Azhagae Azhagae - Ep 10

Advertisement

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம் - 10

தன்னுடைய அறைக்கு வந்த கீதன் தூங்க மனமின்றி குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். ‘ச்சே… நான் ஏன் இவ்வளவு மோசமாக மீராகிட்ட நடந்துகொண்டேன்…’ என்று தன்மீதே வெறுப்புற்றான்.

காலில் வலியை உணர்ந்த பின்னரே படுக்கையில் அமர்ந்தவன்¸ ‘நீ ஏன் மீரா என்னை புரிந்து கொள்ளவில்லை¸ நான் முதல்முறையாக உன்னை சந்தித்த அன்றே நீ என் மனதில் நுழைந்து விட்டாய். அம்மா என்கிட்ட கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி கேட்ட போதெல்லாம் உன்முகம் தானே என் மனதில் தோன்றியது. நான் நாகர்கோவில் வந்ததே உனக்காகத்தானே மீரா’ என்று பலவாறு எண்ணினான்¸ நாளையே தன்னுடைய செயலுக்காக மீராவிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்ற முடிவோடு தூங்கினான்.

காலையில் வழக்கம் போல் ஷோரூம் செல்ல புறப்பட்டு வந்த கீதன் “ஆன்ட்டி¸ மீரா எங்கே?” என்று கேட்டான் ஜானகியிடம்.

“மீரா இன்னும் கீழே வரவில்லை தம்பி” என்றார்.

நேற்று நான் நடந்து கொண்டதில் தவறாக ஏதேனும்… என்று ஏதேதோ நினைத்தவன்¸ “ஆன்ட்டி¸ நான் இப்போ வர்றேன்” என்று அவரிடம் சொல்லிவிட்டு தடதடவென ஓடிப் படிகளில் ஏறிச்சென்று மீராவின் அறைக்கதவைத் திறந்தான்.

அங்கே மீரா எழுந்து பாத்ரூம் செல்ல இரண்டு எட்டு எடுத்து வைத்தவள்¸ கீதன் கதவைத் திறந்து உள்ளே வருவதைக் கண்டதும் “வராதீங்க… கிட்டே வராதீங்க…” என்று கதறியவள் குனிந்து தன் கால்களைப் பார்த்தாள். அங்கு ரத்தம் வடிந்திருந்தது.

அவள் சொன்னதைக் கேட்காமல் அபர்கீதன் அவளருகே செல்லவும் அவளுக்கு இன்றும் வலிப்பு வந்தது. அதைப் பார்த்தவன் அதிர்ந்துவிட்டான்.

“மீரா… ஏய்¸ மீரா ஏன் இப்படி…? மீரா…” என்று அவளை அழைத்தவாறே சென்று அவளைத் தூக்கி கட்டிலில் கிடத்தியவன்¸ அவனது பேமிலி டாக்டருக்கு போன் செய்து உடனடியாக செய்ய வேண்டியதைக் கேட்டுவிட்டு அவரை வரச் சொன்னான்.

டாக்டர் சொன்னபடி செய்துவிட்டு கீழே போய் வெந்நீர் வாங்கி வந்தான். அவனைக் கண்டதும் “என்னாச்சு கீதன்¸ நான் மேலே வரட்டுமா?” என்று ஜானகி கேட்டார்.

“இல்ல ஆன்ட்டி¸ நானே பார்த்துக்குறேன்” என்று அவருக்கு பதிலளித்துவிட்டு விரைந்தான்.

மீராவின் கால்களை நன்றாகத் துடைத்து¸ முகத்தையும் துடைத்துவிட்டு அவளை வேறு நைட்டிக்கு மாற்றினான். தரையிலிருந்த இரத்தக் கரைகளையும் சுத்தம் செய்துவிட்டு அந்தத் துணியைத் தூக்கி பாத்ரூமில் போட்டான்.

வந்ததும் மீராவைப் பார்த்த டாக்டர் சீதாலெட்சுமி அபர்கீதனைப் பார்த்து¸ “நேற்று என்ன நடந்தது என்று சொல்” என்றார்.

அவன் தயங்கவும்¸ “சொல் கீதன்” என்றார் கட்டளைத் தொனியுடன்.

“நான்… நேற்று இவளிடம் கொஞ்சம் ஹார்ஷாக நடந்து கொண்டேன்” என்று தலைகுனிந்தான்.

“சரி… நீ கொஞ்ச நேரம் வெளியே நில்லு” என்று அவனை வெளியே அனுப்பிவிட்டு¸ அவளுக்கு என்னவென்று பார்த்து ஒரு ஊசி போட்டுவிட்டு அபர்கீதனை உள்ளே அழைத்தார்.

“கீதன் நீயா இவ்வளவு மோசமாக நடந்துகொண்டது? ஷீ இஸ் யுவர் ஒய்ப். ஏன் அவளைப் போய் இவ்வளவு பலவந்த படுத்தியிருக்க. அபிராமி உன்னை நல்லபடியாகத் தானே வளர்த்தாள்… பின்னே நீ எப்படி கட்டின மனைவிகிட்டே இவ்வளவு வன்முறை காட்டியிருக்கே” என்று அவனிடம் பல கேள்விகளைக் கேட்டார்.

அவர்கள் குடும்பத்திற்கு நன்கு பழக்கமுள்ள டாக்டர் என்பதாலும்¸ அவனை அவனது சிறு வயதிலிருந்தே தெரியுமென்பதாலும்¸ அவர் அவனிடம் கண்டிப்புத் தொனியுடனே விசாரித்துக் கொண்டிருந்தார்.

அவனும் சிறுவன் போலவே¸ “சாரி டாக்டர்… ப்ளீஸ் அம்மாக்கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம். இனிமேல் இந்த மாதிரி நடந்துக்க மாட்டேன். எனக்கே என்மேல் வெறுப்பாக இறுக்கிறது டாக்டர்… தயவு செய்து நான் சொல்வதை நம்புங்க…” என்று அவருக்கு நம்பிக்கை அளிக்குமாறு பேசினான்¸ “இவளை சரி பண்ணுங்க டாக்டர். இன்னும் மயக்கம் தெளியாமலே இருக்கிறாளே” என்றான் கவலையுடன்.

“செய்யுறதை எல்லாம் செய்துவிட்டு இப்போ வருத்தப்பட்டு என்ன லாபம்… இவளை ஹாஸ்பிட்டலில் அட்மிட் பண்ணனும். ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து உடனே வரச்சொல்” என்று அவனிடம் சொல்லிவிட்டு வெளியேறினார்.

மருத்துவமனையில் வைத்து டாக்டர் மீராவிடம் “இப்படி வலிப்பு அடிக்கடி வருமா?” என்று கேட்டார்.

இதற்குமுன் இரண்டு முறை வந்ததைப் பற்றி சொன்னவள்¸ வீட்டில் உள்ளவர்களால் ஏற்பட்ட மன உளைச்சல்¸ தற்போது அபர்கீதன் நடந்துகொண்ட முறை என எல்லாவற்றையும் கூறிவிட்டு “எனக்கு வாழவே பிடிக்கவில்லை¸ செத்துவிடலாம் போல இருக்கு” என்றதை அந்த நேரத்தில் அங்கு வந்த அபர்கீதன் கேட்க நேர்ந்தது.

“அப்படியெல்லாம் சொல்ல கூடாதும்மா” என்று மீராவிடம் டாக்டர் சமாதானமாகப் பேசி¸ அவள் டிஸ்சார்ஜ் ஆகும் முன் அபர்கீதனிடமும் அவளைப் பற்றிப் பேசினார். அவள் வாழ்வில் அவள் அனுபவித்த கஷ்டங்கள்¸ அதனால் அவளுக்குள் ஏற்பட்டிருந்த தாழ்வு மனப்பான்மை என எல்லாவற்றையும் கூறிவிட்டு “இனியும் அவளை கஷ்டப்படுத்தாதே” என்று சொல்லி அனுப்பினார்.

அவனும் “நிச்சயம் டாக்டர்” என்று விடைபெற்றான்.

ஒரு வாரத்தில் மீரா வீட்டிற்கு வந்துவிட்டாள். இன்னமும் அவள் நடையில் சிறு தடுமாற்றம் இருப்பதைக் கவனித்து கீதன் அவளுக்கு உதவப் போனால்¸ ஏதோ பேயைக் கண்டதுபோல் ஒதுங்கிச் சென்றுவிடுவாள்.

அபர்கீதன் ஜானகியிடம் மீராவிற்கு சாதாரண காய்ச்சலால் தான் அவள் மருத்துவமனையில் இருந்ததாகக் கூறியிருந்ததால்¸ அபிராமியை கலவரப்படுத்த வேண்டாமென அவரும்¸ அபர்கீதனுமே அதுபற்றி அவரிடம் சொல்லவில்லை.

அடிக்கடி போனில் பேசும் அபிராமி¸ மீரா வீடு வந்த மறுநாளே பேசினார். அஸ்வினிக்குப் பரவாயில்லை என்றவர்¸ தான் திரும்ப இன்னும் குறைந்தது மூன்று மாதங்கள் ஆகலாம் என்றார். அதன்பின் வீட்டிலுள்ளவர்களின் நலம் விசாரித்துவிட்டு¸ “நீ எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வாய் தானே மீரா. அப்புறம் கீதன் எப்படிம்மா இருக்கிறான்? அவன்கிட்ட கொடும்மா” என்றார்.

அவன் லேப்டாப்பில் மூழ்கியிருந்தான். “உங்கள் அம்மா” என்று போனை டேபிளில் வைத்துவிட்டு வெளியேறிவிட்டாள். போகும் அவளையே பார்த்தவாறு பதில் பேசினான்.

சில நாட்களில் மீராவின் பாட்டிக்கு உடம்பு சரியில்லை என்று போன் வந்தது. பாட்டி மீராவைப் பார்க்க ஆசைப்படுவதாக கூறினார். மீரா பாட்டியிடம் “சீக்கிரம் அங்கே வந்து விடுவேன் பாட்டி. அப்புறம் உன்கூடவே தான் இருப்பேன்… தைரியமா இரு” என்றாள். அவள் சொன்னதைக் கேட்ட அபர்கீதன் “என்னை விட்டுவிட்டு போகப் போகிறாயா மீரா?” என்று கேட்டான். அவள் பதில் பேசாமலே சென்றுவிட்டாள்.

கொஞ்ச நாட்களாகவே மீராவைப் பார்க்காதது போல் தோன்றியது அபர்கீதனுக்கு.

ஜானகியிடம் “ஆன்ட்டி மீரா எங்கே?” எனக் கேட்டான்.

“பின்பக்கம் போய் பாரு தம்பி” என்றார் அவர்.

“மீரா… மீரா…” என்று அழைத்துக் கொண்டே சென்றான். அவள் பின்கட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தாள். அவன் அருகில் நிற்பதைக்கூட உணராமல் கண்மூடியே இருந்தாள்.

“உடம்பு சரியில்லையா?” என அவள் நெற்றியில் கைவைத்து அவன் கேட்கவும்¸ சட்டென எழுந்தவள் தலைசுற்றி கீழே விழப்போனாள்.

விழப்போனவளை தாங்கிக் கொண்டன அவன் கரங்கள்.

பிடித்த கரங்களின் அழுத்தம் உணர்ந்து நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தாள். “மீரா…” என்று அவள் முகம் நோக்கி அவன் குனியவும் சட்டென விலகிவிட்டாள்.

“மீரா ஒரு நிமிஷம். நாளைக்கு என் பிரண்ட்ஸ் ரெண்டு பேர் அவங்க குடும்பத்தோட நம்ம வீட்டுக்கு வர்றாங்க. ஆன்ட்டிகூட சேர்ந்து மத்யானத்திற்கு சாப்பாடு தயார் பண்ணமுடியுமா?” என்று கேட்டான்.

சரியென்று சொல்லிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டாள்.

மறுநாள் நண்பகலில் அவனுடன் சேர்ந்து வீட்டிற்கு வந்தவர்களை வரவேற்று உபசரித்தாள் மீரா.

அபர்கீதனின் நண்பன் மனைவி “உங்க ஒய்ப் ரொம்ப க்யுட் கீதன்” என்றாள்.

இன்னொரு பெண் “இவ்வளவு நீளமான முடியை எப்படி பராமரிக்க முடியுது மீரா? தலைக்கு என்ன தேய்த்து குளிப்பீங்க?” என்று கேட்டாள்.

“சிகைக்காய் போடுவேன்…”

“ஓ…”

“ஜானும்மா வடிகஞ்சி வைத்துத் தருவாங்க” என்றதும்¸ “ரைஸ் குக்கரில் வைத்தால் வடிகஞ்சி வராதே. பின்னே எப்படி?” என்று கேட்டாள் அந்த பெண்.

“எனக்காக வாரம் ஒருமுறை வேறு பாத்திரத்தில் சமைப்போம்” என்று சொல்லியவாறு பரிமாறியவளை, அபர்கீதனின் அருகில் அமர்ந்து சாப்பிட சொன்னார்கள் நண்பர்கள்.

மீராவும் ரொம்ப பிகு பண்ணாமல் அவனருகில் அமர்ந்தாள். ஆனால் எதையும் ரசித்து உண்ண முடியவில்லை அவளால். அனைவரும் சாப்பிட்டு முடிக்கும் வரை தன் தட்டிலிருந்ததை அளைந்து விட்டு எழுந்துவிட்டாள்.

அதன்பின் அவர்கள் சற்று நேரம் வாயாடிவிட்டு¸ அபர்கீதனுடன் கிளம்பினர். அவர்கள் சென்றதும் மீரா போய் படுத்துவிட்டாள்.

வீட்டிற்குத் திரும்பியவன் உடனே மீராவைத் தேடிச் சென்று அவளிடம் “உனக்கு என்னாச்சு மீரா? ஏன் சரியாக சாப்பிடவில்லை?” என்று கேட்டான். அவள் பதிலேதும் பேசவில்லை என்றதும்¸ அவனே “டாக்டர்கிட்ட போயிட்டு வருவோமா?” என்று அவளை அழைத்தான்.

“நான் நல்லாத்தான் இருக்கிறேன். நீங்க போய் படுங்க” என்று சொல்லிவிட்டுத் திரும்பி படுத்துக்கொண்டாள்.

மறுநாள் மீரா வேறு ஒரு மருத்துவமனைக்குச் சென்றாள். டாக்டர் ஒரு டெஸ்ட் எடுத்துப் பார்த்துவிட்டு அவளுக்கு வாழ்த்து கூறினார். அவள் அம்மா ஆகப் போகிறாள். மீராவிற்கு சந்தோஷப்படுவதா அழுவதா என்றே தெரியவில்லை. புரியாத அந்த மனநிலையிலேயே வீடு திரும்பினாள்.

‘அவனிடம் போய் சொல்லலாமா… உன் குழந்தை என் வயிற்றில் வருவது பிடிக்கவில்லை என்றாயே¸ இப்போது உன் குழந்தை என் வயிற்றில் என்ன செய்யப் போகிறாய்? என்று அவனைக் கேட்பதா… இல்லை என்னைப் பிடிக்காத அவனுடைய குழந்தையை நானே அழித்து விடுவதா?’ என்று பலவாறு யோசித்தாள்.

பின் ஒருவாறு சமாதானமாகி ‘அவனுக்கு இது பிடிக்காது என்பதால் நான் இதைப்பற்றி அவனிடம் சொல்லப்போவதில்லை. என் வயிற்றில் இருக்கும் இது என்னுடைய குழந்தை¸ நான் இந்தக் குழந்தையை பெற்றெடுக்கத் தான் செய்வேன். ஆனால் அன்றைய கொடுமையில் இது உருவாகியிருப்பது ஆச்சரியம்தான். இதுதான் கடவுளின் விருப்பம் என்றால் அதன்படியே நடக்கட்டும்’ என்று முடிவெடுத்தாள்.

நாகர்கோவிலிலிருந்து காமாட்சி பாட்டியின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக தகவல் வந்தது. அபர்கீதன் மீராவை அழைத்துக் கொண்டு நாகர்கோவில் கிளம்பினான்.

காரிலேயே அவர்கள் சென்றதால் வழியில் பயணம் ஒத்துக்காமல் பலமுறை வாந்தி எடுத்தாள் அவள்.

அவர்கள் பிறந்த வீடு சென்றடைந்த அன்று முழுவதும் பாட்டியின் அருகிலேயே இருந்தாள் மீரா. பாட்டி அவளிடம் ஏதோ கேட்க முயற்சி செய்தார். அபர்கீதன் சற்று தள்ளி நின்று அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒரு வழியாக தான் கேட்க ஆசைப்பட்டதை காமாட்சி கேட்டுவிட்டார். அதற்கு அவள் தலையாட்டி பேசவும்¸ பாட்டி கண்ணீர் வழிய சிரித்தார். கண்களைத் துடைத்துவிட்டவள்¸ அவர் கையைப் பிடித்தவாறே அமர்ந்துகொண்டாள்.

பிரவசத்திற்காக வந்திருந்த தாரா இன்னமும் அங்கேதான் இருந்தாள். கேள்விப்பட்ட மீரா தாயிடம் சென்று “அம்மா குழந்தை பிறந்த விஷயத்தை என்னிடம் ஏன் சொல்லவில்லை?” என்று கேட்டாள். தாயார் பதில் சொல்லும் முன்னராகத் தானே அதை மன்னித்து¸ “பரவாயில்லை… குழந்தை எப்படி இருக்கிறது? என்ன குழந்தை… நான் பார்க்கலாமா? குழந்தையை என்கிட்ட காட்டுங்கம்மா” என்று கேட்டபோது தாரா ஒரேடியாக மறுத்துவிட்டாள்.

‘ஒரு குழந்தையை பார்ப்பதற்குக் கூட என் மீரா தகுதியில்லாமல் போய்விட்டாளா?’ என்று கேட்கத் தோன்றியது அபர்கீதனுக்கு. பாட்டிக்கு உடம்பு சரியில்லாமல் இருக்கும் இந்த நேரத்தில் கேட்க வேண்டாமென்று தன் கோபத்தை அடக்கிக் கொண்டான்.

ஆனால் பாரி வந்தவுடன் குழந்தையை எடுத்து வந்து மீராவிடம் காண்பித்தான். குழந்தை அப்படியே மீராவின் தாயார் நிறத்தில் இருந்து. மீரா நிமிர்ந்து சகோதரியைப் பார்த்தாள்.

“என்னை மன்னிச்சிடு மீரா¸ உன்னை முன்பு கஷ்டப்படுத்தியதற்குத் தான் கடவுள் என் குழந்தையை இப்படி கொடுத்திருக்கிறார். ஆனால்… என் குழந்தையை என்னால் வெறுக்க முடியவில்லை. இவரும் அப்பாவைப் போல் நடந்து கொள்ளவில்லை. அதற்கு நான் உன் கணவருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவர்தானே இவரை எனக்காகப் பார்த்தது. நீ நல்லா இருக்கணும் மீரா” என்று வாழ்த்தினாள்.

மறுநாள் காலையில் அனைவரும் விழிக்கும் முன்னரே பாட்டியின் உயிர் அவர் உடலை விட்டுப் பிரிந்திருந்தது.

மீரா தான் அதிகமாக அழுதாள். அந்நேரத்தில் அபர்கீதன் அவளருகிலே இருந்து அவளை ஆறுதல் படுத்தினான்.

காரியம் எல்லாம் முடிந்தபின் கீதன் அவளை அங்கேயே விட்டுவிட்டு¸ ஒருவாரம் சென்றபின் தான் வருவதாக கூறி புறப்பட்டான்.

மீரா சோர்வாகவே இருந்தாள். தாராவின் குழந்தையை தூக்கியவாறு அவளருகில் வந்தாள் அன்னை விசாலம்.

“ஏன் மீரா ஒரு மாதிரியாக இருக்கிறாய்? அவர் ஞாபகம் வந்துவிட்டதா?” என்று கேட்டார்.

“இல்லம்மா…” என்று குழந்தையை வாங்கிய மீரா¸ “என்ன பெயர் வைச்சிருக்கீங்க?” என்று கேட்டாள்.

“மீரா…”

“நான் குழந்தை பெயரைக் கேட்டேன்மா”

“நானும் குழந்தை பெயரைத்தான் சொன்னேன். உன் பெயரைத்தான் வைக்க வேண்டுமென்று தாரா ஒரே பிடிவாதம். அதனால் ‘ஸ்ரீமீரா’ என்று வைத்தோம்”

‘அக்காவை காலம் இந்த அளவுக்கு மாற்றிவிட்டதா…? இப்படி அபர்கீதனும் மாறுவாரா?’ என்றெண்ணினாள் அவள்.

மறுபடி அபர்கீதனுடன் செல்ல மீரா விரும்பவில்லை. எங்கு போவது என யோசித்த சமயம்¸ ஒரு ஆஸ்ரமத்தில் தங்கி பணிபுரிய படித்த ‘பெண்கள் மட்டும்’ தேவை என்னும் விளம்பரத்தைப் பார்த்து போன் செய்து விசாரித்தாள்.

அவர்கள் உடனே வந்து சேரும்படி கூறவே¸ மீரா வீட்டில் எல்லோரிடமும் ‘கீதனால் வர முடியாது அதனால் என்னை உடனே கிளம்பி வரச் சொன்னார்' என்று சொல்லி தன்னுடைய பள்ளி¸ கல்லூரிச் சான்றிதழ்களையும்¸ கோவையிலிருந்து கொண்டு வந்த பேக்கையும் தன்னுடன் எடுத்துச் சென்றாள்.

அவள் சென்ற இடம் மதுரை.

மீரா வீட்டை விட்டுச் சென்ற இரண்டு நாட்களில் அபர்கீதன் அங்கு வந்தான். மனைவியை அழைத்துச் செல்ல வந்தவனுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது.

“நீங்க வரச் சொன்னதாக சொல்லி அவள் புறப்பட்டுப் போய் ரெண்டு நாள் ஆகுதே தம்பி” என்றார் விசாலம்.

“அத்தை¸ உங்ககிட்ட வேற எதாவது சொன்னாளா?” என்று கேட்டான்.

“இல்லையே தம்பி¸ ஏன்? என்னாச்சு?” என்று பதறினார்.

“மீரா அங்கு இன்னும் வரவில்லையே அத்தை” என்றான் கவலையுடன்.

அவள் மீண்டும் அங்கு வந்தாலோ இல்லை அவள் இருக்குமிடம் பற்றிய விபரம் அறிந்தாலோ தனக்குத் தெரிவிக்கும்படி கூறிவிட்டு¸ ‘மீரா அப்படி எங்குதான் சென்றாய்? ஏன் இப்படி என்னை விட்டுச் சென்றாய்…? உன்னை நான் எங்கு போய் தேடுவேன் மீரா…’ என்று தனக்குள் புலம்பியபடியே கோவை புறப்பட்டான்.
Nice ep
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top