யாருமிங்கு அனாதையில்லை - 34 (இறுதி அத்தியாயம்)

Advertisement

pon kousalya

Active Member
யாருமிங்கு அனாதையில்லை – 34
எழுதியவர்: முனைவர். பொன்.கௌசல்யா.

அத்தியாயம் - 34


அப்போதுதான் உறக்கம் கலைந்து, நிதானமாய் வந்து வாசற் கதவைத் திறந்தார் அவர். “என்ன ஓய்?...என்னாச்சு?...மணி என்ன தெரியுமா?”பொன்னுரங்கம் கேட்டார்.

குனிந்து தெரு வெயிலைப் பார்த்த பஞ்சாயத்துத் தலைவர், “என்னது வெயில் மேலெ போய்க் கிடக்கு...மணி எட்டே கால்...எட்டரைக்குத்தான் இப்படி இருக்கும்?” என்று கேட்க,

“ஓய்...மணி...எட்டே கால்” பொன்னுரங்கம் சொன்னார்.

“என்னது?...எட்டே காலா?” என்று அதிர்ச்சியோடு சொன்னவர், வீட்டிற்குள் திரும்பி, “ஏய்..சுப்புரத்தினம் எந்திரிடி மணி எட்டேகால்” கத்திச் சொன்னார்.

கண்ணைக் கசக்கிக் கொண்டே வெளியே வந்த சுப்புரத்தினம், “என்னன்னே தெரியலைங்க அய்யா...சரியான அசதி...அதான் தூங்கிட்டேன்” என்று தர்ம சங்கடமாய்ச் சொல்ல,

“நீ மட்டுமில்லை தாயி...இன்னிக்கு இந்த ஊரே இன்னும் விழிக்காம உறக்கத்துல கிடக்கு!...தெருல மனித நடமாட்டமே இல்லை” என்று பொன்னுரங்கம் சொன்னதும் அவசரமாய் வெளியே வந்து பார்த்த பஞ்சாயத்து தலைவர் பீதியானார்.

“என்னங்க பொன்னுரங்கம்...இது புதுக் குழப்பமாயிருக்கு...இந்த மாதிரி இதுக்கு முன்னாடி நடந்ததே இல்லையே?”

“அதான் எனக்கும் புரியலை ஓய்!...சித்த முந்தி யாரோ ஒருத்தன் தெருவுல பயங்கரமா கத்திட்டு ஓடினான்...அது யார்?...எதுக்கு அப்படிக் கத்திட்டு ஓடினான்?...எதுவுமே புரியலை!...”

திரும்பி மனைவியைப் பார்த்த பஞ்சாயத்து தலைவர், “சுப்பு...சட்டையை எடுத்திட்டு வா...நானும் அய்யா கூடப் போய் என்ன?...ஏது?ன்னு பார்த்திட்டு வர்றேன்” என்றார்.

பொன்னுரங்கம் அய்யாவும், பஞ்சாயத்து தலைவரும் பெரும் குழப்பத்துடனேயே தெருவில் நடந்தனர். வழக்கமாய் சுறுசுறுப்பாக இயங்கும் தெருக்கள் கூட இன்று தூங்கி வழிந்து கொண்டிருந்தது அவர்களுக்கு ஒரு வித அச்சத்தையே கொடுத்தது. “எனக்கு விபரம் தெரிஞ்சு...இந்த எழுவத்தி அஞ்சு வருஷத்துல இப்படியொரு சம்பவத்தை நான் இப்பத்தான் பார்க்கறேன்!...ஓவ்வொரு வீட்டுக் கதவாய்ப் போய்த் தட்டித் தட்டித்தான் எழுப்பி விடணும் போலிருக்கே?” பொன்னுரங்கம் சொல்ல,

“ம்ம்ம்...அதையும் செஞ்சிடுவோம்” என்ற பஞ்சாயத்துத் தலைவர் கண்ணில் பட்ட ஒரு வீட்டை நோக்கிச் சென்று கதவைத் தட்ட, நிதானமாய்க் கதவைத் திறந்த ஒரு நடுத்தர வயதுக்காரர், “என்ன பஞ்சாயத்துத் தலைவரே?...காலங்காத்தாலே?” கேட்க,

“மணி எட்டே முக்கால்” என்று அவர் சொன்னதும் பேய் முழி முழித்தான் அவன். “என்னங்க அய்யா சொல்றீங்கய்யா?” என்றபடி அவன் அச்சத்தோடு தெருவைப் பார்த்தான்.

“பயப்படாத...நீ மட்டுமில்லை...இன்னிக்கு ஏனோ ஊரே இப்படித்தான் இருக்கு”

தொடர்ந்து பொன்னுரங்கமும், பஞ்சாயத்துத் தலைவரும் பல வீடுகளின் கதவுகளைத் தட்டி மக்களை எழுப்பி விட்டனர். அவர்களுக்கு உதவும் விதமாய் கணி விழித்த மற்றவர்களும், திறக்கப்படாத வீடுகளின் கதவுகளைத் தட்டித் திறக்க வைத்தனர். ஒன்பதரை மணி வாக்கில் அந்த ஊரின் எல்லா வீட்டுக் கதவுகளும் திறக்கப்பட, எல்லோரும் ஒரே காரணத்தைச் சொன்னார்கள். “என்னன்னே தெரியலை...உடம்பெல்லாம் ஒரே அசதி...எந்திரிக்கவே முடியலை”

“நிச்சயமா இதுக்குப் பின்னாடி ஏதோ இருக்கு...அதனாலதான் இப்படி நடந்திருக்கு...வாங்க எல்லோரும் நம்ம மலைக் கோயிலுக்குப் போய்...அங்க என்ன நிலைமை?ன்னு பார்த்திட்டு வருவோம்” சொல்லி விட்டு பொன்னுரங்கம் முன்னே நடக்க ஊர் மக்கள் அவர் பின்னே திரளாகச் சென்றனர்.
பத்து நிமிட நடைக்குப் பிறகு மலையடிவாரத்தை அடைந்தவர்கள் தங்களையுமறியாமல், “அய்யோ...ஆத்தா...” என்று கத்தி விட்டனர்.

பொன்னுரங்கம் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு நிற்க, பஞ்சாயத்து தலைவர் நிற்க முடியாமல் தள்ளாடினார்.

மலை மேலிருந்த பச்சை நாயகி அம்மன் சன்னதி தூள் தூளாகி ஒரு மண் குவியலாய்க் கிடந்தது.

தங்கள் குல தெய்வத்தின் கோயில் இடிந்து தரை மட்டமாகிக் கிடப்பதைப் பார்த்துப் பலர் வாய் விட்டே அழுதனர். கூட்டத்தின் பின் புறமிருந்து வேக வேகமாய் வந்த பூக்கடை பரமசிவம், “பொன்னுரங்கம் அய்யா...நான் ஒண்ணு சொல்லணும்” என்றான்.

“என்ன பரமசிவம்...என்ன விஷயம்?...சொல்லு!” பரபரத்தார் பொன்னுரங்கம்.

“வந்து...எங்க வீட்டுல...எங்கப்பனைப் பெத்த ஆத்தா....நூத்துக் கிழவியொண்ணு இருக்கல்ல?”

“ஆமாம்...செல்லம்மா கெழவி!...எங்க ஆத்தாவுக்கு அந்தக் காலத்துல தோழி!..ஹூம் எங்க ஆத்தா செத்துப் போய் பொதைச்ச இடத்துல புல்லு மொளைச்சு...புளிய மரம் நிக்குது...இந்தக் கெழவி இன்னும் உசுரோட இருக்குது!..” என்றார் பொன்னுரங்கம்.

“அய்யா...போன வாரத்திலிருந்தே இந்தக் கெழவி பொலம்பிக்கிடே இருந்திச்சுங்க அய்யா...” பரமசிவம் தயக்கத்தோடு சொல்ல, “அட...என்ன பொலம்புச்சு?...விபரத்தைச் சொல்லு...”பஞ்சாயத்துத் தலைவர் உரக்க்க் கேட்டார்.

“ஊர் சனங்களைக் காப்பாத்த வந்திருக்கறவனை வெரட்டாதீங்கடா” ன்னு சதா சொல்லிக்கிட்டே இருந்திச்சு!....எனக்கு அதைக் கேட்டுக் கோபம்தான் வந்திச்சு!... “அதெப்படி...அம்மன் கோயிலை மறிச்சுக்கிட்டு நம்ம சாதி சனங்களை வரக்கூடாது சொல்றவனை வெரட்டாம அவனுக்கு விருந்தா வைக்க முடியும்?”ன்னு நான் திருப்பிச் சத்தம் போட்டேன்!”

“இதை ஏன் நீ எங்க கிட்ட சொல்லலை?”

“எப்படிங்க அய்யா சொல்லுவேன்?...அந்தப் பைத்தியக்காரன் நம்ம சனத்து ஆளுங்களையெல்லாம் அடிக்கறான்...செல்லக்கிளியை என்னமோ பண்ணி உட்கார வெச்சிட்டான்...பூசாரியை வெரட்டறான்...கடைசில போலீஸுகாரங்களையே அடிச்சுப் போட்டான்!...இப்படியெல்லாம் நடந்திட்டிருக்கும் போது நான் உங்க கிட்ட வந்து, “அவனை வெரட்ட வேண்டாம்...அவன் நம்ம சனங்களைக் காப்பாத்த வந்தவனாம்...அப்படின்னு எங்க ஆத்தா சொல்லுது”ன்னு சொன்னா நீங்க என்ன சொல்லுவீங்க?.... “அந்தக் கெழவிக்கு கிறுக்குப் பிடிச்சிருச்சு போலிருக்கு”ன்னுதானே சொல்லுவீங்க?...அதனாலதான் நான் யாருகிட்டேயும் சொல்லலை!”

பொன்னுரங்கமும், பஞ்சாயத்துத் தலைவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். சில நிமிடங்களுக்குப் பிறகு, “எல்லோரும் வாங்க....மேலே போய் அந்தப் பைத்தியக்காரனுக்கு என்ன ஆச்சு?ன்னு பார்ப்போம்” பொன்னுரங்கம் முன் சென்றார். மலை மேலே குவியலாய்க் கிடந்த அம்மன் சன்னதியை கண்களில் நீர் மல்கப் பார்த்துப் பார்த்துக் குமைந்தனர் ஊர் மக்கள்.

“அந்தப் பைத்தியக்காரன் கோபுரத்து மேலேதான் நின்னுட்டிருந்தான்...அநேகமா அவன் இந்த மண் குவியலுக்குள்ளாரதான் கிடப்பான்” பஞ்சாயத்து தலைவர் சொல்ல,

“அங்க பாருங்க...அங்க பாருங்க...” யாரோ ஒருவன் கத்தினான். எல்லோரும் அவன் கை காட்டிய திசையைப் பார்க்க, அங்கே அந்தப் பைத்தியக்காரன் உடலெங்கும் ரத்தக் காயங்களுடன் ஒரு பாறையைக் கட்டிக் கொண்டு குப்புறக் கிடந்தான். அவன் கையிலிருந்த ஈட்டி நிலத்தில் குத்தப்பட்டு நேராக நிமிர்ந்து நின்று கொண்டிருந்தது.
எல்லோரும் வேக வேகமாய் அவனருகே சென்று எட்டி நின்று பார்க்க, பொன்னுரங்கம் மட்டும் அருகே சென்று குனிந்து பார்த்தார். “த்சொ...த்சொ...செத்துப் போயிட்டான்” என்றவர் அப்போதுதான் கூர்ந்து பார்த்தார், அவன் இறுகக் கட்டிக் கொண்டிருந்தது பச்சை நாயகி அம்மன் சிலை. மெய் சிலிர்த்துப் போனார் பொன்னுரங்கம். அவர் மூளை பரபரவென்று சிந்தித்தது. திரும்பி பரமசிவத்தைப் பார்த்து, “டேய்...பரமு...உங்காத்தா சொன்ன மாதிரி...இவன் இந்த ஊர் சனங்களைக் காப்பாத்த வந்தவன்தாண்டா” என்றார் உரத்த குரலில்.

“அய்யா...என்ன சொல்றீங்க?”

“யோசிச்சுப் பாருங்க....இந்தப் பைத்தியக்காரன் இங்க வராமலே இருந்திருந்தா...பௌர்ணமி பூஜை எப்படி நடந்திருக்கும்?....அன்னிக்கு நம்ம சாதி சனம் எல்லோரும் இங்க....இந்த மலை மேலேதான் இருந்து பௌர்ணமி பூஜையை ஆஹான்னு விடிய விடியக் கொண்டாடிட்டு இருந்திருப்போம்!...விடியக் காத்தால நாலரை மணிக்கு இடிச்சுதே ஒரு பேரிடி...அது இந்த மலை மேலே...அம்மன் சன்னதி மேலே இறங்கியிருக்கு!...ஒருவேளை அந்தச் சமயத்துல அது நடந்திருந்தா.....” தன் பேச்சை நிறுத்தி விட்டு பொன்னுரங்கம் எல்லோரையும் பார்க்க, எல்லோரும் வாயைப் பிளந்து உள்ளங்கையால் மூடிக் கொண்டனர்.

“மொத்த ஜனங்களும் கூண்டோட கைலாசம் போயிருப்போமா?..” கூட்டத்தைப் பார்த்துக் கேட்டார்.

“ஆமாங்க அய்யா...” கோரஸாய்ச் சொன்னார்கள்.

“இந்தப் பரமசிவத்தோட ஆத்தாக்காரி...நூத்துக் கெழவி சொன்னது சரியாய்ப் போயிடுச்சு பார்த்தீங்களா?...ஆக...வந்தவன் பைத்தியக்காரன் இல்லை....நம்ம குலத்தைக் காக்க ஆண்டவனால் அனுப்பி வைக்கப்பட்டவன்!...இவன் நம்ம குலத்தை மட்டும் காப்பாத்தலை...அங்க பாருங்க...நம்ம பச்சை நாயகி அம்மன் சிலையையும் சேதம் ஆகாம காப்பாத்தி வெச்சிருக்கான்!” அவனுக்கடியில் கை காட்டி பொன்னுரங்கம் சொல்ல, எல்லோரும் குனிந்து பார்த்து வியந்தனர்.

பஞ்சாயத்து தலைவர் சொன்னார், “இவனோட சவத்தை என்ன பண்ணலாம்?”ங்கறதையும் பரமசிவத்தோட ஆத்தா கிட்டே போய்க் கேட்டு அது சொல்றபடி செஞ்சிடுவோம்!” எல்லோரும் அதே வேகத்தில் மலை விட்டிறங்கி பரமசிவத்தின் வீட்டை நோக்கிச் சென்றனர். அந்தக் கூட்டத்தைப் பார்த்ததுமே கிழவி கேட்டாள், “என்னாங்கடா...நான் சொன்னதை ஒத்துக்கறீங்களா?”

“ஒத்துக்கறோம் தாயி...அடுத்து என்ன செய்யறது?ன்னு நீயே சொல்லிடு தாயி” என்றார் பொன்னுரங்கம்.

“நம்ம சாதி சனத்தோட சடங்குகளையே பண்ணி அவனை அடக்கம் பண்ணுங்கடா!...எவ்வளவு சீக்கிரம் முடியுமோ...அவ்வளவு சீக்கிரத்துல மலை மேலே கோயில் கட்டி...அதே அம்மன் சிலையை அங்க வைங்கடா!”

“அப்படியே செஞ்சிடறோம் தாயி”

“அது மட்டும் போதாதுடா...அடிவாரத்துல மலைப் படிகள் தொடங்கற இடத்துல...அந்தப் பைத்தியக்காரனுக்கு ஒரு சிலை செஞ்சு வைங்கடா...இனிமே மலையேறப் போகறதுக்கு முன்னாடி அந்தச் சிலையை கற்பூரம் கொளுத்திக் கும்பிட்டுட்டு ஏறுங்கடா....”

ஒட்டு மொத்தக் கூட்டமும் மறு பேச்சின்றி தலையாட்டியது.
*****​
இன்றும் அந்த மலைக் கோவில் அடிவாரத்தில்...மலைப் படிகளின் துவக்கத்தில் அந்தப் பைத்தியக்காரன் சிலை இருந்து கொண்டுதானிருக்கின்றது. மலையேறும் மக்கள் தவறாமல் அந்தச் சிலைக்கு சூடம் கொளுத்தி விட்டுப் போகும் வழக்கமும் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றது.
(முற்றும்)​
 

banumathi jayaraman

Well-Known Member
மிகவும் அருமையான நாவல், பொன் கௌசல்யா டியர்
நீங்க வைச்ச டுவிஸ்ட்டை கடைசி வரை கண்டுபிடிக்கவே முடியலை
ஆனால் அந்த பைத்தியக்காரன் யாரு?
அவன் எதுக்கு இந்த ஊருக்கு வந்தான்?
அவன் இதே ஊர்க்காரனா?
தன் மனைவியுடன் தனசேகர் நல்லபடியா வாழ்ந்தானா?
முரளி சொக்கு ஜோதி என்னவானாங்க?
முரளிக்கு கல்யாணம் ஆச்சா?
இப்படி பல கேள்விகளுக்கு விடையில்லையே
 
Last edited:

Janavi

Well-Known Member
மிகவும் அருமையான நாவல், பொன் கௌசல்யா டியர்
நீங்க வைச்ச டுவிஸ்ட்டை கடைசி வரை கண்டுபிடிக்கவே முடியலை
ஆனால் அந்த பைத்தியக்காரன் யாரு?
அவன் எதுக்கு இந்த ஊருக்கு வந்தான்?
அவன் இதே ஊர்க்காரனா?
தன் மனைவியுடன் தனசேகர் நல்லபடியா வாழ்ந்தானா?
முரளி சொக்கு ஜோதி என்னவானாங்க?
முரளிக்கு கல்யாணம் ஆச்சா?
இப்படி பல கேள்விகளுக்கு விடையில்லையே
Same feel...
 

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
நிறைய விஷயங்கள் முழுசா
முடியாத மாதிரி இருக்கு
இன்னும் ஒரு பதிவு போடலாம்ப்பா
ரொம்ப நல்லா இருந்தது கதை
 

தரணி

Well-Known Member
விருவிருப்பான கதை... நிறைய கிளை கதை.... ஆனா எதுவும் சரிய முடியாம அங்க அங்க நின்ன மாதிரி இருக்கு....

பைத்தியக்காரன் யாரு செல்லகிளிக்கு என்ன ஆச்சு.. திவாகர் என்ன பண்ணார் கடைசியில்.... அவரோட கருத்து இதுல என்ன.... ஜோதி தனசேகர் முரளி சொக்கு எல்லாம் எங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top