யாருமிங்கு அனாதையில்லை - 5

Advertisement

pon kousalya

Active Member
“யாருமிங்கு அனாதையில்லை!”
(நாவல்)

எழுதியவர் :
பொன்.கௌசல்யா​

அத்தியாயம் 5


இருவரும் இருட்டுப் பாதையில் பேசிக் கொண்டே நடக்க ஆரம்பித்தனர். அவ்வப்போது பக்கவாட்டுப் புதரிலிருந்து பூனையோ...பெருச்சாளியோ ஓட, திடுக்கிட்டு திடுக்கிட்டு மிரண்டாள் ஜோதி.

அதைப் பார்க்கும் போது சிரிப்புத்தான் வந்தது அந்தப் பெண் போலீஸுக்கு.

“ஏம்மா...உன் பேரு என்ன சொன்னே?”

“ஜோதி..மேடம்!”

“உங்க வீடு எங்கிருக்கு?..உங்க வீட்டுல உன் கூட யாரெல்லாம் இருக்காங்க?”

“தண்ணீர் பந்தல் ரோட்டுல இருக்கு மேடம் எங்க வீடு!...வீட்டுல நான்..என்னோட தங்கச்சி...அப்பா...சித்தி...நாலு பேரு இருக்கோம்!”

“சித்தின்னா?” ஒருவிதமாய்த் தலையை சாய்த்துக் கேட்டாள் அந்த லேடி கான்ஸ்டபிள்.

“எங்கப்பாவோட ரெண்டாவது சம்சாரம்!...நான் மூத்த சம்சாரத்துக்குப் பொறந்தவ!”

“அப்ப...உன்னோட தங்கச்சின்னு சொன்னியே அவள் உங்க சித்திக்குப் பொறந்தவளா?”

“ஆமாம் மேடம்!”

“அவ பேரு?”

“சவிதா!”

“என்ன பண்ணிட்டிருக்கா?” என்று கேட்டு விட்டு, டி.வி.எஸ்-50ஐத் தள்ளிக் கொண்டு வந்த அசதிக்காய் சில நிமிடங்கள் நின்று, லேசாய் ஆசுவாசப் படுத்திக் கொண்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தாள் அந்த லேடி கான்ஸ்டபிள்.

“ம்..சொல்லு...என்ன பண்ணிட்டிருக்கா உன் தங்கச்சி?”

“டென்த் பாஸ் பண்ணிட்டு...பாலிடெக்னிக்ல டிப்ளமோ மூணாவது வருஷம் படிச்சிட்டிருக்கா மேடம்!” சொல்லும் போது ஜோதி முகத்தில் விழுந்த சோகத்தின் நிழலைக் கண்டு பிடித்து விட்ட லேடி கான்ஸ்டபிள்,

“ஏன் நீ படிக்கலையா?” கேட்டாள்.

மெல்ல விசும்பிய ஜோதி, “ஹூம்...எனக்கும் என்னோட அம்மா உசுரோட இருந்திருந்தா...நானும் படிச்சிருப்பேன்!”

“ஏன்...சித்தி இருந்தாங்கல்ல?”

“நீ படிச்சது போதும்...ஏதாவது வேலை வெட்டிக்குப் போ...சின்னவ படிக்கட்டும்!”ன்னு சொல்லி என்னைய ஒன்பதாம் வகுப்போட நிறுத்திட்டாங்க எங்க சித்தி!”

“அடக் கடவுளே!...நீ உங்கப்பா கிட்டக் கேட்க வேண்டியதுதானே?”

“ஹூம்...அதுக்கு பதிலா செவுத்து கிட்டக் கேட்கலாம்!”

மெல்லச் சிரித்த லேடி கான்ஸ்டபிள், “அட ஏம்மா அப்படி சொல்லுறே?”

“பின்னே?...அவருதான் எங்க சித்தியோட அடிமையாச்சே?...ரெண்டு தோப்புக்கரணம் போடுங்க!ன்னு எங்க சித்தி சொன்னா...ரெண்டாயிரம் தோப்புக்கரணம் போட்டுட்டுத்தான் நிற்பார்!” என்றாள் ஜோதி விரக்தியாய்.

“சரி...உங்க சித்தி எப்படி?”

“ஒரே வரில சொல்லணும்னா...“காட்டு யானையை அலங்கரிச்சிட்டா...அது கோயில் யானை ஆயிடாது!..அவ்வளவுதான்!”

இதற்குள் அந்த லேடி கான்ஸ்டபிளின் வீடு வந்து விட, டி.வி.எஸ்-50ஐ ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி விட்டு, கதவைத் தட்டினாள் அவள்.

சில விநாடிகளுக்குப் பிறகு திறந்த கதவிற்குப் பின்னால் ஒரு வயதான பெண்மணி நின்றிருந்தாள். அவள்தான் அந்த லேடி கான்ஸ்டபிளின் அம்மாவாக இருக்க வேண்டுமென யூகித்தாள் ஜோதி.

“ஏம்மா இத்தனை நேரம்?” அந்தப் பெண்மணி தன் கூந்தலை முடிந்து கட்டிக் கொண்டே கேட்க,

“வர்ற வழில வண்டி பங்ச்சர் ஆயிடுச்சும்மா!” சொல்லியவாறே அந்த லேடி கான்ஸ்டபிள் வீட்டிற்குள் செல்ல, ஜோதி பின் தொடர்ந்தாள்.

திரும்பி, ஜோதியை மேலிருந்து கீழ் வரை ஆராய்ந்த அந்தப் பெண்மணி, “இது யாரும்மா இந்தப் பொண்ணு?” கேட்டாள்.

“அதை அப்புறம் விளக்கமாய்ச் சொல்றேன்...மொதல்ல அவளுக்கு சாப்பிட ஏதாச்சும் குடு...பாவம் மதியத்திலிருந்தே வெறும் வயத்தோட இருக்கா!”

“இல்லைங்க மேடம்...எனக்கு பசியில்லை...சாப்பிடுற மனசும் இல்லை” என்றாள் ஜோதி.

“சரி...படுத்துக்கறியா?...மணி பனிரெண்டுக்கும் மேலாயிடுச்சு!”

ஜோதி தலையாட்ட, தன் தாயாரிடம் திரும்பி, “அம்மா...என்னோட ரூம்ல...கட்டிலுக்குக் கிழே இவளுக்கும் ஒரு பாய் போட்டுக் குடுத்துடு!” என்றாள் லேடி கான்ஸ்டபிள்.

மறுநாள் காலை விடியல் எப்படியிருக்குமோ?...தன் சித்தியிடமிருந்து எந்த விதமான தாக்குதல் வருமா?...என்கிற கலக்கத்திலேயே தூக்கத்தைத் தொலைத்து விட்டு, விடிய விடிய புரண்டபடியே கிடந்தாள் ஜோதி.

அடுத்த நாள் காலையில், ஒரு ஆட்டோ பிடித்து, ஜோதியின் வீட்டிற்குக் கிளம்பினாள் அந்த லேடி கான்ஸ்டபிள்.

புறப்படும் போதே தன் புலம்பலைத் தொடங்கிய ஜோதி, வழியெங்கும் புலம்பிக் கொண்டே வந்தாள். வீட்டை நெருங்க, நெருங்க அவள் புலம்பல் உச்சத்திற்குப் போய் விட, கண்களில் நீருடன், “மேடம் எனக்கு ரொம்ப பயம்மாயிருக்கு மேடம்!” என்றாள்.

“ப்ச்...நாந்தான் கூட இருக்கேனல்ல?...அப்புறம் என்ன பயம்?...நான் பார்த்துக்கறேன்..நீ அமைதியா நில்லு போதும்!”

வீட்டை அடைந்ததும், ஆட்டோவை விட்டுக் கீழிறங்கி, முன்புற கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் லேடி கான்ஸ்டபிள்.

அவள் பின்னாடியே, முகமெங்கும் மிரட்சியுடன், பயந்து பயந்து செல்லும் ஆட்டுக் குட்டியைப் போல் வந்தாள் ஜோதி.

“யாரும்மா வீட்டுல?” லேடி கான்ஸ்டபிள் கத்தலாய்க் கேட்க,

ஜோதியின் தந்தை வெளியே வந்தார். வந்தவர் ஜோதியையும், அந்த பெண் போலீஸையும் பார்த்தவுடன் முகம் மாறி, வந்த வேகத்திலேயே வீட்டிற்குள் திரும்பி ஓடினார்.

அடுத்த இரண்டாவது நிமிடம், கூந்தலை அள்ளி முடிந்தபடியே வாசலுக்கு வந்தாள் ஒரு பெண்மணி.

அவளைப் பார்த்ததும், ஜோதியின் பக்கம் திரும்பி, “இது யாரு?” என்று சன்னமான குரலில் கேட்டாள் லேடி கான்ஸ்டபிள்.

“சி...த்...தி!”

“ஓ” என்ற லேடி கான்ஸ்டபிள், ஜோதியின் சித்தியை ஏற, இறங்கப் பார்த்து விட்டு, “த பாருங்கம்மா...உங்க பொண்ணை ஒரு விசாரணைக்காக நேத்திக்கு ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போயிருந்தோம்!...அங்க இன்ஸ்பெக்டர் வரத் தாமதமாயிட்டதினால...நைட் கொஞ்சம் லேட்டாயிடுச்சு!...சர்...அதுக்கு மேல வயசுப் பொண்னைத் தனியா எப்படி அனுப்பறதுன்னு நாந்தான் இவளை என்னோட வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிட்டேன்!...இவளை ராத்திரி எங்க வீட்டுல...என்னோட தங்க வெச்சிட்டு...இப்ப விடிஞ்சதும் நானே கூட்டிட்டு வந்துட்டேன்!...போதுமா?” என்று சொல்லி முடித்து விட்டு, ஜோதியைப் பார்த்து, “இந்தாம்மா ஜோதி...நீ உள்ளார போம்மா!” என்றாள் லேடி கான்ஸ்டபிள்.

ஜோதி இரண்டடி முன் நடந்து, வாசற்படியை நெருங்கி, முதல் படியில் கால் வைக்கப் போக,

“படில கால் வெச்சே...வெச்ச காலை வெட்டித் துண்டாக்கிடுவேன்!...ஓடுகாலி நாயே!...”சித்தியின் இடிக்குரல் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களை வெளியில் கொண்டு வந்து நிறுத்தி, வேடிக்கை பார்க்கச் செய்தது.

“ஏமா!...ஏம்மா அப்படி சொல்லுறே?...அதான் நான் விளக்கமாச் சொல்லிட்டேனல்ல...மறுபடியும் ஏம்மா புரியாமக் கூவுறே?” லேடி கான்ஸ்டபிள் எகிற,

“சும்மா நிறுத்துடி!...நீ பொம்பளைப் போலீஸுன்னா பயந்துடுவாங்களா?...அதுக்கெல்லாம் வேற ஆளைப் பாரு!...ராத்திரி பூராவும் எவனுக்கோ இவளை விருந்தாப் படைச்சிட்டு..அதுக்குக் காவலும் காத்திட்டு...காலைல நல்லபடி நாச்சியாட்டாம் கூட்டிட்டு வந்து எங்க தலைல கட்டிட்டுப் போகப் பார்க்கறியா?...நாங்கெல்லாம் ஒண்ணும் தெரியாத ஓட்டைக் காசுன்னு நெனச்சிட்டியா?”

சித்திக்காரியின் அந்தப் பேச்சில் சிதைந்து போனாள் லேடி கான்ஸ்டபிள். ராமாயணத் தாடகையை நேரில் பார்த்தது போலிருந்தது அவளுக்கு.

“ஏம்மா...இப்படி வாய்க்கு வந்ததையெல்லாம் பேசறே?...தெருவே வேடிக்கை பார்க்குது பாரு!...மொதல்ல அவளை வீட்டுக்குள்ளார் கூட்டிட்டுப் போய்ப் பேசு” தளராமல் வாதாடினாள் லேடி கான்ஸ்டபிள்.

“என்னது?...வீட்டுக்குள்ளாரயா?...இவளையா?....அது செரி...இவளுக்கு இனிமே இந்த வீட்டுல இடமே இல்லை!...நாங்க மான, மரியாதையோட பொழைக்கறவங்க...இவளை மாதிரி..டிக்கெட்டையெல்லாம் இங்க வெச்சிருந்தா நாளைக்கு ரோட்டுல போறவன்...வர்றவனெல்லாம் உள்ளார வந்துடுவானுக!...அப்புறம் நானும்...என் மகளும்...மானத்தோட இங்க இருக்க முடியுமா?”

ஜோதியின் சித்திக்காரி ஒவ்வொரு வார்த்தையையும் அமிலத்தில் தோய்த்தெடுத்து வீச, லேடி கான்ஸ்டபிளே அசந்து போனாள். பற்களை “நற...நற”வெனக் கடித்தபடி, “ஏம்மா...நீ பாட்டுக்கு இப்படிச் சொன்னா அந்தப் பொண்ணு எங்கதான் போவா?”

“என்னைக் கேட்டா?...ராத்திரி பூராவும் எங்க..எவன்கூட இருந்தாளோ...அங்க அவன் கூடவே போக வேண்டியதுதானே?”

“ம்ஹூம்...நீ பண்றது ரொம்ப அநியாயம்மா!” லேடி கான்ஸ்டபிள் சற்றுக் கடுப்பாகிச் சொல்ல,

“நீ பெரிய நியாயக்காரி...த்தூ...தெரியாதா உங்க பொழப்பெல்லாம்?” சித்திக்காரி கரகாட்டம் ஆடத் துவங்கும் போது,

கதவருகே ஜோதியின் தந்தை தலை தெரிந்தது.

உடனே ஜோதி அவரைப் பார்த்துக் கெஞ்சினாள். “அப்பா...அப்பா...நீங்களாவது சித்திக்குச் சொல்லுங்கப்பா...நான் எந்தத் தப்பும் செய்யலைப்பா!...என் மேல எந்தக் களங்கமும் இல்லைப்பா!...நான் இந்தப் போலீஸ்கார அக்கா வீட்டுலதாம்பா இருந்தேன்!”

அவரோ பதிலேதும் பேசாமல், தன் மனைவியைப் பார்க்க, வெறுத்துப் போன லேடி கான்ஸ்டபிள், “பெரியவரே!...இதுவும் நீங்க பெத்த பொண்ணுதானே?...இதை இப்படித் தெருவில் நிறுத்தி...கண்டபடி பேசுறாங்களே உங்க சம்சாரம்...இதைப் பார்த்திட்டு எப்படி உங்களால சும்மா இருக்க முடியுது?”

“அது செரி...அந்த மனுஷன் என்னைக்கு வாய் பேசியிருக்காரு...இன்னைக்கு மட்டும் பேச?” என்ற குரல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தின் மத்தியிலிருந்து வந்தது.

“ஏய்...போலீஸ்காரி...அங்க அவருகிட்ட என்னடி பேச்சு?...எதுவானாலும் என்கிட்டப் பேசுடி!...நகைக்கடைல பணம் திருடிட்டு போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போயிட்டு, ராத்திரி முழுசும் வீட்டுக்கு வராம எங்கியோ இருந்திட்டு வந்தவளைக் கூட்டிட்டு வந்து, “இவ கண்ணகிதான்...ஏத்துக்கங்க”ன்னு நீ கூவினா நாங்க ஏத்துக்குவோமா?..கல்யாண வயசுல எனக்கும் ஒரு பொண்ணு இருக்கா!...இப்பத்தான் அவளுக்கு ஒண்ணி ரெண்டு வரன் வர ஆரம்பிச்சிருக்கு!....இவளை உள்ளார சேர்த்தா அப்படி வர்றதுகளும் வராமப் போயிடும்!...அதனால இந்த ............யை நீயே உன் கூடக் கூட்டிட்டுப் போயிடு சாமி!”

சில நிமிடங்கள் யோசித்த அந்த லேடி கான்ஸ்டபிள். தன் மொபைல் போனை எடுத்து தொந்திப் போலீஸ்காரரை அழைத்து சன்னக் குரலில் நாசூக்காக விஷயத்தைச் சொன்னாள்.

“க்கும்...தேவையில்லாம அந்தப் பொண்ணுக்கு வக்காலத்து வாங்கினே அல்ல...இப்ப படு!” என்றார் அவர் எதிர் முனையில்.

“ப்ச்!...சார்...ஏதாச்சும் ஒரு வழி சொல்லுங்க சார்!” கெஞ்சினாள் லேடி கான்ஸ்டபிள்.

“ம்ம்ம்...த பாரு அமுதா...நீ அங்க இருக்கத்தானே...ஏதேதோ பேசிட்டிருக்காங்க!...பொண்ணை விட்டாச்சல்ல?...சட்டுன்னு கிளம்பி வந்துடு!..”

“அதெப்படி சார்...அவங்கதான் அந்தப் பொண்ணைச் சேர்த்துக்கவே மாட்டேன்னு....” அவள் சொல்லி முடிப்பதற்குள் இடையில் புகுந்த தொந்திக்காரர்,

“அட...கொஞ்சம் நேரம்...அப்படி...இப்படின்னு கத்திக்கிட்டுக் கிடப்பாங்க...அப்புறம்..தானா உள்ளார சேர்த்துக்குவாங்க!...அதனால நீ அங்க நிற்கவே வேண்டாம்...உடனே எஸ்கேப் ஆயிடு!”

போன் இணைப்பைத் துண்டித்த அந்த லேடி கான்ஸ்டபிள், “விடு...விடு”வென்று நடந்து சென்று, காத்திருந்த அந்த ஆட்டோவில் ஏறி, யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

ஆட்டோ கண்ணிலிருந்து மறைந்த அடுத்த விநாடி, “ஹூம்...போலீஸ்காரியே ஒண்ணும் பண்ண முடியாதுன்னுட்டு பறந்துட்டா!....நாம மட்டும் என்ன ப்ண்ண முடியும்?” என்று சொல்லி விட்டு வீட்டிற்குள் திரும்பி, கதவைச் சாத்தப் போன சித்தியிடம் ஓடி வந்து கதறினாள் ஜோதி.

“அய்யோ...சித்தி...என்னை நம்புங்க சித்தி!...நான் எந்தத் தப்புமே பண்ணலை சித்தி!...எனக்கு உங்களை விட்டா வேற யாரு இருக்காங்க சித்தி?...நான் எங்க போவேன் சித்தி?”

“ம்...ஊர்ல எத்தனையோ குளம்..குட்டை இருக்கு!...ரயில்வே தண்டவாளம் இருக்கு!...அங்க போயி விழுந்து சாவு!..உன்னைய மாதிரி ஜென்மமெல்லாம் இருந்து என்ன பிரயோஜனம்?”

அவள் சற்றும் இளகாமல் அதே இறுக்கத்தில் இருக்க, இனி அவளிடம் பேசிப் பயனில்லை என்று முடிவு செய்த ஜோதி, வீட்டினுள் நின்று எல்லாவற்றையும் மௌனமாய்க் கவனித்துக் கொண்டிருந்த தன் தந்தையைப் பார்த்துக் கெஞ்சினாள். “அப்பா..அப்பா...நீங்களாவது என்னை உள்ளார கூப்பிடுங்க அப்பா!”

“ஏங்க...நீங்க ஏன் இன்னும் இங்க நின்னு வேடிக்கை பார்த்திட்டிருக்கீங்க?...உள்ளார போங்க..போயி ஏதாவது வேலை இருந்தாப் பாருங்க!...” திரும்பி தன் கணவரைப் பார்த்து அதட்டினாள் சித்திக்காரி.

அவர், கண்களைத் துடைத்துக் கொண்டு, இதயத்தைக் கல்லாக்கிக் கொண்டு, மானசீகமாய்த் தன் மூத்த மனைவியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, அங்கிருந்து சென்றார்.

“அ...ப்...பா! அ...ப்...பா!” அவளது அழைப்பு வீணாகிப் போனது.

எப்படியாவது ஜோதியை அங்கிருந்து துரத்தி விட்டால், சிவந்த நிற அழகியான அவளுக்கென வந்து கொண்டிருக்கும் நல்ல வரன்களில் ஒன்றை, மாநிறத்தில் சுமாரான அழகுடன் இருக்கும் தன் மகளுக்குப் பேசி முடித்து விடலாம், என்கிற தன் எண்ணத்தைச் செயலாக்கும் விதமாய்,

“படீர்” எனக் கதவை ஓங்கிச் சாத்தினாள் சித்திக்காரி.

சொல்லிக் கொண்டிருக்கும் போதே “பொசுக்”கென்று அழ ஆரம்பித்த ஜோதியைத தடுக்க மனமின்றி, நிம்மதியாக அழ விட்டார் திவாகர்.

அழுது முடித்த பின் வேகமாக மூக்கை உறிஞ்சியவள், “என்னைய வெளிய தள்ளிக் கதவைச் சாத்தின பிறகும் கத்தினேன்...கதறினேன்...நடு ரோட்டுல உட்கார்ந்து துடித்தேன்!...வேடிக்கை பார்த்துக்கிட்டிருந்த அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்க கிட்டேயெல்லாம் உதவி கேட்டேன்!... “யாராவது ஒருத்தர் எனக்கு ரெண்டு நாள் அடைக்கலம் குடுங்க!”ன்னு பிச்சைக்காரி மாதிரி கை நீட்டினேன்!...ம்ஹூம்...என்னோட சித்திக்கு பயந்து யாருமே எனக்கு உதவ முன் வரலை!...தொண்டைத் தண்ணி வறண்டு போகும் அள்விற்குக் கத்தி ஓய்ந்து விட்டுத்தான், அங்கிருந்து நேரா ரயில்வே தண்டவாளத்திற்கு வந்தேன்!...எதற்கு?...என்னோட சாவைத் தேடி!...ஆனா...அந்தச் சாவு கூட முழுமையாக் கிடைக்கலை!” என்று ஆவேசமாய் சொன்னாள்.

“அதாவது...நான் வந்து தடுத்திட்டேன்...அப்படித்தானே?” திவாகர் குறுஞ்சிரிப்புடன் கேட்க,

“ஆமாம்!” என்று சொல்லுவது போல தலையாட்டினாள்.

“ஜோதி!...வாழ்க்கைக்கு முக்கியமான ஒரு உபாயம் கற்றுத் தர்றேன்...புரிஞ்சுக்க!... “துன்பம்தான் ஒரு மனிதனைப் பக்குவப்படுத்தும் முதல் ஆசிரியர்!...பலப்படுத்தும் உடற் பயிற்சி ஆசிரியர்!...நீ தற்கொலைக்கு முயற்சி பண்ணினது கூட ஒரு அறியாமையாலதான்...முறையான பக்குவம் இல்லாததினாலதான்!...வாழ்க்கை அப்படியொண்ணும் கஷ்டமில்லை ஜோதி!....அதே மாதிரி கஷ்டங்கள் இல்லேன்னா...அது வாழ்க்கையே இல்லை ஜோதி!...இப்ப என்னைய எடுத்துக்க!....எனக்கு அப்பா யாரு?..அம்மா யாரு?..தெரியாது!...அவங்க கருப்பா?...சிவப்பா?...உயரமா?...குட்டையா?....எதுவுமே தெரியாது!...சொந்த ஊராவது எது?ன்னு தெரியுமா?ன்னு பாத்தா அதுவும் தெரியாது!...ஆனாலும் இதுக்ககவெல்லாம் நான் இடிஞ்சு போயிட்டேனா?...இல்லையே!...எனக்குன்னு அந்த உறவுகளை நானே சிருஷ்டி பண்ணிக்கிட்டேன்!...இப்ப நான் சந்தோஷமா வாழலையா?”

“ஹூம்...நீங்க ஆம்பளை...அத்னால உறவுகளை உருவாக்கிட்டீங்க!...ஆனா....நான் பொம்பளை...எனக்கு அதெல்லாம் தெரியாது...தெரிஞ்சாலும் முடியாது!...எனக்குத் தெரிஞ்சதெல்லாம் ஒண்ணு அழறது!...அதோட எக்ஸ்ட்ரீம் முடிவா சாகறது!...அவ்வளவுதான்!”

“குருவி எப்படி ஒவ்வொரு சருகா கொண்டு வந்து கூடு கட்டும் பாரு?...அதே மாதிரிதான் நானும் ஒவ்வொரு உறவா கொண்டு வந்து இந்தக் குருவிக் கூட்டைக் கட்டியிருக்கேன்!...ஏன் இந்தக் குருவிக் கூட்டுக்குள்ளார நீயும் வரலாமே?..நீயும் ஒரு உறவாக வாழ்லாமே?...இங்க நீ இதுவரைக்கும் அனுபவிக்காத அன்பைப் பார்க்கலாம்!...பார்த்திடாத பாசத்தைப் பார்க்கலாம்!...பழகிடாத நேசத்தை பார்க்கலாம்!...” இயல்பாகவே கடுகடுப்பாய் ஒலிக்கும் திவாகரின் குரலில் ஒரு மெல்லிய ராகம் இழையோடுவது போலிருந்தது ஜோதிக்கு. அவளையுமறியாமல் அவள் முகத்தில் வெட்க ரேகைகள் ஓட, திவாகரை ஏறிட்டு பார்த்தாள்.

ஆண்மை தெறிக்கும் அந்த முகத்திலிருந்த அன்பு தெறிக்கும் கண்களில், ஒரு புள்ளியளவு காதல் பூத்திருப்பதைக் கண்டு, நாணத்தில் நெளிந்தாள்.

அமைதி அவர்களிருவர்க்கும் இடையில் வந்து அழகாய் அமர்ந்து விட,

பேச்சை மாற்ற நினைத்த திவாகர், “ம்...எனக்கு அப்பா கிடைச்ச கதையை அன்னிக்கு சொல்லிட்டு...அம்மா கிடைச்ச கதைய இன்னொரு நாள் சொல்றேன்னு சொன்னேனல்ல?”

“ஆமாம்!...சொல்லுங்க!...சொல்லுங்க!...அதைக் கேட்கத்தான் ஆவலோட காத்திட்டிருக்கேன்!...ஏன்னா...இங்க நடந்த...நடக்கற...எல்லா விஷயங்களுமே என்னை பிரமிக்க வைக்கறதாகவே இருக்கே!...அதான்!” ஜோதியின் கண்களில் ஆர்வம் மின்னியது.
(தொடரும்)​
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
Dr.பொன் கௌசல்யா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top