ராதையின் கண்ணன் இவன்-23

Advertisement

E.Ruthra

Well-Known Member
ராதிகா பேசி முடித்ததும் அங்கு அலைகளின் ஓசை மட்டுமே, அவனின் கார்மேகம் சொன்னதை எல்லாம் ஜீரணிக்க முடியாமல் தடுமாறுபவன் போல சில நிமிடங்கள் அலைகளையே வெறித்த வண்ணம் இருந்த பொன்னிற மேனியன், ஒரு முடிவுக்கு வந்தவனாக, அடைத்த தன் தொண்டையை செருமி கொண்டு, சகஜமாக பேச முயன்றவாறே,

"எல்லாருமே பிறக்கும் போது அழுதுக்கிட்டே தான் பொறப்பாங்க, அதற்காக வருஷா வருஷம் பிறந்த நாளுக்கு அழணும்னு ரூல்ஸ் எல்லாம் ஏதும் இல்லை, புரியுதா, நானே உன்னை இன்னைக்கு லீவ் போட சொல்லலாம்னு தான் இருந்தேன், நீயே லீவ் போட்டுட்ட, ஒரு முக்கியமான இடத்துக்கு போகணும் சீக்கிரம் கிளம்பு,வா, வா" என விடாப்பிடியாய் அவளின் கையை பிடித்து எழுப்ப, அவனின் கார்மேகமும் எதும் பேசாமல் அவனின் கை பிடித்து எழுந்து, பிடித்த கையை விடாமலே அவனுடன் நடக்க ஆரம்பித்தாள்.

ராதிகா இயல்பிலே தன்னம்பிக்கை உள்ள தைரியமான பெண், அவள் அவளின் ராகியிடம் எல்லாம் சொன்னது அவனின் ஆறுதலை எதிர்பார்த்து இல்லை, இவ்ளோ நாள் தனக்குள்ளே அழுத்தி வைத்தவற்றை எல்லாம் அவளுக்கு மட்டுமே உரித்தான ஒரு உறவாக அவன் வரவும், அவனிடம் மட்டுமே எந்த வித தயக்கங்கள் இல்லாமல் பேச முடியும் என தோன்றவும் எல்லாவற்றையும் சொல்லிவிட்டால், அதன் தாக்கத்தில் அழுதும் விட்டால், ஏனோ அந்த கண்ணீர் இத்தனை நாள் இருந்த மன பாரத்தை எல்லாம் கரைத்த மாதிரி இருக்க, எப்போதும் இல்லாத ஒரு மன அமைதியுடனே அவனுடன் சென்றால். இவளை புரிந்த மாதிரி அவளின் ராகியும் ஆறுதல் என்று எதும் சொல்லாததும் அவளுக்கு நிறைவாகவே இருந்தது. எப்போதையும் விட இருவரும் இன்னும் நெருக்கமாக உணர்ந்தனர் என்றால் அது மிகையில்லை.

இருவரும் வந்த இடம் அவன் அவள் பிறந்தநாளுக்காக உணவுக்கு ஏற்பாடு செய்து இருந்த ஆசிரமம். அங்கு இருந்த குழந்தைகள் உடன் நேரம் இனிமையாக செல்ல, மனம் சற்று இலகுவாக மாலை ஆனதும் தான் அவனின் கார்மேகத்தை வீட்டிற்கு அனுப்பி வைத்தான் பொன்னிற மேனியன். அவள் சென்றதும் விடுதி செல்ல விரும்பாமல், தன் அன்னைக்கு அழைத்தான்,

"என்ன டா, இன்னைக்கு என் மருமக பிறந்தநாள், நான் அவளை பார்க்கணும்னு சொன்னதுக்கு, அது எல்லாம் ஒன்னும் வேண்டாம், காலேஜ் இருக்கு, நீங்க இங்க வர கூடாது,அப்படி இப்படினு ஆயிரத்தெட்டு ரூல்ஸ் போட்ட, அதனால் நான் தான் உன்மேல கோவமா இருக்கேன்னு சொல்லிட்டு தானே போன் அஹ வச்சேன், இப்போ எதுக்கு எனக்கு போன் பண்ண, நான் அதுக்குள்ள எல்லாம் சமாதானம் ஆக மாட்டேன், சொல்லிட்டேன்" என பொன்னிற மேனியனை பேசவே விடாமல் எப்போதும் போல பொரிந்து தள்ள,

"அம்மா" என்ற அவனின் ஒரு வார்த்தை, அதில் இருந்த வலி, ஒரு அம்மாவாக அவரின் மனதை பிசைய,

"என்ன கண்ணா, என்ன ஆச்சி," என பதட்டத்தில் கேள்விகளை அடுக்க,

"ராதா ரொம்ப பாவம்மா" என ஆரம்பித்து, கடற்கரையில் அவனின் கார்மேகம் பேசியதை எல்லாம் சொல்ல, அங்கு ராஜமாதாவிற்கு கண்கள் கண்ணீரில் கரைய, அவன் எல்லாம் சொல்லி முடித்ததும்,

"அது எல்லாம் நடந்து முடிஞ்சிபோன விஷயம் கண்ணா, இப்போ நாம வருத்த பட்டு ஒன்னுமே ஆக போறது இல்ல, நீயும் வருத்தப்பட்டு, அவளையும் வருத்தப்பட வைக்காத, நாம தான் அவளோட எதிர்காலம், நாம அவளை நல்லா பார்த்துக்கலாம் சரியா" என ஒரு குழந்தைக்கு சொல்வது போல சொல்ல,அவரின் கூற்றில் இருந்த உண்மையில் பொன்னிற மேனியன் மனம் சற்று தெளிய, அவரின் குரலும் கலங்கி இருப்பதை கண்டு கொள்ள தவறவில்லை பொன்னிற மேனியன்,

"நான் அவ முன்னாடி எதுமே வருத்தப்படுற மாதிரி காட்டிக்கில அம்மா, நீ தான் அவளுக்கு அம்மாவா இருந்து பார்த்துகனும் புரிதா, மாமியார் கொடுமை அவளை செய்யலாம்னு எல்லாம் கனவுல கூட நினைக்காதீங்க ராஜமாதா" என வேண்டுமென்றே மிரட்டலாக சொல்ல, அவனின் "ராஜமாதா" என்ற விளிப்பிலே அவன் சகஜநிலைக்கு திரும்ப ஆயுத்தம் ஆகிவிட்டான் என புரிய, அவனை ஒட்டியே,

"அடேய் நிறுத்துடா, ராதிகாவை ஏன்டா நான் கொடுமை படுத்த போறேன், உன்னை எல்லாம் ஒரு ஆளா மதிச்சி கல்யாணம் பண்ற என் மருமக எனக்கு குலசாமிடா, நாங்க ரெண்டு பேருமே எப்பவுமே ஒரே கட்சி தான்,மாமியார் கொடுமை எல்லாம் உனக்கு தான் என கிட்ட இருந்து கிடைக்கும், என்னையும் என் மருமகளையும் அனுசரிச்சி இருந்தா நீ அந்த வீட்டுல பிரச்சனை இல்லாம இருக்கலாம், அப்படி இல்லைனா உன் பாடு தான் மகனே திண்டாட்டமாக போய்டும், பார்த்து இருந்துக்கோ" என சரவெடியாய் பொறிய, பதிலுக்கு பொன்னிற மேனியன் பேச, என கொஞ்ச நேர அரட்டை கச்சேரிக்கு பிறகே உரையாடல் முடிவுக்கு வந்தது.

இதுவரை அவன், அவனின் ராஜமாதாவிடம் எதையுமே மறைத்தது இல்லை, அதும் ராதிகா சம்பந்தபட்ட விஷயம் அவர் அறிந்து இருப்பது அவசியம், அதோடு மனமும் பாரமாக இருப்பது போல இருக்க, இயல்பாய் மனம் தாய்மடி தேட அவருக்கு அழைத்துவிட்டான். ஆனால் அவரும் கலங்கி போகவே அவரை உசுப்பிவிட்டு அவர் சாதாரணமாக ஆனதும் தான் இவனுக்கு நிம்மதியானது. அடுத்து தான் செய்ய வேண்டிய வேலைகளை திட்டமிட்ட பிறகே கொஞ்சம் ஆசுவாசமாக தன் விடுதிக்கு கிளம்பி சென்றான்.

மறுநாள் சனிக்கிழமை விடிந்ததும், அவன் செய்த முதல் வேலை புதுவைக்கு கிளம்பியது தான், தான் செய்ய இருக்கும் காரியத்தை கிறிஸ் இடம் விளக்கி, வீட்டின் முகவரி வாங்கி கொண்டு கிளம்பிவிட்டான்.

காலை ஒன்பது மணிக்கு எல்லாம் தன்னை காண யாரோ வந்து இருப்பதாக வேலையாள் சொல்லவும், "யார் இவ்ளோ காலைல வந்து இருக்கிறது," என யோசனையோடே வரவேற்பறைக்கு வர, சிவகாமி அம்மையாரும் அவரை தொடர்ந்து வர,அங்கு கம்பீரமும், ஆளுமையையும், பளிச்சென ஒரு இளைஞன் அமர்ந்து இருக்க, அவனின் தோற்றதிலே அவன் மீது இருவருக்கும் ஒரு மதிப்பு இயல்பாக வர, அவர்கள் வந்ததும், பொன்னிற மேனியன் எழுந்து நின்றான், அவன் யாரென தெரிய வில்லை என்றாலும், வீட்டிற்க்கு வந்தவரை வா வென அழைப்பது முறை என்பதால்,

"வாங்க தம்பி, உட்காருங்க" என தில்லை சொல்ல, அவனோ உட்காராமல் இருவரின் பாதம் பணிந்து,

"என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க" என, ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு இருவரும், ஒரு மித்த குரலில்,

"நல்லா இருப்பா" என, பின்பு தான் எழுந்து, ஒரு புன்னகையுடன் இருக்கையில் அமர்ந்தான் பொன்னிற மேனியன்,

"தம்பி யாருன்னு தெரியலையே, என்ன விஷயமா வந்து இருக்கீங்க" என தில்லை பேச்சை ஆரம்பிக்க, பொன்னிற மேனியனோ தயக்கம் என்பதே சிறிதும் இல்லாமல்,

"என்னோட பேரு ராகவ் கிருஷ்ணா," என மடமடவென தன் குடும்பம் பற்றி சொல்லிவிட்டு, தன் அட்டையையும் எடுத்து தில்லையிடம் கொடுத்தான். புதுவையில் தான் வியாபாரம் என்றாலும், பொன்னிற மேனியனின் குடும்ப உயரத்தை தில்லை அறிந்து தான் இருந்தார். இருந்தும்,

"தம்பி இன்னும் என்ன விஷயமா வந்திங்கன்னு சொல்லலையே" என கேட்க,

"நானும் ராதிகாவும் ஒரே கிளாஸ் தான்" என மெதுவாக ஆரம்பிக்கவும், இப்போது தான் தில்லைக்கு தன் பேத்தி "நண்பன்" என சொல்லிய நியாபகம் வர, மகிழ்வுடனே,

"தாயி உங்களை பற்றி சொல்லி இருக்கு தம்பி, பேரு சொன்னதும் சட்டுனு நினைவு வரல, வயசு ஆகிடுச்சி பாருங்க, நீங்களாவது வந்ததும் தாயி பிரின்ட்னு சொல்லி இருக்கலாம் இல்ல, நீங்க கண்டிப்பா சாப்பிட்டு தான் போகனும், சிவாகாமி தம்பிக்கு சாப்பாடு ரெடி பண்ணு" என உபசரிக்க, தில்லையை பொறுத்தவரை பொன்னிற மேனியன் ஏதோ வேலை விஷயமாக வந்து இருக்கிறான் என நினைத்து பேச, ஏனோ அவருக்கு காதலாக இருக்கலாம் என்று நினைக்க தோன்றவே இல்லை, தில்லை சொன்னதும், உள்ளே செல்ல முனைந்த சிவாகாமி அம்மையாரை தடுக்கும் விதமாக, பொன்னிற மேனியன்,

"நான் கண்டிப்பா சாப்பிட்டு தான் போவேன், ஆனா அதுக்கு முன்னாடி உங்க ரெண்டு பேர் கிட்டவும் ஒரு முக்கியமான விஷயம் பேசணும், நீங்களும் இப்படி உட்காருங்க" என சிவகாமி அம்மையாரையும் தில்லையின் அருகிலே அமர சொல்ல, இப்போது தான் தில்லையின் மூளைக்குள் மணி அடித்தது, விஷயம் ஏதோ பெரிது என,

"சொல்லுங்க தம்பி, என்ன விஷயம்"

"நான் உங்க பேத்தி ராதிகாவை விரும்புறேன், கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்" என நேரடியாக எவ்வித தயக்கமும் இல்லாமல் கம்பீரமாகவே சொல்ல, அவனின் கூற்றில் மூத்த தம்பதிகள் தான் வாயடைத்து போயினர். பொன்னிற மேனியன் குடும்பம், அவனின் கம்பீரம் எல்லாம் நிறைவாக இருந்தாலும், இதில் முடிவு எடுக்க வேண்டியது ராதிகா இல்லையா, எனவே,

"இல்ல தம்பி இதுல எங்க சம்மதத்தை விட தாயி என்ன நினைக்குறாங்க அப்படின்றது தான் முக்கியம்" என இவ்ளோ நல்ல சம்பந்தத்தை வேண்டாம் என சொல்ல வேண்டி இருக்கிறதே என தயங்கியவரே சொல்ல,

"உங்க தாயி சரின்னு சொல்லாமலா இவ்ளோ தூரம் வந்து நான் உங்க கிட்ட பேசுறேன்" என அவரை மாதிரியே ஒரு புன்சிரிப்புடன் கேட்க, அவன் சொன்னது புரியவே இரண்டு நிமிடங்கள் ஆக, புரிந்ததும் சிவகாமி அம்மையார் மகிழ்ச்சியில் கண்ணீர் சிந்த, சுதாரித்து தில்லை, மகிழ்ச்சியில் திளைத்தாலும்,

"தாயி விஷயம்னா கிறிஸ் கிட்ட கண்டிப்பா கேட்கணும், அவனை கேட்காம" என முடிக்காமல் இழுக்க,

"கிறிஸ் எப்பவோ ஓக்கே சொல்லிட்டான், எனக்கு இப்போ வேண்டியது உங்க சம்மதம் தான்" அதே மாய கண்ணன் புன்னகையை சிந்தினான்.

ராதிகாவே தெளிவாக சிந்தித்து தான் முடிவு எடுப்பாள் என்றாலும், கிறிஸ், அவனின் டாலி விஷயத்தில் யோசிக்காமல் எதையுமே செய்ய மாட்டான், அவனே சம்மதம் சொல்லி இருக்கிறான் எனில் மேற்கொண்டு பொன்னிற மேனியனை பற்றி விசாரிக்க எதும் இல்லை என்பது புரிய இருவருக்கும் மகிழ்ச்சியில் பேச்சே வராமல் தடுமாறி,

"ரொம்ப ரொம்ப சந்தோஷம் தம்பி" ஒரு சேர தங்கள் சம்மதத்தை கூற, தன் வயதையும் மறந்து தன் கையாலே விருந்து சமைக்க போவதாக சிவகாமி அம்மையார் செல்ல, தில்லையும், பொன்னிற மேனியன் மட்டுமே வரவேற்பறையில் இருந்தனர்.

"உங்க வீட்டுல தெரியுமா தம்பி" ஏனோ அவருக்கு அடுத்தடுத்து சந்தேகங்கள், இவ்ளோ பெரிய இடம், நல்ல படியாக முடிய வேண்டுமே என்ற பதற்றம், தன் பேத்திக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டுமே என எதிர்பார்ப்பு என எல்லாம் அடுத்தடுத்து கேள்விகளை அடுக்க, பொன்னிற மேனியனுக்கும் அவரின் நிலை புரிய, ஒரு ஆதரவான புன்னகையுடன்,

"அம்மாக்கு ராதிகாவை அவ்ளோ பிடிக்கும், அவ எப்போ வீட்டுக்கு வருவான்னு என்ன விட அவங்க தான் அதிக ஆவலா எதிர்பார்த்து கிட்டு இருக்காங்க, இருங்க நான் போன் பண்ணி தரேன், நீங்களே பேசுங்க" என அவனின் ராஜமாதாக்கு அழைத்து கொடுக்க, அவரிடம் பேசிய தில்லைக்கு பரம திருப்தி, தன் பேத்திக்கு இவர்களால் ஒரு நிம்மதியான வாழ்க்கை அமையும் என உறுதியாக நம்பிக்கை வர, அவரின் கண்களும் பணித்தது. எத்தனை நாள் தங்களுக்கு பிறகு தங்களின் பேத்தியின் நிலை என்னவாகும் என யோசித்து கவலைப்பட்டு இருப்பார், இன்று அவளை விரும்பி, எல்லா விதத்திலும் நிறைவான ஒரு துணை, அழகான வாழ்க்கை அவளுக்கு காத்திருக்கிறது எனும் போது அப்படி ஒரு நிம்மதி அந்த முதியவருக்கு.

"நாங்க ரெண்டு பேருமே காலேஜ் முடிஞ்சதும் சேர்ந்தே வந்து தான் உங்க கிட்ட சொல்லணும்னு நினைத்தோம், ஆனா எனக்கு உங்க சம்மதம் வாங்கி ராதிகாவுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி தரனும் ஆசை, அதான் நான் மட்டும் இப்போவே வந்தேன், நான் வந்ததே உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கும், அதான் அம்மாவையும் கூட்டிட்டு வந்து உங்களை சங்கட படுத்த வேண்டாம்ணு, கூட்டிட்டு வரல" என விளக்க, ராதிகாவை இவர் "தங்களிடம் தங்கள் பேத்தி சொல்லவில்லையே" என தவறாக நினைக்க கூடாது என்றும், பெண் கேட்டு வரும் போது வீட்டிற்கு பெரியவரோடு வராமல் தனியே வந்ததால் தவறாக எண்ணி விட கூடாது என்றும் தான் மேற்கூரிய விளக்கம் என புரிய, பையன் கெட்டிக்காரன் தான் என சிரித்தவாறே,

"அதனால என்ன தம்பி பரவாயில்லை" என பொதுவாக பதில் தர, பொன்னிற மேனியன் தான் வந்த விஷயத்தை பேச ஆரம்பித்தான்.

"ராதிகா அவங்க அப்பா, அம்மா பற்றி எல்லாமே சொன்னா" என ஆரம்பித்து, தில்லையிடமும் அவள் சொன்ன விஷயங்களை மறுமுறை கேட்டு உறுதிப்படுத்தி கொண்டான் பொன்னிற மேனியன். நேரில் இருந்தவர் சொல்லும் போது இன்னும் தெளிவாக புரியும் என நினைத்தானோ என்னவோ, அவரிடமும் ஒரு முறை பேசி தெரிந்துகொண்டான். பின்பு இயல்பு போல வீட்டை சுற்றிப்பார்க்க அனுமதி கேட்டு, ராதிகா வயிற்றில் இருக்கும் போது தெய்வா இருந்த, இந்திராணி அம்மையாரின் அறையையும், அந்த அறையில் இருந்த அவரின் பெரிய ஓவியத்தையும் யாரின் கவனத்தையும் கவராமல் புகைப்படம் எடுத்துக்கொண்டான் பொன்னிற மேனியன்.

பிறகு மாலை வரை அவர்களுடனே நேரம் செலவிட்டு, ராதிகாவிடம் எக்காரணம் கொண்டும் தான் வந்ததையும், பேசியதையும் சொல்லவேண்டாம், அது அவளுக்கு சர்பரைஸ் என பல முறை சொல்லி, மீண்டும் அவர்களின் ஆசியை பெற்று சென்னையை நோக்கி கிளம்பினான்.

வழியிலே யாருக்கோ அழைத்தவன், அந்த பக்கம் அழைப்பை ஏற்றதும், இரும்பின் கடினமான குரலில்,

" நான் சொன்ன விஷயம் என்ன ஆச்சு"

.………………………..

"நீங்க என்ன பண்ணுவிங்க, ஏது பண்ணுவிங்கன்னு எல்லாம் எனக்கு தெரியாது, நா கேட்டது எனக்கு ஒரு வாரம்ல கைக்கு வரணும், காட் இட்" என உத்தரவிட்டே அழைப்பை துண்டித்தான்.

அவனின் கார்மேகம் இருக்கும் இடத்தை சென்று சேரும் ஆவலில் அவனின் மனம் பரபரக்க, உதடுகளோ,

"கெட் ரெடி டூ பேஸ் மீ மிஸ்டர்.சண்முகம்" என வன்மான புன்னகையுடன் சொல்ல, கார் சென்னையை நோக்கி அசுர வேகத்தில்.

இவன் ராதையின் கண்ணன்…………………………
 

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

பொன்னிற மேனியனுக்காக...

வெற்றி நிச்சயம்
இது வேத சத்தியம்
உன்னை வெல்வதே
நான் கொண்ட லட்சியம்
என்னை மதித்தால்
என் உயிர் தந்து காப்பேன்
என்னை மிதித்தால்
இரண்டில் ஒன்று பார்ப்பேன்
அடே சண்முகா!
உண்மை சொல்வேன் !
சவால் வேண்டாம்
உன்னை வெல்வேன் !
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top