Azhagae Azhagae - Ep 7

Advertisement

Kalaarathi

Well-Known Member
அத்தியாயம் - 7

“என்னம்மா எதுவும் பிரச்சனையா?” என்ற விநாயகத்தின் கேள்விக்கு ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்

“இல்லைங்க வரும்போது அதிகமா ஆட்களை வெளியே பார்க்க முடியவில்லை. ஒரு பெண்ணிடம் உங்க பேரைச் சொல்லி கேட்டோம். இந்த ரோட்டில் கொஞ்ச தூரம் போனால் உங்க வீடு வரும் என்று சொன்னதை கேட்டுப் போனோம்…”

“இந்த ஊரில் விநாயகம் பேரில் வேறு யாருமே கிடையாதே”

“அது அப்படித்தாங்க. நாங்க போய் விசாரிச்ச இடத்தில் பெரிய விநாயகர் கோவில் இருந்தது” என்று சிரித்தார் அபிராமி. தொடர்ந்து “சரி வந்தது வந்துவிட்டோம் வந்த காரியம் சிறப்பாக நடக்க வேண்டும் என்று சாமியை வணங்கிட்டு வந்தோம்” என்றார்.

“விசாலம் போய் தாராவை அழைச்சிட்டு வா” என்று மனைவியை அனுப்பினார். அவள் உள்ளே சென்றதும்¸ “அத்தை இங்கே வாங்க வந்து உட்காருங்க” என்று காமாட்சியை அழைத்தார்.

“இருக்கட்டும் மாப்பிள்ளை. நான் மீரா வர்றாளான்னு பார்க்கிறேன்” என்று திரும்பாமலே பதில் சொல்லிவிட்டு வாசலை நோக்கிச் சென்றார்.

தாரா வந்து எல்லாருக்கும் காபி கொடுத்த சமயம்… “வாம்மா மீரா பாட்டிக்கு ஒரு போன் பண்ணியிருக்கக்கூடாது” என்று கேட்டார் பாட்டி. “போங்க பாட்டி இன்னிக்கு பெய்த மழையில் நனைந்து என் போனுக்கு என்னமோ ஆயிடிச்சி. ரூமுக்குப் போனதும் என்னாச்சுன்னு கழட்டிப் பார்க்கணும்…”

அவர்கள் பேசியது உள்ளே இருந்தவர்களுக்குத் தெளிவாகப் கேட்டது.

“நீங்க காபி சாப்பிடுங்க தம்பி” என்றார் விநாயகம்.

“நீயும் உட்காரும்மா” என்று அபிராமி சொன்னதும்¸ தாரா அவரருகில் பவ்யமாக அமர்ந்து கொண்டாள்.

அபிராமிக்கு வரும்போது பார்த்த பெண்ணைவிட¸ தாரா நிறமாகத் தெரிந்தாலும் அழகாகத் தோன்றவில்லை. இருந்தாலும் பார்க்க வந்த பெண் இவள்தான். மகனுக்குப் பிடித்துவிட்டால் பேசி முடிக்க வேண்டியதுதான் என்று நினைத்தார்.

வெளியே¸ “பாட்டி மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டுப் போயாச்சா? நான் உள்ளே போகலாமா?” கேட்டாள் மீரா. மீண்டும் மழைத்தூரல் போட ஆரம்பிக்கவும்¸ “பாட்டி நான் மழையில் கொஞ்ச நேரம் நின்று என்மேல் உள்ள சகதியை கழுவிக்கிறேன்” என்று சொன்னவள்¸ மழையின் இரைச்சலில் பாட்டிக்கு அது சரியாகக் கேட்காமல் போகவே¸ மீண்டும் ஒருமுறை கத்தி சொல்லிவிட்டு சென்று மழையில் நனைந்தாள்.

“அப்பா பாருங்க இந்த மீராவை. மழையில் நனைஞ்சிட்டு இருக்கா” என்றாள் சாரா.

“சரி விடும்மா. அவ சொன்னா மட்டும் கேட்கவா போறா” என்று மகளிடம் சொல்லிவிட்டு¸ “தம்பி உங்களுக்கு கடை இருக்கிறதா தரகர் சொன்னார்?” என்று கேட்டார் விநாயகம்.

“ஆமா சார். பர்னிச்சர் அன்ட் எலக்ரானிக் ஷோரூம் ஒன்னு பெரியதா எங்க ஊர் கோவையில் இருக்குது. அப்புறமா இன்னும் வேற வேற மாவட்டங்களிலும் ஆள் வைத்து பார்த்துக் கொள்கிறேன்” என்றவாறு வாசலை பார்த்தான். அப்போதுதான் பாட்டி மீராவை மாடிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.

அவன் பார்வை அங்கு செல்வதை கவனித்தவர்¸ “அதுவும் என் பெண்தான் தம்பி. காலேஜ் போயிட்டு வருகிறாள்” என்றார்.

அபிராமி அந்த பெண்ணை இங்கு பார்ப்போம் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.

மகனது கவனம் அப்பெண்ணை நோக்கிச் சென்றதை கவனித்தவர்¸ “தாராவை நல்லா பாருப்பா” என்று அவனுடைய தோளில் கை வைத்தார்.

“நான் தாராகிட்ட கொஞ்சம் தனியா பேசலாமா?” என்று கேட்டான் விநாயகத்திடம்.
“ஓ… தாராளமா பேசுங்க தம்பி. தாரா தம்பியை மேலே கூட்டிட்டுப் போம்மா” என்றார்.

“வாங்க” என்று வெட்கத்தோடு முன்னால் சென்றவளிடன் நடை ரசிக்கும்படியாக இல்லை.

மாடிப்படி ஏறும்போது கவனித்தான். மீரா நடந்துசென்ற ஈரக்கால் தடங்கள் காயாமல் அப்படியே இருந்தது.

தாரா ஏதேதோ பேசியவாறே சென்றாள். அவன் எங்கே அதைக் கேட்டான். அவள் திரும்பி¸ “என்னங்க பதிலையே காணோம்?” என்றாள்.

“இது யாரோட ரூம்?” என்று அருகிலிருந்த அறையை சுட்டிக் காட்டி கேட்டான்.

“இது என் தங்கை சாராவோடது”

“உன் ரூம் எது?”

“கடைசி ரூம்¸ வாங்க” என்று சொல்லி முன்னே சென்றாள்.

மூன்று அறைகள் ஒரே வரிசையில் இருந்தது. முன்புறமாக எப்படி இருந்ததோ¸ அப்படியே பின்பக்கம் பால்கனியும் நீளமாக இருந்தது. அவர்கள் இருவரும் பால்கனியில் நின்று தோட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது¸ “கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?” என்று கேட்டான் கீதன்.

“இதோ என் அறையில் ஃப்ரிட்ஜ் இருக்கிறது¸ எடுத்து வருகிறேன்” என்று அறைக்குள் சென்று குளிர்ந்த நீரை எடுத்து வந்தாள்.

“எனக்கு கொஞ்சம் வெந்நீர் கொடுக்க முடியுமா? மழை நேரம் நான் குளிர்ந்த நீர் குடிப்பதில்லை” என்றான்.

“இதோ… இப்பவே போய் எடுத்து வர்றேன்” என்று கீழே இறங்கினாள்.

“என்ன மீராம்மா¸ இப்படி நனைஞ்சிட்டு வந்திருக்கே… மழைவிட்ட பின்னாடி வந்திருக்கலாம் இல்லையா?” என்று கேட்டுக் கொண்டிருந்தார் பாட்டி.

“ஐயோ என் செல்லப்பாட்டி… என்னைப் பத்தி உங்களுக்குத் தெரியாதா?” என்று தான் வரும்போது நடந்ததைக் கூறினாள்.

“ஆனா பாட்டி¸ மழையில் என் புக்ஸ்¸ போன் எல்லாம் நனைந்துவிட்டது?” என்று சொல்லி ஒவ்வொன்றாக திறந்து வைத்துவிட்டு¸ போனை ஆன் செய்தாள்.

“சரி போய் துணியை மாத்து. எவ்வளவு நேரம்தான் ஈரத்தில் நிற்பாய்” என்று அவளை அனுப்பி வைத்தார்.

ஈர ஆடைகளைக் களைந்துவிட்டு¸ உடலில் பெரிய டவலை போர்த்தியவாறு வந்தாள் மீரா.

“வா மீரா¸ இப்படி கட்டிலில் வந்து உட்கார்” என்ற பாட்டி அவளது தலையைத் துவட்டியவாறு தாராவைப் பெண்பார்க்க வந்திருக்கும் மாப்பிள்ளையைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்.

தன்னைப் பற்றி பேசுவது தெரிந்ததும்¸ மீராவின் அறையையொட்டி இருந்த ஜன்னலின் அருகே சென்று அமர்ந்தான் அபர்கீதன்.

“மீரா உனக்குக்கூட இப்படியொரு மாப்பிள்ளை தான் கணவனாக வரவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. தெரியுமா?”

“அது வரும்போது வரட்டும் பாட்டி. அக்காவைப் பார்க்க வந்தவரைப் பற்றி நாம் பேச வேண்டாம்” என்று சொல்லி அந்த பேச்சை முடித்துவிட்டாள்.

“குளிருது பாட்டி. நான் போய் ஜன்னலை அடைச்சிட்டு வர்றேன்” என்று சென்றவள்¸ ஜன்னலை அடைப்பதற்காக கையை வெளியே நீட்டும்போது எதிரில் நிழலாட நிமிர்ந்து பார்த்தவள்¸ திகைத்துவிட்டாள். அங்கு கைகளைக் கட்டியபடி நின்று கொன்டிருந்தான்¸ அந்த கார்க்காரன்.

மீரா சட்டென ஜன்னலின் கர்ட்டனை இழுத்துவிட்டு நிமிர்ந்த சமயம்¸ “ஓ… நீங்க இங்கே இருக்குறீங்களா?” என்று தாராவின் குரல் கேட்டது.

அவர்கள் அங்கிருந்து விலகும் சத்தம் கேட்டதும்¸ ஜன்னலைப் அடைத்துவிட்டு வந்தவள் ஒரே படபடப்பாக உணர்ந்தாள். சென்று தண்ணீர் எடுத்துக் குடித்தாள்.

வேறு ஆடை அணிந்து வந்து¸ கண்ணாடி முன் போய் நின்றாள். அங்கும் அவன்¸ அந்த கார்க்காரன் நிற்பது போல் தோன்றவும்¸ திரும்பிப் போய் பாட்டியிடம் அமர்ந்து கொண்டாள்.

அவர் அவளது ஈரக்கைகளை தேய்த்து விட்டார்.

கீதனும் தாராவும் ஹாலுக்குள் திரும்பி வந்ததும்¸ “வாங்க தம்பி¸ என் பொண்ணுகிட்ட பேசியாச்சா? அவளை உங்களுக்குப் பிடிச்சிருக்கா?” என்று கேட்டார் விநாயகம்.

அதற்கான பதிலை சொல்லும்முன் “அம்மா நீங்க என்னைத் தப்பா எடுத்துக்காதீங்க” என்று தாயிடம் சொல்லிவிட்டு¸ “சார் நீங்களும்தான்” என்று அவரிடமும் அவன் சொல்லவும்¸ அவர் சற்று பதற்றத்துடன்¸ “எதுக்கு தம்பி?” என்று கேட்டார்.

“சார்…” சொல்வதற்கு சற்றுத் தடுமாறியவன்¸ “சார்¸ நான் உங்க ரெண்டாவது பெண் மீராவை கல்யாணம் செய்துக்க விரும்புகிறேன்” என்று சொல்லி முடித்துவிட்டான்.

“என்ன தம்பி சொல்றீங்க”

“அப்பா பாருங்க வர்றவங்க எல்லாரையும் அந்த மீரா எப்படித்தான் மயக்குறான்னு தெரியலை” என்று சொல்லி அழுதபடி தன் அறைக்குச் சென்ற தாரா¸ மீராவை அழைத்துத் திட்டினாள்.

“ஏன்டி எனக்கு கல்யாணம் நடக்கக் கூடாதுன்னு கங்கணம் கட்டிக்கிட்டு அலையறீயா?” என்று கேட்டாள்.

“என்னக்கா¸ என்னாச்சு? ஏன் இப்படியெல்லாம் பேசுறே?” என்று கேட்டாள் இவள்.

“என்னை அக்கான்னு கூப்பிடாதே…” என்று அவள் கத்திக் கொண்டிருந்தது கீழே வீட்டின் ஹாலில் நின்றவர்களுக்குக் கேட்டது.

“சார் மீராவை யாரும் திட்டவேண்டாம். இது என்னோட விருப்பம்தான்” என்று விநாயகத்திடம் சொன்னவன்¸ “அம்மா உங்களுக்கும் சம்மதம்தானே?” என்று தாயாரிடம் கேட்டான்.

“உனக்கு யாரைப் பிடித்திருக்கிறதோ¸ அந்த பெண்ணையே எனக்கும் பிடிக்கும்” என்றார் அபிராமி.

விநாயகத்திடம்¸ “சார் நாங்க நாளைக்கு சயாங்காலம் கிளம்புவோம். அதற்குமுன் உங்க பதிலை சொல்லுங்க… என்னவானாலும் மீரா எனக்குத்தான் சார். நான் முடிவு பண்ணிட்டேன். அதனால எனக்கு ஏத்த பதிலை சொல்லுங்க” என்று சொன்னவன் கிளம்பிவிட்டான் தாயாருடன்.

தாயாருடன் அவன் கிளம்பியதும்¸ அனைவரும் சேர்ந்து மீராவை திட்டித் தீர்த்து விட்டார்கள்.

“உன்னை யாருடி அந்த நேரத்தில் உள்ளே வரச் சொன்னது?” என்று கேட்டாள் சாரா.

“நான்தான் அந்த பக்கமே வரவில்லையே சாரா… பின்னே ஏன் என்மேல் பழியைப் போடுறீங்க?” என்று கேட்டாள் மீரா. அதன்பின் அவளை யாரும் எதுவும் சொல்லவில்லை. அவள் சொன்னபடி அவள் தான் அங்கு வரவேயில்லையே அவளைத் திட்டியும் என்ன லாபமென விட்டுவிட்டனர்.

ஒருவழியாக அழுது ஓய்ந்த தாரா¸ “அப்பா இவளை அந்தாளுக்கே கல்யாணம் பண்ணி இந்த வீட்டைவிட்டு அனுப்பி வைச்சிடுங்க” என்று தகப்பனிடம் சொல்லிவிட்டு¸ “ஆனால் நல்லா கேட்டுக்கோ மீரா¸ நீ சந்தோஷமா வாழவே முடியாது. ஏன்னா நான் கடவுளிடம் அப்படித்தான் வேண்டிப்பேன்” என்றாள்.

இதைக் கேட்ட சாரா¸ “அக்கா என்ன நீ அவளுக்குப் பயந்து…” என்று ஏதோ சொல்ல வரும்முன் “அந்தாளும் என்னை வேண்டாம் என்று போய்விட்டாரேடி” என்று அழுதாள் தாரா.

நடந்ததையெல்லாம் பார்த்த பாட்டி ‘பலநாள் அவளை அழ வைத்ததன் பலனாக இப்போது அழுகிறார்கள். பாவம்’ என்று பரிதாபப்பட்டார்.

மறுநாள் காலையிலேயே அபிராமியிடம் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார் விநாயகம். மீராவிடம் பிடித்திருக்கிறதா என்றும் கேட்கவில்லை.

ஆனால் தாராவிற்கு திருமணம் முடிந்த பின்தான் உங்களுக்கும் மீராவுக்கும் திருமணம் என்று சொன்னதும்¸ “சரி நானே பையன் பார்க்கிறேன்” என்று பொறுப்பை தனதாக்கிக் கொண்டான் கீதன்.

அபிராமி தாங்கள் வாங்கி வந்திருந்த மலர்ச்சரத்தை எடுத்துப்போய் மீராவின் நீளக் கூந்தலில் வைத்துவிட்டார்.

சரியாக ஒரு மாதத்தில் தாராவிற்கு பிடித்த மாதிரி ஒரு மாப்பிள்ளையைக் கொண்டுவந்தான்¸ அவன் பெயர் பாரி. தாராவிற்கும் மாப்பிள்ளையைப் பிடித்துப் போகவே¸ அவர்களது திருமணம் விரைவில் நடந்து முடிந்தது¸ அபர்கீதன் மீராவின் திருமண நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது.

அபர்கீதன் நாகர்கோவிலுக்கு வந்த சமயத்தில் எல்லாம் மீராவிடம் பேச விரும்பினாலும் அவள் பயந்து ஒதுங்கிவிட்டாள். ஆனால்¸ மாமியாரிடமும் நாத்தனாரிடமும் போனில் நன்றாகப் பேச ஆரம்பித்துவிட்டாள்.

இங்கே கோவையில் கீதனின் திருமணத்திற்கு வந்த அஸ்வினி¸ அண்ணணை நன்றாக கலாய்த்தாள். “பெண் பார்க்கப் போய்விட்டு¸ அவளின் தங்கையை பிடித்திருப்பதாக சொல்வதாக ஏதோ ஒரு தமிழ் படத்தில் வருமே… அதேதானா அம்மா?” என்று அவன் முன்பாக தாயாரிடம் கேட்டு வயிறு வலிக்க சிரித்தாள்.

“ஏய் போதும் பல் சுளுக்கிக்கப் போகுது. என்னவோ எல்லாரும் எனக்கு பிடித்த பெண்ணை கல்யாணம் பண்ணிக்க அடிக்கடி சொல்வீங்களேன்னு… என் மனசுக்குப் பிடித்த பெண்ணை கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொன்னால் கிண்டல் பண்றீங்க. சரி போகட்டும்¸ எல்லாம் மீராவுக்காக பொறுத்துப் போகிறேன்” என்றான் கீதன்.

“என்ன பொறுத்துப் போறியா? அம்மா பாருங்கம்மா இந்த அண்ணாவை…”

“ஆமாம் அஸ்வி¸ உன் ஆளுகூட உனக்காக கல்யாணத்திற்கு முன் எல்லாவிதமான கிண்டலையும் தாங்கிக்கிட்டாராம். அவர் மட்டும் அப்படி இருக்கும்போது நான் இருக்கக்கூடாதா?” என்று கேட்டு கேலி கிண்டலுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

அபர்கீதன் திருமணத்தை சிம்பிளாக நடத்த சொல்லிவிட்டான். விநாயகத்திற்கு மீராவிற்கு செய்வதில் விருப்பம்ல்லையாதலால் அவரும் கோவிலில் நடத்த ஏற்பாடு செய்திருந்தார் பாட்டியைத் தவிர மற்ற அனைவரும் முகத்தை உர்ரென்று வைத்திருந்தனர்.

கோவைக்கு மறுநாள் காலையில் செல்வதாக ஏற்பாடு. கீதனின் உறவினர்களும் குறைவாகவே வந்திருந்ததால்¸ அவர்களுக்கும் சேர்த்து ஹோட்டலில் ரூம் புக் பண்ணிவிட்டான்.

அஸ்வினியும் அபிராமியும் சேர்ந்து மீராவை தயார் செய்து கீதனின் அறைக்கு அனுப்பி வைத்தனர்.

அறையைப் சாத்தியவன்¸ உள்ளே தனித்துவிடப்பட்ட பள்ளிச் சிறுமி போல் தன் மனைவி நிற்பதைப் பார்த்துவிட்டு¸ அவளை நெருங்கினான்.

அவன் அருகில் வருவதைக் கண்ட மீரா¸ மயங்கி கீழே விழுந்துவிட்டாள்.

விரைந்து சென்று அவளைத் தூக்கியவன்¸ “மீரா கண்ணைத் திற” என்று தண்ணீரைத் தொட்டு அவளது விழிகளில் ஒத்தினான்.

கண்களைத் திறந்தவள்¸ சட்டென எழ முயன்று கீதனின் நெற்றியில் மோதிக் கொண்டாள்.

“ம்ம்… பர்ஸ்ட்நைட் அன்னிக்கு மனைவிக்கிட்ட இருந்து என்னவெல்லாமோ பரிசா கிடைக்கும் என்று எதிர்பார்த்தால்… இங்கு எல்லாமே வித்தியாசமா இருக்கு” என்று தன் நெற்றியைத் தேய்த்துவிட்டவாறே அவளின் முகம் பார்த்தான்.

அவளும் நெற்றியில் தான் கை வைத்திருந்தாள்.

அவன் “கையை எடு” என்று அவளது கையை நீக்கிப் பார்த்தால்¸ சிறு பந்துபோல் வீங்கியிருந்தது.

“இது இப்படியே இருந்தால் காலையில் பார்க்கிறவங்க¸ கல்யாணம் முடிந்த அன்றே நான் உன்னைக் கொடுமை செய்ததாக நினைத்துவிடுவார்கள்” என்று சொல்லி நன்றாக அழுத்தித் தேய்த்துவிட்டான்.

அவளுக்கு வலியில் அழுகை வந்துவிட்டது.

“கண்ணீரைத் துடை” என்றான் சற்று அழுத்தமாக.

“நானே தடவிக்கிறேன்” என்று எழப்போனாள் மீரா.

“ஏன்?” என்று கேட்டவன் பதில் வராது போகவே¸ “நான் தொட்டால் ஒன்றும் ஆகாது” என்று சொல்லி மீண்டும் அழுத்தித் தேய்த்தான்.

“இப்போ பராவாயில்லையா?” என்று கேட்டவன்¸ பால் ஊற்றி எடுத்து வந்து கொடுத்தான்.

சற்று ஆச்சரியத்துடன் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் அவள்.

“இன்றைக்கு மட்டுந்தான் இந்த சலுகை¸ வாங்கிக் குடி. அங்கே வந்தபின் இந்த மாதிரி எதையும் எதிர்பார்க்ககூடாது” என்று கூறியவன்¸ கட்டிலில் போய் படுத்துவிட்டு அவளையும் அருகில் வந்து படுத்து தூங்க சொன்னான். பாலில் அவன் தூக்க மாத்திரை கலந்திருந்ததால்¸ சென்று படுத்தவள் உடனே தூங்கிவிட்டாள்.

அவள் தூங்கியபின் எழுந்து அமர்ந்து அவளையே பார்த்து கொண்டியிருந்தான்.

பட்டுச் சேலையில் புது தாலிக்கொடியுடன்¸ அவளது அடர்ந்த தலைமுடி முகத்தில் ஆங்காங்கே தவழ¸ அவற்றை ஒதுக்கிவிட்டவன் தன் அழுத்தமான உதடுகளை அவள் நெற்றியில் பதித்தான். மீரா சட்டென புரண்டு படுக்கவும் விலகிக் கொண்டான்.

அவளைத் தொடத் துடித்த கைகளை அடக்கிக் கொண்டான். தன்னுடைய வேகத்தில் அவள் மிரண்டுவிடக்கூடாது என்றுதான் மென்மையாக நடந்துகொண்டான். அந்த இதத்தில் அவளும் உதட்டில் புன்னகையுடன் தூங்குகிறாள்.

அவளது வடிவான இதழ்களை வருடியவன்¸ எதையோ நினைத்துப் பார்த்தான். இப்படியே பார்த்துக்கொண்டியிருந்தால் தூங்குவது எப்படி என்று படுத்துவிட்டான்.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கலாரதி டியர்

அபர்கீதன் மீராவைத்தான் கல்யாணம் செஞ்சிருக்கான்
ஹப்பா இப்போத்தான் ஹேப்பியா இருக்கு
அடப்பாவி விநாயகம்
மீராவுக்கு செய்ய இஷ்டமில்லையா?
நீயெல்லாம் என்ன அப்பன்?
பாட்டியைத் தவிர மீராவின் கல்யாணத்தில் யாருக்கும் இஷ்டமில்லையா?
இதுகளெல்லாம் என்ன ஜென்மங்களோ?
ஆமாம் கீதன் பக்கத்திலே வந்ததும் மீரா ஏன் மயக்கம் போட்டுட்டாள்?
மீராவின் நெற்றி எப்படி வீங்கியது?
பர்ஸ்ட் நைட்லே தூக்க மாத்திரையைக் கொடுத்து தூங்க வைச்சானா?
ஏன் அப்படி?
அப்போ அபர்கீதனுக்கு மீராவைப் பிடிக்கவில்லையா?
இன்னுமா இந்த பெண்ணுக்கு கஷ்டங்கள் முடியவில்லை?
 
Last edited:

Saroja

Well-Known Member
ரொம்ப நல்லா இருக்கு
என்ன இவன் நிஜமாகவே
பிடிச்சு கல்யாணம் செய்தானா
வேற ஏதும் விசயம் இருக்கா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top