PMP - 2

Rudraprarthana

Well-Known Member
10522

மாட்டை பிடித்து கட்டிவிட்டு கைகளை கழுவி கொண்டு கார்த்தி உள்ளே நுழையவுமே, குழந்தைகள் அனைவரும் ஓடி வந்து அவனை சூழ்ந்து கொண்டனர். கார்த்தியின் மீது அத்தனை பிடித்தம்!! சகுந்தலா, வேலன் போன்றோர் குழந்தைகளின் வரவில் சலித்து கொண்டாலும் இங்கு வரும்போது எல்லாம் அவர்களை சுகமாய் தாங்குவதென்னவோ கார்த்தி தான்.

குழந்தைகளும் பாட்டி வீட்டிற்கு வருவதே அவனுடனான பொழுதை எதிர்பார்த்து தான், பெரிதாக படிப்பில்லையே தவிர பல வாழ்வியல் கலைகளை கற்று வைத்திருப்பவன். ஆனாலும் நேரமும் காலமும் அவனுக்கு எதிராக இருக்கையில் எதை ஆரம்பித்தாலும் ஏதேனும் ஒரு வகையில் தோல்வியை மட்டுமே சந்தித்து வீட்டினரின் ஏச்சுக்களுக்கு ஆளாகி கொண்டிருக்கிறான்.


கார்த்தியுடன் சேர்ந்து நீச்சல், உடற்பயிற்சி, சிலம்பம், விளையாட்டு என்று இருப்பதில் குழந்தைகளுக்கும் பாட்டி வீட்டிற்கு வரும்போது நேரம் போவதே தெரிவதில்லை. குழந்தைகளோடு இரவு உணவை முடித்தவன் தன் அறைக்கு திரும்ப அவன் பின்னேயே வந்த குழந்தைகள் 'கதை சொல்லுங்க மாமா' என்று அவனை சூழ்ந்துகொள்ள வெண்ணிலாவின் மகன் மித்ரனோ அவன் கழுத்தை கட்டிக்கொள்ள அனைவரையும் இன்முகமாய் அரவணைத்து கொண்ட கார்த்தி கதை சொல்ல ஆரம்பிக்க முடிவில் மித்ரன் அவன் மார்பில் சுகமாய் உறங்கியிருக்க மற்றவர்கள் அவன் இருபுறமும் கைகளையும் பிடித்து கொண்டு உறங்கியிருந்தனர்.

அடுத்த நாள் அழகாய் விடிய மகள்களின் வரவில் வழக்கம்போல சண்முகம் அதிகாலையே சென்று ஆட்டுக்கறி, தலைகறி, ஈரல் என்று அனைத்து வகை இறைச்சியும் வாங்கி வந்துவிட்டார். ரேவதி இந்த வீட்டிற்க்கு மருமகளாக வரும் முன்பு வரையில் சகுந்தலா செய்து கொண்டிருந்த ஒரே வேலை சமையல் தான்.., இப்போது அதுவும் ரேவதியின் பொறுப்பு என்றாகிவிட அதிகாலை நான்கு மணிக்கெலாம் எழுந்து வீட்டு வேலைகளை முடித்தவள் சமையலுக்கு தேவையான முன் தயாரிப்புகளையும் முடித்து வைத்திருந்தாள்.

நாத்தனார்கள் வரும்போது அவர்களே சமைத்து கொள்வதால் தயாரிப்பு மட்டுமே இவள்.

"ரேவதி... ஏய் ரேவதி" என்று உரக்க கத்தியவாறே இஞ்சி பூண்டை அரைத்து கொண்டிருந்த ரேவதியிடம் வந்து நின்றான் வேலன்.

'என்னங்க என்னாச்சு..?? குழந்தை முழிச்சிட்டானா..?' என்று இவள் அவசரமாக கேட்க,

அவனோ மிக்சியின் சுவிட்சை அணைத்தவன், 'ஏன்டி எத்தனை முறை சொல்லி இருப்பேன் இந்த குட்டி சாத்தானுங்க வரும்போது கதவை சாத்தி வைன்னு.., மனுஷனை நிம்மதியா தூங்க கூட விடமாட்டேங்குதுங்க" என்று கத்தவும்,

'எதுக்குங்க இப்ப கத்தறீங்க..?? என்ன ஆச்சு பொறுமையா சொல்..' என்று அவள் முடிக்கும் முன்னமே..,

"என்னப்பா ஆச்சு..??" என்றவாறு அங்கு வந்து சேர்ந்தார் சகுந்தலா.

'என்ன என்னப்பா ..??' என்று பாரபட்சமே இல்லாமல் தாயிடமும் எரிந்து விழுந்தான்.

மகனின் கோபத்தை நன்கு அறிந்திருந்த சகுந்தலா உடனே எதிரே இருந்த ரேவதியிடம் "கட்டிட்டு வந்து ஒரு வருஷம் ஆச்சு இன்னும் புருஷனுக்கு ஏத்த மாதிரி நடந்துக்க துப்பில்லை, பேச்சு மட்டும் நீளும் இவளுக்கு" என்று என்னவென்று தெரியாமல் வழக்கம் போல மருமகளை வசைபாட தொடங்கியவர் இறுதியாக,

"சம்பாதிக்கிற பிள்ளையை நிம்மதியா இருக்க விடாம என்னடி பண்ணி தொலைச்ச..??" என்று முறைக்க,

'கொஞ்சம் நிறுத்துறியா...??' என்று தாயிடம் கடிந்தவன் மனைவி புறம் திரும்பி,

"இங்க பாருங்க" என்று தன் கையில் இருந்த போனை காண்பிக்க அதுவோ ஒவ்வொரு பகுதியும் தனித்தனியாக அவன் கையில் கிடந்தது"

"ஏங்க நீங்க கொடுத்ததும் நான் சார்ஜர்ல போட்டுட்டு டேபிள் மேல வச்சிட்டு தான் வந்தேன், அப்புறம் எப்படிங்க இப்படி..???" என்று புரியாமல் தவிப்புடன் அவனை பார்க்க,

'ஏய் சார்ஜர்ல போட்டவளுக்கு கதவை சாத்திட்டு போக தெரியாதாடி, இதென்ன உங்கப்பன் வீட்டுல இருந்து வாங்கிட்டு வந்ததா எல்லாம் என் உழைப்பு' என்று கையை ஓங்கி கொண்டு வர, அவளோ விழிகளில் மிரட்சியுடன் இரண்டடி பின்னே நகர்ந்தாள்.

சகுந்தலாவோ மகனை தடுக்காமல் மருமகளை முறைத்து கொண்டு நின்றிருந்தார்.

அதே நேரம் குழந்தை அழவும் ஓங்கிய கையை இறக்கியவன், 'எந்த பிசாசு வந்ததுன்னு தெரியலை சார்ஜர்ல இருந்த போனை எடுத்து கீழ போட்டு உடச்சிட்டு ஓடிடுச்சிங்க இது தான்டி கடைசி இன்னொரு முறை நடந்தது அடிச்சி மூஞ்சியை உடைச்சிடுவேன், போ போய் குழந்தையை பாரு' என்று அவளை எச்சரித்து அனுப்பியவன் சகுந்தலா புறம் திரும்பி,

'இந்த பிசாசுங்களை இன்னொருமுறை கூட்டிட்டு வரக்கூடாதுன்னு உன் பொண்ணுங்க கிட்ட சொல்லி வை..", என்று கட்டளை இட்டவன் 'விடியலே மோசமா இருக்கு இன்னைக்கு பொழப்பு விளங்கின மாதிரிதான்' என்று சிடுசிடுத்தவாறு அங்கிருந்து கிளம்பினான்.

***

'ரேவதி இன்னும் என்ன பண்ற சீக்கிரம் கறியை கழுவி எடுத்துட்டு வா' என்று குரல் கொடுத்தவாறே அம்பிகா வீட்டின் இடப்புறம் இருந்த காலி இடத்தில அமைக்க பட்டிருந்த மண் அடுப்பில் விறகுவைத்து தீ மூட்டி ஒன்றில் செட்டியை வைத்து தலைக்கறியை உப்பு மஞ்சள் போட்டு வேகவைத்தார்.

மற்றொரு அடுப்பில் ஈரல் குழம்பிற்க்கான மசாலாவை சேர்த்து விட்டு வதக்க தொடங்க அருகே இருந்த நிலாவோ மூன்றாவதுஅடுப்பில் இட்லி பாத்திரத்தை ஏற்றி தட்டுகளில் மாவு ஊற்றி வைத்து கொண்டிருந்தார்.

அப்போது காலை உணவிற்கு அங்கு வந்த வேலன், "என்னக்கா, சமையல் ஆச்சா? இல்லையா?" என்று ஒருவித எரிச்சலோடு உரக்க கேட்கவும்,

கைகளை துடைத்தவாறே உடனே எழுந்து நின்ற அம்பிகா மிக மெல்லிய குரலில், "

இதோ தம்பி முடிஞ்சிடுச்சி... இட்லி இறக்கவேண்டியதுதான் பாக்கி " என்று பணிவுடன் கூறியவர் இட்லி பாத்திரத்தை திறந்து வெந்து விட்டதா? என்று பார்த்து வேலனிடம், "நீ உக்காருப்பா, இதோ ரெண்டே நிமிஷம் நான் எடுத்துட்டு வரேன்.." என்றவரின் குரலில் அத்தனை மென்மை.

மடமடவென்று தட்டில் ஐந்து இட்லியை வைத்து , ஈரல் குழம்பை ஊற்றி தண்ணீர் செம்போடு சென்றவர் அதே பணிவோடு தம்பியின் முன் வைத்தவர் பின் வெண்ணிலாவிடம், "நிலா ஈரலை உப்பு மிளகா தடவி கம்பில கோத்துவெச்சிருக்கேன் பாரு அத அடுப்புல வை நான் அப்பாவை கூட்டிட்டு வரேன்" என்று சென்றார்.

குழந்தைகளோடு காலை உடற்பயிற்சியை முடித்துவிட்டு அவர்களோடு கிணற்றில் ஒரு குளியல் போட்டு விட்டு அங்கே வந்த கார்த்தி, "க்கா, குழம்பு ஆகிடுச்சா எங்க எல்லாருக்கும் செம பசி சீக்கிரம் போடு" எனவும்,

"எல்லாம் ரெடி டா உக்காருங்க" என்றார்.

கார்த்தி பிள்ளைகளை வராண்டாவில் அமரவைக்க, மித்ரன் மறக்காமல் அவனிடம், "மாமா! பெருசா எத்துவா!" என்று கூற...

அவனும் புன்னகைத்த வாறே "எடுத்துட்டு வரேண்டா ஆனா நீ இங்கயே உட்காரனும் எழுந்த பிச்சிடுவேன்!!" என்று அவனோடு சேர்த்து அனைவரையும் அங்கேயே இருக்க செய்து தோட்டத்திற்கு சென்று ஆளுயரத்திற்கு பெரியதாக வாழை இலை எடுத்து வந்தான்.

அதை கண்ட குழந்தைகள் குதூகலித்து கூச்சலிட சாப்பிட்டுக்கொண்டிருந்த வேலனோ, எரிச்சல் அடைந்தவனாக.. "டேய் வாயை மூடுங்க டா!! எப்பபாரு கழுதை மாதிரி கத்திக்கிட்டு இப்போ வாயை மூடலை தோல உரிச்சிடுவேன்" என்று கண்களை உருட்டியவாறு அவர்களை அதட்டவும்,

"கதிரு குழந்தைங்கன்னா அப்படி தான் இருப்பாங்க வேணும்ன்னா நீ உள்ள போய் உட்காரு" என்றிட,

"ஏண்டா பேசமாட்ட உழைச்சி சம்பாதிக்கிறவனுக்கு தான் காசோட அருமை தெரியும் இன்னைக்கு இதுங்களால எனக்கு பதினஞ்சாயிரம் ரூபாய் நஷ்டம்..!! எண்ணி எடுத்து வை நான் பேசலை" என்று சீற,

காசு தான் எல்லாமா..?? என்று கார்த்தி கேட்க,

சும்மா உட்காந்து வேளா வேளைக்கு கொட்டிக்கிற உனக்கு எங்க அதோட அருமை தெரியும் என்று அவனையே கேட்க,

கார்த்தியோ உன்னை எல்லாம் திருத்தவே முடியாது என்பதாக பார்த்திருந்தான்.

இன்னும் குழந்தைகளின் கூச்சல் குறையாது போக, "ஏய் இப்போ வாயை மூடலை மொத்த பேரையும் மரத்துல கட்டி வச்சி தவக்களையை பிடிச்சி ட்ரவுசர்ல விட்டுடுவேன்" என்று மிரட்ட குழந்தைகள் கப்சிப் ஆகினர்.

"ச்சை எந்நேரமும் கத்திட்டு நிம்மதியா சாப்பிடக்கூட விடமாட்டேங்குதுங்க இதுங்க வரலைன்னு இங்க யார் அழுதா இம்சைங்க" என்று கத்தியவாறே சாப்பிட்டு முடித்து கிளம்பினான் வேலன்.

இதை கண்ட நிலாவிற்கு ஆத்திரம் எழ குழந்தைகள் முன் சத்தம் போட கூடாது என்று முயன்று தன்னை கட்டுபடுத்தி கொண்டு இட்லியை கொண்டு வந்து வைத்தார்.

கார்த்தி வாழை இலையை கழுவி அவர்கள் முன் வைக்க நிலா அனைவருக்கும் பரிமாறினார். கார்த்தி ஏற்படுத்திய வழக்கம் தான் இது இங்கு வரும்போது எல்லாம் அனைவரும் ஒன்றாக ஒரே இலையில் அமர்ந்து உண்ணும்போது போட்டி போட்டுகொண்டு சாப்பிடும் குழந்தைகள் குதுகலத்தில் வழக்கத்திருக்கு அதிகமாகாவே உண்பர்.

ஆனால் மித்ரன் மட்டும் உண்ணாமல் ஓடிக்கொண்டே இருக்க கார்த்தி தன் உணவை ஒதுக்கி வைத்து விட்டு அவனை பிடித்து மிரட்டி முதலில் குழந்தைக்கு ஊட்டிவிட்டவன் பிள்ளைகள் அனைவரும் உண்ட பின்பே அவன் சாப்பிட ஆரம்பித்தான்.

அப்போது அங்கு வந்த அம்பிகா, "ஏன்டா!! பசங்களே சாப்பிட்டு முடிச்சிடுச்சுங்க இன்னும் நீ முடிக்கலயா? தீனிப்பண்டாரம்... எங்களுக்கு ஏதாவது மிச்சம் வெச்சிருக்கியா இல்ல வழிச்சி முழுங்கிட்டியா?" எனவும் வாயருகே கொண்டு சென்ற இட்லியை தட்டில் போட்டுவிட்டு எழுந்து கை கழுவியவன் தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.

"வெட்டி ரோஷத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல" என்று நொடித்துவிட்டு அடுப்பிருக்கும் இடம் நோக்கி சென்றார் அம்பிகா.

மித்ரனின் கை, வாய் கழுவி விட்டு வெளியில் வந்த நிலா, இலையில் சாப்பாடு அப்படியே இருப்பதையும் கார்த்தி அங்கு இல்லாததையும் கண்டவள் அம்பிகாவிடம், 'க்கா கார்த்தி எங்க...?? சாப்பிடாம என்ன பண்றான்' என்று கேட்க

அவளோ "எனக்கு என்ன தெரியும்..?? நானே இப்போதான் வந்தேன்.., அப்பாவை சாப்பிட கூப்பிட்டா அவர் மேலயே எடுத்துட்டு வர சொல்லிட்டார், நான் எங்க ரெண்டு பேருக்கும் கொண்டு போறேன் நீயும் அம்மாவும் சாப்பிடுங்க" என்றவாறே அனைத்தையும் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.

சில அடிகள் சென்றவர் திடீரென ஞாபகம் வந்தவராய் திரும்பி நிலாவிடம், "தம்பிக்கு அஞ்சு இட்லி தான் வெச்சேன் கவனிச்சியா, ஒழுங்கா சாப்பிட்டனா...?? இல்லை அவசரத்துல எப்பவும் போல அப்படியே கிளம்பிட்டானா..??" என்று வேலனை விசாரிக்கவும்,

"அதெல்லாம் ரொம்ப திவ்யமாவே ஆச்சு நீ போட்டு கொடுத்த எல்லாத்தையும் முழுசா முழுங்கிட்டுதான் போனான்" என்றுவிட்டு கிழே கிடந்த இலையை அப்புறப்படுத்தி தாயை தேடி சென்றாள்.

சைக்கிளில் சென்றவன் நேராய் சென்று இறங்கியது தன் நண்பன் அரவிந்திடம் தான். இருவருமே சிறு வயது முதலே தோழர்கள் கார்த்தி பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தி இருந்தாலும் இருவரின் நட்பும் இன்று வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. நண்பனின் வாடிய முகத்தை கண்டவன் அவன் கூறாமலே இன்றும் வீட்டில் ஏதோ பிரச்சனை என்பதை புரிந்து கொண்டவன் உடனே எழுந்து செல்ல சில நிமிடங்களில் திரும்பியவன் கரத்தில் நண்பனுக்கான உணவு பொட்டலம் வீற்றிருந்தது.

****

'நிறுத்துடா' என்று அருணா குரல் கொடுக்க,

எதிர்பாராமல் ஒலித்த அருணாவின் குரலுக்கு கட்டுப்பட்டு ரகு வண்டியை நிறுத்த முயற்சிக்க அது கிறீச்சிட்டு ஒரு குலுக்கலோடு நின்றது.

கார் கதவை திறந்து இறங்கி கதவை அறைந்து சாற்றியவள் அவனை முறைத்தவாறே வாகனத்தை சுற்றிக்கொண்டு முன்னே வந்து அமர்ந்தவள் அவன் புறம் திரும்பி, "ஏன்டா வண்டியை நிறுத்துன்னு உன்கிட்ட தினமும் சொல்லனுமா? உனக்கா தெரியாதா..?" என்று பொரிய துவங்கியவள் இறுதியாக குறையாத கோபத்தோடு சீட்டில் சாய்ந்து சாலையை வெறிக்க தொடங்கி விட்டிருந்தாள்.

“ஆம் கடந்த ஆறு மாதங்களாக இதுதான் வழக்கம். அருணா காரில் ஏறி அவர்கள் வீடு, தெரு கடந்த பின்பு குறிப்பிட்ட இடத்தில் ரகு வண்டியை நிறுத்துவதும் அருணா முன்னே வந்து அமர்ந்து அவனோடு பேச்சில் லயித்துப்போவதும்

அவளின் கோபத்தின் அளவை உணர்ந்தவன் நிதானமாக, "என்ன என் அனுக்குட்டிக்கு இன்னைக்கு கோபம் அதிகமா இருக்கு போலவே, இது நல்லது இல்லையே" என்று ஒற்றை கரத்தால் ஸ்டேரிங்கை பிடித்தவாறு கியர் மாற்றிக்கொண்டே தலை சரித்து அவளை பார்க்க,

அவளோ எதிரே இருந்த கண்ணாடியினூடே சாலையை வெறித்தவாறு இன்னும் கோபம் குறையாமல் அமர்ந்திருந்தாள்.

"அனும்மா கேட்டதுக்கு இன்னும் பதில் வரலை அவ்ளோ கோபமா..??" என்று மீண்டும் கேட்க,

"ஆமா அது இருக்கு எக்கச்சக்கமா" என்றவள் இப்போது அவன் புறமாக நன்கு திரும்பி அமர்ந்து,

"இன்னையோட எக்ஸாம் முடியுது ரகு நாளையில் இருந்து ஸ்கூல் போக முடியாது உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ண முடியாதுன்னு நானே எவ்ளோ தவிச்சிட்டு இருக்கேன் நீ என்னடான்னா என்னை பத்தின கவலையே இல்லாம வண்டி ஓட்டிட்டு இருக்க" என்று அவனிடம் ஆதங்கமாக கேட்க,

அவளின் சிறுபிள்ளைதனமான கோபத்தில் எழுந்த புன்னகையுடன், "அனுக்குட்டிக்கு இன்னும் ரெண்டு மாசத்துல பிறந்தநாள் வரப்போகுதுல்ல அதுக்கு ஸ்பெஷலா மறக்க முடியாத மாதிரி... என்ன கிப்ட் கொடுக்கலாம்னு யோசிச்சிட்டே வந்ததுல இதை மறந்துட்டேன்டா செல்லம்" என்றவாறு வண்டியை நிறுத்தியவன்,

இருகரங்களாலும் தன் காதை பிடித்தவாறே, "சாரி! சாரி டா அனுபாப்பா இனி இப்படி பண்ண மாட்டேன்..."என்று கெஞ்ச,

தன் மீதான அவன் அன்பும் கரிசனமும் அவளுக்குள் ஒருவித கர்வத்தை ஏற்படுத்த அவன் மன்னிப்பை ரசித்தவள் ரகுவை நெருங்கி தலைமுடியை கலைத்துவிட்டுக்கொண்டே, "சரி.. சரி.. போதும்" என்று புன்னகையுடன் அவனை பார்த்தவள், "நான் மனசு விட்டு பேசுறது உங்கிட்டதான், அதுவும் இப்படி ஸ்கூல் போற, வர டைம்லதான் இப்போ நீ நிப்பாட்டாம போகவும் கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன்" என்றவள் தாடி அடர்ந்த அவன் கன்னத்தை தன் கரங்களில் ஏந்தி அவன் விழிகளோடு அவள் விழிகளை கலக்க விட்டு "புரிஞ்சிக்கோடா!"என்றாள்

அவனுக்கா புரியாது! இந்த நொடிக்காக வருட கணக்கில் காத்திருந்தவன் ஆயிற்றே!...

பழம் நழுவி பாலில் விழுந்திருக்கும் இந்நொடியின் அருமையை அவனையன்றி வேறு யார் அறிவர். இதழில் உதித்த வெற்றி புன்னைகையோடு,

"எனக்கு மட்டும் யாருடி இருக்கா..? உன்னை விட்டா என்னை மனுஷனா மதிக்கவும் இவ்ளோ ஏன் என்னை சாப்பிட்டியானு கேட்கவும் கூட யாரும் இல்ல..., நீ இல்லைன்னா இந்த ரகு இல்லை நீயும் புரிஞ்சிக்கோ அனும்மா !! என்று கூறியவாறே, அவளை தன் மார்பில் சாய்த்துக்கொண்டான்.

தன் நெஞ்சில் சாய்ந்திருந்தவளின் தலை கோதியவன் ஒரு கட்டத்தில் அவள் விழிகளின் ஈரம் உணர்ந்து அவள் முகத்தை நிமிர்த்தி தன் கைக்குட்டை கொண்டு துடைத்து விட்டவாறே, “அனும்மா என்னதிது..?? எதோ ஞாபகத்துல வண்டிய நிறுத்தாம போனதுக்கு இப்படியா..?? என்ற போதும் அவள் அழுகை நிற்காமல் இருப்பதை கண்டவன்,

" இன்னைக்கு உனக்கு கடைசி பரீட்சை தானே! இப்படியே அழுதுட்டு இருந்தா எப்படி எழுத முடியும் அப்புறம் அம்மா அப்பா எல்லாரும் ஆசை பட்ட மாதிரி நீ எப்படி டாக்டர் ஆக முடியும்..??" என்று கேட்க ,

'வேண்டாம்' என்று உறுதியாக அவளிடம் இருந்து வார்த்தைகள் வெளிவர,

'என்ன ...??'

'ஆமா' என்று கண்களை துடைத்தவாறே அவனை பார்த்தவள், "எனக்கு டாக்டர் ஆக வேண்டாம் நீ தான் வேணும் ரகு..!! டாக்டர் ஆனா சந்தோஷமா இருக்க மாட்டேன் உன் கூட இருந்தா மட்டுமே எனக்கு சந்தோசம், என்னை உன் கூடவே கூட்டிட்டு போயிடுறியா ரகு..???" என்று ஏக்கத்துடன் கேட்க,

'என்ன பேசுறன்னு புரிஞ்சிதான் பேசுறியா அனு..??' என்று அவளை தன்னிடம் இருந்து பிரித்து அமர்த்திட

'ஹும்' என்று முனங்கியவள், "எனக்கு வீட்ல இருக்கவே பிடிக்கலைடா எப்ப பார்த்தாலும் படி படின்னு படிப்பை பத்தியே எல்லாரும் பேசுறாங்க என்றவளுக்கு மீண்டும் துளிர்த்தது.

"அண்ணன் எல்லாம் இப்போ சரியாவே மூஞ்சி கொடுத்து பேசுறது இல்லை.... அப்பா பேசுறதே அபூர்வம் அப்பவும் நல்ல படிக்கணும் டாக்டர் ஆகணும்ன்னு இதையே தான் சொல்லிட்டு இருக்காங்க ஆனா நீ மட்டும் தான் எனக்கு என்ன பிடிக்கும் என்ன வேணும்ன்னு பார்த்து பார்த்து செய்யற எனக்கு உன் கூட இருக்க நிமிஷம் தான் சந்தோசம்" என்றிட,

'அதுக்காக..??' என்று புருவம் தூக்கி அவன் அவளை பார்க்க,

இதழ்களை அழுந்த பற்றி கண்ணீரை அடக்கி அவனை பார்த்தவளுக்கு என்ன பதில் சொல்வதென்று புரியாமல் போனது.

அவள் மனநிலையை நன்கு உணர்ந்தவனின் மனதின் மகிழ்ச்சியை வார்த்தைகளை கொண்டு அடக்கி விட முடியாது ஆனால் காலம் இன்னும் கனியவில்லையே அதனால் அதை தனக்குள் புதைத்துகொண்டவன்,

"அனுக்குட்டிக்கு இன்னைக்கு என்ன ஆச்சு..??? ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கீங்க போல இப்போ எதையும் யோசிக்க வேண்டாம்..., நல்ல படியா எக்ஸாம் எழுதுங்க எதுவா இருந்தாலும் நாம சாயங்காலம் பேசிக்கலாம்" என்றவன் இன்னும் அவள் முகம் தெளியாமல் இருப்பதை கண்டு,

'அனும்மா' என்று அழைக்க அவளிடம் அசைவில்லை,

'அனுக்குட்டி' என்று அவளை நெருங்கி முகம் நோக்கி குனிந்திட அப்போதும் அவனை பார்த்தவளிடம் அசைவில்லை உடனே அவள் கண்களை ஒரு கரம் கொண்டு பொத்தியவன், காரின் டேஷ்போர்டில் இருந்து நூறு ரூபாய் மதிப்புள்ள சாக்லெட்டை எடுத்து அவளிடம் முன் நீட்டி இப்போது கண்களை திறக்கவும் அதை கண்டவளின் முகத்தில் கோடி சூரிய பிரகாசம் தோன்ற குழந்தையாய் ஆர்பரித்து கொண்டு சாக்லெட்டை ருசிக்க தொடங்கியவளின் முகத்தில் புன்னகை நிறைந்து போனது அதை கண்டவாறே காரை எடுத்திருந்தான் ரகு.

பள்ளியின் வளாகத்தினுள் காரை நிறுத்தியவன் "ஆல் தி பெஸ்ட் அனும்மா" என்றிட அவளோ பின்புறமிருந்து தன் பையை எடுத்து அதிலிருந்து பணத்தை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

அவனோ எதிர்பாராதது போல் “என்னடி இது! எதுக்கு?” என்றான் முகத்தில் அதிர்ச்சியை தேக்கியவாறு அருணாவோ,

"இது எனக்கு அம்மா குடுத்தது ரகு இன்னிக்கு ஸ்கூல் லாஸ்ட் டே இல்லையா அதனால் பிரிண்ட்ஸ் கூட செலிப்ரட் பண்ணறதுக்காக கேட்டு வாங்கினேன்".

"அதை எதுக்கு என் கிட்ட கொடுக்குற...??"

"நான் கொடுத்தா வாங்க மாட்டியா..??? வாங்கு டா!!" என்று அதட்டினாள்.

அதை வாங்காமல் அவளையே பார்த்தவன் பின் மூச்சை எடுத்துவிட்டவாறு, "எதுக்குன்னு சொல்லு’ என்றான் கரகரத்த குரலில்.

"எனக்கு பர்த்டே கிபிட் வாங்கணும்னு சொன்னியே அதுக்கு"

அதுநேரம் வரை அழுத்தமாய் படிந்திருந்த அவன் பார்வையில் மெல்ல கடுமை ஏற, "இந்த மாதிரி இன்னொரு முறை என்னை அசிங்கப்படுத்துன இழுத்து வச்சி அறைஞ்சிடுவேன்.. உள்ள வைடி!" என்று அவன் கர்ஜிக்கவும்,

'ரகு' என்று அதிர்ச்சியுடன் அவனை பார்க்க

'உள்ள வைன்னு சொன்னேன் அருணா' என்றவனின் குரலில் இருந்த கர்ஜனை அவளை மேலும் பேசவிடாமல் செய்ய கலங்கிய விழிகளுடன் அவனை பார்த்தவள் தன் பையை எடுத்துக்கொண்டு காரை விட்டு இறங்கினாள்.

ரகுவோ ஸ்டேரிங்கை இறுக பற்றிக்கொண்டு இருக்க அருணாவோ அவனை திரும்பி பார்த்தவாறே சென்றாள்.

அவளையே பார்த்துக்கொண்டிருந்தவனின் இதழ்களோ எள்ளலாய் வளைந்தது, "உங்கிட்ட இருந்து இப்படி ஐநூறு ஆயிரம் பிச்சைக்காசு வாங்கவா இவ்ளோ நாள் கஷ்டப்பட்டு எனக்கு வராத காதல், பாசம், புண்ணாக்கை எல்லாத்தையும் வர வெச்சு உன்னை கரெக்ட் பண்ணிருக்கேன்... என் லெவலே வேறடி " என்று எண்ணியவாறே கரங்களை தலைக்குப்பின் கோர்த்து இருக்கையில் சாய்ந்தான் ரகு.

ஹாய் செல்லகுட்டீஸ்...


இதோ "பாதை மாறிய பயணம்" அடுத்த அத்தியாயத்துடன் வந்துட்டேன். படிச்சிட்டு மறக்காமல் உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் அதுவே என்னை வேகமாக எழுத வைக்கும்.

நன்றிகள்


ருத்ரபிரார்த்தனா
 
Last edited:

Vatsalaramamoorthy

Well-Known Member
ரகு நெகடிவ் கேரக்டர் னு அனுக்கு தெரியவரும்போது..கார்த்தி அறிமுகமா?
நல்ல பதிவு.
 
Rudraprarthana

Well-Known Member
ரகு நெகடிவ் கேரக்டர் னு அனுக்கு தெரியவரும்போது..கார்த்தி அறிமுகமா?
நல்ல பதிவு.
சீக்கிரமே தெரியவரும் சாலாம்மா... நன்றிகள்...
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement