Raasitha's Ninmel Kaadhalagi Nindren P15

Raasitha

Writers Team
Tamil Novel Writer
#1
அப்பொழுது சட்டென்று படகு வெட்டி இழுத்தது போலப் பிரம்மை அவளுள். மூழ்கியிருந்த நினைவுகளில் இருந்து வெளியே வந்தவள், சிலுவையிடம், "தாத்தா...என்ன ஆச்சு ?'' எனக் கேட்க,

"தெரியல தாயீ. மக்கர் பண்ணுது. செத்த பொறுமா. என்னனு பாக்குறே. ஒத்தாசைக்குக் கூட எந்தப் படகையும் காணலியே" எனப் பதில் கூறியபடியே பொலம்பியவராய் ஆராய, மீண்டும் அவளுக்குக் கதிரவன் அருகில் இருப்பது போல உணர்வு ஏற்பட்டது.

"ஏ மனசே! இதெல்லாம் உனக்கே ஓவரா தெரியல. கடக்கண்ணி, கோவில், தெருன்னு ஒன்னுவிடாம அவரை நினச்ச சரி. இப்ப ஆளே இல்லாத இடத்துலயும் அவரு இருக்காரு சொல்லுறியா? கடலுக்குள்ள இருந்து எந்திரிச்சுவர சுட்டு எரிகிற கதிரவனால மட்டும் தான் முடியும். உன்னோட கதிரவனால முடியாது. புருஞ்சுதா ? கண்டத யோசிக்காம இந்தத் தாத்தா போட்ட (படகு )சரி பண்ணிட்டாரான்னு கவனி" என அவளின் மனதை அவள் அதட்ட, அவள் மனதோ தன்னுடைய இருதயத் துடிப்பை வேகப்படுத்தி, அவளின் வார்த்தைகளை அலட்சியப்படுத்தியது.


"என்னாச்சு எனக்கு?" என்ற கேள்வியுடன் சுற்றும் முற்றும் பார்க்க, கதிரவனின் முகம் மெல்ல மெல்ல கடலுக்குள் இருந்து உதித்துவரும் கதிரவனைப் போலத் தெரிய தொடங்கியது.

"நான் பாக்குறது நிசந்தானா? இது அவரு தானா ? இல்ல கனவா ?" என வாய்விட்டே முனங்கிவிட, சிலுவையோ, "என்ன பேத்தி, என்ன சொல்லுற ?" எனப் புரியாமல் வினவ, அவளையும் மீறிய செயலாய் அவளுடைய கைகள் கதிரவன் வந்துகொண்டிருந்த திசையைக் காட்ட, அந்தத் திசையில் பார்த்த சிலுவை நிம்மதி பெருமூச்சுவிட்டார்.

வேகமாகத் தன்னிடம் இருந்த விசிலொன்றை எடுத்து ஊத, கரைக்குத் திரும்பிக்கொண்டிருந்த கதிரவனின் செவிகளிலும் இது தப்பாமல் விழுந்தது.

"என்ன சத்தம் ? அந்தப் போட் இருந்துதான் வருது. ஏதோ பிரச்சனை போல" என நினைத்தபடி திசையைச் சற்றே திருப்பி அவர்களை நோக்கி வர வர, விழியன் விழி இமைகள் கடல் சிப்பியாக மலர்ந்தது. மலர்ந்த அவளுடைய விழிகளுக்குள் விலைப்மதிப்பில்லாத காதல் முத்து ஜனித்திருந்தது. அதற்குள் அவர்களின் அருகே அவன் சமீபித்திருந்தான்.

இவளை சட்டென்று அடையாளம் கண்டு கொண்டவன் ஒரு நொடி வெறுப்பைக் காட்டிவிட்டு, பிறகு அப்படியொருத்தி அந்தப் படகில் இல்லாததைப் போன்ற பாவத்தில், "அட சிலுவை தாத்தா. நீங்களா ? என்னாச்சு ? போட் மக்கர் பண்ணுதா ?" எனக் கேட்க, "ஆமா கதிரவ. நான் வேற பொட்டப்புள்ளைய ஆசைப்பட்டுச்சுனு சுத்தி காட்ட கூட்டி வந்துட்டே. இந்த நேர பார்த்து இப்படிப் பண்ணுது. வெரசா ஐயா கரைக்குத் திரும்பனும்னு சொன்னாரு. வேற படகு ஒன்னு காணல. இதுவும் கிளம்புற மாதிரி தெரியல. எனக்கு ஒரு உதவி பண்ணு ராசா இந்தப் புள்ளைய கரைக்குக் கொண்டு போய்ச் சேத்துரு. உனக்குப் புண்ணியமா போகும். நான் இந்தப் பக்கம் வர போட்ல இருக்க ஆளுங்கட்ட சொல்லி சரிபண்ணி வந்திடுவே. எனக்கு இதொன்னு புதுசு இல்ல. இல்ல கரைல நம்ம முனுசாமிட்ட சொன்னா கூட அவன் ஆள கூட்டியாந்துருவான். கொஞ்சம் பண்ணு ராசா" என அவர் கேட்க, கேட்ட விதமும் குரலும் அவரின் முகமும் கதிரவனால் மறுக்கவோ ஒதுங்கவோ முடியாமல் போனது.

இவளையா ? என்ற கவலை அவனைத் தொற்றிக் கொண்டது. ஆனாலும் வேறு வழி இல்லை.

"சரிங்க தாத்தா. ஆனா நீங்க மட்டும் எப்படி இருப்பீங்க ? நீங்களும் வந்துடுங்க" என்ற கேள்வியைக் கேட்கும்போதே அது அவனுக்கு அர்த்தமற்றதாகத் தோன்றியது. படகை விட்டுவிட்டு எப்படி அவர் வருவார். அதுவும் அவர்கள் தற்போது உபயோகப்படுத்தும் மீன்பிடி படகு ஒவ்வொன்று சுமார் ஆறு இலட்சம் பெரும். அனைவரின் மொத்த வாழ்வாதாரமும் அது தான். பல வருட சேமிப்பும், மேலும் வங்கியில் இன்னும் கட்டி முடிக்கப்படாத பல வருட கடனும் சேர்ந்து அந்தப் படகாக உருமாறியிருக்க, அப்படி அவர் விட்டுவிட்டு வரமாட்டார்.

கேட்டவன், சட்டென்று அவனே திருத்தி, "படகு விட்டு வரமுடியாதுல. சரி நான் முடுஞ்ச அளவு விரட்டி போய் முனுசாமியா அனுப்பிவைக்கிறேன்" எனக் கூறியவன், "வரச்சொல்லுங்க" என்ற ஒற்றைச் சொல்லை அவளைப் பார்த்து வேண்டா வெறுப்பாக உதிர்த்தான்.

----------------------------------------------------------------------------------------------------------------------

இருவரின் கைகளும் இணைந்த நொடி கனல் விழியன் மனதில், "இப்ப இவரு பிடிச்ச என்னோட கைய எப்பயுமே விடக் கூடாது" என நினைக்க, அவளின் எண்ணத்திற்கு ஆசி கூறுவதைப் போலச் சட்டென்று கடல் நீர் திமிறிய அலை தூறலை அவர்கள் முகத்தில் பூ குவியலாகத் தூவியது.

அவள் மனபெட்டகத்தின் பொக்கிஷமாக அந்தப் பயணம் அமைந்தது. ஆனால் அதற்கு முற்றும் மாறாய், கதிரவனின் முகம் கடுகடுத்திருந்தது.

"ச்ச இருக்க இம்ச போதாதுன்னு இந்த இம்ச வேற" என அவன் மனதில் நினைக்க, அவன் முகப் பாவனையைப் பார்த்து விழி அவன் உணர்வுகளை மெல்ல படிக்கவும் செய்தாள் பதிலளிக்கவும் செய்தாள்.

"ஒருவேளை இவரு நம்மள இம்சனு நினைக்கிறாரோ? நினச்சா நினைச்சுக்கட்டும்" என சந்தோஷமாகவே அவனை பார்த்துக்கொண்டிருந்தாள்.

"எல்லாம் என் நேர. இவகூடலாம் போகவேண்டி இருக்கு. இன்னும் எவ்ளோ நேரம் ஆகுமோ ?" என வெறுப்பாக இவன் நினைக்க

"இந்த நேரம் இன்னும் கொஞ்ச நேரம் நீள கூடாதா?" என விருப்பாக இவள் நினைக்க, உப்பு காற்று அவர்கள் இருவரின் முகத்தை லேசாக தழுவி சென்றது.

"என்ன இவ? வச்ச கண்ணு வாங்காம பாக்குறா?"

"ஐயோ விழி, இப்படிப் பார்காதடி. அவரு ஏதாவது நினைச்சுக்கப் போறாரு...கண்ணுமுழிய திருப்பு. வேணா பார்க்கதாடி. ஆனா முடியலையே! எப்படிப் பார்க்காம இருக்குறது" என அவளுக்குள் அவளே போராட்டம் செய்ய, அவளின் விழிகள் மட்டும் உண்மையுள்ள தொழிலாளியை போல இடைவிடாது இமைக்கவும் விடாது அவனைப் பார்த்துக்கொண்டே இருந்தன.
 
Advertisement

New Episodes