Azhagae Azhagae - Ep 6

Advertisement

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம் - 6

டாக்டரை அனுப்பி வைத்த காமாட்சி நேரே மருமகனிடம் சென்றார். “என் பேத்தி என்ன தப்பு செய்தாள்னு அவளுக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்தீங்க?” என்று கேட்டார்.

“அத்தை இதில் நீங்க தலையிடக்…” என்று ஆரம்பித்தவரை முடிக்கவிடாமல்¸ “எதில் தலையிடக்கூடாது? அவள் உங்க மகள் இல்லைன்னு சொல்லுவீங்களே? இப்ப எந்த உரிமையில் அவளை இப்படி தண்டிச்சீங்க?” என்று கேட்டார்.

“அவளைப் பத்தி தெரியாமல் பேசுறீங்க” என்றவரிடம்¸ “என் பேத்தியைப் பத்தி என்னைவிட உங்களுக்கு அதிகமாத் தெரியுமா?” என்று கேட்டார்.

“இன்றைக்கு நான் அங்கு போகவில்லையென்றாள் இந்தநேரம் அந்த பையனுடன் ஓடிப்போயிருப்பாள் தெரியுமா? சும்மா எதுவும் தெரியாமல் வந்து பேசாதீங்க” என்றார்.

“மீரா ஓடிப்போகப் போறாள்னு உங்களுக்கு எப்படி தெரியும்?”

“அது… சாராதான் இப்படி அவள் பேக்கைத் தூக்கிட்டுப் போறான்னு சொன்னாள்”

“ஏன் மாப்பிள்ளை ஓடிப் போகணும்னு திட்டம் போட்டவள் இப்படி பட்டப்பகலில் எல்லாரும் பார்க்கும்படியாகவா பேக்கை தூக்கிட்டுப் போவாள்… அப்படியே அவள் போக நினைத்தாலும் புதுசா ஒரு பையனை ஏன் பார்க்கணும்…? நேற்று வந்தானே அந்த பையன் கூடவே போயிருப்பாளே” என்றார்.

“அப்ப நான்போய் பார்த்தது எல்லாம் பொய்னு சொல்றீங்களா?” என்று கேட்டார்.

“நீங்க போனபோது ‘ஐயோ அப்பா வந்துட்டாரே!ன்னு பயந்து பேக்கைத் தூக்கிட்டு ரெண்டுபேரும் ஓடினாங்களா?’ என்று கேட்கிறேன்” என்றார்.

“இல்லை” என தலையசைத்தவர்¸ “ஆனால்¸ அவள் கொண்டு சென்ற பேக்கில் நகை¸ துணி¸ பணமெல்லாம் இருந்ததே” என்றார்.

“சரி. அப்படியே இருந்திருந்தாலும்¸ பேக்கில் என்ன இருக்கு என்று நீங்கள் கேட்டபோது தயங்காமல் பேக்கைக் காண்பித்தாளா? இல்லையா?” என்று கேட்டார்.

நன்றாக யோசித்தவர்¸ “ஆமாம்” என்றார்.

“மாப்பிள்ளை¸ ஓடிப்போகும் எண்ணத்துடன் அவளுடைய துணிகளை அவள் வைத்திருந்தால்¸ அவள் அதைத் தயங்காமல் உங்களிடம் காட்டியிருப்பாளா மாப்பிள்ளை… சொல்லுங்கள்”

எதுவும் பேசாமல் மௌனம் காத்தார் விநாயகம்.

“உங்களுக்கு அவளைப் பிடிக்காது என்பது தெரிந்ததிலிருந்து மற்ற இருவரும் அவளை ஒரு மனுஷியாகக்கூட மதிப்பதில்லை. என்றைக்காவது ஒரு நாள் நீங்கள் நல்ல தந்தையாக நடந்திருக்கிறீர்களா? இல்லை உங்கள் பிள்ளைகளைத்தான் அவளிடம் பாசத்தோடு இருக்கும்படி செய்திருக்கிறீர்களா? இதுக்கு நீங்க அவ பிறந்த அன்றே கொன்றிருக்கலாம்… தினம் தினம் சித்ரவதைப்பட்டும் அவளுக்கு எங்கும் போகத் தோன்றவில்லையே…” என்று புலம்பியபடி சென்றார் .

மீராவின் உடலில் இருந்த காயமும் தீப்புண்ணும் ஆற சில நாட்கள் ஆனது.

பாட்டிதான் அவளை கவனமாக பார்த்துக்கொண்டார். ஏதேனும் உதவி செய்ய வந்த தாயை மீரா நெருங்க விடவில்லை.

அன்று வீட்டுக்கு தரகர் வந்திருந்தார். “என்னப்பா கணபதி மாப்பிள்ளை வீட்டிலிருந்து ஆளுங்க வருவாங்கன்னு பொங்கல் முடிந்த மறுநாளே சொன்னே. ஆனால்¸ மாசம் ஒன்றாகப் போகுது¸ இன்னும் யாரும் வரவில்லை” என்றார் விநாயகம்.

“அதுவந்து அண்ணாச்சி… மாப்பிள்ளையோட அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. அதனாலதான்…”

“என்னய்யா என் பொண்ணுக்கு வரப்போறது சீக்காழி மாமியாரா?” என்று கேட்டார் சற்று அவசரத்துடன். “என்பொண்ணு அங்கே போய் மாமியாருக்கு சேவகம் பண்ற மாதிரி இருக்கக்கூடாது. வேற நல்ல இடமாப் பாரு” என்றார்.

“அண்ணாச்சி¸ பையன் குடும்பம் ரொம்ப நல்ல குடும்பம். அத்தோடு பையனோட பிறந்தது ஒரு பெண் மட்டுந்தான். அதுவும் கல்யாணமாகி டெல்லியில் இருக்கு¸ அதிகம் வரப்போக இல்லைங்க¸ ஒரு பிரச்சினையும் கிடையாது. பெண்ணை நம்பிக் கொடுக்கலாம்” என்றார்.

“சரி சரி¸ எப்ப வருவாங்களாம்?”

“இந்த வெள்ளிக்கிழமை கட்டாயம் வருவாங்களாம்” என்று சொல்லிச் சென்றார் தரகர்.

மீராவின் காலில் மட்டும்தான் காயம் இன்னும் ஆரவில்லை. "பாட்டி¸ இன்னிக்கு எனக்கு ஹால்டிக்கெட் தர்றாங்களாம். விமலா போன் பண்ணியிருந்தாள். நான் போயிட்டு வர்றேன்” என்று வெளியில் வந்து தன் ஸ்கூட்டியைப் பார்த்தவள்¸ அதன் இரண்டு டயர்களையும் காணவில்லை என்றதும்¸ அப்பாவின் டிரைவரிடம் சென்று¸ “அண்ணே என் வண்டியோட டயர் எங்கே?” என்று கேட்டாள்.

“மீராம்மா அது வந்து…” என அவர் தடுமாறவும்¸ உள்ளே சென்று பாட்டியிடம் பணம் வாங்கிவிட்டு தான் வருவதற்கு நேரமாகும் என்று சொல்லிச் சென்றாள்.

மீரா பஸ் நிறுத்தத்தை அடையும்முன் காரில் வெளியே செல்வதற்காக வந்த விநாயகம் அவளைத் தன்னுடன் வருமாறு அழைத்தார். பஸ் நிறுத்தத்திற்கு வெகு அருகில் வந்துவிட்டதால்¸ பதில் பேசாமல் அந்த நேரத்தில் வந்து நின்ற பேருந்தில் ஏறிச் சென்றுவிட்டாள். ‘பெரிய பாசந்தான். இதுவரைக்கும் வெளியே அழைச்சிட்டுப் போகாதவர் இப்போ எங்கேயும் ஓடிப் போய்விடுவாளோ என்ற பயத்தில் கூப்பிடுகிறார். அதனால் தான் பாசமும் பொங்கிட்டு வருது’ என மனதில் நினைத்தாள்.

“கீதன் நாம எப்போ பெண் பார்க்கப் போகிறோம்” என்று மகனிடம் கேட்டபடி வந்து உட்கார்ந்தார் அபிராமி.

“அம்மா வருடக்கணக்கு முடிக்கணும். அதெல்லாம் முடிந்து அறிக்கை வரட்டும். அப்புறம் போகலாம்” என்றான்.

“சரிப்பா”

“அம்மா உங்களுக்கு அவ்வளவு தூரம் டிராவல் செய்ய கஷ்டமா இருக்காதா” எனக் கேட்டான்.

தாய் பதில் சொல்லும்முன்¸ அவனே தொடர்ந்து “டிரெயினில் போக வேண்டுமா இல்லை நம்ம காரிலா” என்று கேட்டான்.

“இங்கேயிருந்து அங்கு போய்சேர எப்படியும் ஒரு முழுநாள் ஆகும் உன்னால அவ்வளவு நேரம் தொடர்ந்து டிரைவ் பண்ணமுடியுமா?” என்று தாயார் கேட்கவும் “ம்ம்… அது கஷ்டம்தான். நான் டிராவல்ஸ்க்கு அரேன்ஞ்ச் பண்றேன். அங்கு நல்ல ஹோட்டல் எதுன்னு விசாரித்து முன்பதிவு செய்துவிடுகிறேன். இங்கிருந்து இரவு கிளம்பினால் மறுநாள் காலையில் போய் சேர்ந்துவிடலாம். அன்று முழுவதும் ரெஸ்ட் எடுத்துவிட்டு¸ வேறு எங்கேனும் செல்வதாக இருந்தால் போய்விட்டு அதற்கு அடுத்தநாள் காலையில் போன் செய்து தெரிவித்துவிட்டு போகலாம். சரியாம்மா” என்று கேட்டான்.

“சரி கீதன் அப்படியே செய்யலாம். இப்பொழுது உன் வேலைகளைக் கவனி” என்று முடித்தார் தாயார்.

உள்ளே செல்லத் திரும்பியவர் அப்போதுதான் ஜானகி தரை துடைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். உடனே “ஏய் ஜானு நீ ஏன் இதையெல்லாம் செய்றே? இந்த வேலையெல்லாம் செய்யத்தான் வேலைக்காரப் பெண்கள் இருக்கிறார்களே” என்றார்.

அவர் “பரவாயில்லை அபி நானே…” என்று தன் வேலையைத் தொடரவும் “நீ எழுந்திரு” என்று அவரது கையைப் பிடித்து இழுத்தார்.

அவரை எழுப்பிவிட்டு விட்டு “பொம்மு இங்கே வந்து இதை சுத்தம் பண்ணு” என்று வேலைக்காரப் பெண்ணை ஏவினார்.

ஜானகியை அழைத்துச் சென்று “என்ன ஜானு நீ… நான் உங்கிட்ட எத்தனையோ தடவை சொல்லியும் கேட்காமல் நீ ஏன் மீண்டும் மீண்டும் வேலை செய்கிறாய்” என்று அன்புடன் கடிந்து கொண்டார்.

“நான் ஏன் செய்யக்கூடாது அபிராமி? நீ என்னை இங்கு அழைத்து வரவில்லையென்றால் நான் ஏதோ ஒரு வீட்டில் இந்த வேலைகளைத்தான் செய்து கொண்டிருந்திருப்பேன்…” என்றார்.

தொடர்ந்து அவரே “கணவரை இழந்து நின்றவளை இங்கு அழைத்து வந்து உன் குழந்தைகளை பார்த்துக் கொள்ள செய்துவிட்டு¸ நீ கடையை பார்த்துக் கொண்டாய். குழந்தைகள் இல்லாத என்னை உன் பிள்ளைகள் எவ்வளவு அன்பாக பார்த்துக் கொண்டார்கள். இன்றுவரை கீதன் எது வாங்கி வருவதாக இருந்தாலும் உனக்கும் எனக்கும் சேர்த்துதான் வாங்கி வருகிறான். எனக்கென பிள்ளைகள் இருந்திருந்தால்கூட அவர்கள் என்னை இவ்வளவு பாசமாக நடத்தியிருப்பார்களா என்பது சந்தேகம்தான். அதனால்தான் இந்த மாதிரி சின்ன வேலைகளையாவது செய்கிறேன். என்னைத் தடுக்காதே” என்றார்.

“சரிதான். எதையாவது செய்யப்போய் நீ முடியாமல் படுத்துவிட்டால் என் பேரப்பிள்ளைகளை யார் பார்பதாம்” என்றார் அபிராமி.

அவ்வளவு நேரமும் அவர்கள் பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்த அபர்கீதனுக்கு¸ ‘அம்மா பேரப்பிள்ளைகள் வரை போய்விட்டார்களே!’ என நினைத்து சிரிப்பு வந்தது.

ஆண்டு அறிக்கை தயாரித்து¸ கணக்கெல்லாம் முடிந்தபின் லாபத்தின் பத்து சதவிகிதத்தை வேலையாட்களுக்குப் பிரித்து சம்பளமாகக் கொடுத்தான். அன்றிரவே அவர்கள் பெண் பார்க்கும் படலத்திற்காக கோவையிலிருந்து கிளம்பிவிட்டார்கள்.

காமாட்சியிடம் வந்த விநாயகம் “அத்தை இன்று தாராவை பெண் பார்க்க கோவையிலிருந்து மாப்பிள்ளை வீட்டினர் வருகிறார்கள். அவர்கள் வரும் சமயம் இவளை அறையைவிட்டு வெளியே வரவேண்டாம் என சொல்லுங்கள்” என்றார் மீராவைப் பார்த்து.

“பாட்டி எனக்கு இன்றைக்கு பரீட்சை ஆரம்பிப்பதால் நான் காலேஜ் போயிட்டு அப்படியே கணினி வகுப்பிற்க்கும் போய்விட்டுத்தான் வருவேன். அதனால் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லுங்கள்” என்று பாட்டியிடம் சொன்னவள்¸ உடனே கிளம்பிவிட்டாள்.

விநாயகம் மனைவியிடம்¸ “விசாலம் செய்ய வேண்டியதை சீக்கிரம் செய்துவை. அவர்கள் வந்தபின் பரபரப்பு இருக்கக்கூடாது” என்றார்.

“எத்தனை பேர் வர்றாங்க” என்று கேட்டார் விசாலம்.

“மாப்பிள்ளையும் அவரோட அம்மாவும் தான் வர்றாங்களாம். தூரமா இருக்குறதால வேறுயாரையும் அழைத்து வரவில்லை” என்றார்.

“அப்படின்னா தரகர் வருவாரா”

“அவர் காலையிலயே போன் பண்ணினார். அவருக்கு ஏதோ ஒரு கோயிலுக்குப் போக வேண்டியிருப்பதால் வரமுடியாது என்று சொல்லிவிட்டார்… அவர்கிட்ட ஏற்கனவே அட்ரஸ் வாங்கிட்டாங்களாம். அதனால விசாரித்து அவங்களே வருவாங்க நீ வேலையைப் பாரு”

விநாயகம் இளைய மகளிடம் “சாரா உனக்கு இனி என்றைக்கு பரீட்சை” என்று கேட்டார்.

“இனி திங்கள் கிழமைதான்ப்பா”

“சரி. நீ போய் அக்காவுக்கு உதவி செய். மாப்பிள்ளை அக்காவைப் பார்த்து அசந்து போயிடணும். அப்படி இருக்க வேண்டும் தாராவோட அலங்காரம்” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

“அம்மா நல்லா மழை பெய்யுது. இங்கே யார்கிட்டயும் போய் அட்ரஸ் கேட்டு வர்றதுக்கு முன்னால நான் மொத்தமா நனைஞ்சிடுவேன்” என்றான் அபர்கீதன்.

“சரிப்பா இன்னும் கொஞ்ச தூரம் போ”

அவ்வளவு நேரமும் பலமாகப் பெய்து கொண்டிருந்த மழை மீரா பஸ்ஸை விட்டு இறங்கும்போது சுத்தமாக விட்டிருந்தது. ‘அப்பாடி மழை விட்டுவிட்டது. இல்லை வீடுபோய் சேருவது கஷ்டம்’ என நினைத்தபடி நடந்தவளின் மீது மழைநீரை அடித்துச் சென்றது அந்த வழியே சென்ற கார்.

“ச்சே… இதுக்கு மழையிலயே நனைந்திருக்கலாம்” என்று முகத்தைத் துடைத்துக் கொண்டு நடந்தாள்.

அவள்மேல் தண்ணீரை அடித்துச் சென்ற கார் சற்று தூரத்திலே நின்றுவிட்டது. அதைப் பார்த்தவள் ‘என்மேல தண்ணீரை அடித்துப் போனதால காருக்கு ஏதோ ஆயிடிச்சி போல. நல்லா வேணும் இவனுக்கு ஆள் ரோட்ல போகும்போது வண்டியை கொஞ்சம் மெதுவா ஓட்டாமல் குதிரை மாதிரி வேகமா ஓட்டினால் இப்படித் தான் ஆகும். உனக்கு இது வேண்டும்’ என நினைத்தவள் ‘மெக்கானிக் ஷாப்கூட ஒரு கிலோமீட்டர் தள்ளிதான் இருக்கு. இந்த மழையில் எப்படி அழைத்துவருவான்’ என்று அந்த கார்க்காரனுக்காக வருத்தப்படவும் ஆரம்பித்துவிட்டால்.

‘அவன் எப்படிப் போனால் எனக்கென்ன மறுபடியும் மழை வர்றதுக்கு முன்னால வீட்டுக்குப் போயிடணும்’ என நினைத்து வேகமாக நடந்தவளை “ஏம்மா ஒரு நிமிஷம்…” என்று அழைத்தார் காரில் இருந்த பெண்மணி.

மீரா திரும்பிப் பார்த்து “என்ன?” என்று கேட்டதும்¸ “இங்கே மிஸ்டர் விநாயகம் வீடு எங்கே இருக்கிறது என்று தெரியுமா” என்று கேட்டார்.

‘இவங்க ஏன் அப்பாவைக் கேட்கிறாங்க’ என்று யோசித்தவாறே டிரைவர் சீட்டில் இருந்தவனைப் பார்த்தாள். அவன் கண்களை கண்ணாடி மறைத்திருந்தது.

உதட்டை சுழித்தவாறு ரோட்டைப் பார்த்தடியே சொன்னான் “அம்மா அட்ரஸ் தெரியவில்லை என்றால் விடுங்கள் நாம் வேறு யாரிடமாவது கேட்டுக் கொள்ளலாம்” என்று.

‘சரியான திமிர் பிடித்தவன் போல’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டவள் “அம்மா இந்த ரோட்டில் கொஞ்ச தூரம் போனால்¸ ரோடு இரண்டாகப் பிரியும். அங்குதான் இருக்கிறது மிஸ்டர் விநாயகத்தின் வீடு” என்றாள்.

அப்பெண்மணி நன்றி கூறி முடிக்கும் முன் கார் புறப்பட்டுவிட்டது.

“என்ன கீதன் அந்த பெண்கிட்ட நீ மன்னிப்பு கேட்கலை. சரி அட்ரஸ் சொன்னதற்கு நன்றி சொல்லலாம் என்று நினைத்தால்¸ அதையும் சொல்லவிடாமல்… போப்பா. ஆனால்¸ நீ இப்படி கிடையாதே!” என்றார் சற்று மனத் தாங்கலுடன்.

“அம்மா நாம் இங்கு வந்தது பெண்பார்க்க. ரோட்டில் போகும் பெண்ணிடம் மன்னிப்பு கேட்க இல்ல. அத்தோடு இதில் என் தவறு என்ன இருக்கிறது? மழைநீர் தேங்கி இருக்கும் இடத்தில் அவள் சென்றது தப்பு. நான் ரோட்டில் தானே வண்டியை ஓட்டினேன்".

"அப்புறம், அவள்மேல் தண்ணீரை அடிக்கக்கூடாது என்று நான் வண்டியை லேசாக ஒடித்துத் திருப்பியிருந்தாலும்¸ நமக்கு எதிரே வந்த வண்டியில் மோதியிருப்போம். அந்த நேரத்தில் ஒரு விபத்து நிகழாமல் அவள் ஒருத்தி மீது மழைநீர் தெறித்தது ஒன்றும் தப்பில்லைம்மா” என்று சொன்னான்.


“விசாலம் மீராவுக்கு போன் பண்ணி எங்கேயிருக்கிறாள் என்று கேளு"என்றார் காமாட்சி.

“அம்மா எனக்கென்ன போன் போடவா தெரியும். உங்க பேத்திங்ககிட்ட போய் கேளும்மா. எனக்கு நிறைய வேலையிருக்கு” என்றார் அவர்.

“தாராம்மா மீராவுக்கு ஒரு போன் போட்டு அவ எப்ப வருவான்னு கேளு” என்றார் பேத்தியிடம்.

“பாட்டி அப்பாதான் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்து போகும்வரை அவள் வீட்டில் இல்லாமல் இருப்பது நல்லது என்றாரே. நீ ஏன் இப்படி வந்து என்னை மேக்கப் பண்ண விடாமல் தொந்தரவு செய்றே” என்றாள்.

“மத்யானமே மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வருவாங்கன்னு சொன்னார் உங்க அப்பா. ஆனால்¸ அவங்களை இந்நேரம் வரைக்கும் காணவில்லை” என்று அவர் சொன்ன நேரம்¸ வெளியே கார் ஹாரன் சத்தம் கேட்டது. “சாரா போ” என்று தங்கையை விரட்டியவள் “பாட்டி அவங்க வந்துட்டாங்க” என்றாள்.

காரை போர்டிகோவில் நிறுத்திவிட்டு இறங்கினான் அபர்கீதன். முன்பக்கமாக அம்மா இறங்க உதவி செய்தவனைப் பார்த்துவிட்டு¸ தாராவிடம் ஓடினாள் சாரா “அக்கா மாப்பிள்ளை சூப்பர்”.

“வாங்க தம்பி”

“வாங்கம்மா உள்ளே வாங்க” என்று அவர்களை வரவேற்றனர் விநாயகமும் விசாலமும்.

“நாங்க உங்களை மத்யானமே எதிர்பார்த்தோம்” என்றார் விநாயகம்.

“நாங்கள் மழை வந்ததால் சற்று தாமதமாக¸ மழைவிட்ட பின்தான் கிளம்பினோம்” என்ற தாயாரைத் தொடர்ந்து “இங்கு வந்தபின்னரும் சற்று அலைய வேண்டியதாகிவிட்டது” என்றான் அபர்கீதன்.

விநாயகம் “என்னம்மா எதுவும் பிரச்சனையா” என்று கேட்டார்.
Nice ep
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top