விண்ணப்பித்து பூப்பதில்லை பூக்கள் - 7

Kamali Ayappa

Well-Known Member
#1
ஆறுமணிக்கு அவள் வைத்த அலார்ம் ஒலியை விட பக்கத்துக்கு வீட்டு சேவல் மதில் மீது நின்று கூவியச் சத்தம் அதிகமாகக் கேட்க, கண்களை மெதுவாகத் திறந்த அல்லி, இரவு தூங்கும் போது அப்படியும் இப்படியும் விலகிய தாவணியைச் சரி செய்துக்கொண்டு படுக்கையை விட்டு எழுந்தாள்.

பல் விளக்க ப்ரஷ்ஷும், பேஸ்ட்டும் எடுத்துக் கொண்டு அவள் கொள்ளைப்புறத்துக்குச் செல்ல, அங்கு அவளின் தந்தை வெற்றி கையில் வேப்பங்குச்சி சகிதமாக நின்றிருந்தார்.

அல்லி அவரைப் பார்த்து முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டாலும், அவளின் வீங்கிய கண்களை வெற்றி கவனிக்கத் தவறவில்லை. மகளின் சின்ன சிணுங்களுக்குக் கூட இறங்கிச் செல்பவர், இந்த விடயத்தில் என்ன நடந்தாலும் இறங்கி வருவதாய் இல்லை. இரவு முழுதும் அழுததால் வீங்கிய முகம் கூட அவர் மனதைக் கரைக்கும் வலு கொண்டதாய் இருக்கவில்லை.

ஒரு ஓரமாக அமர்ந்து அம்மியில் தேங்காய் அரைத்துக்கொண்டிருந்த அல்லியின் தாய் ருக்மணி மகளையின் முகத்தையும், கணவனின் முகத்தையும் மாற்றி மாற்றிப் பார்த்துக்கொண்டிருந்தாரே தவிர, வாய் திறந்து ஒரு வார்த்தையும் பேசிவிடவில்லை.

‘எனக்காக அப்பா கிட்ட பேசலாம்ல்ல’ என்று அல்லியும், ‘இவளாவது இந்தப் பொண்ணுக்குச் சொல்லிப் புரியவைக்கலாம்ல’ என்று மகள், கணவன் இருவருக்கும் ருக்மணியின் மீது ஒரு கோவம் இருந்தாலும், கணவன் பக்கமும் நிற்க முடியாமல், மகள் பக்கம் பேசவும் முடியாமல், அவர் மனம் அல்லல் படுவதை அவர் மட்டுமே அறிவார்.

“ருக்மணி. உன் மக கிட்டச் சொல்லு. சின்ன வயசுல வேப்பங்குச்சில பல் துலக்க மாட்டேன்னு அழுததுக்காக அவளுக்கு பேஸ்ட்-ப்ரஷ் வாங்கிக் குடுத்து பழக்கின மாதிரி. இந்த விஷயத்துக்கும் அழுது சாதிக்க முடியும்ன்னு நெனைக்க வேணாம்ன்னு சொல்லு.

வேப்பங்குச்சி மாதிரி கசந்தாலும் நம்ப ஜாதி மாப்பிள்ளையைத் தான் கல்யாணம் செய்து வைப்பேன். இந்தக் கோல்கேட் பேஸ்ட் மாதிரி வேற ஜாதிக்காரன் உன் பொண்ணுக்கு இனிச்சாலும், எனக்கு அது சுவைக்காது” என்றுச் சொல்லிவிட்டு வீட்டின் நடுக்கூடாத்துக்குச் சென்று அமர்ந்துவிட்டார்.

அவர் சென்றதும், ருக்மணி அல்லி முகத்தைப் பார்க்க, “கோல்கேட் பயன்படுத்துறது நானு. அது எனக்கு இனிச்சாப் போதும். உங்கக் கணவருக்கு சுவைக்கணும்ன்னு அவசியம் இல்லம்மா” என்று தாயைப் பார்த்துச் சொன்னாலும், தந்தையின் செவிக்கும் எட்டும் சத்தத்தில் தான் சொன்னாள்.

அதைக் கேட்டதும் வெற்றியின் முகம் கோவத்தில் சிவந்தது. ‘இனி இவள் என்னை எதிர்த்து பேசவே பயப்படும் அளவிற்குச் சப்பென்று கன்னத்தில் ஒரு அரை வைத்தால் என்ன?’ என்ற எண்ணத்தைத் தவிர்க்கவே முடியவில்லை. ‘அந்த எண்ணத்தைச் செயலாக்குவோம்' என்று நினைத்தால், அது முந்தையதை விடவும் சாத்தியமற்றதாகத் தோன்றியது.

சிறு வயதிலிருந்தே, தேவையானவற்றிற்கு மட்டும் பிடிவாதம் பிடிக்கும் மகளை ரசித்தவருக்கு, ஒரு தந்தையாக இந்தப் பிடிவாதமும் ரசனையாகத் தான் தெரிந்தது.

ஆனால், அவருக்குள் இருக்கும் ஊர்த் தலைவர் சில நேரம் விழித்துக்கொண்டு, அந்தப் பிடிவாதத்தை ரசிக்கவிடாமல் வெறுக்கச் செய்துக்கொண்டிருந்தார்.

சாய்வு நாற்காலியில் அமர்ந்துக்கொண்டிருந்தவருக்கு, நேற்று இரவு அல்லி தன்னுடைய இறுதி முடிவென சொன்ன வார்த்தைகள் அவர் செவியை ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தன. “எனக்குப் பார்த்திபனைத் தான் பிடிச்சிருக்கு. அவன் குணம் சரி இல்லை. அவன் குடும்பம் சரி இல்லைன்னு ஏதாவது ஒரு காரணம் சொல்லுங்க. நீங்கச் சொல்லுற பையனையே கல்யாணம் செய்துக்கறேன். ஆனா, இந்த ஜாதி தான் காரணம்ன்னு சொன்னீங்கன்னா, அதை நான் காதுல கூட வாங்கிக்க மாட்டேன்.

அதுக்காக, எங்கப் பொண்ணு நம்ப மானத்தை வாங்கிட்டு ஓடிப்போய்டுவாளோன்னு பயப்படாதீங்க. எனக்கு கல்யாணம்ன்னு ஒன்னு நடந்தா, அது இந்த ஊர் முன்னாடி, நீங்க தாலி எடுத்து குடுத்து தான் நடக்கும்” என்று அவள் சொன்னது அவருக்கு இருவிதமாக உணர்வுகளை கொடுத்தது.

‘வேறு ஜாதி பையனைப் போய் திருமணம் செய்துக்கொள்வேன் என்கிறாளே' என்றக் கோபம் ஒரு பக்கம். ‘காதலித்தாலும், உங்கள் முன்னிலையில் தான் திருமணம் செய்துக்கொள்வேன் என்கிறாளே' என்றப் பெருமை ஒரு பக்கம்.

இந்த இரண்டோடு சேர்த்து, மூன்றாவதாக மற்றோடு உணர்வும் சேர்ந்துக்கொண்டது. பயம்.

‘மகள் எடுக்கும் முடிவுகள் சரியாகத் தான் இருக்கும்' என்று உறுதியாய் நம்புபவருக்கு, ‘இந்த முடிவும் சரியென ஒப்புக்கொண்டு விடுவோமோ!!!’ என்ற பயமும் தொற்றிக்கொண்டது.

அதிலும், திருமணத்தைத் தவிர வேறு எதிலும் சாதிப் பாகுபாடு காட்டாமல் இருக்கும் அவருக்கு, நேற்று மகள் பேசியப் பேச்சில், ‘திருமணத்துக்கு மட்டும் எதற்கு ஜாதி பார்க்க வேண்டும்’ என்ற கோணத்தில் யோசிக்கத் தொடங்கிவிட்டார்.

‘ஒருவேளை இதற்கு நான் ஒப்புக்கொண்டால், ஊர் என்ன பேசுமோ!!!’ என்று எண்ணியே மகள் மனதை மாற்ற வழி யோசித்துக்கொண்டிருந்தார்.

அவர் யோசனையைக் கலைக்கும் விதமாக, “ஐயா... ஐயா...” என்று வாசலிலிருந்து குரல் கேட்டது.

“யாருப்பா...?” என்று அவர் கேட்டுக்கொண்டே வெளியில் செல்ல, அங்கு அந்த ஊர்க்காரர் ஒருவருடன் நின்றிருந்தனர் லாரண்யாவும் சரணும்.

“வணக்கம் ஐயா” என்று சரண் வணக்கம் வைக்க, லாரண்யாயோ அந்த வீட்டை அன்னார்ந்தபடி பார்த்து நின்றிருந்தாள். அவள் தோளை இடித்தவன், “வணக்கம் சொல்லு” என்று முணுமுணுக்க, “வணக்கம்” என்றாள் அவளும்.

“யாருப்பா நீங்க? என்ன வேணும்?” என்று வெற்றி அவர்களைப் பார்த்துக் கனிவாகக் கேட்க, “அது.. அது வந்து...” என்று யோசித்துக்கொண்டிருந்த சரணுக்கு சரளமாகப் பொய் சொல்ல வரவில்லை. லாராவோ, “அது. நாங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ். வேலை விஷயமா வேற ஒரு இடத்துக்குப் போக வேண்டிய நாங்க வழித் தவறி இங்க வந்துட்டோம்” என்று லாரா சொல்ல, “சரி. இப்போ அங்கப் போக வழித் தேடி வந்தீங்களா?” என்று அவர்கள் வந்ததன் காரணம் புரியாமல் கேட்க, “இல்ல. இல்ல” என்றுப் பதறினர் இருவரும்.

“இந்த ஊரைப் பார்த்ததும், இந்த ஊருல தங்கிப் பார்க்கணும்ன்னு ஆசை வந்துடுச்சு எங்களுக்கு. அதான் இங்கத் தங்க இடம் குடுப்பீங்களான்னு கேட்க வந்தோம்” என்றாள் லாரண்யா.

“இந்த ஊரைப் பார்த்தா? முன்னிருந்த மாதிரி பச்சைப் பசேல்ன்னு இருந்தாக் கூடப் பரவாயில்ல. இப்போ ஊரே காஞ்சிப் போய் இருக்கு. இப்போவா ஆசை வந்தது?” என்று ஆச்சர்யமாய் கேட்டார் வெற்றி.

“அது. அது வந்து. இந்த ஊருல ஏதோ திருவிழான்னு சொன்னாங்க. நாங்க திருவிழா எல்லாம் பார்த்ததே இல்ல. அதான் ஆசையா இருந்துச்சு” என்று லாரா புன்னகையுடன் சொல்ல, அவளின் சிரிப்பு, உடல் மொழி எல்லாம் அல்லியைப் போலவே இருந்தது. அவருக்கு லாரண்யாவைப் பார்க்க, அல்லியின் நவீனப் பதிப்பு போலவே தோன்றியது.

“ஹாஹா. அது திருவிழா இல்ல ம்மா. ஒரு பரிகாரப் பூஜை. அதோடவே முக்கியமானக் கல்யாணமும் நடக்கும்” என்று அவர் சொல்ல, “நாங்க கிராமத்துக் கல்யாணம் கூடப் பார்த்ததே இல்ல. நாங்க இருந்து பார்த்துட்டுப் போறோமே” என்று அவள் இளித்துக்கொண்டே சமாளிக்க, “தாராளமா இருங்க” என்று அந்தச் சிரிப்புக்கு மயங்கினார் வெற்றி.

“பலே. பலே. நல்லா அடிச்சி விடுற” என்று சரண் லாராவின் காதுகளில் சொல்ல, “உன்னைத் தான அவர் முதல்ல கேட்டாரு. ஒழுங்கா ஒரு பொய் சொல்ல வருதா உனக்கு” என்று அவனைப் பார்த்து ஏளனமாய் சிரித்தாள் லாரா.

“அதான் பொய் சொல்லுறதுல பட்டம் வாங்குன ஆள் பக்கத்துல இருக்கீங்க. நீங்க இருக்கும் போது கத்துக்குட்டி நான் சொன்னா நல்லாவா இருக்கும்” என்றான் சரணும், மற்றவர்களுக்குக் கேட்காத வண்ணம்.

“வஞ்சப்புகழ்ச்சி அணியோ?” என்று லாரா இடையில் கைவைத்து அவனை முறைக்க, “பத்தாவதுல மேடம் தமிழோ?” என எதிர் கேள்விக் கேட்டான் சரண்.

அந்த நேரம், இவர்களை இங்கு அழைத்து வந்த ஊர்க்காரர், “ஐயா. இன்னைக்குக் கொடி கட்டிடுவோம்” என்று வெற்றிக்கு நினைவுப்படுத்த, “அட ஆமாம்ல” என்று ஞாபகம் வந்தவராய் லாரண்யாவிடம் திரும்பினார்.

“இன்னைக்குக் கொடி கட்டிடுவோம். அதுக்கப்பறம் யார் வேணும்னாலும் ஊருக்குள்ள வரலாம். ஆனா, பூஜை முடியற வரை வெளிய போகக்கூடாது. நீங்க இங்க இருக்கணும்ன்னா இன்னும் நாலு நாள் இங்க தான் இருக்கணும்” என்று வெற்றி சொல்ல, “சூப்பர். சூப்பர். நாங்க இங்கயே இருந்துட்டு, முடிஞ்சதும் போறோம்” என்று ஒப்புக்கொண்டனர் இருவரும்.

“ஐயா. இவங்கள எங்க தங்க வைக்கறதுன்னு சொன்னீங்கன்னா..” என்று அவர்களை அழைத்து வந்தவர் கேட்க, “இந்தப் பொண்ணு என் வீட்லயே தங்கிக்கட்டும்” என்றுப் பளிச்சென்று சொன்னவர், “இந்தப் பையனை...” என்று யோசிக்க, “அவனுக்கு வீடு எல்லாம் வேண்டாம். ஏதாவது கோவில், குளம் பக்கத்துல படுத்துப்பான்” என்றாள் லாரண்யா.

“வாய். வாய். வாய்..” என்று அவள் பேச்சைப் பார்த்துச் சிரித்தாலும், ‘நெஜமாவே கோவில்ல தூங்க விட்டுடுவாங்களோ!’ என்று யோசித்துக்கொண்டிருந்தான் சரண்.

“இந்தப் பையனை. நம்ப ராகவன் ஐயா வீட்ல தங்க வச்சிக்க சொல்லுங்க. நான் சொன்னேன்னு சொல்லுங்க” என்று ஊர்க்காரரிடம் சொல்லியநேரம், அங்கு காஃபி எடுத்து வந்த அல்லி, ‘ராகவன் ஐயா’ என்றப் பெயரைக் கேட்டதும் தந்தையை முறைத்துக்கொண்டு நின்றாள். அதைக் கண்டுக்கொள்ளாத வெற்றி, சரணிடம் திரும்பி, “பொண்ணு இருக்க வீட்ல, வயசுப் பையன தங்க வைக்க முடியாதில்ல தம்பி. அதனால தான்...” என்றுத் தயங்க, “புரியுது ஐயா” என்று முடித்து வைத்தான் சரண்.

லாரண்யா தன் வயதையொத்த அல்லியைப் பார்த்ததும், “ஹாய்” என்று உற்சாகமாய் கையசைக்க, அவளும் “ஹாய்” என்றுப் புன்னகைத்தாள். கலங்கிய அவள் முகத்தைப் பார்த்ததுமே ‘ஏதோ சரி இல்லை' என்றுத் தெரிந்தது லாரண்யாவுக்கு. ஆயினும், தான் புன்னகைத்தவுடன், மெய்யாய் புன்னகைத்து வரவேற்ற அல்லியை முதல் பார்வையிலேயே பிடித்துவிட்டது லாரண்யாவுக்கு. அழகான நேசப் புன்னகையை விடவும், கவர்ச்சி அம்சம் வேறு ஏதேனும் இருக்க முடியுமா என்ன?

சுமார் நூற்றி ஐம்பது குடும்பங்கள் கொண்ட அந்தக் கிராமத்திற்கு வெற்றி தான் ஊர்த் தலைவர். அவர் பேச்சை மீறி இங்கு அணுவும் அசையாது எனினும், தன் பலத்தைப் பயன்படுத்தி யாரையும் அடக்க முற்படாதவர்.

நான்கு ஐந்து தெருக்களுக்குள், வீடுகள், கடைகள், கோவில் என்று அனைத்தும் அடங்கிவிடும். மீதி ஊரை வயல்களும், தென்னந்தோப்புகளும் ஆக்கிரமித்திருக்கும். ஆனால், கடந்த மூன்று வருடங்களாக மழை சரிவர பொழியாதக் காரணத்தால், பயிர் செய்ய முடியாமல் போனது. தென்னை மரங்களும் தன்னால் முயன்ற அளவுக்கு வேர்களை ஆழ நீட்டி, மழையை எதிர்பார்த்துக் காத்திருந்தது.

கடந்த இரண்டு வருடங்களாகப் பக்கத்துக்கு ஊர் ஏரியிலிருந்து வாங்கியத் தண்ணிரை வைத்து கொஞ்சம் சமாளித்து வந்தனர். இந்த வருடம், அவர்களுக்கே தண்ணீர்ப் பற்றாக்குறை என்பதால், அவர்களிடம் வாங்கும் சாத்தியமும் இல்லை. எத்தனை ஆழமாக போர் போடத் தேடியும் தண்ணீர் வரத்து இருக்கும் இடம் கண்டறிந்தப்பாடில்லை.

விவசாயம் மற்றும் ஆநிரை மேய்த்தலையே பிரதானத் தொழிலாகக் கொண்டிருக்கும் கிராமம் அது. தண்ணீர் இல்லை என்பதே பலரின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கிய போதும், பட்டினியும் பஞ்சமும் அந்தக் கிராமத்தை அண்டாமல் இருக்க முதல் முக்கியக் காரணம் வெற்றி ஐயா தான்.

ஊர் மக்கள் அனைவரையும் தன் சொந்தங்களாகப் பார்ப்பவரால், யார் இல்லை என்று வந்து நின்றாலும் ‘இல்லை’ என்றுச் சொல்ல வாய் வராது. ஊரில் எந்தக் குழந்தை பசியில் துடித்தாலும் அவர் மனம் தாங்காது.

முதல் காரணம் அவர் என்றால், இரண்டாவது காரணம் அவரின் தோழன் ராகவன் தான். பதவி இல்லை என்றாலும் வெற்றியின் குடும்பத்திற்கு இணையான செல்வச் செழிப்பு கொண்ட குடும்பம் ராகவனுடையது.

அவர்களால் முடிந்த வரை, நண்பர்கள் இருவரும் இந்தக் கிராமத்தில் யாருக்கும் ‘இல்லாமை’ என்ற நிலை வராமல் பார்த்துக்கொண்டனர்.

தந்தையர் இருவரும் தோழர்களாய் இருக்க, அந்தப் பந்தம் இருவரின் வாரிசுகளுக்குள்ளும் தொடர்ந்தது. வெற்றியின் மகள் அல்லியும், ராகவனின் மகன் பார்த்திபனும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள். சிறு வயதிலிருந்தே இருவரும் ஒன்றாய்ச் சுற்றுவதையும், அரட்டை அடிப்பதையும் பெரிதாய் எடுத்துக்கொள்ளாமல் இருந்தவர்கள், இருவரும் காதலிப்பதாய்ச் சொல்லவும் அதற்கு என்ன பதில் சொல்வதென்று இருவீட்டினருக்குமே புரியவில்லை.

நட்பு என்று நினைத்தபோது கண்ணுக்கே தெரியாத சாதி, திருமணம் என்று வந்ததும், அதிமுக்கியமானதாகத் தெரிந்தது. ஆனால், உள்ளுக்குள் அவர்களுக்கும் அந்தச் சம்பந்தம் பிடித்தேயிருந்ததால், அதை எதிர்க்கவும் முடியாமல், ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் தவித்தனர். ஆனால், அல்லி-பார்த்திபன் இருவருமே எந்தக் குழப்பமும் இல்லாமல், தனக்குப் பிடித்தவர்களை வாழ்க்கைத் துணையாக அடைய அடம்பிடித்தபடி இருந்தனர்.

வெற்றி சொன்னது போல் சரணை ராகவன் இல்லத்திற்கு அழைத்துச் சென்று, “வெற்றி ஐயா இந்தத் தம்பியை உங்க வீட்ல தங்க வச்சிக்க சொன்னார்” என்றுச் சொன்னதுமே வேறு கேள்விகள் எதுவும் கேட்காமல் சரணைச் சேர்த்துக்கொண்டனர்.


Next episode on Thursday friends!
Stay tuned.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes