யாருமிங்கு அனாதையில்லை - 33

pon kousalya

Active Member
யாருமிங்கு அனாதையில்லை – 33
எழுதியவர்: முனைவர். பொன்.கௌசல்யா.

அத்தியாயம் - 33


ஒரு வழியாய் அவர்கள் அனைவரும் உச்சிக்கு வந்து சேர்ந்த போது, சன்னதியின் முகப்பிலேயே சூலாயுதத்தைக் குத்துவது போல் நீட்டி, அவர்களைத் தடுத்தான் அந்தப் பைத்தியக்காரன். பயந்து போன மக்கள் காவலர்கள் முதுகிற்குப் பின்னால் ஒளிய, காவலர்கள் தங்கள் கையிலுள்ள லத்தியால் அவனை அடிக்கப் பாய்ந்தனர்.

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அந்த ஐந்து காவலர்களின் கையிலிருந்த லத்திகள் காற்றில் பறந்து போய் எங்கோ பாறையிடுக்கில் விழுந்தன.

ஐந்து பேருமாய்ச் சேர்ந்து அவனை அமுக்கி விடும் எண்ணத்தில் காவலர்கள் அவனைச் சூழ்ந்து நிற்க, சற்றும் யோசிக்காமல் சூலாயுதத்தைத் திருப்பி அவர்களை அடிக்கத் துவங்கினான் அந்தப் பைத்தியக்காரன். இடுப்பு.....கை...கால்...முதுகு...என சகல பாகங்களிலும் சரமாரியாய் அடி விழ சில நிமிடங்கள் கூடத் தாக்குப் பிடிக்க முடியாமல் அந்தக் காவலர்கள் ஐந்து பேரும் சீக்கிரத்திலேயே தரையில் விழுந்தனர். விழுந்தவர்கள் எழக் கூட நேரம் தராமல், குனிந்து அவர்கள் ஒவ்வொருவரையும் சட்டையைப் பிடித்து ஒரே கையில் தூக்கி படிக்கட்டுகளில் வீசினான். ஒருவர் மேல் ஒருவர் மூட்டை போல விழுந்து உருண்ட காவலர்கள் சிரமப்பட்டு எழுந்து படிக்கட்டுகளில் இறங்கி ஓடினர்.

காவலுக்கு வந்தவர்களே கலங்கி ஓடும் போது, உடன் வந்த மக்கள் மட்டும் நிற்பார்களா...என்ன?...அவர்களும் இறங்கி ஓட ஆரம்பித்தனர். சிலர் மட்டும் ஆவேசம் கொண்டு அந்தப் பைத்தியக்காரன் யுத்தம் புரியத் தயாராக, கண்களை உருட்டி அவர்களைக் கீழே போகச் சொல்லி ஜாடை காட்டினான் அவன்.

“வருஷா வருஷம் தவறாமக் கொண்டாடுற இந்தப் பௌர்ணமி பூஜை போயும் போயும் இந்தப் பைத்தியக்காரனால் நிக்கணுமா?..ம்ஹூம் கூடாது!...கூடாது” தன் கையிலிருந்த பெரிய குத்து விளக்கையே ஆயுதமாய் ஏந்திக் கொண்டு முன்னேறினான் பரமு.

“டேய் பரமு...ஆனது ஆகட்டும்!ன்னு அவன் தலைல அந்தக் குத்து விளக்காலேயே ஒண்ணு போடு...” பின்னாலிருந்து சொல்லிக் கொண்டே பரமுவுடன் முன்னேறினான் ஆறுச்சாமி.

அவர்களிருவரும் தன்னைத் தாக்கத்தான் வருகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்ட பைத்தியக்காரன், சட்டென்று திரும்பி நடந்தான். அவ்வாறு நடக்கும் போது அவன் பார்வை அடிக்கடி வானத்தின் மீது படிந்து படிந்து திரும்பியது.

“பரமு!...பார்த்தியா?...பயந்திட்டான் பார்த்தியா?” ஆறுச்சாமி சொல்ல,

“அப்படின்னா...நாம எல்லோருமாய்ச் சேர்ந்து அவனைத் தாக்கினா நிச்சயம் விழுந்திடுவான்!” என்று சொல்லி வாயைக் கூட மூடவில்லை அந்தப் பரமு, திரும்பி நடந்த அந்தப் பைத்தியக்காரன் மின்னல் வேகத்தில் வந்து பரமுவின் குரல் வளையைப் பற்றி அவனை அப்படியே மேலே தூக்கினான். கண்கள் செருக, ஹீனக் குரலில் கத்திய பரமுவை அப்படியே தூக்கிப் பாறை மேல் எறிந்தான் பைத்தியக்காரன். “படீர்”ரென்று பாறை மேல் மோதியதில் மண்டை உடைந்து ரத்தம் கொப்பளிக்க, தட்டுத் தடுமாறி எழுந்து, கற் பாறைகளுக்குள் ஓடினான் பரமு. இதற்கு மேலும் அங்கு நின்றால் உயிருக்கு உத்திரவாதமில்லை, என்பதை உணர்ந்து, எஞ்சியிருந்தோரும் ஓட்டமெடுத்தனர்.

வானம் விடாமல் பொழிந்து கொண்டேயிருந்தது. எல்லோரும் சென்றதும், மலை உச்சியில் அம்மன் சன்னதிக்கு மேலே இருந்த சிறிய கோபுரத்தின் மீது ஏறி நின்று கொண்டான் அந்தப் பைத்தியக்காரன்.


காயம் பட்டுத் தலை தெறிக்க ஓடி வந்த காவலர்களைப் பார்த்ததும் ஆக்ரோஷமானார் இன்ஸ்பெக்டர் திவாகர், வாய் வரை வந்து விட்ட கெட்ட வார்த்தையை அடக்கிக் கொண்டு, “இப்பவே போய் அவனைச் சுட்டு வீழ்த்திட்டுத்தான் மறு வேலை” வெறியோடு புறப்பட்ட இன்ஸ்பெக்டரின் எதிரே ரத்தம் வழியும் மண்டையைப் பிடித்துக் கொண்டே வந்தான் பரமு.

“ஓ...காட்” என்ற இன்ஸ்பெக்டர் பரமுவின் பின்னால் ஓடி வந்த மக்களைப் பார்த்து “என்னாச்சுப்பா...என்ன நடக்குது மேலே?”

“இன்ஸ்பெக்டரய்யா...இந்த வருஷ பௌர்ணமி பூஜை நடக்கவே நடக்காது!...அந்த ராட்சஸன் குத்தீட்டியை வெச்சுக்கிட்டு தாறுமாறாக் குதிச்சிட்டிருக்கான்!...போனா...பொணம் விழுகறது நிச்சயம்” ஓடி வந்தவர்களில் ஒருவன் சொல்ல,

“அய்யோ...அங்க பாருங்க...அங்க பாருங்க” இன்னொருவன் கத்தினான்.

எல்லோரும் அவன் கை காட்டிய திசையில் திரும்பி, அண்ணாந்து பார்த்து அதிர்ந்தனர். மலை மேலே, பச்சை நாயகி அம்மன் கோவில் கோபுரத்தின் மேலே, கையில் சூலாயுதத்தைப் பிடித்துக் கொண்டு அந்தப் பைத்தியக்காரன் ஆவேசமாய் நின்றிருந்தான். அவன் பார்வை வானத்தையே வெறித்திருந்தது.

அப்போது இன்ஸ்பெக்டரை நெருங்கி வந்த பொன்னுரங்கமும், பஞ்சாயத்துத் தலைவரும், “இன்ஸ்பெக்டரய்யா...அம்பது வருஷமா எந்தத் தடையுமில்லாமல் நடந்திட்டிருக்கற எங்க குல தெய்வத்தோட பௌர்ணமி பூஜை இந்த வருஷம் நடக்காம போயிடும் போலிருக்கே சார்?” என்று ஒரே குரலில் சொல்ல,

டென்ஷனானார் இன்ஸ்பெக்டர் திவாகர், “கமிஷனர் கிட்ட அனுமதி வாங்கி...அவனை சுட்டுத் தள்ளறேன்!னு சொன்னாலும்...ஒத்துக்க மாட்டேங்கறீங்க!...“எங்க குல தெய்வம் கோயில்ல ரத்தக்கறை படிஞ்சிடும்...சன்னதில சவம் விழுந்தா எத்தனை பரிகாரம் பண்ணினாலும் அந்தப் பாவக்கறை அழியாது”ன்னு செண்டிமென்ட் வேற பேசறீங்க....நான் என்னதான் பண்றது?...நீங்களே சொல்லுங்க!” இரண்டு கைகளையும் வேகமாய் ஆட்டி உரக்கச் சொன்னார்.

மாலை நழுவி இரவு எட்டிப் பார்த்த நிலையிலும் மழை விட்ட பாடில்லை. அடிவார மரத்தடியில் நின்று கொண்டிருந்தவர்கள் சுழற்றியடிக்கும் பேய்க் காற்றுக்குப் பயந்து மண்டபத்தினுள் வந்து ஒண்டிக் கொண்டனர்.

“இங்க...அடிவாரத்திலேயே காத்து இந்தப் போடு போடுது...அங்க மலை மேலே இதை விட வேகமாய்ப் பிச்சு உதறிக்கிட்டிருக்கும்...அப்படியிருக்கும் போது அந்தப் பைத்தியக்காரன் எப்படி கோபுரத்து மேலே எந்தப் பிடிப்பும் இல்லாம அத்துவானத்துல நிக்கறான்?” பஞ்சாயத்துத் தலைவர் தன் சந்தேகத்தைக் கேட்க, அப்போதுதான் இன்ஸ்பெக்டரே யோசித்தார், “உண்மைதான்...அவனால் எப்படி அந்தக் கோபுரத்து மேலே எதையும் பிடிக்காம...காத்துல நிக்க முடியுது?...பயங்கரமா டிரெய்னிங் எடுத்திட்டு வந்திருப்பான் போலிருக்கே?”

அந்த மலைப் பகுதியையே வெளிச்சக் காடாக்கி அடங்கியது ஒரு மின்னல்.

“இடிக்கப் போகுதப்பா..பொம்பளைப் புள்ளைங்கெல்லாம் காதை பொத்திக்கங்க!” யாரோ ஒரு பெரியவர் கத்தினார். மொத்தப் பெண்களும், கூடவே சில ஆண்களும் காதைப் பொத்திக் கொண்டனர். “படார்....” என இடித்து நின்றதும், எல்லோரும் காதிலிருந்து கையை எடுத்துக் கொண்டனர்.

“பக்கத்திலேதான் எங்கியோ இந்த இடி விழுந்திருக்கணும்” பொன்னுரங்கம் யூகித்துச் சொன்னார்.

நேரம் ஓடிக் கொண்டேயிருந்ததே தவிர, மழையும் நிற்கவில்லை....மலை மேலும் மக்கள் போக முடியவில்லை...நிலாவும் வரவில்லை...பௌர்ணமிப் பொங்கலும் நிறைவேற்றப்படவில்லை. “அவ்வளவுதான்...இந்த வருஷப் பௌர்ணமிப் பொங்கல் அவ்வளவுதான்!” ஒரு பெண்மணி சத்தமாய்ச் சொல்ல,

அந்த விநாடியில் இன்ஸ்பெக்டர் திவாகரின் மனத்தில் அந்த ஐடியா உதித்தது. “இன்னிக்குப் பௌர்ணமி நாள் என்பது உண்மையான உண்மை!...இந்த நாள்ல எங்க போய் பொங்கல் வெச்சா என்ன?...மலை மேலே போய் பொங்கல் வெச்சாத்தான் அது பௌர்ணமிப் பொங்கலாகுமா?....இதோ மலையடிவாரத்துல இருக்கற இந்த மண்டபத்துல வெச்சாலும் அது பௌர்ணமிப் பொங்கல்தானே?”

தன் எண்ணத்தை அவர் பொன்னுரங்கம் அய்யாவிடம் சொல்ல, “அம்பது வருஷப் பழக்கம்...மலை உச்சில பச்சை நாயகி அம்மன் சன்னதிக்கு எதிர்ல...வானத்துல “பளீர்”ன்னு ஜொலிக்கற நிலா வெளிச்சத்துல பொங்கல் வைக்கறது!...ஹும்...அது இந்தப் பைத்தியக்காரனாலே கெடணுமா?” தன் அங்கலாய்ப்பை வெளியிட்டார் அவர்.

சில நிமிடங்களில் அவரே தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டு அந்த வழி முறையை பஞ்சாயத்துத் தலைவரிடம் சொன்னார். அவர் அதை சில மூத்தவர்களிடம் சொல்லிக் கலந்தாலோசித்தார். இறுதித் தீர்மானத்தை பொன்னுரங்கம் ஒப்பித்தார். “எப்படியும் இன்னிக்கு நிலா வருவதற்கான சாத்தியக்கூறே இல்லை!...நாம சிரமப்பட்டு மலை மேலே போய்ப் பொங்கல் வெச்சாலும் நிலாவையோ...நிலா வெளிச்சத்தையோ பார்க்காமல்தான் பொங்கல் வைக்க முடியும்!...அதனால...இந்த வருஷம் இங்கே...இந்த மண்டபத்திலேயே பௌர்ணமிப் பொங்கலை வெச்சிடலாம்!னு நாங்க முடிவு பண்ணியிருக்கோம்!...அதனால...உங்க ஜோடனைகளை இங்கேயே பண்ணுங்க...இதோ இந்த மண்டபத்துல....இந்தக் கடைசியிலிருந்து அந்தக் கடைசி வரைக்கும் வரிசையா பொங்கல் வைக்கலாம்!...ஆரம்பிங்க...” என்றார் ஒரு அறிவிப்பாய்.

முடங்கிப் போய் மூலையில் சுருண்டு படுத்துக் கிடந்த மேளக்காரர்கள் அவசர அவசரமாய் எழுப்பப்பட்டனர். மண்டபத்தில் கல்தூண்களில் தோரணங்கள் ஏறின. மூன்று மூன்று கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தற்காலிக அடுப்புகள் வரிசை கட்டத் துவங்கின.

அரிசி மூட்டைகளும், மளிகைப் பொருள் மூட்டைகளும் அவிழ்க்கப்பட்டன. ஒரு கல்தூணிலிருந்த பச்சை நாயகி அம்மன் உருவமே சாமி சிலையாகக் கொள்ளப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. பூஜைப் பொருட்கள் அடங்கிய மூட்டை பூசாரியிடம் அனுப்பப் பட, அவர் பூஜை ஏற்பாடுகளில் துரிதமானார். ஊதுபத்தி...சந்தன....விபூதி....கற்பூர வாசனை அந்தப் பகுதிக் காற்றில் கலக்க அந்த இடமே சில நிமிடங்களில் பக்திக் கூடமாயிற்று.

இந்த வருட பௌர்ணமிப் பூஜை நடக்குமோ?...நடக்காதோ?...என்கிற ஐயப்பாட்டில் தவித்துக் கொண்டிருந்த நாட்டாமையின் மனதில் முழுத் திருப்தி ஏற்பட்டது. அவரும் ஊர் பெரியவர்களும் உற்சாகமாய் ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டனர்.

அவர்கள் எல்லோரின் விருப்பப்படியே சரியாக இரவு பனிரெண்டு மணியளவில் வரிசை கட்டியிருந்த எல்லாப் பானைகளும் பொங்கி விட, பெண்களின் குலவைச் சத்தம் ஓங்கி ஒலித்தது. மேளக்காரர்கள் உச்சஸ்தாயில் முழக்கிக் கொண்டிருந்தனர். ஓன்றிரண்டு பெண்களுக்கு அருள் வந்து விட சிலர் அவர்களைச் சூழ்ந்து நின்று கேள்விகளைக் கேட்டு பதிலை வாங்கிக் கொண்டிருந்தனர்.

இவர் வீட்டுப் பொங்கல் இது, அவர் வீட்டுப் பொங்கல் அது, என்கிற வித்தியாசம் இன்றி எல்லா பானைகளும் ஓரிடத்தில் வைக்கப்பட்டு, அதிலிருந்து எடுக்கப்பட்டு எல்லோருக்கும் பிரசாதமாய் வழங்கப்பட்டது. பக்திப் பணிவோடு, பரவச நெகிழ்வோடு பொங்கலை உண்டு மகிழ்ந்து உற்சாகத்தில் மிதந்தனர் அவ்வூர் மக்கள்.

இரவு இரண்டு மணி வரை தங்களுடய வைபவங்களைத் தொடர்ந்து நிகழ்த்தி விட்டு, இல்லம் திரும்பிய அந்த மக்களுக்கு எப்படித் தெரியும் மறு நாளைய விடியல் ஒரு மோ........சமான விடியல் என்பது?.

அதிகாலை நாலரை மணி வாக்கில், அந்த ஊரையே புரட்டிப் போடும் ஓசையுடன் வானம் வெடித்த அந்த இடியோசைக்கு கிட்டத்தட்ட சிவகிரி கிராமத்தின் எல்லா வீடுகளிலும், எல்லா மக்களும், துள்ளியெழுந்து உடல் நடுங்கினர்.

தங்கள் வீடுகள் ஒரு கணம் குலுங்கியதை மூத்தோர்கள் உணர்ந்தனர். இளம் வயதினர் இது வரையில் அனுபவித்திராத ஒரு பேரதிர்வை திகிலுடன் அனுபவித்தனர். பல வீடுகளில் குழந்தைகள் வீறிட்டழுதன.

தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த மாடுகள் மிரண்டு போய் தாறுமாறாய்க் கத்தின. தெரு நாய்கள் விகாரமாய்க் கத்திக் கொண்டு எல்லாத் தெருவிற்குள்ளும் புகுந்து புகுந்து ஓடின.

திடுக்கிட்டு எழுந்த பொன்னுரங்கத்தின் அடிவயிற்றில் இனம் புரியாத ஒரு பீதி வந்து உட்கார்ந்தது. “அம்மா...பச்சை நாயகித் தாயே...இந்த இடியோசை ஏதோவொரு விபரீதத்தின் விலாசம்ன்னு என்னோட மனசு சொல்லுது தாயே!...வேண்டாம் தாயே...நானோ...இந்த ஊர் ஜனங்களோ...அறிந்தோ அறியாமலோ...ஏதாவதொரு தவறு செஞ்சிருந்தா எங்களை மன்னிச்சிடு தாயே....ஊரை விபரீதக் களமாக்கி வேடிக்கை பார்க்காதே தாயே” குல தெய்வத்திடம் மௌனமாய்க் கெஞ்சினார்.

வழக்கமாய் அதிகாலை ஐந்தரை மணிக்கே சுறுசுறுப்பாகிவிடும் அந்த கிராமம், இன்று ஏழு மணியாகியும் உறக்கத்திலேயே கிடந்தது. எந்த வீட்டுக் கதவும் திறக்கப்படவில்லை. தெருவில் மனித நடமாட்டமே துவங்கவில்லை. வயலுக்குப் போகும் விவசாயப் பணியாளர்கள் வீட்டிலேயே படுத்துக் கிடந்தனர்.

ஆறு மணிக்கே டீ பாய்லர் ஆவி விட்டுக் கொண்டிருக்கும் ஆனந்தன் டீ ஸ்டாலின் முன் புறக் கதவு மூடியேயிருந்தது.

ஏதோவொரு அசதி...அந்த சிவகிரி கிராம மக்களை படுக்கையை விட்டு எழாதபடி அமுக்கிப் போட்டிருந்தது. மனிதர்களுக்குத்தான் அசதி ஏற்படுமென்றால், அட...ஊருக்குமா அசதி ஏற்படும்?... கிராமத்தின் ஒவ்வொரு தெருவும், ஒவ்வொரு நாற்சந்திப்பும், இன்று ஏழரை மணியாகியும் மயான அமைதியில் ஆழந்திருந்தன.

சரியாக எட்டு மணியளவில் யாரோ ஒருத்தன் தெருவில் விகாரமாக அடித் தொண்டையில் கத்திக் கொண்டு ஓடினான். அந்தக் கத்தலில் மரண பீதி நிறைந்திருந்தது.

பொன்னுரங்கத்தின் மனைவி அந்தக் கத்தலில்தான் கண் விழித்தாள். “என்னங்க இது?...யாருங்க இப்படிக் கத்திட்டுப் போறது?...என்னாச்சுங்க?” கேட்டவாறே அலமாரியிலிருந்த சிறிய டைம் பீஸைப் பார்த்தவள் தன்னை மறந்து கூவினாள். “அய்யய்யோ...மணி எட்டு காட்டுது...இவ்வளவு நேரமாவா நான் தூங்கிட்டேன்?” அதைச் சொல்லவே அவளுக்கு வெட்கமாயிருந்தது. காலை ஐந்து மணிகே எழுந்து வாசல் பெருக்கிக் கோலமிட்டு, மாட்டுத் தொழுவத்தை சுத்தப்படுத்தி, பால் கறந்து, நாட்டாமைக்கு சுடச் சுட காஃபி போட்டுக் கொண்டு வந்து கொடுத்து விட்டு சமையல் வேலையில் புகுந்து சரியாக ஏழரை மணிக்குள் எல்லாவற்றையும் முடித்து விடும் சுறுசுறுப்புத் தேனி அவள்.

“நான் ஏன் இவ்வளவு நேரம் தூங்கினேன்?...எனக்கு என்னாச்சு?” கணவனைத் தொட்டு உலுக்கிக் கேட்டாள்.

“ஏம்மா... விடியக் காத்தால நாலு...நாலரை மணிக்கு ஒரு பெரிய இடி இடிச்சுதே?...அது உனக்குக் கேட்கலையா?”

“கேட்டிச்சுங்க...நான் துள்ளி விழுந்து முழிச்சிட்டேன்...ஆனா அதுக்கப்புறம் அசதின்னா அசதி அப்படியொரு அசதி...அதனால எனக்கே தெரியாம தூங்கிட்டேன்”

“சரி...இரு...நான் வெளிய போய் என்ன?...ஏது?ன்னு விசாரிச்சிட்டு வர்றேன்” சொல்லியவாறே எழுந்து சட்டையை அணிந்து கொண்டு வெளியே போன பொன்னுரங்கம் ஆள் நடமாட்டமின்றி அமைதியில் மூழ்கிக் கிடந்த தெருவைப் பார்த்து நடுங்கிப் போனார். “ஆத்தா...இது என்ன கோலம்?....இந்த ஊரும்...இந்தத் தெருவும்...இந்த நேரத்துல இப்படி இருக்காதே...இன்னிக்கு என்னாச்சு?...ஏன் எந்த வீட்டுக் கதவும் திறக்கலை?...ஏன் ஜனங்க வெளியிலேயே வரலை?” குழப்பத்தோடு வேக வேகமாய் நடந்து பஞ்சாயத்துத் தலைவரின் வீட்டையடைந்து கதவைத் தட்டினார்.
(தொடரும்)​
 
banumathi jayaraman

Well-Known Member
என்ன ஆச்சு?
ஊரு முழுவதும் ஏன் அமைதியா இருக்கு?
அந்த நாலரை மணிக்கு இடித்த இடியினால் என்ன விபரீதம் நடந்தது?
 
Saroja

Well-Known Member
என்ன ஆச்சு இடி இடித்து
ஊருக்குள்ள எல்லார்க்கும் அசதி
முழிப்பு வரல
ஏன்
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement