யாருமிங்கு அனாதையில்லை - 28

Advertisement

pon kousalya

Active Member
“யாருமிங்கு அனாதையில்லை!” - 28
(நாவல்)
டாக்டர்.பொன்.கௌசல்யா.

அத்தியாயம் : 28

புயலாய்ப் புறப்பட்டவள் அந்தக் குடிகாரர்கள் மத்தியில் புகுந்து தலை தெறிக்க ஓடினாள். அங்கு என்ன நடக்கின்றது? என்பதை அந்தக் குடிகாரர்கள் புரிந்து கொண்டு சுதாரிப்பதற்கு முன் அவர்களைக் கடந்து சென்றே விட்டாள்.

ஓட்டத்தின் வேகத்தை மட்டுப்படுத்திக் கொண்டு அப்பாடா” என்று நெஞ்சில் கையை வைத்தவளை திடுக்கிட வைக்கும் விதமாய் பக்கத்துப் புதருக்குள்ளிருந்து வெளியே வந்தனர் இரண்டு குடிகாரர்கள்.

“டேய்...சாராயத்துக்குக் கடிச்சுக்கறதுக்கு எதுவுமில்லை!”ன்னு சொன்னியே இந்தா...உனக்காகவே ஒரு அல்வாத் துண்டு வந்திருக்கு” என்றான் ஒருவன்.

“அடடா...அல்வாத் துண்டு இடுப்பு...உன் இடுப்பு...அழகாய்ப் பத்திக்கிச்சு நெருப்பு....தூள் கெளப்பு” பாடினான் இன்னொருத்தன்.

வசந்தியின் உடல் “கிடு...கிடு”வென்று நடுங்கியது.

“என்னடா பார்த்துக்கிட்டு நிக்கறே?...அள்ளுடா அல்வாத் துண்டை” என்று ஒருவன் சொல்ல இன்னொருவன் அவளை அப்படியே அலாக்கத் தூக்கிக் கொண்டு புதருக்குப் பின்னால் சென்றான்.

வசந்தி அடித் தொண்டையில் அலறினாள்.

கற்பைக் காப்பாற்றிக் கொள்ளக் கதறினாள்.

அந்தக் காமுகர்களுக்கு அவளின் கத்தல் ஒரு உந்து விசை போலிருக்க ஆடினார்கள். பாடினார்கள்.

இருபத்தியொரு வயதில் தன் வாழ்க்கையின் இறுதி அத்தியாயத்தை எட்டி விட்டதை உணர்ந்த வசந்தி அவர்களிடமிருந்து தப்பிக்கும் முயற்சியாய் திமிறினாள். துள்ளினாள்.

ஒரு புலியிடம் சிக்கினாலே புள்ளி மான் சிதறிப் போகும் ஆனால் இங்கே இரு புலிகளிடமல்லவா அந்தப் புள்ளிமான் சிக்கியுள்ளது?

புதருப்பின் பின்னால் மண் தரையில் ஒரு கொடுமை நிகழவிருப்பதை மௌனமாய்ப் பார்வையிட்டது மேலே நகர்ந்து கொண்டிருந்த நோயாளியான துண்டு நிலா. நட்சத்திரங்களில் சில துடித்தன.

இனி தப்பிக்கவே இயலாது என்கிற நிலைக்குப் போய் விட்ட வசந்தி மெல்ல...மெல்ல...மயக்கத்திற்குப் போக

எங்கிருந்தோ வந்த அந்த உருவம் அந்த இருவரில் ஒருவனுடைய இடுப்பில் பலங் கொண்ட மட்டும் உதைக்க பத்தடி தள்ளிப் போய் விழுந்தான் அவன்.

சுதாரித்துக் கொண்ட இன்னொருவன் அந்த உருவத்தைத் தாக்க முயல, அவன் மண்டை மேல் இடி போல் விழுந்தது ஒரு அடி.

“அய்யோ”என்று கத்தியவாறே சுருண்டு விழுந்தான் அவன்.

இதற்குள் முதலாமவன் எழுந்து ஓடி வர அவனுக்கும் மண்டை மேல் இடி இறங்கியது.

சத்தமேயில்லாமல் மயங்கி விழுந்தான் அவன்.

அரை மயக்கத்தில் கிடந்த வசந்திக்கு அங்கு எதோ நடக்கின்றது என்று மட்டும் தெரிந்தது. ஆனால் என்ன நடக்கின்றது? என்பது தெளிவாய்ப் புரியவில்லை.

அந்த இருவரையும் சாய்த்த பின் அவளை ஒரே அள்ளாய் அள்ளிக் கொண்டு புதருக்கு வெளியே கொண்டு வந்த அந்த உருவம் ஆளரவமில்லாத சாலையில் நிதானமாய் நடந்து சென்றது.

அந்த உருவத்தின் பிடியிலிருந்து எப்படியாவது விடுபட்டு விட வேண்டும் என்று அவள் மனம் எண்ணினாலும் உடல் ஒத்துழைக்காது போக அப்படியே கிடந்தாள்.

நேரம் போகப் போக அந்த உருவத்தின் நடை வேகம் கூடிக் கொண்டே போனது.

ஒரு கட்டத்தில் ஏதோவொரு வீட்டினுள் நுழைவது போன்ற கடைசி உணர்வோடு வசந்தியின் இமைகள் மூடிக் கொள்ள முழு மயக்கத்திற்குப் போனாள்.

-------​
தெருவில் நின்று கத்திக் கொண்டிருந்தான் முரளி “உனக்கெல்லாம் அறிவே இல்லையா?....யாரைக் கேட்டு நீ தங்கச்சியை அனுப்பினே?....நான்தான் “சாயந்திரம் வந்து நானே கொண்டு போய்க் குடுக்கறேன்!”னு சொன்னேன் அல்ல?...அதுக்குள்ளார உனக்கு என்ன அவசரம்?”

“இல்லைடா...ஏற்கனவே ஒரு நாள் லேட்டாயிடுச்சு...அந்த எண்ணைக் கடைக்காரர் தப்பா நினைச்சிடக் கூடாது!ன்னுதான் அனுப்பினேன்!...அதுவும் சாயந்திரம்....ஆறரை மணிக்கு....வெளிச்சம் இருக்கும் போதுதான் அனுப்பினேன்!” ராக்கம்மா மகனிடம் சமாளித்தாள்.

“பாரு...இப்ப மணி பத்துக்கும் ஆச்சு!...இதுவரைக்கும் போனவ திரும்பி வரலை!...எங்கே போய்த் தேடறது?” பதட்டமாய் சொன்னான்.

“எதுக்கும் கடை வீதி வரைக்கும் இன்னொரு தடவை போய்ப் பார்ததிட்டு வாப்பா” கெஞ்சினாள் ராக்கம்மா.

“க்கும்..இதுவரைக்கும் ரெண்டு தடவை போய்ப் பார்த்திட்டு வந்திட்டேன்!...அங்க யாருமே இல்லை!...கடைக்காரங்கெல்லாம் ஒன்பது மணிக்கே போயிட்டாங்களாம்!...எனக்கென்னமோ அவ குறுக்கு வழில திரும்பி வரும் போது ஏதாச்சும் ஆகியிருக்குமோ?ன்னு சந்தேகமாயிருக்கு” என்று முரளி சொல்ல

பக்கத்து வீட்டுக்காரர் வலிய வந்தார் “தம்பி...ஆளுக்கொரு டார்ச் லைட் எடுத்திட்டுப் போய் அந்த வழியாகவும் தேடிப் பார்த்திட்டு வருவோம் தம்பி”

ஐந்து பேர் கையில் டார்ச்சுடன் கிளம்பினர்.

அவர்கள் வருகையை எதிர் நோக்கி வாசலிலேயே கண்ணீருடன் அமர்ந்திருந்தாள் ராக்கம்மா. அக்கம்பக்கத்துப் பெண்கள் அவளுக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தனர்.

“உன் மகளுக்கு ஒண்ணும் ஆகியிருக்காது...எதுக்கு இப்படி பயந்து சாகறே?”

அந்த பஞ்சு மில்லின் காம்பௌண்ட் ஓரமாய் நடந்த அந்த ஐந்து பேரும் டார்ச் ஒளியை நாலாப்பக்கமும் பீய்ச்சிக் கொண்டே நடக்க

அமைதியான அந்த நடு நிசியில் முனகல் சப்தம் கேட்டது.

எல்லோரும் அப்படியே நின்று முனகல் வரும் திசையில் டார்ச்ச் ஒளியைப் பாய்ச்சினர்.

புதருக்குப் பின்னால் குப்புறக் கிடந்து முனகிக் கொண்டிருந்தான் ஒருவன். அவனருகில் இன்னொருவன் அமைதியாய்க் கிடந்தான்.

எல்லோரும் பரபரப்பாகி புதருக்குப் பின்னால் ஓடிச் சென்று அவர்களை வெளியே தூக்கி வர முரளி தன் தங்கை அங்கு எங்காவது கிடக்கிறாளா? என்று தேடினான்.

அந்த இருவரும் ஒருவன் லேசாய் சுயநினைவிற்கு வர, முரளி கேட்டான் “யாருப்பா நீங்க?...உங்களை யார் அடிச்சது?....இப்படி உதடெல்லாம் கிழிஞ்சு போய்க் கிடக்கு...என்ன நடந்தது இங்கே?”

“அது வந்து....”என்று சொல்ல ஆரம்பித்தவன் ஒரு சிறிய யோசனைக்குப் பின் வேறு மாதிரி சொன்னான். “இந்தப் பாதைல ஒரு வயசுப் பொண்ணு நடந்து போச்சு...யாரோ ஒருவன் அதன் பின்னாடியே வந்து....திடீர்னு அதை குண்டுக் கட்டாய் தூக்கிட்டு ஓடினான்!...நாங்க போய் அந்தப் பொண்ணைக் காப்பாத்த முயற்சி பண்ணினோம்!...ஆனா அவன் எங்களை விட பலசாலியா இருந்ததினால..எங்களை அடிச்சுப் போட்டுட்டு...அந்தப் பொண்ணைத் தூக்கிட்டுப் போயிட்டான்!” என்றனர்.

“அப்படின்னா..அவன் தூக்கிட்டுப் போனது என் தங்கச்சி வசந்திதான்” என்று சொன்ன முரளி “ஏம்பா...உங்களுக்கு அவனிப் பார்த்தா அடையாளம் தெரியுமா?” கேட்டான்.

“தெரியாது...அவன் இருட்டில் வந்தான்...இருட்டில் அடிச்சான்..இருட்டிலேயே போயிட்டான்” என்றான் அவன்.

இதற்குள் அந்த இன்னொருவனும் சுயநினைவிற்கு வந்து விட எல்லோரும் அங்கிருந்து கிளம்பினர்.

வாசலிலேயே காத்திருந்த ராக்கம்மா இவர்கள் வந்ததும் விஷயத்தைக் கேட்க, முரளி பதில் சொன்னான் “இல்லைம்மா...அவள் எங்கேயும் காணோம்!...இன்னும் கொஞ்சம் நேரம் பொறுத்தா பொழுது விடிஞ்சிட்டும்...விடிஞ்சதும் மொதல் வேலியா போய் போலீஸ்ல புகார் கொடுத்திடுவோம்!”

ராக்கம்மா பெரிய குரலில் ஓங்கியழ

அங்கிருந்த எல்லோரையும் அனுப்பி விட்டு தாயை வீட்டிற்குள் கூட்டி வந்தான்.

காலை ஐந்து மணியிருக்கும்

மெல்லக் கண் திறந்த வசந்தி எதிரில் ஒரு நாற்காலியில் அமர்ந்து தன்னையே பார்த்துக் கொண்டிருந்த சொக்குவைக் கண்டதும் “விருட்”டென எழுந்தாள். “சொக்கு...நீ எப்படி?”

கேட்டு விட்டு சுற்றும்முற்றும் பார்த்தவள் அது தன் வீடில்லை என்பதைப் புரிந்து கொண்டதும் தலையைச் சிலுப்பி நினைவுகளைச் சீராக்கி நேற்று நடந்தவைகளை நினைவு கூர்ந்தாள்.

“அந்த ரெண்டு பேர்?” அவள் சன்னக் குரலில் கேட்க

“பயப்படாதே...நான் அவங்களை அங்கேயே அடிச்சுப் போட்டுட்டு...உன்னைக் காப்பாத்தி இங்க கூட்டிட்டு வந்திட்டேன்!...இது என் வீடுதான்” என்றான் சொக்கு.

“அப்படியென்றால் என்னைக் காப்பாற்றிய அந்த உருவம் சொக்குவா?” உள்ளுக்குள் நினைத்துக் கொண்டவள் “நீயும் அங்கே சாராயம் குடிக்க வந்திருந்தாயா?” கேட்டாள்.

அவன் தலை குனிந்தபடியே “ஆமாம்”என்றான்.

சில நிமிடங்கள் அமைதியாய் யோசித்தவள் “என்ன சொக்கு...தப்புப் பண்ணிட்டியே” என்று சொல்ல சொக்கு அதிர்ந்தான்.

“என்னம்மா?...என்ன சொல்றே?...நான் உன்னைக் காப்பாத்தியது தப்பா?”

“காப்பாத்தியது தப்பில்லை!...காப்பாத்தியதும்...அப்படியே எங்க வீட்டுல கொண்டு போய் விட்டிருந்தேன்னா...எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் போயிருக்கும்!...நீ பாட்டுக்கு இங்க உன் வீட்டுல கொண்டாந்து போட்டுட்டே...நானும் ஒரு ராத்திரி முழுக்க உன் வீட்டுல உன் கூட இருந்திருக்கேன்...இதை ஊர் என்ன பேசும்?...நாளைக்கு எனக்கு எப்படி கல்யாணம் காட்சி நடக்கும்?...ஹும்...நல்ல மனுஷனா இருந்திருந்தா இதையெல்லாம் உன் மூளை யோசிச்சிருக்கும்...நீ குடிகாரன்...அந்த அளவுக்கு யோசிக்கவா முடியும்?” சற்றுக் கோபமாகவே பேசினாள் அவள்.

அதைக் கேட்டு அதிகமாகவே கூசினான் அவன்.

“சரி...கிளம்பு...நானே உன்னைக் கொண்டு போய் உன் வீட்டில் விட்டுடறேன்” என்று சொல்லி விட்டு சொக்கு எழ

வசந்தியும் எழுந்தாள்.

போலீஸ் ஸ்டேஷன் செல்லுவதற்காக வாசலுக்கு வந்த முரளி தன் வீட்டு வாசலில் வந்து நின்ற சொக்குவையும் அவன் பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த வசந்தியையும் பார்த்து குழப்பமானான்.

“வசந்தி எப்படி...இவன் கூட?”

அதற்குள் அக்கம்பக்கத்தினர் கூடி விட ராக்கம்மா கத்தினாள், “அடியேய் கூறு கெட்டவளே!...எங்கேடி போயிட்டு...வர்றே?...வயசுப் பொண்ணு ஒரு ராத்திரி முழுசும் வீட்டுக்கு வரலேன்னா அதுக்குப் பேரு என்ன தெரியுமாடி?”

தாயை அடக்கினான் முரளி.

“முரளி...இப்பத்தான் புரியுது!....நேத்திக்கு ராத்திரி அந்த ரெண்டு பேரையும் அடிச்சுப் போட்டுட்டு உன் தங்கச்சியைத் தூக்கிட்டுப் போனது இந்தச் சொக்குதான்” என்றான் கூட்டத்திலிருந்து ஒருத்தன்.

அவனைப் பார்த்துக் கையமர்த்திய முரளி “சொக்கு...என்னப்பா இதெல்லாம்?” நிதானமாய்க் கேட்டான்.

“அண்ணா...அதை நான் சொல்றேன்” என்ற வசந்தி கடைவீதியிலிருந்து தான் இருட்டு நேரத்தில் குறுக்கு வழியே வந்ததையும் அங்கே இரண்டு குடிகாரர்கள் தன்னிடம் வந்து வம்பு செய்த்தையும் அப்போது இந்தச் சொக்குதான் வந்து அவர்களை அடித்துப் போட்டு விட்டு தன்னைக் காப்பாற்றியதையும் தான் மயக்கத்தில் இருந்ததால் தன்னை அவன் வீட்டிற்குத் தூக்கிட்டுப் போய் படுக்க வைத்ததையும் தெளிவாய்ச் சொன்னாள்.

முரளி சொக்குவை நன்றியுடன் பார்க்க

“நீங்க எனக்கு உதவும் போது...நான் உங்களுக்கு உதவக் கூடாதா?” என்றான் அவன்.

பொதுவாகவே எல்லா விஷயங்களும் நல்ல விதமாகவே நடந்து கொண்டிருந்தால் சிலருக்கு அது பொறுக்காது வேண்டுமென்றே ஏதாவதொரு பிரச்சினையைக் கிளப்பி குளிர் காய்வர். இந்தக் கூட்டத்திலும் சிலர் அதுபோல் இருக்க

“ஹும்...ஒரு ராத்திரி முழுவதும் வயசுப்பொண்ணு...அதுவும் மயக்கத்தில் இருக்கும் போது....அதை இவன் சும்மா விட்டு வைத்திருப்பானா?” ஒரு குரல் எழுந்தது.

அதைக் கேட்டதும் தலையிலடித்துக் கொண்டு அழுதாள் ராக்கம்மா.

“சொக்கு ஏற்கனவே குடிகாரன்...ரவுடி...அவனை நல்லவன் என்று யாராவது நினைக்க முடியுமா?”

“பஞ்சும் நெருப்பும்...பக்கத்தில் வெச்சா...பத்திக் கொள்ளுமே” யாரோ பாடினார்கள்.

முரளியே அதிர்ந்து போனான். என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப் போனான்.

அப்போது

திடீரென்று சொக்கு பேசினான் “முரளி...இப்படியொரு பேச்சு...ஊருக்குள்ளார வரும்!னு நான் நினைச்சுக் கூடப் பார்க்கலை!...என்னை மன்னிச்சிடு முரளி!”

“நீ ஆம்பளைப்பா...ஒரே வார்த்தைல “மன்னிச்சிடு”ன்னு சொல்லிட்டுப் போயிடுவே?...அந்தப் பொண்ணு எதிர்காலம்...என்னாகறது?” ராக்கம்மா கூவினாள்.

“என்ன?..என்ன சொல்ல வர்றீங்க எல்லோரும்?... நான் அவளைக் காப்பாத்தாமலே விட்டிருக்கணும்!னு சொல்றீங்களா?” கூட்டத்தைப் பார்த்துக் கோபமாய்க் கேட்டான் சொக்கு.

எல்லோரும் அவனையே உற்றுப் பார்க்க

முரளியின் அருகில் சென்று அவன் காதில் சொக்கு ஏதோ சொல்ல தாடையைச் சொறிந்தபடி யோசித்த முரளி தன் தாயை அருகில் அழைத்துப் பேசினான். அவளும் மேலே பார்த்து யோசித்து விட்டு ஏதோ பதிலைச் சொல்ல

சிரித்துக் கொண்டே கூட்டத்திற்கு முன்னால் வந்த சொக்கு “இங்க பாருங்கப்பா...இன்னிக்கு புதன் கிழமை!...வர்ற ஞாயிற்றுக்கிழமை!...நம்மூர்க் கோயில்ல...இந்த வசந்திக்கும் எனக்கும் கல்யாணம்!..அவளோட அண்ணனும்...அம்மாவும் இதே இடத்துல தங்களோட சம்மதத்தைக் குடுத்திட்டாங்க!...அதனால...எல்லோரும் மறக்காம அந்தக் கல்யாணத்துக்கு வந்து ஆசீர்வாதம் பண்ணிட்டு...கல்யாணச் சாப்பாட்டை மூக்கு பிடிக்கச் சாப்பிட்டுட்டுப் போங்க!” என்றான் சந்தோஷமாய்.

“ஒரு நிமிஷம்!”

திடீரெனக் குரல் கொடுத்தாள் வசந்தி.

“ஆமாம்...கல்யாணம் பண்ணிக்கப் போறவ நான்!...என் கிட்டே யாரும் ஒரு வார்த்தை கூடக் கேட்கலை!...நீங்க பாட்டுக்கு ஆளாளுக்கு முடிவு பண்ணிக்கறீங்க!”

எல்லோருமே அதிர்ந்து போயினர்.

முரளி மட்டும் உடனே சுதாரித்துக் கொண்டு “ஓ...தப்புத்தான்...தப்புத்தான்.....உன் கிட்டேதான் மொதல்ல கேட்டிருக்கணும்!...மறந்துட்டேன்...இப்பக் கேட்கறேன்...சொல்லும்மா...இந்த சொக்குவைக் கட்டிக்க உனக்கு சம்மதமா?” சிரித்த முகத்துடன் கேட்டான்.

கழுத்தைத் திருப்பி சொக்குவைப் பார்த்தவள் “இப்ப...இந்த நிமிஷம்...இதோ இந்தக் கூட்டத்துக்கு முன்னாடி... “இனிமேல் நான் குடிக்க மாட்டேன்!”னு இவரைச் சத்தியம் பண்ணச் சொல்லுங்க!...நான் கட்டிக்கறேன்!...ஆனா சத்தியம் பண்ணிட்டு அதை மீறினா...இதே கூட்டத்துக்கு முன்னாடி வெச்சு நான் அவரைப் பிரிஞ்சுடுவேன்!...அதுக்கு சம்மதமா?ன்னு மொதல்ல கேட்டுச் சொல்லுங்க” என்றாள்.

மொத்தக் கூட்டமும் இப்போது சொக்குவைப் பார்க்க

சற்றும் யோசிக்காமல் “இனிமேல் சத்தியமா நான் குடிக்க மாட்டேன்” என்றான்.


(தொடரும்)​
























































.
 

Saroja

Well-Known Member
நல்லா தான் கேட்ட. வசந்தி
சொக்கு பதில்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top