யாருமிங்கு அனாதையில்லை - 6

Advertisement

pon kousalya

Active Member
“யாருமிங்கு அனாதையில்லை - 6”
(நாவல்)

எழுதியவர் :
பொன்.கௌசல்யா​

அத்தியாயம் 6

“நடந்த...நடக்கற விஷயங்கள் மட்டுமல்ல ஜோதி...இனிமே நடக்கப் போற விஷயங்கள் உன்னை அதிக பிரமிப்பில் ஆழ்த்தும்!” என்று பூடகமாய் சொல்லி விட்டு, தனக்குத் தாய் கிடைத்த கதையை விவரிக்க ஆரம்பித்தார் திவாகர்,

“சுமார்...ஒன்றரை வருடங்களுக்கு முன்னாடி..மதுரைக்குப் பக்கத்துல ஒரு கிராமத்துல ஜாதிக் கலவரம் ரொம்பப் பெரிய அளவுல நடந்ததே...அது உனக்கு ஞாபகமிருக்கா ஜோதி?” திவாகர் கேட்க,

ஜோதி உதட்டைப் பிதுக்கினாள்.

“அந்த கிராமத்துப் பேரு கூட மரத்தோப்பு!”

சட்டென்று ஞாபகம் வந்தவளாய், “ஆமாம்...ஆமாம்...எல்லா டி.வி.நியூஸ்லேயும்...காண்பிச்சாங்க...ஏதோ காதல் விவகாரத்துல வந்த கலவரம்ன்னு...” என்று இழுத்தாள் ஜோதி.

“கரெக்ட்...அதேதான்!...அந்தப் பிரச்சனை கடைசில எப்படி முடிஞ்சது தெரியுமா?”

“ம்...ஜாதிக்காரங்க காதல் ஜோடிகளைப் பிரிச்சு வெச்சாங்க!...அதுக் ரெண்டும்..தனித்தனியா தற்கொலை பண்ணிக்கிடுச்சுக!..அவ்வளவுதான்...பிரச்சனை முடிஞ்சிடுச்சு!” என்றாள் ஜோதி.

“நீ சொன்ன மாதிரிதான் பேப்பர்லேயும்...டி.வி.லேயும் நியூஸ் சொன்னாங்க!... ஆனா உண்மை அது இல்லை!” திவாகர் சற்றுத் தணிவான குரலில் சொன்னார்.

“பின்னே?”

“காதலிச்ச குற்றத்துக்காக...அந்தப் பொண்ணை அவங்க ஜாதிக்காரங்களே...விஷம் குடிக்க வெச்சுக் கொன்னுட்டாங்க!”

“அடப்பாவமே...காதலிக்கறது என்ன அவ்வளவு பெரிய குற்றமா அவங்களுக்கு?!” வாய் மீது கையை வைத்துக் கொண்டு அங்கலாய்த்தாள் ஜோதி.

“காதலிச்சது கூடப் பெரிய குற்றமில்லையாம்...ஆனா கீழ் ஜாதிக்காரனைக் காதலிச்சதுதான் குற்றமாம்!”

“என்னங்க இது?...இந்தக் காலத்திலேயும் கூட இப்படி இருக்காங்களா?”

“அந்தப் பொண்ணோட மரணத்துக்கப்புறம் கிளம்பிய பூதாகரமான கலவரத்துல கீழ் ஜாதிக்காரங்க குடியிருப்புக்களுக்கெல்லாம் தீ வைக்கப்பட்டு...வீடு...வாசலெல்லாம் எரிஞ்சு சாம்பலாயிடுச்சு!...கிட்டத்தட்ட பதினஞ்சு பேருக்கும் மேல சாகடிக்கப்பட்டாங்க!”

“அதுக்கப்புறம்.. “என்னோட காதலியே போயிட்டா இனி நான் மட்டும் எதுக்கு வாழணும்?”னு நெனச்சு அந்தப் பையனும் தற்கொலை பண்ணிக்கிட்டான்...அப்படித்தானே?” ஜோதி கேட்க,

மெலிதாய்ச் சிரித்த திவாகர், “உண்மையைச் சொல்லணும்னா...அது கூடத் தற்கொலை இல்லை!... “உன்னாலதாண்டா நாங்கெல்லாம் வீடு...வாசல் இழந்து நிக்கறோம்!...உன்னாலதாண்டா இங்க பத்துப் பதினஞ்சு பொணம் விழுந்திச்சு”ங்கற ஆவேசத்துல அவனோட ஜாதிகாரங்களே...அவனை அடிச்சுக் கொன்னுட்டாங்க!”

ஜோதியால் அந்த விஷயங்களை ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.

“என்ன ஜோதி அமைதியாயிட்டே?”

“ஒண்ணுமில்லைங்க!” என்றவள், சட்டென்று தலையைத் தூக்கி, “அது சரி...எதுக்கு இத்தனை நேரம் இந்தக் கதையை என்கிட்ட சொன்னீங்க?...இதுக்கும் உங்க அம்மாவுக்கும் என்ன சம்மந்தம்?”

“இருக்கு...சம்மந்தம் இருக்கு!”

“எப்படி?”

“இந்தக் காதல் கதையோட கதாநாயகன்...பேரு...பூவரசன்!...அந்தப் பூவரசனைப் பெத்தவதான் இந்த அம்மா!” சஸ்பென்ஸை உடைத்து விட்டு ஜோதியின் முகத்தை கூர்ந்து பார்த்தார் திவாகர்.

ஜோதி மௌனமாய் நிற்க,

“அந்தம்மாவோட நிறத்தையும்...உருவத்தையும்...தோற்றத்தையும் பார்த்தாலே தெரிஞ்சிருக்குமெ...அவங்க தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவங்கன்னு?”

“உண்மை!...ஆரம்பத்துல நீங்க அவங்களை “எங்க அம்மா”ன்னு அறிமுகப்படுத்தி வெச்சப்பவே நான் முகம் சுளிச்சுட்டேன்!...என்னால அவங்களை உங்களோட அம்மாவா கற்பனை பண்ணிப் பார்க்கக் கூட முடியவில்லை!...சரி..இவங்க எப்படி இங்க வந்தாங்க?”

“கலவரத்தை அடக்க அனுப்பப்பட்ட போலீஸ் தனிப்படைல நானும் இருந்தேன்!...அங்க போய்ப் பணியில இருந்தப்பத்தான் இந்த அம்மாவைப் பார்த்தேன்...ஒரு வித்தியாசமான இடத்துல...வித்தியாசமான சூழ்நிலைல!”

ஜோதி நெற்றியைச் சுருக்கிக் கொண்டு பார்க்க, திவாகரின் கண்களில் விரிந்த அந்தக் காட்சி ஜோதியின் கண்களுக்குள் பிரதிபலித்தது.

“மரத்தோப்பு” கிராமம்.

கலவர நிலைமை ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்குள் வந்து விட, காவல்துறையினர் அமைதி அணிவகுப்பு நடத்தினர்.

பிரச்சினையில் சம்மந்தப்பட்டவர்கள், சம்மந்தப்படாதவர்கள், சந்தேகத்திற்குரியவர்கள், தூண்டுகோலாயிருப்பவர்கள், என ஏறக்குறைய நூறு பேருக்கும் மேலே கைது செய்யப்பட்டிருக்க, ஊருக்குள் ஒரு அமானுஷ்ய அமைதியே நிலவியது.

காவல்துறையும் தன் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ளும் விதமாய், பாதிப் பேரை மட்டும் வைத்துக் கொண்டு, மீதிப் பேரை திருப்பியனுப்பியது.

திருப்பி அனுப்பப்படுவோர் பட்டியலிலிருந்த திவாகர், மறுநாள் காலை ஊருக்குப் புறப்படும் எண்ணத்தில் முந்தின நாள் மாலை அந்தக் கிராமத்தின் தெற்குப் பகுதியில் நிமிர்ந்து நின்று கொண்டிருந்த அந்த மலைப் பகுதிக்கு பொழுது போக்கச் சென்றார்.

பசுமையான மலைச் சரிவில், ஆங்காங்கே நின்று கொண்டிருந்த ராட்சதப் பாறைகளையும், மலைக் குகைகளையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே ஒரு குகையினருகே வந்தவர், சட்டென நின்றார். உள்ளே ஆள் நடமாட்டம் இருப்பது போன்ற ஓசை கேட்க, வெளியிலிருந்தபடியே கத்தினார்.

“டாய்...யார்ரா அவன் குகைக்குள்ளார ஒளிஞ்சிட்டிருக்கறவன்?...வாடா வெளிய!”

உள்ளிருந்த எந்தச் சலனமும் வராது போக,

“ராஸ்கல்..போலீஸ்காரன் கூப்புடறேன்...சத்தமில்லாமப் பதுங்கறியா?...உள்ளார வந்தேன்னா...உண்டு இல்லைன்னு ஆக்கிடுவேன்!...மரியாதையா நீயே வெளிய வந்துடு!”

ம்ஹூம்...அசைவேயில்லை.

உள்ளே நுழைய நினைத்த திவாகர், ஓரடி எடுத்து வைத்ததும் ஏதோ தடுக்க நின்றார். “தனி ஆளா...கைல துப்பாக்கி கூட இல்லமப் போறது...ம்ஹூம்...சரியில்லை!..ம்ம்ம் என்ன பண்ணலாம்?...” யோசித்து விட்டு, சும்மாவாகிலும் வயர்லஸ் போனில் பேசுவது போல், “ஹல்லோ...ஹல்லோ...இன்ஸ்பெக்டர் திவாகர் ஹியர்...மலைக்குகையில் ஆள் நடமாட்டம் தெரியுது!...உடனே புறப்பட்டு வாங்க!...ஓவர்...ஓவர்!” என்று பாவ்லா காட்டினார்.

இப்போது குகைக்குள்ளிருந்து அழுகைச் சத்தம் கேட்டது. அதுவும் ஒரு பெண்ணின் அழுகைச் சத்தம்.

திடுக்கிட்டுப் போனார் திவாகர். “ஆஹா...உள்ளார இருப்பது பொம்பளை போல் அல்ல தெரியுது...யாராயிருக்கும்?”

“ந்தாம்மா..நீ யாராயிருந்தாலும் சரி...மொதல்ல வெளிய வா!...உங்களுக்கெல்லாம் எதுவும் ஆகாமக் காப்பாத்தறதுக்குத்தான் போலீஸ் படை வந்திருக்கு...தைரியமா வெளிய வாம்மா!” என்றார் கத்தலாய்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, குகையின் உள்ளிருந்து ஒரு பெண்மணி, அதே இருட்டு நிறத்தில், குள்ளமாய், அவலட்சணமான முகத்தோடு வெளியில் வந்தாள்.

வந்தவள், வந்ததும் வராததுமாய் திவாகரின் கால்களில் விழுந்து, “என்னைக் காப்பாத்துங்க...என்னைக் காப்பாத்துங்க!...என் மகனை அடிச்சுக் கொன்ன மாதிரி என்னையும் அடிச்சுக் கொல்ல எங்க ஆளுங்க என்னையத் தேடிட்டிருக்காங்க!...அதான் இங்க வந்து ஒளிஞ்சிட்டிருக்கேன்!” என்று கதறினாள் அவள்.

“இரும்மா...இரும்மா...எதுக்கு இப்ப இப்படிப் பதட்டப்படறே?...அதான் நாங்க இருக்கோம்ன்னு சொல்லிட்டேனில்ல?...தைரியமச் சொல்லு...நீ யாரு?...எதுக்கு இங்க வந்து ஒளிஞ்சிட்டிருக்கே?”

“தம்பி...நாந்தான் தம்பி...அந்தப் பூவரசனோட அம்மா!”

“ஓ...அப்படியா?” என்று தாடையைத் தடவியபடியே அப்பெண்ணை மேலிருந்து, கீழ் வரை ஆராய்ந்தார் திவாகர்.

“ஏதோ வயசுக் கோளாறுல ஒரு மேல் சாதிப் பொண்ணை விரும்பிட்டான் என் மகன்!...இந்தச் சின்ன விஷயத்தை சுலபமா...பேசித் தீர்த்திருக்கலம்...ரெண்டு பேரையும் கூட்டி வெச்சு....விவரமாச் சொல்லி...அவங்களுக்கும் புரிய வெச்சு...அந்தப் பிரச்சினையை முளையிலேயே கிள்ளியிருக்கலாம்!...அதை விட்டுட்டு..யார் யாரோ தலையிட்டு...எப்படியெப்படியோ திசை திருப்பி...ஊர்க் கலவரமாக்கி...சாதிக் கலவரமாக்கி...பத்துப் பதினஞ்சு பொணங்களை விழ வெச்சுட்டாங்க தம்பி!...கடைசில அந்தப் பொண்ணை அவங்க சாதிக்காரங்களும்...என் பையனை எங்க சாதிக் காரங்களுமே கொன்னுட்டாங்க!...இப்ப என்னையும் கொல்லறதுக்காகத் தேடிட்டிருக்காங்க!...”பேசும் போது அந்தப் பெண்ணின் உடல் நடுங்குவதைப் பார்க்கவே பரிதாபமாயிருந்தது திவாகருக்கு.

சில நிமிடங்கள் யோசித்த திவாகர், “இந்த ஊர்ல உனக்கு நெருங்கிய உறவுக்காரங்க யாரு இருக்காங்க?” கேட்டார்.

“இருந்தாங்க...ஆனா இப்ப இல்லை” தழுதழுத்த குரலில் சொன்னாள்.

“ஏன்...என்ன ஆனாங்க?”

“ஹூம்...இங்க விழுந்த பதினஞ்சு பொணத்துல பத்து எங்க குடும்பத்து ஆளுன்கதான்!...என் தம்பி...என் மாமன்...சித்தப்பா...கொழுந்தன்...ன்னு எல்லாரையும் ஒரே நாள்ல இழந்துட்டேன்!...இப்ப யாருமே இல்லாம தனி மரமா...அனாதைய நிக்கறேன்!...எந்த நேரத்துல இந்த உடம்பிலிருந்து உசுரு புடுங்கப்படுமோ?ன்னு நடுங்கிக்கிட்டு நிக்கறேன்!”

மனம் கனத்துப் போய் நின்றார் திவாகர். “உன் புருஷன்?”

“அவரு போயி..ஏழெட்டு வருஷமாச்சு!...அவரு போனப்புறம்...இவந்தான் இனி நமக்கு வாழ்க்கையேன்னு நெனச்சுத்தான் பூவரசனை வளர்த்தேன்...அநியாயமா பொம்பளை விஷயத்துல சிக்கி...அநியாயமாப் போயிட்டான் பாவி!” வாய் விட்டு அழுதவளின் தோளைத் தொட்ட திவாகர்,

“ம்மா...அழாதீங்கம்மா...நானும் ஒரு அனாதைதான்!...நானும் ஒரு தனிமரம்தான்!...தனிமரம் தோப்பாகாதுதான்...ஆனா தனி மரங்கள் ஒண்ணாச் சேர்ந்தா அது தோப்பாகுமே?...அத்னால...அம்மா இல்லாத எனக்கு அம்மாவா நீங்க வந்திடுங்கம்மா!...மகனை இழந்த உங்களுக்கு மகனா நான் இருக்கேன்!” சொல்லும் போது திவாகரின் விழிகளில் அவரையுமறியாமல் நீர் கோர்த்தது.

திசையெங்கும் தீமை இருள் துரத்தி வருகையில், தெய்வீக ஒளியொன்று தானாய் முன் வந்து வெளிச்ச வாழ்க்கைக்கு தோரணம் கட்டத் துடிக்க,

கையெடுத்துக் கும்பிட்டாள் அவள்.

நெருங்கி வந்து, அவள் முகத்தை ஊடுருவிப் பார்த்து, ஒவ்வொரு எழுத்தையும் அன்பில் முக்கியெடுத்து, “அ......ம்....மா!” என்றார் திவாகர் கண்கள் பனிக்க,

அப்பெண்ணால் வாய் பேச இயலாது போக, அவர் கால்களில் விழக் குனிந்தாள்.

அவசரமாய் எட்டிப் போன திவாகர், “அம்மா...நீங்க என்னோட தாய்!...நாந்தான் உங்க காலில் விழலாமே தவிர...நீங்க என் காலில் விழக்கூடாது!” என்று சொல்லி அவளை நிதானமாய் நகர்த்தி, காவலர்கள் தங்கும் பகுதிக்கு அழைத்து வந்தார் திவாகர்.

மறுநாள் காலை, தன் அறுபத்திஐந்து வயது வாழ்க்கையில் ஒரு முறை கூட அந்த “மரத்தோப்பு” கிராமத்தை விட்டு வெளியில் எங்குமே சென்றிடாத அப்பெண், முதன் முதலய் அந்த ஊரை விட்டுக் கிளம்பினாள்.

அக்கால ஆட்கள் எப்போதுமே, மனிதர்கள் மீது எந்த அளவிற்கு அன்பும், பாசமும், நேசமும் கொண்டிருக்கிறார்களோ..அதே அளவிற்கு பிறந்து வளர்ந்த மண்ணின் மீதும் கொண்டிருப்பர். திவாகருடன் செல்லுகையில் தன் கிராமத்தை திரும்பித் திரும்பிப் பார்த்துக் கண்ணீர் விட்டபடியே சென்றாள் அந்தப் பெண்மணி.

“இப்படித்தான் ஜோதி...எனக்கு அம்மா கிடைச்சாங்க!...நான் தனி ஆளா இருந்தப்ப இந்த வீடு எனக்கு வெறும் தங்குமிடமாத்தான் இருந்திச்சு!...ஆனா ஒரு அப்பாவும், அம்மாவும் இந்த வீட்டுக்கு வந்த பிறகு, இந்த வீடே ஒரு அன்புக் கூடமாயிடுச்சு!...பாசப் பாசறையாயிடுச்சு!... நேச மண்டபமாயிடுச்சு!...நீயே பாரேன்...மரணத்தின் விளிம்பு வரை போய் விட்டு மீண்டு வந்த அந்த ரெண்டு ஜீவன்களும் இப்ப எவ்வளவு சந்தோஷமா...உற்சாகமா...வாழ்ந்திட்டிருக்காங்க என்பதை!...ஹூம்...எத்தனை ஆயிரம் முறை மணியடித்தாலும், எத்தனை அயிரம் பூசைகள் செய்தாலும், எத்தனை ஆயிரம் முறை அர்ச்சனைகள் செய்தாலும்...அதிலெல்லாம் கிடைக்காத புண்ணியம்...அதிலெல்லாம் கிடைக்காத அருள் இதுல கிடைக்கும்!...என்ன சொல்றே நீ?” திவாகர் கேட்க,

அது வரையில் அவர் பேசுவதையே பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த ஜோதி, சட்டென்று சுயநினைவிற்கு வந்து, “உண்மைதாங்க!...இந்த உலகத்துல “அய்யோ!...என்னை நேசிக்க ஒருவருமே இல்லையே?”...ன்னு ஏங்கித் தவிக்கற உள்ளங்கள் எத்தனையோ இருக்கு!...அதே மாதிரி... “ச்சே!...நாம, நம்மோட அன்பைக் காட்ட, நம்மோட பாசத்தைக் கொட்ட...நமக்குன்னு யாருமே இல்லையே!”ன்னு ஏங்கித் தவிக்கற உள்ளங்களும் நிறைய இருக்கு!...அந்த ரெண்டுமே சங்கமிக்கற இடம் இந்த வீடுதான்!னு புரிஞ்சுக்கிட்டேன்!”

“ம்....அப்புறம் ஜோதி...ஒரு நாலஞ்சு நாளைக்கு நான் ஊர்ல இருக்க மாட்டேன்...வெளியூர்ல டியூட்டி போட்டிருக்காங்க...நான் திரும்பி வர்ற வரைக்கும் நீதான் அம்மாவையும், அப்பாவையும், தம்பியையும் பத்திரமாய்ப் பார்த்துக்கணும்!...என்ன சரியா?”

அதைக் கேட்பதற்கே சந்தோஷமாயிருந்தது ஜோதிக்கு. “தாராளமாய்ப் போயிட்டு வாங்க...நான் பார்த்துக்கறேன்!” என்று வாய் சொன்னாலும்,

மனதின் ஏதோ ஒரு மூலையில் “நாலஞ்சு நாளைக்கு இவர் இருக்க மாட்டாரா?” என்ற ஏக்கத் துளியொன்று மெல்லத் தலை தூக்கிப் பார்த்தது.

****​
திவாகர் இல்லாத வீடு ஜோதிக்குப் பிடிக்கவே இல்லை. “ஹூம்...தனக்குள் ஆயிரம் வலியை வைத்துக் கொண்டிருந்தாலும், வெளியில் தன்னை மகிழ்ச்சியாக காட்டிக் கொள்ளும் இந்த மனிதர் வாழும் வாழ்க்கையே ஒரு வகையான தியானம்தான்!...சாதாரண...சிறிய மனிதர்களைக் கூட பெருந்தன்மையோட நடத்தும் இவர்தான் உண்மையிலேயே பெரிய மனிதர்!”

“ஏம்மா ஜோதி!...சாப்பிட வரலையாம்மா?” திவாகரின் தாய் வந்து அழைக்க,

“வேண்டாம்மா!...எனக்கு ஏனோ பசியே இல்லை!” என்றாள் ஜோதி.

சொல்லும் போது ஜோதியின் முகத்தில் தெரிந்த வாட்டத்தைக் கண்டுபிடித்து விட்ட அவள், “என்னம்மா...ஏன் உன் முகமெல்லாம் வாடியிருக்கு?...உடம்பு கிடம்பு சரியில்லையா?” என்று பரிவுடன் கேட்க,

சுதாரித்துக் கொண்ட ஜோதி. “ஆஹா...என் உள் மன வருத்தத்தை என் முகமே காட்டிக் கொடுத்து விடும் போலிருக்கே!” என்று நினைத்துக் கொண்டு, முகத்தை சிரமப்பட்டு இயல்பாக்கிச் சிரித்தாள்.

தலையை இட, வலமாக ஆட்டிய திவாகரின் தாயார், “ம்ஹூம்...நீ எப்பவும் போல இல்லை!” என்று சொல்லிக் கொண்டே நகர்ந்தாள்.

“ஒரு நிமிடம் போதும்.....அதிகம் நேசிப்பதற்கு!...ஒரு நிமிடம் போதும்...சண்டை போடுவதற்கு!...ஆனால் ஒரு ஜென்மம் போதாது...நேசித்த ஒருவரைப் பிரிவதற்கும்...மறப்பதற்கும்!” எங்கோ, எப்போதோ, படித்தது ஜோதிக்கு இப்போது ஞாபகத்தில் வந்தது.

“நான் ஏன் இப்படி இருக்கிறேன்?...என் மனசுக்குள் என்ன எண்ணம் ஓடுகிரது?...என்னையே அறியாமல் நான் திவாகரை விரும்பத் துவங்கி விட்டேனா?” தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள்.

“அய்யோ....கடவுளே!... “அளவுக்கு அதிகமான அன்பிற்கும், அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பிற்கும் கிடைக்கும் சிறந்த பரிசு...ஏமாற்றம்தான்!...” என்பதை என் வாழ் நாளில் ஏற்கனவே பலமுறை, அனுபவத்தில் உணர்ந்திருந்தும் என் மனம் ஏன் இப்படியாகிப் போனது?...இது சரியா?...தவறா?”

அப்போது, காலடியில் ஏதோ குறுகுறுக்க, குனிந்து பார்த்தாள் ஜோதி.

திவாகரின் தம்பி கோபி, தரையில் தவழ்ந்தபடியே வந்து அவள் காலைச் சுரண்டிக் கொண்டிருந்தான்.

“என்ன கோபி?...என்ன வேணும்?”

“ம்ம்ம்...நீங்க சாப்பிட வரணும்!” பத்து வயதுச் சிறுவனின் குரலில் இன்னும் மழலை மிச்சமிருந்தது.

“எனக்குப் பசிக்கலைப்பா!” என்றாள்.

“பரவாயில்லை வாங்க...பசிச்ச அளவுக்கு கொஞ்சமாவது சாப்பிடுங்க!” அன்பு நிறைந்த அழைப்பில் நெகிழ்ந்து போன ஜோதி,

“சரி...சரி...வா...உனக்காக...கொஞ்சம் சாப்பிடறேன்!...போதுமா?” சொல்லி விட்டுத் திரும்பி நடந்த ஜோதியை மறுபடியும் அழைத்தான் கோபி.

“என்னப்பா...அதான் நான் “வர்றேன்...சாப்பிடறேன்”னு சொல்லிட்டேனல்ல?”

“எங்க அண்ணா இருந்தாருன்னா என்னைத் தரைல ஊர்ந்து செல்லவே விட மாட்டார்!...தூக்கிட்டேதான் சுத்துவார்!”

“சரி...”

“நீங்க...என்னைத் தூக்கிக்குவீங்களா?” அந்தக் கெஞ்சல் ஜோதிக்கு சிரிப்பை வரவழைத்தாலும், அதை காட்டிக் கொள்ளாமல்,

“ஓ...தாராளமா!” சொன்னவள் சற்றும் யோசிக்காமல் அவனைத் தூக்கித் தன் தோள்களில் சாய்த்துக் கொண்டு நடந்தாள்.

“உண்மையைச் சொல்லுங்க..அண்ணா இல்லாததினாலதானே உங்க மூஞ்சி...வாடிப் போயிருக்கு?” காதருகே வந்து கிசு..கிசுப்பாய்க் கேட்ட அவன் முகத்தைக் கூர்ந்து பார்த்தாள் ஜோதி.

“இந்தச் சின்னப்பயல்...என்னோட மனசை அப்படியே படிச்சிட்டானே?” ஆச்சரியப்பட்டாள்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை!” பொய்யாய்ச் சிரித்து, போலியாய் நடித்தாள் ஜோதி.

“இல்லை...நீங்க பொய் சொல்லறீங்க!”

அதற்கு பதில் சொல்லாமல், வெறுமனே புன்ன்கத்தாள் ஜோதி.

கூடத்தில் ஈஸி சேரில் அமர்ந்திருந்த திவாகரின் தந்தை, “என்னம்மா..பயல் ரொம்ப லூட்டி அடிக்கறானா?” சிரித்தபடி கேட்க,

“இல்லையே!...கோபி சமத்துப் பையனாச்சே!...லூட்டியெல்லாம் அடிக்க மாட்டானே”

“ம்மா...நீ அவனைச் சாதாரணமா நெனைக்காதே...ரொம்ப புத்திசாலி...பெரியவங்களுக்கு இருக்கற அளவுக்கு அறிவும்...பக்குவமும் அவன்கிட்ட இப்பவே இருக்கு!”

“உண்மைதான் அதனால்தான் “திவாகர் இல்லாததினால நான் சோகமாய் இருக்கறேன்!” என்கிற விஷயத்தை சட்டுன்னு கண்டுபிடிச்சுட்டான்!” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள் ஜோதி.

(தொடரும்)​
 

தரணி

Well-Known Member
அருமையான பதிவு.... எனக்கு யாருமே இல்லன்னு சொல்லுறதுக்கு பதில் நம்மள சுத்தி இருக்குறவுங்களை நேசிக்க ஆரம்பிச்சாலே போதும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top