sithara vaiththa sempaavaiyaal - 07

Advertisement

shamla

Writers Team
Tamil Novel Writer
07


இரவின் குளுமையில் மெல்லிசையுடன் ஏகாந்த சூழலை ஏற்படுத்தி இருந்தது அந்த ரெஸ்டாரண்ட். ஓலைகளால் வெய்யப்பட்ட குடிசை போன்ற அமைப்பில் தேக்கு மரங்களாலான வட்ட வடிவ மேசையும் இருக்கைகளும் என அழகாய் வடிவமைக்கப்பட்டிருந்தது அந்த உணவகம்.

“குச்ச் ஆர் சாஹி” (want anything else?) கையில் இருந்த பழச்சாற்றை டேபிளில் வைத்த பணிப்பெண் அங்கிருந்தவரை பார்த்து பணிவுடன் கேட்க, அவளின் கேள்வியில் உள்ளே தள்ளிக்கொண்டு இருந்த ப்ரைட் ரைஸை விடுத்து நிமிர்ந்து அவளை நோக்கி மேலும் கீழுமாய் அளவெடுத்தான் அவன்.

“ம்ம்... ஆமா நானும் வந்ததுல இருந்து பார்க்கிறேன் ஒருத்தி கூட தமிழ்ல பேசமாட்டீங்கிறீங்க”

அவனின் கேள்வியில் புன்னகை சிந்திய பணிப்பெண் “தமிழ் நஹி மாலும்”

“ஓஹோ... எங்க காசு வேணும்... எங்க ஓட்டு வேணும்... ஆனா தமிழ் மட்டும் வேணாமா...”

“ஹிந்தி நேஷனல் லேங்விஜ்... கத்துக்கோ பியூச்சர் நல்லாஆ இருக்கும்...” அவனின் கேள்விக்கு பதிலளிக்காது இலவச அறிவுரை வழங்கியவள் அங்கிருந்து நகர,

அவளை போக விடாமல் கைதட்டி “பாப்பா... இங்கிட்டு வா...” என அழைக்க, அவனை புரியாமல் பார்த்துக்கொண்டடே அவனருகில் வந்து என்னவென்பது போல் பார்த்து நின்றாள்.

“எங்க தமிழ் மொழி இல்லன்னா இன்னிக்கு இந்தியால ரெண்டு ஆஸ்கார் அவார்ட் கிடைச்சிருக்காது... பார்க்கிறதுக்கு தான் பம்மின மாதிரி இருப்போம் பதுங்கி பாயுறதுல புலி... புரிஞ்சதா... இப்போ நீ என்ன பண்றேன்னா... நல்ல தமிழ் டீச்சரா பார்த்து அனா, ஆவன்னா, இனா, ஈயென்னா கத்துக்கோ என் பக்கி...” அவளை முறித்துக்கொண்டு கூற, அதை கேட்டு அவனை உறுத்து விழித்த ஹிந்திக்காரி முகத்தை தோள்பட்டையில் இடித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

அதேநேரம் “வாவ் சூப்பர்... அண்ணே கலக்கிட்டீங்க போங்க.. சான்சேயில்ல... பின்னிட்டீங்க...” கை தட்டி ஆர்பரித்த வண்ணம் அவன் இருந்த மேசையில் வந்து ஒன்றாய் அமர்ந்து கொண்டனர் அந்த மூவரும். அது வேறு யாருமில்லை.... சாட்சாத் ஷக்தி.. கணேஷ்.. கேப்டன்.. மூவருமே தான்.

அவர்கள் மூவரையும் புரியாது பார்த்தவன் “யாரு” என்பது போல் அவர்களை உற்று பார்க்க அதை கண்டு கொள்ளாமல் டேபிளில் இருந்த உணவுப்பதார்த்தங்களை தங்கள் புறம் நகர்த்திக் கொண்டவர்கள் “யாருக்கும் இந்த தைரியம் இருக்காதுண்ணே...” என்றபடி உணவை ஒரு வெட்டு வெட்ட ஆரம்பித்தனர்.

“உங்களை பார்த்தாலே தெரியுது உங்களுக்கு தமிழ் மேல பற்று அதிகம்னு...”

“ஆமாண்ணே... நீங்க சினிமால வசனம் எழுதப்போகலாம்... சும்மா சூப்பரா பேசுறீங்க...”

“வசனம் என்ன அண்ணா இனிமே தமிழ் பட ஹீரோ தான்...” ஆளாளுக்கு சிலாகித்து கூற,

“ஹீ ஹீ..” அதை கேட்டு பெருமையாய் சிரித்தபடியே, அவர்களை கேள்வியாய் பார்த்தவன் சிக்கனை எடுக்க கைகளை நீட்டி அதுவோ தட்டுபடாமல் போகவே டேபிளை பார்க்க அது அவர்கள் மூவரின் வாய்க்குள்ளும் அரைபட்டுக் கொண்டிருந்தது.

அதை பார்த்து முழி பிதுங்கியபடி ‘பார்த்தா பலநாள் பசியில கிடந்திருப்பாய்ங்கலோ இந்த பாச்சல் பாய்றானுங்க...’ என அவர்கள் உண்ட வேகத்தினை பார்த்து எண்ணிக் கொண்டவன் அங்கிருந்த பணிப்பெண்ணை அழைத்தான்.

“பாப்பா இங்க வாம்மா....” முன்பு கழுத்தை நொடித்துக் கொண்டு போனவள் அவன் மீண்டும் அழைக்கவும் அவனை குறுகுறுவென பார்த்துக்கொண்டு வர, அதை பார்த்து முறைத்தவன் ‘தம்பிங்க பசியில கிடக்கிறானுங்க... இது ஆடி அசஞ்சு பல்லை காட்டிக்கிட்டு வாரத பாரு..’ நொடித்துக் கொண்டான்.

அப்பெண் வந்து அவர்கள் மூவருக்கும் உணவுகளை பரிமாறிக்கொள்ள அவனோ அப்பெண்ணின் சட்டையில் இருந்த அந்த ரெஸ்டாரண்டின் நம்பரை பார்த்து ‘ஹோமுக்கு ஆர்டர் பண்ணி சொல்லிட வேண்டியது தான்...’ என எண்ணிக் கொண்டே அவள் சட்டையில் இருந்த எண்களை தன் செல்போனில் அழுத்திக் கொள்ள அதை எதேர்ச்சியாய் பார்த்தவள் அவன் பார்வை போகும் தன் நெஞ்சுப்பகுதியை பார்த்து முகம் கோபத்தில் ஜொலிக்க அவனை பயங்கரமாய் முறைத்தவள் மறுகணம் அவனருகில் சென்று கும்மி எடுத்து விட்டாள்.

அவள் வலியில் கதற, அதில் உண்டு கொண்டிருந்த மூவரும் என்னவோ எதொவோவேன்று அவனை காப்பாற்ற அந்த பெண்ணோ கோபத்தில் காச்சுமூச்சென்று கத்த ஆரம்பிக்க விஷயம் என்னவென்று புரிந்து ஷக்தி “என்னம்மா நீ நம்பரை எங்க எழுதி வைக்கனும்னு தெரியாது..” என மென்மையாய் கடிந்து கொள்ள அதன் பின்பே அவளுக்கும் தன் தவறு புரிந்தது.

அதன் பின் அப்பெண் தன் தவறுணர்ந்து மன்னிப்பு கேட்க, அதை பெரும் முறைப்புடன் ஏற்றுக் கொண்டவன் தன்னை காப்பாற்றிய மூவருடனும் தன் வீட்டுக்கு கிளம்பினான்.

ஊட்டியின் இரவு நேர குளுமையும் உடலை வருடிச் சென்ற சில்லென்ற குளிர் காற்றும் இரவு நேர நடையை இன்னும் அழகாக்க குளிரை தாங்க முடியாமல் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு நடந்த நால்வரும் வெகு விரைவிலே வீட்டை அடைந்திருக்க மூடியிருந்த வீட்டின் கதவை திறந்து விட்டவன் அவர்கள் மூவருடன் வீட்டினுள்ளே நுழைந்தான்.

“பொம்பளைங்கலாடா அவளுங்க இந்த அடி அடிக்கிறாளுங்க... அவளுங்ககிட்ட இருந்து என்னைய காப்பத்தினதால தான் நான் என்வீடு வரைக்கும் உங்கள கூட்டியாறேன்... காலைல குளிச்சுகிளிச்சு ரெடியா இருங்க வொர்க்ஷாப் கூட்டிபோறேன்...” என்றவன் அங்கு தனக்கென்று இருந்த அறைக்குள் நுழைந்து கொண்டான்.

வரும் வழியிலே இவர்கள் மூவரும் தங்குவதற்கு வீடும் செய்வதற்கு வேலையும் கேட்டிருக்க அவர்கள் மேல் பாவம் பார்த்தவன் தான் மேனேஜராக வேலை செய்யும் வொர்க்ஷாப்பிற்கு அழைத்து செல்வதாக கூறியிருந்தான். அனைவராலும் மேனேஜர் என அழைக்கபடும் கருப்பன்.

நீண்ட தூரம் நடந்து வந்த களைப்பில் போட்டது போட்டபடி அங்கிருந்த அறையினுள் சென்று கட்டிலில் விழுந்தவர்கள் அடுத்த சில நொடிகளிலே உறங்கிப்போயினர்.

தன் அருகில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கேப்டனையும் கணேஷையும் பார்த்த ஷக்தியின் இதழ்கள் லேசாய் வளைந்தது.

ஒருவனின் வாழ்க்கை மாறுவதற்கு சில நொடிகள் போதும் போல. அவர்களின் வாழ்க்கையும் மாறிவிட்டதே.. சில நாட்களுக்கு முன்னான அவர்களின் வாழ்க்கையை நினைத்து பார்த்தவன் அந்த நினைவுகளுடனே கண்ணயர்ந்தான்.


********


பிரதான சாலையில் அமைந்திருந்தது அந்த தனியார் கல்வி நிறுவனம். விசாலமான நிலப்பரப்பில் எழுப்பப்பட்டிருந்த அந்த பள்ளியின் கட்டிடங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் அமைந்திருக்க மாணவர்கள் அனைவரும் காலைநேர ஒன்றுகூடல் முடிவடைந்து வகுப்பிற்குள் நுழைந்து கொண்டிருந்தனர்.

அந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்பறையில் ஆங்கில பாடம் நடத்திக்கொண்டு இருந்தாள் ஷாஷி.

முன்பிருந்ததை காட்டிலும் மிகையான அழகுடன் மிளிர்ந்தாள்.

ஐந்தரை அடி உயரத்தில் இருந்தவளின் கொடி போன்ற தேகமும் பளிங்கு நிற மேனியும் படிப்பினால் கிடைப்பெற்ற நிமிர்வும் என அழகாய் ஜொலித்தவளின் அழகில் ஒன்று மட்டுமே குறையாய் இருந்தது.

அவளின் சிரிக்கும் இதழ்கள் இப்போதெல்லாம் சிரிப்பினை மறந்து செயற்கையாய் புன்னகையை பூசிக்கொண்டு இருந்தது. வாயோயாமல் வளவளப்பவளின் பேச்சு முற்றிலும் குறைந்து அங்கு அமைதி ஆட்கொண்டிருந்தது.

“Ok students, tomorrow is a very important test, so all must come..” மாணவர்களுக்கு எடுத்துரைத்தவள் அடுத்த படத்திற்கான அழைப்பு மணி இசைக்கவும் ஒருவித சோம்பலுடன் ஸ்டாப் ரூம் நோக்கி சென்றாள்.

ஒன்றிரண்டு ஆசிரியர்கள் மட்டும் அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டு இருக்க அவர்களை பார்த்து மெல்லிய புன்னகை ஒன்றை உதிர்த்தவள் சற்று தள்ளி இருந்த இருக்கையில் போய் அமர்ந்து கொண்டாள்.

கைகளோ அதன் பாட்டிற்கு அங்கிருந்த புத்தகமொன்றை புரட்டிக் கொண்டிருக்க மனமோ புரட்டும் பக்கங்களை போல் நில்லாமல் எதையோ நினைத்து வேகமாய் ஓடிக் கொண்டிருந்தது.

அந்த நினைவுகளின் தாக்கம் என்றும் போல் இன்றும் தொண்டையை அடைக்க செய்ய அதை தாங்கவியலாமல் தண்ணீர் பாட்டலில் இருந்த தண்ணீரை தொண்டையில் சரித்துக் கொண்டவள் தன் துக்கத்தையும் அதனுடன் சேர்ந்து விழுங்க முயற்சி செய்தாள்.

முயற்சி மட்டுமே அவளால் செய்ய முடிந்ததே தவிர அந்த நினைவுகளை அவளால் மறக்க முடியவில்லை. அந்த நினைவு கொடுத்த வலி அவள் இதயத்தை சுருக்கென பதம் பார்த்தது. தாங்கொண்ணா வலி... அதை நினைக்கவும் முடியவில்லை மறக்கவும் அவளால் முடியவில்லை.

அதனூடே தலையை பிடித்துக் கொண்டிருந்தவளை அழைத்த பியூன் பிரின்சிபால் அழைப்பதாக கூறவும் முகத்தை கைகுட்டையால் அழுந்த துடைத்துக் கொண்டவள் பிரின்சிபாலின் அறை நோக்கி சென்றாள்.

“எக்ஸ்க்யூஸ் மீ..” நாசுக்காய் அறைக்கதவை தட்ட அதில் தலை உயர்த்தி பார்த்த பூங்கோதை நாச்சியார் அவளை உள்ளே வரும்படி சைகை செய்தவர் தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டார்.

“வர சொன்னதா சொன்னாங்க...” மரியாதையுடன் கேட்க, அதற்கு ஆமோதிப்பாய் தலையசைத்தவர் அங்கிருந்த இருக்கையை காட்டி அமரும்படி மீண்டும் சைகை செய்தார்.

ஐம்பதுகளில் இருப்பார்... நரைத்தமுடி... மூக்கு கண்ணாடி என ஒரு பெண் அதிபருக்கு உரிய அனைத்து தோரணைகளும் இருந்தது. மிக முக்கியமாய் கம்பீரம். அந்த வயதிலும் அத்தனை கம்பீரமாய் இருந்தார். கண்களில் ஒருவித கூர்மை. எதிராளியை துளைக்கும் பார்வை.

சில கணம் அமைதிகாத்தவர் தொண்டையை செருமிக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

“இன்னும் ஒன்வீக்ல அசோசியேஷன் ப்ரோக்ராம் ஒர்கனைஸ் பண்ணியிருக்கோம்... Am I right?” அவளை கூர்மையாய் அளவிட்டுக் கொண்டே கேட்க, அவரின் கேள்வியில் அவள் தலை தானாய் அசைந்து ஆம் என பதில் கொடுத்தது.

அதை கேட்டு மர்மமாய் புன்னகை புரிந்தவர் அவள் கண்டு கொள்ளும் முன்னே முகத்தை சாதாரணமாய் வைத்துக்கொண்டு “அதுக்கு சீப் கெஸ்டா ஆர்.கே கன்ஸ்ட்ரக்ஷன் கம்பனி எம்.டி யை இன்வைட் பண்ணலாம்னு டிஸைட் பண்ணியிருக்கோம்... நாளைக்கு நீ போய் அவரை மீட் பண்ணி பாங்க்சனுக்கு இன்வைட் பண்ணிட்டு வா...” என்றவர் அவ்வளவு தான் உரையாடல் முடிந்தது என்பது போல் தன் மடிகணனியுள் முகம் புதைத்துக் கொள்ள அவரின் அறையை விட்டு வெளியேறியவளுக்கு அவரின் கட்டளையை ஏற்று அங்கு செல்ல விருப்பமும் இல்லை அதை தட்டி கழிக்கவும் முடியவில்லை.
 

shamla

Writers Team
Tamil Novel Writer
முன்பெல்லாம் எப்போதடா எங்காவது செல்வோம் என பரபரப்பாய் இருப்பவள் இப்போதெல்லாம் எங்கும் செல்ல பிடிப்பற்று வீட்டுக்குள்ளே முடங்கி விடுவாள். பள்ளி விட்டால் வீடு.. வீடு விட்டால் பள்ளி. இது தான் அவளின் தற்போதைய உலகம். இப்போதென்றால் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக.

யாரின் மேல் உயிரையே வைத்திருந்தாளோ அவனே அவளின் உயிரினை பறித்து விட்டு வெறும் கூடாய் அவளை விட்டுச்சென்றிருக்க அந்த வெறும் கூடோ ஜடமாய் மாறிப்போய் வெகுகாலமாகி விட்டது.


******


சென்னை விமானநிலையம் வழமைபோல் பெரும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. உள்ளே செல்வதும் வெளியே வருவதுமாய் மக்கள் தத்தம் வெளியில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்க அதே நேரம் ஆறடி உயரத்தில் கருநீல பேன்ட் வெள்ளை நிற முழுக்கை சட்டை அணிந்து ஒரு கையில் கரு நீல கோர்ட்டை ஸ்டைலாக பிடித்துக்கொண்டு கண்களில் கூலர்ஸ் மின்ன வேக நடையிட்டு வந்தான் அவன்.

பார்க்கும் பெண்கள் எல்லாம் பல முறை திரும்பிப் பார்த்து ஏக்கப்பெருமூச்சு விடும் அழகு. அதை எல்லாம் கண்டும் காணாமலும் கடந்து சென்றவனின் நடை தன் கார் அருகில் வந்ததும் குறைய கார் கதவை திறந்து ஏறிக் கொண்டவன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

மூன்று வருடங்களின் பின் தாய்நாடு திரும்பிய முதலாளியை பார்த்து விசுவாசமாய் சிரித்த டிரைவர் காரை மிதமான வேகத்தில் செலுத்த அதை கூட கண்டு கொள்ளாமல் இருக்கையில் தலை சாய்த்தவனின் எண்ணங்கள் எங்கெங்கோ பறந்து சென்றது.

அதை நினைக்க நினைக்க முகம் கோபத்திலும் வெறுப்பில் இறுகிப் போனது கற்பாறையாய். அதற்கு மேலும் அதை நினைக்க பிடிக்காதவனை தன் மடிகனணியை எடுத்தவன் அதில் வந்துள்ள மெயில்களை செக் செய்ய ஆரம்பிக்க கார் வீடு வந்து சேரும் வரையிலும் கூட அவன் அதிலிருந்து தலை நிமிர்த்தி இருக்கவில்லை.

அந்தளவுக்கு வேலை அவனை ஆக்கிரமித்திருந்தது. அதை விடவும் தன் நினைவுகளில் இருந்து தப்பிப்பதற்காகவே அவன் தன்னை வேளைகளில் ஆழ்த்திக் கொண்டான்.

பல வருடங்களின் பின் ஊருக்கு திரும்பியவனை அவனது வீட்டினர் பாசத்துடன் வரவேற்க அவர்களுடன் சில நிமிடங்கள் உரையாடியவன் ‘ஓய்வெடுக்க வேண்டும்’ என்ற கூற்றுடன் தன் அறைக்குள் நுழைந்து கொண்டான்.

அதற்கு மேல் யாருடனும் அவனுக்கு பேச நேரமில்லை அதை காட்டிலும் அவனது வீட்டினருக்கும் கூட அதற்கு மேல் அவனுடன் பேச நேரமிருக்கவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தொழில். அதன் பின்னே ஓடுவதிலே அவர்கள் நேரம் விரைந்து விடும். இதில் எங்கே மற்றவர்களுடன் உற்காந்து பேசுவது.

அதை நினைத்து பார்த்தவன் மீண்டும் இறுகிப்போனான். இந்த இறுக்கத்தை தளர்த்த தானே அவன் அவளை நேசித்தான். அவள் சிரிப்பில் தன் துன்பம் குறைவது போல் உணர்ந்தானே... அவள் பேச்சில் தன் தனிமை கரைவது கண்டு மகிழ்ந்தானே. அனைத்தையும் சிதைத்து விட்டாள். அதை நினைக்க நினைக்க ஆத்திரம் அதன் எல்லையை கடந்தது போல் இருந்தது அவனுக்கு.

தன் அறைக்குள் நுழைந்து கதவை தாளிட்டவன் மறக்க நினைத்தும் முடியாமல் பொக்கிஷமாய் சேமித்து வைத்த அவள் நினைவுகளை கனத்த மனதுடன் அசைபோட்டான். கைகளோ அதன் பாட்டிற்கு அலுமாரியில் ஒரு ஓரத்தில் தூக்கி கடாசிய அவள் புகைப்படங்களை தூசு தட்டி அதில் புன்னகை முகத்துடன் காட்சியளித்தவளை ஏக்கமாய் பார்த்து வைத்தது.

அதேநேரம் இத்தனை துன்பத்தையும் மீறி அவன் இங்கு வந்திருக்கிறான் என்றால் அதற்கு காரணம் அவனின் செல்லா தான். அவனின் செல்லாக்காகத்தான் அவன் மீண்டும் இங்கு வந்திருகின்றான்.

தன் செல்லாவின் நினைவு வந்தவுடனே தான் செல்லாவுக்கு கொடுத்த வாக்கும் நினைவு வர தன் கையிலிருந்த புகைப்படத்தை நொடி நேரம் கூட தாமதிக்காது சுக்குநூறாய் கிழுத்தெறிந்தவன் ஓய்ந்து போய் கட்டிலில் அமர்ந்து கொண்டான். கைகள் தலையை தாங்கிக் கொண்டது. உடல் இறுகிப்போனது. இருந்தும் அவனையும் மீறி அவன் மனகண்ணின் மின்னி மறைந்தாள் அவனவள். புன்னகை முகத்துடன்.


*****


“எழுந்துடி... இன்னும் எவ்ளோ நேரந்தான் தூங்குவ... இப்போ எழுந்துக்க போறியா இல்லையா...”

“ஐஞ்சு நிமிசம்டி... ப்ளீஸ்... ராத்திரி முழுக்க தூங்கவே இல்ல...” பில்லோவை இறுக்கிக்கொண்டு குப்புற விழுந்து தூங்க ஆரம்பித்தாள் ஆர்த்தி.

“உன் வருங்கால புருசனோட சாட்டிங்காக்கும்... இதெல்லாம் உனக்கே கொஞ்சம் ஓவரா இல்ல... இன்னும் மூணு வாரங்கூட இல்ல கல்யாணத்துக்கு... இப்போவும் பேசித்தான் ஆகணுமா...” அவளை தூங்கவிடக்கூடாது எனும் தீவிர முடிவுடன் அவளை எழுப்புவதிலே குறியாய் இருந்தாள் நிம்மி. அவளின் அத்தை மகள். கூடவே பாலாவும் பல நாட்களின் பின் தன் இயல்பான நிலைக்கு திரும்பி அந்த கும்பகர்ணியை எழுப்புவதற்கு முயன்று கொண்டிருந்தாள்.

வெகு நேரம் முயன்று பார்த்த நிம்மி அவள் எழும் வழியை காணாது குளிர் நீரை எடுத்து வந்தவள் அவள் முகத்தில் அபிஷேகம் செய்ய மறுகணமே “ஆஆஆஆ” எனும் அலறலுடன் அலறியடித்துக் கொண்டு எழுந்தமர்ந்தாள் ஆர்த்தி.

முகத்தில் வழிந்த நீரை இரு கைகளாலும் ஒற்றி எடுத்துக் கொண்டவள் தன்முன்னே நின்றிருந்த பாலாவையும் தன் அருமை அத்தைமவள் நிம்மியை ரத்தகாட்டேரியின் பசியை தீர்க்க வந்த மாமிசமாய் கொலைவெறியுடன் பார்த்தவள் அடுத்த கணமே அவர்கள் இருவரின் மேலும் பாய்ந்திருந்தாள்.

“எதுக்குடி என்னை எழுப்பினிங்க... நான்தான் சொன்னேன்ல இப்போ தான் தூங்க ஆரம்பிச்சேன் எழுப்பாதிங்கன்னு... அதையும் மீறி எதுக்குடி என்னை எழுப்பினீங்க...” பில்லோவால் இருவரையும் மொத்த பதிலுக்கு அவர்கள் இருவரும் அவளை மொத்த கலகலப்பான குட்டி கலாட்டா அரங்கேறியது அந்த வீட்டில்.

அதற்குள் மூவரும் ஓய்ந்து போய் கட்டிலில் மல்லாக்க படுக்க ஆர்த்தியின் அருகில் படுத்த நிம்மி அவளை தலையில் கொட்டி “உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்காடி... உன் கல்யாணத்துக்கு வேலைமெனக்கெட்டு உன் பிரெண்டு சென்னைல இருந்து வந்திருக்கா... அவளுக்கு ஊரை சுத்தி காட்றதை விட்டிட்டு நல்லா தூங்குமூஞ்சியாட்டம் தூங்கி வழியிற... உன்னை நம்பி எப்பிடிடி உன் பிரெண்டு இங்க வந்தா...” அவளை கடிய, அதை கேட்டு நாக்கை கடித்துக் கொண்டவள் மன்னிப்பு கோரும் பாவனையில் பாலாவை பாவமாய் பார்த்து வைத்தாள்.

“சாரிடி... மன்னிச்சிடு.... எதோ தெரியாம... இதோ ஒரு நிமிசத்துல நான் பிரெஷாகிட்டு வந்திறேன்... வெளிய போகலாம்...” என ஆயத்தமாக கட்டிலில் இருந்து கீழிறங்க,

அதை கேட்டு மெல்லிய புன்னகை சிந்திய பாலா “அதெல்லாம் ஒன்னும் வேணாம் ஆரு... நீ கல்யாணப்பொண்ணு சோ வீட்டிலே இருந்துக்கோ.. நானும் நிம்மியும் வெளிய போய் சுத்திட்டு வரோம்...” அவளுக்கு பளிப்பு கட்டிக்கொண்டு கூற, அதை கேட்டு செல்லமாய் சிணுங்கினாள் ஆர்த்தி.

“அதெப்பிடி நீங்க ரெண்டு பேரும் என்னை தனியா விட்டிட்டு போகலாம்... அதெல்லாம் சரிவராது... நானும் உங்க கூட வரேன்...”

காலையுணவுக்கு மூவரையும் தேடி வந்த பஞ்சவர்ணம் மகளின் பேச்சை கேட்டு அவள் தலையில் கொட்டியவர் “இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணத்த வச்சிட்டு ஊர் சுத்த போக போறியா... அதெல்லாம் ஒன்னும் வேணாம்... பேசாம அடங்கி வீட்டில இருந்துக்கோ... யாராவது கேள்விப்பட்டா என்னத்துக்கோ ஆகும்...” கண்டிப்புடன் கூற,

“அதானே.. ஊரு உலகம் என்னத்த சொல்லும்... சோ நீ வீட்டிலியே இருந்துக்கோ ஆரு கண்ணு... நாங்க ரெண்டு பேரும் மட்டும் நல்லா ஜாலியா ஊர் சுத்திட்டு வரோம்... பாய்...” என அவளுக்கு பறக்கும் முத்தமொன்றை கொடுத்த நிம்மி ஆர்த்தியின் ஸ்கூட்டி கீயை எடுத்துக் கொண்டு பாலாவுடன் வெளியில் கிளம்பி விட்டாள்.


*****


காவல் நிலையம்...

அதற்கே உரிய பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. ACP ரத்னவேல் தன் அறையினுள் முக்கிய கோப்பொன்றை பார்வையிட்டுக் கொண்டிருக்க, அவனின் அறையை தட்டி அனுமதி வேண்டி உள்ளே நுழைந்தான் காளிதாஸ்.

“சார் குட் மோர்னிங்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் சார்...” தன் கையிலிருந்த கோப்பை மேலதிகாரியின் முன் நீட்ட அதை வாங்கிக் கொண்டவன் அதை பிரித்து பார்த்தான்.

“அவனோட பிங்கர்பிரிண்ட் கரெக்டா மேட்ச் ஆகிடிச்சு” இன்னுமொரு கோப்பை எடுத்து நீட்டினான்.

“அவன் சம்பந்தமா எல்லா டீடைல்ஸையும் கலெக்ட் பண்ணிட்டேன் சார்... சம்பவம் நடந்த அடுத்த நாள் காலைல ராம் சில்க்ஸ்ல இருபத்தன்சாயிரதுக்கு ட்ரெஸ் பர்சேஸ் பண்ணியிருக்கான்... அங்கயிருந்த cctv புட்டேஜ்ல எல்லாமே கிளியரா ரெகார்ட் ஆகியிருக்கு...”

“இது பாடில இருந்து எடுத்த வூடன்ஸ்டிக்... இதால தான் குத்தி கொலை பண்ணியிருக்கான்...” ஒரு கவரை அவனிடம் கொடுத்தவன் “அதுமட்டுயில்லாம எட்டு வயசிலேயே தங்கச்சிய கொலை பண்ணியிருக்கான்... இப்போ சம்பத்... இவனை வெளியில் விட்டா யாருக்கு பாதுக்காப்பு இல்ல சார்...” தன் அறிக்கையை கூறியவன் பிற வேலைகளை கவனிக்க அங்கிருந்து வெளியேறி விட்டான்.

தன் கையிலிருந்த கோப்புகளை வெகு தீவிரமாய் பார்த்துக் கொண்டிருந்த ரத்னவேல் அதிலிருந்த புகைப்படங்களை அங்கிருந்த போர்டில் ஒட்டினான். அதில் அப்பாவியாய் சிரித்துக் கொண்டிருந்தனர் அவர்கள் மூவரும்....

அவர்கள் யார் எனும் கேள்விக்கான பதில் விரைவில்..


“ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன்
உன்னைப் பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன்
என் உயிரில் நீ பாதி என்று
உன் கண்மணியில் நான் கண்டு கொண்டேன்
எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன்
இப்படி என் மனம் துடித்ததில்லை
இமைகள் இரண்டையும் திருடிக் கொண்டு
உறங்கச் சொல்வதில் நியாயமில்லை
நீ வருவாய இல்லை மறைவாயோ? ஏ ஏ ஏ ஏ ஏ!
தன்னைத் தருவாயோ? இல்லை கரைவாயோ”



சிதறும்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top