Prasath Krishna's Adheera 5

Advertisement

Prashadi

Member
அத்தியாயம் 5




அழுதழுது ஓய்ந்தவளின் கண்களில் கண்ணீர் வற்றிப்போனது.
தன் இருகைகளால்,
கண் மூடியிருந்த தன் பெற்றோரை அணைத்துக்கொண்டாள்.
சிறிது நேரத்தின் பின் அவர்களின் உடல்கள் காற்றில் கரைந்து மறைந்தன.
தீராவிற்கு தன் அரவணைப்பு தேவை என்பதை உணர்ந்த ரக்ஷிதா, தீராவை அழைத்துக்கொண்டு தன் வீட்டிற்குச் சென்றாள்.

"செல்லம்ஸ்! இவ என் ஃபெரெண்ட் தீரா.
இவளுக்கு அம்மா அப்பா இல்ல. இவ எங்க இருந்து வந்தானு எல்லாம் கேக்காத. ஆனா இனிமே இவ என் கூட தான் இருப்பா சொல்லிட்டேன்."

குறும்பு மின்னும் அந்தக்கண்களில் கண்ணீரைப் பார்த்தாள்.
அடக்கமாய் பேசத்தெரியாத அந்தக் குரல் அதிகாரமாக பேசுவதாய் நினைத்து நா தழுதழுக்கப் பேசியது.
இத்தனை நாளும் கண்கலங்காத தன் மகளைக் கண்டு அதிர்ந்தாள் அந்தத் தாய்.

அவள் அருகில் நின்றவளோ ஒரே இடத்தை வெறித்துப் பார்த்தப்படி இருந்தாள்.

இந்தப் பிஞ்சு உள்ளங்களில் சிம்மாசனமிட்டிருக்கும் துயரத்தைக் கண்டு தானும் வேதனையடைந்தாள்.

தன் வார்த்தைகளால் அவர்களுக்கு அளிக்க முடியாத ஆறுதலை
அவர்களை கட்டியணைத்து வழங்கினார்.
"இனிமே நானும் உனக்கு அம்மா தான்" என சைகையால் தீராவிற்கு கூறினார்.

வெறித்துப் பார்த்திருந்த அந்தக் கண்கள் அந்த மௌன மொழிக்கு பதிலளிக்க முடியாமல்
அந்த கண்களையே நோக்கியது.



நாட்கள் உருண்டோடின....

தீரா ரக்ஷிதாவின் நட்பிலும் செல்லம்மாளின் அன்பிலும் தன்னை தேற்றிக் கொண்டாள். ஆனால் அவளது குற்ற உணர்வை மட்டும் தூக்கிப்போட முடியவில்லை.

சுற்றியிருந்த அந்த உறவுகளுடன் தன் தனிமையை உணராவிட்டாலும்
இரவின் அந்த மதியரங்கில் தன் பெற்றோரைத் தேடுவாள்.

ரக்ஷிதாவின் உதவியுடன் தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்க
ஓவியம் வரைவதனை ஆர்வமாக கற்றுத் தேர்ந்தாள். கல்லூரியிலும் ஓவிய ஆசிரியையாக பணிபுரிய ஆரம்பித்தாள்.
அவளது உணர்வுகள் அனைத்தும் அவளது ஓவியங்களில் பிரதிபலிக்கும்.

தன் பெற்றோர் தன்னுடன் இல்லாவிட்டாலும் அவர்களது நினைவுகளுடனாவது வாழ்ந்து விட வேண்டும் என தன் வீட்டிலே தங்கிக் கொண்டாள். அடிக்கடி ரக்ஷிதாவையும் தன்னை அரவணைத்த குடும்பத்தையும் பார்த்து விட்டு வருவாள். ஆனால் ரக்ஷிதா, தன் நண்பி தேடும் அந்த பிரிவு எதற்கென்று தெரிந்தாலும் அவளையே சுற்றிச் சுற்றி வருவாள்...


அந்த நினைவுகளில் இருந்து மீண்டவளின் கண்கள் கலங்கியிருந்தன.



"இதோ நானும் வந்துட்டேன்" என தீராவைத் தேடி வீட்டினுள் நுழைந்தாள் ரக்ஷி.

"இங்க தான் இருக்கியா? சரி, அகரன் எங்க?"

"அவன் இங்க இல்ல"

"எங்க போய்ட்டான்?
நீ ஏதும் சமைச்சுக்குடுத்திட்டியா?"

அவளைப் பார்த்து அனல் பார்வை பார்த்தாள்.

"விஷயம் ரொம்ப சீரியஸோ?" என மனதில் நினைத்துக் கொண்டு அவள் அருகில் அமர்ந்தாள்.

"என்ன நடந்தது தீரா? " என அமைதியாக வினவினாள்.

தான் வீட்டிற்கு வந்ததிலிருந்து அனைத்தையும் கூறி முடித்தாள்.

அவள் சொன்னதைக் கேட்டவள் பல உணர்வுகளின் பிடியில் சிக்கி அமைதி காத்தாள்.

"அந்த கடிதத்தை வாசிச்ச எனக்கு ஒன்னு மட்டும் புரிஞ்சது. என்னால அவங்க உயிர் போகல. ஆனா எப்பிடி அவங்க இறந்தாங்கன்னு தெரியல."

"அகரன் சொன்ன மாதிரி நீ தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கு. ஆனா எல்லா கேள்விக்கும் உன் அப்பாகிட்ட பதில் இருக்கும்னு சொன்னது தான் எனக்கு புரியல."

இருவரும் பலத்த யோசனையோடு சிறிது நேரம் அமைதியாய் இருந்தனர்.

தீரா, "அப்பாவோட ஓவியங்கள்!" என கூறினாள்.

அவளை சிறு குழப்பத்துடன் பார்த்து சிறிது நேரத்தில் தெளிந்து மகிழ்வுடன் அவளைப் பார்த்தாள்.

தீராவும் தன் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என்ற முழு நம்பிக்கையுடன் ஒரு அறையை நோக்கி ஓடினாள்.
ரக்ஷிதாவும் பின் தொடர்ந்தாள்.

பூட்டியிருந்த அந்த அறையைத் திறக்கும் போது அறை முழுவதும் இருந்த அந்த ஓவியங்கள் அவர்களை வரவேற்றன.
இதனை எல்லாம் வாய் பிழந்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள் ரக்ஷிதா.
தீராவோ தன் கேள்விகளுக்கு பதில் கூறக்காத்திருக்கும் ஓவியங்களைத் தேடினாள்.

தேடலின் முடிவில் தான் இதுவரை தந்தை வரைந்த ஓவியங்களில் பார்த்திராத நான்கு ஓவியங்கள் கிடைத்தன.




"தீரா, இதெல்லாம் அப்பா வரைஞ்சதா? என அவளைப் பார்க்கும் போது
அவளோ அந்த நான்கு ஓவியங்களையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

"அந்த நாலு பெயின்டிங்ஸயே(paintings)
பாத்துட்டு இருக்கியே உனக்கு தேவையான பதில் அதுல தான் இருக்கா?"

"இந்த நாலும் நான் இதுவர பாத்ததே இல்ல. அப்பறம் இந்த நாலும் வித்தியாசமான பெயின்டிங்ஸா (paintings) இருக்கு. நீ சொல்ற மாதிரி இதுல எனக்கு தேவையான பதில் இருக்கலாம்" என கூறிக்கொண்டு முதலாவது ஓவியத்தை கையில் எடுத்தாள்.

பிளவப்பட்ட மலைத்தொடர்கள் அருகருகே இருக்க அம் மலைத்தொடர்களின் இடைவெளியினூடாக ஆறு ஓடிக்கொண்டிருந்தது. ஒரு மலையின் உச்சியில் ஒரு கோட்டை இருந்தது. ஓவியத்தின் வலதுபுறத்தில் இலைகளற்ற ஒரு மரம் இருந்தது. அதன் கிளைகள் மின்னிக்கொண்டு இருந்தன.
ஓவியத்தின் இடதுபுறத்தில் ஒரு மலையில் ஊற்றெடுத்த அருவியொன்று அந்தரத்தில் மிதந்தவாறு இருந்தது.




"இது ரொம்ப வித்தியாசமா இருக்கு தீரா. இந்த இடம் எது என்று உனக்கு தெரியுமா?" என அந்த ஓவியத்தில் கை வைத்தவாறு கேட்டாள்.


"நான் இப்பிடி ஒரு இடத்தை பாத்ததே இல்ல."என ஓவியத்தில் தன் வலதுகையை வைக்கும் போது பளீரென்று ஒரு ஒளி தோன்றியது.
அவ் வெளிச்சம் கண்களைக் கூச,
கண்களை தேய்த்துக் கொண்டு திறக்கும் போது இருவரும் அந்த ஓவியத்தினுள் இருந்தனர்.
தங்களது கண்களையே நம்ப முடியாமல் அந்த இடத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.


"இங்க என்ன நடக்குது தீரா? இப்ப நாம இந்த பெயின்டிங் உள்ளயா இருக்கோம்?" என கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே அவளின் தோளைப்பற்றி உலுக்கினாள்.

அதில் கடுப்பாகி "இப்ப வாய மூடப்போறியா இல்லயா?" என சொன்னவுடன் தன் வாயில் ஒற்றை விரலை வைத்து அமைதியாகினாள்.

"சரி வா கொஞ்சம் முன்னாடி போய் பார்ப்போம்" என முன்னே நடந்தாள்.

"ம்ம்ம்" என ரக்ஷியும் அவளைப் பின்தொடர்ந்தாள்.


"அங்க பார். அங்க யாரோ இருக்கிற மாதிரி இருக்கு"

அவள் காட்டிய இடத்தில் இரு சிறுவர்கள் தம் கைகளை அசைத்தப்படி இருக்க உடைந்திருந்த படகொன்று தன்னாலே சீராகிக் கொண்டிருந்தது.

இவர்கள் இருவரும் அந்தச் சிறுவர்களின் அருகே சென்று அவர்களை அழைத்தனர். ஆனால் இருவரும் திரும்பவில்லை. மீண்டும் அழைத்தனர். திரும்பவில்லை. தீரா ஒரு சிறுவனின் தோளில் தட்ட
அவளுடைய கையானது அவனுள் ஊடுறுவி வந்தது.


இதைப் பார்த்த ரக்ஷிதா"ஏய்! நாம பேய் ஆகிட்டமா? இல்ல அந்தப் பசங்க பேயா?"
என்றவளை முறைத்துப் பார்த்தாள்.

"உன்ன நான் என்ன சொன்னேன்?" என்றவுடன்
அவள் மீண்டும் தன் விரலை எடுத்து வாயில் வைத்துக் கொண்டாள்.

தீரா, அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு அந்தச் சிறுவர்களின் முன் போய் நின்றாள். அப்பொழுது அந்தச் சிறுவர்கள் திரும்பினார்களே தவிர தீராவைக் கண்டுகொள்ளவில்லை.

"ஏலேய்! உங்கள ஐயா கூப்பிடுறாரு சீக்கிரம் வாங்க" என ஒருவன் வந்து கூறியதும்
"இதோ இப்ப வந்துடுவோம்." என அவனுக்கு பதிலளித்து விட்டு உடைந்த படகை சரி செய்தவுடன் ஒரு இடத்திற்கு செல்ல தயாராகினர்.

இதனை குழப்பத்துடன் இரு சோடிக்கண்கள் பார்த்துக் கொண்டிருந்தன. அவர்களை இருவரும் பின் தொடர்ந்தனர்.

அவர்கள் மலையின் உச்சியில் இருந்த கோட்டையினுள் நுழைந்தனர்.

அந்தக் கோட்டை மிகப் பிரம்மாண்டமாக இருந்தது. கழுத்து உடையும் அளவிற்கு அண்ணாந்து பார்க்கக் கூடிய ஒரு பெரிய நுழைவாயில் இவர்களை வரவேற்றது. அதன் அருகில் சென்றதும் நுழைவாயில் தானாக திறந்தது. நுழைவாயில் திறந்தவுடன் நீண்ட படிக்கட்டு காணப்பட்டது.

பெண்கள் இருவரும் இவற்றை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டே அந்தச் சிறுவர்களை பின்தொடர்ந்து சென்றனர்.
படிக்கட்டை ஏறி முடித்தவுடன் மூச்சு வாங்கி நின்றனர்.

"என்னால முடியலப்பா சாமி. எத்தனை படிக்கட்டு! இதுக்கு நா சபரிமலையே ஏறியிருப்பேன் போலயே."என்றவளை திட்டக்கூட முடியாமல் சோர்ந்து போய் இருந்தாள் தீரா.

ஒருவாறு தங்களை சமாளித்துக் கொண்டு அந்தச் சிறுவர்கள் பக்கம் திரும்பினால் அவர்களை அங்கு காணவில்லை. ஆனால் அவர்களுக்கு ஒரு திறந்த கதவு தென்பட்டது.
இருவரும் அதனுள் சென்றனர்.

உள்ளே கம்பீரமான வீரர்கள் காவலுக்கு நின்றனர். ஆனால் அவர்களுக்கும் இந்தப் பெண்கள் இருவரும் தென்பட்டதாக தெரியவில்லை. தாங்கள் இருவரும் யாருக்கும் தென்படமாட்டோம் என்பது விளங்கியது.

மேலும் தொடர்ந்து உள்ளே செல்லும் போது பல அறைகள் தென்பட்டன. அதில் ஒரு அறையின் கதவு மட்டும் திறந்து இருந்தது. அந்தக் கதவின் பிரம்மாண்டம் இருவரையும் வாயடைக்கச் செய்தது.

ரக்ஷி "கதவே இப்பிடி இருக்குனா அந்த அறை எப்பிடி இருக்கும். சீக்கிரம் வா உள்ள போய் பார்ப்போம்" என தீராவை இழுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

அறையினுள் அந்தச் சிறுவர்கள் ஒரு ஆசனத்தில் அமர்ந்திருந்த கம்பீரமான உருவத்துடன் பேசிக்கொண்டிருந்தனர். அந்த உருவத்தின் கம்பீரம் இவையணைத்தையும் அறையில் சற்று தூரமாய் நின்று பார்த்துக்கொண்டிருந்த பெண்கள் இருவரையும் வியக்க வைத்தது. அந்த உருவத்தின் முகம் மட்டும் தெளிவாக தெரியாததால் சற்று முன்னே சென்று பார்த்தனர்.

பார்த்தவர்களின் கண்கள் எல்லையில்லா மகிழ்ச்சியில் கலங்கின.

கலங்கிய விழிகளுடனே "அப்பா!!!" என அழைத்தாள் தீரா.

தொடர்வாள்...
-கி.பிரஷாதி-
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top