Ramadan 2021- Day 24 - Vera level tortures

Advertisement

fathima.ar

Well-Known Member
துன்புறுத்துதல்

நபி (ஸல்) அவர்களின் பகிரங்க அழைப்பைத் தொடர்ந்து பல மாதங்கள் எதிரிகள் மேற்கொண்ட தடுப்பு முயற்சிகள் அனைத்தும் தோல்வியைத் தழுவின. தாங்கள் கையாண்ட வழிமுறைகளால் எவ்வித பயனுமில்லை என்று அவர்களின் அறிவுக்கு மெதுவாக உரைத்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையாக மாற்று வழியைக் கையாண்டனர். அதாவது, ஒவ்வொரு சமூகத்தலைவரும் எஜமானரும் தன்னுடைய ஆளுமையின் கீழுள்ளவர்கள், அடிமைகள்- இவர்களில் யாராவது இஸ்லாமைத் தழுவினால் அவர்களைத் துன்புறுத்த வேண்டும். அவர்களுக்கு இன்னல்கள் விளைவிக்க வேண்டும் என முடிவு செய்தனர்.

தலைவர்களுடன் அவர்களது எடுபிடிகளும் சேர்ந்துகொண்டு முஸ்லிம்களை வாட்டி வதைத்தனர். குறிப்பாக, சாதாரண எளிய முஸ்லிம்களுக்கு அவர்கள் தந்த நோவினைகளைக் கேட்கும்போதே உள்ளம் கசிந்துருகும். அவற்றை சொல்லி மாளாது.

செல்வமும் செல்வாக்குமுள்ள ஒருவர் இஸ்லாமைத் தழுவினால் அவரிடம் அபூஜஹ்ல் நேரே சென்று “உன் செல்வத்தையும் செல்வாக்கையும் ஒன்றுமில்லாமலாக்கி விடுவேன்” என்று மிரட்டுவான். அவர் கொஞ்சம் பலமில்லாதவராக இருந்தால் அடித்துத் துன்புறுத்துவான்.

உஸ்மான் (ரழி) அவர்களது தந்தையின் சகோதரர் அப்பாவி முஸ்லிம்களை பேரீத்தங்கீற்றுப் பாயில் சுருட்டி வைத்து அதற்குக் கீழே புகை மூட்டி மூச்சு திணறடிப்பர்.

தனது மகன் முஸ்லிமாகி விட்டதை அறிந்த முஸ்அப் இப்னு உமைர் (ரழி) அவர்களின் தாயார் அவருக்கு உணவு, தண்ணீர் கொடுக்காமல் வீட்டிலிருந்து விரட்டிவிட்டார். மிக ஆடம்பரமாக வாழ்ந்து வந்த அவர் பெரும் துன்பத்தை அனுபவித்தார். பசி, பட்டினி என்ற வறண்ட வாழ்க்கையினால் அவர்களது மேனியின் தோல் சுருங்க ஆரம்பித்தது.

ஸுஹைப் இப்னு ஸினான் (ரழி) நினைவிழக்கும் வரை கடுமையாக தாக்கப்படுவார்.

பிலால் (ரழி) அவர்கள் உமய்யா இப்னு கலஃபுடைய அடிமையாக இருந்தார்கள். உமையா அவர்களது கழுத்தில் கயிற்றைக் கட்டி சிறுவர்களிடம் கொடுப்பான். சிறுவர்கள் அவரை மக்காவின் கரடு முரடான மலைப் பாதைகளில் இழுத்துச் செல்வார்கள். கயிற்றின் அடையாளம் அவர்களது கழுத்தில் பதிந்துவிடும். அவர்கள் “அஹத்! அஹத்!“” என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். சில வேளைகளில் உமையா பிலாலை மிக இறுக்கமாகக் கட்டி தடியால் கடுமையாகத் தாக்குவான். பிறகு சூரிய வெப்பத்திலும் போடுவான். உணவளிக்காமல் பசியால் துடிக்க வைப்பான். சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்தில் பாலைவன மணலில் கிடத்தி அவர்களது நெஞ்சின்மீது பாறாங்கல்லைத் தூக்கி வைப்பான். அப்போது பிலாலை நோக்கி, “அல்லாஹ்வின் மீதாணையாக! நீ சாக வேண்டும். அல்லது முஹம்மதின் மார்க்கத்தை நிராகரித்து லாத், உஜ்ஜாவை வணங்க வேண்டும். அதுவரை நீ இப்படியேதான் இருப்பாய். உன்னை விடவே மாட்டேன்” என்பான். அதற்கு பிலால் (ரழி) அஹத்! அஹத்! என்று சொல்லிக் கொண்டே, “இந்த “அஹத்’ என்ற வார்த்தையைவிட உனக்கு ஆவேசத்தை உண்டு பண்ணும் வேறொரு வார்த்தை எனக்குத் தெரிந்தால் நான் அதையே கூறுவேன்” என்பார்கள்.

ஒரு நாள் பிலால் (ரழி) சித்திரவதைக்குள்ளாகி இருக்கும்போது அவர்களைக் கடந்து சென்ற அபூபக்ர் (ரழி) அவர்கள் ஒரு ஹபஷி அடிமையை கிரயமாகக் கொடுத்து பிலால் (ரழி) அவர்களை வாங்கி உரிமை விட்டார்கள்.


அம்மார் இப்னு யாஸிர் (ரழி), அவர்களது தகப்பனார் யாஸிர், தாயார் ஸுமய்யா ஆகிய மூவரும் மக்ஜூம் கிளையைச் சேர்ந்த அபூ ஹுதைஃபா இப்னு முகீரா என்பவனின் அடிமைகளாக இருந்தார்கள். மூவரும் இஸ்லாமைத் தழுவினர். இம்மூவரையும் அபூஜஹ்ல் தலைமையில் ஒரு கூட்டம் “அப்தஹ்’ என்ற இடத்துக்கு அழைத்துச் சென்று மதிய வேளையில் சுடு மணலில் கிடத்தி கடுமையாக சித்திரவதை செய்தனர். இதனைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் “யாஸின் குடும்பத்தாரே! பொறுமையை மேற்கொள்ளுங்கள். உங்களுக்கு சொர்க்கம் வாக்களிக்கப்பட்டுள்ளது” என ஆறுதல் கூறினார்கள். நிராகரிப்பவர்களின் வேதனையாலேயே யாஸிர் (ரழி) இறந்துவிட்டார்கள். வயது முதிர்ந்து இயலாதவராக இருந்த அம்மான் தாயாரான சுமைய்யா பின்த் கய்யாத் (ரழி) அவர்களை அபூ ஜஹ்ல் அவர்களது பெண்ணுறுப்பில் ஈட்டியால் குத்திக் கொலை செய்தான். இவரே இஸ்லாமிற்காக உயிர் நீத்த முதல் பெண்மணியாவார்.

அவர்களது மகனாரான அம்மாரை பாலைவனச் சுடுமணலில் கிடத்தி நெஞ்சின் மீது பாறாங்கல்லை வைத்தும், நினைவிழக்கும் வரை தண்ணீல் மூழ்கடித்தும் சித்திரவதை செய்தனர். “முஹம்மதை திட்ட வேண்டும் அல்லது லாத், உஜ்ஜாவைப் புகழ வேண்டும். அப்போதுதான் உன்னை இத்தண்டனையிலிருந்து விடுவிப்போம்” என்றும் கூறினர். வேதனை தாளாத அம்மார் (ரழி) அவர்கள் நிராகரிப்பவர்களின் கட்டளைக்கு இணங்கி விட்டார். அதற்குப் பின் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அழுது மன்னிப்புக் கோரினார். அப்போது அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கியருளினான்.

(ஆகவே,) எவரேனும் நம்பிக்கை கொண்டதன் பின்னர், அல்லாஹ்வை (நிராகரித்தால் அவனைப் பற்றிக் கவனிக்கப்படும்.) அவனுடைய உள்ளம் நம்பிக்கையை கொண்டு முற்றிலும் திருப்தியடைந்தே இருக்க, எவனுடைய நிர்ப்பந்தத்தின் மீதும் அவன் (இவ்வாறு) நிராகரித்தால் (அவன்மீது யாதொரு குற்றமுமில்லை.) எனினும், அவனுடைய உள்ளத்தில் நிராகரிப்பே நிறைந்திருந்(து இவ்வாறு செய்)தால் அவன் மீது அல்லாஹ்வுடைய கோபம்தான் ஏற்படும். அவனுக்கு கடுமையான வேதனையுமுண்டு. (அல்குர்ஆன் 16:106)


கப்பாப் இப்னு அரத் (ரழி) அவர்கள் உம்மு அன்மார் என்ற பெண்ணின் அடிமையாகவும், கொல்லர் பணி செய்பவராகவும் இருந்தார்கள். அவர் இஸ்லாமைத் தழுவியதை அறிந்த எஜமானி பழுக்கக் காய்ச்சப்பட்ட இரும்பால் அவர்களது தலையிலும் முதுகிலும் சூடிட்டு “முஹம்மதின் மார்க்கத்தை விட்டுவிடு” என்று கூறுவாள். ஆனால் இவ்வாறான வேதனைகளால் அவர்களது ஈமானும்” மன உறுதியுமே அதிகரித்தது. உம்மு அன்மார் மட்டுமின்றி ஏனைய நிராகரிப்பவர்களும் அவரது முடியைப் பிடித்திழுப்பார்கள்; கழுத்தை நெறிப்பார்கள்.

ரோம் நாட்டைச் சேர்ந்த அடிமையான ஜின்னீரா (ரழி) என்ற பெண்மணி இஸ்லாமை ஏற்றதற்காக பலவிதமான கொடுமைக்கு ஆளானார். அப்போது கண்ணில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக பார்வையை இழந்தார். “இவரது கண்ணை லாத், உஜ்ஜா பறித்துவிட்டன” என்று நிராகரிப்பவர்கள் கூறினர். அதற்கு ஜின்னீரா, “நிச்சயமாக இல்லை! அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்பட்டது. அவன் நாடினால் எனக்கு நிவாரணமளிப்பான்” என்று கூறினார். மறுநாள் அவர்களது பார்வையை அல்லாஹ் சசெய்தான். அதைக் கண்ட குறைஷியர்கள் “இது முஹம்மதின் சூனியத்தில் ஒன்று” எனக் கூறினர்.

உம்மு உபைஸ் (ரழி) என்ற பெண்மணி அஸ்வத் இப்னு அப்து யகூஸ் என்பவனின் அடிமையாக இருந்தார். இவன் நபி (ஸல்) அவர்களின் கொடும் விரோதியாகவும் நபியவர்களை பரிகசிப்பவனாகவும் இருந்தான். அவன் உம்மு உபைஸை கொடூரமாக வேதனை செய்தான்.

அம்ர் இப்னு அதீ என்பவனின் அடிமைப் பெண்ணும் இஸ்லாமை ஏற்றார். அவரை (அப்போது இஸ்லாமை ஏற்காதிருந்த) உமர் (ரழி), தான் களைப்படையும் வரை சாட்டையால் அடித்துவிட்டு “நீ மரணிக்கும்வரை உன்னை நான் விடமாட்டேன்” என்று கூறுவார். அதற்கு அப்பெண்மணி “அப்படியே உமது இறைவனும் உம்மைத் தண்டிப்பான்” என்று கூறுவார்.

இஸ்லாமை ஏற்றதற்காக கொடுமை செய்யப்பட்ட அடிமைப்பெண்களில் நஹ்திய்யா (ரழி) என்பவரும் அவரது மகளும் அடங்குவர். இவ்விருவரும் அப்துத்தான் கிளையைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் அடிமையாக இருந்தனர்.

இஸ்லாமை ஏற்றதற்காகக் கொடுமை செய்யப்பட்ட ஆண் அடிமைகளில் ஆமிர் இப்னு புஹைரா (ரழி) என்பவரும் ஒருவர். நினைவிழந்து சித்தப் பிரமை பிடிக்குமளவு அவரை கொடுமைப்படுத்தினார்கள்.

இம்மூவரையும் அபூபக்ர் (ரழி) விலைக்கு வாங்கி உரிமையிட்டார்கள். இதைக் கண்ட அவர்களது தந்தையான அபூ குஹாஃபா “நீ பலவீனமான அடிமைகளை விலைக்கு வாங்கி உரிமை விடுகிறாய். திடகாத்திரமான ஆண் அடிமைகளை வாங்கி உரிமையளித்தால் அவர்கள் உனக்கு பக்கபலமாக இருப்பார்களே!” என்றார்.

அதைக் கேட்ட அபூபக்ர் (ரழி) அவர்கள் “நான் அல்லாஹ்வின் திருப்தியை நாடியே செய்கிறேன்” என்றார்கள். அல்லாஹ் அவர்களைப் புகழ்ந்தும் இஸ்லாமின் எதிரிகளை இகழ்ந்தும் அடுத்துள்ள வசனங்களை இறக்கினான்.
மக்காவாசிகளே!) கொழுந்து விட்டெயும் நெருப்பைப் பற்றி நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றேன். மிக்க துர்பாக்கியம் உடையவனைத் தவிர, (மற்றெவனும்) அதற்குள் செல்ல மாட்டான். அவன் (நம்முடைய வசனங்களைப்) பொய்யாக்கிப் புறக்கணித்துவிடுவான். (அல்குர்ஆன் 92:14-16)

இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள துர்பாக்கியமுடையவன் உமைய்யாவும் அவனுடைய வழியில் முஸ்லிம்களை கொடுமைப்படுத்தியவர்களுமாவர்.

இறையச்சமுள்ளவர்தான் அதிலிருந்து தப்பித்துக் கொள்வார். (அவர் பாவத்திலிருந்து தன்னைப்) பரிசுத்தமாக்கிக் கொள்ளும் பொருட்டுத் தன்னுடைய பொருளை(த் தானமாக)க் கொடுப்பார். அவர் பதில் செய்யக்கூடியவாறு எவருடைய நன்றியும் அவர் மீது இல்லாதிருந்தும், மிக்க மேலான தன் இறைவனின் முகத்தை விரும்பியே தானம் கொடுப்பார். (இறைவன் அவருக்கு அளிக்கும் கொடையைப் பற்றிப்) பின்னர் அவரும் திருப்தியடைவார். (அல்குர்ஆன் 92:17-21)

இவ்வசனத்தில் இறையச்சமுள்ளவர் என குறிப்பிடப்படுபவர் அபூபக்ர் (ரழி) அவர்களாவார்.

அபூபக்ர் (ரழி) அவர்களும் துன்புறுத்தப்பட்டார்கள். நவ்ஃபல் இப்னு குவைலித் என்பவன் அபூபக்ர் (ரழி), தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழி) இருவரையும் தொழக்கூடாது என்பதற்காக ஒரே கயிற்றில் இருவரையும் பிணைத்துவிட்டான். ஆனால், கட்டவிழ்ந்து அவ்விருவரும் தொழுவதைக் கண்ட நவ்ஃபல் அஞ்சி நடுங்கினான். இருவரும் ஒரே கயிற்றில் பிணைக்கப் பட்டதால் அவர்களை “கரீனைன் - இணைந்த இருவர்” என்று கூறப்படுகிறது. சிலர் இருவரையும் கட்டியது நவ்ஃபல் அல்ல, தல்ஹாவின் சகோதரன் உஸ்மான் இப்னு உபைதுல்லாஹ்தான் என்று கூறுகின்றனர்.

(மேற்கூறிய சம்பவங்கள் மக்கா முஸ்லிம்கள் பட்ட இன்னல்களுக்கு எடுத்துக் காட்டாகும்.) இஸ்லாமைத் தழுவிய எவரையும் அவர்கள் துன்புறுத்தாமல் விட்டதில்லை. எளிய முஸ்லிம்களைப் பாதுகாக்கவும் அவர்களுக்காகப் பழிவாங்கவும் எவருமில்லை என்பதால் அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பது நிராகரிப்பவர்களுக்கு மிக எளிதாக இருந்தது. அடிமைகளாக இருந்தவர்களை அவர்களது எஜமானர்களும் அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் கொடுமைப் படுத்தினர். இஸ்லாமைத் தழுவியவர் செல்வமும் செல்வாக்கும் உடையவராக இருந்தால், அவர்களுக்கு அவர்களது கூட்டத்தார் பாதுகாவலாக இருந்தனர். சில வேளைகளில் குரோதத்தின் காரணமாக அவர்களது கூட்டத்தினரே அவர்களை கொடுமை செய்தனர்.
 

fathima.ar

Well-Known Member
எளியவரை வலியவர் தாக்குதல் என்பது காலம் காலமா தான் நடந்துவருதுல..
ஏழை எளிய மக்களை இப்படி டார்ச்சர் பண்ண குறைஷியர்கள்..
நபியவர்கள் இஸ்லாம் பரப்புரையை தடை பண்ண என்னவெல்லாம் செஞ்சிறுப்பாங்க..
 

I R Caroline

Well-Known Member
Nice sis, உண்மையின் பின் செல்வதற்கு எவ்வளவு கஷ்டங்கள் அனுபவிக்க வேண்டியிருக்கு :rolleyes::cry:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top