிகைப்பூ நிறைய வச்சிருக்க?’’
‘’வீட்டுல பூத்துதுன்னு சொல்லி,எதிர் வீட்டுப் பொண்ணு, காந்தி குடுத்துச்சு...’’
‘’புதுசா குடி வந்திருக்கே அந்தப் பொண்ணா?அவ பேரே காந்தியா?’’
‘’ஆமா...காந்திமதியாம்...சுருக்கமா காந்தின்னு கூப்புடுதாக’’
‘’இன்னிக்கு தான் நல்லாருக்கு....நடிகை கே.ஆர்.விஜயா மாதிரி இருக்கே’’


‘’ம்‌...அப்ப நீங்க சிவாஜியாக்கும்?’
‘’ஏன் ...இல்லியாக்கும்...’’
மனம் லேசானதும்,உடல் கவர்ச்சி மேலோங்க....அன்பு வார்த்தைகளாலும்,அரவணைப்பினாலும்,ஒருவருள் ஒருவர்,கரைந்து,காணாமல் போய்க்கொண்டிருந்த்தார்கள்.....
‘’மல்லிகை...என் மன்னன் மயங்கும்.
பொன்னான மலரல்லவோ...
எந்நேரமும் உன் ஆசை போல்
பெண் பாவை நான் பூ சூடிக்கொள்ளவோ
குளிர் காற்றிலே தளிர் பூங்கொடி
கொஞ்சிப் பேசியே அன்பை பாராட்டுது’’
காட்சிக்குப் பொருத்தமான கானம் எங்கிருந்து வந்தது என்ற யோசனையெல்லாம் வேண்டாம்...ஏனெனில் பாட்டு,ஆண்டவன்-செல்லக்கிளி இதயங்களில் இருந்து கூட வந்திருக்கலாம் இல்லையா?
இதமான வார்த்தைகள்
ஆறுதலான வார்த்தைகள்
Boost when reading
 

sumee

Well-Known Member
Super. It's true that a woman needs a recognition from her husband. If she gets, she can do anything for him
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கண்ணம்மாள் ஸ்ரீதர் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top